அம்பேத்கர் நகரிலிருந்து வருபவன்

அம்பேத்கர் நகரிலிருந்து வருபவன்

                                                                                                                               சா.திருவாசகம்

வன் பெயரெல்லாம் எனக்குத் தெரியாது; நினைவில்லை. அல்லது சொல்ல விரும்பவில்லை. ரவுடிப் பையன். அவ்வளவுதான்.  அன்றொரு நாள் வகுப்பில் நடந்த அந்த சம்பவத்திலிருந்து அவன் எனக்கு அப்படித்தான் பதிந்து போயிருந்தான்.

அன்றைய தினம் பிஏ இரண்டாமாண்டு பொருளாதார வகுப்பில் நான் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். வகுப்பு முடிவடைய இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. வருகைப் பதிவேட்டை எடுத்து மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அந்த பையன்- அதுதான் அந்த ரவுடிப் பையன் –  அவன் பாட்டிற்கு வகுப்பில் நுழைந்து கடைசி வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டான். வகுப்பினுள்ளே நுழைய அனுமதி கேட்காமலேயே அவன் நுழைந்து விட்டிருந்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வகுப்பு முடிவடையும் நேரமாகி விட்டிருந்ததால் தெலுங்கு வகுப்பிற்காகச் சென்றிருந்த சில மாணவர்கள் அதை முடித்துவிட்டு வருவார்கள் என்பதால் அசட்டையாக இருந்தேன்..

ஆங்கில எழுத்து வரிசைப் படி மாணவர்களின் பெயர்களைக் கூப்பிட ஆரம்பித்தேன். மாணவர்கள் ’யெஸ் சார்’ எனவும் ’பிரசெண்ட் சார்’ எனவும் கலவையாகச் சொல்லிக் கொண்டு வந்தனர். சிலர் ‘உள்ளேன் அய்யா’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டனர்.

‘பரசுராமன்’ – அப்படித்தான் நினைக்கிறேன் – என்கிற பெயரைக் கூப்பிட்டதும். கடைசி வரிசையிலிருந்து எந்த சத்தமும் இல்லாமல் ஒரு கை மட்டும் மேலே உயர்ந்தது. நான் அந்த கைக்குச் சொந்தமானவனைப் பார்த்தேன். சற்று முன்னர் என்னிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் வகுப்பில் நுழைந்து ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டானே, அதே பையன்தான்.

“தம்பி இது தமிழ் வகுப்புக்கான அட்டெண்டெண்ட்ஸ். தெலுங்கு மாணவர்கள் சொல்லத் தேவையில்லை” என்றேன்.

“நானும் தமிழ்தான்“ என்றான் அவன்.

அலட்சியமான அவனுடைய குரல் பிரபலமான ஒரு நடிகரின் சாயலை ஒத்திருந்தது. நான் நிமிர்ந்து அவனுடைய தோற்றத்தைக் கவனித்தேன். நேர்த்தியான முகம். உறுதியான உடல்வாகு. எவ்வளவு நேரம் வாரினாலும் உடனே கலையக் கூடிய கேசம். உடையிலும் உருவத்திலும் பிரபலமான நடிகர் ஒருவரின் சாயலைக் கொண்டுவர மெனக்கெட்டிருந்தான். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்திருந்தான். ஒரு சிறிய ஊரில் இருக்கும் அந்த கல்லூரிக்கும் அவனுடைய கலாட்டாவான உடைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல் ஒரு பெருநகரத்து இளைஞன் போல படு ஸ்டைலாக இருந்தான்.

எல்லாமும் எல்லா இடத்திலும் கிடைத்துவிடக்கூடிய நகரமயமாதலின் தாக்கத்தை தெரிந்திருப்பவன்தான் நான். ஆனாலும் அவனுடைய ஸ்டைலான உடை அப்போது எனக்கு அருவருப்பைத் தந்தது. இதுவே வேறு சமயமாக அல்லது வேறு ஒரு பணிவான மாணவனாக இருக்கும் பட்சத்தில் அவனது உடைத் தேர்வை நானே பாராட்டியிருப்பேன். அவ்வாறு நான் மாணவர்களைப் பாராட்டுவது அவர்களுக்குப் புத்துணர்ச்சியை அளிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், மாணவிகள் மட்டும் என்னிடம் குறைப்பட்டுக் கொள்வார்கள். மாணவிகளின் உடையழகைக் குறித்து நான் எந்த பாராட்டுரையும் சொல்வதில்லை என்று. நான் சிரித்தபடியே நகர்ந்து விடுவேன். யாரோ ஒரு மாணவியிடம் ”உன் சுடிதார் அழகாக இருக்கிறது” என்று நான் சொல்வதைக் கேட்கும் மற்ற பேராசியர்களின் இதயத்துடிப்பும் எண்ணங்களும் சீராக இருக்காது என்பதை அந்த மாணவிகளிடம் நான் எப்படி சொல்லமுடியும்.

அவன் உட்கார்ந்திருந்த பாங்கும் கூட பிரபல நடிகரையே ஒத்திருந்தது.

”அப்போ நீ தெலுங்கு வகுப்பிலிருந்து வரவில்லையா” என்றேன்.

”நாக்கு தெலுகு தெல்லேது சார்”

வகுப்பிலிருந்த மாணவர்கள் சிரித்தார்கள்.  அவர்களின் அந்த சிரிப்பு எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. கோபத்தில் அவனுடைய பெயருக்கு நேராக ஆப்செண்ட் குறியிட்டு விட்டு வகுப்பிலிருந்து கிளம்பி விட்டேன்.

நான் அடுத்ததாக வேறு ஒரு வகுப்பிற்குச் சென்று பாடம் நடத்த ஆரம்பித்தேன். அந்த வகுப்பிற்கு வெளியே இப்படியும் அப்படியுமாக யாரோ நடந்து கொண்டிருப்பது போன்ற அரவம் தெரிந்ததால் பாடத்தை சற்று நிறுத்தி விட்டு வெளியே சென்று பார்த்தேன்.

அதே பையன் தான். முந்தைய வகுப்பில் தரக் குறைவாக நடந்து ஆத்திரமூட்டியவன் தான்.

நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த வகுப்பில் இருக்கும் யாரையோ எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு என்னவாக இருந்துவிட முடியும். யாராவது மாணவியைத்தான் நோட்டமிட வந்திருப்பான். இவனைப் போன்றவர்களுக்கு வேறென்ன உருப்படியான வேலை இருந்து விடப் போகிறது.

அந்த பையனின் செய்கையால் எனக்கும் என்னுடைய வகுப்பிற்கும் எந்தவிதமான தொந்தரவும் இல்லைதான். அவன் பாட்டிற்கு வெளியிலிருந்து பார்த்து விட்டு போகிறான்.  இருந்தாலும், முந்தின வகுப்பில் அவன் பேசியிருந்த அலட்சியமான பதிலும், அதனால் ஏற்பட்டிருந்த அவமானமும், என் நினைவிலிருந்து இன்னும் அகலாதிருந்ததால் அவன் மீதான கோபம் இன்னும் அதிகமானது.

நான் அந்த பையனைப் பார்த்து, ”உனக்கு இப்போ க்ளாஸ் இல்லையா? இங்க ஏன் சுத்திட்டிருக்கே?“ என்று அதட்டலுடன் கேட்டேன்.

”இப்போ இன்னா பண்ணிட்டாங்க? யாரயாச்சிம் எதாச்சிம் டிஸ்டப் பண்ணனா?” என்றான் கொஞ்சமும் பதட்டமில்லாமல்.

அவனுடைய அந்த தொனி எனக்கு பயத்தை அளிப்பதாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், ”தம்பி.. க்ளாஸ் நேரத்துல வெளியில யாரும் சுத்திட்டிருக்கக் கூடாதுன்னு பிரின்சிபால் சார் சொல்லிருக்கார். ஒழுங்கா உன் க்ளாஸ்க்கு போ” என்றேன்

“பிரின்ஸ்பால் கேட்டா நான் பேசிக்கிறேன்.” என்றான் அலட்சியமாக.

இனியும் அவனிடம் பேசுவதில் எந்த பயனுமில்லை என்று நினைத்தபடி, நான் எனது வகுப்பிற்குள் வந்து விட்டேன். நான் இன்னும் அவமானமாக உணர்ந்தேன்.

ஆனால், பழையபடி இயல்பாக பாடம் நடத்த முடியவில்லை. அந்த பையனுடைய அலட்சியமான சொற்கள் மிகுந்த அவமானத்தைத் தந்திருந்தன. பிரின்சிபாலிடம் சொல்லலாமா என யோசித்தேன் இவன் போன்ற பையன்கள் யாரையுமே மதிக்க மாட்டார்கள். எந்த பேராசிரியர்களும் இவனையும் கேட்க மாட்டார்கள்.  நான் பழையபடி பாடத்தைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தேன். ஆனால் என்னுடைய குரல் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது.  உற்சாகமிழந்து எங்கோ கிணற்றுக்குள் ஒலிப்பது போல எனக்கே கேட்டது. அவ்வளவுதான் இனி பாடத்தைத் தொடர்ந்து நடத்து இயலாது என்பதை மனம் ஒப்புக் கொண்டது.

மாணவர்களைப் பார்த்து “நாளைக்குப் பரிட்சை சொல்லியிருந்தேன் இல்லையா… இப்போ அதற்காகப் படியுங்கள். சத்தம் போடாதீர்கள்” என்று செயற்கையாகச் சொல்லி வைத்தேன்.

என்னுடைய இந்த திடீர் முடிவினை எதிர்பார்க்காத மாணவர்களிடையே சற்று சலசலப்பு ஏற்பட்டது.

”சார்.. நமச்சிவாய பதிகத்தை இன்னிக்கு முடிச்சிரலாம்னு சொன்னீங்களே” என்றான் நடுவரிசையிலிருந்த யாரோ ஒரு மாணவன்.

” ஒழுங்கா நான் சொல்றதை செய்யுங்க “ என்றேன் அதட்டலாக.

என் குரலில் எப்போதும் இல்லாத கடுமையும் எரிச்சலும் அந்த பையனை பீதி கொள்ள வைத்து விட்டிருந்தது. அவன் மட்டுமல்ல மொத்த வகுப்பே அமைதியாகி விட்டது.

எனக்கு இன்னும் படபடப்பாக இருந்தது. அந்த ரவுடிப் பையன் பேசிய மரியாதையற்ற சொற்கள் மனம் முழுக்க நிரம்பியிருந்தது.   ச்சே.. எப்படி பேசி விட்டான்.

”சார் ஏதாச்சிம் பிரச்சினையா சார்” என்றான் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மணிகண்டன்.

நான் மணிகண்டனைப் பார்த்தேன், அப்போதிருந்த என் மன நிலைக்கு யாரிடமாவது இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டால் கொஞ்சம் இறுக்கம் கலையும் என்றிருந்தது. ஆனால், இவன் ஒரு மாணவன். இவனிடம்  நான் அவமானப்பட்ட கதையைச் சொன்னால் நாளை இவன் என்னை எப்படி நினைப்பான் என்று யோசித்து “ஒன்றுமில்லை தம்பி“ என்றேன்.

”சார்.. இவனுங்க லோக்கல் பசங்க சார் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க“ என்றான் மணிகண்டன்.. வெளியில் நடமாடிக் கொண்டிருந்த அந்த ரவுடிப் பையனைப் பார்த்து விட்டிருக்கிறான் போலிருக்கிறது.

“லோக்கல் பசங்கன்னா?“

”உள்ளூர் லோக்கல் சார்”

”ஏன் நீயும் கூட உள்ளூர் தானே”

”சார்.. உங்களுக்கு எப்படி சொல்றது…” என்று தயங்கியவன்,  ”அவனுங்க காலனி பசங்க” என்றான்.

”காலனி பசங்களா?”

”ஆமா சார்… இங்க அம்பேத்கர் நகர்னு ஒரு ஏரியா இருக்கு அங்கிருந்து ஒரு கேங் காலேஜிக்கு வராங்க. பஸ்ஸுல ஒரே அமக்களம் பண்ணுவானுங்க நீங்க பாத்துருப்பீங்களே.”

இந்த சிறிய நகரத்திலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த கல்லூரிக்கு பெரும்பாலான மாணவர்கள் பஸ்ஸில்தான் வந்து போகிறார்கள். நானும் கூட பஸ்ஸில்தான் வந்து போகிறேன். ஒன்பது மணி பஸ்சைத் தவற விட்டு விட்டால் அடுத்து ஒன்பதே முக்காலுக்கு வரும் பஸ்ஸில் நிறைய பையன்கள் வருவார்கள். ஒரே பாட்டும் கூத்துமாக ரகளை செய்வார்கள். சில நேரங்களில் கடுமையாக சண்டையும் கூட போட்டுக் கொள்வார்கள். பயங்கரமாக அடித்துக் கொண்டு ரத்தம் ஒழுக ஓடுவதைக் கூடப் பார்த்திருக்கிறேன். அராத்துகள். பஸ்ஸிலிருக்கும் யாரையும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆசிரியர்களாகவே இருந்தாலும் கூட. அதனாலேயே நான் எக்காரணம் கொண்டும் அந்த ஒன்பதே முக்கால் பஸ்ஸில் வர மாட்டேன். அதுவுமின்றி அந்த பஸ் கல்லூரியை வந்தடைய பத்தரை மணிக்கு மேலாகி விடும் என்பதால் வகுப்புக்கு நானும் தாமதமாக போவது போல நேர்ந்து விடும். ஓரிரு முறை அதில் வந்ததில் மணிகண்டன் சொல்வது மாதிரியான பையன்களைப் பார்த்திருக்கிறேன்.

”ம்.. நீ சொல்றது சரிதான்.. அப்பப்போ பாத்துருக்கேன்” என்றேன்.

”இவன் தான் சார் அந்த கேங்குக்கே லீடர்… பாத்து உஷாரா இருங்க”

”என்ன பண்ணுவானுங்க?”

”மொறச்சிக்கிட்டா பொளந்துருவானுங்க சார்… ஒரு முறை ஏதோ சிலைக்கு செருப்பு மாலை போட்டுட்டாங்கன்னு பக்கத்து ஊர்க்காரங்களையே ஓட விட்டு அடிச்சானுங்க….  நீங்க வேற வெளியூருலருந்து வந்து தங்கியிருக்கீங்க’

மணிகண்டன் பிஎஸ்சி கணிதம் இரண்டாமாண்டு மாணவன். இந்த வகுப்பில் மட்டும் என்றில்லாமல் இந்த கல்லூரியிலேயே எனக்குப் பிடித்தமானவன்.  ஆசிரியர் பணியில் ஏற்படும் அயர்ச்சியையும் சுணக்கத்தையும் இப்படியான மாணவர்களே போக்குகிறார்கள். நேற்று என்ன நடத்தினேன் என்பதை மட்டுமல்ல ஒரு நீண்ட விடுமுறைக்குப் பிறகு தொடங்கும் வகுப்பாக இருந்தாலும் கூட, கடைசியாக என்ன பாடம் நடத்தினேன் என்பதை மிகத்துல்லியமாகச் சொல்லுபவன். பாடம் நடத்த ஆரம்பித்து விட்டால் பாடப்புத்தத்தோடு ஒரு பென்சிலை வைத்துக் கொண்டு நான் சொல்லும் விளக்கங்களை ஆர்வத்தோடு குறித்துக் கொள்ளும் பாங்கு எவ்வளவு சோம்பலான ஆசிரியரின் மனசாட்சியையும் உறுத்தச் செய்யும்.   ஆசிரியர் தொழிலை அர்ப்பணிப்புணர்வுடன் செய்ய நினைக்கும் துடிப்பானவர்களுக்கு மணிகண்டன் போன்ற மாணவர்கள் வாய்ப்பது நல்வினை. சமயங்களில் இவன் ஒருவனுக்காகவே நிறைய குறிப்புகள் தயார் செய்து வந்து நடத்த வேண்டியதாக இருக்கிறது.  உண்மையில் இது எனக்குப் பிடித்தமானதாகவும் இருக்கிறது.

சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு சிறிய ஊரில் அமைந்திருக்கும் இந்த அரசுக் கல்லூரியில் நான் மிகச் சமீபத்தில் தான் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். வேலை என்றால் நிரந்தரமான வேலை அல்ல. தற்காலிகமான விரிவுரையாளர் பணி. வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத சம்பளத்தொகை.

ஆனால், அந்த துயரத்தை மறைக்க அல்லது மறக்க மணிகண்டனைப் போன்ற மாணவர்கள் இருக்கிறார்கள். இவனைப் போன்ற மாணவர்களின் ஆர்வத்திற்கு ஈடு கொடுப்பதன் மூலமாக எனக்குள் ஒரு மன மகிழ்வு உண்டாகிறது. என்னை ஒரு புத்திஜீவியாக நான் உணரும் மன மகிழ்ச்சி. இந்த மன மகிழ்வு பெரும் தன்னம்பிக்கையைத் தருகிறது. சுற்றியிருப்பவர்களிடம் ஒரு வியப்பை ஏற்படுத்துகிறது. இவன் ஒரு கல்லூரி ஆசிரியன். கை நிறைய சம்பாத்திப்பவன் என்கிற எண்ணத்தை எதிரிலிருப்பவருக்கு உண்டாக்கும். ஆனால், அவ்வாறெல்லாம் இல்லை என்கிற உண்மை மனசின் ரகசிய மூலையில் இருந்து என்னைப் பரிகசிக்கும்.

மணிகண்டன் தொடர்ந்து சந்தேகங்கள் கேட்பவனாக இருந்தான். அந்த சந்தேகங்கள் பாடம் தொடர்பானதாக மட்டுமே இல்லை. சமூகம், அரசியல், திரைப்படங்கள் குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் அவனுக்கு இருக்கின்றன. எனக்கு வியப்பாக இருக்கும். இந்த சிறிய ஊரில் இருந்து கொண்டு எப்படி இவனுக்குள் இவ்வளவு கேள்விகள்.

எனக்கும் அவனுடன் பேசுவதற்குப் பிடித்திருந்தது. வகுப்பு நேரம் மட்டுமின்றி ஓய்வாக இருக்கும் போதும் என்னைச் சுற்றியே வருபவனாக இருந்தான். உண்மையில் எனக்கு அவனொரு அன்புத் தொல்லையாகத்தான் இருந்தான். ஆனால், இவனுக்கு பதிலாக மாணவிகள் யாரேனும் இப்படியாகக் கேள்விகள் கேட்டு நட்பாக இருந்தால் இன்னும் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் சில நேரங்களில் தோன்றுவதுண்டு.

அந்த ரவுடிப் பையனால் ஏற்பட்டிருந்த அவமானம் மிகுந்த மனச்சோர்வைத் தந்திருந்தது. அதை மணிகண்டனிடம் பகிர்ந்து கொண்டால் அந்தச் சோர்வு சற்றேனும் குறையலாம் என்று தோன்றியது. ஆனால் அவனுடைய ஆதர்ச ஹீரோவான என் மீது அவன் கொண்டுள்ள மரியாதை குறைந்து விடுமோ என்கிற தயக்கத்தால் சொல்லாமலே விட்டு விட்டேன். போகட்டும்.

தற்கடுத்த நாட்களில் அந்த ரவுடிப் பையனைப் பேருந்திலும் கல்லூரி வளாகத்திற்குள்ளும் எப்போதாவது தான் பார்க்க நேர்ந்தது. அவன் மாதத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ தான் கல்லூரிக்கு வரும் வகையறா போலிருக்கிறது. சமயங்களில் ஒரு கருப்பு வண்ண பல்ஸர் பைக்கில் அமர்ந்து பேருந்து நிலையத்திலும் பைபாஸ் சாலைகளிலும் ஸ்டைலாக வலம் வந்து கொண்டிருப்பான். இவனுக்கெல்லாம் எப்படியோ பைக் வாங்கித் தந்துவிடுகிறார்கள்.  அந்த பையன் என்னை அவ்வளவு தீவிரமாக கவனிப்பது போலெல்லாம் தெரியவில்லை. ஆனால், எனக்கோ அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவித வன்மம் மெலிதாக எரியத் தொடங்கியது.

ருவத் தேர்வுகள் தொடங்கி விட்டிருந்தன.

தேர்வுகள் தொடங்கி விட்டால் நான் குஷியாகி விடுவேன். காரணம் தேர்வுக் கண்காணிப்பாளர் பணி. அது எனக்குப் பிடித்தமான வேலை தான் என்றாலும், குஷிக்கான காரணம் அது மட்டுமே அல்ல. தேர்வுக் கண்காணிப்பாளர் பணிக்கு பணம் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மையான காரணம். ஐம்பத்தெட்டு ரூபாய்.  தற்காலிக விரிவுரையாளரான எனக்கு அந்த ஐம்பத்தெட்டு ரூபாய் மிகப் பெரிய பொற்கிழி.  அதைத் தவறவே விட மாட்டேன்.

இன்னும் சொல்லப்போனால் மற்ற நிரந்தர பேராசிரியர்களின் தேர்வுப் பணிகளையும் கூட வலிந்து கேட்டு வாங்கிக் கொள்வேன். மாதம் ஒரு லட்சத்திற்கு அருகில் சம்பளம் பெறும் அந்த பேராசிரியர்களும் எங்களுடைய சொற்ப சம்பளத்தைக் கருத்தில் கொண்டு தேர்வுப் பணியினைத் தாராளமாகத் தானம் தந்து விடுவார்கள்.  ஒரு வேளை ஐம்பத்தெட்டு ரூபாய் என்கிற அற்பத் தொகையும் அந்த தானத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ நான் அந்த பணியை அதிக அளவில் செய்வேன். கிட்டத்தட்ட தேர்வு நடக்கும் எல்லா நாட்களும் நான் பணியில் இருப்பேன். காலை, மாலை என்று இரண்டு வேளைகளிலும் விடாமல் தேர்வுக் கண்காணிப்பாளர் பணியாற்றுவேன். தேர்வுக் கண்காணிப்பாளராக இருக்கும் போது என்னை கம்பீரமாக உணர்வேன்.

அன்றைய தினம் ஆங்கிலத் தேர்வு.  ஆங்கிலத்தில் ஃபெயில் ஆகக்கூடியவர்கள் அதிகம் என்பதால், கூட்டத்திற்குக் குறைவே இருக்காது. ஆங்கிலத் தேர்வின் போது மொத்தக் கல்லூரியுமே ராணுவ நடவடிக்கை போல மிகவும் பரபரப்பாக இருக்கும். ஒவ்வொரு தேர்வு அறைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். ஆசிரியர்கள் கேள்வித் தாள்களையும் விடைத்தாள்களையும் எடுத்துக் கொண்டு அப்படியும் இப்படியும் ஓடுவதைப் பார்த்தால் எதோ அவசர நிலை அறிவித்து விட்டதைப் போலிருக்கும்.

அன்றைக்கு நான் இருந்த அறையிலும் கிட்டத்தட்ட நூறு மாணவர்கள் இருந்தார்கள். மணி அடித்ததும் எல்லோருக்கும் விடைத்தாள்களைத் தந்து கொண்டு வந்தேன். அப்போதுதான் கவனித்தேன்.

அந்த ரவுடிப் பையனும் என் அறையில் இருந்தான். ’அடி சக்கை’ என நினைத்துக் கொண்டேன்.

எனக்குள் அப்படியொரு வன்மக்காரன் இருப்பான் என்பதை நானே அப்போதுதான் தெரிந்து கொண்டேன். எல்லா மாணவர்களுக்கும் விடைத்தாள்களைக் கொடுத்தபடியே வந்த நான். சுவர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த அந்த ரவுடிப் பையனுக்கு விடைத்தாளை வேண்டுமெனவே தவிர்த்து விட்டு அப்படியெதுவும் நடக்காதது போலவே கடந்துச் சென்றேன்.

அந்த பையன் எழுந்து, “எனக்கு குடுக்கல” என்றான். நான் அவன் சொன்னதைக் கேட்டும் கேட்காமலே இருந்தேன்.

“எனக்கு ஆன்சர் ஷீட் வர்ல” என்று மறுபடி கத்தினான்.

நான் அலட்சியமாகத் திரும்பி, ”உனக்கு மட்டும் குரியர்லயா அனுப்புவாங்க.. எந்திரிச்சி நின்னா தானே தெரியும்” என்றேன்.

அப்போது என் குரலில் ஒரு பிரபல நடிகரின் சாயல் இருந்ததாகப் பட்டது.  அங்கிருந்த மொத்த மாணவர்களும் சிரித்து விட்டார்கள். இதுதான் எனக்குத் தேவை. அவனை அவமானப்படுத்த வேண்டும். ராஸ்கல். வாத்தியார் என்றால் அவ்வளவு இளக்காரமா. என் படிப்பென்ன தகுதியென்ன..? நான் யார் தெரியுமா… யுஜிசில ஜேஆர்எஃப் வாங்கினவண்டா. அப்படின்னா என்னன்னு தெரியுமாடா உனக்கெல்லாம். என்னைப் போய் மரியாதையில்லாமல் எப்படி பேசினாய். உன்னைச் சொல்லி தப்பில்லை. அந்த பையன் மணிகண்டன் சொன்னது போல நீ இருக்கும் ஏரியா அப்படி.

பரிட்சை எழுதுவதற்கான மணி அடித்தது. எல்லோரும் எழுத ஆரம்பித்தார்கள். சிலர் கேள்வித்தாளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்ததாக எனக்கு இன்னொரு யோசனை வந்தது.  ஆங்கிலத் தேர்வு அல்லவா, எப்படியும் பிட் பேப்பர் கொண்டு வந்திருப்பார்கள். அவர்கள் பிட் அடிக்கும் போது பிடித்து வெளியே அனுப்பி விட வேண்டும்.  வழக்கமாக நான் அப்படியான கறார் ஆசிரியர் அல்ல. பிட் அடிக்கும் மாணவர்களை எச்சரித்து விட்டு விடுவேன். சமயங்களில் பிட் அடிக்கவே அனுமதித்தும் இருக்கிறேன். ஆனால், இன்றைக்கு கறாராக இருந்தாக வேண்டும். காரணம் அந்த ரவுடிப் பையன். அவன் அவமானப் பட வேண்டும். முக்கியமாக ஆசிரியரின் அதிகாரத்தை அவனுக்குக் காட்ட வேண்டும். ஆசிரியர் என்றால் வகுப்பறையோடு முடிந்துவிடுவதில்லை என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வாய்க்காது.

விடைத்தாள், கேள்வித்தாள் எல்லாம் கொடுத்து முடித்த பிறகு, நான் அந்த பையனின் அருகிலேயே நின்று கொண்டேன். அவன் எக்காரணம் கொண்டும் பிட் அடித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், இது மட்டும் போதாது. அவனை மேலும் அவமானப்படுத்த வேண்டும். அதனால் இன்னொரு திட்டம் போட்டேன்.  அந்த இடத்தை விட்டு நகர்ந்து அவனைக் காணாதவாறு இருக்க வேண்டும். அவன் பிட் பேப்பரை எடுக்கும் நேரம் பார்த்து அவனைப் பிடித்து வெளியே அனுப்பி விட வேண்டும். அப்படித்தான் அவனை அசிங்கப்படுத்த வேண்டும்.

நான் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளைச் சரி பார்த்து, விடைத்தாள்களில் கையொப்பம் இடும் பணியைத் தொடங்கினேன்.

இடை இடையே அந்த ரவுடிப் பையன் மீதும் ஒரு கண் வைத்த படியே இருந்தேன். அந்த பையனோ மேலே பார்ப்பதும் பின்புறம் திரும்பிப் பார்ப்பதும் நெளிவதுமாக மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். பிட் அடிப்பதற்குத் தோதான தருணத்தை எதிர்பார்க்கிறான் போல. எனக்கு உள்ளூர அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இவனையெல்லாம் இப்படித்தான் தண்டிக்க வேண்டும்.

அவ்வாறு, அவன் முதுகை வளைத்து, ஒருவாறு நெளிந்த நேரமாகக் கவனித்த நான், “தம்பி உனக்கு பைல்ஸ் பிரச்சினையா.. ஒழுங்கா உட்கார மாட்டியா“ என்றேன். மறுபடி மொத்த மாணவர்களும் சிரித்தனர். அவன் அப்படி ஒரு அவமானத்தை இதற்கு முன்பு அடைந்திருக்க மாட்டான். நான் அவ்வளவு குதூகலமடைந்தேன்.

ஒரு மணி நேரம் முடிந்து விட்டதற்கான அறிவிப்பு மணி ஒலித்தது.

“இன்னும் ரெண்டு மணி நேரம் தான் இருக்கு“ என்று அறிவித்த  நான், பியூன் கொண்டு  வந்த தேனீரை வாங்கிக் கொண்டு வாசலில் போய் நின்றேன். பக்கத்து அறையிலிருந்த ஆங்கில பேராசிரியை ஸ்வப்னாவும் அவருடைய அறை வாசலில் வந்து நின்று கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தார். நானும் புன்னகைத்தேன்.

“அய்யோ சார்… ஒருத்தன் விடாம பிட் பேப்பர் வெச்சிருக்கான் சார்” என்றார் ஸ்வப்னா மேடம்.

“நம்ம கிட்ட படிக்கிறவன் வேற எப்படி மேடம் இருப்பான்“ என்றேன்.  சிறிய சந்தர்ப்பத்திலும் நகைச்சுவையாகப் பேச பெண்களிடம்தான் முடிகிறது.

”நீங்கள்லாம் அப்படியே நூத்துக்கு நூறு பெர்செண்டேஜ் ரிசல்ட் குடுக்குறிங்க பாருங்க” பதிலுக்கு என்னை கிண்டல் செய்த திருப்தி ஸ்வப்னா மேடத்திற்கு.

”வேணும்னா ஒன்னு பண்ணலாம்… இப்போ நாம கண்டுக்காம விட்டுட்டா அவனே பாஸாயிடுவான்” என்றேன்.

“அதுக்காக எல்லாரையும் பிட் அடிக்க விடச் சொல்றீங்களா?”

இந்த உரையாடல் தந்த கிளர்ச்சியில் சிறிது நேரம் என் அறையை மறந்து விட்டிருந்த நான், சட்டென நியாபகம் வந்தவனாக உள்ளே எட்டிப் பார்த்தேன்.

குறிப்பாக அந்த ரவுடிப் பையனைத் தான் பார்த்தேன்.

மாட்டிக் கொண்டான். நன்றாக வசமாக மாட்டிக் கொண்டான். அவன் எதையோ பார்த்துப் பார்த்துத் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். நான் அந்த மேடத்திடம் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். ஆனாலும் என்ன செய்ய.. மாட்டிக் கொண்டானே. இந்தவொரு சந்தர்ப்பத்தைத்தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

வேகமாக அவனருகில் சென்றேன். அவன் விடைத்தாளைப் பிடுங்கிப் புரட்டிப் பார்த்தேன். உள்ளே பிட் பேப்பர் எதுவும் இல்லை.  ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல், அவனை எழுந்து நிற்கச் சொன்னேன். அவன் தயக்கத்துடன் எழுந்ததும் உட்கார்ந்திருந்த இடத்தை நன்றாக சோதனை செய்தேன். அவன் பாக்கெட்டுக்குள் கையைத் துழாவிப் பார்த்தேன். வேறு சில பேப்பர்கள் மட்டுமே இருந்தன. பிட் பேப்பர் எதுவும் அவனிடம் இல்லை.

”பிட் பேப்பர் இருந்தா ஒழுங்கு மரியாதையா குடுத்துரு.. இல்லன்னா மூணு வருசத்துக்கு பரிட்சையே எழுத முடியாது” என்றேன் மிரட்டும் அதிகாரத்துடன்.

“இருந்தா எடுத்துக்கங்க…” என்றான் அனாயசமாக.

அவன் அவ்வளவு அனாயசமாகச் சொன்னது என் அகங்காரத்தை உசுப்பியது. ஆனால், அவனை இப்போது எதுவும் செய்ய முடியாது. அவன் குற்றம் செய்ததற்கான சாட்சி எதுவும் கை வசம் இல்லை. அவனை அப்படியே விட்டு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

என் தோல்வியையும் அவமானத்தையும் ஏற்க முடியாமலிருந்தாலும் வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து விலகிச் செல்லும் தருணத்தில் தான் அந்த காட்சி கண்ணில் பட்டது.

அந்த ரவுடிப் பையனுக்குப் பின்னால் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்த இன்னொரு தடிமனான பையனின் கேள்வித்தாளுக்கு அடியில் ஒரு வெள்ளைத் துண்டுச் சீட்டு இருந்ததைக் கண்டு விட்டேன். ஆமாம். சந்தேகமேயில்லாமல் அது பிட் பேப்பர்தான். மினி ஜெராக்ஸ் போட்டு எடுத்து வந்திருக்கிறான்.

உடனே, நான் வெறி பிடித்தவனாக, “டேய் எந்திர்றா…” என்றேன் அந்த தடிமனான பையனைப் பார்த்து.

அந்த பையனும் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை போல. கொஞ்சமும் பயமின்றி எழுந்து நின்றான். நிச்சயமாக ஆறடி இருப்பான். அனேகமாக அவன் பழைய மாணவனாக இருப்பான் என நினைத்தேன். உருவத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அவன் ஹால் டிக்கேட்டைப் பார்த்தேன். பழைய மாணவன் தான். மூன்றாண்டுகளுக்கு முன்பு முடித்திருக்கிறான். வருசா வருசம் வந்து எழுதிப் போகிறான் போலிருக்கிறது. இதுவே மற்ற சமயமாக இருந்திருந்தால் இவன் மீது ஒரு பச்சாதாபம் இருந்திருக்கும். ஆனால் இப்போது அப்படியெதுவும் இல்லை.

அவன் நிற்கும் தோரணையில் ஒரு வித மிடுக்கு இருந்தது. எதற்கும் பயப்படாத மிடுக்கு. அந்த மிடுக்கு எனக்கு அந்த ரவுடிப் பையனை நினைவூட்டியது. இவனும் அவனும் ஒன்று தான். அவன் வைத்திருந்த பிட் பேப்பரைக் கையில் எடுத்த போது நான் ஒரு வெற்றியாளனாக உணர்ந்தேன். அந்த ரவுடிப் பையனிடம் தோற்றதற்கு ஈடாக இந்த வெற்றியை அந்த இடத்தில் பொறுத்திக் கொண்ட நிம்மதி எனக்குள் ஏற்பட்டது.

அந்த தடிப்பையனின் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு, ”போடா வெளியே” என்றேன்.

அந்த பையன் கொஞ்சமும் அசையாமல் வாயில் ஒரு சூயிங்கத்தை மென்று கொண்டிருந்தான். அவன் வெளியே போகாதது மட்டுமின்றி, சூயிங்கத்தை மென்று கொண்டிருந்த செயலால் மிகுந்த ஆத்திரம் கொண்டவனாக, ”ஒழுங்கா வெளிய போய்டு.. இல்லன்ன புடிச்சி போலிஸ்ல ஒப்படைச்சிருவேன். பாக்குறியா” என்றேன்.

அந்த அறையிலுள்ள மொத்த மாணவர்களும் அந்த தடித்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவன் ஒன்றும் அவமானப்பட்டது போல தெரியவில்லை. அவன் பாட்டிற்கு சிரித்தபடியே எழுந்து வெளியே போய் விட்டான். இது போன்ற தருணங்களிலும் கூட இந்த பையன்களால் எப்படி சிரிக்க முடிக்கிறது. உண்மையில் அவன் ஒருவாறு கெஞ்சியிருந்தால் நான் மனது இரங்கியிருக்கக் கூடியவன் தான். ஆனால், இந்த ரவுடிப் பையன் மீதிருந்த எரிச்சலில் இன்று அப்படி இரங்கியிருக்க மாட்டேன் என்றும் தோன்றியது.

இந்த ரவுடிப் பையானால் இன்னொரு பையன் மாட்டிக் கொண்டான் என்பதுதான் உண்மை. ஆகட்டும். என்னுடைய அதிகாரத்தை அந்த ரவுடிப் பையன் முன்பு நிருபித்து விட்ட பெருமிதமும் கர்வமும் உண்டானது எனக்கு. என் அதிகாரத்தைப் புரிந்து கொண்டிருப்பான் அல்லவா என்று நினைத்த போது கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.

இன்னொரு மணி ஒலித்தது.

“இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது.. ஒன் ஹவர் மோர்” என்றேன் சத்தமாக.

ஒரு சில மாணவர்கள் எழுந்து கூடுதல் விடைத்தாள்களை வாங்கிக் கொண்டார்கள். அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த மணிகண்டன் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை விடைத்தாளை விட்டு எங்குமே திரும்ப வில்லை. படிப்பில் அக்கறையும் நடத்தையில் ஒழுக்கமும் கொண்ட பையனுக்கு தேர்வு குறித்து துளியும் பயமிருப்பதில்லை.

நான் மறுபடி வாசலுக்கு வந்தேன். ஆங்கில மேடம் வாசலில் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருந்தது.

நான் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். நிறைய மாணவர்கள் தேர்வெழுதி விட்டு அல்லது எதுவும் எழுத முடியாமல் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். நானும் விடைத்தாள்களை வாங்கத் தொடங்கலாம் என்றெண்ணியபடி அறையின் உள்ளே வந்தேன்.

“எழுதி முடிச்சிருந்தா பேப்பரைக் கொடுக்கலாம்“ என்று அறிவித்தேன்.

அப்போதுதான் எல்லோரும் அவசர அவசரமாக எழுத ஆரம்பித்தார்கள்.

அந்த ரவுடிப் பையன் முதல் ஆளாக வந்து பேப்பரைக் கொடுத்து விட்டு ஒரு வித முறைப்புடன் வெளியேறினான். பிட் அடிக்கவும் முடியாமல் காப்பி அடிக்கவும் முடியாமல் அவனும் எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்பான். இது தான் அவனுக்கு நான் தரும் தண்டனை.

அவன் போன பிறகு அவன் விடைத்தாளைப் புரட்டிப் பார்த்தேன். முதல் பக்கம் மட்டும் கேள்வித்தாளையே திரும்ப திரும்ப எழுதி வைத்திருந்தான்.  மற்ற பக்கங்கள் அனைத்தும் வெறுமையாகவே இருந்தன. கொஞ்சமும் படிப்பு வாசனையற்றவன். ஆனால் ஸ்டையிலுக்கு மட்டும் குறைச்சலில்லை. பெரிய சினிமா ஸ்டார் என நினைப்பு. இவனெல்லாம் முதல் நாள் சினிமா காட்சிக்கு பாலையும் பீரையும் ஊற்றி அபிஷேகம் செய்பவன்.

கடைசி மணி ஒலித்தது.

”டைம் அப்.. எல்லாரும் பேப்பரைக் குடுங்க“ என்றேன்.

இதற்காகவே காத்திருந்தது போல பலரும் அவரவர் விடைத்தாள்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஓரிருவர் மட்டும் அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருந்தனர்.

மணிகண்டனும் கூட இன்னமும் எழுதிக் கொண்டுதானிருந்தான்.  நான் சில மாணவர்களின் விடைத்தாள்களை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டேன். சிலரிடமிருந்து பிடுங்கிக் கொண்டேன்.

சில மாணவியர் “சார் சார்.. பேஜ் நெம்பர் போடல சார்” என்றனர்.

”பேஜ் நெம்பர் கூட போடாம என்ன பண்ணிட்டிருந்தே.. இந்தா போடு“ என்றவாறு விடைத்தாளை எடுத்துப் போட்டேன்.

மணிகண்டன் இன்னமும் எழுதிக் கொண்டிருந்தான். ”சார்.. சார்.. இன்னும் ஒரே ஒரு ஃபைவ் மார்க் கொஸ்டின் இருக்கு சார்” என்றான்.

நான் எதுவும் சொல்லாமல் அவனை எழுத அனுமதித்து விட்டு விடைத்தாள்களை அடுக்கத் தொடங்கினேன். எல்லா துறை மாணவர்களும் கலந்து இருந்ததால் விடைத்தாள்களை அடுக்குவதற்கு கொஞ்சம் தாமதம் ஆனது. அல்லது மணிகண்டனுக்காகத் தாமதப்படுத்தினேன்.

விடைத்தாள்களை அடுக்கி முடித்த சிறிது நேரத்தில் மணிகண்டனும் எழுதி முடித்திருந்தான்.

நான் அவன் விடைத்தாளைப் பார்த்தேன். கிட்டத்தட்ட முப்பது பக்கங்களுக்கு எழுதியிருப்பான் போல பருத்திருந்தது. மணிகண்டனையும் அவன் விடைத்தாளையும் பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியான மாணவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் சிரத்தை எடுக்கலாம்.

மாலை தேர்வு முடிந்து சிற்றுந்தில் வந்து கொண்டிருந்தேன். நாள் முழுக்க தேர்வறையில் நின்று கொண்டிருப்பதால் கால்களில் கடுமையான வலி. உட்கார்ந்தால் நன்றாக இருக்கும். மாணவர்கள் யராவது பஸ்ஸில் இருந்தால் எனக்காக இடம் கொடுப்பார்கள்தான். ஆனால், யாருமேயில்லை. மணிகண்டனும் கூட நின்று கொண்டுதான் வந்தான் அவன் என்னிடம் எதோ பேச ஆர்வப்படுவது போலிருந்தது. ஆனால், நானிருந்த களைப்பில் அதெல்லாம் முடியாது என்பதால் வெறுமனே புன்னைகைத்து வைத்தேன். அறைக்குப் போய் படுத்தால் போதும் என்றிருந்தது எனக்கு.

வேகமாகப் போய்க் கொண்டிருந்த பஸ் திடீரென நின்றது. பைபாஸ் முழுக்க என்னவோ கூட்டமாகக் கூடியிருந்தார்கள். இவர்களுக்கு இதுவே வேலை. எதாவது பிரசினை என்றால் சாலைகளில் கூட்டம் கூட்டி போக்குவரத்தை முடக்குவது. ச்சை..

எனக்கு சற்றே கண்ணயர்வது போலிருந்தது. களைப்பில் பஸ்ஸிலேயே தூங்கி விடுவேனோ என்றிருந்தது.

கண்கள் சுழல ஆரம்பித்த அந்த கணத்தில் ’சத்’தென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

தூக்கம் சொக்கிக் கொண்டு வந்த எனக்கு, கன்னத்தில் விழுந்த அந்த அடியால் தலை முன்னூத்தி அறுபது டிகிரி சுற்றியது.  தலை சுற்றி நிற்பதற்குள் அங்கிருந்த இன்னொருவன் என் தோளைப் பிடித்து இழுத்து பஸ்ஸிலிருந்து வெளியே தள்ளினான். என் முதுகிலும் வயிற்றிலும் மாறி மாறி குத்துக்கள் விழுந்தன. காதின் மேல் விழுந்த ஒரு அடி என்னை முழுவதுமாக நிலை குலைய வைத்தது. யார் யார் எங்கிருந்து அடிக்கிறார்கள் என்று யோசிப்பதற்கு அவகாசமேயின்றி சரமாரியாக என்மேல் அடிகள் விழுந்தன.

கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளை இழந்து கொண்டிருந்ததை உணர முடிந்தது. சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் வாகாக ஒதுங்கிக் கொண்டனர்.

“மூக்க ஒடறா அவன.. போலிஸ்ல புடிச்சிக் குடுத்துருவாராம்.. பெரிய ஸ்ட்ரிட்டு வாத்தியாருன்னு நெனப்பு“ யாரோ ஒருவனின் குரல் எங்கோ தூரத்தில் ஒலிப்பதைப் போல கேட்டது. .

இன்னும் ஒரு வலுவான குத்து என் வயிற்றை நோக்கிக் குறி பார்த்து வந்த போது எங்கிருந்தோ வந்த ஒருவன் குறுக்கே புகுந்து அதைத் தடுத்து நிறுத்தினான். வலுவாக விழவிருந்த இன்னொரு அடியிலிருந்து என்னை லாவகமாகக் காப்பாற்றினான். ”ஏய்.. ச்சீ.. விடுங்கடா”  என்றவாறு ஒரு கையால் என்னை அவன் பின்புறமாகப் பாதுகாப்பாக நிறுத்திக் கொண்டான். அதே சமயம் முன்னேறி வந்த இன்னொருவனைப் பிடித்து ஆவேசமாகத் தூரமாகத் தள்ளினான். அதே வேகத்தில் இன்னொருவனின் பிடறியில் மூர்க்கமாக ஓங்கி அடித்தான்.  ஒரு தேர்ந்த சண்டைக் கலைஞனைப் போலிருந்தது அவன் செயல்.  அடிப்பவர்களைத் தடுத்து என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அவன் யாரென தெரிந்து கொள்ளும் முயற்சியில் என் கண்களைத் திறக்க மிகுந்த சிரமப்பட்டேன். மங்கலாக  தெரிந்தது.

அவன், என்னைத் தாக்கியவர்களைத் தடுத்து நிறுத்தியபடி கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்

”அதுக்குன்னு வாத்தியார அட்ச்சிருவியா.. அடீங். பாடு..”. என்று அவன் சொன்னது என் காதில் விழுந்தது. பிறகு என்னைத் தாக்கியவர்களில் ஒருவனைக் கன்னத்தில் வலுவாக அடித்தான். இன்னொருவனை எட்டி ஒரு உதை விட்டான்.  அவன் ஒரே ஒருவன் நான்கைந்து பேரை அனாயசமாக சமாளித்துக் கொண்டிருந்தான். அவ்வாறு சமாளிப்பது அவனுக்கு ஒன்றும் சிரமமான விஷயம் இல்லை என்பது போலிருந்தது அவன் செய்கை.

”ஒழுங்கா ஓட்ருங்க. இல்லன்னா ஏரியாவ தாண்ட மாட்டீங்க“ என்றான்.

இப்போது அவன் முகம் மச மச வென கலங்கலாகத் தெரிந்தது.

அந்த ரவுடிப் பையன்.

என் கண்கள் மணிகண்டனைத் துளாவின.  அவனைக் காணோம்.

   ————-