எதிரில் இல்லாத காலம்

எதிரில் இல்லாத காலம்

டோடோ

கதைகளுக்கு என்றும் வயதாவது இல்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தபின்பும் கதை புத்தம் புதியதாக இருக்கிறது. – எஸ். ராமகிருஷ்ணன். (கடவுளின் நாக்கு).

ஒரு மதிய நேரத்து மேகத்தைப் பார்க்கும் நாம், அதில் உருவங்களை நமக்கு ஏற்றவாறு கற்பனை செய்துகொள்ளலாம். அப்படித் தெரியும் உருவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்; அது போல் மாறுபட்டிருப்பது இன்னும் சுவாரஸ்யமான ஒன்று. அது போலவே கதைகள் படிப்பதும், அதை நாம் புரிந்துகொள்வதும் அந்தக் கதை நம்மில் ஏற்படுத்தும் பிம்பங்களும், நாம் பார்த்த இடங்களும் என நமக்கு கலவையாகக் கிடைப்பதே நம் கதை அனுபவம். ஒரு பெயர்.. தியாகராஜன் – இந்த சிறு பெயரே கூட ஒவ்வொருவருக்கும் ஒரு உருவம் தோன்ற வைக்கலாம்.

அதீத சினிமா பாதிப்பினால் இன்றும் எனக்கு ரயிலைத் தவற விடும் கனவு வரும். இந்த என் பிரத்தியேக பயத்தால், நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனைத் தவிர , எந்த ரயில் பயணத்திலும் எதற்காகவும் நான் இறங்கியதில்லை. இந்தப் பின்னணியில் தான் இந்த அசோகமித்திரனின் சிறுகதையைப் படித்தேன்.

கதை சுருக்கம் :

ஒரு சராசரி மனிதன் தன வீட்டிலுருந்து கிளம்பி பேருந்தில் போய், ரயில் நிலையம் அடைந்து ரயிலைப் பிடிக்கும் முயற்சியும் வழியெல்லாம் அவன் காணும் காட்சிகளும், அது அவனுள் ஏற்படுத்தும் எண்ணங்களும் தான் கதை. வேறொரு வடிவத்தில் இது அறிவியல் புனைவாகவும் பயணிக்கிறது.

1973 ல் எழுதப்பட்ட இந்தக் கதையில் இன்னமும் இருக்கும் உயிர்ப்பு எனக்கு பிடித்தமானது – அதாவது, நம்ம ஊர் 12B , ரன் லோலா ரன் திரைப்படங்கள் காலத்திற்கும் முந்தைய காலகட்டத்தில். ஒரு ஐந்து நிமிட தாமதம் செய்யும் சாத்தியங்களும் அது ஒரு மனிதனின் கற்பனையையும், பயத்தையும் கிளர்வதே கதை. ஒரு எழுத்தாளர், பார்க்கும் அனைத்தையும் வித விதமாக வர்ணிப்பது என்பது வேறு. தனக்கு நடந்ததை சொல்வதுடன், அதோடு தன் தொடர்பில்லாத எண்ணத் தொடர்ச்சியையும் பதிவிடுவது என்பது வேறு. இதில் அசோகமித்திரன் இரண்டாவது முறையை மிக இயல்பாக, உறுத்தலில்லாமல் செய்கிறார். ரயிலைப் பிடிக்க ஓடுவது, அதிலிருந்து பஸ் என்கிற ஒற்றை வார்த்தையை வைத்து பஸ் பயணம் பற்றி சொல்வது, வழியில் காணும் அனைத்தையும் பார்ப்பது அது சார்ந்து யோசிப்பது இது இயல்பாக வெளிப்படுகிறது.

பிரயாணம் செய்வதில் இரண்டு வகை. ஒரு மணி நேரம் முன்னரே அந்த இடம் சேர்ந்து நிதானமாக புத்தகம் படித்து, அடிக்கடி மணி பார்த்து காத்திருப்பவர் ஒரு வகை. இன்னொரு வகை – கடைசி நிமிடம் வரை அடுக்கி வைத்து, கிளம்பி, நெரிசலில் சிக்கி அதன் பின் ஒரு வழியாக இடத்தை அடைவது. இரண்டாம் வகை தப்பென்றாலும் அது ஏற்ப்படுத்தும் அட்ரினலின் கொஞ்சம் சுவாரஸ்யமானது [ என்னளவில் ]. இதை அசோகமித்திரன் எப்படி பார்க்கிறார், அவரின் கதாபாத்திரம் என்னவெல்லாம் பார்க்கிறது என்பது முக்கியமாக படுகிறது. வேடிக்கை பார்ப்பதும், கவனிப்பதும் அதை பொருத்தமாக பதிவிடுவதும் கதாசிரியரின் பணி. இந்தக் கதையின் நாயகன் தான் வழியில் காணும் இடங்கள், துரத்துதல் நம்மில் எல்லோருக்கும் இன்றளவும் ஏற்படுவது.

எல்லா அறிவியல் புனைவுகளிலும் முக்கியமான கருப்பொருள் காலத்தைக் கடப்பது – சாத்தியமில்லாததாலேயே இதை சாத்தியப்படுத்தும் கதைகள் நம்மிடையே ஏராளம். இந்தக்கதையில் ஒரு ரயில் எதிர்காலமாக இருக்கிறது. அது நமக்கு கட்டுப்பட்டதில்லை என்பதை அழகாக அமைக்கிறார் அசோகமித்திரன். அதே போல் இன்னொரு அம்சம், கடவுள் – எல்லா எழுத்தாளர்களின் ஆர்வமும் கதையில் எப்படியாவது கடவுளைக் கொண்டு வருவதும் அதை பேச வைப்பதும். இந்தக் கதையில் கடவுள் அவனைத் தடுக்கிறது, அறிவுரை சொல்கிறது. கடவுள் – என் மனப் பிராந்தி என்ற 3 வார்த்தைகளில் எளிதாகக் கடக்கிறார், அசோகமித்திரன். நாம் 5 ருபாய் தர்மம் செய்தாலும் அந்த தூங்கும் அல்லது அழும் குழந்தை நம்மை விட்டு மறைவதில்லை. அந்த சிறு பாதிப்பையும் அழகாகப் பதிவிடுகிறார்.

நம் எல்லோருக்கும் சொல்லப்பட்ட பள்ளிக்கால அறிவுரை – நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல [?!] வேலை கிடைத்தால் நன்றாக வாழலாம். இந்தப் பதட்டமே இந்தக் கதையின் நாயகனை ஓடச் செய்கிறது – உற்று கவனித்தால் அது அவனை மட்டுமல்ல நம் எல்லோரையும் தான். நம் மதிப்பெண்களும், குடும்ப சூழலும் நம்மை வெவ்வேறு திசைகளுக்கு திருப்புகிறது. சில பெரிய விஷயங்கள், ஒரு சாதாரண மனிதனின் ஒரு தின அனுபவத்தின் வாயிலாக நமக்கு அசாதாரணமாக கடத்தப்படுகிறது. ஒரு சிறுகதையில் காலம், எண்ணத் தொடர்ச்சிகள், கடவுளை போன்ற பெரிய தத்துவ விஷயங்களை அடைப்பது பெரிய விஷயம். அந்த ரயிலையே  காலமாக அல்லது நாம் பார்க்கும் வேலையாக அல்லது நம் குடும்பமாக அதன் சார்ந்த கவலையாக உருவகப்படுத்தலாம் அல்லது நடக்காத ஒன்றை நடக்கப் போவதாக எண்ணி பயப்படும் எண்ணங்களைக் குறிக்கலாம். முன்னர் சொன்னது போல அவரவர் கற்பனைக்கேற்ப.

வேலையிலிருப்பவன் திங்கட்கிழமைகளை விட வேலையில்லாதவன் திங்கட்கிழமைகள் இன்னும் மோசமானவை. அதிலிருந்து தப்பிப்பதற்காகவே அமைகிறது நம் எல்லாரின் ஓட்டங்களும். என்னை விட மூத்த இந்த கதை தந்த அனுபவம் நதியில் உருண்டு சில்லிட்ட கூழாங்கல்லாய் என்னில் நிலைக்கிறது.

 

கெஞ்சும் முகத்துடன்,
ஓட்டுனர் முகம் பார்த்து
கை காட்டி நிறுத்த முடிவதில்லை,
பின்னால் ஓடியும் பிடிக்க முடிவதில்லை,
விரும்பும் இடத்தில்
இறங்கவும் முடிவதில்லை,
ஓட்டுனர் கண்ணாடி வழியாக
எதிர் வரும் பயணமும் தெரிவதில்லை

எதற்கும் கட்டுப்படாதவை
ரயிலும்,
காலமும் !

சிறுகதைக்கான இடுகை : http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_22.html.