சூனியக்காரன்களின் கதை

சூனியக்காரன்களின் கதை

லைலா எக்ஸ்

குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச் செயலைப் பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர் வினையாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.

___ரமேஷ் – பிரேம்.

 

சூனியக்காரன்களின் கதை

~~~~~~~~~~~~~~~~~~

 

இக்கதையைப் படிக்கத்துவங்கும் நீங்கள் சூனியக்காரன்களைப் பற்றிய கதைகளை கேட்டதுண்டா, இந்தப் பரந்துபட்ட உலகத்தில் நீங்கள் கேட்டப் பலப்பலக்கதைகளில் சூனியக்காரனைப்பற்றிய ஒரு கதையையாவது நீங்கள் கேட்டிருந்தால் கொடுத்துவைத்தவர்கள், அப்படி கேட்டிராத துரதிஷ்டசாலிகளுக்காக கதைசொல்லி நான் நினைவியின் இந்தக்கதைகளைக் கூறுகிறேன்.

 

உங்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும், அந்த மாய நகரத்தில் அதிகமாகப் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக பதினாங்கு நபர்களால் கற்பழிக்கப்பட்ட பெண் இருந்தாள். அதைப்பற்றிய செய்தி நினைவிக்குக் கிடைத்த பொழுது அவள் வாழ்ந்து வந்த நகரத்தில் பாதுகாப்பாய் இருப்பதாய் தீர்மானமாக நம்பிக்கொண்டிருந்தாள். போகப்போக அந்தக் கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பனவற்றைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்கள் முதற்கொண்டு சமூக வலைத்தளங்கள் வரை பரவலாக அலசப்பட்டது. அப்படியான குழுக்களிலிருந்தோ அல்லது தனி நபர்களிடமிருந்தோ பெண்கள் எப்படித் தப்பிக்கலாம் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை வலிவுறுத்துவது போலான வேத வாசகங்களை, ஆங்காங்கே புதிதாக சட்டென முளைத்த போதகர்கள் கூறத்துவங்கினர். மேலும் அந்த பதினாங்கு பேரைப்பற்றிய அச்சமும், வெறுப்பும் இன்னப் பல உணர்வுகளும் நகரத்தில் சட்டென பரவத்துவங்குகின்றன, அவளுக்கு இது இப்படி நேர்ந்திருக்கக்கூடாது என்றும், அவளிடம் கூட சிலப்பலத்தவறுகள் உள்ளன என்றும் ஆண்-மைய மனப்போக்கினால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் அந்த மாய நகரத்தில் பலவாறாக தகவல்கள் பறிமாறப்பட்டன. பதிநான்கு பேர்களில் ஒருவனாக எவனொருவனும் மாறிவிடக்கூடாது என்பதை விட, அந்தப்பெண்ணாக எவளொருவளும் ஆகிவிட முடியாத சாத்தியங்களை எப்படி பெண்ணைச்சுற்றிக் கட்டமைப்பது என்பதே அந்த போதகர்கள் மற்றும் அவர்களின் அடிபொடிகளின் எதார்த்தமானதுமான மற்றும் அடிப்படையானதுமான அச்சமாக இருந்தது.

 

”நானாக இருந்தால் நானே ஒத்துழைப்பு கொடுத்திருப்பேன்” என்று எண்ணிக்கொண்டு, மேற்கூறிய விவாதங்களை ஒன்றுக்குமே உதவாத வெற்று ஜம்பங்கள் என்று ஒதுக்கி வந்த நினைவி கதையைக் கூறத்துவங்கியதும் தனக்குப் பலக் கடமைகள் இருப்பதாக உருவகித்துக்கொண்டாள். அந்த பதினாங்கு நபர்களைப்பற்றிய குறிப்புகள் அந்த நகரத்திலுள்ள ஒவ்வொரு மூலையிலும் தொன்மையிலிருந்து இன்று வரை காணப்படக்கூடியதாக இருக்கின்றன என்பதை எவராலும் முழுதாக அறிந்து கொள்ள முடியாமலிருக்கிறது என்றும் மேலும் இந்தப் பிரபஞ்சத்தில் எந்த ஒரு தனி நபரும் அந்த பதினாங்கு நபர்களில் ஒருவனாக இருந்துவிட முடியும் என்ற சாத்தியங்களை முன்வைத்து அதை முழுமூச்சாக நிறுவுவதே நினைவியின் ஒரே குறிக்கோளாக திடீரென மாறிப்போனது.

 

அந்த பதினாங்கு பேரின் குணாம்சங்களின் கூறுகளில் ஒன்றாவது நம்மைச்சுற்றியுள்ள எவரிடமாவது தென்படாமல் இருந்தால் அவர்களிடம் தன் கதை சொல்லும் தன் குரலை, அவர்களது குரலால் கொலை செய்ய வேண்டுமென்றும், அல்லது தன் கதை சொல்லும் குரலினை தற்கொலைக்கு செலுத்திக்கொள்வது நியாயம் என்று ஒரு அருமையான பிரதிக்குள் அவர்கள் நிறுவ வேண்டுமெனவும், கொலையோ தற்கொலையோ பிரதியில் மட்டுமே நிகழும் என்றும் எடுத்துக்கூறி கோரிக்கை வைக்கவேண்டுமென்றும் முடிவு செய்துகொண்டு நினைவி கதைகளைக் கூறத்துவங்குகிறாள். நினைவிக்கு, அந்த மாய நகரத்தில் தன்னுடன் இருந்தவர்களிடமிருந்து பலக்கதைகள் அலைமோதிக்கொண்டிருந்தன. கசாப்புக்கடைக்கு கொண்டுவந்து நிறுத்தப்படும் ஆடுகளைப்போல, கதைசொல்லியின் முன் அவர்களை நிறுத்தும் நினைவி மேலும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் நான்கு திசைகளையும் குறிக்கும் நான்கு முகங்களுடன் இருந்தார்கள். அவள் பிரம்மாக்களைக் குறிக்கிறாளா? அப்படியாகின், அவர்கள் உருவாக்குவது தான் என்ன என்று கதைசொல்லி நான் குழம்பியதைவிட நினைவி குறிப்பிடும் அசாதாராணமான விசயங்கள் ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் கடந்த காலங்களில் அவள் தவறவிட்ட ஆசைகள் போலவும், கனவுகள் போலவும் இருந்தன.

 

அடையாளங்களின் கதை

~~~~~~~~~~~~~~~~~

 

அந்த மாய நரகத்தில், அழகாலும், பணத்தாலும் மேலும் சாதியினாலும் உந்தப்படாமல், அன்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன்னை அடையும் காதலுக்காக நினைவி காத்திருந்தாள், தனக்கு முன் இருக்கும் கிளர்ச்சியூட்டக்கூடிய மார்பகங்களின் மேல் பார்வைகளைச் செலுத்தாதவர்கள் மட்டுமே தமது அன்புக்குறியவர்கள் என்று தீர்மானமாய் நம்பிய, துப்பட்டாவினைச் சுற்றிச்சுற்றி போட்டிருக்கும் நினைவி, முதல் சந்திப்பிலேயே, பார்த்த சில மணிநேரங்களிலேயே மார்பகங்களின் மேல் பார்வை ஓட்டிய கதாவின் மீது காதலில் விழுந்தாள்.

 

அவர்களின் காதலை பாதுகாப்பாக வைத்திருந்து அதை வெற்றிகரமாக தொடர்ந்து செலுத்த சிறந்த வழி ஒன்றை – மாயநகரத்தின் பிற பெண்களைப் போலவே – நினைவியும் கற்றறிந்து வைத்திருந்தாள். பரிபூரணமாக சின்னஞ்சிறு பழுதுமின்றி உருவாக்கப்பட மாய நகரத்தின் வேத நூட்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிய நேர்த்திகளோடு தன் வாழ்வை நினைவியும் கட்டமைத்திருந்தாள். அவ்வேதநூட்களைப்போலவே பரிபூரணமான, சின்னஞ்சிறு பழுதுமின்றி மறுஉருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளை அவர்கள் அனுதினமும் அனுபவித்துக் குறிப்பெடுத்து தங்கள் வாழ்வுடன் ஒப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இசையாக, ஓவியமாக, நடனமாக, நாடகமாக அந்த மாயநகரத்தின் மாபெரும் மேதைகள் – சில கலைஞர்கள் – அந்த பழுதற்ற வேதநூலைப்போலவே – அதே கருத்துக்களை, வேதநூலை விட எளிமையாக – திரும்பத்திரும்ப கலையாக வெவ்வேறு வகையில் புனைந்து கொண்டிருந்தனர். ஆதலால், நினைவிக்கும், கதாவிற்கும் அந்தக் குறிப்புகளின் வழி தங்கள் வாழ்வை இட்டுச்செல்வது மிகவும் எளிதாக இருந்து வந்தது. அந்த மாயநகரத்தின் கலைஞர்கள் வழக்கமாக ஆண்டாள்களில் காவியக்காதல், கண்ணகி அர்த்தமில்லாமல் மதுரைக்கு இழைத்த அநீதி, சீதாவின் பரிதாபமான நிலை., அகல்யாவின் துரோகம் மற்றும் சூர்பணங்குகளின் காமம் போன்ற அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் கலையாக்கிக் கொண்டிருந்தனர். அவற்றைப் பின்தொடர்ந்த கதாவும், நினைவியும் தங்களுடைய ஆனந்தமும், பரவசங்களும் என்றென்றும்  – வேதநூல் சுட்டிக் காட்டும் படி – முடிவுறப் போவதில்லை என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.

 

”உயிர்ப்புத்தன்மை உடையது என்றும் பரிசுத்தமானதாக இருக்கப்போவதில்லை. காதல் மிகவும் உயிர்ப்பானது.. ” ஏதோ நியாபகத்தில் கூறிக்கொண்டிருந்த நினைவிக்கு அவர்கள் புரிகிற காதல் குறிப்பிட்ட நாட்களுக்குப்பின் சலிப்பாக இருந்தது. அது மாயநகரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்தை அடைந்த காலமாக இருந்த காரணத்தால் ”போர்ன்” காட்சிகளை வலையில் விரித்து வைத்து கண்ணிமைக்காமல் இருவரும் எப்படியோ பார்க்கத் துவங்கினார்கள். இப்படியான காணொளிகள் அவர்களை நல்லெண்ணங்களிலிருந்து விலக வைத்து, தங்கள் அப்பழுக்கில்லாத காதலின் மூலமாக – வேத நூல் உணர்த்துவதைப்போல் – மட்டுமே தங்கள் வாழ்வில் நிறைவும், சாஸ்வதமும் கிடைத்தது என்ற உண்மையை காமத்தின் தூண்டுதலால் புறக்கணித்து, இவ்வாறான காணொளிகாளால், இவ்வாறான மீறல்களால் இன்னும் அதிகமாக இன்பமடைவோம் என்று இறுமாப்புடன் பாவித்துக்கொண்டார்கள். கதா, நினைவியிடம் காட்டிய ”போர்ன்” காணொளிகள் நிச்சயம் அர்த்தங்களும், அழகியலும் நிறைந்தவை. கதா, அக்காணொளிகளை நினைவியுடன் இணைந்து பார்க்கும் போது தன் முகத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. நினைவியும் தன் முகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாதுடன், கதாவின் முகத்தைப்பார்க்காமல் காணொளியையே பார்த்துக்கொண்டிருந்தாள். காதலர் காதலிகளுக்கிடயேயான அந்யோன்யத்துடன் இருந்த காணொளிகளையே அவன் விரும்பிபார்த்து வந்ததை நினைவி கவனித்தாள். நினைவி வெட்கப்பட தயங்க அவளுக்கு அவற்றை காட்டுவதில் கதாவிற்கு ஒரு அதீத சுகம் இருந்தது.

 

ஆனால், விரைவில் இப்படியாக அவர்களாக கட்டமைத்துக்கொண்ட இந்த புதுமையான காதலிக்கும் வழிமுறைகள், தாங்கள் படித்து வந்திருந்த நேர்த்தியான புத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவை போலில்லாமல் குறைபாடானவையே என்று உணர்ந்து அதனால் ஆழமாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆண்களுக்கு தங்களின் வெறுப்பின் ஆழம் தெரியாது. கதா தனது செயலுக்காக வெட்கப்படுகிறான், அவமானமாக நினைக்கிறான். அவன் தன்னைச்சுற்றி உள்ள உலகத்தைக் கவனிக்கிறான். அவனுக்கு தன்னுடய வாழ்வைப் பொருத்திப்பார்க்க வேதநூல் உள்ளது, அதன்படி கதா அனுபவித்த உன்னதமான காதல் இப்போது பலப்பல வழிகளில் சிதைக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தான். கதா – அவன் கூறிக்கொள்வதைபோல – ஒன்றும் முட்டாள் இல்லை, அவன் நினைவில் “வேதநூல்” உள்ள மனிதன். அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்ட பார்வைகளில் வெறுப்பு தெண்படத்துவங்கியது. கதாவின் விடுபடலை அவன் எம்மனநிலையிலுள்ளான் என்பதை அவனுடைய முத்தங்களிலிருந்தே நினைவி கண்டுபிடித்துவிடுவாள். பலநூறு முறை உணர்ந்து சலித்துவிட்ட நினைவியின் துரதிஷ்டம் பீடித்த உடலை இனிமேல் தொடாமலிருப்பதே கதாவின் ஆன்மாவிற்கு ஆறுதலைத்தேடித்தரும் விசயமாகிபோனதை – பரிபூரணமான வேதநூல் உணர்த்துவதைப்போல் – நினைவி அறிந்து கொண்டாள். அந்தக் காணொளிகளால், தனது தனித்துவ முத்திரையோடு – வேதநூல்களின் கதாநாயகி பிம்பங்களுடன் – மனதில் வைத்திருந்த பேரழகி நினைவியின் மேல் கதாவிற்கு வெறுப்பு அதிகரித்தது. பெண்ணை வெறும் பாலியல் உயிரியாக மட்டுமே பார்க்கும் ஆண், பெண்ணை வெறுப்பான். பாலுறவுக்கு – வேத நூலில் குறிப்பிடப்படாத வழியில் – இணங்கிய பெண்களுடன் மனித்தத்தன்மையுடன் உரையாடும் ஆண்களை காண்பதரிது என்பதை அறியாதவளல்ல நினைவி.

 

பௌதீக அடிப்படையில் ஒரு சக்தியை அழித்திட முடியாது, அதனை மாற்றவோ அல்லது திருப்பிவிடவோ மட்டுமே முடியும் – நிச்சயமாக காதலையும் தான். அதே பௌதீகத்தின் படி கதா வேறொரு இளம் ”கன்னி”ப்பெண்ணை மணமேடையில் கரம் பிடித்தான். கரம்பிடித்த மாத்திரத்தில் அவன் உணர்ந்தது, மனைவி அவனுடைய காதலியைப் போலில்லை. விரைவில் அவனுக்கு அவளுடன் கூடுவது அலுத்துப்போனது. ”போர்ன்” காட்சிகளைப் பார்த்தபடிக்கு கூடாமல் இருப்பதும், அறிவார்த்த சண்டைகள் போடாமலிருப்பதும் கதாவிற்கு குறையாகப்பட்டது. ஆனால், வீட்டில் அவனுக்காக மனைவி காத்திருப்பதும் நிறைவாக இருந்தது. இருந்தாலும், அவன் ”போர்ன்” காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதை அறிந்த அவன் மனைவி மனம் உடைந்து எத்தனையோ பிரச்சனைகள் செய்து அவனைக் கலைக்கப்பார்த்தாள். போகப்போக நிம்மதியைத் தேடிப்போக வேண்டியதாக மாறிய தன் வாழ்க்கையில் தான் புரிந்த தவறை உணர்ந்துகொண்ட கதா, இப்பயங்கரமான வாழ்க்கைக்கு காரணம் தனக்கென ஒரு பிரதியை, அந்த வேதநூல்களில் இருந்து விலகி உருவாக்கிக்கொள்ள விழைந்தெதே என்றுணர்ந்து நினைவியை கடிந்துகொண்டு நினைவியை குறுடாக்கி நடுக்காட்டில் விட்டுவிட்டு வந்தான். கதாவிற்கான பரிபூரணமான வேத நூல் அவனது வீட்டில் அவனது மனைவியால் பிரதியெடுக்கப்படுகிறது, அதை அவர்கள் ஆனந்தமாக படித்துக்கொண்டிருக்கிறார்கள்

 

இவற்றைப்பார்த்து மனம் உடைந்த நினைவி, குருடாக மாறிய பின்னரே ஞானோதயம் பெற்று தனக்கான பார்வைகளை மீள் உருவாக்கம் செய்துகொண்டாள். தனக்கான வாழ்க்கையை மிகவும் வசதியாக, மிகவும் பெரிய அளவில் ஏற்படுத்திக்கொண்டு தன்னை மெருகேற்றிக்கொண்டாள். அவள் அந்த மாயநகரத்தில் நலமாக வாழ்வதற்காக வேண்டி தன்னை மீள் கட்டமைத்துக்கொண்டாள்.

 

அடையாளங்கள் புனைந்தவளின் கதை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

மாயநகரத்தில் இருந்த அழகிய சோலையைக் கொண்ட வீடொன்றில் ஓவியத்திலும், இலக்கியத்திலும், நாடகத்திலும், இசையிலும் ஆரம்பக்கட்ட ஆர்வம் கொண்டிருந்த நினைவி வசித்துவந்தாள். சில நேரங்களில் நினைவியின் கனவுகளில் எல்லையில்லா வேதனையோடு தன்னுடைய ஆழமான குரலில் சிறிது தடுமாற்றத்துடன் மனம் திறந்து கதாவிடம் தன் ஆசைகளை விவரிப்பதாக காட்சிகள் வரும், அக்கனவுகள் நினைவிற்கு மிகவும் நெருக்கமானவை. வெகு தூரத்தில் அழகிய வனப்புடன் பல இடங்கள் இருப்பதாக தான் அறிவதாகவும் ஆனால் அதை அடைய விடாமல் தடுக்கும் விதமாக ஒரு பெரிய ஆறு நடுவில் ஓடுவதாகவும், ஆறின் மறுகரையில் நிச்சயமாக அருமையான காட்சிகள் உள்ளதாகவும் அவை கதாவுடன் சேர்ந்து காண மட்டுமே கிடைக்கும் எனவும் கூறுவாள். அப்போது நினைவி அதிக காம உணர்வுடன் இருப்பாள். தாங்க இயலாத வலியுடன் கூடிய முழு திருப்தியான ஒரு கூடலை அடைவது போல் கனாக்காணுவாள். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வரும். ஆனால் பெண்ணிற்கான விருப்பதை நிறைவேற்றிக்கொள்ளும் பாதை என்பது வலி நிறம்பியது என்பதையும் பெண் தனக்கான கனவில் வெற்றி காணுகிற போது, அந்த வெற்றியானது, பெரும் இழப்புகளல் பெறப்படுகிறது என்பதையும் நினைவி தன் கூறிய அறிவினால், மாநகரத்தை கவனித்து கணித்து வந்திருந்தாள். ஆதலால் தன் கனவுகளைப் புதைத்து தன் அழகிய வீட்டை எழுப்பியிருந்தாள்  .

 

அந்த மாயநகரத்தில் வேதநூல்களில் சொல்லப்பட்டிருந்த விதத்தில் கர்ம சிரத்தையாக பெரும்பாலோனோர் வளர்க்கப்பட்டார்கள், முக்கியமாகப் பெண்கள். நகரம் ஓர் அருமையான கலாச்சாரம் நிறைந்த, பக்திமயமான “ஞான” மார்க்கமுள்ள புனிதகரமான நகரமாக இருக்கிறதென்று கிழக்கில் சொல்லியிருந்தார்கள். அதன் பிற்போக்குளையும், அதன் பக்திமார்க்கங்களையும், அதன் அறிவுத்தளத்தையும் கிழக்கில் விதவிதமாக சந்தைக்குட்படுத்தினார்கள். ஆனாலும், அந்த நகரத்திற்குள் இருந்த இரு கரிய நிழல் படிந்த பிராந்தியத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பது என்னவென்று எவருக்குமே தெரியாமல் இருந்தது. பரிபூரணமான ”வேதநூல்”கள் நினைவிக்கு காட்டிக்கொண்டிருக்கும் இன்பமான உலகின் சித்திரத்தை தாண்டி என்ன பெரிதான விசயங்கள் இருக்கப்போகிறது என்று நம்பிக்கையில் நினைவி வீட்டில் முழு சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தாள்.

 

அதிசயமாகவோ அல்லது இயல்பாகவோ அந்த மாயநகரத்தின் சமூகமே பெண்ணுடலால் தான் கட்டமைந்திருந்தது. பெண்ணுடலைப் பற்றிய அரசியலை விலக்கிவிட்டு சமூகத்தை மீள்கட்டமைக்க முற்பட்டால் அச்சமூகம் தன்னை முதலிலிருந்து கட்டமைக்க வேண்டியிருந்தது. “நான் ஒரு பின்லாடனுடன்(பெ) தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று கதை விடும் ”காதா”க்களின் காதல் அம்புகளைப்பற்றி பல சாதா-நினைவிகளுக்குத் தெரியத்தான் தெரியும். ஆனால் “பின்லாடன்” ஆக வாழ்ந்துகொண்டிருப்பவர்களுத்தான் தெரியும் பின்லாடனாக வாழ்வதைப்பற்றிய சுவாரஸ்யங்கள். அவர்களுடைய கதாக்கள் தன்னிடம் மட்டும் பாசமாக, மென்மையாக நடந்துகொள்வதை போதுமானதாக எண்ணிக்கொள்ளும் நினைவிகள் சிறப்புத்தன்மை வாய்ந்த நினைவிகள் என்று இக்கதைச் சொல்லியால் அழைக்கப்படுகிறார்கள்.

 

வேதநூலில் குறிப்பிடப்பட்டுள்ள போதிய நேர்த்தியுடன் அமைந்த அச்சிறப்பு-நினைவிகள் தன் ஆண் – கதா – வெளியில் எத்தனை மோசமானவனாக இருந்தாலும், நடந்தாலும் தன்னிடம் நல்லவனாக இருக்கும் வரை கதாக்களுக்கு விரும்பத்தக்கவர்களாக இருப்பார்கள் என்பது அந்த மாயநகரத்தின் சிறப்புத்தகுதிகளில் ஒன்று – பதிநான்கு நபர்களின் குணாம்சங்கள் காக்கப்படும் கூறுகளில் இதுவே மிக முக்கியமான கூறு. நம் சிறப்பு-நினைவியின் கோலத்தைப்பார்க்க அவளைப் பற்றி நன்றாக அறிந்த எல்லோருக்கும் சங்கடமாகத்தான் இருக்கும், அப்படித்தான் இருக்க வேண்டும். நம் சிறப்பு குணாலினி நினைவி அந்த நகரத்தின் மேன்மைக்கு தகுதியான அளவு தன்னை வெளியில் சித்தரித்துக்கொள்ள பழகியிருந்தாள், அவளிடம் எப்போதுமே ஒரு குற்ற உணர்வு – அம்மாயநகரத்தின் மேன்மைக்குத் தக்கவாறு தான் இருக்கிறேனா என்று இருந்துகொண்டே இருந்தது, அனாலும் வேதநூல் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ வலியுருத்துவதைப்போல் – அவளுக்கேயான தன் ஆண்டைகளைப்பற்றிய பெருமையில் அவள் கால்கள் பூமியில் பாவுவதில்லை. நியாயப்படிப்பார்த்தால், நினைவி தான் வாழ்ந்த மற்றும் வளர்ந்த விதத்திற்காக – தன்நலத்துடன், வாழ்ந்துவரும் நிலைக்காக – தன்னலத்துடன் இருப்பவர்களை ஆதரிப்பதற்காக வேண்டியவற்றைச் செய்வதைப் பற்றி பெரிதும் வருந்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிராக சிறப்புத்தகுதி வாய்ந்த நினைவி துணிச்சலாக தான் ஒருவனை – அதுவும் பெண்களை போகப்பொருளாக நினைக்கும் மற்றும் சுயநலாமான – ஒருவனை மட்டுமே நம்பி வாழ்வதைப்பற்றி பெருமைபட்டார்கள்., அப்படி இருப்பதற்குறிய தகுதியை, வசதியை பரிபூரணமான “வேதநூல்”கள் அந்த மாயநகரத்தில் வழிவகைகள் செய்துள்ளன..

 

சிறப்புத்தகுதி வாய்ந்த நினைவியாக இருக்கும் எந்தப்பெண்ணுக்கும் மகத்தான காதலும், மகத்தான குடும்பவாழ்க்கையும் அனைவரின் ஆர்வத்தையும் கிளருபவை என்று தெரியும். இன்பங்களையும், கூடுதலையும், துணையுடன் இணைந்து வாழ்தலின் சுகத்தையும், சிரிப்புகளும், இன்பங்களும், முடியவே போகாத வறுமானமுமாக இருக்கும் பலப்பல விசயங்கள் என்றுமே மாறப்போவதில்லை என்பது சிறப்பு நினைவிக்கு நன்றாகத்தெரியும். தன் வீட்டில் உள்ள அனைத்து விலை உயர்ந்த பொருட்களைப்போல் சிறப்பு நினைவி தன்னிலை மாறாமல் இருக்க வேண்டும் அவ்வளவு தான். அனைவரையும் அச்சுறுத்தும் விதமாக நல்லவளாக – பரிபூரணமான வேதநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் – இருக்க வேண்டும். இவ்வாறான அந்நினைவியைப்பார்த்து அனைவரும் பெருமைப்படுவதாகவும், அவ்வளவு திறமை மிக்க கரங்களையுடைய ஆண்டைகளையே தான் ஆண்டுவருவதாகவும் நினைத்துக்கொண்டாள்.

 

அந்த காலத்தில் – இன்றும் கூட – பழம்பெரும் அதிகாரங்கள் கொண்ட ஆண்டைகள்  அந்த மாயநகரத்தின் சில பிராந்தியத்தை மிகவும் கீழ்மையாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆம், அந்த பிராந்தியமும் மாயநகரத்தின் கீழ்தான் வந்தது. ஒரு தெரு நாயின், ஒரு மாட்டின் அல்லது ஒரு புழுவின் தரத்திலேயே அவர்களை மதித்து சித்தரிது வந்தனர். பரிபூரணமான “வேதநூல்”லின் செருக்கோடு தற்பெருமயடித்துக்கொண்டிருக்கும் அவர்கள் இன்றைய அளவில் கூட தொழில் நுட்பங்கள்ப் பற்றி முழுதாக தெரிந்திருந்தும் கூட “நண்டு சிண்டெல்லாம் வேலைக்கு போது, சம்பாதிக்குது” என்று மந்தமான உலகில் வாழ்ந்திருக்க முயன்றார்கள்.

 

நியாயப்படுத்திவிட முடியாத நிலையிலும் இந்த உலகத்தால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்ட பல விசயங்கள் பெண்களைச்சுற்றியே அமைந்துள்ளது எதார்த்தமா என்ன?  சிறப்புத்தகுதி வாய்ந்த நினைவியாக சிலர் இருக்கும் பட்சத்தில், அப்படி இல்லாதபட்டவர்களும் அந்த மாயநகரத்தில் இருப்பது நிதர்சணம் தானே, அப்படியான சாதா-நினைவி சிறப்புப் பிராந்தியத்திலிருந்து வந்திருந்தாள். அவளின் கலையான உடல் மீது ”மாயநகர”த்தின் ஆண்டைகள் என்றழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த மேற்கூறிய ஆஜானுபாவ மனிதர்களின் பார்வைகள் விழுந்தன. சாதா-நினைவியின் பெற்றோர்களினது உடைமைகளையும், கருவிகளையும், அவர்களது எண்ணங்களையும் கூட ஆண்டுவந்தார்கள் மேலும் சாதா-நினைவியான அவளையும் ஆள விருப்பப்பட்டார்கள். அது சாதா-நினைவிக்கு அசௌகரியப்பட்டது. சாதா-நினைவியை விரும்பியவன் சாதா-நினைவியின் அப்பாவை விட மூத்த வயதுடையவன். ஏதோ ஒரு சஞ்சலத்தில் நினைவியை தூரத்தில் வேலை பார்க்க விட்டவாரே அவனுக்கு விருப்பமான ”போர்ன்” புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

இலேசாக தூறிக்கொண்டிருந்த மழையில், சாதா-நினைவியின் ஆடைகள் நனைந்திருந்தன. பசேலென புற்களும், மஞ்சள் பூக்களும் ஈரமும் நிறைந்திருந்த ஒற்றையடிப்பாதையில் புகுந்து மிதமான வேகத்தில் நடந்துகொண்டிருந்தாள். அவளது துணையாக வந்திருக்க வேண்டிய சாதா-கதாவைப்பற்றிய நினைவுகளை அவள் கழித்துப்போட்டுவிட்டு முன்னேறிச் சென்று தூரத்தில் சொர்க்கம் போன்ற அழகிய வனப்புடன் இயற்கையாக அமைந்த இடத்தினை அடைந்தாள். அங்கே நின்றுகொண்டு இயற்கையை தோழியின் துணையுடன் ரசித்துக்கொண்டிருந்தவளை நோக்கி போர்ன் புத்தகத்தை பார்த்த பார்வைகளில் நிறைந்திருந்த ஆசைகளை கொட்டித்தீர்க்க சிறப்பு ஆண்டை வேகமாக வந்துகொண்டிருந்தான்.

 

அடுத்த நாள் காலை, அனைவரின் பார்வைகளிலும் நிறைந்திருந்தவாரு தோழியும், நினைவியும் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.

 

“உங்களால் நிச்சயமாகக்கூற முடியவில்லை அதானே”… தன் ஆண்டை கணவனின் மோசமான செயல்களை சரியென காட்டுவதற்கு, பல காலமாக அவர்கள் கைகளில் இருந்த மாய நகரத்தின் சிறப்பு சட்ட திட்டங்களை நினைவி ஆழமாக குழப்பத்துடனும், ஜாக்கிரதையுடனும் எதிர்க்கத்துவங்கினாள். தங்களுக்குள் இனி ஒரு போதும் சாதாரண உறவு இருக்க இயலாது என்று தனக்கான பிரதிகளை உருவாக்கிக் கொள்ளத் துணிந்த சிறப்பு நினைவி தன் கணவனால் பலியிடப்பட்ட பெண்களுக்காக அவனை விட்டொழித்து தனியாகக் குடியேறினாள்.

 

தன்னைத் தவிர மற்ற எல்லோருக்கும் எளிதில் புலப்படாத அழகுடைய, குணமுடைய ஒரு பெண்ணை யாரும் விரும்புவதில்லை, மேலும் தனக்கு அதிகபட்சம் பயன் தராத – வேதநூலில் குறிப்பிடப்பட்டுள்ள பலாபலன்களுக்கு ஒப்ப – பெண்ணையும் யாரும் விரும்புவதில்லை என்ற முடிவிற்கு வந்த நினைவி, தன் நேர்மையான நேசத்தாலும், அதன் பலத்தாலும் மேலும் பலப்பல உறவு சார் பிரச்சனைகளாலும் உந்தப்பட்டு அவளது முடிவுகளை, அவளது நிறுவுதல்களை என்ன செய்வது என்று தெரியாமல் அவளே முடிவாக கதைசொல்லியானாள். தனது தனித்தன்மையான ஈடுபாட்டால், அவள் ஆராய்ந்து எழுதியதால், அவளது படைப்புகள் வித்யாசமான கைவண்ணத்திலிருந்தன. இதெல்லாம் படைப்புகளா என்று “வேதநூல்” களை படிசெய்யும் பெரியவர்களால் சாடப்பட்ட அவள் படைப்புகளைப்பார்த்தவுடனேயே அந்த படைப்புகளில் ஏதோ பிழையிருப்பதாக கூறத்துவங்கினர். உண்மையைக்கூற வேண்டுமானால் அவளது கதைக்கூறும் குரலில் அழுத்தமும், சத்தமும் அதிகரித்தது. அப்படியான காலக்கட்டத்தில் தான். அவள் தொடர்ந்து அந்தக்குரலை உரக்கக்கூறி எடுத்துச்சென்றிருக்க வேண்டும், அவள் செய்த தவறெல்லாம் அந்தக் குரலைக்கொலைச்செய்ய தானே ஒரு குரலைத்தேடி அடைந்தது தான்.

 

அடையாளம் தொலைத்தவளின் கதை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

கடைசியாக நினைவி விரும்பியது போல கதையை முக்கால் வாசி எழுதி முடித்திருந்த பொழுது அவளுடைய இளமை ஏறக்குறைய முடிவிற்கு வந்திருந்தது. “என் கதை கூறும் குரலின் மரணத்தின் அற்புதத்தை நானே எழுதிக்கொள்ளக்கூடிய சாத்தியத்தின் நிகழ்தகவினை அதிகப்படுத்திக்கொள்ளும் இறுதி முயற்சியாக உன்னிடம் வந்தேன்” என்று கதாவிடம் கூறிய நினைவி உண்மையில் அவனை அச்சுறுத்திக் கொண்டிருப்பதையும் ஆவ்வப்போது அறிந்து வந்தாள்.

 

ஆண்கள் அதிகம் பேசும் போது அழகாகத்தெரிகிறார்கள். அதுவும் ஏகச்சிறந்த விசயங்களைப் பேசும் போது மிகவும் அழகாகத் தெரிகிறார்கள். கதா மிகவும் அழகானவன், அறிவார்ந்தவன், பேச்சில் மயக்குபவன். கதா பியர் குடித்துக்கொண்டு நட்சத்திரங்களைப்பற்றி பேசும் போது பிற்போக்கும் பேசுவான், நிலவையும், மலர்களையும் பெண்களையும் பற்றி பலவகைக் கதைகளைச் சொல்லுவான். அவ்வப்போது நினைவியைப்பற்றி கதா புகழும் கணங்களில், ”நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை மேலும் அப்படியே ஒருவேளை இருந்தாலும் அதைப்பற்றி இங்கே பேசவில்லை” என்று நினைவிக்குச் கூறத்தோன்றும், ஆனால் மௌனமாவாள், ”நீ ஒரு புத்திசாலியானப் பெண்” என்று கதா சொல்லுவான். இப்படியான பாராட்டுக்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென்று நினைவிக்குத் தெரியும். நினைவி சிரித்துக்கொண்டே கதா கூறுவதைக் கேட்டுக்கொண்டு இருப்பாள். ஆனால், அது உண்மையில் கவலைப்பட வேண்டிய விசயம் என்றும் உள்ளுணர்வாள்.

 

”அதன்பிறகு கதாவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நான் புத்திசாலித்தனத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உண்மையைக் கூறவேண்டுமென்றால் அதன் பிறகு காதலனுக்கு காதலிமேல் இருக்கும் ஒருசிலக் காதல் கன்னிகள் அறுந்துவிடும். அவற்றைச்சரி கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்” என்று சிரித்துக்கொண்டே நினைவி கதைசொல்லி என்னிடம் சொன்னாள். இவ்வாறான பேச்சுக்கள் எல்லை மீறிப்போகும் போது நினைவி மிகவும் வேதனையில் பீடிக்கப்பட்டு இப்படியான உரையாடல்களை நிகழ்த்துவதைப்பற்றி தன்னை நொந்து கொள்வாளாம். அதே நேரத்தில் நினைவியின் இயல்பு அவளுடைய மனதின் கூச்சல்கல்களை பிடித்து இழுத்து வெளியேற்றி வார்த்தைகளாக்கி அவளது கற்பனையான மனவுறுதியையும் பொறுமையையும் கேள்விக்குட்படுத்தும் என்று என்னிடம் புலம்பித்தள்ளினாள்.

 

அந்த மாநகரத்தின் வேத நூல்களுக்கு இணையாக, சில கோட்பாட்டு நூல்களும் அதைப் பின்பற்றுபவர்களும் இருந்து வந்தார்கள். பரிபூரணமான வேதநூல்களை அவர்கள் சாடியும், எதிர்த்தும் வந்ததுடன் அல்லாமல் அவர்கள் தங்களுக்குள் கருத்துக்களால் முரண்பட்டுக்கொண்டும், ஏற்றுக்கொண்டும், விலக்கிக்கொண்டும் இருந்தார்கள். நினைவியின் கடைசி நம்பிக்கையாக – தன் கதை சொல்லும் குரலை முளையிலேயே கிள்ளியெறியக்கூடிய அளவில் – அந்த மாநகரின் புரட்சிக்காரர்கள் சிலர் இருந்தார்கள் என்று நினைவி தீர்மானமாய் நம்பினாள். அவர்களுக்காக அநார்கிஸ்ட், கம்யூனிஸ்ட், போஸ்ட்-மார்டனிஸ்ட்.. என்று பலப்பல இஸ்ட்டுக்களை கற்றுக்கொண்ட நினைவி, இப்படியாகவும் மேலும் பலவாறும் தன்னை அழைத்துக்கொள்ளும் அவர்களுள் ஒருவனான கதாவை தேர்ந்தெடுத்து அவனிடம் தன் கதை சொல்லும் குரலை தற்கொலைக்குத் தள்ளும் எத்தனிப்பிற்காக பிரதியினை பெற்றுக்கொள்ள தீர்மானமாய் முடிவு செய்துகொண்டாள். தன் வாழ்வில் தான் சந்தித்த எந்த ஒரு மற்ற எவரையும் விடவும் நினைவிக்கு மிகவும் நெருக்கமானவனாக இந்தக் கதா மாறிப்போனான்.

 

தன் கதையில் பெரும்பாலான பக்கங்களை முடித்துவிட்டதாகவும், தற்போது கடைசி சில பகுதிகளில் கதை முடியும் தருவாயில் இருப்பதாகவும் அவனிடம் கூறிக்கொண்ட நினைவி ”தன் மரணத்தை எவ்வழியிலேனும் குறிக்கும் குறிப்பொன்றாவது அவனது பிரதிகளில் கிடைக்கப்பெறுமா” என்று தான் கதாவை அனுகியதாகக் கூறிக்கொண்டாள். இருப்பவர்களிலேயே நுண்ணறிவும் மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்தவனான இந்தக்கதாவை குறிக்கும் கதையின் இப்பகுதியில் அவனையும் தன்னையும் வாழ்விலும் வெகுதூரத்திற்கு செலுத்திக்கொள்ளும் நோக்கமும் உள்ளது என்றும் கூறிக்கொண்டாள். பலவகையான சாத்தான்களை அவற்றின் தந்திரங்களை, கபடமான நாய்களை அவைகளின் தந்திரங்களை என்று அழகோடு இவ்விசயங்களை எழுதிவந்துள்ளதாக கூறிக்கொண்டாள். நீ அவற்றை ஒரே முறை படித்தாலும் அவை என்னவாக இருக்குமென்று உடனே உனக்குத்தெரிந்து போகும், தானே ஓவியங்களும் போட்டுக்கொள்ளும் எண்ணத்தில் உள்ளதாக சொல்லிக்கொண்ட நினைவி, ஓவியங்களுக்கும், வார்த்தைகளுக்கும், அவனுக்கும் உள்ள உறவைபற்றிய கதையை ஏற்கனவே தனியொரு புனைவாக புனைந்துவிட்டதை – அதை அவன் பாராட்டிப்பேசியதை – அவனுக்கு நினைவூட்டினாள்.

 

இவ்வாறாக, கடந்த பல வருடங்களக தான் கண்டெடுத்துவந்த ரகசியமான கதையாடல்களை, தானே பொருப்பெடுத்துக்கொண்டு தானே வரைந்த ஓவியங்களை அவனுக்குக் காட்டத்துவங்கினாள். கதா முதலில் கூச்சப்பட்டான், மத்தியில் அவளுடையை அசாதாரணனான அறிவில் ஆர்வம் அதிகரித்து  அவளோடு நெருங்கினான். நினைவி பேசும் பலதையும் பத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத கதா, அது போகட்டும், அதை விடு என்று விட்டு, நினைவியிடம் நீ எப்படி சுயமைதூனம் செய்துகொள்வாய் என்றும், மேலும் சில விசயங்களைப்பற்றி விதவிதமாக வெவ்வேறு சமயங்களில் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கேட்கத்துவங்கினான்.

 

“தப்பா நினைக்காத உன்னைப்போல் வெளிப்படையான பெண்ணிடம் தானே இவற்றை கேட்க முடியும், வேறு யாரிடம் கேட்பது”. ஆமாம், அறிவார்ந்த விசயங்கள் பேச ஆண்களுக்கு ஆண்கள் இருக்கிறார்கள். பெண்களிடம் இப்படியான பேச்சுக்களே போதும் தானே.

 

“இல்லை, எனக்கு சுயமைதூனம் செய்யும் பழக்கமில்லை” என்று நினைவி சத்தியம் செய்து சொல்லிவந்தாள். ”உங்களுக்கெல்லாம் உடலைத்தவிர வேறு எதையும் பெண்ணிடம் கேட்பதற்கோ, பகிர்வதற்கோ இல்லையா, ஆண் பார்வை எவ்வளவு வன்முறையானது பாருங்கள். பெரும்பாலும் எல்லாருமே எப்படி எப்படியோ பேசினாலும் இங்க தான் வந்து நிக்கறீங்க” என்று நினைவி கடுப்படிக்கத்துவங்கினாள்.

 

“ஆமா உன் கதை அற்புதமாக வந்திருக்கு, ஒத்துக்கறேன்.. நீ குடும்பங்களை சிறு நிறுவனம்ன்னு உன் கதைகளில் சொல்கிறாய். அதையும் ஒத்துக்கொள்கிறேன், சமூகத்தின் மத அமைப்பு முதற்கொண்டு இங்கே இருக்கிற எல்லா நிறுவனங்களையும் உன் கதைகளில் விமர்சிக்கிறாய் ஆனால் இந்த படைப்புகளை இந்த நிருவனங்களின் முன் தானே நீ வைக்க வேண்டும், யாருக்கானது உன் கலை?, அதென்ன நீ எல்லாரையும் ஏதாவது குறை சொல்லிட்டே இருக்க… அதோட கதைக்கருவைப்பாரு.. எழுதறதுக்கு விசயங்களா இல்லை”. கதா ஒன்று சுயமைதூனத்தை பேசுபவனாகவும் அன்றேல் இப்படியாக விதண்டாவாதம் பேசுபவனாகவும் நினைவியின் கதையில் சற்றும் மூழ்காதவனாகவும் இருந்து வந்தான்.

 

“ஒன்னு நீ அப்படிபேசுவ, இல்லன்னா இப்படி பேசுவ இல்ல. எனக்குத்தெரியும் கதா, உன் காதலுக்குறிய தேவைகள் வேறு, அதைத்தவிர்த்து என்னுடனான தேவை என்பது உனக்கு ஒன்றுமே இல்லை, உனக்கான காதலிக்கான தேவை என்பது வேத நூலைத் தான் பிரதி எடுத்ததாக இருக்கும். உனக்கு உன் காதலி வேத நூலிலிருக்கும் ஒரு கதாபாத்திரமாகத்தான் வேண்டும். யாருக்குத்தெரியும் அவள் உன் “பைப் லைனில்” கூட இருக்கலாம். இனி என் தேவை உனக்கு இல்லைதான். நான் உனக்கு ஒரு வேசி போலத்தானே. வேறு என்ன” என்ற நினைவியை “ச்ச.. ச்ச அப்படியெல்லாம் இல்லை” என்று கூறியவன், பின் நாட்களில் கீழ் வருமாறு மாறிப்போனான்.

 

அடையாள நிழலும், உண்மையும் என்ற கதை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

நினைவியுடனான தன் மென் உணர்வையும், நினைவி மீதான காமத்தினையும் விட்டொழித்து, “கோட்பாட்டு நூல்”களின் கருத்துக்களை வெளிக்காகவும், “புனிதநூல்”களின் கருத்துக்களை மனதிலும் கொண்டு  நல்லவன் என்ற அரிதாரத்தை இயலாமையை தழுவிய இறுதிகாலத்தில் சூடிக்கொள்ள வேண்டிய சூழலில் இருந்த கதா தானே மூன்றாவதானதும், நான்காவதானதுமான முகமாக இருந்து வந்தான்.. மெய்யாகவே அவன் வேத நூலின் ஒரு காதாபாத்திரமான ஒரு பெண்ணைத்தான் கண்டெடுத்திருக்க வேண்டும். அல்லது கண்டெடுத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். ”ஆமாம் நீங்க உடல் சார்ந்த மீறல் அல்லது உடல் சார்ந்த ஒழுக்கம் இவற்றைத் தவிர எதை முன்னிறுத்தறீங்க?” என்ற கேள்வியை கதா எழுப்பிய போது அவனுக்கான தன் ஆகச்சிறந்த பதிலாக மௌனத்தை மட்டுமே கருதினாள்.

 

நினைவி தன் வாதத்தை கதாவிடம் முன் வைத்த பொழுதுகளில் கதை சொல்லி என் பங்கு அதிகமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் கதைகளில் தான் உரையாடிக்கொண்டார்கள்….

 

”நினைவி, நீ எழுதும் இந்தக் கதையும் ஒரு சாதரணமான கதை தான், எங்கும் யார் மனதையும் தொடக்கூட வாய்ப்பு அதில் இல்லை. ”

 

”கதா, அது எங்கே தெரியுமா சாதாரண கதையாக மாறுகிறது? உன்னைப் போன்ற ஒருவனிடம் கதையை அங்கீகரிக்கச் சொல்லி நிற்கிறேன் பாரு அங்கத்தான். இல்லல்ல அங்க கூட இல்ல, எழுதும் என்னையையே அங்கீகரிக்கச் சொல்லி உன்னிடம் நிக்கறேன் பாரு அங்க தான் முக்கியமா…”

 

”நினைவி, நீ கதைசொல்லும் உன் குரலை எப்பொழுது அன்பாக மாற்றுகிறாயோ அப்போது தான் அது உருப்படியான ஒன்றாகும்.”

 

”நம்பகத்தன்மை வாய்ந்ததான எதார்த்த வாத கதையாடல் மட்டுமே என்றும் வெல்லும் என்பதை உன் மூலம் நான் உருதிப்படுத்திக் கொண்டேன் கதா. ஆனாலும், இந்த மிகைப்புனைவுத்தன்மை மீதான என் நம்பிக்கை என்பதையும், உன் அவநம்பிக்கை என்பதையும் பிரதிநிதுத்துவப்படுதல் என்பதன் சிக்கலாகத் தான் நான் எடுத்துக்கொள்ளும் நிலையில் உள்ளேன். ”

 

”நினைவி நீ கதை எழுதத்தான் என்னிடம் வந்தாய் மறந்துவிடாதே”

”இப்ப நாம் கதையைப்பற்றித்தானே பேசிக்கொண்டுள்ளோம்.. மேலும், நீ சொல்வதால் சொல்கிறேன், அதை என்றோ மறந்து நமக்குள் என்னென்னவோ நடந்துவிட்டது அதும் உண்மைதானே,”.

“அங்கு தான் நீ தோற்கிறாய் அதை நீ தெரிந்துகொள்…”

”……”

 

“நினைவி, என் அம்மா சற்று அப்படி இப்படி என்று பலர் கூறக்கேட்டுள்ளேன்., அதுமட்டுமில்லை வறுமை அப்பா குடிகாரன் பொறுக்கி அதோட கொலைகாரன், என் வாழ்வு எப்படி எப்படியோ சென்று இப்போது தான் நிலையில் உள்ளது, உன்னைப்போலான பெண்ணோட என்னால குடும்பமா நடத்த முடியும்… இல்ல அதுக்குதான் என்னோட நீ பழகினியா சொல்லு பாக்கலாம்…“

 

“கதா, துரோகமிழைக்கப்பட்டவர்கள், துன்பங்களுக்கு தங்களின் பங்களிப்பின்றி இறையானவர்கள் – வேத நூலில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து – மீறுவதை, குற்றம் செய்வதை மற்றும் ஏமாற்றுவதை தங்களின் உரிமையாக எடுத்துக்கொள்கின்றார்கள். அவர்களின் இலக்கு எப்போதுமே யாராலும் கேள்விக்குட்படுத்த இயலாத நிலையில் தான் இருக்கும் என்பது தான் இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது”. மேலும் தொடர்ந்தவள், “அதை விடு கதா, இங்கே முரண்பாடென்பது இவ்வாறான மீறுதலோ, தவறுதலோ அல்ல, அந்த துரோகமிழைக்கப்பட்டவர்களும் தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் மோட்சத்தை அடைய அதே வேத நூலை பின்பற்றுவது தான் முரண்பாடு – அவர்கள் வேத நூலைத்தான் மறைமுகமாக ஆதரிக்கிறார்கள், உங்களோட கோட்பாடுகள் அறிவிற்கானது, சில சமயம் எங்களைப்பொன்றவர்களை கவர்வதற்கானது. வேதநூலோ மனதிற்கானதல்லவா அத்துடன் என்னைப்பொன்றவர்களை தூக்கிப்போடவும் தானே… ” என்றுவிட்டு நினைவி அமைதியானாள்.

 

“நீ ஏன் குழம்பறன்னு தெரியலை.. இப்ப நீ தான் வேதநூல் ஒழுக்கத்தில் வந்து நின்று பேசற… நான் உன்னை ஏமாற்றவில்லை நினைவி, உன் பாதை என் பாதை வேறு நம் காதல் இங்கே முடியவேண்டியது காலத்தின் கட்டாயம். நான் என் கனவுப்பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள வேண்டி கண்டெடுத்துவிட்டேன், உனக்கு இதற்கும் மேல் விளக்கிச்சொல்ல எனக்குத் தேவையில்லை, என்னை தொந்தரவு படுத்தாதே” கதா குடித்துவிட்டு கத்தினான்..

 

காமத்தைப்போல் மர்மமானது ஏதுமில்லை. கதா, உன்னுடைய ஒரு ”ஒர்க்கில்” நீ ஒரு பிராஸ்ட்டிடியூட்டினை கும்பிட்டு மதிப்பு செய்வதாய் குறிப்பிட்டு படைத்திருப்பாய். அங்கேயே நான் துணுக்குற்றேன். காமம் கோரும் பெண்களை ஏன் பிராஸ்டிடியூட்டுகளை விட நீ கீழாகக் கருதுகிறாய் – உன் ஒழுக்க மதிப்பீடுகளில், அல்லது அவை என் வெற்று பிரம்மையா? காலம் பூராகவும் மீறுதலையும் ஒழுக்கக்கட்டுப்பாடுகளை மறுத்தலையும் வாழ்வாகக்கொண்டிருந்த நீ அதை ஒரு முகமூடியாய் அணிந்துகொண்டிருந்தாய். உனக்கு நினைவிருக்கிறதா கதா, போர்ன் பற்றிய பெரிய சண்டையை நாம் நிகழ்த்திய போது நான் இப்போதைய உன் ஒழுக்க மதிப்பீடுகளில் தான் இருந்தேன் என்று…”

 

“……….”

 

”ஒடுக்குமுறையை/ஒடுங்கிப்போதலை ஒரு தற்காப்பு முறையாக பயன்படுத்துகிற ஒருவர் சிந்தனைகளை ஊடுருவி சரளமானவராக இருக்க முடியாது கதா. இப்போது அவ்வடங்குதல்/அடக்குதல் முறையையே நீயும் பின்பற்றுகிறாய். நிபந்தனைகளுக்கு உட்படுத்துகிற கலாச்சாரச் சூழலிருந்து தப்பிக்கவேண்டியது படைப்பாற்றலுக்கு மிகவும் வேண்டியது. அதனால் தான் வீரியமான படைப்பொன்றை உன்னால் இனித்தர இயலாது என்று நான் ஆங்காரமாய்க்கூறுகிறேன்” – இப்படியான ஒரு மதிப்பீட்டை கதாவினுடைய சமீபத்திய ஒரு படைப்பிற்கு வழங்கிய நினைவி அவனிடம் கதை சொல்லி என் மூலமாக தன்னிலை விளக்கமும் அளிக்கத்தவறவில்லை. அது பின்வருவதாக இருந்தது.

 

என் மீறுதல்களைக் கிண்டலாக நீ அவ்வப்போது குறிப்பிடுவதைப் போல், அவை என் காமத்திற்காக அல்ல கதா. நான் சதா சர்வ காலமும் ஆண்களுடன் படுக்கையில் இருக்கவும், மேலும் ஆண்களைக்கவர்ந்து எனக்கான செயல்களை செய்துகொள்ளவும் ”வேத நூல்” பாதையிலிருந்து மீறுவதில்லை. படைப்புத்தன்மையானது ஒடுக்குமுறை அல்லாத நிலையோடு சம்பந்தம் கொண்டது. அதனால் தான் நான் ஒரு பெண்ணாக இளமையிலிருந்தே பலவற்றிலிருந்து மீறி வந்துள்ளேன். ஒருவேளை என் முதல் காதல் வெற்றி பெற்றிருந்தால் உன் பார்வையில் நான் வெற்றி பெற்றவளாகவே இருந்திருப்பேன், மேலும் கதை சொல்லியாகவும் ஆகியிருக்க மாட்டேன்., குறைந்த பட்சம் என் கதை சொல்லும் குரலை கொலை செய்து கொள்ள உன்னையும் நாடியிருக்க மாட்டேன்… மேலும்,

 

இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்று எனக்குள் வினா இருந்து கொண்டே இருக்கிறது கதா. ஆனால் அதற்கான ஒரு எதிர்வினையல்ல என்றாலும், நான் கூறப்போகும் என் கதைகள், என் படைப்புகள் நீ விரும்புவதைப் போல் எதார்த்தமான சொல்லாடல் கதையாடலாக இல்லாமல் மிகைச் சொல்லாடலாகத்தான் இருக்கும். நான் எதார்த்தவாதத்துடன் ஈடுபாடு மறுத்த நிலையை அடைவதன் மூலம், எதார்த்தம் என்று நம்பிக்கொண்டிருக்கும் வாழ்வை மிகை புனைவாக கருத என் அறிவை அனுமதிக்கிறேன். அதனால் தானோ என்னவோ உயர்ந்தபட்ச தனித்தன்மை கொண்ட கதையாடலை ஒரு பெண்ணால் தான் தரமுடியும் என்பதையும் நான் ஆழமாக நம்புகிறேன், எனக்குத்தெரியும் கதா இதை உன்னால் நம்ப முடியாது, ஆனால் இதில் நீ நம்பிக்கைக் கொள்ள முயல வேண்டும். மேலும் என் இந்தக் கதைச்சொல்லும் குரலை கொலை செய்யும் பாக்கியம் உனக்கும் என்றும் நேராதிருக்கட்டும்.