தாராக்கள் வாழும் பிரதேசம்

தாராக்கள் வாழும் பிரதேசம்

ஷாரா சித்தாரா

தாராக்களை நீங்கள் பார்த்திருக்கலாம்..
பெரிதாக அலட்டிக்கொள்ளாது உங்களை
கடந்துசெல்லும் நூறுபேர்களில் ஒருத்தியாய் இருந்திருப்பார்கள்

தாராக்களை நீங்கள் எளிதாக
இனங்கண்டு கொள்ளலாம்..
நீளப்பாவடை கையற்ற சட்டை அணிந்தபடி
மூக்குத்தி அணிந்திருப்பார்கள்..
கையில் டேப்லெட்டுடன் பெரிய மூக்குகண்ணாடி
அணிந்திருப்பார்கள்..
அரசியல் கலை இலக்கியம் வரலாறு
என்று எதைப்பற்றியும் அலசித்தள்ளுவார்கள்..
ஆலுபோஹா வுடனும் கடுஞ்சாயாவுடனும்
வயிறுநிறைந்து போவார்கள்..

தாராக்கள் புகைப்பிடிப்பார்கள்..
மதுஅருந்துவார்கள்..
பார்ட்டி செல்வார்கள்..
பிடித்தவருடன் படுக்கையிலிருப்பார்கள்..
ஆனால் காதல்வயப்படமாட்டார்கள்.

தாராக்களுக்கு தனக்கு என்ன வேண்டும்
என்று தெரிந்திருக்கும்..
தனக்கு தேவையானவற்றை வாங்கிக்கொள்ள
தெரிந்திருக்கும்..
காபி மக்கில் இருந்து மீன்தொட்டிவரை
தான் விரும்பியபடி வாங்கி குவிப்பார்கள்.

தாராக்களுக்கு காதல் என்றுமே கடினமாய்
இருந்தது இல்லை..
ஒன்று போக ஒன்று வந்துகொண்டே இருக்கும்..
பழுப்புத்தலை சேட்டு பையனுக்காக ரயிலில் குதித்து ஒன்று இ்றந்துவிட மாட்டார்கள்..
திருமணம் ரீதியிலான உரையாடல்களை ,
“கைப்பை அழகாக இருக்கிறது” என்றவாறே
மாற்றிப்பேச லாவகமாய் கற்றுத்தேர்ந்திருப்பார்கள்..

பிறகு
ஒருநாள் ஆதித்யாக்கள் வந்தார்கள்..
தாராக்கள் தடுமாறினார்கள்..
ராயல் என்ஃபீல்டு பயணத்துடன்
ஐஸ்க்ரீம் ப்ரொப்பஸ்ஸல்களை
முடிந்தவரை தள்ளிப்போட்டார்கள்..
கைமீறிப்போனபோது அலட்டிக்கொள்ளாமல்
ஆதியுடன் அறையை பகிர்ந்துகொண்டார்கள்.

தாராக்களுக்கு ஒழுக்கக்கோட்பாடுகள்
தேவையாய் இருப்பதில்லை..
கர்ப்பத்தடை கவலைகள் இருப்பதில்லை
ஷீத்தல்களுடன் ஆதிகள் சுற்றுவதுக்கண்டு
பொசசிவ் ஆகி குதிப்பதில்லை..
காணாமல்போகும் ஆதிகளுக்காக
நீலக்குடையுடன் கோவிலில் நின்று
வேண்டிக்கொண்டார்கள்..

ஒருநாள்
ஆதிகள் அமெரிக்கா கிளம்பிச்சென்றார்கள்..
கழுத்துசெயினை பற்றியப்படி
தாராக்கள் தனியே ரயிலில் பயணித்தார்கள்..
தனியே ஆரோபிக்ஸ் வகுப்பி்ற்கு சென்றார்கள்
தனியே பாரிஸ் கிளம்பிப்போனார்கள்

ஆதிகள் தாராக்களை மணம்புரி்ந்து
கொண்டார்கள்..
பிறகு தாராக்கள்,
பிரியாகளாய் ஜெசிகளாய் புஷ்பாவாய் மாறிப்போனார்கள்..

பிறகுதான்
பனிமலர்களும் டெஸ்ஸாக்களும்
லீலாக்களும் கல்பனாக்களும்
தோன்றினார்கள்..