அனிதாக்களைக் கொல்லும் அரசியலைச் சொன்ன அசோகமித்திரனின் ‘காந்தி’

அனிதாக்களை கொல்லும் அரசியலைச் சொன்ன அசோகமித்திரனின் ‘காந்தி’

முத்துராசா குமார்

உண்மைகள் கசப்பானவை, உண்மைகளைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும் என்ற சொல்லாடல்கள் காலம்காலமாக நாம் சொல்லிவருவதுதான். இந்த  வாழ்வில் நம்மில் எல்லோரிடமும் மறைக்கப்பட்ட அல்லது எந்த சூழ்நிலையிலும் சொல்லிவிடவே கூடாதென்று அமுக்கப்பட்ட பல உண்மைகள் இக்கணம் வரை நமது மனதிற்குள் இருக்கும். சிலர் அதைக் கடைசிவரை சொல்லாமலே செத்தும் போயிருக்கிறார்கள். அந்த உண்மைகளுக்கு ஒரு வடிவத்தை, வண்ணத்தை, ருசியை அதுவும் கசப்பான ருசியை ஒரு குவளையில் அடைத்து ‘காபி’யாக 1973 ல் ‘காந்தி’ என்ற சிறுகதை மூலமாகத் தருகிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்.

 

‘உள்ளிருக்கும் கசப்புதான் வெளியிலும் கசப்பாக உணர்வளிக்கிறது  என்று அவனுக்குத் தெரியாமலில்லை’ என்று நம்மகத்தில் கிடக்கும் உண்மைகளின் கசப்பையும், காபியின் கசப்பையும் ஒப்பிட்டு சுவைத்துப் பேசி கதைக்குள் நுழைகிறார் அசோகமித்திரன்.

சிறு வயதில் தொடங்கி குடும்பம், ஊர், தெரு, பள்ளி, கல்லூரி, பணியிடங்கள், பயணித்த இடங்களில் பாலினப் பேதமின்றி பலர் நமக்கு நண்பர்களாக கிடைப்பார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதவர்களாக இருந்து காலவோட்டத்தில் வேறு பாதைக்கு கடப்பார்கள் அல்லது கடைசி வரை நம்முடன் பயணிக்கவும் செய்வார்கள். நண்பர்கள் வட்டத்தினால்தான் எங்களது வாழ்வுலகம் நகருகிறது என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நம் நண்பன் நம்மை விட்டுப் பிரிந்து உண்மைகளை விடுத்து நம்மைப் பற்றிய பொய்களைப் பொதுவெளியில் பரப்பினால் நமக்கு எப்படியான வலிகள் இருக்கும். அதற்கு நாம் கோபப்படாமல் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை ‘காந்தி’ கதையில் சொல்லுகிறார் எழுத்தாளர். மகாத்மா காந்தியாலும் அவரது அரசியல் நிலைப்பாடுகள், கொள்கைகளாலும் இக்கதையில் வரும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் விரிசல் விடத் தொடங்குகிறது.

இக்கதையில் நெருங்கிய நண்பர்களில் ஒருவன் காந்தியாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். மற்றொருவன் காலப்போக்கில் காந்தியைப் படித்துவிட்டு வந்து ‘காந்தியைப் போல ஒரு அயோக்கியன் மனித சரித்திரத்திலேயே பிறந்ததில்லை. அவனைப் போலவொரு மனித இன விரோதி செயல்பட்டதேயில்லை’ என்று காந்தியின் வாழ்க்கையையும் அவரது சர்வோதையம், ஒத்துழையாமை, சுதேசி, மக்கள் போராட்டங்களில் அவரது முடிவு போன்ற பல விசயங்களை முன்வைத்து  விமர்சனப்படுத்துகிறான். இதுமட்டுமில்லாமல் போகப்போக நண்பனைப் பற்றியும் பல பொய்களை வெளியே  பரப்புகிறான். அதற்கு அந்த நண்பன் பொறுமையாக  ‘ஒன்றிரண்டு விசயங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரின் முழு வாழ்நாள் சாதனைகளையும் லட்சியங்களையும் புறக்கணிக்க முடியுமா?’ என்று  அவனிடத்தில் பலவாறாக காந்தியைப் பற்றி புரிதலை ஏற்படுத்த முயலுகிறான். ஆனால் அதற்கு பலனில்லை. தனது நண்பன் ‘சத்திய சோதனை’யைப் படிக்கவில்லைப் போல, அதில் எல்லாவற்றையும்தான்  அந்த மனிதர் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறாரே  என்று தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறான்.

காந்தியையும் அவரது கொள்கைகளையும் பின்பற்றுபவர்கள், பின்பற்றாதவர்கள்,  தற்காலத்தில் காந்தியை வைத்து செய்யப்படும் அரசியல்கள் போன்றவைகளோடு மட்டும் இக்கதை என்னுள் நின்றுவிடவில்லை. சமகால அரசியல் சூழல் பற்றி யோசிக்க வைக்கிறது. நிறைய நிறைய கட்சிகள், அமைப்புகள், மாணவ அரசியல் அமைப்புகள் கல்வி நிறுவனங்களிலும், பணியிடங்களிலும் இருக்கின்றன. மக்களை வஞ்சிக்காத, மனித குலத்தின் மாண்புகளை மீட்டெடுக்கக் கூடிய விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்புகள், கட்சிகள் நாங்கள் மட்டும்தான் என்று அவைகள்  தங்களை முன்னிறுத்துகின்றன.

அந்தந்த அமைப்புகள், கட்சிகள் தங்களது தலைவர்களின் கருத்துகளையும் அவர்கள் சொன்ன மக்களுக்கான சித்தாந்தங்களையும்  எந்தளவு உள்வாங்கி செயல்படுகின்றனர் என்பதை தற்போதைய இந்திய அரசியல் சூழலில் குறிப்பாய் தமிழ் அரசியல் சூழலில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெரியார், அண்ணா  என்ற இரண்டு தலைவர்களின் இறப்புக்குப் பின்னர்  அவர்களது படங்களை வைத்து தமிழக மக்களைப் பகடைகளாக உருட்டிக் கொண்டிருக்கும் இருபெரும் திராவிடக் கட்சிகள் அதிலிருந்து பிரிந்த கிளைக் கட்சிகளின் இக்கால அரசியல் செயல்பாடுகள் வெட்கி தலைகுனிய வைக்கின்றன. அந்த தலைவர்களது சித்தாந்தங்களை இரு கட்சிகளும், கிளைக் கட்சிகளும் மறந்துபோய்  பல காலங்கள் ஆகிவிட்டது.

சாதி, மதம், கல்வி, பொருளாதார, கலாச்சார ரீதியில் மக்களை வஞ்சித்து அடிமைப்படுத்தத் துடிக்கும் ஆளும் வர்க்கங்கள்தான் நமக்கு பொது எதிரி என்பதை இம்மியளவுக்  கூட நினைவில் வைக்காமல் மந்தநிலையில் இந்த கட்சிகளும் அமைப்புகளும் தங்களுக்குள்  பதவிகளுக்கு சண்டையிட்டுக் கொள்கின்றன. இதில் தமிழ் தேசியங்கள், இடது சாரிகள், தலித்திய அமைப்புகளும் அடக்கம். மக்களுக்கான அரசியலைப் பேசும் எல்லாத் தலைவர்களது சித்தாந்தங்களும் தமிழக மக்கள் நலன்களுக்காக ஒற்றைக் கூரையின் கீழ் ஒன்றுகூடத்  தயங்குகின்றன. கொள்கைகள், சித்தாந்தங்களில் முரண்பாடுகள் இருப்பதினால்தான் நாங்கள் இவ்வளவு குழுக்களாக பிளவுற்றுக் கிடக்கிறோம். ஆனாலும் எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியம்  என்ற பதில் அவர்களிடத்தில் இருக்கிறது.

சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்துக்கொண்டு தற்கால அரசியல் நெருக்கடிகளைப் புரிந்து மக்களுக்காய் களம் வர இவர்களை எது தடுக்கிறது. அவர்கள் செய்யும் சந்தர்ப்பவாத, சம்பாத்திய மனப்பான்மை  அரசியல்கள்தான் அவர்களைத் தடுக்கிறது. போராட்டக்களம் வந்துவிட்டால் அவர்களால் அந்த தலைவர்களது சித்தாந்தங்களைப் பரிசோதித்துப் பார்த்தேயாக  வேண்டும் என்ற நிலை வரும். களத்திற்குப்  போக வேண்டும், மக்களுக்கான கிளர்ச்சிகளை உண்டாக்க வேண்டும் என்று எண்ணம் வருவதற்கே அவர்கள் முதலில் சமூகத்தையும், சித்தாந்தங்களையும் சரியாக உள்வாங்கியிருக்க வேண்டும். அதன் பிறகுதான்  அவர்களுக்கு பழக்கமே இல்லாத பரிசோதனை முயற்சிகள் எல்லாம்.

காந்தியால்தான் தனக்கும் தன் நண்பனுக்கும் பிளவு வந்து விட்டதோ என்று இந்த சிறுகதையில் எண்ணும் நண்பனைப் போல, தலைவர்களை வைத்தும் அவர்கள் வகுத்த கோட்பாடுகளை திரித்தும் அதைப் பாடத்திட்டங்களாக வைத்து நம்மிடையே அறமற்ற அரசியல் செய்யும் மத்திய, மாநில அரசுகளால்தான் சமூகத்தில் நம்மை நாமே பிரித்துக் கொள்கிறோம்  என்பதை  நாம் எண்ண வேண்டும். யார் மக்களுக்கான தலைவர்கள் என்பதை அறிந்து அவர்களது கொள்கைகள் கோட்பாடுகளை அந்தந்த கட்சிகளை விட நாம்தான்  தெளிவாய் ஆய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

‘இன்று கொலையாளிக்கு அவன் யாரை எவ்வளவு பேரைக் கொலை செய்யப் போகிறான் என்று தெரியாது. அவன் வரையில் அவன் விசையைத் தள்ளுபவன். கொலை செய்யப்படுபவர்களுக்கும் அவர்களுடைய முடிவுக்கு எவன் உண்மையான காரணம் என்று தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அவன் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு சுரங்க அறையில் மிகவும் பத்திரமாக, மிகவும் பத்தியமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பான்’ என்று அனிதாக்களைக் கொல்லும் இன்றைய அரசியலை 1973லேயே ‘காந்தி’ சிறுகதையில் உள்வைத்திருக்கிறார் அசோகமித்திரன்.

சிறுகதைக்கான இடுகை – http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_8709.html