கட்டுரைகள்

பேட்மேன் – சில கோணங்கள்

மா.க.பாரதி

காமிக்ஸ் உலகின் கதைமாந்தர்களில் அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாத்திரங்கள் பேட்மேன் (Batman) உலகைச் சேர்ந்தவர்கள் எனலாம். இன்றுவரை காமிக்ஸ், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கார்ட்டூன் தொடர்கள், வீடியோ கேம் விளையாட்டுகள் என அனைத்து ஊடகங்களிலும் தொடரும் பேட்மேன் உலகம் முடிவற்று நீண்டு கொண்டிருக்கும் அளவு படைப்பாற்றல் வெளியை (Creative Scope) வழங்குகிறது. பேட்மேன், அவனது நண்பர்கள், எதிரிகள் எனச் சித்தரிக்கப்படும் அனைவரது வாழ்விலிருந்தும் ஒன்றினை எடுத்து ஒரு பெரும்படைப்பை உருவாக்க இயலும்.  ஜோக்கர், பென்குவின், ஹார்வி டென்ட் (Two Face), கேட்வுமன் (Catwoman), பாய்ஸன் ஐவி (Poison Ivy) போன்ற பாத்திரங்கள் பல்வேறு விதமாகப் பல தொடர்களில் சித்தரிக்கப்படுவது ஒரு சிறு எடுத்துக்காட்டு.  பேட்மேன், ஜோக்கர் பற்றிய எண்ணிறந்த ஆய்வுகள் இன்றுவரை வந்தவண்ணம் உள்ளது.  பேட்மேன் பற்றிய ஒரு அறிமுகமாக இக்கட்டுரை அமைய விழைவு கொள்கிறது.

பேட்மேனின் முன்கதை அனைவரும் அறிந்த ஒன்று.  ப்ரூஸ் வேய்னின் பெற்றோரான தாமஸ் மற்றும் மார்தா வேய்ன், அவனது மிக இளம் வயதிலேயே கொல்லப்படுகின்றனர்.  காதம் (Gotham) நகரில் எண்ணற்ற அளவில் நிகழும் குற்றச் சம்பவங்களுள் ஒன்றே இது என உணரும் ப்ரூஸ், தன்னை ஒரு விஜிலாண்டியாக உருவாக்கிக்கொண்டு பேட்மேனாகக் குற்றங்களைத் தடுக்கிறான்.

நிறுவப்பட்ட முதலாளிய ஒழுங்கு, ஊழல் மலிந்த அதிகாரத்தின் மெத்தனத்தாலும், திறமையற்ற காவல்துறையாலும் கட்டுக்குலைவதைக் கண்டு மனம் சகியாத ப்ரூஸ், தனது தனிப்பட்ட அனுபவங்களின் தூண்டுதலால் பேட்மேனாக உருவெடுக்கிறான்.  பேட்மேனாக அவனது இருப்பே, அவ்விருப்புக்கான நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது.  இதிலிருந்து அவனது இருமை சார்ந்த குழப்பங்கள் தொடங்குகிறது.  பேட்மேனின் செயல்பாடுகள் அமைப்பின் சட்டகத்துக்குள்ளே இருந்து நிகழும் ஒன்றல்ல.  எனினும் அவனது செயல்பாடுகள் (’குற்றவாளி’களைக் கொல்லாமை, சட்டத்தின் முன் நிறுத்துதல், மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆர்க்கம் பாதுகாப்பகத்தில் – Arkham Asylum ஒப்படைத்தல்) யாவும் அமைப்பின் சட்ட ஒழுங்கின் எல்லைக்குள்ளேயே நிகழ்வதை நாம் காணலாம்.  அவனது இருப்பும் செயல்பாடுகளும் காதம் நகரின் காவல் மற்றும் நீதித்துறையின் திறமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.  எனவேதான் தொடக்கத்தில் குற்றவாளிகளின் பட்டியலில் பேட்மேன் சேர்க்கப்படுகிறான் (Batman 1989).  அவனது செயல்பாடுகள் என்னதான் இத்துறைகளின் நோக்கத்தைக் கேலி செய்தாலும் அமைப்பின் நலனுக்கான ஒரு புறச்சக்தியாகத் (External Force) தம்மை பேட்மேன் கற்பிதம் செய்து கொள்கிறான்.  இவ்விதமான அமைப்பைக் குலைக்காத அவனது செயல்பாடுகள் மீதான நம்பிக்கையால்தான் நேர்மையான காவல்துறை அதிகாரியான ஜிம் கார்டனும் (Jim Gordon) பேட்மேன் பக்கம் திரும்புகிறார்.  பேட்மேனுக்கு முன்பு எத்தனையோ Self righteous விஜிலான்டிகள் வந்திருப்பினும், அவர்களது செயல்கள் அமைப்பின்மீதான நம்பிக்கையைக் குலைப்பதால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஜிம் இறங்குகிறார் (Gotham Series).

அமைப்பைக் காக்க விரும்பும் தன்மையை நாயகன் கொண்டிருப்பதால், பேட்மேனின் சூப்பர் வில்லன்கள் பலர் அமைப்பைக் குலைக்க விரும்புபவர்களாகவும், குரூர மனம் படைத்தவர்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  பேன் (Bane) மக்களுக்கான அமைப்பு (Power to the people) என்ற அறைகூவலை முன்வைத்து வன்முறையை நிகழ்த்தும் கதாப்பாத்திரம்; ஜோக்கர் தெளிவாகவே தன்னை அனார்க்கிஸ்ட் என்று அழைத்துக் கொள்பவன்; அமைப்பின் சேவகராக இருந்து பின்னர் எதிராக மாறும் ஹார்வி; நகரையே அழிக்க விரும்பும் லீக் ஆஃப் ஷேடோஸ் (League of Shadows) அமைப்பினர்.  என்னதான் பென்குவின், மிஸ்டர் ஃப்ரீஸ் (Mr. Freeze), ஐவி, ரிட்லர் (Riddler), ஸ்கேர்குரோ (Scarecrow) என வில்லன்கள் பட்டியல் நீண்டுகொண்டே போனாலும், மேற்குறிப்பிட்டோர் மிகுந்த ஆபத்தானவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

பேட்மேன் ஜோக்கர் இருமை பற்றிப் பலர் பேசிக் கேட்டிருப்போம்.  இருவரும் ஒருவரையொருவர் நிறைவு செய்யும் வண்ணத்தை அவர்களே பல கார்ட்டூன்களிலும் படங்களிலும் பேசியுள்ளனர்.  தத்துவ அடிப்படையில் ஜோக்கரின் அருகில் வரும் வீ (V – V For Vendetta)யை ஒப்பிடுவோம்.  ஜோக்கருக்கு மிகச்சிறந்த முன்கதையை (Batman – The Killing Joke) வழங்கிய ஆலன் மூர் (Alan Moore) தான் V For Vendetta காமிக்ஸையும் எழுதினார் என்பது உதிரித் தகவல்.  இருவரும் பல புள்ளிகளின் நுண்மையாக இணைந்தும் வேறுபட்டும் நிற்கின்றனர்.  V 90களின் பிரிட்டனின் சூழல்களை மையமாகக் கொண்ட, ஒரு Orwellian Futuristic உலகத்தில் ஃபாசிஸ ஆட்சியின் கீழ் வாழ்கிறான்.  ஜோக்கர் (பென்குவின் போன்ற குற்றவாளிகள் மேயராகச் சாத்தியக்கூறுகள் உள்ள) வளர்ந்த முதலாளிய ஜனநாயகச் சமூகத்தில் வாழ்கிறான்.  “Chaos is the natural order of the world” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் வீ, நிகழ்காலத்தின் குழப்பம் (Chaos) பின்னர் வரும் இயற்கை ஒழுங்கால் (Order of Nature) சீர்செய்யப்படும் என முழங்குகிறான்.  அனாக்கிஸத்தின் மிக முக்கியத் தத்துவ இழையைத் தனது அடித்தளமாகக் கொள்ளும் வீ-யை ஒரு ’பைத்தியக்காரத் தீவிரவாதி’ (Insane Terrorist) என்று அரசு முத்திரை குத்தித் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்துகிறது.  அதே முத்திரையால் அடையாளப்படுத்தப்படும் ஜோக்கர் அனார்க்கிஸத்தை மேற்கொண்டாலும், சமூக அரசியல் தளத்தின் மாற்றத்தைக் குறிக்கோளாகக் கொள்வதில்லை.  Dark Knight படத்தில் வரும் புகழ்பெற்ற வசனமான “I’m like a dog chasing cars.  I wouldn’t know what to do if I caught one.  You know, I just do… things” இதை இன்னும் விளக்கும்.  சமூக அரசியல் தளத்தில், For V, chaos is the means and for Joker, Chaos is the end.

இருவரது சமூக அரசியல் செயல்பாடுகளும் தனிப்பட்ட காரணங்களாலும் நோக்கங்களாலும் உந்தப்பட்டவை.  இருவருக்கும் தெளிவான முன்கதை இல்லை.  ஜோக்கருக்கு முன் கதை வழங்கிய The Killing Joke காமிக்ஸிலும் கூட “If I have a past, I prefer it to be a multiple choice” என்று பிரகடனம் செய்கிறான்.  வீ, தனது கடந்தகாலம் பற்றிய எந்தத் தெளிவுமற்றிருந்தாலும், தனக்கு நிகழ்ந்த கொடுமைக்காகவும், வேலரீக்கு (Valarie) நிகழ்ந்த கொடுமைக்காகவும் பழிவாங்க தனித்து நின்று போர் தொடுக்கிறான்.  இவ்விதமிருக்கும் அவனது நோக்கம் சகலருக்குமான பயன்களை ஈட்டும் சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதால், தனது தனிப்பட்ட நோக்கைச் சமூக நோக்காக விரித்தெடுக்கிறான்.  குழப்பம் நிறைந்த தொடக்கம் கொண்டுள்ள ஜோக்கரின் அனார்க்கி, நிலவும் சமூக அமைப்பை உலுக்கினாலும், அவனது நோக்கம் அனைவருக்குமானதாகப் பரிணமிக்கவில்லை, அல்லது பரிணமிக்க அவன் அனுமதிக்கவில்லை.  நீதியின் தத்துவம் பற்றி ஜோக்கரின் நேரடியான மற்றும் மறைமுகமான கேள்விகள் அவ்வமைப்பின்மீதிருக்கும் நமது நம்பிக்கைகளைக் குலைக்கவல்லவை.  அனார்க்கி சார்ந்த அவனது வெளிப்பாடுகள் இரண்டனைக் காண்போம்.  “Schemers try to control their little worlds.  I’m not a schemer.  I try to show the schemers how pathetic their attempts to control things really are… Introduce a little anarchy, upset the established order and everything becomes chaos.  I’m an agent of chaos.” – The Dark Knight (2008)

“I give you the average man; physically unremarkable, it has instead a deformed set of values.  Notice the hideously bloated sense of humanity’s importance, the club-footed social conscience and withered optimism.  Most repulsive of all, are its frail and useless notions of order and sanity.  If too much weight is placed upon them, they snap.” (Batman – The Killing Joke)

ஜோக்கர் மீது சுமத்தப்படும் பைத்தியக்காரத்தனம் (Insanity) என்ற அடையாளம்தான் அவனை ஆழமாகப் பாதிக்கிறது.  அவனது பெரும்பாலான முயற்சிகள் அனைவரிடமும் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தின் கூறுகளை வெளிக்கொணர்வதாக இருப்பதைக் காணலாம் (Dark Knight, Batman – The Killing Joke).    ஒவ்வொரு மனிதனுக்குமான Breaking Point உலகைப் புதிய கோணத்தில் பார்ப்பதற்கோ ஒரு குற்றமாக உருவாவதற்கோ பைத்தியக்காரத்தனத்தின் அவைக்குள் நுழைவதற்கோ ஏதுவாக அமைகிறது.  அந்த Breaking Point-ஐ நோக்கிய நகர்வினைத் தூண்டுவது ஜோக்கரின் பணியாக உள்ளது.  கட்டமைக்கப்பட்ட யதார்த்தத்தை உடைத்து, இயற்கையின் இயல்பான Chaos-ஐ அறிமுகப்படுத்தி “There’s a method in Madness” என்ற அளவீட்டின் மூலம் பைத்தியக்காரத்தனத்தின் இயற்கைத்தன்மையைப் பறைசாற்றுகின்றான்.  “All it takes is one bad day” என்பது பைத்தியக்காரத்தனத்தின் வாயில்களைத் திறக்கும் திறவுகோலாக ஜோக்கரால் முன்வைக்கப்படுகிறது.

இவ்விடத்தில்தான் வீ, ஜோக்கர் வகையறாக்களுக்கும் பேட்மேனுக்குமான வேறுபாடுகள் கிளைக்கின்றன.  பேட்மேனின் வாழ்வுக்கும் அவன் செயல்களுக்கும் தனிப்பட்ட காரணங்களே தூண்டுகோலாய் அமைகின்றன.  ஆனால் அவன் தன்னிழப்புகளுக்கு ஒட்டுமொத்த அமைப்பையும் காரணமாக்கவில்லை.  குற்றச் சம்பவங்களை தனித்துப் பிரித்து அவற்றை அழிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வே அவனிடம் மேலோங்கியுள்ளது.  அறம் சார்ந்தும் நீதி சார்ந்தும் (Ethics and Justice) அவனது புரிதல்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டனவாகவே இருக்கிறது.  குற்றங்களுக்கெதிரான அவனது மனோபாவம், Universalist Claim கொண்டதாக இருப்பினும் உண்மையில் முதலாளிய அமைப்பின் நலன்களை அனுபவிப்போருக்கானதொரு போராட்டமாகவே அவனது செயல்பாடுகள் அமைகின்றன.  காரணம் ப்ரூஸுக்கு இருப்பது வெகுமக்கள்மீது ஒரு நல்ல முதலாளியின் கரிசனம் (Sympathy).  அதன் எல்லை அவ்வளவுதான்.  எனவேதான் அனார்க்கி சார்ந்த முழக்கங்களை முன்வைக்கும் ஜோக்கரும், மக்களுக்கான அதிகாரம் போன்ற ஃபிரெஞ்சுப் புரட்சி சார்ந்த கோஷங்களை முன்வைக்கும் பேனும் (Bane) கொடூரக் கொலைகள் செய்யும் தீவிரவாதிகளாகக் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  முதலாளியம் மீதான ஆழமான நம்பிக்கையும், தான் சிறுவயதில் வளர்ந்த சூழலுமே ப்ரூஸ் இவ்வித உலகப் பார்வையைக் கைக்கொள்ளத் தூண்டியது.  அதனால்தான் அமைப்பை பலப்படுத்தும் Outcast-ஆகத் தன்னை நிலைநிறுவிக்கொள்ள அவன் தயங்குவதில்லை

ப்ரூஸின் தனிப்பட்ட வாழ்விலும் அவனது இரட்டை வாழ்வுநிலை பாதிப்பு செலுத்துகிறது.  ப்ரூஸுக்கும் பேட்மேனுக்கும் பல நண்பர்கள் இருந்தாலும், அவன் யாரையும் தன்னுள் அனுமதிப்பதில்லை.  “Let me in” என்று விக்கி வேல் (Vicki Vale) கேட்கும்போது ஒரு புன்முறுவலை மட்டுமே அவனால் பதிலாகத் தர முடிகிறது (Batman – 1989).  எத்தனையோ Romantic attachments ப்ரூஸுக்கு இருந்தாலும் அவனால் தன்னைப் போலவே பிளவுண்டு கிடக்கும், ஈகோவுக்கும் ஆல்டர் ஈகோவுக்குமான தூரத்தைக் கடக்கப் பாலமற்ற செலினா கைல் (Selina Kyle) / கேட்வுமனுடனேயே (Catwoman) அதிக நெருக்கம் காண இயல்கிறது (Batman Returns – 1992).  பத்திரிகையாளரான விக்கியுடனான தனது உறவைப் பற்றி செலினாவிடம் கூறுகையில்: “There are two truths.  She had a trouble reconciling them, because I had a trouble reconciling them” என்கிறான்.  படத்தின் இறுதிக் காட்சியில் ஒருவனைக் கொலை செய்ய முயலும் செலினாவிடம் அவளைச் சமாதானப்படுத்தும் தொனியில், “We could go home together.  Selina.  Don’t you see?  We’re the same.  We’re split right down the centre” என்று சொல்லிச் சமாதானப்படுத்த முயலிறான்.  ஆனால் அவளோ, “Bruce, I would love to live with you in your castle, forever just like in a fairy tale.  I just couldn’t live with myself.  Don’t pretend this is a happy ending” என வெடிக்கிறாள்.

ப்ரூஸ் தனது வாழ்வுக்கான நோக்கத்தை எவ்வண்ணம் உருவாக்கிக் கொள்கிறான் என்ற கேள்வி மிக முக்கியமானது.  ஒவ்வொருவரும் தனது வாழ்வுக்கான நோக்கத்தை அல்லது நோக்கங்களை அவரவர் புறநிலைக் காரணிகளை அகவயப்படுத்தலின் மூலமே சாத்தியப்படுத்திக் கொள்கின்றனர்.  இக்கூறினை எடுத்துக் கொண்டு அவனது வாழ்வை Batman – The Animated Series-இன் ஒரு அத்தியாயத்தில் ஆராய்ந்துள்ளனர்.  பேட்மேன் உருவாகக் காரணமான தாமஸ் மற்றும் மார்தா வேய்னுடைய கொலை நிகழாமல் இருந்திருந்தால் அவனது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? அவனது துயர் குறைந்து ஒரு Pampered Billionaire-ஆக வளர்ந்திருப்பான்.  ஃப்ராஸ்ட் சொல்வது போல் “The Road not Taken” தான் இந்தப் பாதை.  ப்ரூஸ் பேட்மேனாக வாழும் வாழ்வு என்பது அவனது முழு விருப்பம் சார்ந்த தேர்வில்லைதான்.  எனினும் அதில் தேர்வுக்கான வாய்ப்புகள் பல அவன்முன்னே இருந்திருப்பினும், அவன் பேட்மேனாகத் தனது பயணத்தை மேற்கொண்டது ஒரு Conscious Choice.  அவன் பெற்றோர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? சிறு வயதிலிருந்து அவனை விரட்டிய துயரம், திணிக்கப்பட்ட நோக்கம், தெளிவான ஆனால் எளிமைப்படுத்தப்பட்ட அறம் மற்றும் நீதி பற்றிய பார்வை, விஜிலான்டியாக அவனது செயல்பாடுகள் போன்ற எதுவும் அவனது பெற்றோர் கொல்லப்படாதிருக்கும் உலகில் அவனுக்கு நிகழ்ந்திருக்காது.  எனில் இவ்விரு வாழ்வையும் அதன் முழுமையோடு ஒப்பிட வேண்டுமெனில், பேட்மேனாக அவனது நினைவுணர்வோடு (Consciousness) இவ்வாழ்வில் பயணித்தால் மட்டுமே இயலும்.  இப்படி பேட்மானாக இருந்த நினைவுகளுடன் வாழும் சாதாரண ப்ரூஸ், காதம் நகரில் இன்னொரு பேட்மேனைச் சந்தித்தால்..?  இவ்வண்ணமொரு சாத்தியக்கூறினை ஆராய்கிறது “Perchance to Dream” என்ற அத்தியாயம்.  ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டில் வரும் புகழ்பெற்ற “To be or not to be” வசனத்தின் ஒரு சிறு துளியே Perchance to Dream. “To die, to sleep – to sleep, Perchance to Dream – ay, there’s the rub, for in this sleep of death what dreams may come”.  எத்தனை வலி மிகுந்த கவித்துவம்!  சாவின் உறக்கத்தில் என்னென்ன கனவுகள் வருமோ!  ஆடம்பரமும் போரும் மலிந்திருந்த ஒரு யுகத்தின் குரலாக ஹாம்லெட் ஒலிக்கிறான்.  Waking Life படத்தில் ஈதன் ஹாக்கும் (Ethan Hawke) ஜூலி டெல்ஃபியும் (Julie Delphy) பேசிக்கொள்ளும் ஒரு காட்சியுண்டு.  ‘Before Sunrise’ படத்தில் அவர்கள் மேற்கொண்ட ஓர் உரையாடலின் தொடர்ச்சியாக நிகழ்வது.  ஒரு மனிதனின் விழித்திருக்கும் நேரத்தின் நீளத்தைக் காட்டிலும் அவன் உறக்கத்தின் போது வரும் கனவுகள் அதிக நீளம் பொருந்தியதாகத் தோன்றும்.  பல மணிநேரங்கள் எனத் தோன்றும் கனவுகள் பலவும் புறநிலையில் சில மணித்துளிகளே நீண்டிருப்பதை நாம் உணர்ந்திருப்போம்.  ஜூலி Before Sunrise படத்தில் ஒரு காட்சியில், “என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஒரு கிழவியின் கனவில் தோன்றும் நினைவுக் குறிப்புகளோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு” என்பாள்.  ஈதன் இப்படத்தில் அதற்கு “அதுவும் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.  வெளியிலிருக்கும் உலகம் எவ்வளவு உண்மையோ அதுபோலவே இதுவும் உண்மைதான்.  சொல்லப்போனால் நமது ஒட்டுமொத்த வாழ்வுமே ஒரு சில மணித்துளிகளின் கனவாக இருக்கக் கூடும்” என்பான்.

ஒரு நாள் உறக்கத்திலிருந்து விழித்தெழுகையில் ப்ரூஸ் தனது பெற்றோர் உயிருடன் இருப்பதை அறிகிறான்.  பேட்கேவ் (Batcave) பற்றி ஆல்ஃப்ரெடிடம் விசாரிக்கையில் அவர் கிண்டலான புன்சிரிப்புடன் கடந்துபோகிறார்.  செலினா – ப்ரூஸ் இருவரும் காதலிக்கின்றனர்.  வேய்ன் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பை லூசியஸ் ஃபாக்ஸ் கவனித்துக்கொள்கிறார்.  ப்ரூஸ் என்னதான் இவற்றையறிந்து மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு Bored Billionaire-ஆக இருப்பதை நினைத்து விகசிக்காமலும் இல்லை.  இந்நிலையில் செலினாவுடன் ஒருநாள் வெளியில் செல்கையில் ஒரு கொள்ளைச் சம்பவத்தை வேறு பேட்மேன் தடுப்பதைக் கண்டு அதிர்ந்துபோகிறான்.  எனில் இத்தனை காலம் தான் வாழ்ந்த வாழ்க்கை கனவோ என்ற ஐயம் அவனுள் எழுகிறது.  தனது இல்லத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க நினைக்கையில் அதில் எழுத்துகள் வடிவமற்றும் வரிசையற்றும் குழம்பியிருப்பதையறிந்து தான் ஒரு சூழ்ச்சிக்குள் ஆட்பட்டிருப்பதை அறிகிறான்.  பின்னர் காதம் நகரின் இடுகாட்டுக்குச் சென்று உயரமான கட்டிடத்தின் ஏறி நின்று பேட்மேனைக் கூவியழைக்கிறான்.  ப்ரூஸும் பேட்மேனும் சண்டையிடிகின்றனர்.  பின் தான் ஒரு கனவுலகுக்குள் சிக்கவைக்கப்பட்டிருப்பதை அறியும் ப்ரூஸ் அதிலிருந்து வெளியேறுகிறான்.  இருபது நிமிட நீளமேயுள்ள இந்த அத்தியாயம் மிகவும் ஆழமான அழகான சித்தரிப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.  மாயைக்கும் யதார்த்தத்துக்கும் வேறுபாடு தெரியாது ப்ரூஸ், பேட்மேனுடன் சண்டையிடுவது ஆழமானதொரு துன்பியல் நாடகம்.  தனக்கான உண்மையாக பேட்மேன்தான் இருக்கக்கூடும் என்ற அக விழைவு அவனை உந்துகிறது.  இத்தனை வருடமெனத் தோன்றிய வலி, குற்றங்களைக் களையும் அவனது நோக்கம், வழிமுறைகள் என அனைத்தும் சில நிமிடக் கனவுகள்தான் என்று புறந்தள்ள முடியாத வலி அவனைச் சண்டையிடத் தூண்டுகிறது.

பேட்மேன் குற்றம் செய்வோர் மத்தியில் தன்னை ஒரு Big brother என்று நினைக்கும்  வண்ணம் நிலை நிறுவ எண்ணுகிறான்.  Batman (1989) படத்தின் முதல் காட்சியில் ’எல்லோரிடத்திலும் சொல். I’m Batman’ என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.  எல்லாக் குற்றங்களையும் தடுக்க இயலாவிட்டாலும் தன் எதிரிகள் பலர் மத்தியில் பயத்தை உண்டாக்குவதிலும், பேட்மேன் எங்கிருந்தோ நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற “Big Brother is watching you” விளைவை ஏற்படுத்துவதிலும் வெற்றி காண்கிறான்.  பேட்மேன் பற்றிய ஒரு புகழ்பெற்ற வாசகம் உண்டு.  “Batman creates his own villians” என்று.  அது ஓரளவு உண்மையும் கூட.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

1 thought on “பேட்மேன் – சில கோணங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close