எ ஃபிலிம் பை

எ ஃபிலிம் பை

தொடர்:- கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

உலகின் முதல் படமே குறும்படம்தான் என்று சில திரைப்பட அறிஞர்கள் கூறுவார்கள். ஆம். முதன்முதலில் வீடியோக்களை ரெக்கார்ட் செய்யும் கேமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது பரிசோதனை முயற்சியாக ஒரு நிமிடத்திற்கும் குறைவான படங்களே எடுக்கப்பட்டன. துண்டு துண்டாக சில செயல்களை படம்பிடித்து காட்டின அந்த படங்கள். அவற்றில் சத்தங்கள் இல்லை. பின்பு மெல்ல மெல்ல தொழில்நுட்பம் வளர, அதற்கேற்றாற்போல் சினிமாவும் தன்னை செதுக்கிக் கொண்டது. திரைப்படம் என்பதற்கான காலநேர வரையறை உருவானது. அதன்பின் நீளமான அந்த படங்கள் திரைப்படங்கள் எனவும், குறுகிய நேரத்தைக் கொண்ட படங்கள் குறும்படங்கள் எனவும் அழைக்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

இப்படி சினிமாவின் வரலாற்றிலிருந்தே ஆரம்பிக்கிறது குறும்படங்களின் வரலாறு. மேலைநாடுகளில் சினிமாக்கள் வளர வளர, கூடவே தனி ஊடகமாக வளர்ந்தன குறும்படங்கள். ஆனால் சினிமா எனும் கலை முதல் அதிலுள்ள தொழில்நுட்பங்கள் வரையில், மேலைநாடுகளில் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க பின்னாலேயே அதை கிரகித்துக் கொண்ட இந்தியாவில், குறும்படங்கள் மட்டும் ஏன் அத்தனை வீரியத்துடனும் முக்கியத்துவத்துடனும் உள்வாங்கிக் கொள்ளப்படவில்லை என்பது தெரியவில்லை. உலகம் முழுவதும் இன்று குறும்படங்கள் ஒரு முக்கியமான கலையாக திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற இயக்குனர்களின் குறும்படங்கள் முதல் புதியவர்களின் குறும்படங்கள் வரை பல குறும்படங்கள் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன. பல இயக்குனர்கள் திரைப்படங்கள் இயக்க ஆரம்பித்த பிறகும் இடைஇடையே தொடர்ந்து குறும்படங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபல இயக்குனர்களின் விக்கிபீடியா பக்கங்களை பார்த்தாலே இது புரியும். அந்தளவிற்கு குறும்படங்கள் திரைப்படங்களில் சொல்லமுடியாதவற்றை சொல்லும் வெளியாகவும், சக்திவாய்ந்த ஒரு ஊடகமாகவும் திகழ்கிறது.

அந்த வகையில் தமிழின் குறும்பட சூழல் மிக ஆரோக்கியமான ஒன்றல்ல தான். ஆனால் சினிமாவே இங்கே மசாலாக்களினால் நிறைந்திருந்து, படிப்படியாகவே மாற்றங்கள் நிகழத் துவங்கிக் கொண்டிருக்கும்போது குறும்படங்களில் அதை எதிர்பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனாலும் வருத்தமான ஒரு விஷயம், இங்கே குறும்படங்கள் சினிமாவில் நுழைவதற்கான ஒரு துருப்புச்சீட்டாக, இணையவெளிகளில் வெளியிடப்பட்டு அல்லது ப்ரிவியூ அரங்குகளில் வெளியிடப்பட்டு ஒரு சிறிய வட்டத்தின் பாராட்டுக்களை மட்டுமே வாங்குவதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. வேடிக்கையாக ஒன்றை சொல்வார்கள். ’90 களில் சிறுவர்களுக்கு போரடித்தால் மைதானங்களுக்குச் சென்று விளையாடுவார்கள். 2000 ங்களில் சிறுவர்களுக்கு போரடித்தால் வீட்டில் அமர்ந்து வீடியோ கேம்கள் விளையாடுவார்கள். 2010 களில் சிறுவர்களுக்கு போரடிக்கும்போது, வாடா ஒரு ஷார்ட் ஃப்லிம் எடுக்கலாம் என்கிறார்கள்’.

அது அல்ல குறும்படங்கள். உலகில் பல மூலைகளில் சமூகத்தின் பல கறைகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன குறும்படங்கள். அதிகாரங்களின் அத்துமீறல், வன்முறை, போர், சமூக இடர்பாடுகள் என பல களங்களில் சொல்லப்படாத உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கின்றன குறும்படங்கள். சிலபல நிமிடங்களில் நம்மை நெகிழவைத்திருக்கின்றன குறும்படங்கள். முக்கியமான சமூக மாற்றத்தையே கூட ஏற்படுத்தியிருக்கின்றன சில குறும்படங்கள். எழுத்தாளர் அஜயன் பாலா ஒருமுறை சொன்னார். ‘ஒவ்வொரு கலைக்கும் ஒரு இலக்கியம் வேண்டும். சினிமா தன் இலக்கியத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் சினிமாவின் இலக்கியம் குறும்படங்கள்தான்’ என்று.குறும்படம் என்பது சினிமாவிற்கான டிக்கெட் அல்ல, அது ஒரு தனிக்கலை, தனி ஊடகம் என்பதை உணர்ந்து தமிழில் குறும்படங்கள் வர ஆரம்பிக்கும்போது அற்புதமான குறும்படங்கள் அணிவகுத்து நிற்கும். அதிலிருந்து எதை எடுத்து அறிமுகப்படுத்த என திணறும் நிலை வரும். அந்த நிலைக்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டே, தமிழில் வந்த சில சிறந்த குறும்படங்களை தேடியெடுத்து அறிமுகப்படுத்துகிறேன்.

‘திற’

இந்த தொடரின் முதல் குறும்படமாக இந்த குறும்படத்தை பற்றியெழுத பெருமைப்படுகிறேன். தமிழில் வந்த மிகச்சிறந்த மிகமுக்கியமான குறும்படங்களில் ஒன்று ‘திற’. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி எழுதப்பட்ட சதத்ஹசன்மண்ட்டோவின் புகழ்பெற்ற ‘Kholdo’ என்ற சிறுகதையை குஜராத் கலவரங்களுக்கு மத்தியில் பொருத்தி எடுக்கப்பட்ட படம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கதையை, தற்கால சூழலில் இந்தியாவின் மிக முக்கியமான ஒரு பிரச்சினையில் மிகநுட்பமாக பொருத்தியதிலேயே இந்த குறும்படம் தனிச்சிறப்பு பெறுகிறது. குஜராத் கலவரங்களை, அதில் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறைகளை படத்தின் ஒவ்வொரு காட்சியும் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

மாண்ட்டோவின் கதையை பின்பற்றி அதேபோல் முன்னும் பின்னுமாய் எழுதப்பட்டிருக்கிறது திரைக்கதை. இந்த உத்தி இறுதியில் வரும் பேரதிர்ச்சியையும், கலவரத்தில் நடந்த வன்முறைகளையும் சிறுசிறு துண்டுகளாக காட்டியே மனதில் ஆழமான பாதிப்பை உண்டுபண்ண உதவுகிறது.

குஜராத் கலவரங்கள் நிகழ்ந்து முடிந்தபின், ஒரு கேம்ப்பில் சோகமாக அமர்ந்திருக்கிறார் சிராஜுதின். அவர் நினைவுகளில் கலவரங்கள் வந்துவந்து போகிறது. அதில் அவர் மனைவி இறந்திருக்கிறார். மகள் தொலைந்துபோயிருக்கிறார். நிஜத்திற்கு வருகிறார். தன் மகளை அந்த கேம்ப் முழுக்கத் தேடுகிறார். எங்கும் கிடைக்காமல் அங்கே உதவிக்கு வரும் சேவகர்களிடம் (Sevaks) தன் பெண்ணை பற்றிக் கூறி உதவிகேட்கிறார். உதவ உறுதியளித்து புறப்படும் அந்த சேவகர்கள் அந்த பெண்ணை கண்டுபிடிக்கின்றனர். வழியில் இன்னொரு கேம்ப்பில் சிராஜுதின் அவர்களை பார்க்கிறார். தன் பெண்ணை குறித்து ஆர்வமாக விசாரிக்கிறார். ஆனால் இன்னும் அவர் பெண்ணை பார்க்கவில்லை என்றும், நிச்சயம் கிடைத்துவிடுவாள் என்றும் கூறிவிட்டு செல்கின்றனர் சேவக்ஸ். சோகத்துடன் அமர்ந்திருக்கும் சிராஜுதின் அடிபட்ட ஒரு பெண்ணை தூக்கிச் செல்வதை பார்க்கிறார். விசாரித்து அங்கே ஓடிப்போய் பார்த்தால், அது அவரது மகள். அவளுக்கு என்ன ஆனது, அது எப்படி கதையில் வெளிப்படுகிறது என்பது மனதை உலுக்கும் காட்சிகள்.

இறுதியில் டாக்டர் ஒரு வார்த்தை கூறுவார். அதற்கு அந்த பெண்ணின் எதிர்வினை நம்மை உலுக்கிவிடும். கதையில் இரண்டே வரிகளில் வரும் அந்த செயல், சில நாட்களுக்கு உங்களைத் தூங்க விடாது. அது கதை. நாம் கற்பனையில் என்னாகியிருக்கும் என்று ஒரு சித்திரத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது படம். இங்கே அந்த குறிப்பிட்ட இடத்தை படமாக்குவது நிச்சயம் பெரிய சவால். ஆனால் அது இங்கே மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சேவக்ஸ், வண்டியில் அந்த பெண்ணை அழைத்து வரும்போது உணவைக் கொடுக்க ‘டேக் இட்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவர். அது கதையில் இல்லை. ஆனால் திரைக்கதையில் சேர்க்கப்பட்ட அந்த ஒரு விஷயம், இறுதியில் நடக்கும் அந்த கொடூரத்தை மிக எளிமையாக ஆனால் ஆழமாக நமக்குள் கடத்த உதவுகிறது. திரைக்கதை ஆசிரியரின் புத்திகூர்மை வெளிப்படும் இடம் இது.

இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே மையப்படுத்திச் செல்லாமல், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதத்தில் குஜராத் கலவரங்களின் கொடுமைகள் நமக்கு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். படத்தின் முதல் ஷாட்டிலேயே ரேடியோவில் கலவரங்களை குறித்து அப்போதையே குஜராத் முதல்வர் மோடி ‘இது நியூட்டனின் மூன்றாம் விதியின்படி நடந்தது’ என்று கூறியது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். இதைப்போன்று பல குறியீடுகள் மூலம், லேசாக பின்னணியில் ஒலிக்கும் வசனங்கள் மூலம், கோஷங்கள் மூலம், இறுதியில் ஒலிக்கும் அந்த ரயில் சத்தங்கள் மூலம், சேவக்ஸ் அந்த பெண்ணிடம் கொடுக்கும் துப்பட்டா எழுத்துக்களின் மூலம், சிராஜுதின் நினைவுகளில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலம் குஜராத் கலவரங்களின் பலப்பல பரிமாணங்களை மிகநுட்பமாக வெளிக்காட்டுகிறது இந்த குறும்படம். மண்ட்டோவின் கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும், அதில் முடிந்தவரை, எடுத்துக்கொண்ட களத்தை மிக ஆழமாக பதியவைத்திருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாகவும் மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்பட்ட குறும்படம் இது. படத்தின் பல ஷாட்களில் இதை நாம் உணரலாம். சேவக்ஸ் அவர் பெண்ணை காணவில்லை என்று கூறிச் சென்றவுடன் சிராஜுதின் அல்லாவை கும்பிடுவார். அப்போது வைக்கப்பட்டிருக்கும் ஷாட் ஒரு சிறிய உதாரணம். இசை, நடிப்பு, படத்தொகுப்பு என அத்தனையும் கதையை உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்டிருப்பது சிறப்பு.

இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சிறுகதையை அதன் தன்மை கெடாமல் எடுப்பதே ஒரு பெரிய சவால். அதை இன்னொரு களத்தில் பொருத்தி, அந்த வன்முறைகளின் ஆழம் வரைசென்று அதை தோலுரிப்பது இன்னொரு பெரிய சவால். நிச்சயம் திரைமொழி தெரிந்த, அரசியல் தெரிந்த ஒரு கலைஞனால்தான் இதை இத்தனை சிறப்பாக செய்யமுடியும். இந்த குறும்படத்திற்கு திரைக்கதையெழுதி இயக்கியிருப்பது ப்ரின்ஸ் என்னாரெஸ் பெரியார். திரைப்படக் கல்லூரி மாணவர். ஒரு சிறந்த கலைஞனின் கடமை, அவன் கண்முன் நடக்கும் அக்கிரமங்களை தன் கலையில் வடிப்பதுதானே. அதை நிறைவாக செய்திருக்கிறார் ப்ரின்ஸ். கிட்டத்தட்ட 20 முறை இந்த படத்தை பார்த்திருக்கிறேன். ஒவ்வோர் முறையும் இறுதிக்காட்சியில் உறைந்துபோய் அமரவைக்கும் ‘திற’.

ஆனால் பெரிய வருத்தம் என்னவெனில், ப்ரின்ஸ் என்னாரெஸ் பெரியார் இதற்குப் பிறகு குறும்படங்கள் எடுக்கவில்லை. ஒரு நல்ல கலைஞன் தன் கலையை விட்டு விலகியிருப்பது நிச்சயம் அந்த கலைக்குத்தான் பேரிழப்பு. தமிழ்நாட்டில், இந்தியாவில் இன்னும் திறக்கப்பட வேண்டிய, பேசப்படவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. ப்ரின்ஸ் அடுத்த குறும்படத்தை விரைவில் துவங்க நம் நாட்டின் ஒருநாள் நிகழ்வுகளே போதும்.

தொடரும்….

குறும்பட லிங்க் : Click here for You Tube.

அத்தியாயம் : 2