கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 46-49 : யார் உள்ளே? யார் வெளியே?

மித்ரா

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை 49 நாட்களில் கடந்துள்ளது. வீட்டில் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். மற்றும் ஒருவர் வெளியேறியுள்ளார். சாக்ஷி மிக மகிழ்ச்சியாக, ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். கஸ்தூரி தெளிவாக இத்தனை நாள் நிகழ்வுகளைப் பார்த்து விட்டு ஒரு முன்கணிப்புடன் உள்ளே வந்து பதுங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்குத் தெரிந்து அவர் ஒரு ஓவர்ரேட்டடட் பிரபலம் தான். சீக்கிரம் சிக்குவார்.

சனி, ஞாயிறு எபிசோட்களிலும் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. முகேனிடம் இருந்து அபிராமியை சற்றுத் தள்ளியிருக்க அறிவுறுத்தியிருக்கிறார் கமல். உடனே வழக்கம்போல அபி கண்ணீரால் வீட்டில் வெள்ளச்சேதத்தை ஏற்படுத்தி விட்டார். தன்னைப் பற்றி யாருமே எதுவுமே சொல்லி விடக் கூடாது என நினைக்கும் பெண்கள் எப்படி பொதுத்தளங்களில் இயங்குகிறார்கள் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், முகேன் இந்த சம்பவத்திற்குப் பின் சற்று ஆசுவாசப் பெருமூச்சு விடுவதைப் பார்க்க முடிந்தது.

இன்னமும் மக்களிடையே சாண்டி மற்றும் லாஸ்லியாவிற்கு அதீத வரவேற்பு இருக்கிறது. கவினுக்கும் கூட. இவர்கள் ஆதரிக்கும் நபர்களைப் பார்த்தால் கலக்கம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. சென்ற வாரம் முழுவதும் பொங்கல் வைத்தல், ஃபேஷன் ஷோ நடத்துதல் எனச் சென்று விட்டதால், இன்று பேசப் பெரிதாக எதுவுமில்லை. அதனால் சும்மா ஒரு இதுக்காக மக்களிடம் பேராதரவைப் பெற்றிருக்கும் இந்த சாண்டி மற்றும் லாஸ்லியாவின் குறுக்குவெட்டுத் தோற்றங்களைப் பற்றிப் பேச முயற்சிக்கலாம். (கவினைப் பற்றிப் பேசிப்பேசி சலித்து விட்டது.)

சாண்டி இன்று வரை எந்த பிரச்சனையிலும் சிக்கவில்லை என்பது என்னவோ உண்மை தான். ஆனால் கழுவுற மீனில் நழுவுற மீனாக பிரச்சனைகளின் போது நழுவி விடுகிறார். இதைப் பலமுறை கமல் சுட்டிக்காட்டியும் இருக்கிறார். வீட்டில் நடக்கும் எந்த சண்டைகளிலும் யார் பக்கமும் நிற்பதில்லை. வேடிக்கை மட்டுமே. அட சண்டை முடிஞ்சப்றம் கருத்தாவது சொல்லலாமே அதுவும் இல்லை. தன் நெருங்கிய நண்பன் கவின் பஞ்சாயத்தில் சிக்கி மத்தளம் போல ரெண்டு பக்கமும் அடி வாங்கிய போது கூட சாண்டி எடுத்தது அமைதி நிலை தான். கவின் தான் மற்றவர்களிடம் கவனித்தவற்றை, தனக்குப் பிடிக்காதவற்றை என எதை சாண்டியிடம் சொன்னாலும் அவரின் அதிகபட்ச ரியாக்சன், “ஓ அப்டியா?” தான். அதைப் பற்றிய எந்தக் கருத்துகளும் சாண்டிக்கு கிடையாது.

ஆனால், சேரன் மீது மட்டும் ஒரு வன்மத்தை சுமந்தே அலைகின்றனர் சாண்டியும் கவினும். அதற்கான காரணத்தைக் கண்டே பிடிக்க முடியவில்லை. இந்த வார கேப்டன் டாஸ்கில் சேரன் முடிந்தவரை எல்லாப்பக்கமும் சிவப்பு நிறத்தை ப்ரஷால் அடித்து விட, அதைக் கெடுக்க முதலில் வாளியோடு பெயிண்டை மதிலில் ஊற்றியது சாண்டி தான். பிறகு, “நீங்க கேப்டன் ஆகாதது வருத்தமா இருந்ததா?”னு கமல் கேட்ட போது, ஆமென சேரன் சொன்னதும் ஒரு நக்கல் பார்வை மற்றும் சிரிப்பை உதிர்த்தார். சேரன் இதுவரை யார் விசயத்திலும் தேவையில்லாமல் தலையிட்டது இல்லை. தன் வேலையை செய்யாமல் இருந்தது இல்லை. மற்றவர்களை அதிகாரம் செய்ததில்லை. அப்படி இருந்தும் அவரை சாண்டிக்கு பிடிப்பதில்லை. அவர் இயக்குனர் என அவர் நினைக்கிறாரோ இல்லையோ இவர்கள் தான் நொடிக்குநொடி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை என நேரடியாகச் சொல்லாமல், அவர்களிடம் குழைந்து விட்டு இந்தப்பக்கம் வந்து கிண்டல் செய்வது, ஓபன் நாமினேசன் சமயத்தில் அபிராமியை நாமினேட் செய்யும் போது வேறுவழியில்லாமல் செய்வது போல நடித்தது என ஏராளமான குறைகள் சாண்டியிடம். வீட்டில் தன் கேம் ப்ளானை பக்காவாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே நபர் சாண்டி தான். இப்போது வரை அவர் யாரையுமே பகைத்துக் கொள்ளவில்லை. மொத்தத்தில் நினைப்பதை நேருக்கு நேர் சொல்லாமல் பூசி மொழுகி, அப்படியும் அதை மனதில் வைத்துக் கொள்ள முடியாமல் கேலி கிண்டல்கள், பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி, அதைக் கேள்வி கேட்டால் மறுபடி குழைந்து கொண்டே மன்னிப்புக் கேட்டு….ஷ்ஷ்ஷப்பா. இதில் சார் பயங்கரமான கோபக்காரராம். எங்கப்பா பாத்தா அப்டித் தெரியவேயில்லையே. தட் ‘ஒரே நாள்ல காலேஜ்ல இவ்ளோ சொல்லிக் கொடுத்துட்டாங்களா?’ மொமண்ட்.

அடுத்ததாக தங்கச் சிலை, தானைத்தலைவி, போட்டியில்லாமல் தமிழக இளைஞர்களால் ஒரு மனதாக வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை தேவதை லாஸ்லியா. இப்போது நான் சொல்லி வரும் சம்பவங்களை அப்படியே மனதிற்குள் நினைவுபடுத்துங்கள்.

காட்சி 1: எனக்கும் கவினுக்கும் உள்ள நட்பு எங்கள் இருவருக்கு மட்டும் தெரிந்தால் போதுமானது. நான் அதை ஒவ்வொருவராய் கூப்பிட்டு சொல்ல வேண்டிய அவஷ்யமில்லை.

காட்சி 2: எனக்கு தெரியுது நான் இந்த கேம் ஷோவில் இல்லை எண்டு. அதிலில் இருந்து வர தான் ட்ரை பண்ணுறன். எனக்கு புடிக்கும். அவனோடே கதைக்க புடிக்கும்.ஒரே வீட்டுக்குள் இருந்து என்னாலே அவனோடே கதைக்காமல் இருக்கேலாது. நான் இப்ப ரெடி இல்லை. அவனும் ஏதோ காரணத்துக்கு தான் இந்த ஷோவில் கலந்து கொள்ள வந்துள்ளான்.

காட்சி 1:எனக்கு ஒருவரோடு எப்படி பழகிறதெண்டு தெரியும் . என் லிமிட்ஸ் எனக்குத் தெரியும். சும்மா கையை புடிச்சேன் காலை பிடிச்சேன் எண்டு சொல்ல வேண்டாம்.

காட்சி 2: இந்த காட்சி நாயகி சிறைக்குள் இருக்கும் பொழுது நாயகன் கம்பிக்கு வெளியில் நிற்கும் போது படமாக்கப்படுகிறது. நாயகன் நாயகியின் கன்னத்தைச் செல்லமாகத் தட்ட நாயகி வெட்கத்தில் தலை குனிகிறார்.

காட்சி 1: கவின் உனக்கும் சாக்ஷிக்கும் இடையில் என்ன நடக்கிறது எண்டு எனக்கு சாக்ஷி சொல்லி விட்டாள். என்னால் அதுக்கு ஒன்றும் வர கூடாது. சாக்ஷி நீ கதைப்பாய் என்று எதிர்பார்க்கலாம் . நீ போய் கதை. நான் விலகிக் கொள்கிறன்.

காட்சி 2: சாக்ஷி உங்களோட எனக்கு நேர கதைக்க விருப்பமில்லை அதனால் தான் எல்லாருக்கும் முன்னாள் சொன்னனான். எனக்கு சாக்ஷி எதுவும் சொல்லாததால் தான் நான் பாட்டுக்கு எதுவும் தெரியாமல் இருந்தனான். எனக்கு வீட்டில் நடக்கும் எதுவும் தெரியாது.

“அந்த அஞ்சு கொலையும்…”, “சத்தியமா நான் பண்ணல சார்…”, “நான் தான்டா பண்ணேன்…” ரேஞ்சுக்கு மாத்தி மாத்திக் கதைத்துக் கொண்டிருக்கிறார் இந்த தேவதை. இது கவின் விஷயத்தில் மட்டும் தான். இதைக் கூட மன்னித்து விடலாம். ஆனால், சேரனிடம் கூட இவருக்கு உண்மையாக அன்பில்லை என்பது தான் வேதனை. தனக்கு ஒன்று என்றதும் அவரிடம் போய் அழுது விட்டு, டாஸ்க் நேரத்தில் அவர் கலங்கியிருக்கும் போது கண்டுகொள்ளாமல் போனது, மீராவுக்கும் சேரனுக்கும் பஞ்சாயத்து நடந்திருந்த சமயத்தில் தான் சிறைக்கு செல்ல விரும்பிய ஒரே காரணத்திற்காக மீராவிற்க்கு ஆதரவாக பேசியது, எப்போதும் தான் அழகு, பட்டர்ஃப்ளை என என்னத்தையாச்சும் உளறிக் கொண்டிருப்பது என முழுக்க முழுக்க தவறான அணுகுமுறைகளை வழக்கமாகக் கொண்டிருப்பவர் தான் லாஸ்லியா.

இந்த இருவரையும் தான் பார்வையாளர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவல நகைச்சுவை. இப்போது வீட்டிற்குள் கஸ்தூரி வந்து விட்டார். வனிதா வருகிறார் போலத் தெரிகிறது. இனிமேலும் இவர்கள் இருவரும் மிகப் பாதுகாப்பாகத் தான் தங்கள் பயணத்தை அமோக கைதட்டல்களுடன் தொடர்வார்கள். உணர்வுகளை அவ்வப்போதே அவ்வப்படியே வெளிப்படுத்துபவர்கள் வெளியேற்றப்பட்டு, இவர்களைப் போன்றவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இது வெறும் கேம் அல்ல நம்ம லைஃப்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button