பிக் பாஸ் – கூட்டுச்சமூகத்தின் சோதனை முன்னோட்டம்

பிக் பாஸ் – கூட்டுச்சமூகத்தின் சோதனை முன்னோட்டம்

வாசுகி பாஸ்கர்

பிக் பாஸ் – திரைக்கதை எழுதப்பட்ட ஒரு Scripted நிகழ்ச்சி, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் கலாச்சார இழிவான நிகழ்ச்சி என்கிற விமர்சனத்தை எல்லாம் தாண்டி மூன்றாம் வாரத்திலேயே பார்ப்பவர் அனைவரையும் பேச வைத்து சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

எதை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்கான விளக்கங்கள் பலரால் பலவிதமாக வரிசைப்படுத்தப்பட்டு வந்தாலும், சமூக கூட்டு வாழ்க்கையின் தத்துவ அடிப்படையிலும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

என் கல்லூரி காலத்தில் நண்பர்கள் ஆறேழு பேருடன் ஒரு சுற்றுலாவுக்குக் கிளம்ப ஆயுத்தமான போது என்னை வழியனுப்ப என் தந்தை வந்திருந்தார், காரில் ஓட்டுனருக்குப் பக்கத்து முன் இருக்கையில் அமர்ந்திருந்த என்னை அந்த இடத்தில் இருந்து எழுப்பி காரின் மைய பகுதியில் அமரச் செய்தார், முன் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி பயணமாவது எனக்குப் பிடித்த ஒன்று என்பதால் நண்பர்களோடு சண்டையிட்டு அந்த இடத்தில் அமர்ந்தேன், தந்தையின் வற்புறுத்தலுக்காக இடம் மாறினாலும், ஊருக்கு வெளிப்புறம் சென்றதும் மீண்டும் இடம்மாறி முன் இருக்கையில் அமர்ந்தேன்.

நான் என் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் நடு பிள்ளை, என் நண்பர்கள் பலர் வீட்டிற்கு ஒரே பிள்ளை, எப்போது பயணமானாலும் என் தந்தை எனக்கு அறிவுறுத்துவது நடு இருக்கையில் அமர வேண்டுமென்பது, பாதுகாப்பு, முன் எச்சரிக்கை காரணமாக ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் நடு இருக்கை பாதுகாப்பானது என்பது என் தந்தையின் அபிப்பிராயம், அதன் காரணமாகவே என்னை வலியுறுத்துவார்.

அவர் சொல்வது போல ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அங்கே காக்கப்பட வேண்டிய உயிர் என்னைக் காட்டிலும் என் நண்பர்களாக இருக்க வேண்டுமென்பது நான்  வகுத்து கொண்ட அறம். காரணம்,  அவர்கள் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளை, ஒரு தந்தையாக அவர் என் நலன் சார்ந்து சிந்திப்பது இயற்கை என்றாலும், கூட்டாக இயங்கும் போது அங்கே எது அறமாக இருக்க வேண்டும் என்கிற நியாயப்படி என் தந்தையின் சுயநலம் முரண் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இந்த சம்பவத்தையும் என்னால் முடித்துப் போட முடிகிறது. சமூகத்தில், கூட்டமாக, குழுவாக இயங்கும் போது தனிபர் விருப்பு வெறுப்பு அனைத்தையும் தாண்டி நாம் இந்த சமூகத்தோடு எத்தகைய இணக்கத்தோடு வாழப் பழகி இருக்கிறோம், நம் சகிப்புத்தன்மையின் அளவீடு எது என்பதை நம் comfort zone என்கிற ஒன்றில் இருந்து வெளியே வந்தால் மட்டுமே தெரியும், அதுவரை நம்மை பரிசீலனை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா என்பது கூட சந்தேகமே.

நட்ட நடுக்காட்டில் விடுமுறை நாட்களைக் கழிக்க பயணமாகி, தங்குவதற்காக ஒரு cottage கிடைக்குமா என்று கேரள சுற்றுலா பகுதியில் சுற்றி கொண்டிருக்கையில், என் நண்பன் ஒருவன் “எனக்கு வெஸ்டர்ன் டாய்லெட் உள்ள அறை தான் வேண்டுமென்றான்” இன்னொருவன் “தங்கும் இடத்தில் தொலைக்காட்சி இருக்கிறதா?” என்று வினவினான். இந்த கேள்விகள் என்னை கொஞ்சம் வியப்புக்குத் தள்ளியது; காரணம், இயந்திர சப்தங்களோடு நகர சொகுசு வாழ்க்கையில் வாழப் பழகி விட்ட நமக்கு, நியாயமாக அதில் இருந்து தற்காலிகமாக விடுபடுவது தானே ஒரு நல்ல விடுமுறை தினமாக இருக்கும்? இயந்திர தொலைத்தொடர்பு கருவிகளுடனான தொடர்பைத் துண்டித்து வாழும் போது தானே வாழ்வின் யதார்த்தம் புரியும்? இதற்கான வாய்ப்பு பறிகொடுக்கப்பட்ட ஒரு சமூக சூழலில் நாம் நம்மை பரிசீலிக்க புது மனிதர்கள், புது இடம், புது உணவு என நம் சுழற்சி வாழ்க்கை தடைபடுவது நிச்சயம் அவசியம்.

படுக்கை அறையில் இருந்து தூங்கி எழுந்து வந்து வரவேற்பறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்ததும், பிள்ளைக்கு காபியோ டீயோ வேண்டுமென்று தாய் அறிவாள், நம் அன்றாட தேவைகள், குணங்கள், குணயதிசயங்கள் எதுவென்பதை அறிந்து நமக்குத் தகுந்தாற் போலவே தகவமைத்துக் கொண்டு இருக்கும் நம் சுற்றத்தோடு வாழும் வரை, நம் குடும்ப அமைப்பில்  நாம் புது சோதனைகள் எதையும் செய்திருக்க வில்லை. ஆனால் புது மருமகள் வந்ததும் அந்த வீட்டின் மொத்த தட்ப வெட்ப சூழலுமே மாறி சிறு சிறு பிரச்சனைகள் இந்திய குடும்பங்களில் நாளொன்றாய் உதயமாகி, மாமியார் மருமகள் பிரச்சனைகளாக உருமாறுவது கூட நாம் நம் comfort zone ல் இருந்து வெளி வரத் தயாராக இல்லை என்கிற மனித மனப்பான்மையின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. “இசைந்து போகப் போவது யார்?” என்கிற ஈகோ அங்கே வலுவாக நிற்கிறது. நாம் எந்த அளவு சக மனிதரின் தேவைகளை, உணர்வுகளை, மதிக்க பழகி இருக்கிறோம் என்பது தான் கூட்டு சமூகத்தின் மனசாட்சி.

பிக் பாஸ் ஒரு லாபகரமான விளம்பரதார நிகழ்ச்சி என்பதை எல்லாம் தாண்டி, காயத்திரிகளை திட்டி, ஓவியாக்களை கொண்டாடி, ஜூலிகளை சந்தேகித்து நாம் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும் போது “அறம்” சார்ந்து ஒரு நியாயத்தை அனைவருமே ஒப்புக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்து, அதே “அறம்” சார்ந்து நம்மால் இந்த சமூகத்து மனிதர்களோடு பழக முடிகிறதா? என்கிற கேள்வி தான் பிக் பாஸ் வீட்டின் மைய விவகாரமாக நாம் பார்க்க வேண்டும்.

நமக்குள் இருக்கும் காயத்திரிக்களை நாம் திருத்தத் தயாராக இருக்கிறோமா? நம்மை சுற்றி இருக்கும் ஓவியாக்களை மனம் விட்டுப் பாராட்டி இருக்கிறோமா? ஓவியாக்களை ஓவியாக்களாகவே ஏற்று கொண்டு இருக்கிறோமா? என்றால், நிச்சயம் இல்லை. தனி நபர் விருப்பு வெறுப்புகளை நாம் அங்கீகரிப்பதே இல்லை, “எனக்கு நீ எதுவாக இருக்கிறாயோ, அதை பொறுத்தே தான் நான் உனக்கு” என்கிற காயத்திரிகளாக தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம்.

புது சூழல், இடம், மனிதர்கள், உணவு என்று உங்களின் தினசரி வாழ்க்கை சுழற்சியில் இருந்து விலகி, எண்ணிக்கையில் அடக்க முடியா விசித்திரமான மனித மனங்கள், கலாச்சாரம், வாழ்வியல் என்று புது விஷயங்களை அதன் பிடியில் இருந்து அனுசரித்து, ஏற்றுக்கொண்டு, உங்களால் இருக்க முடிகிறதா? என்று அவ்வப்போது பரிசோதித்துப் பாருங்கள், கேமராக்கள் மனங்களாகவும், வாரமொருமுறை அடுத்தவர் பார்வையில் இருந்து நியாய தர்மத்தை சுட்டிக்காட்டும் பிக் பாஸும் நீங்களாகவே இருந்து பாருங்கள்.

இன்னொருவர் நியாயத்தை அவர் இடத்தில் இருந்தே சிந்தித்து, அறத்தை நிறுவுவது போல ஒரு உன்னதம்  உலகில் இல்லை.