அசோகமித்திரனின்‘மஞ்சள் கயிறு’

‘மஞ்சள் கயிறு ‘

கிருபானந்தன்

1956ல் வெளிவந்த ‘நாடகத்தின் முடிவில்’ என்னும் சிறுகதை அவரது முதல் சிறுகதையாகச் சொல்லப்படுகிறது. ‘மஞ்சள் கயிறு’ என்னும் கதை 1958ல் வெளிவந்த கதை. ‘வாழ்விலே ஒருமுறை’ என்னும் அவரது முதல் தொகுதியில் இடம்பெற்றிருந்தது என்று அறிகிறோம்.

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்து இன்று கிடைக்கின்ற கதைகளைப் படிக்கும்போது, தனக்கென ஒரு கதை சொல்லும் முறையை ஏற்படுத்திக் கொண்டுதான் எழுதவே தொடங்கினார் என்று படுகிறது.

‘மஞ்சள் கயிறு’ என்னும் இந்தச் சிறுகதை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘செருப்பு அறுந்து போய்விட்டது. நேற்றே அறுந்துவிடும் போலிருந்தது. நேற்றைக்கென்று இல்லை, இரண்டு மாதங்களாகவே அறுந்துவிடும் போல்தான் இருந்தது. இன்று அறுந்துவிட்டது.’

என்று பிரச்சினையில் தொடங்கி

‘துணி உலர்த்தும் கம்பும் அறுந்து விட்டது ஐந்து நிமிடம் செலவழித்து அதைச் சரி செய்யக் கையாலாகவில்லை. அதற்கு மட்டுமில்லை எதற்கும் கையாலாகவில்லை.’

என்று கதாநாயகனின் மனநிலை, செயல்நிலை, சூழ்நிலை எல்லாவற்றிற்கும் அறிமுகம் முதல் பத்து வரிகளிலேயே தெரியப்படுத்தி விடுகிறார்.

புரோகிதரை அண்டிப் பிழைக்கும் சுப்பு. சாமர்த்தியம், சாஸ்திரம், படிப்பு எல்லாமே குறைவு. குண்டு சாஸ்திரிகள் போன்றோரிடம் பேச்சும் வாங்க வேண்டியுள்ளது.

திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை, கதை நடக்கும் காலகட்டத்திற்கு குறிப்பு கதையிலேயே உள்ளது.

மாம்பலத்திற்கே இன்னும் இருபது வருடத்திற்கு குழாய், சாக்கடைக்கு விமோசனம் இல்லாதபோது, மேற்கு மாம்பலத்திற்குத் தொலை மேற்கில் இருந்த அந்த பொட்டல் காட்டில் வீடு கட்டுவதற்குப் பதில் நாலு பசுமாட்டை வாங்கி பால் வியாபாரம் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.  

மாம்பலம் (தற்போதைய தி.நகர் வளர்ச்சி அடையாத காலம். மேற்கு மாம்பலம் வந்துவிட்டது, ஆனால் அதன் மேற்குப் பகுதி நகர்கள் எல்லாம் ‘தொலை மேற்கு’.)

மேற்கண்ட சம்பாஷணை குண்டு சாஸ்திரிகளுக்கும் ராமய்யா வாத்தியாருக்கும் நடக்கும் சண்டையில் வருகிறது. அதில் குண்டு சாஸ்திரிகளின் பேச்சில்  எப்படிப்பட்ட மனிதர்களின் தயவில் சுப்பு வாழவேண்டி உள்ளது என்று காண்பிக்கப்படுகிறது.

“உனக்கு எப்படியடா போஜனம் கிடைக்கும்? நீ உடம்பெல்லாம் புழுப் புழுவாக நெளிந்து குஷ்டரோகம் வந்தல்லவா சாகப்போகிறாய்?’” என்று திட்டப்பட்டாலும் கோபம் வராத அல்லாத கோபம் வர வசதிப்படாத இயலாமை சுப்புவிற்கு.

உடல் நிலை சரியில்லாததால் குண்டு சாஸ்திரிகளால் இவருக்கு அளிக்கப்பட வேலையைச் செய்யவில்லை. காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை. மேலும் சுப்புவிற்கு இப்போது ஒரு ரூபாய் அவசியத் தேவை. காலையிலிருந்து சாப்பிடவில்லை. ‘லங்கணம்’ போட்டால்தான் புத்தி வரும் என்று சொல்லி காசும் கொடுக்காமல் போய் விடுகிறார், குண்டு சாஸ்திரிகள்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் கையிலிருந்த நாலணாவிற்கு போண்டா சட்னி சாப்பிட்டுவிட்டு போகும்போது கல் ஒன்று காலில் இடறுகிறது.

‘அது பாதை நடுவில் விழுந்திருக்கிறது. யாராவது நாயைக்கூட அடித்திருக்கலாம். பாவம்; எலும்பும் தோலுமாகக் கிடக்கும் சீக்கு நாய்களுக்குத்தான் கல்லடி எப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கும்.’  

என்று தொடங்கி சுப்புவின் சிந்தனை நீள்கிறது.

‘சீக்கு நாயாயிருந்தால் வாலைக் குழைத்துக் கொண்டு ஓடத்தான் செய்யும். அது ஓடஓட துன்பங்களும் துரத்திக்கொண்டே வரும். ஆனால் நாய்களுக்கு என்ன தெரியும்? அவை பாட்டிற்கு ஓடிக்கொண்டே இருக்கும். நாம் மட்டுமென்ன?  ஓடிக்கொண்டே இருக்கிறோம். அந்தச் சீக்காளித் தெருநாயைவிட மோசமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாயாவது எப்போதாவது திரும்பி ஊளையாவது இடலாம். நாம் அதுகூடச் செய்யமுடியாது.’

சுப்புவின் Job profile  இப்படியாம்.

சுப்பு அம்மாவாசை தர்ப்பணம்தான் செய்து தரலாம். ஒரு தர்ப்பணத்திற்கு நாலணா. தூக்குகிறவர்கள் நால்வரில் ஒருவராக இருக்கலாம். ஒற்றைப் பிராமணனாக இருக்கலாம். எண்ணெயுடன் இரும்புச் சட்டியை வாங்கிக் கொள்ளலாம். மேல் துண்டைத் தாண்டிச் செல்லலாம். இவைகள் செய்யலாம். இவைகளையேதான் செய்யலாம்.

இவ்வளவு விரிவாக நிலைமையை விளக்கும் அசோகமித்திரன் பின்னாட்களில் ‘நச்’ என்று சொல்வதும் உண்டு. உதாரணமாக ‘78’ என்கிற சிறுகதையில்

எப்போதுமே பணத்திற்குக் கஷ்டம்தான். ஒருமாதம் கூடச் செலவுகள் எதிர்பார்த்தச் செலவுகளோடு நின்று விடுவதில்லை.

ஒரு  மாதம் மூக்குக்கண்ணாடி உடைந்து போய்விட்டால், அடுத்த மாதம் செருப்புத் தொலைந்து போய்விடும்“

என்று எழுதுவார்.

பகலில் இரண்டரை மணிக்கு கை இராட்டினத்தில் நூல் நூற்றுக்கொண்டு இருக்கும்போது, கயறு அறுந்து பஞ்செல்லாம் சிதறிக் கிடந்தது.

சுப்பு கைராட்டினத்தை வேகமாகச் சுற்றினார். கயிறு அறுந்திருந்தாலும் வேகமாகச் சுற்றுகிறது. முதலில் நூல்; தொடர்ந்து பருமனான கயிறு, அதுவும் மஞ்சள் நிறம் பூசப்பட்டு…  என்று அவர் திரிக்கும் அந்த நூல் கயிறே சுப்புவின் ஆற்றாமை, இயலாமை, வெளிப்படுத்த முடியாத சோகமும் ஆத்திரமும் எண்ணங்களாக வெடிக்கிறது.

அவள் இருந்தால் அவள் கழுத்தில் அதைக் கட்டலாம். ஏற்கனவே ஒருமுறை கட்டியாகிவிட்டது. மூன்று முடிச்சுகள் போட்டாயிற்று.

எவ்வளவுபேர் புத்திமதிகள் சொல்லியும், யார் யாரோ பயமுறுத்தியும், சுப்பு  வெட்கத்தைவிட்டுக் கெஞ்சியும் பிறந்தகம் போய்விட்டு திரும்பி வராத மனைவி முகம் தோன்றி விழுந்து விழுந்து சிரிக்கிறது. “உன்னோடு சேர்ந்து எவளால் குடும்பம் நடத்தமுடியும்?” என்று கேட்கிறது.

சுப்புவின் எண்ணத்தில் கைராட்டையை மேலும் வேகவேகமாக சுற்ற, கயிறு பெரும் தாம்புக் கயிறாக வருகிறது. தேர்வடம்போல் இருக்கிறது. ஆனால் மிருதுவான தேர்வடம். கள்ளிப்பெட்டியின் மேல் ஏறிக்கொண்டு தன்னையே அந்தக் கயிற்றால் கட்டிக்கொள்கிறார். அறுந்த துணி உலர்த்தும் மூங்கில் கம்பு, குண்டு சாஸ்திரிகள், அவர் ஓட்டை  சைக்கிள், சட்டினி ஊசிப் போயிருக்கிறது என்று தெரிந்தும் போண்டாவிற்கு ஊற்றிய அந்த ஹோட்டல் பையன், தொட்டுத் தாலி கட்டிய மனைவி… அப்புறம் அப்பு, ரங்கநாதன், மகாலிங்கம்… உலகத்தில் இருக்கிற ஒருவரையும் விடாமல் அந்தக் கயிற்றில் கட்டியாயிற்று.

சுப்பு கீழே விழுந்தார். அவர் தொங்கப் பார்த்தது தேர் வடம் இல்லை மெல்லிய, சாதாரண கை நூற்றுக் கயிறுதான். சரியாகக்கூட முறுக்கேறவில்லை. ஆதலால் நடுவில் பஞ்சாக இருந்த இடம் நெகிழ்ந்து விட்டது.

சுப்புவிற்கு தலை தெளிந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளிற்று.

சுய உலகிற்கு வந்ததும், ஏற்கனவே சிட்டத்தில் இருந்த நூலைக் கொண்டு சரடு திரித்துக்கொள்கிறார்.

குண்டு சாஸ்திரிகள் எவ்வளவு சரடுகள் என்று கேட்க, இவர் ஐம்பது சரடுகள் இருக்கும் என்கிறார்.

“நேற்றே நூறு திரித்துவிட்டேன் என்று புளுகிவிட்டு, இப்போது   ஐம்பது என்கிறாயே?’ என்று கேட்கும் சாஸ்திரிகளிடம் ‘ஐம்பது  என்றுதான் சொன்னேன்.’ என்று சாதிக்கிறார்.

சுப்பு தன் கைகளைப் பார்த்துக்கொண்டார். ஒவ்வொரு விரலும் கத்தியினால் வெட்டுண்டது போன்ற காயங்களை ஏராளமாகக் காட்டின. கயிறுகளுக்குப் பூசின மஞ்சள் நிறம் இன்னும் மறையவில்லை. சுப்பு உள்ளங்கைகள் இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தார். பிறகு விரைந்து நடக்க ஆரம்பித்தார். காலில் செருப்பில்லை. முட்களும் கற்களும் கால்களைக் குத்தின. அதை அவர் பொருட்படுத்தவில்லை.

என்று எதுவும் மாறாத நிலையினை புலப்படுத்துகிறார் அசோகமித்திரன்.

ஒரு திருப்பம் வேண்டும், ஒரு தீர்வு வேண்டும் கதையின் முடிவில்தான் க்ளைமாக்ஸ் வரவேண்டும் என்கிற எழுதப்படாத அக்காலச் சட்டங்களை மீறி சுப்புவின் கையாலாகத்தனமும், இயலாமையும் நம்மைத் தாக்கும் ஒரு அற்புதமான சிறுகதை இது.