சுயமென்னும் பாண்டம்

சுயமென்னும் பாண்டம்

மா.க.பாரதி

    ஒவ்வொரு மனிதனும் தனது புறச்சூழலால் வடிவமைக்கப்படுகிறான்.  பல நேரங்களில் அதன் விசைக்குக் கட்டுப்பட்டே இயங்க வேண்டியுள்ளது.  ஆனாலும் ஒவ்வொருவரும் சிற்சில நேரங்களில் தன்னை இயக்கும் அவ்விசைகளைத் தாண்டிச் சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது.  நுணுகி ஆராய்ந்தால் அச்செயல்கள் கலையாகவோ கலையால் உந்தப் பெற்றனவாகவோ அல்லது மக்கள் பெருந்திரள் பங்குபெறும் உரிமைக்கான கூடுகையாகவோதான் இருக்கும்.  அன்றாடங்கள் நம்மை அடிமைகொண்டு வேறு பாதைகளில் நம்மைப் பயணிப்பதைத் தடுக்கும் ஒவ்வொரு கணமும் கலைஞன் நம்மை இடையீடு செய்கிறான்.  அப்படி இடையீடு செய்யும் அந்தக் கலைஞனைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் புறக்கணிப்பின் வழிக் காயப்படுத்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை நாம் காண்கிறோம்.  அந்த இடையீட்டை நிகழ்த்தும் கலைஞனின் வெளிப்பாடு சமூகத்தைத் தொந்தரவு செய்வதாக இருப்பது ஒரு காரணம்.  அன்றாடங்களைச் சுதந்திரம் எனக் கருதும் ஆழமான நம்பிக்கையின் இயல்பான வெளிப்பாடு இது.

    ‘Girl with a Pearl Earring’ என்ற அற்புதமான ஓவியத்தையொட்டி வெளிவந்த அதே தலைப்பு கொண்ட படத்தில், ஓவியனான ஜோஹன்னஸ் வெர்மீர் ஒரு புரவலனால் (Patron) ஆதரிக்கப்படுவார்.  அந்தப் புரவலன் அந்த ஓவியனின் உரிமையாளன் போலவே நடந்துகொள்வான்.  அந்த ஓவியனது autonomy-யை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தொந்தரவு செய்வான்.  அந்தப் புரவலன் வெர்மீர் வரையும் படங்கள் பலவற்றில் இடம்பெறுவான்.  மனிதர்களைப் பண்டங்களாகவும் உடைமையாகவும் காணும் (Reification) நிலவுடைமை மனப்போக்கு கலையையும் கலைஞனையும் அவ்வண்ணமே மதிப்பிட்டது.  பழந்தமிழின் கவிஞர்களும் பாணர்களும் நம் நினைவில் கொள்ளத் தக்கவர்கள்.  நுகர்வுக் கலாச்சாரத்தின் தாக்கம் பரவியிருக்கும் இன்றைய உலகில் பல பகுதிகளில் கலை நுகர்வுப் பொருளாகப் பாவிக்கப்படுகிறது.  ரசனை அதைத் தொடரும் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.  ஆனால் இன்னும் நிலவுடைமைச் சமூக மதிப்பீடுகள் முழுமையாக நீங்காத இந்திய மனங்கள் தம்மைப் புரவலராக எண்ணிக் கலைஞனை அணுகுகிறது.  

    அசோகமித்திரனுடைய இக்கதை மிகப்பல தளங்களில் விவாதத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது.  ஒரு மனிதன் கலைஞனாக மாறும் கணங்களின் விவரிப்புகள் எத்தனை முறை படித்தாலும் நம்மைப் பேருணர்வில் ஆழ்த்தும் வல்லமை கொண்டவை.  கதையில் வரும் பிற மாந்தர்கள் காதரின் நிலைமாற்றத்திற்கேற்பத் தங்களது நிலைமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்கள்.  வாய்ப்புத் தேடி வரும் வழக்கமான ஒருவனைப் புறக்கணிக்கும் நோக்கத்தோடு அணுகும் முதல் நிலை; அவன் கலைஞனாக மாறும் கணத்தில் சிலிர்ப்புடன் நோக்கும் இரண்டாம் நிலை; மீண்டும் அவன் தன் இயல்புநிலைக்குத் திரும்பிக் கதறியழும்போது ’அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்’ என்று அவனை ஆச்சரியம் கலந்த அனுதாபத்துடன் காணும் மூன்றாம் நிலை.  

    புலிக்கலைஞனாக அவன் மாறும் அந்தக் கணங்கள்தான் அவன் தன்னைத் தானாக உணரும் நேரம்.  தனக்கான அடையாளமாக அவன் வரிந்துகொள்வதும் ’டகர் ஃபாயிட் காதர்’ என்பதுதான்.  தனது சுயம் என்னும் பாண்டத்தை நிறைக்கும் திரவமாக அவன் காண்பது கலையை.  அவன் அதில் கர்வமும் கொள்கிறான்.  தன்னைப் பிறரிடமிருந்தும் பிற புலிக்கலைஞர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காண்பிக்கும் ஏதோ ஒன்று தன்னிடம் உள்ளதாக உறுதியாக நம்புகிறான்.  வாய்ப்புக் கேட்டு நிற்கும் முதல் நிலையில் தனது சுயத்தின் மீது வைத்த நம்பிக்கை அவனிடம் வெளிப்படுகிறது.  இரண்டாம் நிலையில் தானே புலியாக மாறி நிற்கும் மாயக் கணம்.  மூன்றாம் நிலையில் நிலைகுலைகிறான்.  தனது வறுமையை குடும்ப நிலைமையை அவன் வெளிப்படுத்தி நிற்கும்போது அவனது கர்வம் அடி வாங்குகிறது.  சுயம் நொறுங்கத் தொடங்குகிறது.  அவன் கதறுவதற்கான காரணம் வறுமை மட்டுமன்று.

    அவனைக் கவனிப்போரது மனநிலை வேறு தளத்தில் இயங்குகிறது.  பார்வையாளரின் நிலையிலிருந்து புரவலர் நிலைக்கு மாற்றம் பெறும் பயணம் அது.  ஒரு கலைஞனை அணுகும் போக்கை நமக்கு நமது புறச்சூழல் சுட்டிக்காண்பித்துள்ளது.  மூன்றாம் நிலைக்குப் பின்னான கதைமாந்தர்களது நடவடிக்கைகளை மனிதம் என்ற பொதுவகைமையில் கொண்டு சென்று சேர்த்தாலும், கூர்ந்து நோக்கினால் அந்த மனிதம் புரவலரின் மனிதம் என்ற நிலையில் வைத்தே மதிப்பிட முடியும்.  ஒரு கலையை ஆதரிப்பதன் மூலமாக, கலைஞனைப் பாதுகாப்பதன் மூலமாக ஒரு நிலவுடைமைக் காலத்துப் புரவலன் பெறும் திருப்தியுணர்வை அக்கதைமாந்தர்கள் பெறுகிறார்கள்.  ஒன்றரை வருடம் திரைப்படம் எடுக்காமல் வேலையின்றிக் கழியும் நாட்களின் நடுவில் புரவலனாகும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது.  தங்கள் சக்திக்குட்பட்டு அவர்கள் அப்பணிகளைச் செய்கின்றனர்.  

    திரைப்படத்துறையில் அசோகமித்திரன் பெற்ற அனுபவங்கள் இக்கதையின் கூர்மையான நகைச்சுவைக்குப் பெரிதும் துணைசெய்திருக்கிறது.  மக்கள் கருத்தியலை வடிவமைக்கும் ஒரு கலைத்துறையின் அங்கமாக இருக்கும் பலரது வேலையற்றுக் கழியும் வெறுமையான பொழுதுகள் சுவையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  கலைத்துறையில் இருந்தாலும் அவர்கள் முதன்முதலில் புலிக்கலைஞனை அணுகும் விதத்தில் எவ்விதக் கனிவும் இல்லை.  அவர்கள் புழங்கும் கலைவெளி அவர்களை எதுவும் பாதிக்கவில்லை.  கலைக்குத் துணை புரிந்தாலும் பொதுச்சமூகம் அணுகும் வெளிப்பாடுகளாகவே அவை உள்ளன.  காதரின் வெளிப்பாட்டினால் சில கணங்கள் சிலிர்த்திருந்த பின்னர் அவர்கள் அக்கலையின் ரசிகர்களாகத் தொடரவில்லை.  உதவி புரிபவர்களாகத் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.  

    புலிக்கலைஞன் என்ற குறியீடு பாரதியைத்தான் எனக்கு அதிகம் நினைவுறுத்துகிறது.  காதர் வாய்ப்புக் கேட்டுச் செல்லும் சூழலும் பாரதி சீட்டுக்கவி எழுதி அனுப்பும் சூழலுமே மனத்தில் நிழலாடுகிறது.

”எண்ணள வுயர்ந்த வெண்ணி லிரும்புகழ்க் கவிஞர் வந்தால்

அண்ணலே பரிசு கோடி யளித்திட விரைகி லாயோ?”

அவன் எண்ணி வந்த உதவி இதற்குப் பிறகும் கிட்டாத நிலையில் அவனது சுயமும் கர்வமும் எவ்வளவு காயமுற்றிருக்கும்?  நம் நிலத்தின் கலைஞர்கள் அனைவரையும் சுட்டி நிற்கும் ஒரு பெருங்குறியீடாக அங்கே புலிக்கலைஞன் பரிணமித்து நிற்கிறான்.  அவனது சுயமும் அவனைச் சுற்றியுள்ளோரது சுயமும் நிறையும் கணங்களின் முரண்பாடுகளைப் பேசும் உச்சம் இவ்வரிகள்:

”அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.”

சிறுகதைக்கான இடுகை : http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_850.html.