About Us

எம் பணி இலக்கியம் பரப்பிக் கிடப்பதே !

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

இங்கு நாங்கள் என்று குறிப்பிடப்படுவது கார்த்திக் அருண், கிருபாசங்கர் என்கிற மூன்று நண்பர்கள்தான். ஆனால் வாசகசாலை என்கிற அமைப்பு உருவாக காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் பாஸ்கர் ராஜா & பார்த்திபன். இவர்கள்தான் நாங்கள் ஒன்றுபடக் காரணமாயிருந்த அந்த முகநூல் குழுமத்தின் நிர்வாகிகளாய் இருந்தவர்கள்.

ஒரு குழுமத்தின் நோக்கம் சிதையாமல், அதை எப்படி வெற்றிகரமாக செயலாக்குவது என்கிற நேர்த்தியை இவர்களிடம்தான் கற்க நேர்ந்தது. பலவிதமான இலக்கிய கள அனுபவங்களை இவர்களால் இலகுவாக பெற நேர்ந்தது.

அந்த அனுபங்கள் ஒன்றை மட்டுமே மூலதனமாக்கி 2012 ல், முகநூலில் ’வாசகசாலை ’ எனும் குழுமத்தை ஆரம்பித்தோம். இலக்கியத்தின் பால் அதிக ஆர்வம் கொண்டோரை நாங்களே தேடியும் இணைத்தோம், காலப்போக்கில் பல இலக்கிய ஆர்வலர்களும் அவர்களாகவே தேடி வந்து தங்களை எங்களது குழுமத்தில் இணைத்தும் கொண்டனர்.

இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்புகள், புது நூல்களைப் பற்றிய அறிமுகங்கள், வாசித்த நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள், இன்ன நூல்கள் எங்கு கிட்டும் என்கிற விவரங்களை தரும் ஒரு குழுமமாக அது வளர்ந்த வண்ணமிருந்தது.

இருந்தும் எங்களின் கனவு, வாசகசாலை குழுமமென்பது தமிழ் இலக்கியத்தை வெறும் கணினித் திரைகளில் வாசிக்கச் செய்வதோடு ஓய்ந்துவிடக் கூடாது, மாறாக நேரடிக் களத்தில் குதித்து, பல இலக்கிய விழாக்களையும் முன்னெடுத்து நடத்திக் காட்ட வேண்டுமென்பதாகவே இருந்தது, அதற்கான நாளும் கனிந்தது.

அதற்கு முன்னதாக எங்களுக்குள் நாங்கள், வாசகசாலை இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக, சில நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், நோக்கங்களையும் விவாதித்து, மூளையில் பதிந்து வைத்துக் கொண்டோம். இன்றுவரை அதிலிருந்து சிறிதும் நெகிழ்ந்து விடாமலேயே கூட்டங்கள் நடத்திக் கொண்டும் வருகிறோம்.

வாத்தியார் சுஜாதா, எங்கள் குழுமத்தில் கிட்டத்தட்ட அனைவருக்குமே பிடித்த ஒரு பேராளுமை. அவர் எழுத்து நடையில் அறிவியல் புனைவை எழுதிய ஓர் எழுத்தாளரின் ஆக்கத்தை வாசிக்க நேர்ந்தது. அப் படைப்பையே முதல் கள நிகழ்வுக்கு பேசு பொருளாக எடுக்க ஒரு மனதாகத் தீர்மானித்தோம்.

வாசகசாலை இலக்கியக் கூட்டத்தில் படைப்பாளி பிரதான விருந்தினர். எங்கள் வாசகசாலையின் பிதாமகர் ஒருவர் துவக்க உரை நிகழ்த்தி நூலையும், ஆசிரியரையும் அறிமுகப்படுத்திவிட வேண்டும். வாசகர் பார்வை என்று பேச பிரியப்படும் எவரொருவரையும் ஓர் ஆண், ஒரு பெண் என்கிற ரீதியில் தீர்மானித்து, நிர்ணயம் செய்துவிட வேண்டும். பிறகு அப்படைப்பை வாசித்துப் பேச விருப்பமுள்ள இலக்கிய ஆளுமைகளை அழைத்து பேருரை ஆற்றச் செய்ய வேண்டும். ஆசிரியரின் ஏற்புரை முடிந்ததும், கலந்து கொண்ட வாசகர்களை வைத்து விமர்சனங்கள், கேள்விகள் கேட்கச் செய்ய வேண்டும். இப்படியாகத்தான் எங்கள் திட்டமிடல் இருந்தது.

அதன்படி, எழுத்தாளர் க.சுதாகர் (சுதாகர் கஸ்தூரி) அவர்களின் இரண்டாவது நாவலான ‘ 7.83 ஹெர்ட்ஸ் ‘ எனும் அறிவியல் புனைவு நாவலை எங்களின் வாசகசாலையின் முதல் நிகழ்வுக்குத் தேர்வு செய்தோம்.

கனிந்த அந்த நாள் 14 டிசம்பர் 2014. ஒரு பொன்னான ஞாயிறு காலை. திருவான்மியூர் பனுவல் நூல் நிலைய சிற்றரங்கில் வாசகர்களுடைய பேராதரவுடன், அரங்கு நிறைந்த கூட்டமாய் நிகழ்த்திக் காட்டினோம்.

வாசகசாலையின் பிதாமகர் எழுத்தாளர் மனோஜ் அவர்கள் வாசகசாலை இலட்சினையை வெளியிட்டு, அறிமுக உரையை ஆற்றித் தொடங்கி வைக்க, வாசகப் பார்வையில் தோழர் தமிழ் பிரபாவும், பாரதி செல்வாவும் நல்லுரை தந்தனர். எழுத்தாளுமை மிக்க இரா.முருகன் சிறப்புரை நல்கினார். அறிவியல் கட்டுரைகள் மற்றும் பலருக்கும் தெரியாத உலக மர்மங்கள் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவரும் எங்கள் நல்லாசான் திரு.ராஜ்சிவா அவர்கள் காணொளிக் காட்சியின் மூலம் வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

இவ்வாறாக முதல் கூட்டம் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் அடுத்த மாதக் கூட்டத்தை இன்னமும் சிறப்பாகவும், செவ்வியல் தன்மை கொண்ட படைப்பு அல்லது படைப்பாளி பற்றி பேச வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

ஆனால் இந்த முதல் நிகழ்ச்சியை நடத்தி முடித்தபின்னர்தான், இம் மாதிரி நிகழ்வுகள் நிதி ஆதாரங்களும் பலமாக இருந்தால்தான் சாத்தியம் எனப் புரிந்தது. முதல் நிகழ்வுக்கு மட்டுமல்லாது அடுத்தடுத்து நடந்த மூன்று நிகழ்வுகளுக்கும் முழுச் செலவை தோழர் பார்த்திபனே ஏற்றுக்கொண்டு மொத்தக் குழுவையும் தோளில் சுமந்தார்.

செவ்வியல் படைப்புக்காக நாங்கள் தஞ்சை பிரகாஷ் அவர்களை தேர்வு செய்து, அவர் படைப்புகள் பற்றிப் பேச சிறப்பு ஆளுமைகளான கவிஞர் பரமேசுவரி, எழுத்தாளர் திரு.லக்‌ஷ்மி சரவணக்குமார் அவர்களை அழைத்தோம். அவர்களும் அந்நிகழ்வை மிகச் சிறப்பாக்கித் தந்தனர்.

அதன் பின் எங்கள் ஓட்டம் எந்த மாதமும் நிற்கவில்லை. தொடர்ந்து நிகழ்த்தினோம். மிக அரிய படைப்பாளிகளாக இருப்பார்கள், ஆனால் அவர்களைப் பற்றி பரவலான வாசிப்பனுபவம் இருக்கும் ஆட்களுக்குக் கூடத் தெரிந்திருக்காது. இப்படிப்பட்ட படைப்பாளிகளான ப்ரான்சிஸ் கிருபா, பா.வெங்கடேசன் போன்றோரின் படைப்புகளான முறையே கன்னி, ராஜன் மகள் போன்ற படைப்புகளைப் பற்றியும் பேசினோம். உண்மையில் இது பெரும் வரவேற்பையும், எங்கள் நற்மதிப்பையும் மேலும் உயர்த்தியது.

ஒற்றைப் பரிமாணத்தோடு மிளிராமல், அதை இரண்டு, மூன்று என்று எங்கள் இலக்கை அதிகரித்துக் கொண்டே போனோம். முழு நாள் இலக்கிய அரங்கு ஒன்றை நிகழ்த்தினோம். நான்கு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு பல ஆளுமைகளைப் பங்கு பெறச் செய்தோம். கலந்து கொண்ட வாசகர்களுக்கு மதிய உணவு, தேநீர் போன்ற எல்லா வசதிகளையும் விலையில்லாமல் செய்துக் கொடுத்தோம்.

ஆமாம். செலவுகள் பெருகிக்கொண்டே போனது. எங்களுக்காக பாசத்துடன் வெளியூரிலிருந்து வரும் ஆளுமைகளுக்காக போக்குவரத்து படியை நாங்கள் நிர்ணயித்து வழங்கி வந்தோம். உண்மையில் அது சொற்பத் தொகை. அவர்களுடைய பொன்னான நேரத்துக்கு இன்னமும் உரிய விலையைத் தந்திருக்க வேண்டும். இன்றில்லாவிடினும் நிச்சயம் எதிர்காலத்தில் தரவேண்டும் என்கிற வைராக்கியத்துடன், தோழர் பார்த்திபன் தோளிலிருந்து பாரத்தை இறக்கி, முப்பது பேர் கொண்ட ஒரு பொதுக்குழுவை உருவாக்கி, ஒவ்வொரு மாதமும் சொற்பத் தொகைகளை நன்கொடைகளாகத் திரட்டி, செலவுகளை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தோம்.

பணம் கையில் சற்றே புரள ஆரம்பிக்க, மாபெரும் நிறுவனங்கள் மட்டுமே சிந்தித்த, படைப்புகளுக்கு விருதுகள் வழங்குவோம் என அதி பயங்கரச் சுழல்கள் மிக்க ஆபத்தான ஆற்றில் குதித்தோம். அதற்குச் சாக்காக எங்களுக்கு முதல் ஆண்டுவிழாவும் இருந்தது.

மூன்று பிரிவுகளின் கீழ், புத்தம் புது நேரடி தமிழ் படைப்புகளாய்த் தேர்வு செய்து, அவர்களுக்கு விருதும், பணமுடிப்பும் தருவது என களத்தில் குதித்தோம். தேர்வுகளுக்கு என பாரபட்சமில்லாத வாசக நண்பர்களை நடுவர்களாய் நியமித்து படைப்புகளைத் தேர்வு செய்தோம்.

எந்தச் சலசலப்புக்கும் ஆட்படாத படைப்புகளாய் சிறந்த நாவல் மெளத்தின் சாட்சியங்கள் -ஆசிரியர் சம்சுதீன் ஹீரா, சிறந்த சிறுகதைத் தொகுப்பு மரநிறப் பட்டாம்பூச்சிகள் -ஆசிரியர் கார்த்திகை பாண்டியன், சிறந்த கவிதைத் தொகுப்பு ஆகாயத் தோட்டிகள் -ஆசிரியர் பூர்ணா, என்று மூன்று தலைப்புகளில் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தோம்.

பேராளுமைகளான திரு.சாரு நிவேதிதா, கரு.ஆறுமுகத்தமிழன், பாமரன், ஆதவன் தீட்சண்யா, ராஜ சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாய் எங்கள் முதலாமாண்டு நிறைவு விழா நடந்தது. படைப்பாளிகளுக்கு பரிசுகளும் வழங்கிச் சிறப்பித்தோம்.

சலித்திருந்திருக்க வேண்டுமே ? கைக்காசைப் போட்டு, நடத்தும் நிகழ்வுகள் தொய்வில்லாமல் நம்மைச் செலுத்துமா?

உத்வேகம் இன்னும் கூடியது. இலக்கிய மாத இதழ்களைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் சிறுகதைகளைப் பற்றி, மிக எளிமையான முறையில் வாசகர்களே சொல்வது, அது பற்றி கலந்துரையாடுவது…….என ஒரு முயற்சி செய்து பார்த்தோம். அதுதான் “கதையாடல்”.

மயிலை பரிசல் புத்தக நிலையம்தான் கதையாடல் அரங்கு. நாள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை மாலைப் பொழுதுகள்.

இன்றுவரை வெற்றிகரமான நிகழ்வாகவே போய்க்கொண்டிருக்கிறது கதையாடல். இலக்கிய இதழ்களான உயிர்மை, காலச்சுவடு, கணையாழி, அம்ருதா, தடம், தீராநதி, காக்கைச் சிறகினிலே, இன்னும் பலப் பல சிற்றிதழ்களாக மாதம் தலா நான்கு அல்லது ஐந்து என தேர்வு செய்துக்கொண்டு பேசி வருகிறோம்.

அடுத்த பரிமாணமாக ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசை என்கிற தலைப்பில் ஈழ எழுத்தாளர்களுக்காக, அவர்களின் படைப்புகளுக்கு மட்டும் நிகழ்வு நடத்துவது என்று தீர்மானித்து அதன்படி முதல் நிகழ்வாக, எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் பார்த்தினீயம் எனும் நாவலை ஆகஸ்ட் 2016 அன்று வடபழனி ப்யூர் சினிமா புத்தக அரங்கில் வைத்து நிகழ்த்தினோம், சூட்டோடு சூட்டாக அக்டோபரில் இரண்டாவது நிகழ்வாக எழுத்தாளர் சயந்தன் அவர்களின் ஆறா வடு பற்றியும் பேசினோம்.

இந்த பயணத்தில் இதுவரை எங்களுடன் பயணித்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் மேலும் வளர வாழ்த்துங்கள், ஆதரவளியுங்கள், அரிய படைப்பாளிகளை, படைப்புகளை எங்களுக்கு நீங்களும் அறிமுகப்படுத்துங்கள். வாருங்கள் கூடித் தமிழிலக்கியத் தேரிழுப்போம்.