அழன்

அழன்

சிறுகதை:- ஜகன் கிருஷ்ணன்

ரயிலிலிருந்து இறங்கி விடுதி அறைக்கு வந்து பல மணி நேரம் ஆகிவிட்டது. முன் தினமும் இந்நாள் காலையும் அவள் செய்த எதுவும் ஏற்கும்படியில்லை. இதயத்தின் உள்ளில் ரத்தக் குழாய்களெல்லாம் கடப்பாறைகளாய் மாறி குத்திக் குதறிக் கொண்டிருப்பது போல் அவள் பார்வையும் அதில் தெரிந்த ஒரு விருப்பமின்மையும் செதில் செதிலாக இதயத்தை தகர்த்துக் கொண்டிருந்தது.

என் ஆவலையும் குறை சொல்லலாம். எதையோ எதிர்பார்த்தபின் வேறேதோ நடக்கும்போது எல்லோருக்கும் நிகழும் ஏமாற்றம் தான். இது ஒன்றும் புதிதல்ல. எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் நடக்கக் கூடியதுதான். ஆனால் அந்த ஏமாற்றத்தினால் உருவாகும் உணர்வு மாற்றங்களுக்கு தேய்வழக்கு படிம பேதங்கள் இருப்பதில்லை. அவரவர் மனதில் ஏற்படும் காயமும் வலியும் அவரவர்களின் சம்பத்தே.

அவளும் அவள் தாயும் இரு குழந்தைகளையும் ஒரு மூலையில் வைத்து கைகளை அரண் போல வளைத்து பதுக்கிக் கொண்டபோதே எனக்கு விளங்கிவிட்டது. நான்கு சீட் தள்ளி இருந்த அப்பா ரயிலேறியவுடன் முதலில் வந்தது குழந்தையை பார்க்கத்தான். அவர்கள் பிடித்திருந்த தோரணையை கண்டு ஒரு ஓரமாக என்னை அழைத்து ஒரு குழந்தைய கொடுக்க சொல்லுடா என்று கெஞ்சினார். அவள் சம்மதிக்க மாட்டாள் என்பது எனக்கு தெரியும்.

ஆனாலும் நான் ஏன் அதை எதிர்பார்த்தேன். இதுதான் மனித மனதின் முட்டாள்தனம். மிகப்பெரிய முட்டாள்தனம். எத்தனை தத்துவங்களை கரைத்துக் குடித்து ஆராய்ந்து அலசியிருந்தாலும் இந்த அற்ப ஏமாற்றத்தில் இருந்து நம்மால் தப்ப முடியாது. அந்த மையப் புள்ளியை சுற்றி சுழன்று கொண்டிருக்கக் கடவதே நம் பரிணாம வளர்ச்சியின் பின்னடைவு.

ஓடுற வண்டியில குழந்தையை எடுத்துட்டு நடந்தா, கீழே விழுந்துடுமே என்று ஏதோ சின்னப் பிள்ளைக்கு ஆத்திச்சூடி அறிவுரை சொல்வது போல் எனக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.

சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்மணி கையில் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு எங்களை கடந்து சென்றாள். நான் சிரித்தேன். அதுவே அவளுக்கு கோபமூட்டியது. அவள் அது முதல் பேசிய விதத்திலேயே அவளுக்கு குழந்தை என் பெற்றோரிடம் இருப்பதில் விருப்பமில்லை என்று தெரிந்தது.

என் பிரியத்திற்குரிய மனைவிக்கு ஏன் இத்தனை கொடூரமான ஒரு மனோபாவம்? குழந்தை மனோபாவம் கொண்டவள் எனினும் எந்தக் குழந்தையிடம் இத்தகைய ஒரு குரூரமான சிந்தனை இருக்கும்? சத்தியமாக தெரியவில்லை. அதை நினைக்கும்போதே என் முகம் மாறுவது தெரிந்து என்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள். என்ன செய்தாலும் எனக்கு ஆதரவாக எதுவும் சொல்லப்போவது இல்லை என்பது தெளிவு. இந்த எதிர்பார்ப்பை மட்டும் அவள் குலைக்கவில்லை.

என் திருமணம் ஒரு மிகப் பெரிய தவறு. குழந்தைகள் – அதனினும் பெரிது. புதிய உறவுகள் உருவாகிக் கொண்டே வர அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கில் நின்று கொண்டு பாசம் என்னும் அரவக் கயிறுகளை வீசி எரிந்து கட்டி இழுத்துக் கொண்டிருக்க பிய்ந்து கிழிந்து உடைந்து சல்லிப் பொடிகளாய் மனம் துண்டு துண்டாக உடைந்து எஞ்சிய சிறு துளி மட்டுமே அவர்களை சென்றடைகிறது.

அவள் காரணாவளியை பெருக்கிக் கொண்டே போக அதை சட்டை செய்யாமல் விரக்தியுடன் நான் சிரித்தேன். அந்த அலட்சியம் அவளை சீண்டியது. கோபத்துடன் அவள் உதடுகளிலிருந்து தெறித்த சொற்களில் இருந்தது பலகாலமாக அவளுள் தகித்துக் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சி.

அவை அக்கினிக் கங்குகளாய் வெளியேறி மங்கி எரிந்து மறக்கடிக்கப் பட்டுக் கொண்டிருந்த கடந்த கால சித்திரங்களை தன் கரங்களால் அணைத்து கோரத்தீப்பிழம்பாக எரியவைத்தது.

தீப்பிழம்பின் மத்தியில் அவிசு பூதமாக அம்மா எரிந்து கொண்டிருந்தாள். பெண் பார்க்கச் சென்ற போது கோவில் வாசலில் ச்சீய் என்று சொல்லி ஒரு அருவருப்புடன் அம்மா நின்ற அந்த சித்திரம் ஆயிரம் கொல்லிகளை காலடியில் வைத்துக் கொண்டு அக்கினி சொரூபியாய் வெறுப்பை கக்கியவாறே எரிந்து செத்த ஒரு காவல் தெய்வத்தின் உருவம்போல் இருந்தது. கட்டை விரல் நகங்கள் தரையை குத்திக் கொண்டிருக்க வீங்கி சிவந்திருந்த கண்கள் பிதுங்கி வெளியேறி எங்களையெல்லாம் சுழன்று பயமுறுத்திய விதம். அந்த ஒரு காட்சி மட்டுமே

என் மனைவியின் மனதில் அம்மாவின் படிமமாக எஞ்சியுள்ளது.

அம்மா செய்த பல விஷயங்களில் எனக்கு என்றைக்குமே உடன்பாடு இருந்ததில்லை.

எடுத்ததெற்கெல்லாம் குறை சொல்லும் குணம் தொட்டிலிலிருந்தே தொத்திக் கொண்டிருந்த ஒன்றோ என்று தோன்றும். கிட்டத் தட்ட என் மனைவி போல். ஆனால் அம்மாவிடமும் சில நேரங்களில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. எந்த பாட்டிக்குத்தான் தன் பேத்திகளை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. அவளின் அந்த எதிர்பார்ப்பில் தவறேதும் இருப்பதாக தோன்றவில்லையே. மீண்டும் அதே விதை அதே வினை.

எத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்தாலும் தன் பேத்திகள் விளையாடும் அந்த மூணு நிமிட காணொளியை அவள் காணும்போது ஆளே மாறிவிடுவாள். அவள் கவலைகள் உருகி கரைந்து கன்னக்குழிகளில் மூழ்கி மறைந்து களிம்பற்ற வெள்ளி போல் மின்னும் சிரிப்பை காணும்போது அவளும் ஒரு குழந்தைதானோ என தோன்றும். தன் பேத்தியின் மின்பிம்பமாக அவள் கைப்பேசியில் இருக்கும் பத்து பதினைந்து புகைப்படங்களுடன் மட்டுமே கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு படத்தையும் அவள் ரசனையில் தோய்த்து எடுத்து உவப்படைத்தலை வாடிக்கையாகவே வைத்திருந்தாள்.

அந்த குழந்தை சிரிக்கிறத பாரேன். அது மட்டும் சிரிக்கல, சுத்தி இருக்குற எல்லாமே சந்தோஷமா சிரிக்குறா மாதிரி இல்ல?

அணு அணுவாக அந்த படத்தை கண்களாலேயே விழுங்கி ருசித்து அந்த ரம்மியத்தில் லயித்துக் கொண்டிருப்பாள்.

ஆனால் அக்குழந்தையை தொட்டுத் தூக்கி எடுத்துக் கொஞ்சத்தான் எத்தனை தடைகள். ஒவ்வொரு முறை நெருங்கித் தொடும்போதும் ஆறு கண்கள் போலீஸ்காரன் போல வேவு பார்க்க தொடங்கிவிடும். அந்த சந்தேகப் பார்வையின் நெரிசலில் சிக்கிக் கொண்ட பாசம் தன்னிடம் இருந்த விலகிய ஒரு தாதுவை பிரஞையுடன் கட்டித் தரித்து விலக்கி விட, ஒரு தர்மசங்கடமான நிலையில் மட்டுமே அவள் குழந்தையை பார்க்க நேரிடும். தன் ஒவ்வொவரு அசைவும் சந்தேகக் கண்களால் கண்காணிக்கப் படுகிறது என்ற தெரிந்தவுடன் எவ்வளவு நேரம்தான் குழந்தையை வைத்துக்கொள்ள முடியும். கனத்த மனதுடன் அவள் திருப்பிக் கொடுத்து விடுவாள்.

எந்த ஒரு உணர்ச்சியும் மட்டற்ற பிரவாகமாக வழிந்தோடும் ரீதியில் அம்மா தனக்குள் எதையுமேவைத்துக் கொள்ள மாட்டாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அவளுக்குள் எவ்வித அணையும் தடுப்பும் இல்லை. கோபம் மூர்க்கம் அடையும் நேரம் அவளின் செயல்பாடுகளில் மெல்ல மெல்ல சில மாற்றங்கள் நிகழும். யாரிடமும் பேசாமல் மெளனமாக இருப்பாள். பின்னர் உணர்ச்சி வேகத்தின் கசை வீச்சில் கை கால்கள் அதி தீவிரமாக செயல் பட ஆயத்தமாகும். அப்போது அவள் கையில் இருக்கும் எந்தப் பொருளை பார்த்தாலும் பரிதாபமாக இருக்கும். அந்தச் செயல் பொறுமையின் எல்லையை அவள் அடைந்ததற்கான ஒரு எச்சரிக்கை. அந்த எல்லையை மீறுவதற்கு அவளுக்கு வெகு நேரம் எடுக்காது. கோபத்தின் உச்சத்தில் பீறிட்டெழும் அவள்

உணர்வுகளின் சக்தி தாளாது அந்த இடமே கவசமிட்டு தன்னை காத்துக் கொண்டது போல் இறுகி விடும். என்ன செய்வதென்று தெரியாமல் கையில் கிடைக்கும் பொருளைக் கொண்டு தன்னையே வருத்திக் கொள்வாள். அந்த நேரத்தில் அவள் செய்யும் செயல்கள் தீவிரவாதச் சித்திரவதைகளுக்கு ஈடாக இருக்கும்.

ஒரு முறை, உச்சக் கட்ட கோபத்தில் உப்புக்கு கட்டியை உடைக்கும் தடியான ஒரு கல்லை எடுத்துக் கொண்டு தன் வலக்கையை உந்தி, ஓங்கி அடித்தவாறு இனி இந்த கையால உனக்கு சோறு போட மாட்டேன் என்று பைத்தியம் போல் அடித்துக் கொண்டது நினைவுக்கு குவியலில் சூம்பிக் கருகிய நெல் மணிபோல் உறுத்தியது. அதே அம்மா, சற்று நேரம் கழித்து, ஒன்றுமே நடக்காதது போல், பந்து போல் வீங்கியிருந்த பின்னங்கையுடன் உணவு பரிமாறியபோது உள்ளுணர்வில் வியர்த்து மெலிந்த ஆற்றுப்புழையில் கல்லெறிந்து போல ஒரு சஞ்சலம். சாப்புடுடா சீக்கிரம். வேலைக்கு நேரம் ஆகுதுல்ல என்று சொல்லிவிட்டு அடுக்கலைக்குள் மற்ற பணிகளை பார்க்க சென்று விட்டாள்.

அவ்வளவு தான் அம்மா. அந்த காலத்து மனுஷி. காலனி ஆண்டு விழாவில் மேடையேறி; பெண்களுக்கு முற்போக்கு சிந்தனை வேண்டும்` என்று நான்கு நிமிடம் பேசியதை தாண்டி அவள் வாழ்க்கையில் முற்போக்கிற்கே இடமில்லை. இன்னும் பழைய சம்பிரதாயங்களையும், வழக்கங்களையும் மட்டுமே கணக்கில் கொண்டு தன் வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டாள்.

அவளுக்கு இதுதான் வழி என்று சொல்லிக் கொடுக்க ஒரு ஆள் இல்லை. அவள் தாய் தற்கொலை செய்து கொண்டபோது அவளுக்கு வயது 5. அம்மாவின் இந்த வெறிபிடித்த செயல்களுக்கு பின்னே இருக்கும் காரணம் அந்த நிகழ்வுதான் என்று பலர் என்னிடம் கூறியிருக்கின்றனர். மாமாக்களும், அத்தைகளும் ஏன் தாத்தா (அம்மாவின் அப்பா) கூட சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் சித்தி பாட்டி (அம்மாவின் சித்தி) சொன்னதுதான் உளரீதியில் என்னை பாதித்தது.

சின்ன பொண்ணுடா அவ. ரெட்டை ஜட ரிப்பன் போட்டுக்கிண்டு கைக்குழந்தையா இருந்த உங்க மாமன் கூட விளையாடுறதுதான் அவளுக்கு அப்போ ரொம்ப பிடிக்கும். அப்போதான் ஒரு நாள் உங்க பாட்டி அவ கிட்ட குழந்தையை குடுத்துட்டு சமையல் ரூம்ல கதவை சாத்திக்கிட்டா.

இவ குழந்தையை தூக்கிட்டு வெளியிலேந்து எட்டி பாத்தப்போ உங்க பாட்டி வைக்கோல் பொம்மையாட்டம் எரிஞ்சிக்கிண்டு இருந்தா. சின்ன குழந்தை பாக்க வேண்டியதா இதெல்லாம்.

கூப்பிட்ட குரலுக்கு ஆள் இல்ல. அம்மா அம்மானு கத்தியிருக்கா. கை குழந்தையை வெச்சிக்கிண்டு இந்தா பொண்ணுதான் என்ன பண்ண முடியும். அப்புடியே அழுது அழுது தீர்த்துட்டா. என்ன கொடுமையோ. இதையெல்லாம் பாத்ததா அவ யார் கிட்டயும் சொல்லல.

ரொம்ப நாள் கழிச்சி எதுக்கோ அவளை கொஞ்சம் அதட்டினதுக்கு வந்ததே ஒரு கோபம். பக்கத்துல இருந்த கிரிக்கெட் பாட்ட எடுத்து வீசி எறிஞ்சிட்டு வெளில குடு குடுன்னு ஓடி போனா. அவளை சமாதானம் செய்ய போனேன். என்னடி ஆச்சுன்னு நான் கேக்குறதுக்கு முன்னாடி அழுது ஒஞ்சி போயி கன்னமெல்லாம் உப்பியிருந்தது. அப்போதான் உங்க அம்மா இதப்பத்தி என்கிட்டே முதல்ல சொன்னா. அவ முண்டக்கண்ண பெருசா விரிச்சிகிட்டு சொன்னப்போ, தான் பாத்ததையெல்லாம் எனக்கு அவ கண்ணுலேயே திருப்பி காட்டுறமாதிரி இருந்தது. உங்க பாட்டி எரிஞ்சு செத்துப்போய் அவ கண்ணுலேயே புகுந்துட்டா. அவ கண்ணெல்லாம் நெருப்பு ஒவ்வொரு முறை அவள் வருத்திக் கொண்டது என்மேல் அவள் வைத்திருக்கும் அன்பின் பால் என்று அப்பா சொன்னார். முட்டாள்தனமாக தோன்றியது எனக்கு. அன்பிருக்கும் பட்சத்தில் மகனின் விருப்பங்களை சரிவர புரிந்துகொள்ளுதல் தானே சரியான வழி. ஆனால் அவள் செய்ய நினைத்தது ஒரு உளவியல் சித்திரவதை. அவள் உப்புக் கல்லை வைத்து அடித்துக் கொண்ட போதோ, கத்தியை வைத்து கீறிக்கொண்டபோதோ, சுவற்றில் தலையை முட்டிக் கொண்டபோதோ என்னிடம் பெரிதாக எதிர்வினை ஒன்றும் இல்லை. நான் அவள் செயல்களை ஒரு மனநோயாளியை பார்ப்பதுபோல் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவளுக்கும் என்னை எங்கே அடிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது.

அம்மாவுக்கு டெங்கு காய்ச்சல் வந்து ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அங்கே இருந்த ஒரு உதவாக்கரை டாக்டர் மூன்று நாட்கள் என்ன செய்தான் என்று தெரியவில்லை. மூன்று நாட்களில் அம்மாவின் உடல்நிலை மிக மோசமாகியிருந்தது. உடல் சோர்ந்து கருத்து மெலிந்திருந்தது. வாயைத்திறந்து கொண்டுதான் மூச்சு வீட்டுக் கொண்டிருந்தாள். கண்கள் சொருகி இமைகள் பாதி மூடியவாறு விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். உடலெங்கும் தளர்ந்து போனதற்கான தடையங்கள் மட்டுமே இருந்தது.

இதைக் கண்டவுடன் அப்பா கோபத்தில் டாக்டரை கத்திவிட்டார். அங்கே ஒரு ரகளை உருவாக ஆரம்பித்து கைகலப்பில் இறங்குவதற்கு முன் அப்பாவை சமதானப் படுத்தினேன். தங்கையை அம்மாவின் அருகில் இருக்க சொல்லிவிட்டு நானும் அப்பாவும் வேறு ஆஸ்பத்திரியை நோக்க ஆயத்தமானோம். பில் கட்ட போனபோது இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது என்று தெளிவாக கூறிவிட்டனர். அது அந்த டாக்டரின் வேலை என்பது தெரியும். அப்பாவிடம் காசு இல்லை. ஆனால் என்னிடம் கேட்க மாட்டார். நான் வற்புறுத்தி, அதுவரை நான் என் கல்யாணத்திற்காக சேமித்து வைத்த அத்தனை பணத்தையும் கொடுத்தேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

அம்மா குணமாகி வீடு திரும்பியபோது குடியிருப்பில் இருக்கும் எல்லாரும் நலம் விசாரித்தபடி இருந்தனர். முகம் முழுக்க பல்வேறு நெகிழி குழாய்களால் மறைக்கப்பட்டு கண்ணாடி குடுவையில் காற்றை உறிஞ்சிக் கொண்டிருந்த அம்மா இப்போது மீண்டும் அசதி தோய்ந்த சிரிப்போடு நல்லாயிருக்கேன் என்று எல்லோரிடமும் சொன்னபோது ஏதோ ஒரு நிறைவு. இத்தனைக்கும் பாசம் பொங்கி வழிந்து அம்மா என்று கட்டி அணைத்துக் கொள்ளும் தன்மையெல்லாம் என்னிடம் கிடையாது. அம்மாவுக்கு என்று மட்டுமல்ல எல்லோருக்குமேதான். இருந்தாலும் அம்மாவை

குணமடைந்து சிரிப்புடன் பார்த்ததில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்தது.

நலம் விசாரித்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக தத்தம் வீட்டிற்கு செல்லத் தொடங்கினர். இறுதியில் எல்லோரும் சென்றபின் அம்மா சற்று நேரம் அப்பாவுடனும் தங்கையுடனும் பேசிக் கொண்டிருந்தாள். எனக்கும் பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் அம்மா கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று அமைதி காத்தேன். அந்தப் பேச்சும் ஓய்ந்தது. திடீரென ஒரு அமைதி. அப்பா எழுந்து வேறொரு அறைக்கு சென்றார். தங்கை மடிக் கணினியில் எதையோ பார்க்கத் தொடங்கினாள். அம்மா எப்போதும் போல அடுக்கலைக்குள் செல்லும்போதுதான் நான் அந்த தவறை செய்தேன்.

அம்மா இப்போ தேவல்லியாம்மா என்று நான் கேட்டேன். அவள் ஆழ்மனதில் சன்னமாக எரிந்து கொண்டிருந்த தீயில் என் சொற்கள் விழுந்து பூதாகரமாக வெடிக்கச் செய்தது. கைகளை இறுக்கிப் பிடித்து பற்களை நற நற வென கடித்துக் கொண்டிருந்தபடி என்னை கோபம் கக்கும் அந்த கண்களால் பார்த்தாள். எத்தனை வருடமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு அது. விரைத்திருந்த அவள் கை மணிக்கட்டில் ஊசி முனைகள் ஊடுருவி ரத்தம் குடித்த தடங்கள் இன்னும் சிவந்திருந்தன. மின்னல் வேகத்தில் தன் கழுத்தில் இருந்த தங்கத் தாலிக் கயிறை எடுத்து என் முகத்தில் வீசி எறிந்தாள். கயிற்றில் இருந்த ஒரு ஊசி என் கன்னத்தின் பருவைக் குத்தியத்தில் ஒரு ரத்தக் குமிழ் எட்டிப் பார்த்தது. வெச்சிக்கோ. உன் காசுல உயிர் புழைச்சேங்குற நெனப்புல நலம் விசாரிக்க வரியா நாயே. இந்தா உன் காசு. போய் எந்தக் கூத்தியாளுக்கோ தேவுடியாளுக்கோ கொடு என்று சொல்லி திரும்பிப் பார்க்காமல் சென்றாள். முகத்தில் அறைந்த தாலிச்சரடு தரையில் விழுந்திருந்தது. அதை எடுத்து மேஜை மேல் வைத்தபின் படுக்கை அறைக்குள் சென்றேன். ஒரு வருடம் கழிந்து கல்யாணத்தில்தான் அம்மாவிடம் மீண்டும் பேசினேன்.

அப்படிப்பட்ட அம்மா ரயிலிலும், விடுதி அறையிலும் குழந்தைக்கு அடுத்து வரும்போது எல்லாம், என் மனைவியின் வீட்டார், எச்சரிக்கை என என்னென்னவோ ஆணைகள் பிறப்பித்ததை கேட்டுக் கொண்டு சரி சரி என்று தலையாட்டியதை பார்க்க வியப்பாக இருந்தது. எந்த நிமிடத்திலும் வெடித்து விடுவாள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் உடைந்து போயிருந்தாள். நான் இதுவரை காணாத ஒரு காட்சி அது. வேழப்பாதங்கள் மிதித்து அமிழ்த்தியது போல அடங்கி போய்விட்டிருந்தாள். அப்பா அதை பார்க்க முடியாமல் வெளியே சென்றார்.

ஆனால் அம்மா அதைப் பற்றி கவலைப் படவே இல்லை. கை கால்களை உதைத்துக் கொண்டு பஞ்சு பொம்மை போல புஷ்டியாக இருந்த குழந்தையை கைத்தாங்கலாக தூக்கி எடுத்து கொஞ்சி முத்தமிட்டாள். தேக்கி வைத்திருந்த ஆசையெல்லாம் அந்த ஒரு முத்தத்திலேயே குழந்தைக்கு தர வேண்டும் என நினைத்தாளோ என்னவோ குழந்தைக்கு அது பொறுக்க முடியவில்லை. அழத் தொடங்கியது. அவள் கையிலிருந்து குழந்தை பிடுங்கப்பட்டது. அவள் அறையை விட்டு மெல்ல வெளியேறினாள். நானும் பின்னே சென்றேன். ஒன்றும் பேசவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவளே பேசினாள்.

குழந்தை என்ன பாத்தாலே அழுது இல்ல அப்படியெல்லாம் இல்ல மா

மீண்டும் ஒரு அமைதி.

நானும் குழந்தையை நல்லா பாத்துப்பேன் டா

யாரும்மா இல்லன்னு சொன்னா

அவள் என் முகத்தை பார்த்தாள். கண்கள் குளமாகி இமை மயிர்களில் கண்ணீர் ஒட்டிக் கொண்டிருந்தது.

நான் முன்ன மாதிரி இல்லடா என்று சொன்னாள்.

அவள் கண்களில் நெருப்பு அணைந்து புகை மண்டியிருந்தது.