நிரந்தர நட்சத்திரம்

நிரந்தர நட்சத்திரம்

-தென்றல் சிவக்குமார்

21 வயது ஸ்ரீராம் வீட்டுக்கு வரவேண்டிய தினசரி செய்தித்தாள் பக்கத்து வீட்டு ஜன்னலில் செருகப் பட, பக்கத்து வீட்டு ராமஸ்வாமி ஐயர் அதனை (யாருடையதென்று தெரியாததால்) முழுக்க வாசித்துவிட்டு, வீதியில் வந்த புளியை வாங்கப் பயன்படுத்தி விடுகிறார். பின்னர் பேப்பர்காரனைத் தேடும் ஸ்ரீராமைப் பார்த்தவுடன் அவனிடம் சேர்ப்பிக்க, அவன் அதில் வெளியாகியிருந்த சினிமா விளம்பரத்தில் அவனுக்குப் பிடித்த நடிகையின் படத்தில் புளியால் கறை ஏற்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரம் கொண்டு ‘முட்டாள்’ என்று சொல்ல, வார்த்தைகள் தடித்து, சண்டையாகிறது. அதன்பின் ராமஸ்வாமி ஐயரின் ஒரே மகனான நாலு வயது ராஜுவுக்கு அம்மை வந்திருப்பதை அறிந்து சுகாதார இலாகாவுக்குத் தகவல் கொடுத்து விடுகிறான். அவர்கள் குழந்தையைத் தனி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள். குழந்தையின் அம்மா கதறுகிறார், சுகமில்லாத குழந்தையைக் கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்று தவிக்கிறார். இரண்டு நாட்கள் கழித்துக் குழந்தை இறந்துவிடுகிறது. ஸ்ரீராம் அந்த வீட்டுக்குச் சென்று ராம்ஸ்வாமி ஐயரிடம் கடிதம் எழுதியது தான் தான் என்று ஒப்புக் கொள்கிறான். அவர் தன் மனைவியிடம் சொல்லச் சொல்கிறார். அவர் தன்னைச் சபிக்கட்டும் என்று நினைத்துக் கொண்டே ஸ்ரீராம் சொல்ல, பதிலுக்கு //”அவள் ஒன்றும் சொல்லவில்லை”// என்று கதை முடிகிறது.

தன்னுடைய அபிமான சினிமா நட்சத்திரத்தின் விளம்பரப் படம் வெளியாகிய தினசரி செய்தித்தாளைக் ‘கறை’ப் படுத்திவிட்டப் பக்கத்து வீட்டுக்காரர் மேல் ஓர் இளைஞனுக்கு எழும் ஆத்திரமும் அதையொட்டிய நிகழ்வுகளுமாக ஒரு சிறுகதை.

1960ல் எழுதப்பட்டு அரை நூற்றாண்டைக் கடந்திருந்தாலும், இன்றைக்கும் பொருந்தக் கூடிய கதைக் களம், இன்றைக்கென்ன இன்னும் அரை நூற்றாண்டு கடந்தாலும் பொருந்துமென்றே தோன்றுகிறது.

இதே கதையை முடிவிலிருந்து அணுகி, செய்தித்தாள் விளம்பரம் என்ற தொடக்கப் புள்ளிக்குப் பயணித்தால் இன்றைய நவீன சிறுகதை வடிவத்துக்குள்ளும் சரியாகப் பொருந்தக் கூடும்.

கதையில் நேரடியாகச் சொல்லப் படாத சில விவரங்களையும் நம்மால் அனுமானித்துக் கொள்ள முடிகிறது. அந்தக் குழந்தைக்கு அம்மை வந்திருப்பதையோ, அவனைத் தனி மருத்துவமனைக்குத் தாயார் கதறக் கதறக் கொண்டு சென்றதையோ எதையுமே ஸ்ரீராம் நேரடியாகப் பார்க்கவில்லை. அம்மா சொல்லித் தெரிந்து கொள்கிறான். மட்டுமல்ல, மரணித்த குழந்தை, அம்மை வார்த்திருந்த காரணத்தால் வீட்டுக்குக் கொண்டுவரப் படாமலேயே அடக்கம் செய்யப்பட்டுவிட, இறுதியாகவும் அதன் முகத்தை ஸ்ரீராம் பார்க்கவே இல்லை.

தனக்குப் பிடித்த நட்சத்திரத்தின் பிம்ப முகத்தில் புளியால் ஏற்பட்ட பிம்பத் தழும்புகளைக் கூடச் சகித்துக் கொள்ள இயலாத ஒருவன், வன்மம் பீடித்தபின் அம்மை முத்துக்களுடன் அவதியுறும் சிறு பிள்ளையைத் தாயிடமிருந்து பிரித்துச் செல்லும்படியான ஒரு கடிதத்தை எழுதத் துணிவது எத்தகைய குணப் பிறழ்வு? அதே மனம் பிள்ளையைத் தேடிப் போன தாயும் தந்தையும் திரும்பி வரும்வரை அமைதியின்றித் தவிப்பதும், அதன் பின் அமைதியாக மௌனமாகத் தவிப்பதுமாக மனிதப் பிறவிதான் எத்தனை வினோதமானது?

சுகாதார இலாகாவுக்கு மொட்டைக் கடிதம் எழுதிவிட்டுச் சின்ன அளவில் ஒரு பழிவாங்கலைச் செய்துவிட்டதாகத் திருப்தியோடு வீட்டை விட்டுக் கிளம்பினாலும், வேலை வாய்ப்பு அலுவலகம், புத்தகசாலை, சினிமா என்று மனத்துக்கு உகந்த அலைச்சலுக்குப் பின் களைப்பாகத் திரும்பியபோதும், அடையாளம் தெரியாத ஓர் அமைதியின்மையை ஸ்ரீராம் உணர்கிறான். அது அவன் மறந்துவிட்டாலும் (அல்லது மறந்துவிட்டதாக பாவனை செய்து கொண்டாலும்) கடிதம் அனுப்பியதற்கான குற்ற உணர்வுதான். அதனை நீந்திக் கடந்து மன்னிப்புக் கேட்கச் செல்ல அவனுக்கு ஒரு மாதம் ஆகிறது.

சிறு சிறு மனப் பொறிகளாய்த் தோன்றும் உணர்வுகளை மிக இயல்பான சொற்களால் விசிறிப் பெரிதாக்கி விடுகிறார் அசோகமித்திரன். யாரிடமோ சொல்ல வேண்டிய தகவலை “மறந்து போனதை”யோ, பேசிக் கொண்டிருக்கையில் “சிக்னல் கிடைக்காமல்” போனதையோ, “அப்படியா?” என்று கேட்டுத் தெரிந்து கொள்ள மனமின்றி “அப்படித்தான் போலும்” என்று வசதியாக நம்பிக் கொண்டதையோ, இரண்டு வாக்கியங்களில் கொஞ்சம் விவகாரமானதை “அவ்வளவு முக்கியமில்லை” என்று அமிழ்த்திக்  கொண்டதையோ, “பாதி உண்மை”கள் தரும் திருப்தியின் குரூரத்தையோ இந்தக் கதை வாசிக்க வாசிக்க நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

ஒரே நேர்க் கோட்டில் புறத்தில் பயணித்தாலும், அகத்தில் நீண்டும், வளைந்தும், தொடங்கிய இடத்துக்குத் திரும்பியும், எதிர்த் திசையிலும் என்று விதவிதமாகப் பயணிக்கிறது, ஸ்ரீராமின் மனத்தைப் போலவே.

அந்தக் குழந்தை தனி மருத்துவமனைக்குப் போனதால்தான் மரணித்தது என்று கதையில் எங்கும் சொல்லப் படவில்லை, ஸ்ரீராம் அப்படி நினைப்பதாகவும் சொல்லப் படவில்லை, எனில், அவனது குற்ற உணர்ச்சி அந்தத் தாயின் மனநிலைக்கானது.

//”அவளிடமிருந்து அவன் மிகக் கொடூரமான சாபங்களுக்காகக் காத்திருந்து, உள்ளூரப் பிரார்த்திக்கவும் செய்தான். “// என்கிறார். அவனுக்கு அது கொஞ்சமேனும் ஆறுதல் தந்திருக்கக் கூடும்.

ஆனால்,

//”அவள் ஒன்றும் சொல்லவில்லை”//

எப்படிச் சொல்லுவாள்? என்னவென்று சொல்லுவாள்? பரவாயில்லை தம்பி என்றா? படுபாவி என்றா?

அவளுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் உதிர்ந்து போனதற்காக அவள் யாருக்கும் எந்தக் கடிதமும் கையெழுத்தின்றி அனுப்பப் போவதில்லை, எந்த ஒரு சொல்லையும் சொல்லப் போவதுமில்லை.

திரும்பத் திரும்ப வாசித்தபின்னும் எதையோ விட்டுவிட்டாற்போலவும், அதை நினைவுபடுத்திக் கொண்டே இந்தக் கதை பின் தொடர்ந்து வருவது போலவும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. நட்சத்திரப் பித்து என்பது நமக்கொன்றும் புதிதில்லை என்றாலும் ஒரு இளமனத்தின் இருள் மூலைகளை அது தனதாக்கிக் கொண்டு, என்னவெல்லாம் செய்துவிடுகிறது என்பது கதையைத் தாண்டியும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

அந்த அதிர்வே அசோகமித்திரனுக்கான அஞ்சலியாகட்டும்.

சிறுகதைக்கான இடுகை : http://azhiyasudargal.blogspot.in/2011/02/blog-post_28.html.