சந்தூக்கில் வைக்கப்பட்ட ஜனாஸா ஒன்று மையத்தங் கொல்லையில் தனித்திருக்க.. “இங்கு மனிதர்களிடத்தில் சொர்க்கத்திற்குரியவர் யார்? நரகத்திற்குரியவர் யார்? என்பதைப் பற்றிய விவாதமே மேலோங்கி இருக்கிறது. முதலில் இந்த பூமிக்குரியவர்கள் யார்? என்பது பற்றிய பிரக்ஞையே இல்லாமலிருக்கிறார்கள்.” – என்ற தனது பொன்மொழியைத் தாங்கி, வாசிக்கும் மனங்களை எல்லாம் புயலெனத் தாக்கி அசைத்துப் போட்டுக் கொண்டே கபரஸ்தானத்திற்குள் நுழைந்து பயணிக்கிறது எழுத்தாளுனர். சகோ. ஆமினா முஹம்மதுவின் பேனா.
அவரது பேனாவின் வயிற்றுக்குள் குருதி நிரப்பி கதைப்பதுபோல் அத்துனை உயிரோட்டமாய் வியாபித்திருக்கிறது சொற்கள். அந்த சொற்களுக்கும் சதை வளர்ந்து, நரம்புகள் முளைத்து உள்ளத்துள் ஊடாடி பாய்வதுபோன்ற ஒரு பிரக்ஞயை ஏற்படுத்துகிறது கதைகள் போகும் பாங்கு.
திரையில் கதாநாயகனின் அறிமுகம் ஒரு அமர்க்களத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இங்கு நான் குறிப்பிட இருப்பது. ‘உங்களுடன் ஒரு கோப்பை’ என உற்சாக பானம் பருகத் தந்து நமக்கு புத்தக அறிமுகம் வாசிக்கும் தோழர். சம்சுதீன் ஹீரா.
ஒரு ஹீரோவைப் போல் எண்ட்ரி ஒன்றைத் தந்து தமது சொற்பந்துகளால் வாசிக்கும் நெஞ்சங்களுக்குள் பல பௌண்டரிகளை விளாசி நல்ல துவக்கம் கொடுத்திருக்கிறார். அவரது எழுத்துகள் இந்த கதை தொகுப்பிற்கு உற்சாக கானம் இசைத்து வாசகர்களை வரவேற்கிறது. நல்ல தேர்வு.
பொதுவாக மரணம் என்பதை சொல்வதற்கும்கூட மனதானது சிறிது சலனப்படும். ஆனால், அந்த மரணம் பற்றிய பேசு பொருளையே தனது தொகுப்பு முழுதும் பூசித் தெளித்திருக்கும் சகோ. ஆமினாவின் முற்போக்கான சிந்தனைக்கு பாராட்டுகள்.
மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியிருக்கும் இந்த தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதைக்கருவும் ஒரு உரு கொண்டு உள்ளத்தில் நடமாடுவதைப் போல் உணரவைக்கிறது. ஒரு மரணம், அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், தர்க்கங்கள், ஏக்கங்கள், அச்சங்கள், எச்சங்கள். ரணங்கள், வாதைகள் என மானுடத்தின் அத்துணை குணநலன்களையும் ஒவ்வொன்றாக உருவி ஒவ்வொரு கதைக்குள்ளும் உலவ விட்டு நமது உள்ளங்களில் செருகிச் செல்கின்றார்.
தாம் ஒரு பெண்ணியவாதியாக நின்று பெண்புலன்களின் அத்துணை உள்ளக் குவியல்களையும், உணர்வுக் குமிழ்களையும், பெண்ணுடலின், பெண்ணுணர்வின் அக கட்டுமான செறிவுகளையும் நுணுகி அவர்தரும் எழுத்துகள் யாவும் ஒரு பேரிரைச்சலையும் பெரு உராய்வையும் உள்ளத்துள் செலுத்தி உணர்புலன்களின் வழியே ஊடாடவிட்டு செரித்துவிடாமல், வாசிக்கும் நெஞ்சத்துள் சேமித்துக் கொள்ள வைக்கிறார்.
‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ எனும் பழமொழிக்கேற்ப இந்த புத்தகத்தினுள் புதைந்திருக்கும் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் அது இப்புத்தகத்தை பதம் காண வைக்கிறது.
சகோ. ஆமினாவின் மொழியாடலில் உலவும் சொல் வழக்காற்று அழகியல் பெருக்கெடுத்து கதைகளுக்கெல்லாம் சதை முளைத்து உயிரோட்டம் பெறுகிறது. கதைகளின் ஜீவன் உருக்குலையாமல் உள்ளத்தில் உருக்கொண்டு நடமாடி உணர்வு நரம்புகளுள் உணர்ச்சிப்பிரவாகம் எடுக்கச் செய்கிறது.
இக்கதைகளினூடே அறம்பிறழ் சமூகத்தை நோக்கி, தமது சில வினா வில்லிலிருந்து புறப்படும் சொல் அம்புகளைச் சொல்லாயுதமாக பயன்படுத்தி வாசிக்கும் இருதயங்களுக்குள் வசமாக இறக்குகிறார்.
எஸ்.ரா அவர்கள் கூறுவதுபோல் “உலகில் ஒரு மனிதனுக்கு அதி உன்னதமான மற்றும் பாதுகாப்பானதொரு இடம் உண்டென்றால் அது அவர்தம் சொந்த வீடாகத் தான் இருக்கமுடியும்” அப்படியான ஒரு சொந்தவீடே அதுவும் தமது உற்றாராலேயே சூனியமாக மாறும்போது வேறு போக்கிடம் எதுவாக முடியும்? அப்படியொரு இருட்சிறைக்குள் அடைபட்டு சொந்த வீட்டிலேயே சிறைப்பட்டிருக்கும் பஷீராவின் மீதுள்ள கட்டற்ற கரிசனத்தால் “இறந்த கணவனை நினைத்தே சொச்ச வாழ்க்கையை கழிப்பது புனிதம் என எப்படி மக்கள் தங்கள் கலாச்சாரத்தையே மாற்றியிருப்பார்கள்?” எனும் கேள்வியை தொடுத்து சமுகத்தின் எதேச்சதிகார மனநிலையை கிழித்தெடுக்கிறார்.
அதுபோன்றே அம்மா கணக்கு கதையில் வரும் பாத்துக்கனி பாத்திரத்தை பச்சாதாபப் படுத்த அவர் தொடுக்கும் “வரிசையாக நிறைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க வைத்தலிலும் ஏதேனும் அரசியல் அக்கால வெற்று ஆண்களுக்கும் இருக்கும் போலும்” எனும் கேள்வியோடு தொடர்ந்து வரும் “அதிகப் பிள்ளைகளைப் பெற்றவளை மறுமணம் புரிய எந்த ஆண்தான் முன்வருவான்?” எனும் அவரது குமுறல் படிக்கும் நெஞ்சங்களுக்குள் பாத்துக்கனியை அக்கறைப் படுத்துகிறது.
பொதுவாக “தீதார்’ எனும் சொல்வழக்கு தென்தமிழக இஸ்லாமியரிடையே புழக்கத்தில் இல்லை. மேலும் இதே சொல் சகோ. ஜரீனா ஜமாலின் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருந்ததால் இச்சொல்லின் வேரினைத் தேடியபோதுதான் அதன் பொருள் புரிந்தது.
உள்ளத்தின் உச்ச கொதி நிலையில் ஒருவர் உதிர்க்கும் “எனது தீதார்கூட உனக்கு ஆகாது” எனும் கடுஞ்சொல்லின் தகிப்பு அதன் சூடு தணியாமல் எவ்வாறு மொத்தக் குடும்பத்திலும் தகிக்கச் செய்விக்கிறது. என்பதனை தனது சொந்த தந்தையின் மௌத்தில்கூட மூன்றாம் நபராக அதுவும் உடன் பிறப்புகளாலேயே கிடத்தப் பட்டிருக்கும் ஜைத்தூன் பாத்திரம் மூலம் காட்சிப்படுத்துகிறார்.
பொதுவாக புகைப்படங்களென்பது ஒருவரின் கடந்துவிட்ட காலங்களை நெஞ்சை விட்டகலாமல் பத்திரப்படுத்தும் பெட்டகமாக விளங்குகிறது. அப்படிப்பட்ட புகைப்படத்தில் நமக்கு தீங்கோ, துன்பமோ புரிந்தவர் இடம் பெற்றிருந்தால் பார்க்கும் கண்கள் தகிக்க உள்ளம் குமுறியடங்கும் அல்லவா?. அப்படி மரணித்த ஒருவரை புகைப்படத்தில் காணும் சாராவின் மன பிம்பத்தை “தீங்கிழைத்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை எல்லாம் ஏன் இப்படி போதையூட்டி மனிதத்தை கொல்கிறது” என்று மனிதத்தின் மீதான தனலையும், தவிப்பையும் ஒருசேர ஓரிழையில் சொல்வதென்பது ஒரு சொற்சிறப்பு.
சகோ. ஆமினா கொண்டிருக்கும் பேனாமுனையின் கூர்மைக்கு மற்றுமொரு உதாரணம் “ஓர் இறப்பு.. அது இழிவான ஒருவனைக்கூட அவனது குற்றங்களிலிருந்து அவனை எளிதாக விடுவித்து, அவனுக்கு புனிதப் பட்டத்தை ஆடையாக அணிவித்து விடுகிறது” என அவர் வைக்கும் முறைப்பாடு இவ்வுலக மனித மனங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை எள்ளிச் சொல்கிறது.
மனிதனுக்கு உண்டாகும் பெரும் வாதைகளில் நோயென்பது ஒரு பெரும் உபாதை அதனோடு உள்ள உபாதையும் சேர்த்துக் கொண்டால் அவனது மொத்த இயங்குதலும் தடைப்படும்தானே?. “அப்படி “நோயாளியிடம் இருந்து வெளிப்படும் மணமே அவர் எவ்வாறு அவரது வீட்டினரால் கவனித்துக் கொள்ளப்படுகிறார் என்பதை அவரைப் பார்க்க வருவோருக்குச் சொல்லிவிடும்.” என்றும், “நலம் விசாரிக்க வருவோரின் முகத்தில் ஏற்படும் சலனங்கள் படுக்கையில் இருப்போரின் மரண ரணத்தை அவருக்கு சமீபத்தில் கொண்டுவரும் தானே?” என்றும் வீடென்ற உயிரில் எனும் கதையில் வரும் அவரது சொற்கள் சமூகத்தின் நெஞ்சினைக் கிழித்து நோயுற்றோர் மீதான அக்கறையை உரத்துப் பதிக்கிறது.
வஸிய்யத் எனும் மரண சாசனம் எத்துனை வலுவானது, வாழ்நாள் முழுதும் தன்னை சவமாக்கி தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு வலியை தனது வாழ்வின் இறுதி நொடியில் நெஞ்சை விட்டிறக்கி தமக்கு நெருங்கியவரிடத்தில் இறக்கி வைத்துப் இருக்கும் தமது ரூஹை இலேசாக்கிச் செல்ல ஒவ்வொரு மனிதனும் பிரயத்தனப்படுவான். அப்படி செய்யப்படும் வஸிய்யத்தை ஏந்தும் செவிகள் தனக்கு சாதகமில்லாத ஒன்றை அடுத்த காதுகளுக்கு கடத்த அதன் மரணம் வரை நீண்டு விடுகிறது என்பதை மனித மனங்களில் சடுகுடு ஆடும் சுயநலப் பேயை வெளிக்கொண்டு வாசிப்பில் அதன் சாசனம் எழுதுகிறார்.
ஒரு பெண்ணின் மனோதிடத்தில் அவள் துணையிடமிருந்து வழங்கப்படும் தொடராதரவு முக்கியத்துவம் வகிக்கிறது. அந்த தொடராதரவு தடைபடும் அல்லது உடைபடும் தருணங்களில் அடைபட்டுக் கொள்ளும் அவளது திடத்தின் அவலநிலையையும், அதுவரை ஆட்படாத இன்மைக்கு தன்னை முழுதாக ஒப்படைத்து தனக்கானவர்களுக்காக அடங்கிச் செல்லும் வெறுமையையும் அப்பட்டமாகச் சொல்லும் இறுதிக் கதையான திட்டமிழந்த ஆறு வரையில் சகோ. ஆமினா’வின் எழுத்துகளின் கூர்மையும், அதன் வீரியமும் வாசிக்கும் நெஞ்சங்களை வசீகரிக்கின்றன.
ஆமினாவுக்கு இருக்கும் சமூக அவதானிப்புகளும், அதனை எழுத்தின் வழியே உரக்கச் சொல்லும் வலிமையும் அவருக்கு இலக்கியத் தளத்தில் புதுப் பாய்ச்சலை ஏற்படுத்தும் சகல சாளரங்களையும் திறந்துவிடும். அந்தச் சாளரங்களின் வழி உட்புகுந்து அவர் பல்வேறு படைப்புகளை எழுத்துலகுக்கு எடுத்தியம்புவார்.
மொத்தத்தில் சலசலத்துச் செல்லும் நதியின் மேற்பரப்பில் திரியும் தன் இரையை அனந்தரமாய் வானத்தில் வட்டமிடும் பட்சியின் கண்களுக்குப் புலப்படாமல் ஒரு சின்ன சிலுப்பலில் நீர்குமிழாய் மேலெழுந்து இரையை நீரினுள் அமிழ்த்தி உண்ணும் மீனின் பசியாற்றலைப்போல் அவ்வளவு நேர்த்தியாய் கதைகளினூடே சொல்லும் சொற்களிலும், தேர்வு செய்த கதைக் களன்களிலும், அதன் கருக்களிலும், புத்தகத்தின் அட்டைப் படத்திலிருந்து முன்னுரை வழங்கியோர் முதல் தலைப்பு வரையில் மிக நுட்பமான, முன்கணிப்புடன் கூடிய நேர்த்தியை கைக்கொண்டிருக்கிறார் ஆமினா.
தொடர்ந்து படைப்புலகில் பல படைப்புகளை தமது படையல்களாக வாசக நெஞ்சங்களுக்கு வாசிக்கத் தருவதற்கு அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துகள்.