இணைய இதழ்இணைய இதழ் 79சிறுகதைகள்

ஆனந்தியின் இரண்டு கோடுகள் – கார்த்திக் பிரகாசம்

சிறுகதை | வாசகசாலை

ரண்டு நாட்களாகவே ஆனந்திக்கு மனம் கெடையாய் கிடந்து துடித்தது. ஒவ்வொரு நொடியும் தோளில் பாறாங்கல்லை சுமப்பது போல் கனமாய் நகர்ந்தன. வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் முழுவதும் படபடப்பு.

மூன்றாம் நாள் தள்ளிப் போகும் போதே கிலி பிடித்திருந்தது. ஏழாம் நாள் கடக்கும் போது உண்டான நடுக்கம், உயிர் குடிக்கும் பிசாசாய் அச்சுறுத்தத் தொடங்கியது. அலுவலகத்திற்குக் கொண்டு சென்ற மதிய உணவைக் கூட சாப்பிடாமல், மேனெஜரிடம் தலை வலிக்கிறது எனச் சம்பிரதாய பொய்யை உதிர்த்து அரைநாள் விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்பினாள். போகும் வழியில் கையோடு மெடிக்கல் சென்று பிரக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கினாள். அதே மெடிக்கலில் ஆனந்தியும் ராஜாவும் கல்யாணமான புதிதில் ஒன்றாக வந்து சிறு கூட்டத்தின் இடையே புகுந்து “காண்டம் ஒரு பாக்கெட்” கொடுங்க எனக் கூட்டாகச் சத்தம் போட்டு வாங்கிச் சென்றது நினைவிற்கு வந்ததும்,வருகையில் முறை காண்டம் போட்டுக் கொள்ள வற்புறுத்தியும், ‘அதுக்குள்ளலாம் மறுபடியும் ஆகாது’ என சர்வ சாதாரணமாய் உதாசீனப்படுத்திய ராஜாவின் மீது எழுந்த ஆத்திரம் கோடை வெயிலின் உக்கிரத்தில் கடும் வெறுப்பாய் மாறியது.சந்தோசமாய் குதூகலித்த தருணத்தின் மீது சவக்களை படிந்தது.

“என்னடி.. அதுக்குள்ள வந்துட்ட…” செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே கேட்ட அம்மாவைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கிட்டை எடுத்துக் கொண்டு நேராகக் கழிப்பறைக்குள் சென்றாள்.
விரல்களின் நடுக்கத்தில் கிட்டின் எளிய உறையைப் பிரிக்கவே கடும் போராட்டமாய் இருந்தது.

ஐந்து நிமிட காத்திருப்பிற்குப் பின் இறுக்கமாய் மூடியிருந்த கண்களை மெள்ள திறந்து பார்த்தாள்.
இரண்டு கோடுகளை அழுத்தமாய் காட்டியது டெஸ்ட் கிட்

***

நினைத்துப் பார்க்கவே மிகவும் தளர்வாக இருந்தது. உடலும் மனதும் முழுமையாகச் சோர்விலிருந்து மீளாத நிலையில் இன்னுமொன்றா.? யாரிடமாவது பகிர்ந்து கொண்டு கதறி அழுதால் கொஞ்சம் தேவலாம் போல் தோன்றியது. யாரிடம் பகிர்வது? அன்றாடத்தின் சுக துக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்திடவென ஓர் உறவு இருந்தது. இன்றில்லை. ம்ம்ம்… அதெல்லாம் பழைய கதை. சூழ்நிலையின் தீவிர கட்டுப்படுத்தலினால் நெறி தவறிய துரதிர்ஷ்டமான ஒரு காலத்தில் பக்கபலமாய் இருந்த உறவு நினைவையும், கண்ணீரையும் கையளித்து கானலாகிவிட்டது.

கல்யாணமான அடுத்த மாதமே கருவுற்றாள் ஆனந்தி. அகிலன் பிறந்து சரியாக ஒரு வருடம் ஆறு மாதம் ஆகிறது. அவளது சுபாவத்துக்குச் சிறிதும் பொருத்தமில்லாத மனவோட்டத்தில், துளியும் விருப்பமில்லாத சூழலில் மணப்பெண்ணுக்கான எந்த பிரத்தியேக அலங்காரமுமின்றி தோழியின் பட்டுப் புடவையில், அந்நேரத்திற்குக் கிடைத்த வெடித்த குண்டு மல்லியைத் தலையில் சூடிக் கொண்டு வடபழனி முருகன் கோவிலில் ராஜா கட்டிய தாலியோடு நின்றிருந்தாள். உடன் ராஜாவின் நண்பர்கள் மட்டும் நான்கு பேர் இருந்தனர்.

வாழ்நாளில் திரும்பிப் பார்க்கவே விரும்பாத நாட்களில் முக்கியமானவொன்று கல்யாண நாள். ஒவ்வொரு முறையும் வித்திடும் குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிக்க அந்நாளை நிரந்தரமாக மறந்துவிட எத்தனித்தாள். ஆனால் நினைப்பதும் மறப்பதும் மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவொன்றென அனுபவம் கற்பித்தது.

திறமையானவள் ஆனந்தி. மெத்தப் படித்தவள். பண்பட்ட பேச்சால் பிடிவாதக்காரர்களின் மனதையும் மாற்றிவிடும் சாமர்த்தியசாலி. விட்டுக் கொடுத்தோ; விலகி நின்றோ காரியம் சாதிக்கும் தீர்க்கமான குணம் ஆனால் இளகிய மனம். அதுவே மற்றவர்களை எளிதில் அபிமானம்‌ கொள்ளச் செய்துவிடும். அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்று அம்மா கூறும் போது பசிக்கிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்க வேண்டுமெனச் சிறுவயதிலேயே பொட்டில் அடித்தது போல் கேட்பாள். அப்போது சூல் விழிகளுக்குக் குடை பிடித்தது போலிருக்கும் அடர்த்தியான புருவங்கள் வில்லாய் வளைந்து அம்பாய் பாயும் அவளது விழிகள். இரு புருவங்களையும் இணைத்து வைக்கும் மெல்லிய சந்தனக் கீற்றுக்கு விடுமுறையே இல்லை.

அப்பா இறக்கும் போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். பெரியக்காக்கு மட்டும் கல்யாணமாகியிருந்தது. வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் என்றாலும் அப்பாவிற்கு ஆனந்தியின் மீதே அதிக பாசம். ஆனந்தி கடைக்குட்டி. பெரியக்கா மேகலா. சின்னக்கா ராஜேஸ்வரி. மூவருக்கும் பொதுவானவள் அம்மா. இருப்பினும் ஆனந்திக்கு அம்மாவை விட அப்பாவையே நிறையப் பிடிக்கும். எப்போதும் கடுகடுவென இருக்கும் அம்மாவிடம் அதிகம் ஒட்டமாட்டாள். அப்பா கேன்சர் நோயினால் செத்துவிட்டார் என்று பள்ளிக்கூடத்தில் தெரிந்தால் பிள்ளைகள் யாரும் பேச மாட்டார்கள் என
பெரியக்கா சொல்லியிருந்ததால் அடுத்த ஒரு வாரத்திற்கு வகுப்பில் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். உயிர் நண்பனான பிரபாகரனிடம்கூட சொல்லவில்லை. பிரபாகரனுக்கு ஆனந்தியின் மீது கொள்ளைப் பிரியம். எந்த பக்குவமும் வந்திடாத அந்த பருவத்திலேயே, மற்ற பிள்ளைகளின் மூலம் எப்படியோ கண்டுபிடித்து ஆனந்தியின் வீட்டு வாசலில் போய் நின்றான். இறுதிச் சடங்குகள் முடித்துவிட்டு, தலைக்குக் குளித்து, அழுதழுது வீங்கிய முகத்துடன் வெளியே வந்தவளைப் பார்த்ததும் படபடவென ஏதோவொன்று தாக்க, திரும்பி வந்துவிட்டான். ‘எங்கப்பா இறந்த அன்னிக்கு நீ மட்டும்தான் என்ன பாக்கணும்னு வந்த. உனக்கு எதனால வரணும்னு தோணிச்சு’, பின் நாட்களில் ஆனந்தி பலமுறை கேட்டிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவள் கண்களில் எளிதில் உலராத பாசத்தின் கண்ணீர் கசியும். பள்ளிக்கல்லூரி நாட்கள் தொடங்கி வேலைக்காகச் சென்னை வந்த பிறகும் இருவரின் விடியலும் ஒன்றாக முளைத்து, ஒன்றாகவே முடிந்தன.

“ஒருவேள நான் குறுக்க வராம இருந்திருந்தா நீ பிரபாவதான கல்யாணம் பண்ணிருப்ப” பிரபாகரனைப் பற்றி பேச்சு வரும் சமயங்களில் ராஜா கேட்பான். வெற்று புன்னகையை உதிர்த்துவிட்டு, பேச்சை மாற்றுவதைத் தவிர ஆனந்தியால் வேறெதுவும் செய்ய முடிந்ததில்லை. அவள் அப்படிதான். ‘ஆம்’ , ‘இல்லை’ யென ஒற்றையில் பதில் சொல்ல வராது. தன்மீது பிரியமானவர்களின் அன்பை மயிரிழை அளவுக்குக்கூடக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருப்பாள். அதனாலேயே அந்த கணத்திற்கு வெளிப்படுத்த வேண்டி மனதிற்குள் பொங்கிடும் பல்வேறு உணர்ச்சிகளை உள்ளுக்குள்ளேயே தேக்கி அணைக் கட்டிவிட்டுச் சிறு புன்னகையில் கடந்திடுவாள். இருப்பினும் முழுவதுமாய் தனிமைக்கு ஒப்புக்கொடுத்த பொழுதுகளில், ராஜா கேட்ட கேள்வி மனதை ஆழம் பார்க்கும். ஒருமுறையேனும் பிரபாகரன் வாயைத் திறந்து சொல்லியிருந்தால் எல்லாம் மாறியிருக்கக் கூடும். அவன் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும் எனக்கு ஏன் கேட்க வேண்டுமெனத் தோன்றவில்லை.இருபது வருடங்களாகச் சுவாசம் தீண்டிடும் அருகாமையிலேயே இருந்தவன்.அதனால்தான் மதிப்பு தெரியவில்லையோ? ஒருவேளை “நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என அவன் கேட்டிருந்தால், டேய் பைத்தியம் இதைக் கேட்கவா இவ்வளவு தாமதம்” என்று தோன்றியிருக்குமோ? ‘ஒருத்தனைக் காதலிக்கிறேன்’ என்று வீட்டில் சொல்லும் போது, அம்மாவும் அக்காவும்கூட, “யாரு… பிரபாவா” என்றுதானே கேட்டார்கள்! அவனாக இருந்திருந்தால், இப்போது ஆனது போல் இல்லாமல் எல்லோரின் ஆசீர்வாதத்தோடும் நிறைவாக மணமாகியிருக்குமோ? ராஜாவுக்கு இசைந்தது கூட அவன் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்ததால் தானே.. இல்லையென்றால்? ராஜாவின் சுய பச்சாதாபத்தில் பலிகடா ஆகிவிட்டேனா?
அகிலன் அழுவது போல் இருக்கிறதே என மனப்பிறழ்வின் அருகாமைக்கு இட்டுச்சென்ற எண்ணக் கண்ணிகளை அறுத்தெறிந்து விடுபடுவாள்.

ஆனந்தியின் அப்பாவும் சித்தப்பாவும் அக்ரஹாரத்தில் சிறிய அளவிலான வெள்ளிக் கடையொன்றைக் கூட்டாக நடத்தி வந்தனர். இரு குடும்பங்களின் மொத்த உருப்படிகளுக்கும் ஒரே ஆதாரம் அக்கடையின் வருமானம். அப்பாவின் இறப்பிற்குப் பின் கணக்குக் காட்டவோ, கேள்வி கேட்கவோ வலுவான குரல் இல்லாமல் போனதும் கடையின் பெரும் பகுதி வருமானத்தை ஆக்கிரமித்தார் சித்தப்பா. பந்தபாசமெல்லாம் காசு பணம் கண்ணை மறைக்கும் வரையில் மட்டுமே என ஆனந்தியின் குடும்பம் உணர நீண்டகாலம் ஆகவில்லை. ஒற்றை ஆளாக இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வாழ்வின் சகல துயரங்களோடும் போராடினாள் அம்மா. மூத்தவர்களைச் சபையில் வைத்துப் பேசினார். அதன்படி அண்ணனின் குடும்பத்திற்குத் தினசரி ஐம்பது ரூபாய் தர வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாலைப் பொழுதும் கடை வாசலில் பல மணிநேரம் காத்திருந்து அந்த ஐம்பது ரூபாய் பணத்தை வாங்கி வருவாள் ஆனந்தி. அங்குப் போய் நிற்கும் ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் சித்தப்பாவின் உதாசீன பார்வையும், ‘பொழுது சாஞ்சா போதுமே’ என்ற இளக்கார தொனியும் ஆனந்தியின் தன்மானத்தைச் சீண்டும். அவ்வப்போது ஏசும் இழிவான சொற்களை ஜீரணிக்க முடியாமல் அழுதவாறே வீடு வரை நடந்து போவாள். இந்த காச வாங்குகிறதுக்குப் பட்டினி கிடந்து சாவதே மேல் எனத் தோன்றும். ‘நீ படிச்சு பெரிய உத்தியோகத்துக்கு போயி நல்லா சம்பாரிச்சு, சித்திங்க, சொந்த பந்தங்கள் முன்னாடி கௌரவமா நின்னு காட்டணும்’ அப்பாவின் இறப்பிற்குப் பின் குடும்பத்திற்காக ஒற்றை ஆளாகப் போராடும் அம்மாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டானது. எக்காரணம் கொண்டும் அம்மாவை அழவிடக் கூடாது என மனதில் ஆழமாகப் படிந்து, முழு கவனமும் படிப்பிலேயே இருந்தது. அதன் பலனாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஐந்நூற்றுக்கு நானூத்தி எழுபத்து ஆறு மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதல் இடம் பிடித்தாள். தலைமை ஆசிரியரே வேறொரு சிறந்த பள்ளிக்குப் பரிந்துரைத்து மேல்நிலைக்குச் சேர்த்துவிட்டார். அங்கேயும் சோரம் போகவில்லை. பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூற்று ஐம்பத்து மூன்று மதிப்பெண்கள் எடுத்தாள். சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீரிங் சீட் மெரிட்டில் கிடைத்தது.

வேலைக்காக வந்த போது இனி வாழ வேண்டிய மிச்ச நாட்கள் முழுதும் சென்னையில்தான் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சென்னை வந்த பிறகே ராஜா பழக்கம். ஆனந்தியின் கல்லூரி சினேகிதியான கீதாவின் நண்பன். வீட்டைப் பொறுத்தவரையில் ஆனந்தி சொன்ன சொல் தட்டாத பெண். அதாவது ‘என் மகள் நான் கிழித்த கோட்டை தாண்ட மாட்டாள்’ என்பார்களே அந்த வகை. அவள் இப்படியொரு காரியம் செய்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பிற்காலத்தில் நீ இப்படிச் செய்வாய் என யாரோ சொல்லியிருந்தால், அவளே கூட அதை ஆணித்தரமாய் மறுத்திருப்பாள்.

தொடக்க நாட்களில் ராஜாவோடு உண்டான நட்பு காதலாக மாறுவதற்கான சஞ்சலம் உண்டாகும் தருணங்களில் அதை நம்பவே மறுத்தாள். வழக்கம் போல் சந்திக்கும் ஓர் மாலையில், அவளின் பெயரை பச்சைகுத்திக் கொண்டு வந்த நின்ற பொழுதில், உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் இல்லாமல் ராஜாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். ராஜாவின் தீவிரம், ஆனந்தியின் ஸ்திரத்தன்மையை பகிரங்கமாய் நொறுக்கியது. அவன் அன்பின் மீது பிடிமானம் உண்டானது.

எல்லாவற்றையும் பிரபாகரனிடம் பகிர்ந்துவிடும் அவள், இதைப்பற்றி வாயே திறக்கவில்லை. இருந்தாலும் ஆனந்தியின் செயல்பாடுகளிலிருந்தும், ஒட்டியும் ஒட்டாமலும் பேசிவிட்டு சீக்கிரம் விடுவித்துக் கொள்ள முயலும் உரையாடல்களிருந்தும் ஒருவாறு உணர்ந்திருந்த பிரபாகரன், அவளாகச் சொல்லட்டும் என எதுவும் கேட்டுக் கொள்ளாமல் அமைதியாக நாட்களைக் கடத்தினான். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்தியை இழந்துவிடுவோமோ என்ற எண்ணம் தீயாய்ச் சுட்டுப் பொசுக்கத் துவங்கியது. ஆனந்தி தன்னுடன் இல்லாமல் போகும் காலம் வரும் எனப் பிரபாகரன் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. கடந்த கால நினைவுகளில் எங்கு கால் பதித்தாலும், மூச்சு முட்டக் கூடவே வரும் ஆனந்தியின் சுவடுகளிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தான். வாழ்வில் சகலத்தையும் சந்திக்க, அவன் தேவையெனக் கருதியதெல்லாம் அவளின் இருப்பு மட்டுமே. அவளுக்கும் அப்படித்தான் என சிறுவயது முதலே நம்பியும் வந்தான். ஆனால் கிளையிலிருந்து சலனமின்றி உதிர்ந்த ஓர் பழுத்த இலையைப் போல கண்முன்னே கசங்கிக் கிடந்தது அந்த எண்ணம்.

இருளிலிருந்து வெளியேற பெரும் பிரயத்தனப்பட்டு, பின் இருட்டுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டான்.  இருளே வெளிச்சமாய் மாறியது.

***

கழுத்தை நெரிக்கும் ஜன நெரிசலை வழியனுப்பிவிட்டு, இழந்த சுவாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டிருந்தது பழைய மகாபலிபுரம் சாலை அடுத்த நாள் மறுபடியும் மாய்வதற்கு.

எப்போதும் சந்திக்கும் ‘சர்வம் சுந்தரம்’ கடையில் ஒரு டீயும், காபியும் ஆர்டர் செய்துவிட்டு முக்கிய சாலையை இணைப்பு சாலையிலிருந்து பிரிக்கும் தடுப்புச் சுவரில் அமர்ந்தனர்.

மழலையின் புன்சிரிப்பையொத்த தென்றல் இருவரையும் தழுவிச் சென்றது.

“நாம அவசரபடறோமோன்னு தோணுது. கொஞ்சம் நாள் போனதுக்கு அப்புறம் வீட்ல மறுபடியும் பேசிப் பார்க்கலாமே” ஆனந்தியின் வார்த்தைகளில் அப்பட்டமான தயக்கம் தொனித்தது.

பேசிப் பாக்கலாம்… ஆனா யோசிச்சி பாரு… ஒரு பையன லவ் பண்றேன்னு சொன்னதுக்கே ஒரு வாரமா வீட்டவிட்டு வெளியவிடாம உன்ன ஊருலயே அடக்கி வெச்சிட்டாங்க. இதுல நான் வேற ஜாதின்னு தெரிஞ்சா கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க” ராஜா தீர்க்கமாகச் சொன்னான்.

இந்த ஒரு விஷயம்தான் ஆனந்தியை மிகவும் சிந்திக்க வைத்தது. மற்றவர்களிடம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் வீட்டிற்குப் புதிதாய் வருபவர்களிடமும், அண்டை வீட்டாரிடமும் நாசூக்காய் அவர்களின் சாதியை அறிந்து கொள்ள முயலும் அம்மாவின் முயற்சியைப் பலமுறை கண்டிருக்கிறாள். சாதியை அறிந்து கொண்ட பிறகு, அம்மாவின் உபசரிப்பில் ஏற்படும் மாற்றத்தையும் அவள் கவனிக்கத் தவறியதில்லை. அதேபோல தூரத்து உறவினர் ஒருவரின் மகள் ஓடிப் போய் கல்யாணம் முடித்த தகவலறிந்த போது, “இவளுக்கு ஓடிப் போக நம்ம ஜாதில ஒரு ஆம்பளக் கூடவா கெடைக்கல. போயும் போயும் அந்த ஜாதிக்காரனோட ஓடிப் போயிருக்கா.. ஏதோ ஊர்ல வேற ஆம்பளைய இல்லாத மாதிரி” அம்மாவும், மூத்த அக்காவின் கணவரும் பேசிக் கொண்டதை மாடிப்படி ஏறும் போது மறைந்திருந்து கேட்டது நினைவிற்கு வந்தது.

‘இருந்தாலும் அம்மாக்குத் தெரியாம எப்படி… இதுவரைக்கும் வீட்டிற்குத் தெரியாமல், அம்மாவிடம் சொல்லாமல் அன்றாடத்தின் ஒரு விஷயத்தைக் கூடச் செய்ததில்லை.. குழப்பத்தின் உச்சத்தில் தடுமாறினாள்.

எனக்கும் இப்படி யாருக்கும் தெரியாம, எங்கோ ஒரு மூலையில மறைவா கல்யாணம் பண்ணிக்கணும் ஆசையெல்லாம் இல்ல ஆனா ‘கெளரவம்ங்கிற கருமத்த காப்பாத்திக்கிறதுக்காக இந்த மனுஷங்க என்ன வேணாலும் பண்ணுவாங்க. குறிப்பா இந்த சாதி கெளரவம் இருக்கே.. பெத்த புள்ளையா இருந்தாலும் கொன்னு புதைக்க தயங்கமாட்டாங்க. இதுல வேடிக்க என்னென்னா இந்த விசயத்துல மட்டும் அந்த சாதிக்காரன், இந்த சாதிக்காரன்னு வித்தியாசம் இல்ல. எல்லாம் மசிரும் ஒண்ணுதான்’ ஆவேசத்தில் வெளிப்படையாகப் போட்டு உடைத்தான் ராஜா.

ஆனந்தி ஸ்தம்பித்தாள். தன்னைப் பற்றி வருடக்கணக்காய் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை உடைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்தாள் அல்லது உணர்ந்ததாய் நம்பினாள்.

அடுத்த நாள் அதிகாலை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் காலடி வைத்தாள்.

***

கல்யாணமான நாளிலிருந்து முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். நேருக்கு நேர் பார்க்க நேரும் சமயங்களில் அம்மாவின் கண்களில் வழியும் அருவருப்பு ஆனந்தியின் உடலில் புழுவாய் ஊறும். ராஜாவிடம் இன்றுவரை பேச்சுவார்த்தை கிடையாது. அகிலனுக்காக மகளின் வீட்டில் கடமைக்கென வந்த விருந்தாளியைப் போலத் தங்கியிருக்கிறாள்.

தயங்கித் தயங்கி அருகில் சென்றாள் ஆனந்தி. தலையை நிமிர்த்தாமல் செல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

“ம்மா… கரு தங்கியிருக்கு…” தயக்கத்தினால் வெட்டுப்பட்ட வார்த்தைகள் ஓசைக் குறைந்து வந்தன.ஏனோ இந்தமுறை அம்மாவிடம் சொல்வதற்குக் கூச்சமாய் இருந்தது.

“அதுக்கு” முகத்தைத் தூக்காமல் தட்டையாகக் கேட்டாள்.

இல்லம்மா.. கலைச்சிடலாம்னு யோசிக்கிறேன்.

பதிலேதும் பேசாமல் அதிர்ச்சியடைந்தவளாய் முகத்தைத் தூக்கினாள். கோப ஆவேசம் கண்களில் சிகப்பு ரேகையை வியாபித்தது.

ஆனந்தியே தொடர்ந்தாள், “இன்னொரு குழந்தைக்கு இது சரியான நேரம் இல்லன்னு தோணுது.
அகிலன் பொறந்து ஒன்றரை வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள…”

“படுக்குறதுக்கு முன்னாடி இந்த புத்தியெல்லாம் எங்கடி போச்சு. இல்ல அதுக்கப்றமாச்சும்
செய்ய வேண்டியத செஞ்சி தொலைச்சிருக்க வேண்டியதான. அத விட்டுட்டு உண்டான உசர கலைக்கப் போறாளாம். அறிவு கெட்ட ஜென்மம். வெளிய போயி பாரு. ஒத்த புள்ளைக்காக ஊர்ல எத்தனப்பேரு தவம் கெடக்குறாங்க கண்ணுக்கு முன்னாடியே உன் ரெண்டாவது அக்காக்காரி இருக்கா பாத்தல்ல. கல்யாணமாகி ஆறு வருஷம் ஆச்சு. போகாத கோயில் இல்ல. வேண்டாத சாமி இல்ல. பண்ணாத டிரீட்மென்ட் இல்ல. இன்னும் வயித்துல ஒரு புழு பூச்சிக்கு வழிய காணோம். நேத்துக்கூட போன்ல நான் என்ன பாவம் பண்ணேன். அம்மான்னு கூப்பிட ஒரு ஜீவன் இல்லாமலே மீதி நாளும் போய்டுமான்னு கதறி அழறா. இங்க பாருடி. ஒரு விஷயம் ஈஸியா கெடைச்சிருச்சுன்னு அதோட அரும தெரியாம, எனக்குத்தான் எல்லாம் தெரியும்னு இஷ்ட மயித்துக்கு ஆடக் கூடாது.” ஆனந்தியை இடைமறித்து அனலைக் கக்கினாள்.

இயல்பிலேயே கொச்சையாகப் பேசும் சுபாவம் இல்லை. தன் சொல்லையும் மீறி, கல்யாணம் செய்து கொண்டதனால் உண்டான வெறுப்பும், சொந்த பந்தங்களின் முன்னால் தலைகுனிந்து நின்ற அவமானமும் ஆனந்தியின் மீது நிரந்தர அறுவறுப்பையும், குரூரத்தையும் அவளின் நெஞ்சத்தில் ஆழமாக விதைத்துவிட்டது.

ஆனந்தி கல்யாணம் செய்து கொண்ட நாளன்று, அடிவயிறு குமட்டி வாந்தி வாந்தியாய் எடுத்தாள். மூத்த அக்காவும், அவருடைய கணவரும் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டனர்.

“நம்ம புள்ள கைய விட்டு போச்சே…” ட்ரிப்ஸ் இறங்கும் பாதி மயக்கத்தில் புலம்பிக் கொண்டே இருந்தாள்.

உடல்நிலை சற்று தேறியதும் அக்காக்கள் ஆறுதல் கூறி சமாதானம் செய்ய முயன்றனர். “அவளே அம்மா வேணாம்.. அக்காங்க வேணாம்ன்னு போயிட்டா… நீ எதுக்கு அழுது புலம்பி வெசனப்பட்டு உடம்ப கெடுத்துக்குற. அந்த ஓடுகாலி முண்ட உனக்கு பொறக்கவே இல்லன்னு நெனச்சிக்கோ.. உனக்கு பொறந்தது ரெண்டு பொண்ணுங்க தான்”

“பெத்த மனசு ஆறலையே.. உங்களுக்கு குடுத்த அதே மார்ல தானடி அவளுக்கும் பால் குடுத்தேன்…
நீங்க தூங்குன அதே மடிலதான அவளையும் தூங்க வச்சேன்..இப்பிடி தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டாளே… இதுக்காகவா வெயில்லயும் மழைலயும் ஒத்த ஆளா இவ்வளவு கஷ்டப்பட்டேன்…”

இரண்டு மூன்று நாட்கள் கழித்தே சிறிதேனும் சமாதானம் ஆனாள்.

பின்பு மூத்த மாப்பிள்ளையின் அறிவுரையின்படி, “அத்த.. மொத்த மானமும் இன்னும் முழுசா போறதுக்குள்ள அம்பது நூறு பேர கூப்டு வச்சி நாமளே அந்த ஜென்மங்களுக்கு ரெசப்ஃசன் மாதிரி பண்ணித் தொலைச்சுடுவோம். அதுக்கப்புறம் அதுங்க எக்கேடாவுது கெட்டு ஒழியட்டும். மூஞ்சிலயே முழிக்க வேண்டாம். இத பண்ணாதான் ஊர்ல கொஞ்சமாச்சும் கௌரவம் மிஞ்சும். இல்லனா வெளில தலகாட்ட முடியாது. நானும் ஒரு பொம்பள புள்ளைய பெத்து வச்சிருக்கேன். நாளைக்கு அதுக்கு கல்யாணம் காட்சின்னு ஆரம்பிக்கும் போது ஜாதகத்த கொண்டு போய் ஜாதிசனம் மூஞ்சிய பாக்க முடியாது”

ஞாயிற்றுக் கிழமை அவசர அவசரமாகக் கடமைக்கென நடந்து முடிந்தது ரெசப்ஃசன்.

**

அகிலனுக்கு உறக்கத்திலும் சிரிக்கும் முகம். யாரையும் பார்த்த மாத்திரத்தில் புன்னகையைப் பகிர்ந்திடும் பரிசுத்தமான ஜீவன்.

அகிலன் உண்டானது உறுதியான நாளன்று இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தாள் ஆனந்தி. சமீபத்தில் பட்ட தொடர் காயங்களின் மீது களிம்பைத் தடவியது போல் இதமாய் இருந்தது. அம்மாவிற்கு போன் செய்தாள். ஆனால் அக்கா எடுத்தாள். வேலைக்காக ஆனந்தி சென்னைக்கு வந்துவிட்ட பிறகு, பெரியக்காவின் வீட்டிற்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து விட்டாள் அம்மா.

‘சொல்லு…’

‘அம்மா இல்லையா…’

‘பாத்ரூம் போயிருக்கு.. என்ன விஷயம் சொல்லு…’ அருகில் தான் அம்மா இருந்தாள்.

‘நான் பிரக்னன்டா இருக்கேன்’ ஒவ்வொரு வார்த்தையும் மட்டற்ற மகிழ்ச்சியின் பூரிப்பில் நனைத்து வந்தன. அந்த வார்த்தைகள் வெளிப்படும் தொனியை வைத்தே, நெருங்கிய, பழகிய ஒருவரால் அவளது முகம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைப் பார்த்திட முடியும்.

“கல்யாணம் முடிஞ்சு இன்னும் முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள… அப்போ அவன்கூட முன்னமே படுத்துட்டியா… எக்குத்தப்பா ஏதோ ஆச்சுன்னா என்ன பண்றதுன்னுதான் அவசர அவசரமா ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டப் போல…” உடன்பிறந்தவளின் கருணையற்ற வார்த்தைகள் ஆனந்தியைக் குத்திக் கிழித்தன. மகிழ்ச்சியெல்லாம் வற்றிப் போய் உடம்புக் கூசியது.

அந்நாட்களில் ராஜாவின் அன்பும், கனிவும் மட்டும் கிட்டியிருக்காவிட்டால், அகிலனுக்கு இந்த புன்னகைத் ததும்பும் முகம் வாய்த்திருக்காது என ஆனந்திக்கு அடிக்கடி தோன்றும்.

***
“சீக்கிரம் வா” என மெசேஜ் அனுப்பிவிட்டு, ராஜா அலுவலகத்திலிருந்து வருவதற்காகக் காத்திருந்தாள்.

நாளைக்குள் முடித்தாக வேண்டிய கோடிங் வேலைகளும், ஆன்சைட் கோர்டினேட்டருக்கு அனுப்ப வேண்டிய ரிப்போர்ட்ஸ் ஃபாலோவ் அப் மெயில்களுமென ஒவ்வொன்றாக நினைவிற்கு வர ஆனந்திக்குத் தலைச் சுற்றுவது போலிருந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் சீனியர் டெவலப்மென்ட் லீட். பத்தாண்டு அனுபவம். இக்கட்டான சமயங்களில் தாமாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்வதோடு மட்டுமின்றி, அதனைக் குறித்த நேரத்தில் சாதுரியமாக முடித்துக் கொடுக்கும் திறமையானது ஆனந்தியைத் திட்டக் குழுவில் மட்டுமின்றி அலுவலகத்திலுமே தவிர்க்க முடியாத ஒருத்தியாய் இத்தனை ஆண்டுகளில் நிலை நிறுத்தியிருந்தது. முதல் மகப்பேற்றின் போது ஆறு மாத விடுப்பு முடிந்ததும், கூடுதல் விடுப்பெடுக்காமல் உடனே வேலைக்குத் திரும்பிவிட்டாள். விண்ணப்பித்திருந்தால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு விடுப்பை எளிதில் நீட்டியிருக்கலாம். ஆனால் முதல் ஆறுமாதத்திற்கு மட்டும்தான் சம்பளத்துடன் விடுப்பு அதற்கு மேல் லாஸ் ஆஃப் பே. அதாவது விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சம்பளம் கிடையாது. குடும்பத்தில் சமாளிக்கக்கூடிய பொருளாதாரச் சூழல்தான் நிலவியது என்றாலும்,
தன்னுடைய வீழ்ச்சியை நித்தமும் எதிர்பார்த்துப் பரிகசிக்கக் காத்திருக்கும் கூட்டத்தின் முன் சிறு சறுக்கலுக்கும் இடம் கொடுத்திடக் கூடாதென்ற வைராக்கியம், கடற்கரையில் காற்று வாங்கும் பொம்மை கதாநாயகர்களைப் போல அவளை ஓய்வெடுக்க விடவில்லை.

வலது மணிக்கட்டைத் திருப்பி மணியைப் பார்த்தாள். வெகுநேரமாகக் காத்திருப்பது போலத் தோன்றியதும் ராஜாவின் மீது மீண்டும் வெறுப்பு கவிழ்ந்தது.

பதவி உயர்வு தொடர்பான சந்திப்பை அடுத்த வாரம் புதன்கிழமை வைத்துக் கொள்ளலாமென
ரிப்போர்ட்டிங் மேனேஜரான மகேஷ் கூறியிருந்தார். இருந்த தலைவலியில் அது மறந்தே போயிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டிய பதவி உயர்வு. அப்போது மகேஷுடன் நிகழ்ந்த உரையாடலின் போது, திட்டமிட்ட இலக்கை எட்டாததால் முந்தைய காலாண்டிலும், நடப்பு காலாண்டிலும் கம்பெனிக்கு சொல்லிக் கொள்ளும்படியான லாபமில்லை என்பதால் ஆள் குறைப்பு மற்றும் பில்லிங் குறைப்பு போன்ற மாற்று நடவடிக்கைகளைப் பற்றி மேலாண்மை குழு தீவிரமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை, அணி கட்டமைப்பில் தவிர்க்க முடியாத சில முடிவுகளை நோக்கி உந்துவதால் மேலிடத்திடம் பேச இது உசிதமான நேரமில்லை எனவும் சிறிது பொறுமையோடு காத்திருக்கும்படியும் சொன்னார். அதுமட்டுமின்றி சம்பள உயர்வையும் பெரியதாக எதிர்பார்க்க வேண்டாம் என நாசூக்கான ஆங்கிலத்தில் சொல்லி தன் கையறு நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். கண்டிப்பாகப் பதவி உயர்வுக் கிடைக்குமென நம்பிக் கொண்டிருந்தவளுக்கு, இது கடும் ஏமாற்றமாக இருந்தாலும் மகேஷின் மீதான நம்பகத் தன்மையினால், கம்பெனியின் உண்மை நிலவரம் கடினமாக இருப்பின் அவரால் மட்டும் என்ன செய்துவிட முடியும் என மனதைச் சமாதானப்படுத்திக் கொள்ள முற்பட்டாள்.ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே ஆனந்தியின் படிநிலையிலிருந்த நவீனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை அறிந்த போது, அலுவலகமே கதியெனக் கிடந்தும் பயனற்று போன தன் உழைப்பையெல்லாம் எண்ணி விரக்தியடைந்தாள். அதன்பின் மகேஷிடம் பேச இரண்டு மூன்றுமுறை முயன்ற போது, கடினமான வேலைப் பளுவில் இருப்பதாகச் சொல்லித் தாமதித்தார். வேண்டுமென்றே தவிர்க்கிறார் என்று உணர்ந்தபிறகு, அவரைக் கருணையே இல்லாமல் உதாசீனப்படுத்தத் துவங்கினாள். பின்பொரு நாள் ‘கர்ப்ப காலம் என்பதால் அடுத்த சில மாதங்களில் விடுப்பில் சென்றுவிடுவாள் என்ற காரணத்தினால் ஆனந்திக்குப் பதிலாக நவீனுக்கு அந்த பதவி உயர்வுக் கொடுக்கப்பட்டிருக்கிறது’ என சக ஊழியர் மூலம் தெரிந்து கொண்ட போது மனம் ஒரு நிலையில் இல்லாமல் கொதித்தது. பதவி உயர்வு என்பது கடந்த ஆண்டுகளில் அடுத்த படிநிலைக்கான பொறுப்புகளையும், வேலைகளையும் தொடர்ந்து அர்ப்பணிப்போடு செய்து முடித்து, அக்குறிப்பிட்ட பதவிக்கான தகுதியை நிரூபித்ததன் பேரில் வழங்கப்படும் நியாயமான வெகுமதியே தவிர முன்கூட்டியே வழங்கப்படும் சிறப்பு அன்பளிப்போ; அனுபவத்திற்கான சலுகை சீட்டோ கிடையாது. ஆனால் சிறப்பாக பணிபுரியும் ஆற்றல்மிக்க தகுதியானவர்களை முன்னிலைப்படுத்தாமல் புறந்தள்ளிவிட்டு; தகுதியும், திறமையும் குறைவாக இருப்பினும் தனக்கு வேண்டுவோரை – தான் விரும்புவோரை – தனக்கு ‘ஆமாம்’ போடுவோரை – எவ்வித முக்கியத்துவமற்ற தன் உபரி வேலைகளை மறுகேள்வி கேட்காமல் செய்வோரை மட்டும் பிரதானமாக முன்னிறுத்தும் அத்தகைய பொறுப்பில் இருக்கும் கார்ப்பரேட் கைக்கூலிகள் பண்ணும் அரசியல், கரைவேட்டிக்காரர்களின் அரசியலை விட நயவஞ்சகமானது.

ராஜா கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது.

அறைக்குள்ளே வந்ததும் வராததுமாக, அவனை நோக்கி “ஐ எம் கன்சீவ்” என்றாள்.

“வாவ்… விழிகளை விரித்தான்…”

‘சீக்கிரம் வரச் சொல்லியிருக்கா.. என்னமோ ஏதோன்னு தெரியலையே’ எனப் பரபரக்க வந்தவனுக்கு ஆனந்தி சொல்லியதைக் கேட்டதும் குளிர்ச்சியாய் இருந்தது. மீண்டுமொரு முறை தந்தையானதை எண்ணி புளங்காகிதம் அடைந்தான். இம்முறை கண்டிப்பா பொண்ணுதான் என்று ‘நல்ல விஷயம்தானடி. அதயேன் மூஞ்ச உர்ர்ன்னு வச்சுட்டு சொல்ற… என அவளைக் கட்டிக் கொள்ள வந்தான்.

“ஆமாம்.. நல்ல விஷயம்.. ஏன் சொல்லமாட்ட.. எத்தன தடவ அன்னைக்கு உங்கிட்ட சொன்னேன் காண்டம் போட்டுக்கோன்னு.. அதெல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு பெரிய மயிரு மாதிரி சொன்ன…”
அணைக்க வந்தவனை வெறுமனே தள்ளிவிட்டாள்.

“ஹேய். ஏண்டி கோபப்படற… குழந்தை விஷயம்… இதெல்லாம் நம்ம கைல இல்ல”

“கைல இல்ல.. உன் கு… வேணாம்டா அசிங்கமா எதாவது சொல்லிட போறேன்…”

பொறுமை இழந்தவனாய் ‘இப்போ என்ன உன் பிரச்சனை…’ என்றான்.

“அடுத்த குழந்தைக்கெல்லாம் நான் இன்னும் ரெடி ஆகவே இல்ல..”

செல்லமாய் சீண்டுகிறாள் என நினைத்தவனுக்கு அவளின் தெளிவும், தீவிரத் தன்மையும் அதிர்ச்சியளித்தது.

“ரெடி இல்லனா எனக்கு புரியல. விரும்பியோ, விரும்பாமலோ நமக்கு நல்லவொரு விஷயம் நடக்கும் போது அதுவும் குழந்தைச் செல்வம் கெடைக்கும் போது யாராவது இப்படி சுயநலமா தட்டிக் கழிப்பாங்களா…”

‘உனக்கென்ன… நான்தான சுமக்கனும்… என் உடல் வலு பத்தியும், மனச பத்தியும் கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா…’ ஆனந்தியும் சுயத்தை வீட்டுக் கொடுக்காமல் பேசினாள்.

‘இப்ப என்ன பண்ணலாங்கற…’ வாக்குவாதத்தை மேலும் வளர்க்க விரும்பாமல் சமநிலை முற்றிலும் குலைந்து கோபம் தலைக்கேறியவனாய் கத்தினான்.

‘உனக்குப் புரியவே இல்லையா… இந்த குழந்தை வேண்டாம்… என்னால முடியாது…’ உறுதியாகச் சொன்னாள்..

‘உன் இஷ்டம் போல எதையாவது செஞ்சித் தொலை’ என விரக்தியில் கதவைச் சத்தமாகச் சாத்திவிட்டு வெளியே சென்றான்.

மனம் விட்டு பேசி கலந்தாலோசிக்கும் எண்ணத்தில் காத்திருந்தவளுக்கு, தன்னைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காதது மட்டுமில்லாமல், தன் மேலேயே குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ராஜா பேசிச் சென்றது பெருத்த ஏமாற்றமாகவும் கடும் வருத்தமாகவும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் காதல் கணவனாகவே இருந்தாலும், என்றைக்குமே ஆண்களால் பெண்களின் உடலையும், வலியையும் புரிந்து கொள்ளவே முடியாது என அவள் மனதில் ஆணித்தரமாய் பதிந்தது.

பத்து மாதம் சுமந்து, அதன் பின்னான சில வருடங்கள் பாலூட்டி உடலளவில் ஏற்படும் பெருத்த மாற்றங்களுக்கும், மனதளவிலான உளவியல் சிதைவுகளுக்கும், முட்டி மோதும் உணர்ச்சிக் குவியல்களின் கைப்பாவையாகக் காலத்துக்கும் தள்ளாடப் போகும் பெண்ணின் விருப்பம்தானே பிள்ளை பெறுவதில் முதன்மையானதாக இருக்க வேண்டும். அதைக் குறித்து ஏன் ஒருவரும் சிந்திக்க மறுக்கிறார்கள். அதுவும் அனுசரணையாக ஒரு வார்த்தை சொல்லக்கூட வக்கற்று இருப்பது என்ன மாதிரியான மனநிலை. அம்மா கடிந்து கொள்ளத்தான் போகிறாள் என முன்னமே தெரியும் என்றாலும் ராஜா கண்டிப்பாகத் தன்னைச் சார்ந்தே முதலில் யோசிப்பான் என அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதிலும் இடி விழுந்திருக்கிறது. அம்மா சொல்வது போல, கண்முன்னே சின்னக்கா குழந்தை உண்டாகாமல் பெரும் துயரத்திலிருக்கிறாள். இம்மியளவும் மறுப்பதற்கில்லை. வேண்டிய நேரத்தில் கிட்டாத குழந்தை வரத்தைப் போலவே, விரும்பாத நேரத்தில் கிடைத்ததற்காக கட்டியழுவதும் துயரம்தானே. ஒருத்தி குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறாள் என்பதற்காக இன்னொருத்தி குழந்தைப் பெற்றுக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டுமா? பொதுவான காரியங்களில், ஆனந்தியின் விருப்பத்தைப் பரிசீலிக்காமல் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல மாட்டான் ராஜா. ஆனால் குழந்தை விஷயம் என்பதனால் தவறுகிறானா..? சுமக்கப் போகிறவளின் உடல் மற்றும் மனம் சார்ந்த சமாச்சாரங்கள் குழந்தை என்னும் பேரானந்த சுழலில் பொதுவாக நீர்த்துப் போய்விடுமா..? இல்லை நீர்த்துப் போய்விட வேண்டும் என்பதுதான் குடும்பக் கட்டமைப்பின் எதிர்பார்ப்பா? உடலைக்கூட கட்டுப்படுத்தலாம். மனம் ஒத்துழைக்க வேண்டாமா.? எதிர்மறையான சலிப்பை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு நேர்மாறாக எப்படி இரத்தமும் சதையுமாக ஓர் உயிரைக் கருவில் சுமக்க முடியும்? மன ஆரோக்கியமற்ற நிலையானது, கருவின் உளவியல் சிந்தனையைப் பாதிக்காதா? இன்னொரு குழந்தையே வேண்டாமென்று சொல்லவில்லையே இப்போதைக்கு வேண்டாம் என்றுதானே சொல்கிறேன். ஒருவேளை நான்தான் தவறாக இருக்கிறேனா…? அம்மாவும் ராஜாவும் சொல்ல முயல்வதைப் போல் உயிரின் மதிப்பு தெரியாமல் விபரீதமாய் விளையாடுகிறேனா…? உயிரே போனாலும் இந்த குழந்தையை வெளியே கக்குவதுதான் என் புனித கடமையா? தாய் மனைவி என்னும் புனித பிம்பத்தைக் காபந்து செய்வதற்கு சுயத்தைப் பலிகடா ஆக்கியே ஒவ்வொரு நாளும் மடிய வேண்டுமா? சுயத்தை எள்ளி நகையாடும் எந்த பிம்பமும் அவசியம்தானா?

முடிவெடுக்க வேண்டியவளையே எவ்வளவு சாமர்த்தியமாக இந்தச் சமூகம் குற்றவுணர்ச்சியில் தள்ளிவிடுகிறது.

செத்த எலியை நடு ரோட்டில் போட்டி போட்டு இழுத்துச் செல்லும் காக்கைக் கூட்டத்தைப் போல, தன் போக்கில் எங்கெங்கோ அலைக்கழிக்கும் மனவோட்டத்தில் சிக்கிக் கொண்டு விடியும் நேரத்தில் உறங்கிப் போனாள்.

***
பிரபாகரன் கவிதைப் பதிவிட்டிருப்பதை ஃபேஸ்புக் கிள்ள மங்கிய ஒலியுடன் ஃபோன் மின்னியது.

“காலத்துக்கும் வருத்தும்
தகுந்த சூழலில்
செய்யாதவொன்று
ஆயுசுக்கும் தொடர்ந்து
நெருஞ்சி முள்ளாய்
குத்துமொன்று
சொல்லப்போனால்
எங்கோ
ஒரு மூலையில் ஆன்மாவை இன்னும்
உயிர்ப்போடு
வைத்திருக்குமொன்றுக்கு
அன்பின் மனப்பிறழ்வு
என்று பெயர்”


////

”நனைந்து கொண்டே
பறக்கும் பறவை
மழையில் நீச்சல்
பழகுகிறது”


விருப்பக்குறி இடலாமா, வேண்டாமா என்ற நீண்ட அலைவுறுதலின் முடிவில் விருப்பக்குறி இட்டாள்.
பிரபாகரனின் பதிவுகளைத் தொடர்ந்து பின்தொடர்கிறாள் என்றாலும், சொல்லாமல் கொள்ளாமல் செய்து கொண்ட திருமணம் இருவருக்குமிடையே நிரந்தர வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. அதை உடைக்க அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இதில் ஒருசதவிகிதம் கூட அவனைக் குறை சொல்ல முடியாது. பிரபாகரனின் முகத்தை எதிர்கொள்ளும் துணிவு ஆனந்திக்கு இம்மியளவும் இல்லை என்பதே மறுக்க முடியாத நிதர்சனம். தற்செயலாகவோ அல்லது தெளிவாக தீர்மானிக்கப்பட்டதன் பாலோ அவரவருக்கென வகுத்துக் கொண்ட வாழ்முறையில் நாட்கள் நதியைப் போலத் தடையின்றி, நின்று கவனிக்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாலும், ஆழத்தில் பாசி படர்ந்து செடி கொடிகளுடன் படிந்திருக்கும் சேற்றைப் போல அவர்களின் நினைவு தங்கியிருந்தது. குழம்பிய குட்டை அதுவாக தெளியக் காத்திருக்கும் மீன் பிடிகாரனைப் போல நினைவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு இருவரும் அவரவர் போக்கில் நாட்களைக் கடத்தி வந்தனர். நாட்கள் அவர்களைக் கடத்திச் சென்றன எனச் சொல்வதும் தகும்.

பெரிய பாறாங்கல் சிதைந்து, நீரில் உருண்டு, உடைந்து பலநூறு கூழாங்கற்களாய் உருமாறுவதைப் போல ஒவ்வொரு திசுக்களும் பிரபாகரன் பற்றிய நினைவை இரத்த நாளங்களில் கடத்தி தற்சமய உயிரோட்டத்தின் ஒட்டுமொத்த ஆதர்சமாய் கண்முன்னே நிறுத்தின. இதற்கு முன்னும் பல்வேறு சூழ்நிலைகளில் இப்படியொரு எண்ணம் துளிர்விட்டு, விடாமல் துரத்தியிருக்கிறது என்றாலும்கூட இந்தமுறை அனிச்சையாக அவளின் விரல்கள் பிரபாகரனின் எண்ணைச் சொடுக்கின.

வெகு நாட்களுக்குப் பிறகு அவனின் பெயர் திரையில் மிளிர்கிறது.

‘பிரபா…’

‘ஆனந்தி… எப்படி இருக்க..?’

‘நல்லா இருக்கேன்.. நீ நல்லா இருக்கியா?’

‘நல்லா இருக்கேன்…’

உடைந்து நடுங்கிய இரு குரல்களில் நிகழ்ந்த பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின் இரு பக்கமும் சில நிமிடங்களுக்கு மௌனம் பனியாய் உறைந்தது.

நறுக்கெனக் கேள்விக் கேட்கவும், ஃபோனைத் துண்டித்துச் செல்லவும் நியாயமான காரணிகளனைத்தும் தன்பக்கமிருந்தும், எந்த குற்றவுணர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல்,நடந்ததைக் குத்திக் காட்டி மனதைக் காயப்படுத்தாமல், பாதியில் நின்று போன பழைய உரையாடலை விட்ட இடத்திலிருந்து தொடங்குவதைப் போல் அவனிடம் வெளிப்பட்ட பெருந்தன்மை ஆனந்திக்குத் தன்னம்பிக்கைக் கொடுத்ததெனினும் தொண்டையில் சிக்கிக் கொண்ட முள்ளாய் அதுவே உறுத்தவும் செய்தது.

‘கன்சீவ் ஆகிருக்கேன்டா..’ ஆனந்தியே மௌன பாறைகளைத் தகர்த்தாள்.

‘ஹே கங்கிராட்ஸ் ஆனந்தி.. செகண்ட் பேபிதான இது’

‘ம்ம்ம்ம்…’

முதல் குழந்தை பிறந்திருப்பது, அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவனும் அவளைப் பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறான் என்னும் எண்ணம் அச்சூழ்நிலையிலும் ஆனந்திக்குப் பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.

‘ஏன் ஆனந்தி குரல் ஒருமாதிரி இருக்கு.. ஏதாவது பிரச்சனையா ஆனந்தி.?’

“பிரச்சனையலாம் இல்லடா..”

அவள் ‘டா’ போடுவதைப் போல அவனுக்கு ‘டி’ போட வராது. அவனுக்கு எப்போதும் ஆனந்திதான். பத்து நிமிட பேச்சில், எல்லா வாக்கியங்களின் முடிவிலும் “ஆனந்தி” இருப்பதைப் போலவே, ஒவ்வொரு வாக்கியத்தின் தொடக்கத்திலும் “ஆனந்தி” இருக்கும்.

பின்ன என்ன ஆனந்தி… உனக்கு விருப்பம் இல்லையா?

நீண்ட நேரமாய் இந்த ஒற்றை கேள்விக்காகக் காத்திருந்து, அதற்கெல்லாம் இடமே இல்லை என மனதளவில் முடிவு கட்டியிருந்தவளுக்கு, உயிர்த் தோழனிடமிருந்து அந்தக் கேள்வி வருகையில், தேக்கி வைத்த வார்த்தைகள் தொண்டையைத் தாண்டாமல் கண்ணீராய் பெருக்கெடுத்தன.

ஆனந்தி…..?

“ஹெ ஹ் ஹெம்” என்று தொண்டையைச் செருமினாள்.

தான் இன்னும் அடுத்த குழந்தைக்குத் தயாராகவில்லை என்பதையும், ராஜாவும் அம்மாவும் அதனைப் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதையும் கடகடவென பேசிவிட்டு அடுத்து பிரபாகரன் என்ன சொல்லப் போகிறான் என்பதற்காகக் கண்ணீரில் நனைந்திருந்த சொற்களைக் கொண்டு புலம்பலின் விளிம்பில் நிகழ்ந்திருந்த உரையாடலை ஓர் இடைவெளி விட்டு நிறுத்தினாள்.

“உனக்கு விருப்பம் இல்லனா பண்ணவே பண்ணாத ஆனந்தி. உன் உடம்பு பத்தியும், மன ஆரோக்கியம் பத்தியும் உனக்கு மட்டும்தான் தெரியும். சில சமயங்கள்ல பெத்தவங்களாலகூட அத புரிஞ்சிக்க முடியாது. அவங்களோட உணர்ச்சிச் சுழல்ல மாட்டிகிட்டா நாமதான் கஷ்டப்படணும். எப்பவும் யோசிக்கிற மாதிரி, இப்பவும் மத்தவங்களுக்காக யோசிக்காத. கஷ்டமாத்தான் இருக்கும் பட் டோன்ட் ஃபீல் கில்ட். அவசியமே இல்ல. மொத கொழந்த பொறந்து ஒன்றரை வருஷம் பக்கம்தான ஆகுது. அதுவும் உனக்கென்ன இப்போ இருபத்தெட்டு வயசுதான். இன்னும் டைம் இருக்கு. ஒரு கட்டத்துல உனக்கே தோணும். ‘இட்ஸ் எ டைம் ஃபார் நெக்ஸ்ட் பேபி’ன்னு. ராஜாகிட்ட இன்னொரு முறை நிதானமா பேசி புரிய வைக்க முயற்சி பண்ணு. அவன் புரிஞ்சிப்பான்.”

பிரபாகரன் பேசிக் கொண்டிருக்க, மறுமுனையில் சத்தமே இல்லாமல் அழுது கொண்டிருந்தாள். அழுகை என்றால் வெறுமனே கண்ணீர் இல்லை. மகிழ்ச்சியின் தூய அழுகை. ஆசுவாசத்தின் ஆனந்த அழுகை. தன் மனதைப் பிரதியெடுத்துப் போல் புரிந்து கொள்ள ஒரு ஜீவினிருக்கிறது என்ற பேருண்மையின் அழுகை.

இந்த புரிதலும், ஆறுதலும் மட்டும்தான் அக்கணத்திற்குத் தேவையான ஒன்றாய் இருந்தது.

வேறெதுவுமில்லை.

***
பெரும் மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன மேகங்கள்.

பாரம் இறக்கி வைத்த நெஞ்சைத் தூறல் தொட்டு ஒத்தடம் தந்தது. மழையின் தொடுகை என்றுமில்லாதது போல் உடலைக் கிளர்த்தியது. நிதானமாக நனைந்து கொண்டே கொடியிலிருந்து துணிகளையெடுத்து வீட்டிற்குள் வந்தாள்.

இன்னும் நனைய வேண்டும் போலிருந்தது.

**********

karthiksona91@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button