எ ஃபிலிம் பை – 2

எ ஃபிலிம் பை …

தொடர் : – கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

அத்தியாயம் : 2

மனிதன் பிறந்தபோதே கதைசொல்லலும் பிறந்துவிட்டது. ஒரு மனிதன் இல்லாதபோது குகையில் என்ன நடந்தது, என்ன மிருகம் வந்தது, எப்படி சமாளித்தோம் என்பதை ஆதிமனிதன் அவனுக்கு கதையாகத்தான் சொல்லியிருப்பான், உடலையே மொழியாக பயன்படுத்தி. மொழி உருவானபின் அதைவைத்து கதைகளை சொல்ல ஆரம்பித்தான். அப்படி சொல்லப்பட்ட எந்த கதையும் தட்டையாக, வெறும் நடந்ததை விவரிக்கும் ஆவணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அத்தோடு சிலபல விஷயங்களை சேர்த்து, விறுவிறுப்பைக் கூட்டி, உணர்வுகளை தொடும்படி கொஞ்சம் Exxagerate செய்துதான் சொல்லப்பட்டிருக்கும்.

‘நீ வேட்டையாடப் போய்ட்டியா…நாங்களாம் தூங்கிட்டு இருந்தோம். திடீர்னு ஸ்ஸ் ஸ்ஸ் னு ஒரு சத்தம். என்னடானு முழிச்சுப் பாத்தா, பத்தடில ஒரு பாம்பு சீறிட்டு இருக்கு…’ என்று ஆர்வத்தை சட்டென்று தூண்டும் ஒரு பக்கா கதையாகவே அந்த அனுபவப் பகிர்வு துவங்கும். அதைவிட முக்கியமாக, முடியும். முடிவை ஆரம்பத்திலேயே சொல்லி அந்த கதையை ஒரு வரியில் முடித்துவிட முடியும். ‘இன்னைக்கு பாம்பு வந்துச்சுடா..தீய காட்னதும் போய்டுச்சு’ என்று. ஆனால் அப்படியான கதையை சொல்ல எந்த மனிதனும் விரும்புவதில்லை. அப்படியான கதையை கேட்கவும் எந்த மனிதனும் விரும்புவதில்லை. முடிவை கொஞ்சம் ஒளித்துவைத்து, அதில் ஒரு சில சுவாரசியங்களை தெளித்து, அந்த முடிவை சொல்ல மட்டும் சில விநாடிகள் இடைவெளி எடுத்துக்கொண்டு, கேட்பவன் அந்த கதையின் முழு வீரியத்திற்குள் வந்துவிட்டானா என்பதை உறுதிப்படுத்திவிட்டுதான் அந்த முடிவு சொல்லப்படும். ‘கடைசில…டக்குனு தீ எடுத்து காட்னோம் பாரு..கொஞ்ச நேரம் சீறுச்சு. அப்பறம் போய்டுச்சு’ என்று முடிக்கும்போது கேட்பவன் பெருமூச்சு விட்டால்தான் சொன்னவனும் பெருமூச்சு விடுவான். இதுதான் கதைசொல்லலின் அழகியல்.

அந்த சுவடை பற்றியேதான் திரைப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட எல்லா வடிவங்களிலும் கதைகள் சொல்லப்படுகிறது. குறிப்பாக குறும்படங்களின் வடிவத்தில் இந்த உத்தி மிகவும் வீரியமான ஒன்று. சில நிமிடங்களில் முடியும் குறும்பட வடிவத்தில் முதல் ஷாட்டிலிருந்தே ஒரு சிறிய புதிரை கட்டிக்கொண்டே போய், இறுதியில் அதை அவிழ்க்கும் உத்தி மிக அபாரமாய் வெளிப்படும். அப்படி அந்த உத்தி வெளிப்பட்ட ஒரு குறும்படம்தான் ‘மறைபொருள்’.

ஒரு இளம்பெண் குளித்துமுடித்து தன்னை அலங்கரிக்கத் துவங்குகிறாள். தலைமுடியை வாரி, பவுடர் போட்டு, பொருத்தமான உடைகளை தேர்வு செய்து, கண் மை இட்டு, லிப்ஸ்டிக் போட்டு, வளையல் போட்டு, பூ வைத்து என்று ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தேர்வு செய்து தன்னில் போட்டு மகிழ்கிறாள். மொத்த அலங்காரமும் முடிந்துவிட்டது. இறுதியில் ஒன்றே ஒன்று மட்டும் பாக்கி. அது என்ன என்பதுதான் மறைபொருள்.

மிகச்சிறிய ஒரு கரு. ஆனால் அது இறுதியில் வந்து முடியும் இடம், நீங்கள் ஊகிக்க முடியாதது. ஊகித்தே இருந்தாலும் கூட, ஒரு நிமிட அதிர்ச்சியையும் பல மணிநேர சிந்தனையையும், பலநாள் விவாதத்தையும் உங்களுக்குள் விதைக்க வல்லது. சமூகத்தின் எல்லா படிமங்களிலும் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். அதில் முன்னே வந்து நிற்பது மதம். மதத்தின் பெயரால் நடக்கும் பெண்ணடிமைத்தனங்களும் அடக்குமுறைகளும் ஏராளம். ஆண்களால் எழுதப்பட்ட எல்லா சாஸ்திரங்களும் பெண்ணை ஆணின் அடிமையாகவே சித்தரித்து வந்திருக்கின்றன.

மதத்தின் பெயரால் நடக்கும் அப்படியான ஒரு அடக்குமுறையை மையப்படுத்தி எழுதப்பட்டதுதான் மறைபொருள். ‘பெண்ணிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்’ என்கிற கோஷமே ஆணாதிக்கம்தான். பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்க ஆண் அவளை ஆள்பவன் அல்ல. வாழ்வை, உணர்வை, சமூகத்தை பகிர்பவன் மட்டுமே. பெண்ணுக்கான உரிமையை பெண் எடுத்துக்கொள்வதே சுதந்திரம் என்று பெயரிடப்படும் சமூகத்தில், பெண் அடக்குமுறை இன்னும் எந்தளவு ஊறிப்போயுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். அந்த குளத்தில் எரியப்பட்ட சிறுகல்தான் மறைபொருள்.

ஒரு வசனம் கூட இன்றி, வெறும் சப்தங்களாலும், இசையாலும் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் இது. வசனங்கள் நிச்சயம் தேவைப்பட்டிருக்காதுதான். இறுதியில் காட்டப்படும் அந்த சில விநாடி காட்சிகள் முகத்தில் அறையும் காட்டத்தை எந்த வசனமும் வெளிப்படுத்தியிருக்கவும் முடியாது.

அந்த பெண் ஒவ்வொரு பொருளாய் ஆசையுடன், ரசித்து ரசித்து தேர்ந்தெடுப்பதில் இருந்து படத்தின் அழகியல் துவங்குகிறது. எல்லா பொருளும் அவளுக்கு பிடித்த, அவள் விரும்பும், அவளுக்கு பொருந்தும் ஒன்றாகத்தான் அவள் பார்த்து பார்த்து எடுத்து அணிகிறாள். அத்தனை சிறு பொருட்களுமே அவளது விருப்பம்தான். ஆனால் அவள், அவள் விருப்பத்தின் படி இல்லை. எல்லாவற்றிலும் பிடித்ததை தேர்வு செய்யும் அவள் இறுதியில் சமூகம் அவளுக்கென தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கும் முகமூடியைத்தான் உடுத்திக் கொள்கிறான்.

ஒரு கதாப்பாத்திரத்தை சிறுகச் சிறுக நம்மை ரசிக்க செய்து, அந்த பாத்திரத்தை நாம் விரும்பத் துவங்கும்போது அதற்கு வரும் ஒரு வலி, நம்மையே அதிகம் பாதிக்கும். அப்படியொரு பாதிப்பை விட்டுச்செல்கிறது இந்த 6 நிமிட குறும்படம்.

ஆனாலும் இறுதியில் எந்தவொரு தீர்ப்பையும் எடுக்கவில்லை இயக்குனர். இது சரி, இது தவறு என்று வாதிடவில்லை. இது இப்படி இருக்கிறது என்று பொட்டில் அறைந்து காட்டியிருக்கிறார். விவாதம் உங்களுடையது. முடிவும் உங்களுடையது. அந்த விவாதத்தை தூண்டுவதுதானே ஒரு கலைஞனின் பணியாக இருக்கமுடியும்.

தொழில்நுட்ப ரீதியாக பெரிய அளவில் ஈர்க்கவில்லை மறைபொருள். கேமிரா கோணங்கள், அடிக்கடி வரும் சூம், மிக முக்கியமாக படத்தோடு ஒன்றாமல் தனியே துடிக்கும் இசை எல்லாம் படத்தை ஓரிரு படி கீழேயே நிறுத்திவிட்டதாகவே எனக்குத் தோன்றும். இன்னும் தொழில்நுட்ப சிரத்தையுடன் இந்த குறும்படம் உருவாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பன்மடங்கு அற்புதமாக ஒரு படமாக வந்திருக்கும். இன்னும் பரவலாக பேசப்பட்டிருக்கும். அதைப்போலவே, சில ஷாட்களும் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றியது. 5 நிமிட (டைட்டில்கள் இல்லாமல்) குறும்படத்திற்கு இது நீளமல்லதான்.  ஆனால் திரையில் நடப்பதை பார்வையாளனுக்கு கடத்தியபின்னும் நீளும், மீண்டும் வரும் ஷாட்கள் வெட்டப்பட்டிருந்தால் இந்த படம் இன்னும் நேர்த்தியாக வந்திருக்கும். ஆனால் இது எதுவும் ஒரு பெருங்குறையாக உறுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக படம் பேசும் விஷயமும், பேசிய விதமும், இந்த சிறுசிறு விஷயங்களை மறைந்து மனதில் பெரும் கனத்தை இறக்கிவைத்துவிட்டே செல்கிறது.

இந்த குறும்படத்தைப் பற்றிய ஒரு விவாதத்தின்போது ஒரு இஸ்லாமிய நண்பர் முன்வைத்த வாதம் முக்கியமானது. ‘இந்தப் படம் முழுவதும் அந்த பெண் தன்னை அழகுபடுத்திக்கொள்வதைத்தான் காட்டுகிறது. இறுதியில் அந்த அழகு வெளியே தெரியாமல் மறைக்கப்படும் வேதனையையும் பதிவு செய்கிறது. இந்த  பிரச்சினையின் மற்ற பரிமாணங்களைத் தொடாமல், பெண் என்பவளை அழகு சார்ந்து மட்டுமே சித்தரித்து, அந்த அழகு வெளியில் தெரியாமல் போகிறது என்று அழகை மட்டுமே மையப்படுத்தி சித்தரிப்பதுமே கூட ஒருவகையான பெண் அடக்குமுறைதானே?’ என்று கேட்டார். அதைப்பற்றி மிக நீண்ட நேரம் விவாதித்தோம். ஆனால் அந்த விவாதத்தை இங்கே குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் கேள்வியை எழுப்பியாயிற்று. விவாதம் உங்களுடையது ! முடிவும் உங்களுடையது !!

குறும்படத்தின் லிங்க் 

 

இயக்குனர் பொன்.சுதா

வெளிவந்த காலத்தில் பெரும் பரபரப்பையும், பல பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்த இந்த குறும்படத்தின் இயக்குனர் திரு. பொன் சுதா. ‘நடந்த கதை’ என்ற இன்னொரு முக்கியமான குறும்படத்தையும் இயக்கியிருக்கும் பொன்.சுதா கதைகள், கவிதைகள், குறும்படங்கள், திரைப்படங்கள் என்று பல தளங்களில் இயங்கி வருகிறார்.

அவரது வலைப்பக்கம்