தாமோதர ரெட்டித் தெரு

தாமோதர ரெட்டித் தெரு

அழகியசிங்கர்

 

 

இரண்டு மூன்று நாட்களுக்கு முன், என் டுவீலரை பார்க் செய்ய தாமோதர ரெட்டித் தெருவிற்குச் சென்றேன்.  உண்மையில் ஒரு காலத்தில் அசோகமித்திரன் வசித்த வீட்டிற்கு எதிரில்தான் வண்டியை நிறுத்தினேன். அவர் வசித்த வீட்டை அண்ணாந்து பார்த்தேன். இப்போது அதன் தோற்றம் வேற மாதிரியாக மாறி விட்டது.

இந்தத் தெருவில் நுழையும்போது எனக்கு அசோகமித்திரன் ஞாபகம் வராமல் போகாது.  பல தடவைகள் இத் தெருவிற்கு அசோகமித்திரனைப் பார்க்க வந்திருக்கிறேன்.  ஒரு முறை என் குறுநாவல் கணையாழியில் வெளிவருவதாக இருந்தது.  அதில் சில மாற்றங்கள் செய்ய நினைத்தேன்.  குறிப்பாக நான் வங்கியில் பணிபுரிகிறேன் என்பதைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.  என் வேலைக்கு எதாவது ஆபத்து வந்துவிடுமென்று யோசித்ததன் விளைவு அது.

நான் போனபோது, அசோகமித்திரன் வீட்டில் இருந்தார்.  ஏனோ தெரியவில்லை, அப்போதெல்லாம் தொலைபேசி கிடையாது.  அவர் வீட்டிற்கு எந்தவித அழைப்பும் இல்லாமல் சென்றிருக்கிறேன். இப்போதும் அப்படித்தான் சென்றேன்.   நான் போயிருந்தபோது அவருக்கு உடல்நிலை சரியில்லை.  சுரம்.  படுத்துக் கொண்டிருந்தார்.  என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

“என்ன?” என்றார்.

“என் குறுநாவல் விபத்து..” என்றேன்.

“தெரியுமே..அதுக்கென்ன..”

“கொஞ்சம் மாற்ற வேண்டும்..”

“ஏன்?”

“நான் வங்கியில் பணிபுரிகிறேன்..கதையிலும் அப்படி வருகிறது. .”

“அதனால் என்ன?”

“ஏன் அப்படி எழுதினீர்கள் என்று என் வங்கியில் உள்ளவர்கள் கேட்டு, என் வேலைக்கு எதாவது ஆபத்து வருமா..”

“அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது..மாற்ற வேண்டாம்..”

அவருடன் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.  கணையாழியில் எந்த மாற்றமும் இல்லாமல் என் குறுநாவல் பிரசுரம் ஆனது.

ஆயிரக்கணக்கில் பணிபுரியும் என் வங்கியில் நான் கணையாழியில் எழுதியிருக்கும் குறுநாவலைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை.  ஏனென்றால் கணையாழி பத்திரிகையே யாரும் கேள்விப்பட்டிருக்கவில்லை.  வங்கியில் பலர் தமிழ் பத்திரிகைகளையே படிக்க மாட்டார்கள்.  ஆங்கிலப் பத்திரிகைகளை ஓட்டுவார்கள். கணையாழி தெரிந்திருக்காது, தி ஜானகிராமன் குறுநாவல் போட்டி என்றால் என்ன என்று தெரிந்திருக்காது. அசோகமித்திரனையும் தெரிந்திருக்காது.  என் கவலை விட்டது.

அடுத்த முறை அசோகமித்திரனை கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுடன் சந்தித்தேன்.  அவருக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்தது. அப்போது அசோகமித்திரன் அவர் வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் அமர்ந்து எங்களை வரவேற்றார்.

என் கூட வந்த நண்பரை விஜாரித்தார்.  என்ன படிக்கிறார் என்று கேட்டார். பின் சொன்னார் : “நீங்கள் முதலில் உங்கள் கல்லூரிப் படிப்பை முடியுங்கள்..பிறகு எழுதுவதைப் பற்றி யோசிக்கலாம்..முதலில் படித்து ஒரு வேலைக்குப் போங்கள்..எழுத்து எங்கே போய்விடப் போகிறது.  மெதுவாகக் கூட எழுதலாம்,” என்றார்.

இது ஓரளவு உண்மைதான் அந்தக் காலத்தில் தீவரமாக எழுதத் துவங்கிய பலர் ஒழுங்காக சம்பாதிக்காமல் பட்ட அவதிகளை அவர் அறிவார்.  அவரே எழுத்தை நம்பி சரியாக சம்பாதிக்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.

அசோகமித்திரனை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதெல்லாம்  எனக்கு புதிய புதிய

அனுபவம் ஏற்படும்.  யோசிக்கும்படி எதாவது சொல்வார்.

ஒருமுறை பேசிவிட்டு வரும்போது சொன்னார்.  “எத்தனைப் பேருக்குத் தெரியும். இந்தத் தெருவில் நாம் நடந்து போகும்போது யார் நம்மைக் கண்டுகொள்ளப் போகிறார்கள். நான்தான் அசோகமித்திரன் என்று யாருக்காவது தெரியுமா?”

உண்மைதான்.  யாருக்குத் தெரியப் போகிறது?  அசோகமித்திரன் கதியே இப்படி என்றால், மற்றவர்கள் கதி?

என்னுடைய நெருங்கிய நண்பர் ஐராவதம்.  நகைச்சுவை உணர்வோடு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி உள்ளார்.  சிறுபத்திரிகைகளில்தான் அவர் எழுதுவது வரும்.  என்னைக் கேட்டால் சம்பத் நண்பரான ஐராவதம், சம்பத்தை விட சிறந்த எழுத்தாளர் என்று சொல்வேன்.  ஆனால் சம்பத்திற்குக் கிடைத்த பாராட்டுகள் ஐராவதத்திற்குக் கிடைக்கவில்லை.  உண்மையில் சம்பத்தே ஐராவதம் சொல்வதை காதுகொடுத்து கேட்பார்.

அன்று நான், ஐராவதம், வைதீஸ்வரன் மூவரும் அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றோம்.  அப்போது அசோகமித்திரன் வேளச்சேரியில் அவருடைய புதல்வர் ராமகிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தார்.

ஐராவதத்திற்கு சைக்கிள் ஓட்ட வராது. டூவீலர் வராது. .கார் ஓட்டவும் தெரியாது. ஆனால் ஒரு புதிய காரை விலை கொடுத்து வாங்கிவிட்டார்.  பின் டிரைவரை வைத்துக்கொண்டு அவர் சுற்றாத இடம் இல்லை.  டிரைவர் ஐராவதம் காரை மட்டுமல்ல, அவரையும் ஓட்டினான்.

ஐராவதத்திற்கு ஒரே பெருமை.  எங்கள் இருவரையும் அசோகமித்திரன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவதில்.  ஐராவதத்தைப் பார்த்தவுடன், அசோகமித்திரனுக்கு ஒரே சந்தோஷம்.

ஐராவதத்தை மதிப்பவர் அசோகமித்திரன்.  வெளிப்படையாகவே ஐராவதத்தைப் புகழ்ந்து பேசுவார்.  “இவரால் நான் ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன்.  என் குருநாதர் இவர்,” என்பார் அசோகமித்திரன் ஐராவதத்தைப் பார்த்து.

உண்மைதான் பல ஆங்ககில எழுத்தாளர்களைப் பற்றிய அறிவு ஐராவதத்திற்கு உண்டு.  ஆனால் அசோகமித்திரனைப் போல் திறமையாகத் தொடர்ந்து தொய்வில்லாமல் எழுதத் தெரியாதவர் ஐராவதம்.  ஒரு கட்டத்தில் அவர் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.  புத்தகங்களைப் படித்து விமர்சனம் எழுதுவார்.  அன்று ஐராவதத்திற்கு புத்தகங்களைக் கொடுத்தார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு நான் பல இடங்களுக்குச்  சுற்றியிருக்கிறேன்.  எனக்கும் அவருக்கும் தெரிந்த எழுத்தாளர் யாராவது இறந்து விட்டால், என்னைத்தான் துணைக்குக் கூப்பிடுவார்.  சி சு செல்லப்பா இறந்தபோது, நானும் அசோகமித்திரனும் ஆட்டோவில் திருவல்லிக்கேணி சென்றோம்.  சி சு செல்லப்பாவின் உடலை ஒரு ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு கிளம்பி விடுவார்.  நாங்கள் உடனே திரும்பி விடுவோம்.  அதேபோல் சார்வாகன் என்ற எழுத்தாளர் வீட்டிற்குச் சென்றோம்.  எனக்கு சார்வாகனை நேரில் பார்த்துப் பேசிப் பழக்கம் கிடையாது.  ஆனால் அசோகமித்திரன் கூப்பிடுகிறாரே என்ற அவரோடு போனேன். அதேபோல் ஐந்து நிமிடம்.

ஒவ்வொரு முறை அசோகமித்திரனைப் பாரக்க அவர் வீட்டிற்குப் போனால் எதாவது புத்தகம் கொடுக்காமல் இருக்க மாட்டார். அவருடைய புத்தகங்களை கையெழுத்திட்டுக் கொடுப்பார்.

சிலசமயம் கல்யாணத்திற்கும் போவோம்.  பெரும்பாலும் அசோகமித்திரன் உறவினர் அல்லது நண்பர் வீட்டுத் திருமணமாக இருக்கும்.  நானும் அவருடன் போய் சாப்பிட்டுவிட்டு திரும்பி விடுவோம். அவருக்குத் துணையாக நான் பலமுறை அப்படி பயணம் செய்திருக்கிறேன். இதோ அவருடன் சுற்றிய இடங்கள் எல்லாம் இருக்கின்றன.  அசோகமித்திரன் என்ற மகத்தான எழுத்தாளர்தான் இல்லை.