தொடர்கள்

நீலம் பச்சை சிவப்பு – 1

செளமியா ராமன்‘சினிமா நம் காலத்தின் முக்கியமான கலையாக மாறும்’ என்று லெனின் சொன்ன போது சோவியத்தின் எழுத்தாளர்கள் பலரும் அதை நம்ப மறுத்தனர். ஒரு வேளை 1950களில் தமிழ்நாட்டின் கருத்தியலை பேசிய சினிமாவையும், நாடகத்தையும் அவர்களால் முன்னறிந்திருக்க முடிந்திருந்தால் அவர்கள் லெனின் சொன்ன வார்த்தைகளை நம்பி இருப்பார்கள். காலத்துக்கு ஏற்றாற்போல் நாம் கதை சொல்லும் களத்தையும்  மாற்ற வேண்டும் – மருவி மனதை பிடிப்பதே கலையின் தன்மை.

சினிமா! சினிமா ஒரு தப்பிப்பு களம். நம் சிக்கல்களையும் புலம்பல்களையும் இரண்டு மணிநேரத்திற்கு இடை நிறுத்தம் செய்து வேறொரு உலகில் உலவவிடும் சினிமா, காசில்லாத நேரம் ரோட்டில் கிடைக்கும் நூறு ருபாய் நோட்டு தரக்கூடிய அதே மகிழ்ச்சியை நம்மில் விட்டு செல்கிறது. சினிமாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது! சினிமா ஒரு பொது மொழி. டெண்டு கொட்டாயில் மண்ணில் அமர்ந்து படம் பார்த்த நம் தாத்தாக்களுக்கும், பென்ச்சில் அமர்ந்து படம் பார்த்த நம் அப்பாக்களுக்கும், அமேசான் பிரைமில் படம் பார்க்கும் நமக்கும் ‘சினிமா’ ஆலமர விழுது தான். எல்லோரும் ஊஞ்சல் ஆடலாம். இலைகள் உதிரும், துளிர்க்கும் மரம் மாறுமோ?!

சினிமாவை பொழுதுபோக்கு என்று முடித்து விடுபவர்களை பார்த்தால் ஒரு கூட்டம் போட்டு ‘சினிமா நம் வாழ்வின் அங்கமாகி போனதை ஏன் உணர மறுக்கிறீர்கள்’ என்று கேட்க தோன்றும். ஒரு வேளை நான் வடக்கில் பிறந்திருந்தால் இவ்வளவு பேசி இருக்க மாட்டேன் ஆனால் நான் இருப்பதோ தமிழ் நாட்டில். நம்  அரசியல் களம் மையத்திற்கும், பாபாவிற்கும் இடையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் குட்டி சர்க்கார்களுக்கும் இசைவது கண்டு வளர்ந்த கூட்டத்தில் நானும் ஒருத்தி. ரொம்பவும் சிலாகித்து பார்த்த, நான் அழுது, சிரித்து, ரசித்து உணர்ந்த சில படைப்புகளின் தொகுப்பை வாசகசாலை உதவியோடு உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி!

மண்டோஒரு பேனாவின் பென்சிலின்  கடைசி சில நாட்கள்

அவள் தன்னை விற்க விரும்பவில்லை
ஆனால் அவள் எப்போதும் வாங்கப்படுகிறாள்

வரலாற்றுப் புத்தகங்களைப் பார்த்ததுண்டா நீங்கள்? அவற்றின் அட்டை எப்போதும் ஒரு நாட்டின் படத்தையோ, தலைவரின் படத்தையோ தாங்கியதாய் இருக்கும். இந்த மேல்மட்ட வரலாறு நம் நூலகங்களின் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டு கிடக்கிறது. உங்கள் ஊரில் இன்று ஒருவர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார், யாரோ ஒருவரை மனநிலை குன்றியோருக்கான காப்பகத்தில் அனுமதிப்பது பற்றி அவரது உறவினர்கள் பேசிக்கொண்டிருக்கலாம். அந்த யாரோ ஒருவர் – யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்களது கதை பெரும்பாலும் நட்பு, உறவு வட்டங்களை தாண்டி வருவதில்லை. ஆனால் அந்த மனிதரின் கதை அரசியலும், மதமும், எழுத்தும் கலந்ததாய் இருந்தால் அது நம்மை மலைக்க வைக்கும் சினிமாவாக மாறலாம் . அத்தகைய சினிமாக்களில் ஒன்று – மண்டோ.

எழுத்து – இயக்கம் : நந்திதா தாஸ்
நடித்தவர்கள் : நவாசுதீன் சித்திக், ரசிக்கா துகல், ஜாவேத் அக்தர், சாஷாங்க் அரோரா

நாளை காலை நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும், உங்கள் ஊரை விட்டும், உங்கள் நாட்டை விட்டும். இந்த நாட்டில் உங்கள் கடைசி இரவு இது தான் என்று யாரோ உங்களிடம் சொன்னால் என்னென்ன வேலைகளை செய்வீர்கள்? கொடுத்த கடனை திரும்ப பெறுவீர்களா? கடன் பட்டவர்களிடம் கொடுக்க காசு நம் கையில் அந்த நேரத்தில் இருக்குமா? எல்லா கடன்களையும் நம்மால் அடைத்து விட முடியுமா? அந்த நேரத்தில் எழும் இந்த உணர்ச்சிகள் தான் மண்டோவின் கடைசி அத்தியாயத்தின் துவக்கமாக இருக்கிறது.

நந்திதா தாஸ் எழுதி இயக்கிய இப்படம் மண்டோவின் படைப்புகள் ஐந்தையும் அவரது வாழ்வின் கடைசி நான்கு  ஆண்டுகளையும் ஒன்றாய் கோர்த்த படைப்பு. இந்தியா – பாக்கிஸ்தான் பிளவு, மத கலவரம், ரத்தம், வியர்வை, விபச்சாரம், வன்புணர்வு, பணத்தின் வாசம், சிகரெட்டு புகை, புழுதி எல்லாவற்றையும் பூசி ‘எது சுதந்திரம்?’ என்னும் மண்டோவின் கேள்வியை நம் முன் நிறுத்துகிறது இந்த படம். மண்டோவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் மஞ்சள் விளக்கொளியில் நாம் பார்ப்பதென்னவோ தன் எழுத்து சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரு எழுத்தாளரின் மனஓட்டத்தை தான்.

வாடகை வீடாயினும் காலி செய்து கிளம்புகையில் ஒரு நிமிடம் நின்று சில தருணங்களை நாம் ஓட்டிப்பார்பதுண்டு வலுக்கட்டாயமாக லட்சோப லட்ச மக்கள் பெயர்தெடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட அரசியல் கோரங்களில் ஒன்று இந்தியா – பாக்கிஸ்தான் பிளவு. கதறல்களுக்கும் கண்ணீருக்கும் மத்தியில் காதலும், வண்ணங்களும், கிசுகிசுவும் கொண்டு பக்கம் நிரப்ப சொன்னது பாக்கிஸ்தான் செய்தி வட்டம்.

மண்டோவின் கதைகள் சிலவை விபச்சாரம் செய்யும் பெண்களின் மனங்களையும், அவர்களது நித்திரை துளைத்த இரவுகளையும் பேசும், பெரிதும் விமர்சிக்கப்பட்ட, படத்தின் கடைசி நிமிடங்களை நிறைந்திருக்கும் ‘தண்டா கோஷ்ட்’ (குளிர்ந்த சதை – இந்த மொழிபெயர்ப்புக்கு மன்னிக்கவும் _/\_) கலவரத்தில் இளம் பெண் ஒருத்தியை வன்புணர முயற்சிக்கும் ஒருவன் அவள் எப்போதோ இறந்துவிட்டது அறிந்து அதிர்ந்து உரைப்பதாய் வரும் அந்த சிறுகதை. ஆபாசம் என்றும், கலாச்சார சீரழிவுக்கு வழி வகுக்கும் என்றும் இலக்கிய வட்டாரங்களால் விமர்சிக்கப்பட்டது. இந்த சிறுகதைக்காக மண்டோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விஸ்கி வாடையும், சிறைபிடிக்கப்பட்ட பேனாவும் மண்டோவை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்தன. இடர்பாடுகளின் இடுக்கில் துளைந்துகொண்டிருந்த மண்டோவை அழகாய் உள்வாங்கி முக அசைவிலும் வார்த்தை வனப்பிலும் நம்மை ஆட்கொள்கிறார் நவாசுதீன்.

படத்தின் கருவில் தெளிவு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மண்டோவின் நிஜத்திற்கு புறம்பாகவே நின்றது படம். உதாரணமாக தட்டச்சு ஒலி தன் நினைவுகளை கலைப்பதாய் நவாசுதீன் படத்தில் பேசும் வசனம், நந்திதா தாஸ் அவரது பார்வையில் மண்டோவை நம்மையும் பார்க்க செய்திருக்கிறார்.

படத்தில் நாம் ரசிக்கக்கூடிய அழுத்தமான பெண்ணாக வருகிறார் ரசிக்கா துகல். இவர் மண்டோவின் மனைவியாக அழகாக பொருந்தி இருக்கிறார். ஒரு தடுமாறும் எழுத்தாளரின் அசைக்கமுடியா அச்சாணியாக மிளிர்கிறார். எப்போதும் தெளிவான முகம். குடிக்கு வாசகனாக மாறிய கணவனுக்காக காத்திருக்கும் மனைவி என்றாலும், கதை முழுக்க மண்டோவை உந்தி தள்ளுபவர் அவர் தான். மண்டோ எழுதுவார் கருவாய் இருப்பதென்னவோ அவரது மனைவி தான்.

சாகிர் உசைனின் பின்னணி இசை அங்கங்கு பன்னீர் தெளிக்க, கார்த்திக் விஜயின் தெளிவான ஒளிப்பதிவு நந்திதா தாஸுக்கு கிடைத்த மற்றுமொரு அனுகூலம்.

இலக்கியமும், மக்களின் மனோநிலையும் காலத்திற்குகேற்ப மாறும் என்று உரக்க பேசுகிறது மண்டோ!

மண்டோவோடு மும்பையின் ஆடம்பர அழகை சிலாகித்தும், லாகூரின் விஸ்கி வாடையில் மயங்கியும் கிடக்க ஆசை.

நன்றி நந்திதா தாஸுக்கும் படக்குழுவினருக்கும்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close