தழுவிய பிரயாணம்

தழுவிய பிரயாணம்

அருண் பிரகாஷ் ராஜ்

அசோகமித்திரனின் மறைவையொட்டி நடத்தபட்ட பல்வேறு அஞ்சலி கூட்டங்களினூடாகவும், சிற்றிதழ்களில் அவர் குறித்தும் அவர் புனைவுலகம் குறித்தும் வெளியான கட்டுரைகளினூடாகவும் அசோகமித்திரனைப் பற்றி உருவாக்கப்பட்ட பொது சித்திரத்தில் அவரது எழுத்தும் கதைகளமும் எளிமையானது, மிக சாதாரணமானது என்கிற கருத்தும் ஒன்று. ‘இதையெல்லாம் கூட கதையாக எழுதலாமா’ என வாசகன் புருவம் உயர்த்திடும் படியாக, நமது அன்றாட வாழ்க்கையில் நாம் மிக எளிமையாக கடந்துபோகக்கூடிய அற்பமான தருணங்களே அசோகமித்திரனின் கதைகளின் ஊற்று என சொல்லப்படுவதும் உண்டு. அவருடைய சிறுகதைகள் பலவற்றை வாசிக்கும் போது அவர் குறித்தான இத்தகையதொரு பிம்பம் நமக்குள் எழுவதும் உண்மைதான். ஆனால் அது மட்டும்தான் அசோகமித்திரன் என தீர்மானமாக ஒரு சட்டகத்திற்குள் அவரை அடைக்க முனைந்தால் – ’பிராயாணம்’ போன்ற கதைகள் நம் கண்களில் தென்பட்டு நம்மால் வகுக்கப்படும் சின்னஞ்சிறு எல்லைக்குள் சிக்காமல் அவர் நீண்டு கொண்டே போகிறார்.

மரணிக்கும் தருவாயில் இருக்கும் குருவை பிழைக்கவைக்க, பலகையொன்றில் அவருடலைக் கிடத்தி மனித வாடையே அறிந்திறாத பனி கவிழ்ந்திருக்கும் மலைத்தொடரையும், சிறு புதர்களால் நிரம்பிக்கிடக்கும் சமவெளிப் பிரதேசத்தையும் கடந்து ஹரிராம்புகூர் எனும் கிராமத்தை அவன் அடைந்தாக வேண்டும். மனத்திடத்தையும் அதற்கு இணையாய் உயிரையும் சிறிது சிறிதாய் பறிக்கும் அந்த பயணத்தின் ஒரு கட்டத்தில் மூன்றாண்டு காலமாய் அவன் தேடி அலைந்து கண்டடைந்த குரு உயிர் நீர்த்து ஜடமாகிறார். குறைந்தபட்சம் அவருடலையேனும் மண்ணில் குழிவெட்டி புதைக்க வேண்டும் என்கிற லட்சியத்தில் முன்னகர்கிறான். அவன் வாசனையை நுகர்ந்த ஓநாய்கள் வேட்டைகாக பின் தொடர்கின்றன. இறுதியாக ஒற்றை வரியில் ஒரு மர்ம முடிச்சோடு கதை நிறைகிறது.

எடுத்துகொண்ட கதையாகட்டும், சொற்ப்பிரோயகங்களினால் அக்கதையில் அவர் கட்டமைக்கும் பனித்துகள்கள் நிரம்பிக்கிடக்கும் மலைப்பிரதேசமாகட்டும், குருவின் பிணத்தை சுமந்து செல்பவனின் மனவோட்டமாகட்டும், ஓநாய்களினுடனான யுத்தமாகட்டும் ’தி ரெவணண்ட்’ படத்தின் காட்சியைப் போல நம் முன்னே கதை விரிகிறது என நான் சொல்வது உங்களுக்கு ஒரு கொச்சையான ஒப்பீடாக யாருக்கேனும் தோன்றினால், மன்னிக்கவும். காட்சிபடுத்துதளினூடாக ’பிராயண’த்தில் நம்மையும் ஓர் அங்கமாக்குதல் மொழியின் உச்சங்களில் ஒன்று என்பது எந்தன் கருத்து. நான் ஏற்கெனவே குறிப்பட்டது போல, இக்கதையை அசோசமித்திரனின் பெயரினை மறைத்துவிட்டு யாரிடமேனும் படிக்க கொடுத்தால், அவர் அசோகமித்திரனின் பிற கதைகளில் மூழ்கி முத்தெடுத்தவராயினும், இது அசோகமித்திரனுடையதுதான் என தீர்க்கமாக கணித்திடுவரா என்பதை சோதித்துதான் பார்க்கவேண்டும்

1969இல் பிரசுரமான இச்சிறுகதை, 19ஆம் நூற்றாண்டை சார்ந்த அமெரிக்க எழுத்தாளர் அம்ப்ரோஸ் பையிர்ஸியின் (Ambrose Bierce) ’தி போர்டட் விண்டோ’ (The Boarded Window) என்கிற சிறுகதையின் தழுவல் என்கிற விமர்சனம் உண்டு. அசோகமித்திரனின் கதைக்கும் அவர் பிறப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த எழுத்தாளரின் கதைக்குமான ஒற்றுமை இன்னதென்று புலப்பட்டது. கதைக்களம், கதை சொல்லும் பாணி ஆகியவற்றில் அவையிரண்டும் ஒப்பீட்டிற்கு அப்பாற்ப்பட்டதாக நின்றாலும் இக்கதைகளின் இறுதயில் ஒரு வரியில் நம்மை உறைத்திட வைக்கும் அவ்வொற்றை தருணமே, ’பிரயாணம்’ தழுவல் என நம்படுவதற்கு காரணம். தழுவல் என்றல்ல இதனை transcreation அதாவது மறுபடைப்பு என்றே சொல்லவேண்டும் என சிலர் வாதடுவதும் உண்டு.

என்னை பொருத்தவரை அந்த இறுதி தருணம் இரண்டுக்குமான ஒற்றுமையாக இருந்தாலும், இரண்டு கதைகளிலும் தோய்ந்து கிடக்கும் ஆழமான தனிமை, அந்த தனிமை உண்மையில் தனிமையல்ல பிரபஞ்சத்தோடு பின்னி பிணைந்திருக்கும் அதனொரு அங்கமென உணர்த்துவதாய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரிகள் –  அவை கடத்தும் உணர்ச்சிகள், இவற்றில் ஒரு பொதுத்தன்மையை காண்கிறேன். உதாரணமாக  ’He lived alone in a house of logs surrounded on all sides by the great forest, of whose gloom and silence he seemed a part’  என்கிற வரி தி பிரோடட் விண்டோ கதையின் தொடக்கத்தில் இடம்பெறும். தனிமையையும், தனிமை மெல்ல தன் எல்லையினை அழித்து கொண்டு சுற்றத்தின் ஒரு துளியாய் ஆகும் தருணத்தையும் பிரயாணம் சிறுகதையில் பலமுறை கடந்துபோவோம்.

சிறுகதைக்கான இடுகை : http://azhiyasudargal.blogspot.in/2010/06/blog-post_25.html.