பிச்சோரினிலிருந்து லப்பாத்தீன் வரை

பிச்சோரினிலிருந்து லப்பாத்தீன் வரை

கட்டுரை:- இரா.முருகவேள்

ரஷ்ய இலக்கியம் பற்றி வாசகசாலையிலிருந்து கட்டுரை கேட்டதும் வரவிருக்கிற ஆபத்து தெரியாமல் தலையாட்டிவிட்டேன். பழைய ருஸ் மொழிக் கவிதைகளிலிருந்து வளர்ந்து வந்த ரஷ்ய இலக்கியம், ஒவ்வொரு மாபெரும் எழுத்தாளனையும் சுற்றி நடந்த மாபெரும் விவாதங்கள், ஸ்டாலின், ஃப்ராய்டு, கருத்து சுதந்திரம், சோஷலிச எதார்த்தம் என்று வெளிவர முடியாத ஒரு பொறியில் என்னை சிக்க வைக்கும் சதியில் வாசகசாலை ஈடுபட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. ஒரு கொடுங்கனவில் கூட அவர்கள் இதை செய்திருக்க வாய்ப்பில்லை என்பதால் எனக்குப் பிடித்தமான மற்றும் தவிர்க்க இயலாத ஒரு சிலரைப் பற்றிமட்டும் எழுதுவது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

புஷ்கினின் கேப்டன் மகள் 1830களில் வந்தது. தெற்கு ரஷ்யாவில் எமல்யான் புகசோவின் தலைமையில் யாயிக் நதிக்கரையில் (தற்போது உரால்) குடியேற்றப்பட்டிருந்த மக்களும், பக்ரீஷியர்கள் என்ற பழங்குடியினரும் இணைந்து பேரரசுக்கு எதிராக நடத்திய கலகத்தை பேசுகிறது கேப்டன் மகள். மிகக் கடுமையான அடக்குமுறையும், தணிக்கையும் இருந்த காலத்தில் இவ்வளவு வெளிப்படையாக போராடும் மக்களின் மேல் அனுதாபத்தை ஒரு கவிஞன், எழுத்தாளன் வெளிப்படுத்த முடியுமா என்று ஆச்சரியம் நாவலைத் தொடரும் போது வந்து கொண்டேயிருக்கும்.

கவர்ச்சிகரமான போக்கிரி, நட்பை மதிப்பவன், பெண்களின் மீது அன்பு கொண்டவன், இரண்டு கம்பங்களுக்கு நடுவே குறுக்குச் சட்டத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் சுருக்குக் கயிற்றுக்காக எப்போது காத்திருக்கும் ஆயுதம் தாங்கிய எளிய மக்களின் தலைவன் புகசோவ் மீது ஒளிவு மறைவற்ற அன்பை வெளிப்படுத்துகிறது கேப்டன் மகள். அதில் ஒரு அத்தியாயம் அந்த காலத்தில் சேர்க்கப்படவில்லை. நீக்கப்பட்ட அத்தியாயம் என்று அவரே அதற்குப் பெயரும் கொடுத்திருப்பார். பண்ணை அடிமைகள் ஆண்டைகளுக்கு எதிராக கலகம் செய்வதையும், பேரரசியின் படைகள் ஈவிரக்கமற்ற கொடூரத்துடன் கலகத்தை அடக்கி ஒடுக்குவதையும் வர்ணித்திருப்பார்.

மரத்தெப்பங்களில் தூக்குமரங்களை நிறுத்தி மொத்தமாக கலகக்காரர்களைத் தூக்கிலிட்டு அந்த தெப்பங்களை ஆற்றில் மிதக்க விடுகிறது அரசு. முடிவின்றி தெப்பங்களில் மிதந்து செல்லும் தூக்குமரங்கள் படிப்பவரை உறைய வைக்கின்றன. ஆனால் புஷ்கினின் நடை பின்பு வந்த ரஷ்ய எழுத்தாளர்களின் இருண்மை பூசிய நடையல்ல. பல இடங்களில் நீங்கள் சிரிக்கலாம். ஒரு அற்புதமான இனிப்பின் சுவையைப் போல நம் மனதில் தங்கிவிடும் அவரது துல்லியமான சொற்களைக் கொண்ட சிறிய, நேர்த்தியான வாக்கியங்கள். அவரது அழகியல் ததும்பும் பெல்கின் கதைகள் பழங்குடி மக்களின் வன்மமில்லாத, கொடுக்கலும் வாங்கலும் இல்லாத, பிடிவாதமான கட்டுப்பாடுகள் இல்லாத காதலைப் பேசும் ஜிப்ஸிகள், சதுப்பு நிலத்தை வடித்து உருவாக்கப்பட்ட பீட்டர்ஸ்பர்க் நகரை நோவா ஆற்றின் வெள்ளம் மூலம் பழி வாங்கும் இயற்கை . . .தன் காலத்திற்கு எத்தனையோ ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்திருக்கிறார் புஷ்கின். அதற்கு விலை அவரது உயிர்தான் போலிருக்கிறது.

ஒரு ராணுவ அதிகாரியால் டூயலுக்கு இழுக்கப்பட்டு கொல்லப்பட்டார் புஷ்கின். இதில் அரண்மனை சதிகள் இருந்ததாகக் கருதப்பட்டது. புஷ்கினது மரணத்திலிருந்து அவரது வாரிசாகக் கருதப்பட்ட லேர்மன்தவ்வின் இலக்கிய வாழ்க்கை தொடங்குகிறது. மேற்குலகில் புஷ்கின் அதிகம் அறியப்படாததற்கு அவரது இந்த ரஷ்யத் தன்மையும் மத்தியதரவர்க்கத்தின் பிடித்தமான அன்னியப்பட்ட தன்மையும் இல்லாமலிருப்பதுதான் காரணம் போலும்.

புஷ்கினின் மரணத்தைப் பற்றி லேர்மன்தவ் எழுதிய கவியின் மரணம் என்ற கவிதை நேரடியாக அரண்மனையை அவரது மரணத்திற்கு குற்றம் சாட்டியது. லேர்மன்தவ் கைது செய்யப்பட்டு அப்போது ரத்தக்களறி நடந்து கொண்டிருந்த காக்கேஷியாவிற்கு ராணுவ சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காக்கேஷியாவில் செச்சின்யாவையும், செர்கேசியாவையும், ஒசேத்தியாவையும் ஆக்கிரமித்து காலனிகளாக்கும் போரில் ஜார் அரசு ஈடுபட்டிருந்தது.

லேர்மன்தவ் பிரபு வம்சத்தில் பிறந்தவர். அவரது தாய்வழிப் பாட்டி மிகுந்த செல்வந்தர். லேமந்தவ்வின் தாய் அவரது ஒரே மகள். லேர்மன்தவின் தகப்பனார் அவ்வளவு வசதியானவர் அல்ல என்பதால் அவரை மாமியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. லேர்மன்தவ்வின் தந்தைக்கும் மனைவியின் கோபங்களையும் சந்தேகங்களையும் சகித்துக் கொள்ளமுடியவில்லை. இருவரும் பிரிகின்றனர். லேர்மன்தவின் ஐந்தாவது வயதில் அவரது அம்மா காலமானார். தந்தை மகனை தன்னோடு வைத்துக்கொள்ள விரும்பினாலும் அப்படி செய்தால் அவன் பாட்டியின் சொத்துக்களை இழக்க நேரிடும் என்பதால் அழைத்துச் செல்லவில்லை. லேர்மன்தவ்வின் இளமைக்காலம் அவரது பாட்டியோடு தனிமையிலும் நோய்களோடும் கழிந்தது. தனிமை, உள்நோக்கிய சிந்தனை, படிப்பு எல்லையற்ற பணம் எல்லாம் சேர்ந்து லேர்மன்தவ்வை எதையோ நோக்கித் தள்ளின. மேற்படிப்பிற்காக பீட்டர்ஸ்பர்க் வந்த லேர்மன்தவ் பின்பு காவியமாகவிருந்த காதலை வழங்கிய வார்வரா லோபுஷ்கினாவை சந்தித்தார்.

இளம்பருவக் காதல், பளிச்சிடும் நடன அரங்குகள், தயக்கம் கூச்சம் பின்பு வெற்றிகள் என்று வண்ணமயமான லேர்மந்தவ்வின் பீட்டர்ஸ்பர்க் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் யூடியூபில் லேர்மந்தவ் என்று அடிக்கவும். ஒரு மிக அழகான நேர்த்தியான ஆவணப்படத்தைக் காணலாம்.

ஜார் அரசு லேர்மந்தவுக்கு தண்டனையாகத்தான் அவரை காக்கேஷியாவுக்கு அனுப்பியது. ஆனால் லேர்மந்தவ் காக்கேஷியாவை முழுமனதுடன் நேசிக்கத் தொடங்கினார். காக்கேஷியாவின் பேரழகுவாய்ந்த மலைகள், ஆழங்காணமுடியாத பள்ளத்தாக்குகள், தெள்ளிய நீர் ஓடும் ஓடைகள் அதே போல எளிமையும், வீரமும் கொண்ட மக்கள். பலம் வாய்ந்த எதிரிக்கு எதிராக சுதந்திர உணர்வுடன் போராடும் மக்களையும் அவர் நேசிக்கத் தொடங்கினார்.

நேசிக்கத் தொடங்கினார் என்பது அவருக்கே உரிய விதத்தில். நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்திருந்த முரட்டுத்தனமான கட்டுபாடற்ற போர்வீரகள் ஒரு தண்டணைப் படைப்பிரிவில் இருந்தனர். லேர்மந்தவ் அப்பிரிவுக்குத் பொறுப்பேற்க்கப்பட்டார். இரவும் பகலும் இப்பிரிவு போர்களத்திலேயே இருந்தது. வெட்டவெளிகளிலேயே அவர்கள் உறங்குவார்கள். துப்பாக்கியைப் பயன்படுத்தாமல் வாட்களையே கொண்டு போரிடுவார்கள். இப்பிரிவு துணிச்சலும் வீரமும் கொண்டதாகக் கருதப்பட்டது. காக்கேஷியர்களுக்கு எதிரான அனைத்துப் போர்களிலும் வாகை சூடியது. தான் நேசித்த மக்களை போர்க்களத்தில் வீழ்த்த லேர்மந்தவ் ஒருபோதும் தயங்கவில்லை. இதுதான் லேர்மந்தவ். இதுதான் பிச்சோரின்.

ரஷ்ய நாவல்களின் உலகப் புகழ்பெற்ற உளவியல் ஆய்வுப் போக்கைத் தொடங்கி வைத்தவர் லேர்மந்தவ்தான். அவரது நம்காலத்து நாயகன் நாவலைப் படிப்பவர்கள் இருபத்தி ஐந்து வயது கூட நிரம்பாத இளைஞனால் இது எழுதப்பட்டது எனபதை நம்பவே முடியாது. புஷ்கினின் நேர்த்தியும் சொற்சிக்கனமும், பின்பு வந்தவர்களின் ஆழமும், மனித மனத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடித் துளாவி நம்மையே நம்முன் நிறுத்தும் இரக்கமற்ற கூர்மையும் . . .

முதல்பார்வைக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போலத் தோன்றும் ஐந்து கதைகள்தான் நம்காலத்து நாயகன். பிச்சோரினின் வருகையால் ஒரு அமைதியான சேறுபடிந்த கடலோர கிராமத்தின் காதலர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. திக்கற்ற ஒரு குருடன் நிராதரவாக நிற்கிறான். பிச்சோரின் அலட்சியமாக வண்டியிலேறிப் போய்க் கொண்டே இருக்கிறான். சாடிசத்தின் சாயல்கள் தெரியும் கதை இது. அரசு செலவில் அரச காரியமாகப் போகும் தான் ஏன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும் என்று கேட்கிறான்.

ஒரு அழகிய செர்கேசிய யுவதியின் மீது காதல் கொண்டு அவளைத் தனது கோட்டைக்குக் கடத்திக் கொண்டு வருகிறான். நாட்கள் செல்ல செல்ல அவள் மீதான மோகம் குறைகிறது. பிச்சோரின் இலக்கற்று அலையவும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கவும் தொடங்குகிறான். பேலாவுக்கு இருண்ட எதிர்காலம் காத்திருக்கிறது. அதற்குள் அவள் கொல்லப்படுகிறாள். சாவு அவளைக் காப்பாற்றியது என்கிறார் ஒரு நண்பர்.

பேரழகியான இளவரசி மேரியின் காதலைப் பெற எல்லோரும் விரும்புகின்றனர். அவள் ஒரு இளைஞனின் மேல் அன்பு கொள்ளத் தொடங்குகிறாள். பிச்சோரின் இடையில் புகுந்து மேரியின் காதலை விடாது முயன்று அடைகிறான். அவளைக் காதலித்த இளைஞனை திட்டமிட்டு நேரடிப் போருக்கு அழைத்துக் கொல்கிறான். கொல்வதற்கு முன் அவனை முதலில் சுடச்சொல்லி தனது அதிர்ஷ்டத்தைப் பரிசோதிக்கிறான். ”நீ என்னைச் சுடாவிட்டால் நான் குறிதவற மாட்டேன் என்று எச்சரிக்கவும் செய்கிறான். இளைஞன் மனக்குழப்பத்தில் தடுமாறி குறிதவறியதும் உறைபனியின் குரூர குளிர்ச்சியோடு தயங்காமல் அவனைச் சுட்டுக் கொல்கிறான். என்ன ஒரு காட்சி அது.

லேர்மந்தவின் வரலாற்றைப் படித்தவர்களுக்கு பிச்சோரின் யார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கதையில் வருவது போலில்லாமல் உண்மையில் டூயலின் முடிவு வேறு விதமாக இருந்தது. எத்தனை முறை படித்தாலும் சலிக்காத கதை இது. இந்த இளைஞன் இன்னும் கொஞ்சகாலம் ஏன் வாழ்ந்திருக்கக் கூடாது என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் லேர்மந்தவ்வே சொல்வது போல அவரே வாழ விரும்பாமலும் இருந்திருக்கலாம். அவர் மரணத்தைத் துரத்திக் கொண்டே இருந்தார். அது சற்று தாமதித்து தன்னை அவர் எட்டிப் பிடிக்க அனுமதிக்கும் வரை.

லேர்மந்தவிலிருந்து தாஸ்தயேவ்ஸ்கிக்குத் தாவுவது சற்றே விசித்திரமானதாகத் தோன்றலாம். ஆனால் திடுக்கிடும் திருப்பங்கள் எப்போதுமே படிக்கச் சுவாரஸ்யமானவைதான். ரஷ்ய எழுத்தாளர்களிலே மாபெரும் புகழ்பெற்ற இருவரில் ஒருவர். இன்னொருவர் டால்ஸ்டாய். இடதுசாரிகளில் இருந்து நாஜிகள் வரை தாஸ்தயேவ்ஸ்கி ஏற்படுத்திய தாக்கம் பிரமிக்கத்தக்கது. அரசியல்வாதிகள் சுத்த இலக்கியவாதிகள் தவிர இன்னொரு பிரிவினர் மீது தாஸ்தாயேவ்ஸ்கி பெரும் பாதிப்பு ஏற்படுத்தியதாகச் சொல்வார்கள்.

தாஸ்தயேவ்ஸ்கியின் ‘தி எடேர்னல் ஹஸ்பெண்ட்” என்ற நாவல் 1870ல் வெளிவந்தது. அப்போது சிக்மண்ட் பிராய்ட்டுக்கு வயது 14. பாவ்லோவிச் தனது மனைவி தனக்கு துரோகம் செய்ததை அவளது மரணத்துக்குப் பிறகு அறிந்து கொள்கிறான். வெல்சனினோவ் அவளது காதலன். ஆனால் இப்போது அவனுக்கு பழைய கதைகள் எதுவுமே நினைவில் இல்லை. கடுமையாக முயன்று எல்லாவற்றையும் மறந்து விட்டவனாக இருக்கிறான். ஆனால் மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நினைவுகள் கனவுகளாக வருகின்றன. 1895ல் பிராய்ட் இதற்கு Repression என்ற பெயர் தருகிறார். 1900ல் பிராய்டு கனவுகளின் முடிச்சுகளை அவிழ்ப்பதை ஆழ்மனதை அறிவதற்கான ராஜபாதை என்று கூறுகிறார்.

மனித மனதின் மர்மங்களை தாஸ்தயேவ்ஸ்கியைப் போல நன்குணர்ந்தவர்கள் யாருமில்லை என்கிறார்கள். அடக்கி வைக்கப்பட்ட நினைவுகள், அவை பீறிட்டு வெளிவருவது, சிதைவுகளை ஏற்படுத்துவது என்று ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு தாஸ்தயேவ்ஸ்கி மனித மனதைப் பகுத்து ஆய்கிறார். அவரது கரமசோவ் சகோதரர்கள், தி இடியட், நோட்ஸ் ஃப்ரம் அண்டர்கிரவுண்ட் போன்றவை ஆழ்மனதின் வெளிப்பாடுகளை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கும். கரமசோவ் சகோதரர்கள் நாவலை அவரது மிகச் சிறந்த நாவல் என்கிறார் சிக்மண்ட் பிராய்ட். தாஸ்தயேவ்ஸ்கியும் பாரிசைடும் அதாவது தகப்பனை கொல்லும் ஆசையும் என்று பிராய்ட் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கரம்சோவ் சகோதரர்கள் அதைத்தான் காட்டுகிறது என்கிறார் அவர்.

தாஸ்தயேவ்ஸ்கி சூதாட்டத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவரது சூதாட்டம் தன்னைத்தானே வதைத்துக் கொள்ளும் மசோசிஷ மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர் சூதாடி பொருளை இழந்ததும் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொண்ட திருப்தியுடன் அவரது எழுத்து கொஞ்சம் மென்மையடைந்தது என்கின்றனர்.

எம்.ஏ ஆண்டெனோவிச் கரமசோவ் சகோதரர்கள் ஒரு மாயாவாதத் தன்மை கொண்ட நாவல் என்கிறார். ஆனால் தாஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரு அற்புதமான பெயரைச் சூட்டியவர் மாக்சிம் கார்க்கிதான். ‘ஈவில் ஜீனியஸ்” என்றார் அவர். 1913ல் கர்மசோவ் சகோதரர்களில் வரும் நோய்கூறுதன்மைல்யை சாடோ மஷோசிஸ்ட் எக்ஸிபிஷனிசம் என்கிறார்.

தாஸ்தயேவ்ஸ்கி ஒரு அண்டர் கிரவுண்ட் அதாவது மர்மத் தன்மை கொண்ட என்று சற்று சுதந்திரத்துடன் மொழிபெயர்க்கலாம், மர்மத் தனமை கொண்ட மனிதனை, ஒருவிதத்தில் சமூக ரீதியில் சீரழிந்த நீட்ஸேவும் டெச் ஈஸெண்டெஸும் கலந்த ஒரு மனிதனை உருவாக்குகிறார் என்றார் கார்க்கி.

கரமசோவ்சினா என்ற சொல் கார்க்கியால் பயன்படுத்தப்பட்டது. விரக்தியுற்ற ரஷ்ய ஆன்மாவின், தன்னையும் மற்றவர்களையும் வதைத்துக் கொள்ளும் குரூரம் நிறைந்த ரூஷ்ய ஆன்மாவின், குட்டி முதலாளித்துவ மனநிலை தாஸ்தயேவ்ஸ்கியுடையது என்ற கருத்துக் கொண்டிருந்தார். அதே நேரம் கார்க்கி ஒரு போதும் தாஸ்தயேவ்ஸ்கி குறித்து தனது எழுத்துக்களில் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை. மேற்குறிப்பிட்டவை எல்லாம் அவரது கடிதங்களில் கண்டவைதான்.

ஒரே ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர. தி டெவில்ஸ் என்ற தாஸ்தயேவ்ஸ்கியின் நாடகத்தை மாஸ்கோ தியேட்டர் அரங்கேற்ற விரும்பிய போது கார்க்கி எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால் இவையனைத்தும் புரட்சிக்கு முன்பு நடைபெற்றவை. நாடு கொந்தளிப்பான காலகட்டத்தை எதிர்கொண்டிருந்த போது ஒருவிதமான அடக்கம், சுயவாதை, பொறுமை போன்றவற்றை வலியுறுத்திய, போராட்டங்களில் இருந்து விலகிப் போகும் மனநிலையை வெளிப்படுத்திய தாஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துக்களை மக்களோடும் கட்சியோடும் இணைந்து நின்றவர்கள், செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

தாஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகளின் மீதான விமர்சனக் கண்ணோட்டம் புரட்சிக்கு முன்பிருந்தே இருப்பதுதான். ஆனால் ஸ்டாலின் கத்தியைக் காட்டி தாஸ்தயேவ்ஸ்கியின் ஆவியைப் பயப்படுத்தினார் என்பது போன்ற விமர்சனங்கள் மேற்கில் சகஜம் என்பதால் இதைக் கூற வேண்டியிருக்கிறது. தஸ்தாயேவ்ஸ்கி குறித்த சில மிகச் செறிவான விமர்சனங்கள் முப்பதுகளில்தான் வெளிவந்தன. கார்க்கியும் லூசாசார்ச்கியும் தாஸ்தயேவ்ஸ்கி தவிர்க்க முடியாதவர் ஆனால் விமர்சனத்துடன் அணுக வேண்டியவர் என்றே கருதினர்.

உலகின் மிகச் சிறந்த நாவல் எது என்றால் இரண்டு கருத்துக்கள் வரக்கூடும். போரும் வாழ்வும், புத்துயிர்ப்பு. இரண்டையும் எழுதியவர் டால்ஸ்டாய் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா? ஆள்பவர்களின் சிந்தனைப் போக்கை நேரடியாக உணர்ந்து கொள்ள பிரபுவம்சப் பின்னணி, ஜாரின் உறவினர் என்ற தகுதி, சிறந்த ஆசிரியர்கள், ராணுவ சேவை, போர் அனுபவங்கள், தனது பண்ணையில் விவசாயிகளுடன் நெருங்கிக் பழகி அவரகள் வாழ்வை உள்ளும் புறமும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு என்று ஒரு மாபெரும் எழுத்தாளனை உருவாக்கத் தேவையான எல்லாமும் அவரிடம் ஒன்றாகச் சேர்ந்திருந்தன.

அவர் ஒருபோதும் மார்க்சியவாதி இல்லை என்றாலும் அவரது பார்வை மார்க்சை ஒத்திருக்கும். போரும் அமைதியும் நாவலில் நெப்போலியனும், ஜாரும் குட்டுஜோவும் வரலாற்றின் தவிர்க்க முடியாத நியதிகளால் வழிநடத்தப்படுவதாகக் கூறியிருப்பார். தனிநபரின் வீரமாகவோ அறிவாகவோ சம்பவங்களைப் பார்க்காமல் ஒரு கழுகைப் போல முழுமையாகப் பார்க்க அவரால் முடிந்திருந்தது.

அவரது புத்துயிர்ப்பு சமூகம் எப்படி அநீதியாக அமைந்திருக்கிறது என்பதையும் அதை மாற்றியே தீருவது அவசியமானதாக மாறிவருவதையும் அழகாகக் காட்டியிருப்பார். கொடும் வறுமையில் அவதிப்படும் மக்கள், ஆதரவற்ற பெண்கள் பாலியல் விடுதிகளில் தள்ளப்படும் நிலை. அழுகிப் போன நீதித்துறை, தங்களால் ஆளப்படுபவர்களுக்கு தாங்கள் எப்படி பெரும் வேதனைகளைக் கொடுக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஆடம்பரத்தில் மூழ்கிக் கிடக்கும் பிரபுகுலம். மாஸ்லவாவையும், நெஹ்லூதவையும் பின்தொடர்ந்து கதை சைபீரியா செல்லும் வழி நெடுக அந்தக் கால ருஷ்யா நம்முன் அணுவணுவாக விரிகிறது.

புரட்சியாளர்கள் பற்றிய டால்ஸ்டாயின் சித்தரிப்பு இருக்கிறதே அது அவரது கலைத் தன்மையின் உச்சம். வெளியிலிருந்து முதலில் பார்க்க அவர்கள் தியாகமே உருவானவர்களாக அப்பழுக்கற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். அருகில் நெருங்க நெருங்க அவர்களிடையே குடி கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் அற்ப உணர்ச்சிகளும், பிடிவாதங்களும் மற்றவர்களின் மீது ஆளுமை செலுத்தும் விருப்பமும் துலக்கமாகத் தெரிகின்றன. எனது ஓட்டு புத்துயிர்ப்புக்குத்தான்.

புரட்சிக்கு முந்தய நாட்களில் இந்த அரசை மாற்றியே தீர வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்துவதையும், புரட்சி அணிகளுக்கு உற்சாகமூட்டுவதையும் கடமையாக ஏற்றுக் கொண்டவர் கார்க்கி. அதைத் திறம்படச் செய்தார். தாய் மிகச் சிறந்த உதாரணம். அரசியற்ற எழுத்து என்று ஒன்று இல்லை. அதே போல தாய் நாவலும் புரட்சிகர நாவல்தான். பாட்டாளிவர்க்கத்திடமிருந்து கற்றுக் கொண்டு அவர்களுக்காகப் பேசிய நாவல். பிரச்சாரம் யார் வேண்டுமானாலும் செய்து விட முடியாது என்பதற்கு தாய் தான் உதாரணம்.

எழுத்து எழுத்தாளனின் அனுபவத்திலிருந்து நம்பிக்கைகளிலிருந்து வருகிறது. உட்கார்ந்த இடத்திலிருந்து தன் விருப்பங்களைக் கற்பனையில் எழுதும் அற்பத்தனமான எழுத்து ஒருபோதும் மக்களால் மனதுக்கு நெருங்கியதாக ஏற்றுக் கொள்ளப்படாது.

கார்க்கி கட்சி நிதி திரட்ட அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அதே போல இன்னொரு கட்சியும் இன்னொருவரை அனுப்பியிருந்தது. “ஒரே நேரத்தில் இருவர் அமெரிக்கர்கள் முன் தோன்றி ஒரே புரட்சிக்கு இரண்டு நிதிகளைத் திரட்டினர்” என்று கார்க்கி கிண்டலாகக் கூறினார். பின்பு இந்த வேலையை விட்டுவிட்டு தன் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருந்த ஒரு புரட்சியாளனின் தாய் பற்றிய கதைய எழுதத் தொடங்கினார். அதனால் வந்த பணத்தை கட்சிக்குக் கொடுத்தார். அப்படிப்பட்டவரால்தான் தாய் எழுத முடியும்.

தாய் மட்டுமே கார்க்கியின் நாவல்களின் வித்தியாசமானது. மூவர், அர்த்தமோனவ்கள், போமா கார்டியேவ் எல்லாம் மனதைப் பிசையக் கூடியவை. இவ்வளவு வெறுமை ஏன் என்ற சந்தேகம் அடிக்கடி வரத்தான் செய்கிறது. ஆனால் ஒரு வெடிப்புக்கு முந்தைய, புயலுக்கு முந்தைய வெக்கையை அற்புதமாகப் பிரதிபலித்ததாலேயே அவை மிக முக்கியமான நாவல்களாகக் கருதப்பட்டன.

1917 புரட்சி ரஷ்ய இலக்கியத்தை புரட்டிப் போட்டது. புதிதாக கல்வியறிவு பெற்ற மக்கள், போர்க்களங்களில் இருந்து திரும்பிய வீரர்கள், நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பாய்ந்த தொழிலாளர்கள் எழுதிக் குவித்தனர். நாற்புறமும் பகைவர்களால் சூழப்பட்டிருந்த அரசு மக்கள் இலக்கியம் படைப்பதை வரவேற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாற்றாக புதிய சோசலிச உற்பத்தி முறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பில் இருந்த கட்சி தனக்கான இலக்கியமாக இவற்றைக் கருதியதில் ஆச்சரியமில்லைதானே ?

ஓஸ்திரோவ்ஸ்கி –வீரம் விளைந்தது, அலெக்ஸேய் டால்ஸ்டாய், பாதாயேவ், தவிர மற்ற சோவியத் குடியரசுகளில் இருந்து வந்து குவிந்த அற்புதமான கதைகளையும் கவிதைகளையும், மாயகோவ்ஸ்கி, அன்ன அகம்தேவா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு இருவரைப் பற்றி மட்டும் சொல்லி முடித்து விடலாமென்று நினைக்கிறேன். பின்பு வாய்ப்பிருந்தால் அவற்றைப் பற்றியும் ஒருநாள் எழுதலாம்.

ஷோலகாவின் மிக அற்புதமான நாவல் கன்னி நிலம். அவருக்கு டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலுக்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. அவர் அரசின் வற்புறுத்தலால் அல்லது அரசின் ஆதரவைப்பெறுவதற்காக டான் நதி நாவலை நிறுத்திவிட்டு கன்னிநிலத்தை எழுதினார் என்றெல்லாம் கூறப்படுகிறது.

ஆனால் ஷோலகாவ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். மீசை அரும்பிய வயதில் துப்பாக்கி ஏந்தி ஸ்டெப்பிவெளிகளில் நடந்த புரட்சிப் போர்களில் பங்கு கொண்டவர். அவரும் தோழர்களும் புரட்சி விரோதிகளால் விரட்டப்பட்டனர். அவர்களை விரட்டியடித்தனர். அவரது அனுபவங்கள் தான் டான் நதி … நவீனம். ஒரு பகுதி வேலை முடிந்த நிலையில் கூட்டுப் பண்ணைகள் அமைக்கும் பணி ரூஷ்ய கிராமங்களில் தொடங்கியது. விவசாயத்தில் தனியுடமையை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான புரட்சிகர நடவடிக்கை அது. உலகம் முன் கண்டிராத மிக முக்கியமான பரிசோதனை. இதற்காக விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்ய இருபதாயிரம் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். நாடு முழுவதும் விவாதித்தது. சண்டை போட்டது. முரண்டு பிடித்தது. தொடர்ந்து முன்னேறவும் செய்தது. நாடு இவ்வளவு முக்கியமான பரிசோதனைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டிருக்கும் போது ஷோலகாவ் போன்ற ஒருவர் தான் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு அதில் ஈடுபாட்டுகாட்டுவதும் இறங்குவதும் இயல்புதானே ?

கன்னிநிலத்தில் வரும் நகூல்நவ் ஆங்கிலம் படிக்கிறான். இரவு முழுவதும் படிக்கும் போது சேவல்கள் முறைவைத்துக் கூவுவதை கேட்டு அவற்றின் கூட்டு ஆலாபனையில் லயித்துப் போகிறான். ஒருநாள் ஷுக்கார் தாத்தாவுக்கு இதைக் காட்டுகிறான். தாத்தா அசந்து போகிறார்.

“என்ன ஒரு குரல். பாதிரி போல”

“தாத்தா வாயை மூடு. இந்த சேவலின் குரல் சர்ச் பாதிரி போலிருந்தால் அந்தப் பூச்சியின் சத்தத்தை நான் கேட்பேன் என்று நினைக்கிறாயா?’

நாங்கள் புரட்சிகர இயந்திரங்கள் என்று அன்பான கிண்டலுடன் அழைக்கும் கட்சி ஊழியர்களை உள்ளும் புறமும் அறிந்த ஒருவராலேயே இப்படி ஒரு வரி எழுத முடியும்.

இறுக்கமான ஆழமான சற்றே இருண்மை பூசிய பழைய ரஷ்ய இலக்கியவாதிகளின் நடையிலிருந்து உழைக்கும் மக்களின் கேலியும் கிண்டலும் வேடிக்கையும் விளையாட்டும் அதே நேரம் சம்பவங்களின் உக்கிரமும் தீவிரமும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் நவீன நடைக்கு இலக்கியம் மாறுவதை ஷோலகாவின் எழுத்து காட்டுகிறது.

“புரட்சிக்கு முன்பு தண்ணீர் தொட்டி அருகே பேய் உட்கார்ந்து இருக்குமே அது போல என் மனைவி உட்கார்ந்திருக்கிறாள்“ இது போன்ற அலட்சியமான வாக்கியங்கள் விரவிக் கிடக்கும் அந்த நாவலில். நகூல்நவ் பலநாட்கள் காத்திருந்து ஒரு எதிர்ப்புரட்சிக்காரனை ஸ்டெப்பியில் சுட்டு வீழ்த்தும் காட்சி. . . ரூஷ்ய இலக்கியம் ஏன் தனித்துவமானது என்பதற்கு இது ஒன்று போதும்.

கட்டுரை மிகவும் நீண்டு விடுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே ஸீமனவுக்கு வந்து விடலாம். அண்மையில் with you and with out you என்று ஒரு சிங்களப் படம் வந்தது நினைவிருக்கலாம். அது கன்ஸ்தந்தீன் ஸீமன்வின் கவிதையின் தலைப்பு. இந்தத் தொகுதியில் உள்ள எனக்காக காத்திரு என்ற கவிதை அது எழுதப் பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே ஐரோப்பிய போர் வீரர்களிடையே பெரும் புகழ் பெற்றது. போருக்குச் சென்ற ஒவ்வொரு வீரனும் இக்கவிதையை கோட் பாக்கெட்டில் வைத்திருந்தான். அல்லது படி எடுத்து மனைவிக்கோ காதலிக்கோ அனுப்பினான். இன்றுவரை போர்க்களங்களில் மிக அதிகமாக பேசப்படும் படிக்கப்படும் கவிதை அதுதான்.

ஸீமனவ் பிரபு வம்சத்தில் வந்தவர். அவரது தந்தை புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறினார். தாய் சோவியத் யூனியனிலேயே தங்கி விட்டார். இளம் ஸீமனவ்வின் இளமைக்காலம் இன்னொரு தனிக்கட்டுரை எழுதப் போதுமானது. ஆனால் அவரது நூலுக்கு வந்து விடுவோம். ஸீமனவ் ஒரு நாளிதழில் நிருபராக போர்முனைக்குச் சென்றார். மாஸ்கோ திரும்பும் ஒரு குறுகிய இடைவேளையில் அவருக்கு வாலெண்டினா என்ற திரைப்பட நடிகை அறிமுகமானார். வாலெண்டினாவின் செம்படை அதிகாரியான கணவர் போரில் கொல்லப்பட்டிருந்தார். வாலெண்டினாவுக்கு ஆண் நண்பர்கள் பலர் இருந்தாலும் அவரால் தன் கணவனைப் போல யாரையும் காதலிக்க முடியவில்லை.

ஸீமனவுக்கும் வாலெண்டினாவுக்கும் காதல் வந்தது. அதாவது ஸீமனவ் தீவிரத்துடன் அவரைக் காதலித்தார். வாலெண்டினா அதே அளவு அவர் மீது அன்பு கொண்டிருந்தாரா என்பது சந்தேகம்தான். இந்தச் சூழலில்தான் மாஸ்கோ போர் முனை சென்ற ஸீமனவ் அந்தக் கவிதைகளை எழுதினார்.

போருக்குப் பின்பு ஸீமனவ் முழுதாகத் திரும்பி வந்ததும் இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததும் பின்பு இந்த வாழக்கையைச் சகித்துக் கொள்ள முடியாமல் பிரிந்ததும் தனிக்கதை. பிரிவு ஸீமனவை விடுதலை செய்தது. உறவில் சற்றே விட்டேற்றியாக இருந்தாலும் வாலெண்டினா பிரிவால் நொறுங்கிப் போனார். விரைவில் மரணமும் அடைந்தார்.

அவரது மரணத்துக்குப் பிறகு ஸீமனவ் எழுதிய நாவல்தான் போர் இல்லாத இருபது நாட்கள். அதன் கதாநாயகன் லப்பாத்தின்.

இரண்டாம் உலகப் போர் கால சோவியத் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றிய அற்புதமான சித்திரம் போர் இல்லாத இருபது நாட்கள்.

லப்பாத்தின் சிவப்பு நட்சத்திரம் இதழின் போர்க்கள நிருபன். இதற்கு முன் ஹால்ஹின் கோல் போரிலும் பின்லாந்துப் போரிலும் கலந்து கொண்டு அனுபவம் பெற்றவன். ஸ்டாலின்கிராட் முற்றுகையின் போது அங்கே இருக்கிறான். அப்போது செஞ்சேனையில் பணிபுரியும் ஒரு பெண் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட தன் கணவன் உயிருடன் இருப்பதாக வந்த கடிதத்தை எல்லோரிடமும் காட்டுகிறாள். அது தந்த உற்சாகத்தில் ஆபத்தான வேலை ஒன்றை ஏற்றுக் கொண்டு சென்று கொல்லப்படுகிறாள். இவளது கதையை லப்பாத்தின் செய்தி ஏட்டில் எழுதுகிறான்.

தாஷ்கெண்ட்டில் இருக்கும் ஒரு திரைப்பட நிறுவனம் இதைப் படமெடுக்க விரும்பி திரைக்கதையை அனுப்பி ஒப்புதல் கேட்கிறது. வீரம், வெற்றிக்களிப்பு, கூட்டம் கூட்டமாக ஜெர்மானியர்கள் கொன்று குவிக்கப்படுவது என்று திரைக்கதை அபத்தக் களஞ்சியமாக இருக்கிறது. லப்பாத்தின் அதை அங்கீகரிக்க மறுத்து விடுகிறான்.

திரைப்பட நிறுவனம் அவனையே வந்து திரைக்கதையை சரி செய்து கொடுக்கும்படி கேட்டு 20 நாட்கள் விடுமுறை பெற்றுத் தருகிறது. ஐந்து நாட்கள் வேலை செய்ய மீதி நாட்கள் பயணத்துக்கு. தாஷ்கெண்ட்டில் விவாகரத்து பெற்ற லப்பாத்தினின் மனைவி இருக்கிறாள்.(வித் யூ அண்ட் வித் அவுட் யூ வுக்குக் காரணமான அதே வாலெண்டினாவின் பிரதி பிம்பம்தான் இந்த க்ஸேனியா. மனைவியிடமிருந்து பதினைந்து ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக விவாகரத்துப் பெற்றதை மிகுந்த பெருமையுடன் குறிப்பிட்டிருப்பார். காலம்தான் எவ்வளவு விசித்திரமானது)

லப்பாத்தின் தாஷ்கெண்ட் செல்கிறான். வீழ்ச்சி பெற்ற ஸ்லாவா என்ற கவிஞனைச் சந்திக்கிறான். ஸ்லாவா மாபெரும் கவிஞன். ஆண்மையே வடிவானவன். உள்நாட்டுப் போர்க்களங்களில் வீரப் போர் புரிந்தவன். இன்னொரு போர் தொடங்கும் போது இவன் முதல் ஆளாக போர்முனைக்குக் கிளம்பிவிடுவான் என்று எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் பாதிவழியில் விமானத்தாக்கில் சிக்கி நரம்புத் தளர்ச்சி நோய்கண்டு நொறுங்கிப் போய்த் திரும்புகிறான். கோழை என்று இகழப்படுகிறான். குற்ற உணர்வுணர்வால் அவன் வாழ்க்கை வெறுமையாகிவிடுகிறது. ஆட்சித் தலைவரே நாற்பத்தைந்து வயதில் போர்முனையில் இருந்து தீர வேண்டிய அவசியம் என்ன என்று அவனிடம் கேட்டாலும் அவனால் குற்ற உணர்விலிருந்து வெளிவர முடிவதில்லை.

லப்பாத்தினும் கூட கருத்து முதல்வாதி என்று விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் ஒருவர் யாரும் அறியாமல் போர்முனை சென்று புகழ் பெற்ற வீரராக உருவெடுத்திருப்பதை, இச்செய்தி ஸ்லாவாவுக்கு வேதனை அளிக்கும் என்று தெரிந்தே சொல்கிறான்.

போரின் வீர காவியங்கள் குறித்தும் தியாகம் உயிர்வழங்கும் உறுதி பற்றியெல்லாம் உணர்சிமயமான கருத்துக்கள் கொண்டிருக்கும் நடிகையின் வாதங்களை சிரித்தபடி மறுதலிக்கிறான். நாலே எட்டில் சாவு. பகைவனைக் கொன்றுவிட்டு நாம் உயிருடம் இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் கெட்டது இவ்வளவுதான் போர்.

ஜியார்ஜிய கவிஞர்கள், மகன்களையும் கணவர்களையும் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்கும் மக்கள், பசியும் பட்டினியுமாக ஆலைகளில் போர்க்கருவிகள் உற்பத்தி செய்பவர்கள், போர்கால ருஷ்யாவின் பின்புலம் இவ்வளவு அழகாக வேறு எந்த நாவலிலும் தீட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமானது நீனாவுடனான சந்திப்பு. நீனா அழகி, லப்பாத்தினை விட பதினைந்து வயது இளையவள். ஒருவிதத்தில் ரசிகை. லப்பாத்தினும் நீனாவும் பேசியபடி தாஷ்கெண்ட் வீதிகளில் நடக்கும் காட்சி ஓவியமாக விரிகிறது. நீனாவுடனான உறவு அவனை இன்பத்தில் மூழ்கடிக்கிறது. வாக்குறுதி அளிக்க அவன் தயாராக இருக்கிறான். ஆனால் நீனா வாக்குக்குறுதிகளை அஞ்சுகிறேன் என்கிறாள். எனவே நிபந்தனை இல்லாமல் காத்திருக்கும் கடினமான பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு அவனுக்கு விடுதலை அளிக்கிறாள். விடுதலை வலியை அளிக்கிறது. திரும்பவும் போர்முனை. குண்டுமழை. . .

நாவல் முழுவதும் உரையாடல்கள் மிக அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கும். ஒவ்வொருமுறை படிக்கும் போதும் நீனாவுடனான லப்பாத்தினின் உறவு மேலும் மேலும் அழகியல் தன்மை கொண்டதாக மாறிவருகிறது. ஒவ்வொரு முறை படிக்கும் போது புதிதுபுதிதாக ஏதோ ஒன்று தென்பட்டுக்குக் கொண்டே இருக்கிறது.

எழுத்தாளர்களுக்கு இடையேயான சின்னச் சின்ன சண்டைகள், கோபம், விமர்சனம் வைப்பதன் மூலம் தன்னை மற்றவர்களுக்கு மேல் நிறுத்திக் கொள்ள செய்யப்படும் முயற்சி, அவர்கள் விரும்பும் மானசீக ஆதிக்கம், வீரத்தை மிகையாகக் காட்டிக் கொள்ள செய்யும் முயற்சி, மிகையான குற்ற உணர்ச்சி . . . உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் இப்படித்தானோ ?