மா. அரங்கநாதனின் – “பரளியாற்று மாந்தர்” ஒரு வாசிப்பனுபவம்

மா. அரங்கநாதனின் – “பரளியாற்று மாந்தர்” ஒரு வாசிப்பனுபவம்

கார்த்திக் பாலசுப்பிரமணியன்

“கதையின் வடிவம் ஒரு சொல்லிலோ ஒரு சொற்றொடரிலோ காற்புள்ளி, அரைப்புள்ளியிலோ தோன்றி நிற்கும். தோன்றிய பின்னர் அதுவே தானாக எல்லாவற்றையும் சேர்த்து முழுமையாக்கும் நகுலன் சொன்னது போல, ‘நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரியவருகிறது’ என்பது உண்மை. கவிதையானது படைப்பிலக்கியத்தின் தலைச்சன் குழந்தை என்றால் மற்றவை அதன்பின் வந்தவை” – மா. அரங்கநாதன்

தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரையும் அழியாச்சுடர்கள் தளத்தின் மூலமாகவே அறிந்து வைத்திருந்தேன். பெரும்பாலும் அவர்கள் எழுதிய ஒன்றிரண்டு சிறுகதைகளை வாசிக்க ஆரம்பித்து, பின்பு பிடித்துப்போய் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். மா. அரங்கநாதனையும் அழியாச்சுடர்கள் தளத்திலிருந்த அவரின் ‘காடன் மலை’, ‘சித்தி’ போன்ற சிறுகதைகளின் வாயிலாகவே பரிச்சயம் செய்து கொண்டிருந்தேன்.
இந்த இரண்டு வருடங்களில் சிட்னியின் ‘ஸ்ட்ராத்ஃபீல்டு’ நூலகத்தில் இருக்கும் முக்கியமான தமிழ் படைப்புகள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டேன். ( தமிழுக்கென்று இருப்பதே ஒரே ஒரு ஷெல்ஃப் என்பது வேறு விசயம். ஆனாலும் சொல்வதற்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது) ஏதாவது நல்ல புத்தகத்தை தவறவிட்டிருக்கிறேனா என்று சல்லடை போட்டுத் தேடும் போதுதான் ‘பரளியாற்று மாந்தர்’ புத்தகம் கண்ணில் பட்டது (இப்படியொரு தேடலில்தான் முன்பொருமுறை சார்லஸ் புக்காவஸ்கியின் ‘அஞ்சல் நிலையம்’ கிடைத்தது).
நாவல் மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பாகமும் ஒரு தலைமுறையைப் பற்றிப் பேசுகிறது. முதல் பாகம் பரளியாறு, ஆரல், சோழபுரம் என மண் சார்ந்தும், மண்ணின் மீது மாறாப் பற்றுக் கொண்ட மாந்தர்களைப் பற்றியும் விரிகிறது. இரண்டாவது பாகம், பொருள்வையின் பொருட்டு சொந்த ஊரைவிட்டு வெளியேறி, இருந்தும் அதன் நினைவுச் சுழலில் உழலும் மனிதர்களால் நிறைந்திருக்கிறது. பிறந்தகத்தை விட்டுப் பிரிந்து வந்த ஏக்கம் அங்கு ஒவ்வொருவரிடத்தும் உள்ளோடுகிறது. மூன்றாவது பாகம், பூர்விகத்தைப் பற்றி பெரிதும் பொருட்படுத்தாத அங்கிருந்து முற்றிலுமாக தம்மைத் துண்டித்துக் கொண்ட தலைமுறையினரைப் பற்றியது. அவர்களுக்கு ஆரல் என்பது மற்றும் ஓர் ஊர். அவ்வளவுதான்.
முதல் இரண்டு பாகங்களில் சிவசங்கரனுக்கும், முத்துக்கறுப்பனுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஏனோ முத்துக்கறுப்பனின் மகனுக்கு கொடுக்கப் படவில்லை. அதனால் தானோ என்னவோ சில இடங்களில் இது முத்துக்கறுப்பனா அல்லது அவரின் மகனா என்ற குழப்பம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. மூன்றாவது பாகமே கொஞ்சம் அவசரகதியில் எழுதியது போல் இருக்கிறது. முதலிரு பாகங்களைப் போல மூன்றாவது பாகத்துடன் ஒன்ற முடியவில்லை. இருந்தாலும் நாவலை முடித்தவிதம் ஒரு தேர்ந்த சிறுகதையின் முடிவு போல சிறப்பாக அமைந்திருக்கிறது.
அவர் முதல் பாகத்தை மட்டும் விரித்து ஒரு தனி நாவலாகவே எழுதியிருக்கலாம். அப்படி எழுதியிருந்தால் பள்ளிகொண்டபுரத்தைப் போல ஆரலின் பெயர் போற்றும் ஒரு தனித்துவப் படைப்பாக நின்றிருக்கும் என்ற எண்ணமெழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
இந்நாவலில் வரும் பெண்பாத்திரங்கள் – மீனாட்சி, சரஸ்வதி, காந்திமதி- ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தனித்துவமான அதே நேரத்தில் இயல்பான பாத்திர வார்ப்புகள். மெனக்கெட்டு வடித்தது போலில்லை. அதுவே இந்நாவலின் பலம். அப்படித்தான் அவர்கள் இருந்திருக்க முடியும்.
ஜாதியும் சைவமும் நாவல் முழுவதும் ஒரு மெல்லிய இழை போல ஓடுகிறது. அதன் அடியொற்றி அரங்கநாதன் எழுப்ப விரும்பும் அரசியல் சரிவரப் புரியவில்லை. அது, ஒரு வாசகனாக என்னுடைய போதாமையாகக் கூட இருக்கலாம்.
இவை தவிர நாவல் நெடுகிலும் பல நுணுக்கமான விசயங்களைத் துருத்தாமல் எழுதியிருக்கிறார். முப்பதுகளுக்கு முன்னரே ஏற்கனவே திருமணமாகி வாழாதிருக்கும் பெண்ணுக்கு நடக்கும் மறுமணம், ஐம்பதுகளிலேயே தன்னைவிட வயது மூத்த பெண்ணை மணம் செய்து கொள்வது, தொண்ணூறுகளுக்குப் பின்னரும் கூட சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் சாதியத்தின் அவலம் என்பது போன்ற விசயங்களைப் பிரச்சார நெடியின்றி முன்வைத்திருப்பது சிறப்பு.
கதை மாந்தர்களையும், அவர்களுக்கு இடையேயான உறவையும், அதற்குத் துணை நிற்கும் சம்பவங்களையும் வரிசைப் பிரகாரம் அடுக்கியே பெரும்பாலான நாவல்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் அந்த உத்தியை அரங்கநாதன் முடிந்த மட்டிலும் எல்லாவிடங்களிலும் உடைத்தெறிகிறார். முதலில் காட்சிகள், உரையாடல்கள் ஆரம்பித்துப் பின்னரே மாந்தர்கள் அறிமுகப் படுத்தப்படுகிறார்கள். இது போன்ற உத்தியை சிறுகதைகளில் அதிகம் காணவியலும். இந்நாவலில் திரும்பத் திரும்ப இவ்வுத்தி பயன்படுத்தப்படுகிறது. குறைவான பாத்திரங்களுக்கு இது சிறப்பாகப் பொருந்தி வருகிறது. ஆனால், இதே உத்திதான் முதல் பாகத்தில் வரும் அதிகமான பாத்திரங்களையும் அடையாளப் படுத்திக் கொள்வதில் வாசகனுக்குச் சிக்கலை ஏற்படுத்துகிறது. இவ்வகையில் இப்படைப்பு வாசகனிடத்தில் அதிக உழைப்பைக் கோருகிறது.
அதே போல சில இடங்களில் முக்கிய நிகழ்வுகள் கூட போகிற போக்கில் சொல்லப்படுகின்றன. அதனாலோ என்னவோ பல இடங்களில் வெறும் தகவல் மட்டுமே வாசகனை வந்தடைகிறது. முத்துக்கறுப்பனின் மகன்களுக்கு இடையே பிணக்கு இருக்கிறது. தம்பியின் திருமணத்துக்கு அண்ணனை அழைக்ககூடாது என்று சொல்லும் அளவுக்கு அதன் வீரியம் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் எங்கும் சொல்லப்படுவதில்லை.
மூன்று தலைமுறைக் கதையை இருநூறு பக்க நாவலில் சொல்வதென்பது சவாலான காரியமே. அதை இவர் விரும்பி ஏற்றிருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது. ‘ஆரல் வாழ் மக்களை எந்தக் கவிஞனும் பாடியதில்லை’ என்று நாவலின் ஆரம்பத்தில் ஒரு வரி வரும். அந்தக் குறையை இவர் நாவலாக எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பிணைப்பைப் பேசும் வகையில் இது, தமிழ் நாவல்களில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.