அது ஒரு பாதை மட்டுமே

அது ஒரு பாதை மட்டுமே

சிறுகதை:- ஜீவ கரிகாலன்

கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்ததில் செவித்திரை கிழிந்து விட்ட பிரமை. காதுக்குள் ஒரு திரவம் கொதித்துக்கொண்டிருந்த உணர்வு. காது தன் கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் நான் நிறுத்தவில்லை, காரணம். அநேகமாக நீங்கள் யோசிக்கும் முதல் காரணமாகவே இருக்கக்கூடும்.

WHEN THE PHONES BECAME SMARTER, MEN BECAME WEAKER.

அந்த சின்னஞ்சிறு பொறி எப்படி உலகையே அடக்குகிறது, சர்வமும் கைக்குள் அடங்கியது போன்ற உணர்வு வந்துவிட்டது எப்படி?

நாம்தொடர்பு கொள்ள வேண்டியவர்கள், நம்மைத்தொடர்பு கொள்ளக்கூடாதவர்கள் எனப்பிரித்து வைக்க முடிகிறது.
உள்ளங்கைகளில் உணவு, மருத்துவம், கலை, பொழுதுபோக்கு, வங்கி, வணிகம், நுகர்வு, கல்வி, கலவி என எல்லாமும் செயலியாக வந்துவிட்டது. வாழ்வின் அத்தனை சௌகர்யங்களையும் செயலிக்களாக மாற்றி உலாவ முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இறப்பிற்குப் பின்னான உலகம் எது என்று கண்டுபிடித்து வசதிக்கேற்ப டிக்கெட் முன்பதிவு செய்யுமளவுக்கெல்லாம் இன்னும் போகவில்லை என்பது ஆறுதல்.
ஒன்று மட்டும் உறுதி மனிதர்கள் சிந்திப்பதை வெகுவாகக் குறைப்பதற்கு இது தலையாயக் காரணம் ஆகிவிட்டது. மனமும் அசலுக்கும் பிரதிக்குமான வித்தியாசத்தை கண்டறியும் அவசியத்தையும் திறனையும் இழந்து சில ஆண்டுகளாகிவிட்டது.

அவள் அனுப்பிய ஸ்மைலி அல்லது எமோட்டிக்கான் முத்தங்கள் உண்மையிலேயே முத்தங்கள் தானா? அவள் முத்தத்தால் கொடுக்க இயலும் அதே பரவசத்தை, கிளர்ச்சியை இந்த எமோட்டிக்கானும் தருமென்றால். உலகில் காதல் ஒரு பிரச்சினையே இல்லை.

மிக மலிவான விலையில் ஒரு செல்போன் உங்களுக்கு காதலைச் சேர்த்துவிடும். செயலிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்ட நமக்கு எமோட்டிக்கான்களாலே உச்ச நிலை அடைவதும் சாத்தியம் தான்.
அப்படியானால் உலகின் எங்கோ ஒரு மூலையில் மனிதர்களைப் புணர ரோபோக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

அவள் கொடுத்த முத்தங்கள் யாவும் எமோடிக்கானாக மாறுவதை கோடிங் செய்திருப்பவர்கள் ஏவாளுக்குப் பழத்தினைத் தருவித்த சர்பத்தின் உறவுகளா அல்லது தோழர்களா. மீண்டும் எமோடிகான்கள்.
இந்த ஸ்மைலிகளை முத்தங்களாகவே பாவித்து போதையுறும் நான் மூடனா, கலைஞனா, காமுகனா.
காதில் இருக்கும் இயர்போனை எடுத்து விடும்போது, உலகம் இயல்பு மாறி இருப்பதாகத் தோன்றுகிறது. இரைச்சலற்ற இசையினையே சுகிக்க முடியாத மனநிலையின், நகரத்தை விட்டு வெளியே கிடைக்கும் இந்த அமைதி பயத்தை மட்டுமே தரும். நகரவாழ் மனிதனுக்கு அமைதி மட்டுமே பயத்தை விளைவிக்கும்.
மீண்டும் போனில் தகவல்கள் வரும் சப்தம். இந்த தொழிற்நுட்பம் எதற்காக?
அரசின் வருமானங்களில் பிரதானமாக விற்பனை வரியும், சேவை வரியும் இருப்பதால் தான் நகரத்தை விட்டு இத்தனை தூரம் தனியே வந்தும், எனது செல்பேசிக்கு சார்ஜ் இருக்கிறது, நெட்வொர்க் கவரேஜ் இருக்கிறது, இணையமும் வேலை செய்கிறது.

எனக்குத் தொலைத்தொடர்பு வசதி சிறப்பாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் நான் இந்த அரசாங்கத்துடனும், பெரும் நிறுவனங்களோடும் இணைப்பில் இருக்கிறேன். இன்னும் சரியாகச் சொன்னால் நான் ஒரு அமைப்பிலோ அல்லது சில அமைப்புகளிலோ பிணைக்கப்பட்டிருக்கிறேன்.
வசதியென்று நான் நினைத்தவை எல்லாம் உண்மையில் எனக்கு அசௌகரியமளிக்கின்றன என்பது எனக்குப் புரிவதில்லை, உங்களைப் போலவே.

எனக்கு யார் மீது வருத்தம் அல்லது யார் மீது கோபம்? அவளைப் பற்றி நான் பேசினால் உங்களுக்குச் சில காரணங்கள் தென்படலாம். ஆகவே அவளைப்பற்றி பேசப் போவதில்லை. நான் பேசாமல் இருந்து விடுவதால் உங்களுக்கு அவளைப் பற்றிய ஓர் வடிவம் கிட்டலாம்.

அவளைப்பற்றிய வடிவத்தின் துணையால் என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என்னைப்புரிந்து கொண்ட நீங்கள் இந்த அரசாங்கம்போல் இந்த மொபைல் போன் சேவை நிறுவனங்களைப் போல என்னைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். நான் அதற்கான ஆள் இல்லை.

வெறும் செல்பேசியும், என் வாகனம், உடைகள் மட்டுமல்ல நான் நுகரும் எல்லாவற்றிலும் அதனை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என்னைக் கட்டுப்படுத்தப் பழக்கப்பட்டிருக்கின்றன. இந்த புறக்காரணிகளே என்னைக் கட்டுப்படுத்துகிறது. அதில் எனது உறவுகளும் கூட சில நிறுவனங்களில் லாபக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

நான் அவளுக்கானவனாகவே என்னை பாவித்துக் கொண்டிருக்கிறேன் சில காலமாக, தெரிந்த விடைகளுக்கு கேள்வியை இடம் மாற்றி வைத்து இன்பம் பெறும் முட்டாள்தனத்தை என்னவென்று நான் சொல்வது.

“என்னவாது சொல்”

அவள் இல்லாத பொழுதில் இந்த உலகம் விட்டு வைத்திருப்பவைகளெல்லாம் நான் வெறுப்பதற்காகப் படைக்கப்பட்டவை ஆகின்றன. இப்போது எல்லாவற்றையும் பேதமின்றி வெறுத்துக் கொண்டிருக்கிறேன்.
ஹெல்மெட்டிற்குள் புதைத்து வைத்து மறைத்துக் கொண்டிருக்கும் இயர்போன்கள் அருவருப்பானவை, ஆனால் அவசியமானதாகவும் இருக்கிறது. நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன், எங்கோ என்னைத் துண்டித்துக் கொள்ள விரும்புகிறேன். துண்டித்துக்கொள்ளுதல் என்பது ஒருவகை தப்பிப்பத்தலாகும்.

யாரிடமிருந்து, எங்கிருந்து துண்டிக்கப்படுதல் என்று என்னை நானே கேட்டுக்கொண்டால், கேள்விக்கான பதில் அரூபம்.  பதில் அரூபமானால் கேள்வியின் உருவத்தால் என்ன பயன்?

கேள்விக்குறி பாம்பாக நெளிந்துக் கொண்டிருக்கிறது தண்டுவடத்தில். இதற்கு மேல் வண்டியை ஓட்டமுடியாது நிறுத்திக்கொண்டேன். நெடுஞ்சாலையில் வாகனங்கள் இருபுறமும் அதிவேகத்தில் பண்டிகைக்கு ஊர்திரும்பும் மக்களின் மனநிலையைப்போன்று தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தன. அன்னாந்துப்பார்க்கையில் நட்சத்திரங்களின் மாசு பெருங்கூரையாக விரிந்திருந்தது.

ஒரு பெரிய கண்டெயினர் லாரி ஒன்று ஒலியெழுப்பியபடி மிக அருகில் என்னைக் கடந்து சென்றதும் அந்த ஏர்ஹாரனின் சத்தமும் காற்றைக் கிழித்த வேகமும் ஏற்கனவே குழம்பிக்கொண்டிருந்த மனதை வெடிக்க வைத்தது போல் ஒரு உணர்வு உடம்பெல்லாம் ஒரே கூச்சம். அந்த 24 சக்கரவாகனம் முழுமையாக என்னைக்கடக்கும் பொழுது ஏதோ ஒன்று எனக்குள் நடப்பதை உணர்ந்தேன்.

என் செவிகள் எதையோ இழந்ததை உணர்கிறேன். இப்பொழுது என் கண்முன்னே நெடுஞ்சாலை மிக நிசப்தத்துடன் இருக்கின்றது. ஆம் துளியும் சப்தமின்றி வாகனங்கள் இங்கும் அங்கும் போய்க்கொண்டிருக்கின்றன. பரந்து விரிந்த ஆகாயத்தில் நட்செத்திரங்கள் நகர்வதாய் என்னை அடிக்கடி ஏமாற்றும் விமானங்களின் ஒளிபோல இரைச்சலற்ற நெடுஞ்சாலை பார்ப்பதற்கு பரவசமாய் இருக்கிறது.

என் எதிரே இருக்கும் இரு சக்கரவாகனம் என்னுடைய வாகனம்தானா என்று கூட ஒரு சந்தேகம். புதுஉடையை அணிந்தது போல உடல் எனக்கு சௌகரியமானதாக மாறி இருக்கிறது. புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன். என் செவிகள் நிசப்தத்திலிருந்து ஒரு பேரமைதியை கண்டது. பேரமைதியிலும் சில ஒலிகள் இருக்கின்றன. அது புலன்கள் அமைதி அடைந்ததும் கண்டுகொள்ளக் கூடிய சப்தங்கள், மரபணுக்கள் கிரகிக்கக்கூடிய சப்தங்கள் அவை. ஏகாந்தமானவை.

பயோமெமரிகளைச் சேமித்து வைத்திருக்கும் நியூரான்கள் செயல்பட ஆரம்பிக்கின்ற்ன. ஆனால் அவை சந்தோஷம் தரும் ஒலியாக இருக்கும் என்று நான் குதூகலித்தது தவறானது. ஏனென்றால் இப்போது நான் கேட்டுக் கொண்டிருக்கும் சப்தம் அத்தகையது.

அந்த நெடுஞ்சாலை, காவு வாங்கிய மரக்கூட்டங்களின் வெட்டப்பட்ட ஓலங்களாக நிறைந்திருக்கின்றன. அதனால் தான் எனக்கு வாகனங்களின் இரைச்சல்கூட கேட்கவில்லையோ என்னவோ?

வெட்டுப்பட்ட கம்பீரமான புளியமரங்களின் ஓலங்களில், கூடமைத்து வாழ்ந்த, தன் குஞ்சுகளையும், முட்டைகளையும் ஒரேநாளில் இழந்த பல வகைப்புள்ளினங்களின் சாபங்கள் இருக்கின்றன, மரங்களின் நீண்டுச் சுருங்கிய நிழல்களின் இழப்பைப் பதிவு செய்யும் நிலத்தின் புலம்பல்களும் இருக்கின்றன. யார் கொடுத்தது இப்படியொரு இனப்படுகொலைக்கான அதிகாரங்களை. மரங்களை வெட்டும் போது அதற்கு பதிலாக மரங்கள் நடுவது போர் குற்றமாக வரலாற்றால் மன்னிக்கப்படலாம், ஆனால் தடந்தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லை, இந்த தேசம் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூவுகின்ற கட்சியினர்களின் கொடிகள் மட்டுமே நட்டப்படும் சாலையாக மாறிப் போயிருக்கிறது.

நான் அவற்றின் சப்தங்களை உணர ஆரம்பித்து விட்டேன் என்றதும் கண்ணுக் கெட்டியதூரம் வரை வெட்டப்பட்ட மரங்களின் ஓலங்கள் என்னை நோக்கி ஓடிவர ஆரம்பித்துவிட்டன அது நான் கேள்விப்பட்டேயிராத,. என்னால் தாங்க முடியாத அளவு சோகமாக இருந்தது. அதிலிருந்து தப்பிப்பிழைக்கச் சாலையின் ஓரத்திலிருந்து அருகிலிருந்த வெளிக்குத் தாவிக்குதித்து ஓடிச்செல்லத் தீர்மானித்தேன். ஓட ஆரம்பிக்கிறேன், என் கால்களின் கீழே அடிபடும் புற்களின் சிறுசெடிகளின் அலறல்களும் கேட்க ஆரம்பிக்கின்றன. அந்த சப்தங்கள் கேட்காமல் இருக்க, நான் என்ன ஆகாயத்திலா பறக்க முடியும்?

ஓடிக்கொண்டே இருக்கின்றேன். சிறுபிள்ளைகள் கிரிக்கெட் விளையாடும் ஏதோ ஒரு கிராமத்தின் மைதானம் போல இந்தச் செடிகளுக்கு மத்தியில் ஒரு பிட்ச் மண்தரை இருந்தது. அங்கே போய் நின்றதும். மிதித்து வந்த செடிகள், புற்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கத் தோன்றியது. அவை பரவாயில்லை என்று சொன்னது போலும் தோன்றியது. எல்லாம் விசித்திரமாக இருக்கிறது.

ஏன் விசித்திரமாக இருக்க வேண்டும்?

மனம் ஏற்றுக் கொள்பவை, உணர்பவையாக இருக்கும்போது அது ஏன் விசித்திரங்களென உணர வேண்டும்?
என்னால் இவற்றை உங்களுக்கு உணர்த்துவதற்கு நான் கடினப்படத் தான் வேண்டும் அல்லது நீங்கள் நம்புவீர்களா எனவும் அச்சப்படுகிறேன். அதுதான் அந்தத் தவிப்புதான், இவற்றை விசித்திர அனுபவம் என்று குறிப்பிடச் சொல்கிறது.

மொழி என்பது சூதுநிரம்பியதாக இருக்கிறதே. இதை இப்படியும் கூட சொல்லாமே, சூது நிரம்பியவனை மொழி அவ்வப்பொழுது காட்டிக் கொடுத்து விடுகிறது.

மண்தரை மெத்தையாக இருக்கிறது படுத்துக் கொள்ளவிரும்பினேன். வானம் முழுமையாக என்னைப் போர்த்த வருவது போல் நெருங்கிக் கொண்டிருந்தது. கண்கள் நிலைக்குத்தி காணக்காண நட்சத்திரங்கள் பிரகாசமாகிக் கொண்டிருந்தன, சும்மாவா சொன்னார்கள் இரவென்பது குறைந்த ஒளியென்று. நிலவில்லா வானமும் எத்தனை வெளிச்சமாக இருக்கிறது, அதுவும் இந்த வெட்டவெளியில். எல்.ஈ.டி, நியான் விளக்குகளின் பாதுகாப்பில் இவற்றை நாம் கவனிக்க முடிவதில்லை.

இன்னும் கூட சிறுசிறு நட்சத்திரத்தொகுதிகளில் கேள்விக்குறி போல் இருக்குமிந்த திருவோணத் தொகுதியை மட்டும் வானில் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

உண்மையில் வானியல் சாத்திரங்களில் நட்சத்திரம் என்பது ஒரு நட்சத்திரமல்ல அது ஒரு நட்சத்திரத் தொகுதியைக் குறிக்கிறது என்று எனக்கு ஒரு நண்பர் சொல்லியிருக்கிறார் அவர் அதில் ஆராய்ச்சி செய்பவர். என் தங்கை பூவழகி மீன் எனும் சொல்லிற்கு பலர்பாலும் ஆங்கிலத்தில் மீன்தான் என்றுசொல்வாள். பூவழகியிடம் நான் நிறையக் கற்றிருக்கலாம்.

அவள் என் தலையில் கை வைப்பதிலும் என் கண்களை உற்றுப்பார்ப்பதிலும் என்னை, என் மனவோட்டத்தை, என் விசித்திர உலகைக் கண்டுபிடித்து விடுவாள், புரிந்து கொள்வாள், சொல்லப்போனால் பூவழகி நான் மறைக்க விரும்பும் எல்லாவற்றையும் தோண்டி எடுத்துவிடுவாள். அவளிடமிருந்து அதனை மறைப்பதற்காகத்தான் எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கிறேன். அவளிடம் இருந்தும், உங்களிடமிருந்தும்.

எதனை மறைக்கிறேன் என்று கேட்கிறீர்களா? எதனை அடைந்தவனாக இருந்தேனோ, அதைத்தான் இழந்தேன்?
அது என்னவாக இருந்தது என்று நினைத்துப்பார்க்க கேள்விக் குறி பாம்பாகவும், மேலே இருக்கும் திருவோண நட்சத்திரக்கூட்டம் போலவும் நெளிந்து கொண்டிருக்கிறது.

இதை சில வானியல் சாத்திர நிபுணர்கள் சித்திரை என்பார்கள் சிலர் திருவோணம் என்பார்கள், நான் ஒன்னும் வானசாஸ்திரம் தெரிந்தவனல்ல, வானத்தைப் பார்ப்பவன்.

எனது பால்யத்திலிருந்த அந்த நகரத்திற்கு வரும் வரை எனது அன்றாடங்களில் வானத்தைக் கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி எந்த எண்ணமுமற்றுப் பார்ப்பது வாடிக்கையான ஒன்று. கேள்வியுற்ற, வாசித்த கதைகளை நட்சத்திரங்களிடம் சொல்லிப்பார்ப்பதும் உண்டு.

கொடுக்காய் புளி பிடுங்கும் தொரட்டியைக் கொண்டு நிலவைப் பறிப்பதற்கு எத்தனை கம்புகள் ஒன்றன் மேலே ஒன்று வைக்க வேண்டும் என்று ஆராய்வது உண்டு.

யார் எனக்கு இந்த யோசனைக் கொடுத்தார்கள் என்று தெரியாது, ஆனால் தினமும் தொரட்டிக் கம்புகள் சேர்த்துக் கொண்டே சென்றிருக்கிறேன். பத்து, இருபது, நூறு என ஆயிரங்களைக் கடந்தும் எண்ணிக்கை சென்று கொண்டிருந்தது. அதுவும் ஒருவகை அல்ஜீப்ரா தானோ என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் நினைத்துக் கொண்டேன் ஆல்ஃபா போல பீட்டாவைப்β போல, ஒமேகாவைப்போலΩ, X, Y, Z போல, நிலவை நான் தொரட்டிகளைக் கண்டு தூரங்களை அளந்தேன். ஒருநாள் எனக்கு எண்ணிக்கை கிடைத்தது.
அல்ஜீப்ரா பாடம் நடத்தும் போது என்மண்டையில் சுரந்தவை எனக்கு விடையளித்தன.
நிலவு மீது ஒருநாள் எனது தொரட்டிக்கம்பு பாய்ந்தது இப்படித்தான்.

கணிதப்பாடம் எடுக்கும்போது, போர்டில் எழுதவதை நோட்டில் எழுதாமல். எப்போதும் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன். எண்கள் ஒன்றொடு ஒன்றுசேரும் போது ஒரேமாதிரியாக ஏன் மாறுவதில்லை. இரண்டு எண்கள் அருகருகே இருக்கும் போதே வேறுவேறு குறியீடுகள், வேறுவேறு முடிவுகளை உருவாக்குகின்றன. குறியீடுகள் நிகழ்த்தும் கணிதமாயங்கள், சக்திமான், சந்திரகாந்தா நாடகத்தை விட எனக்கு சுவாரஸ்யமாய் இருந்தது.

நித்தமும் ஆவென்று நான் கணிதத்தை கவனித்துக் கொண்டிருப்பதால், என்னை எல்லோரும் கேலி செய்வார்கள். அடிக்கடி சாக்பீஸைத் தூக்கி என்மீது குறி பார்த்து எறிவார், கணக்கு வாத்தியார்.
அப்படி ஒருமுறை வாத்தியார் என் மீது சாக்பீஸ் எறியும் போது உடனே எழுந்து “கொடுக்காய் புளி பறிக்க உங்கவீட்ல தொரட்டியே தேவையில்லைல சார்?” என்று கேட்டேன். வகுப்பறையே அதிர்ந்துச் சிரித்தது. நேராகத் தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய்விட்டார்.

ஆனால் நான் மற்ற எல்லா வகுப்புகளில் நல்லபிள்ளையாய் நடந்து கொள்வதாக எங்க வகுப்பாசிரியர் கணேசன் சார் சொல்லிக் கொண்டார், ஆங்கில வாத்தியாரும் அப்படி ஒரு சர்டிஃபிகேட் கொடுத்தார். ஆகவே பிரச்சினை பெரிதாகாமல் லேசான எச்சரிக்கையோடு போய்விட்டது. இத்தனைக்கும் எனது விருப்பப்பாடம் கணிதம் தான் என்றால் நீங்கள் நம்ப வேண்டும்.

என்னை நித்தமும் கழிசடை என்று சொல்லும் கணக்கு வாத்தியார், ஒருமாதத் தேர்வில் அல்ஜீப்ராவில் கேட்டிருந்த கேள்விக்கு நான் நிலவைத் தொரட்டியால் பிடிக்கும் சூத்திரத்தை எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி பின்மண்டையில் ஓங்கியடித்து பேப்பரைக் கிழித்து எறிந்தார். வகுப்பறையே கேலி செய்து சிரித்தது. அவள் மட்டும் சிரிக்கவில்லை.
“கவலைப்படாதடா நீ பெரிய ஆளா வருவ” என்று என் கண்ணீரைத் துடைத்து விடுவதாய்ப் பார்த்தாள். அவளுக்கு என் மீது கரிசனம் அதிகமிருந்தது. அவள் நீண்ட உதடுகள் சிரிக்கும் போது கண்களும் குறுகிச் சிரித்தன. ஆயினும் அன்றைய தினம் எனக்கு அவமானகரமான நாள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தக் கழிசடைதான் அடுத்த ஆண்டு கணிதத்தில் அதிகம் மதிப்பெண் எடுக்கும் என்பது அந்த ஆசிரியருக்குத் தெரியாது.

சூத்திரம் பிடிபட்டதால் அன்று இரவு நிலவின் மீது தொரட்டிக் கம்புகளை குறியீடுகள் கொண்டு வீசினேன். சரியாகப் போகவில்லை. கணக்கு வாத்தியார் கேட்டிருந்த கேள்வியை கேள்வித்தாளில் ஒருமுறை பார்த்துக்கொண்ட பின்பு வீச ஆரம்பித்தேன், தொரட்டிக்கம்புகளோடு எனது ஒமேகாக்களை..
ஒமேகா பறக்கும் பாம்பாக, பறவைகாக, விமானமாக, பறக்கும் தட்டாக உருமாறி உருமாறித் தொரட்டிக்கம்பை நிலவுக்கு அருகில் கொண்டு சென்றது. இப்போது நிலவில் சரியாகப் பொருத்தி இழுக்க வேண்டும். தொரட்டியைப் பொருத்தினேன், இழுத்தேன். தீடீரென்று என் நிலவைச் சுற்றி மேகமென அவள் சூழ்ந்து கொண்டாள். நிலவை விட மேகம் கண்களில் ஆசை மூட்டியது. முதன் முறையாக எனக்கு வானத்தைக் காட்டிலும் ஆச்சரியமான விஷயம், வின்மீனைக் காட்டிலும் ஆச்சரியமான மீன்கள் மனித உருவில் இருக்கின்றன என்று நம்பினேன். அந்தப் பாவாடை சட்டை, இரட்டை ஜடை, கொலுசு என்று என் வானம் வேறு திசைக்குச் சென்றது.

மதியைத் தேடி மதி இழந்தேன். அன்று விட்டுவந்த தொரட்டிக்கம்பும் நிலவிலே தான் இருக்க வேண்டும்.
உங்களுக்கு நான் பேசுவது மாயமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் யதார்த்தம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வு தான் எத்தனை மாயமானது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியுமா.

இப்படி என்னைப் போல் மண் தரையில் மல்லாந்து படுத்து வானத்தைப் பார்க்காத வரை உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றவே தோன்றாது. ஏனெனில் உலகம் உங்களைச் சுற்றி இருப்பது மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள், நானும் கூட அவ்வாறு தான் இருந்தேன். இப்போது தான் புரிகிறது, இந்த எண்ணற்ற நட்சத்திரங்களின் ஒரு துளியாகக் கூட இல்லாத நாம் எத்தனை அகங்காரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று?

நான் கலையென்று நினைத்த அரூப வடிவங்கள், காட்சிகளின் மருட்சி தான். புரட்சி என்று நினைத்தவை நித்தமும் என்னைச் சுரண்டுபவை தான், அழகியல் என்று நினைத்தவை எனக்கு ஆபத்தானவை தான்.
காதல் என்று உணர்ந்தவை? வேண்டாம் உணர்பவை எல்லாவற்றையும் சொல்லிடும் தைரியம் வந்துவிடவில்லை எனக்கு, இந்த நிலையிலும்.

தற்காலிகமாக எனக்குக் கிடைத்திருக்கும் விடுபடல்கள் என்னை நிறைய சிந்திக்க வைக்கின்றன. சிந்தப்பதில் தெளிவு பிறக்கிறது. தெளிவினால் நம் நம்பிக்கை குலைகிறது. நம்பிக்கைகளற்ற வாழ்வு பிணி. பிணியைக் காட்டிலும் மரணம் சாலச் சிறந்தது திடீரென்று என் மீது ஏதோ பாயப்போகின்றதாய் உணர்ந்தேன். பாய்ந்தது ஒரு ஒளி, வெட்ட வெளி முடியுமிடத்தில் ஒரு சவுக்குகாடு இருக்கிறது. சவுக்குக்காட்டிலிருந்து ஒரு ஒளி என் மீது பாய்ச்சப்பட்டிருக்கிறது.

ஏதோ ஒரு ஒலியென்று நினைத்தேன், அது ஒரு ஒளியாகத் தெரிந்தது, இப்பொழுது அது ஒரு பாதையாக மாறுகிறது. அந்த பாதையில் நிறைய சுவடுகள் இருக்கின்றன. நிறைய பேர் நடந்திருக்கின்றனர் போலும், சுவடுகள் சின்னதும் பெரியதும் மிகப்பெரியதும் ராட்சதமுமாய் கலந்து இருக்கின்றன. ஒவ்வொரு சுவடும் ஒவ்வொரு காலத்தைச் சேர்ந்தது போல் இருக்கிறது. எனது சுவடுகளுக்கும் அங்கே தாராளமான இடம் இருப்பது போல் தோன்றியது.

அது என்னைக் கொஞ்சம் பீதியில் அமிழ்த்தினாலும், பாதை என்னைத் தொடர்ந்து அழைத்தபடி இருக்கிறது. நான் அங்கே செல்வதற்கு என்னை ஏதோ பணிக்கிறது.
அது ஒரு பாதை. அழகிய, ரம்மியமிக்க, அமைதியான சூழலில் அமைந்திருக்கும் பாதை. அது எல்லாருக்குமானப் பாதையாகத் தான் இருக்கிறது. ஆனால் இதில் நடைபெறும் பயணங்கள் தான் வேறு. நான் நடந்து கொண்டிருக்கிறேன்.

அந்தக்காடு இப்போது என் மிக அருகினில் இருக்கின்றது நெருங்கியவுடன் தான் தோன்றுகிறது நான் உங்களோடு இனி பேசப்போவேனோ என்று.அதனால் நீங்கள் இவ்வளவு நேரமும் சந்தேகித்ததைச் சொல்லிவிடுகிறேன். ஆம் இவற்றிட்கெல்லாம் காரணம் அவள் தான். அவளால் தான் எனக்கு இந்தப் பயணம் அமைந்திருக்கிறது.

நீங்கள் அவளைச் சந்தித்தால் நான் அவளை இன்னமும் காதலித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லுங்கள். அவளை மன்னித்ததாய் சொல்லுங்கள், அவளிடம் என் வருத்தத்தையும், நன்றியையும் சொல்லுங்கள் அவளை எப்போதும் காதலிப்பதாகவும் சொல்லுங்கள்.

அல்லது வேறு ஒரு உபாயம் செய்யுங்கள் – நீங்களும் யாரையாவது காதலிக்கத் தொடங்குங்கள், எல்லைகளற்றது காதல்.