பாரதிராஜா திரைப்படக் கல்லூரி

பாரதிராஜா திரைப்படக் கல்லூரி

                                                                                                                                        தி.குலசேகர் 

இயக்குநர் பாரதிராஜா துவங்கியிருக்கிற திரைப்படக் கல்லூரியின் திட்டவடிவம் குறித்து விவாதிக்க, ஒரு ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் இருபதிற்கும் மேலான இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள். எனது ஆசான்களான கே.பாக்யராஜ் சார் மற்றும் பார்த்திபன் சார் ஆகியோரோடு நானும் போயிருந்தேன்.

உண்மையிலேயே அற்புதமான கருத்து பரிமாறல். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இந்தப்பதிவு.

பாடலாசிரியர் மதன் கார்க்கி வெர்ச்சுவல் ரியாலிட்டி சினிமா பற்றி பேசினார். வெர்ச்சுவல் ரியாலிட்டியில் ஒரு திரைக்கதை அமைப்பது எப்படி இருக்கும் என்கிற அனுபவத்தைக் காட்சிபூர்வமாய் விவரித்தார். மேலும் எதிர்காலத்தில் தொலைக்காட்சி இருக்கவே இருக்காது என்றும், இன்டர்நெட் மட்டுமே இருக்கும் என்றும், நெட் சினிமாவே தலைதூக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்குநராக வர ஆசைப்படுகிறவர்கள் நல்ல கதை சொல்லியாக, சொல்லும்போதே கேட்கிறவர்களை உருக வைத்துவிடும் பாவிப்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

யூகிசேது நன்னூல் நெறிகள் திரை இலக்கணத்திற்கான அற்புதமான அறிதல் என்றார்.

இயக்குநர் ஜெயபிரகாஷ் பயிற்சி கால அளவான ஒரு வருடத்தில் film craft பற்றியத் தெளிவை கற்றுத் தந்துவிட வேண்டும் என்றார்.

நாசர் குறிப்பிடுகையில் ஒரு படத்தில் நடிக்கிற அனைத்து நடிகர்களும் ஒன்றாய் கூடியிருந்து கருத்து பரிமாறி அந்த கதா பாத்திரங்களுக்கிடையே ஆன ஒத்திசைவை சாத்தியப்படுத்தக்கூடிய சூழல் அவசியம் என்றார்.

ஆர்.கே செல்வமணி வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

பார்த்திபன் சார் குறிப்பிடுகையில், திரைப்பட இயக்குநராக விரும்புகிறவர்களுக்கு அதன் மீது தீராக்காதல் இருக்க வேண்டும். பாதி வழியில் பின்னால் திரும்பிப் பார்க்கிற தடுமாற்றம் இல்லாத திடசித்தம் வேண்டும். யுத்தத்திற்குச் செல்கிறவர்கள் பாலத்தைக் கடந்த பிறகு பாலத்தைக் கத்தரித்து விடுவார்களாம். வெற்றி அல்லது வீரமரணம் என்கிற தாகத்தோடு பயணிப்பவர்கள் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என்றார். நேர்த்தியான இயக்குநர்களின் அனுபவங்கள் நேரடியாக மாணவர்களோடு பகிரப் படுவதென்பது ஒரு வரம் என்றும் குறிப்பிட்டார்.

பாக்யராஜ் சார் குறிப்பிடுகையில், ஒரு வழிப்பயணம் போன்றது திரைப்படத் துறையில் சாதிக்க நினைக்கிற யாகம் என்றார். அப்படியொரு யாகத்தில் இருந்ததை கவனித்த ஒரு தருணத்தில் தான் பார்த்திபனை உதவி இயக்குநராக இணைத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

நண்பர் ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா குறிப்பிடுகையில், வாழ்வியல் புரிதலும் அதன் யதார்த்ததும் பிடிபட மாணவர்களை நேரடியாக அரசு மருத்துவமனை, காவல் நிலையம், கோர்ட் முதலான இடங்களுக்கு அழைத்துச் சென்று பலவிதமான கேரக்டர் ஸ்டடி பண்ணச் சொல்ல வேண்டும் என்றார்.

நான் ஒரு முறை எக்மோரில் இறங்கியபோது, எழுத்தாளர் ஜெயகாந்தன் இதேபோல உள்ளே ஒரு ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டு, வருகிறவர்கள் போகிறவர்களை மௌனமாய் இதேமாதிரி உள்நோக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

பாரதிராஜா சார் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் ‘நீங்க ஓவியர் மருது தான?’ என்றார். சம்மர்கட் வெட்டியதன் விளைவு. நான் புன்னகையோடு கை கொடுத்தபடி, நான் ஒரு இணை இயக்குநர். பாக்யராஜ் சாரிடம் துவங்கி, இப்போது பார்த்திபன் சாரோடு வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்றேன்.

பள்ளிப்பருவத்தில் இதே பாரதிராஜா சாரின் பதினாறு வயதினிலே பார்த்து தான் திரைப்படத்துறைக்கு பின்னாளில் வந்தவர்களில் நானும் ஒருவன் தான் என்றாலும், எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தும் நான் அவரோடு பேசியதில்லை. தூரத்தில் இருந்தே அந்த மானசீகக் காதலை ரசித்துக் கொள்வதோடு சரி.

முதன்முதலில் கவிஞர் மீரா சாரின் அன்னம் பதிப்பகம் வெளியிட்ட என்னுடைய ‘ஒரு சிநேகிதிக்காக’ சிறுகதை தொகுப்பு நூலை அவரிடம் கொடுக்க சென்றேன். அப்போது நான் தூத்துக்குடியில் ஸ்பிக்கில் சேர்ந்திருந்தேன். அவர் புதுநெல்லு புது நாத்து படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி வந்திருப்பது அறிந்து, அங்கே நடக்க இருந்த ஒரு விழாவில் சந்தித்து அந்த புத்தகத்தைத் தந்தேன். அப்போது எதுவும் பேசவில்லை என்பதை விட, பேச வரவில்லை என்பதே உண்மை.

அதன் பிறகு எத்தனையோடு முறை இயக்குநர் சங்கத்தில், காவிரி பிரச்னைக்காக, ஒன்றாக நெய்வேலி அனல்மின் நிலையம் சென்று போராடியது உட்பட இயைந்து பயணித்திருந்தாலும், எப்போதும் பேசியது மட்டுமில்லை.

இந்த அதிசயத் தருணத்திற்காகவே தானோ என்னவோ.. அவரே என்னை கவனித்து, புன்னகைத்து, தற்செயலாய் கைகொடுத்து, விசாரித்தது என் வாழ்வின் அற்புத தருணங்களில் ஒன்று.

இதன் தலைமை நிர்வாகியாக நடிகர் விக்ரமின் தங்கை அனிதா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பாக்யராஜ் சாரிடம் வந்து அவருடைய byte பின்னர் விரிவாக ஒன்று தரும்படி கேட்க, நான் குறுக்கிட்டு, ‘சார் எழுதின வாங்க சினிமா பத்தி பேசலாம் புத்தகத்தை பாடத்திட்டத்தில சேத்துக்கங்க. அதில எல்லாம் சொல்லியிருக்காரு..’ என்று சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டார்.

விழாவில் பங்கேற்ற இயக்குநர் நளன் குமாரசாமி, இயக்குநர் யூகிசேது, இயக்குநர் சித்ரா லட்சுமணன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் போன்றவர்களிடம் நிறைய எனது தனிப்பட்ட அபிப்பிராயங்கள் குறித்து பேசி, அதனை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பாரதிராஜா சாரிடம் பகிரும்படி தெரிவித்தேன். அப்படியான என்னோட அபிப்பிராயங்கள் என அங்கே நான் பேசியது கொஞ்சம் பார்க்கலாம்.

உலகத்திலேயே அதிகமான படத்தை இந்தியா தான் உற்பத்திக்கிறது. ஆனால் உலக அரங்கில், உலகத்தரமான படங்களின் பதிவுகளில் மிகமிகச் சொற்பமாகவே இடம் பிடித்திருக்கிறது. அது ஏன் என்பதில் எனக்குள்ள அபிப்பிராயத்தைத் தெரிவித்தேன்.

மோசமான ஹாலிவுட் படம் கூட இலக்கணம் பிசகாமல் இருப்பதும், நல்ல பல தமிழ் படங்கள் கூட இலக்கணத்தில் கவனம் போதாமலுமிருப்பது ஒரு முக்கியமான விசயமாக எனக்குப்படுகிறது. ஒரு ட்ராலியோ, கிரேனோ நகரும் போது ஒரு பிளாக்கில் இருந்து இன்னொரு பிளாக்கிற்குச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படை விதி கூட பின்பற்றப்படாமல் இங்கே பல படங்கள் எடுக்கப்படுகிறதுதான். லுக்கில் தவறிழைக்கப்படுகிறதுதான். அதை கற்றுத் தந்து மேம்படுத்துவதென்பது எளிய காரியம். அதை இப்படியான திரைப்படக் கல்லூரி கவனித்தில் கொள்ளலாம்.

வரப்புயற நீருயரும். பார்வையாளர்களின் ரசனை மேம்பட மேம்பட, திரைப்படத்தின் தரமும், ருசியும் மேம்படும். அதற்கு பள்ளிப்பாடத்திட்டத்திலேயே பாலியல் கல்வியோடு, ஒரு இலக்கிய நூலை எப்படி வாசித்து உள்வாங்கிக் கொள்வது, ஒரு நல்ல சினிமாவை எப்படியெல்லாம் பார்த்துணர வேண்டும் என்கிற அப்ரிசியேஷன் கிளாஸ் எடுக்கப்பட்டாக வேண்டியது அவசியம்.

அப்படித் தெரிந்திருந்தால் தான் பாரதிராஜா பறவைகளின் மூலமே பல படங்களில் பல உணர்வுகளைக் கடத்திச் சென்றது போன்ற உத்திகள் பிடிபடும்.

சுவாரஸ்யமான, தரமான படங்களை இனங்காணுவது எப்படி என்கிற பயிற்சியை தயாரிப்பாளர்களுக்கும் தர வேண்டும். அப்போது தான் வியாபாரமாய் மட்டுமே சினிமா என்கிற கலையை பார்க்கிற மனோநிலையில் இருந்து விலகி, வணிகம் சார்ந்த கலை இது என்கிற புரிதல் பிடிபடும். நல்ல சினிமாவிற்கான துவக்கமாகவும் இது அமையக்கூடும்.

திரைக்கதை, திரைமொழி, க்ராஃப்ட், தொழில்நுட்பம், செய்முறை பயிற்சி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், திரைப்படத்தை எடுத்தபின் எப்படியெல்லாம் அதை விநியோகிக்கிறார்கள், விநியோகஸ்தர்கள் எப்படி செயல்படுகிறார்கள், திரையரங்குகள் எப்படி செயல்படுகின்றன போன்ற வியாபாரத் தரவுகள் அனைத்தும் கற்றுத் தரப்பட வேண்டும்.

தேர்ந்தெடுத்த நல்ல இலக்கியங்களை படிக்கச் சொல்லி, அதற்கு திரைக்கதை எழுதிக்கொண்டு வரும்படி பாலுமகேந்திரா தன்னுடைய கனவு பட்டறையில் பயிற்சி தந்ததுபோல பயிற்சி தரலாம். ஒவ்வொரு புத்தகத்தைப் படித்து முடிக்கையில், இன்னொரு புதிய உலகத்திற்குள் பயணிக்கிறோம் என்பது படிப்பவர்களுக்குப் புரியும்.

சினிமா என்பது கூட்டு முயற்சி. டீம் வொர்க். அதற்கு ஈகோ குறுக்கீடாகக் கூடாது. இயக்குநர் அனைவரையும் வெற்றிகரமாக அரவணைத்து, அதிக ஆக்கத்தை அவர்களிடமிருந்து வெளிக்கொணர வைக்க வேண்டும். அங்கே நயந்தும், அதேசமயம் கட்டுப்பாட்டோடும் அதேசமயம் சர்வாதிகாரப் போக்கில்லாத ஜனநாயகப் போக்கோடு ஒவ்வொரு இயக்குநரும் இயங்கும்போது தரமான சினிமா எளிதில் சாத்தியமே. அதற்கு புகழ், பெயர் என்கிறதில் துவங்கும் போட்டி மனப்பான்மை தேவையற்றது என்பதை மாணவர்களுக்கு முதலியேயே புரிய வைத்தாக வேண்டும்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வார். எல்லாரும், எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு வாங்க நினைக்கலாம். அது சாத்தியம். ஆனால் எல்லோரையும் முதல் மதிப்பெண் எடுக்க சொல்லித் தரும் நிறுவனம் அங்கே போட்டி, பொறாமை, வன்மம், வன்முறையையே மறைமுகமாகப் போதிக்கிறதாகிறது. ஒரு வகுப்பில் ஒருவர் தானே முதலாவதாக வரமுடியும். அப்படி ஒருவர் மட்டும் வர வேண்டுமென்றால், அவர் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ மற்றவர்களை அவருக்கு பின்னால் தள்ளியாக வேண்டும். அப்படி தள்ளுகிறபோது போட்டியும், பொறாமையும், வன்மமும் வராமல் என்ன செய்யும். இந்த அவசியமற்ற சங்காத்தத்தை புரிய வைத்துவிட்டால் உண்மையான டீம் வொர்க் சாத்தியமே.

வித்து சிறப்பாக இருந்தாலே விருட்சம் சிறக்கும். திரைப்படக் கல்லூரி என்பது நல்ல இயற்கை உரமும், நீரும், பராமரிப்பும் என்று சொல்லலாம். இயக்குநராக விரும்புகிற வருக்குள் இருக்கிற passion over cinema தான் வித்து.

அறம் குறித்த பார்வையை உணர்த்த வேண்டும். சட்டங்கள் மாறக்கூடியது. மனிதம் மாறாதது.

திரைக்கதையே ஒரு சினிமாவின் உயிர்ப்பகுதி. அதை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்பதை சிட்ஃபீல்ட் போன்றவர்களும், யதார்த்த நடிப்பு பற்றி ஸ்டேனிஸ் லாவ்ஸ்கி போன்றவர்களும் சொல்லிச் சென்றிருக்கிற திரைநூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. அவற்றைப் படிப்பது அத்தியாவசியம்.

நிறைய திரைக்கலை சார்ந்த புத்தகங்கள் படிப்பது மிகவும் உதவும். என் அனுபவத்தில் சொல்வதென்றால் டைரக்டர் மேனுவல், கிராமர் ஆஃப் ஃபில்ம் லாங்வேஜ், ஷாட் பை ஷாட், 5 சீஸ் ஆஃப் சினிமா மேலும் பல உலகத்திரைக்கதைகள் தமிழிலேயே நூலாக வந்திருக்கிறது. நானே பதினைந்திற்கும் மேற்பட்ட உலகத்திரைக்கதைகளை தமிழில் நூலாக எழுதியிருக்கிறேன். யமுனா ராஜேந்திரன், அஜயன் பாலா, சிவகுமார், அம்சன்குமார் போன்ற பலரும் தமிழில் நிறைய திரைக்கலை சார்ந்த நூல்கள் எழுதியிருக்கிறார்கள். தேடினால் கிடைக்கும்.

பாரதிராஜா புட்டன்னா, ரா. சங்கரன் போன்ற பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்தபோது என்ன மாதிரியான அனுபவங்களை, சவால்களை, சங்கடங்களை எதிர்கொண்டார், அதனை எப்படி சமாளித்து கரை கடந்தார். அவருடைய ஒவ்வொரு படத்திலும் சந்தித்த எதிர்பாராத தருணங்கள், அவற்றில் கற்றுக்கொண்ட பாடங்கள் அத்தனையையும் கற்றுத் தரலாம். வரலாறு மிக முக்கியம்.

திரைமொழி என்பது எக்ஸ்பிரஷன் தான். திரைக்கலை ஒரு காட்சி ஊடகம் தான். அதில் சொல்ல முடியாதபோது மட்டுமே ஆடியோவிற்கு அங்கே வேலை. இதுவே சினிமாவின் அடிப்படை.

ஒரு படைப்பு சுவாரசியமாகவும், அதேசமயம் சமூக அக்கறையோடும், சோசியோ-எக்கனாமிகோ-பொலிட்டிகல் தெளிவோடு அடிமட்டத்தில் இயங்க வேண்டும். கருத்து சொல்வதென்பது அவசியமற்றது. எல்லா நல்ல படைப்பிலும் மனிதமும், ஈரமும் ததும்பவே செய்யும். ஆக நல்ல படைப்பில் அதுவே மெசேஜ் தான்.

நாசர் சார் பேசும்போது தொழில் பக்தி, தொழில் மீதான மரியாதை குறைந்து கொண்டு வருவதாகக் குறைப்பட்டார். பணம் சம்பாதிப்பது தவறில்லை. அதுவே ஒரு குறிக்கோளாக நினைத்து இங்கே வர வேண்டாம் என்றார். பணத்தையும் தாண்டிய ஒரு திருப்தி, நிறைவு இதில் இருப்பதைப் பற்றியும், அதுவே இதை உண்மையாய் நேசிப்பவர்களை இயக்குவதாகவும் சொன்னார்.

முன்பெல்லாம் விம்பிள்டனில் போல மெதுவாக சைலன்ஸ் என்று சொன்னாலே, ஒட்டு மொத்த யூனிட்டும் சைலன்ட்டாகிவிடும். இபோது அப்படியொரு தருணம் வாய்க்கிற மாதிரி தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

தொழில்நுட்பம், மேக்கப் போன்றவை நாளுக்கு நாள் அபார வளர்ச்சி அடைந்து வருவதால், உடனுக்குடன் அப்டேட் செய்தபடி இருக்க வேண்டியது அவசியம்.

மெத்தட் ஆக்டிக், புரஃபஸனலிசம், ஸ்பிரிட் அன்ட் சயின்ஸ், மெத்தட் அன்ட் மேட்டர், ஃபார்ம் அன்ட் கன்டென்ட் போன்ற ஆதார விதிகளில் யூகி சார் சொன்னது போல தெளிவு கொள்வது அவசியம்.

ரியலிச சினிமா பற்றிய புரிதல் ஆழப்பட வேண்டும்.

விவாதம் நிறைவுற்றதும், விருந்து துவங்கியது. அப்போது ஒவ்வொருவரும் சொன்ன மலரும் நினைவுகளும், நகைச்சுவை சம்பவங்களும் அந்த விருந்தின் சுவையை அதிகரிக்கச் செய்ய, நிறைவோடு வீடு வந்து சேர்ந்தேன்.

பின்குறிப்பு;
பாரதிராஜா அந்த விருத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு சேதி இது. ஒரு முறை சிவாஜிகணேசனை ஒரு திரைப்பிரமுகர் கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவர்களிடம் அழைத்துக் கொண்டு போனார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்ட கையோடு, கவிமணி, ‘இவர் யாரு?’ என்று சிவாஜியைக் காட்டிக் கேட்டிருக்கிறார்.
‘சிவாஜி கணேசன்..’
அடுத்ததாய், ‘என்ன வேலை பாக்குறாரு..??’
??????

குட்நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்.