பொம்மை புராணம்

பொம்மை புராணம்

– அதீதன்

1. புதிய பொம்மையை வாங்கும்பொழுது

இன்னும் குதூகலிக்கறாய்

ஒரு குழந்தையைப் போல

ஆனால் நீ அறிவாயா

நம்மைப் போலல்ல பொம்மைகள்

அவை விற்கபடும்போதோ

வாங்கப்படும்போதோ அன்றி

விளையாடப்படும்போதே மகிழ்கின்றன.

2. குழந்தை தன் கையை ஒடித்துவிட்டதாக

ஒருநாளும் பொம்மைகள்

குற்றம் சாட்டுவதில்லை

மாறாக

நாம்தான் அவற்றை

அவர்களிடமிருந்து பிரித்துப்

பரணில் போடுகிறோம்

3. என் தோழனே

எனக்கு நீயொரு

பொம்மையைப் பரிசளி

அது உன்னைப்போலவோ

என்னைப் போலவோ

இல்லாமல்

நமக்கான புதிய நண்பனாய்த்

திகழட்டும்

4. டெடி பியரைக்

கட்டிப் பிடித்து தூங்கும்

யுவதியே

அது சிறுபிராயத்தில்

நீ அணைத்து உறங்கிய

உன் தந்தையின் மார்புச்சூட்டை

நினைவுருத்துகிறதா

5. மீண்டும் பொம்மைகள்

வாங்க வேண்டும்

பொம்மைகள் இல்லாமல் வாழ்வதென்பது

குழந்தைகளுக்கு மகிழ்வைத் தருவதில்லை

குழந்தைகளில்லாமல்

வாழப்பழகிய ஒரு பொம்மையும்

உலகிலில்லை.