மஸாராவிற்குள் சிறைப்படுத்தப்பட்ட விடுதலை வேட்கை; ’ஆடு ஜீவிதம்’ வாசிப்பு அனுபவம் – செ.மு.நஸீமா பர்வீன்
உக்கடத்திலிருந்து குமிட்டிபதிக்குப் போகின்ற 101-ஆம் நம்பர் பஸ்ஸில் காலை 9 மணிக்கு ஏறிவிட்டதுபோல இந்த வாழ்க்கை என் மூளையையும் மனதையும் நெருக்கிக் கொண்டிருந்த ஒரு பொழுது. என் மனது மீட்சியை விரும்பியது. சில தினங்களுக்குமுன் பத்திருபது பக்கங்களை வாசித்துவிட்டு மூடி வைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் வரிகள் நினைவுக்கு வந்தன. ‘நம் துயரங்களில் இருந்து வெளிவரும் ஒரே வழி நம்மை விடவும் மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான்’ எனக்கு நஜீபின் கதையைக் கேட்கவேண்டும் போல ஓர் உந்துதல். இப்போதே இந்தக் கணமே கேட்காது போனால் நெருக்கிக் கொண்டிருக்கும் கவலைகள் என் மூளையைச் சிதைத்துவிடும் போல வாதை. கண்ணாடி அலமாரியில் கதிரவனின் ஒளிபட்டு சிதறிய வானத்தின் நீலமும் சூரியனின் அருகாமையில் நகர்ந்த நிலமென வெயில் தகிக்கும் பாலைவெளியுமாக இருந்த புத்தகத்தை அடையாளம் கண்டேன் வாழ்வதற்காக, மீள்வதற்காக, விடுதலைக்காக ஏங்கி, துளி தண்ணீரும் உணவும் இல்லாமல் அந்தப் பாலை பெருவெளியில் பல நாட்கள் நடந்து நடந்து, ‘சாகுறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது தண்ணியக் குடிக்கனும். எனக்கு அதோட சுவை தெரியணும்’ என்று கத்திக் கொண்டே ஓடிய நஜீபின் நாவில் இப்ராஹிம் கதிரி இறக்கிய நீரைப்போல ஒரு ஒரு சொட்டாக நஜீபின் துயரார்ந்த வாழ்க்கையை ஒவ்வொரு எழுத்துத் திவலையாக வாசகருக்குள் கடத்துகிறது பிரதி.
ஆடு ஜீவிதம் – திரைப்படம்
ஆடு ஜீவிதம் பனுவலும் படமும்
இந்த நாவலை வாசிப்பதற்கு ஒரு மாதம் முன்னதாக ஆடு ஜீவிதம் திரைப்படம் பார்த்திருந்தேன். நாவலைப் படித்து முடித்தபோது இரண்டையும் ஒன்று என ஒப்புக்கொள்ள முடியவில்லை. இரண்டும் இரண்டு விதமாக ஒரே நஜீபின் வாழ்வை, வாழ்வின் வெப்பத்தைக் கடத்துகின்றன.
கடவுளின் சொந்த நகரமாக நம் மனக்கண்களில் பதிவான ஒரு பசும்நிலத்தில் வாழ்ந்தவன் நஜீப். நீருக்குள்ளேயே வாழ்ந்தவன். வாழ்வின் பசுமை கொள்ளும் உறவுகளின் ஈரத்துக்குள் வாழ்ந்த அவனைக் காலம் எனும் பூதம் வாய் பிளந்து பாலை வெப்பம் தகிக்கிற, எலும்புத் தூளும் சாணமும் கலந்தது போன்ற நெடிபரவுகிற காட்டு அரபிகளின் கூடாரங்களுக்கு அருகில் இறக்கிவிடுகிறது. சொந்த நிலத்தின் பசுமையும், அவனைக் கபளீகரம் செய்துகொண்ட மணல்வெளியின் வெறுமையும் திரையில் மிகச் செறிவாகப் பதிவாகியிருக்கின்றன. எல்லா உணர்வுகளையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வதற்கு ஆடுகளைத் தவிர்த்த நாதியற்ற இருப்பில் நஜீபின் அச்சம், துயரம், ஏக்கம், அன்பு, காமம், விடுதலை வேட்கை, பொறாமை, குரூரம் என ஓர் அடிமையின் சூழலுக்கேற்ற உணர்வுறுப்புகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. திரைப்படம் எல்லாவற்றையும் பேசிவிடவில்லை. பிரதியை அப்படியே திரைப்படுத்த முடியாத போதிலும் பிரதியிலுள்ள நஜீபின் உணர்வுகளுக்கு பிருத்வி முகம் கொடுத்திருக்கிறார்.
மலையாள தேசத்தின் கண்களில் அன்றைக்கும் இன்றைக்கும் தம் வறுமையைத் துடைத்தழித்து வளமையைக் கொடுக்கப்போகிற ஜீனியாக உருவெடுத்து நிற்கும் அரபு தேசத்தின் கொடும்பிடிக்குள் நஜீபோடு சிக்கிக்கொண்ட மற்றுமொரு பாவப்பட்ட ஜீவன் ஹக்கீம். திரையில் குழந்தைமை மாறாத அந்த இளைஞனின் முகம் அதிகமாகத் தொந்தரவு செய்யக்கூடியதாக இருந்தது. அரபுலகைப் பார்க்கப் போகும் ஆர்வம் மின்னும் அவனுடைய கண்கள், பாலைவனத்தில் அவன் திரும்ப நஜீபைச் சந்திக்கிற தருணத்தில்கூட அந்தக் கண்கள் மீட்சிக்கான துறுதுறுப்போடு ஒளிர்கின்றன. மணற்கடலில் துளி நீருக்கு ஒடிக்களைத்த ஹக்கீம், ஒட்டகத்தின் பெரிய உடலையே எலும்பாகத் துப்பி வைத்த அந்தச் சூனியவெளி கண்டு மிரண்டபடி ஓடிவருகிறபோதும் மணல் அள்ளித் தின்று இரத்தச் சிவப்பேறிய போதுமான அவன் கண்கள் மனதைக் காந்துகின்றன.
நஜீபையும் ஹக்கீமையும் விழுங்கிக்கொண்ட மர்மங்கள் நிறைந்த, கரைகளே தென்படாத அந்த மணல்வெளியில் கண்ணுக்குத் தெரியும் ஒரே பசுமையாய் இபுராஹிம் கதிரி இருக்கிறான். திரையில் குட்டைக்கு அருகில் போத்தலை வாயில் வைத்து இசைத்து வரும் காட்சியில் அவனொரு தேவதூதனாய் நிறைகிறான். இறைவன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை நஜீபுக்கு அங்கே வேண்டுவதற்கும் கேட்பதற்கும் சபிப்பதற்கும் ஒரு துணைமை. வறண்ட நிலவெளியில் நஜீபின் நம்பிக்கைக்குள் ஈரம் சேர்க்கிறது ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணி. ‘பெரியோனே ரஹ்மானே’ பாடல் நஜீபின் மீட்சிக்கான எல்லோரின் வேண்டுதலாகவும் உயிர் உருக்குகிறது.
நஜீப் வாழ்வைக் கலைநயம் குன்றாமல் ஆவணப்படுத்திய பென் யாமின், (மொழிபெயர்ப்பில் சில இடறல்கள் இருந்த போதிலும்) தமிழ்ப்படுத்திய விலாசினி, காட்சிப்படுத்தியதில் வெற்றி கண்ட திரைக்குழுவினர் யாவரும் பாராட்டுதலுக்குரியோர்.
மஸாராவிற்குள் சிறைப்படுத்தப்பட்ட விடுதலை வேட்கை
ஒருநாள் கடப்பதும் பெரும்பாடு என்ற அடிமை வாழ்வில் நஜீப், மூன்று வருடங்கள், நான்கு மாதங்கள், ஒன்பது நாட்களைக் கடந்திருக்கிறான். நஜீப் அடிமையாக்கப்பட்டதும், மீண்டுவந்த பாதையும் வாசித்தபோது இதற்கு முன் வாசித்த ‘கானகத்தின் குரல்’ பக்-கின் பயணமும், ‘யூதாஸின் நற்செய்தி’ பிரேமாவின் பயணமும் நினைவுக்கு வந்தன. அடிமைப்படுத்தப்படும் அதிகாரத்திலிருந்தே சுதந்திரத்திற்கான வேட்கையும் பிறக்கிற முறைமையில் மூன்று பிரதிகளும் ஒன்று போலிருக்கின்றன.
ஜான் லண்டனின் ‘கானகத்தின் குரல்’ நாவலில் சிவப்பு அங்கிக்காரன் அதிகாரப் பிரம்பு வழி அடிமைப்படுத்துகிற பக் நாயின் நெடுந்தொலைவுப் பயணமும், கே.ஆர். மீராவின் ‘யூதாஸின் நற்செய்தி’ நாவலில் தந்தையின் அதிகார வன்பிடிக்குள் சிக்கித்தவித்த பிரேமாவின் பதினைந்தாண்டுகள் தேடலும் உணர்த்தியதைப் போலவே ஆடு ஜீவிதம் நஜீபின் பயணமும் விடுதலையின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.
“பின்நாளில் சரியான தருணங்கள் அமைந்தால் மனிதனின் மோசமான பயத்தைக்கூட வலுக்கட்டாயமாகப் போக்கமுடியும் என்பதை நிறைய சந்தர்ப்பங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தன” என்று நஜீப் சொல்வதைப்போல அவனின் அரபுலக வாழ்வில், முதல்நாள் அர்பாப் உடனான பயணத்தில் வண்டுபோல அவனைக் கவ்விக்கொண்ட பெயர் தெரியாத பயத்தை, மஸாராவிற்கு அருகில் அவன் கண்ட பயங்கர உருவம் குறித்த பயத்தை, ஆடுகளை, ஒட்டகங்களை நெருங்குகிற பயத்தை அவன் கடந்திருக்கிறான். எந்த ஒரு ஒட்டகத்திடமும் இருக்க முடியாத வெறியுடன் கூர்மையான விழிகளுடன் பின்தொடரும் பயங்கர அர்பாபிடமிருந்த பயத்தையும் அந்த அனுபவத்தினூடாகத் தான் நஜீப் கடந்திருக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல முதலாளித்துவம் தனக்கான சவக்குழியையும் தானே தோண்டிக் கொள்கிறது.
அடிமைப்பட்டுக் கிடக்கின்ற எந்த உயிரினமும் சுதந்திரத்திற்கு வேட்கை கொள்கின்றது. அடிமை உயிர்கள் தம்மை விடுவித்துக் கொள்கின்ற வாய்ப்பிற்காகக் கண்விழித்துக் காத்திருக்கின்றன. ‘மஸாராவிற்குள் (பட்டிக்குள்) ஆடுகள்’ என்பதே பழக்கப்படுத்தலின் வழி அடிமையாக்கப்பட்ட வழிமுறை என்பதை வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் சிதறுண்ட ஆடுகள் உணர்த்துகின்றன. மீளவும் நஜீபின் பரிதாபத்திற்குரிய கரங்களைக் கொண்டு அர்பாப் அவற்றைப் பிடித்து வருகிறான். அடிமைப்படுத்தப்பட்ட ஓர் ஆட்டின் வாழ்வை ஜீவிக்கும் நஜீபின் உயிர் விடுதலைக்கான துடிப்பில் இயங்கியிருக்கிறது. நஜீபின் கண்காணிப்பிலிருந்து தப்பி ஓடும் ஆடுகள்போல நஜீப், அர்பாபின் கவனக்குறைவுக்குக் காத்திருப்பதிலிருந்தும் சிறிய சிறிய மீறல்களிலிருந்தும் சுதந்திரத்திற்கான அவனின் தவிப்பை உணர முடியும். மழை பெய்த இரவில் அர்பாப் அஞ்சிக்கிடந்தபோதின் நஜீபின் செயல் அப்படியான ஒன்றுதான்.
“அன்றிரவு ஒரு விஷயம் செய்வதற்கான தேவையை உணர்ந்தேன். அடிமைத்தனத்தை மீறும் ஒன்று, அர்பாபைக் கோபப்படுத்தும் ஒன்று. எதுவும் செய்யவில்லை என்றால் அந்த அற்புத சுதந்திர நொடிகளை வீணடித்ததாகிவிடும்.”
அர்பாபின் அழுக்கேறிய கண்காணிப்பிலிருந்து சற்று விடுபட்டு ஹக்கீமைக் காணச் செல்வதாக அந்த இரவின் மீறல் இருக்கிறது. பிறகு தொடர்ந்த இந்த மீறல் நஜீப், வனாந்தர மணல்வெளியைக் கடப்பதற்கான பாதையை வகுக்கிறது. அந்தப் பாதையைக் கடந்து வருகையில் நஜீப் சில வருடங்களை, ஹக்கீமை, நபில் ஆட்டுக்குட்டியை, தன் பழைய தோற்றத்தை, அம்மாவை, அரபு நாட்டிற்குள் வரும்போது எடுத்துவந்த நம்பிக்கை முதலான எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான். இழக்காது பாதுகாத்தது விலை மதிப்பில்லாத அவனின் உயிர் மட்டுமே. கடல் உப்பை விடவும் அரித்தழிக்கக்கூடிய பாலைக் காற்றிலிருந்து எஞ்சிய உயிரையும் உடலையும் இழுத்துக்கொண்டு வந்த நஜீபின் இந்தத் துன்பியல் கதையை வாசித்து முடித்தபோது ஒருமுறை மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றினேன். அழுக்கேறிய நாற்றமெடுக்கும் அடக்குமுறைக்குள்ளிருந்து வெளியேறி சுதந்திரத்தின் வாசனையை உணரத் தலைப்பட்டதைப்போல.
கவிஞர் தேவதச்சனின் “என் வாலிபத்திலேயே அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்றிருக்கிறது என்பதையும் அது சுதந்திரம் என்பதையும் கண்டுபிடித்தேன். சுதந்திரமாக இருந்தால் மட்டுமே அன்புடனோ அன்பில்லாமலோ இருக்க முடியும்” என்ற வரிகள் சுதந்திரம் மனித பண்புநலன்களின் அடிப்படையாக இருப்பதை உணர்த்துகின்றன.
தேவதச்சன் அன்புக்கும் மேலான உணர்வாக சுதந்திரத்தைக் குறிப்பதுபோல நஜீப் சுதந்திரத்தைக் குறிக்கும் சொல்லாட்சியும் இங்கு கவனப்படுத்தத்தக்கது. மேலது கூற்றில் தனக்குக் கிடைத்த சில நொடிகளை “அற்புத சுதந்திர நொடிகள்” எனக் குறிக்கிறான். மணல் குன்றுகளால் சூழப்பட்ட உலகில் மீட்சிக்கான பாதையே தென்படாத சூழலில் ஓடி ஓடிக் களைத்து நீருக்கு ஏங்கி அது கிடைத்த பொழுதில் நஜீபின் கூற்று, “நீர். அது எத்தனை மகத்துவமானது” என்பதாக இருக்கிறது. அனலருந்தும் காலத்தின் நீரின் இன்றியமையாமைபோல அடிமைகளின் வாழ்வில் சுதந்திரத்தின் தேவையும் மகத்தானது என்பதை நஜீபின் வரிகளினூடாகவே புரிந்துகொள்ள முடியும்.
பட்டியாக இருந்தாலும், பாலைவெளியாக இருந்தாலும், உலகின்/ சமூகத்தின் எந்த அதிகார நிறுவனமாக/ அமைப்பாக இருந்தாலும் அடக்குமுறையின் நெரிசலால் உயிர்களுக்கு மூச்சு முட்டுகிறது. சுதந்திரத்தைச் சுவாசிப்பதற்கான வாய்ப்புகளுக்கு உயிர்கள் காத்துக்கிடக்கின்றன. பகத்சிங் சொன்னதைப் போல சுதந்திரம் யாருக்கும் மறுக்கப்பட முடியாத பிறப்புரிமைதானே!