எங்கோ தொடங்கி எங்கோ முடியும் ‘கதை!’ – இத்ரீஸ் யாக்கூப்
சிறுகதை | வாசகசாலை
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஆராய்ச்சி மையமொன்றில் பிழைப்பிற்காக தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்பொன்றில் தற்சமயம் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களில் ‘சிம்ரன்’ஸ் சில்க்ஸ்’க்குள் நுழையும்போது தொற்றிக் கொள்ளும் பீடு நடையையும் உற்சாகத்தையும் மற்றவைகளோடு இணைத்தோ ஒப்பீட்டோப் பார்க்க இயலாது. கடிவாளம் போட்டது மாதிரி கல்லூரி காலங்கள் வரை சீராகப் போய்க்கொண்டிருந்த சராசரி எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்ட எனது இயல்பு வாழ்க்கையில் அனிதா, சிம்ரன் போன்ற கதாப்பாத்திரங்கள் நுழைய அவர்களது உலகத்தில் நானும் கூட ஒருவனாகிப் போனேன் அல்லது சில மாற்றங்களின் நீட்சியாக எனது வாழ்க்கையில் அவர்களும் ஒரு அங்கமாகிப் போனார்கள்.
‘சிம்ரன் சில்க்ஸ்’ பிரதானமாக அனிதா மற்றும் சிம்ரனின் கூட்டு முயற்சி என்றாலும் நானும் ஒரு பங்குதாரராக தன்னார்வத்தில் இணைந்துக் கொண்டுள்ளேன். அது என் எங்களது நட்பின் ஒருவருக்கொருவரான உதவிக்கரமெனக் கருதுகிறேன். வண்டியை கடையின் விஸ்தாரமான வலதுப்பக்க பார்க்கிங் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு பார்க்க தாஜ்மகாலை நினைவூட்டும் அந்த சலவைக்கல் படிக்கட்டுகளில் பெருமிதமாக கால் ஊன்றி உள்ளேச் செல்லும் தருணங்களில் முதலாளிக்குரிய அத்தனை தோரணைகளும் இயல்பாகவே என்னுள் புகுந்துகொள்ளும். ஆனால் உண்மையான முதலாளி நானோ அனிதாவோ அல்ல; என்னுடைய பால்யகால நண்பன் சிம்ரன் எனும் பூபதி! இந்த கடை முக்கியமாக அவனுடைய விருப்பத்தின் பேரிலேயேத் தொடங்கப்பட்டது.
தாஜ்மகால் போன்று என்று ஒரு சொல்லுக்குச் சொன்னாலும், பரப்பளவில் ஒரு சிறிய நகரத்தில் அது பெரியக்கடைதான். நான் நுழைந்ததும், ‘சார், அண்ணா..’ என்று ஏழுபணிப்பெண்களின் வழக்கமான வணக்கங்கள் காதுகளில் விழ விழ நானும் நானும் எனது வலது கையை நெஞ்சளவு உயர்த்தி பதில் வணக்கம் சொல்வது போல் முகத்தை சற்று தாழ்த்தி தாழ்த்தி அவர்களைக் கடந்துச் சென்றேன். நான் அணிந்திருந்த காக்கி நிற பேண்ட்டும் பாக்கெட்டில் பிரபல பிராண்டின் முத்திரைத் தாங்கிய வெள்ளைச் சட்டையும் எனக்கு தூக்கலாக இருக்கிறதென அதிலொருத்தி காதில் விழும்படி கம்மெண்ட் அடிக்க வழியாதே என்று அவளை அதற்றினாள் சிம்ரன்.
சிம்ரன் என்னை விட அரையடி கூடுதலான உயரம். கொழுக் மொழுக்கென நாளுக்கு நாள் மிருதுவாகிக் கொண்டிருக்கும் அவளது திடகாத்திரமான உடலும், ஏறு நெற்றியும், அதில் ஒரு ரூபாய்க்கும் அதிகமான வட்டத்தில் வரையப்பட்டிருந்த மெரூன் கலர் பொட்டும், அவள் நாவல் பழ நிற உதடுகளுக்கும், சிலை போன்ற உடலழகிற்கும் ஏற்றம் போன்று எடுத்துக் கொடுத்தன. எனைக் கண்டதும் அளவான தொப்பையோடு காட்சியளித்த தனது பரந்த வயிற்றை படக்கென்று மறைத்துக் கொண்டாள். அப்படி எல்லாம் தெரியும்படி நிற்பது எனக்கு பிடிக்கவில்லை என்று ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்படுத்தியிருந்தேன். பெரும்பாலும் அது ஒரு போதை ராத்திரியாக இருக்கக் கூடும். அதிலிருந்து அம்மணி என் முன் வந்தால் தனது வயிறழகை மறைத்துக் கொள்வாள். அன்று அவள் உடுத்தியிருந்த வெண்ணிற காட்டன் சீலை கேரள பாணி தங்க ஓரங்களைக் கொண்டு கீறுவது போல் அவளது தளுக்கல்களுக்கு ஏற்றவாறு ஒட்டி ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தன.
“வாடா கேடி..” அவளின் அந்த அழைப்பு பிரத்யேகமானது. இப்போது அவள் ஏகத்திற்கும் மாறிவிட்டாலும், என்னை அழைக்கும் அந்த குரல் மட்டும் எந்த மாற்ற முயற்சிகளுக்கும் உடன்படாமல் கடந்து வந்த எங்களின் எல்லா கதைகளையும் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது. பெண் குரலில் பேச பிரயாசமெடுத்தும் வருகிறாள். அது பாடகிகள் ஜானகி மற்றும் எல் ஆர் ஈஸ்வரியை கலந்துக்கட்டிய பிசிறுக்குரல் போன்றுத் தோன்றும். ஆனால் தொடர்ந்துப் பேச முடியாது தொண்டை வறள்கிறது என அந்த சோதனை சாகசங்களை அவ்வப்போது கையிலெடுத்தும் விட்டும்விடுவதும் அவளுக்கு எழுதப்படாத வாடியாகவும் மாறிப்போனது.
“என்னடி பேபி, இன்னைக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்க!” ஒரு மலையாள பிட்டு நடிகையின் பெயரைச் சொல்லி அவள் போல் பார்க்க சும்மா கும்முன்னு நிற்கிறாயே என்றேன். ‘ச்சீ போடா’ என்று சிணுங்கினாள். நான் சொன்ன அந்த ‘பேபி’ அவளுக்கு தீனி, அவள் சொன்ன அந்த ‘போடா’ எனக்கானது. அதுவும் இந்த பேபியில் மயங்காத பெண்கள் உண்டோ? ஆரம்பத்தில்தான் அவனை அதாவது பூபதியை சிம்ரனாக ஏற்க பெரும் போராட்டமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகும் அவனை பழைய பேர் சொல்லி அழைத்து புண்படுத்த விரும்பவில்லை. அன்றிலிருந்து சிம்ரன் அல்லது பேபி மட்டுமே! மறந்து போயும் பூபதி என்று பேச்சு வந்துவிட்டால் போதும் இந்த எழவுக்காகவாடா இத்தனை ஆப்பிரேஷனும் பண்ணினேன்? என்று சண்டைக்கு வருவது போல் கோபப்பட ஆரம்பிப்பாள் அல்லது தான் உடைந்து அழுவது போல சுணங்கி வருந்துவாள். அவளது துக்கமோ சந்தோசமோ இப்போதெல்லாம் நொடிக்கு நூறு முறை மாறுவது வழக்கமாகிவிட்டது.
பிறகு நானும் அவளும் அதே கேளிகைகளோடு நேராக எங்களுடைய ஆபிஸ் பக்கம் சென்றோம். ஆபிஸ் என்றால் கண்ணாடிக் கூண்டு போல காட்சியளிக்கும் ஒரு சிறிய அறைதான். கடந்த வாரத்தின் கணக்கு வழக்குகளை என் பங்கிற்கு மேய்ந்துக் கொண்டிருக்கும்போதுதான். டாட்டா பன்ச் என்று பொறிக்கப்பட்ட அந்த சிவப்பு நிற கார் வந்து கடை வாயிலில் நின்றது. ஒரு முதிய தம்பதி அதிலிருந்து இறங்கி வந்தனர். அந்த நேரத்தில் கஸ்டமர் என்று உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தது அவர்கள் மட்டுமே. கூட்ட நடமாட்டம் உள்ள பட்சத்தில் நாங்களிருக்கும் கேபினிலிருந்து இவ்வளவு கழுகுப் பார்வை போன்றெல்லாம் நோட்டமிட இயலாது. அந்த அம்மாவிற்கு ஐம்பது வயதிலிருக்கலாம், அந்த ஐயாவிற்கு..? அட அவர் ஏதோ எனக்கு தெரிந்தவர் போல தென்பட்டார்! அவர்.. அவரென.. யோசித்த மைக்ரோ நொடிகளிலேயே மூளைக்குள் இணைக்கப்பட்டிருந்த பல்ப் பளிச்சென எரியத் தொடங்கியது!
என்னுடைய பரபரப்பைப் பார்த்துவிட்டு சிம்ரன், “உனக்கு தெரிஞ்சவங்களா?” என்றாள்.
“ஏ லூசு, நல்லா பாரு! அது ஜேயார் சாருடி!” என்றேன். அவர்களை வரவேற்கும் உத்வேகத்தில் இருக்கையிலிருந்து தன்னிச்சையாக எழுவும் செய்தேன். ஆனால் அதே உற்சாகத்தை அவளிடமும் எதிர்பார்த்தால் நிச்சயம் அது என்னுடைய அறிவின் போதாமையாகவே இருக்கும். அவள் முகத்தில் முதலில் ஒரு வெளிச்சம் தோன்றி பின் கனல் போல உருவெடுத்து சிவந்துக் கொண்டிருந்ததை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. சூழலைப் புரிந்துக் கொண்டவனாய் மீண்டும் எனது இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
அங்கிருந்துப் பார்க்க ஜேயார் சாரோட அதாவது ஜெயராமன் சாரோட சம்சாரம் மிகவும் கனிவானராக தெரிந்தார். அவர் மீது ஒரு அனுதாபப் பார்வையை வீசினேன். அவர் அணிந்திருந்த பச்சை மற்றும் நீல ஜோடியினாலான திருப்புவனப்பட்டும் சாமி சிலைகளுக்கு செய்வது போன்ற நேர்த்தியான அலங்காரமும் சாட்சாத் அந்த அம்பாளைத்தான் நினைவூட்டியது! மின்விசிறியின் இதக்காற்றை எதிர்த்து ஊதுவது போல அவரது இதழசைவுகள் ‘இதை காட்டுங்க, அதை காட்டுங்க’ என புன்னகையோடு அளவாவிய பாவனைகளில் அங்கிருந்த பெண்கள் அவரது கட்டளைகளிலும் மயங்கியிருக்கக் கூடும்! எனக்கோ தூரத்திலிருந்து ஒரு அழகான மௌனப்படம் பார்ப்பது போன்றிருந்தது.
அவரிடமிருந்து ஜேயார் சார் பக்கம் திரும்ப குறைந்தபட்சம் ஒரு பத்து நொடிகளாவது எடுத்திருக்கும். எம்.ஜி. ஆரின் நிறத்தையொத்த ஜேயார் சாருக்கு தோல் மட்டும் கொஞ்சம் சுருங்கி தளர்ந்திருந்தே தவிர, முடிச்சாயத்தின் உதவியாய் இன்னும் கூட நான் மன்மதகுஞ்சுதான் என்று தனது ட்ரேட் மார்க் வசீகரங்கள் நிரூபித்துக் கொண்டிருந்தன! சாட்சி – எச்சில் வழிய மகள்கள் வயதிலிருக்கும் கடைப்பெண்கள் மீது கண்கொட்டாமல் வீசிக்கொண்டிருந்த அதே மார்க்கண்டேயப் பார்வை!
என்ன யோசித்தாளோ ஓரிரு நிமிடங்களில் அவரிடம் சென்று பேச்சுக் கொடுக்கும்படி சிம்ரன் சொன்னதுதான் போதும் அங்கிருந்து வேகமெடுத்த எனது கால்கள் ஜேயார் சார் பக்கம் சென்று பவ்யமான ஒரு வணக்கத்தை வைத்துவிட்டுதான் தன்னிலைக்கு திரும்பியது. அவர் மூலமாக எங்களுக்குக் கிடைத்தது பெரும்பாலும் கசப்பான அனுபவங்களே என்றாலும், எதோ ஒரு காலத்தில் அவருக்கு மாணவர்களாக இருந்திருக்கிறோம் என்கிற மரியாதை கலந்த அன்பு இயல்பாகவே அவரைக் கண்டதும் கைக்கூப்ப வைத்ததிலும் என்னைப் பொறுத்தவரை ஆச்சர்யமில்லைதான். ஆனால் சிம்ரனால் இதையெல்லாம் எளிதாகக் கடந்து விட முடியாது. அவரால் எத்தனை நாட்கள்.. மாதங்கள் மனதளவில் காயப்பட்டு குமைந்திருக்கிறாள்! அதையெல்லாம் அவளால் ஒரு கனவு போல கடந்து விட முடியுமா?
ஒரு அடர்ந்த புன்னகையைப் படர விட்டபடி, “வாங்க சார், நல்லாருக்கீங்களா?” என்று விசாரித்தேன். பெரும்பாலான ஆசிரியர்களுக்குக்குரிய சிக்கல்தான் அவருக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும், அதாவது வருடங்கள் கழிந்து சந்திக்க நேர்ந்த தனது மாணவனை யாரென அவரால் ஊகிக்க முடியவில்லை. என்னைப் போல் எப்பவாது எங்காவது வணக்கம் வைத்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்குபவர்களை எதிர்கொள்வது அவருக்கும் புதிதாக இருக்க வாய்ப்பில்லை. அதனால் அவரே புரிந்துகொண்டு பொதுவானதொரு புன்னகையை வரவழைத்துக் கொண்டார். அவர் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க விரும்பவில்லை. அவரிடம் பயின்ற மாணவனென ஊரையும் பேரையும் சேர்த்துச் சொன்னேன். அருகிலிருந்த அந்த அம்மையார் பெருமிதத்தோடு தனது கணவரையும் என்னையும் ஐந்தாறு நொடிகள் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கிளிப்பச்சை பட்டுபுடவைக்கும் சந்தன மேனிக்கு செக்க செவேரென்ற உதடுகள் பாந்தமாக பளிச்சிட, அந்த குளிர்ச் சிரிப்பு எனது மகிழ்ச்சியை அதிகமாக்கியது.
“நான்.. லோகேஸ்வரன்.. சார்!” மீண்டும் பேரைச் சொன்னேன். அப்போதும் அவரால் நினைவுக் கூற முடியவில்லை. இன்னொரு முறை ஊர் பெயரைச் சொல்லி 2007 பேட்ச் என்றேன்.
“ஓ அப்படியா சந்தோசம்ப்பா!” என்ற பதில் எனக்கு திருப்தி தருவதாக இல்லை. என்னைச் சொல்லியும் அவர் என்னை சரியாக அடையாளம் கண்டுகொள்ளாதது நன்றாகவே உணர்ந்துக் கொள்ள முடிந்தது. இருந்தாலும் அவர் கண்களில் ஒரு நெகிழ்ச்சி மாதிரி ஏதோ ஒன்று ஒளிர்ந்தது. அது அவரிடம் நாங்கள் படித்த காலக்கட்டங்களில் என்றைக்குமே வெளிப்பட்டிருக்காதது.
“இது உன்னோட கடையாப்பா?” புன்னகை தவழக் கேட்டதில் கொஞ்சம் நெருங்கி வருவது போல் உணர்ந்தேன்.
“இல்ல சார் ஃபிரெண்டோடது. ஒரு சப்போர்ட்க்கு அப்பப்ப வருவேன்” அந்த அம்மா அறுபதுகளின் நடிகைகள் போல் கணவரின் உரையாடலை பயபக்தியோடு கவனித்துக் கொண்டிருந்தார். அதை அவதானித்த ஜேயார் சார் தன் துணைவியாரை சீக்கிரம் கலெக்ஷன்ஸ் பார்க்கும்படிச் சொல்லிவிட்டு, “உன் ஃப்ரெண்டுன்னா அவனும் நம்ம ஸ்கூல்ல படிச்ச பையன்தானா?” என்று மறுபடியும் என் பக்கம் திரும்பினார்.
“ஆமா சார்” என்று நான் கேபின் பக்கம் பார்வையைச் செலுத்த, சிம்ரன் எங்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததை அவரும் கவனித்துவிட்டார். அந்த கவனிப்பில் ஒரு தவுசண்ட் வாட்ஸ் பல்ப் எரிய ஆரம்பித்ததை நான் காணத் தவறவில்லை.
“அவங்க..?” என்று அவரே இழுத்தார்.
“ஃப்ரெண்ட் சார். சொன்னேனே.” நான் அழைக்காமலேயே, சிம்ரனே வந்து அவருக்கு கைக்கொடுத்தாள். அவளது மிருதுவான கைகளை ‘ஈ..’ என வழிந்தபடி அழுத்த முயன்றது எனக்கே உள்ளங்கை கூசுவது போன்றிருந்தது. சிம்ரன் நெளிந்தாள். நீங்கள் நினைப்பது போன்றில்லை; அது அருவெறுப்பின் வெளிப்பாடு. வலிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கையை மெல்ல விடுவித்துக் கொண்டாள். நல்லவேளை அந்த அம்மா வேறொரு செக்சனுக்கு அந்நேரம் நகர்ந்துவிட்டிருந்தார். ஜேயார் சார் கண்கள் கிடைத்த சொற்ப நொடிகளிலேயே அவளை ஆங்காங்கு மேய்ந்துக் கொண்டிருந்தாலும் அக்கறைக் காட்டும் பேச்சை அதற்கு பக்க வாத்தியம் போல் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். கிழவர் ப்ராக்கெட் போடுவதில் அந்த வயதிலும் விடலைப் பையன்களுக்கே சவால் விட்டுக்கொண்டிருந்தை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். ‘— இன்னும் நீ திருந்தலையாடா?’ என்ற ஆரம்ப கெட்ட வார்த்தையோடு, அவரது கேவலமான முகத்தை மீண்டும் நினைவுக் கூர்ந்தபடி இடையிடையே மானே தேனேவும் போட்டுக் கொண்டேன்.
“என்ன பேரும்மா?” அவரின் உடல்மொழியை வைத்து ‘வழிசல் ஓய்வதில்லை’ன்னு 18+ படமே எடுக்கலாம் போல அந்த அளவிற்கு வாயிலிருந்து மடைச் சொட்டிக் கொண்டிருந்தது. அவரது ஐந்தே முக்கால் அடி உயரம் தொப்பை பெருத்திருந்ததில் உயரம் குறைந்தவராக காட்டியது. சிம்ரன், ஜெகன் மோகினி ஜெயமாலினியை போல கால்களுக்கு பதிலாக அவரிடம் மீண்டும் அகப்பட்டிருந்த தனது வலது கரத்தால் தீயை மடைமாற்றிக்கொண்டிருந்தாள்.
“சிம்ரன்!” என்றதற்கு பதிலாக அவள் ப்ரெசென்ட் சார்..! என்றே சொல்லியிருக்கலாம்..! குரலைக் கேட்டு மனுசன் ஆடிப் போய்விட்டார்! சிரிப்பு வெடிப்பதுப் போல் வாய்வரை முட்டிக் கொண்டு நின்றது. இது போன்ற சந்தர்ப்பங்களில் சிம்ரன் தனது சொந்த பேரைச் சொல்லி ஜேயார் மாதிரியான ஆட்களை வெறுப்பேற்றுவது அவளடையும் ஆர்காசங்களில் ஒன்று. அதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
“பொம்பள புள்ளைங்கல்ல அப்படி யாரும் படிச்சதா ஞாபகம் இல்லையே..!”
“படிச்சப்ப என் பேரு பூபதி சார்!” சிம்ரன் மட்டுமல்ல இப்போது நானும் எந்த செட் என்பது நினைவுக்கு வந்திருக்க கூடும். முகத்தில் அந்த ‘தக தக’ களை மறைந்து தெய்வ மகன் சிவாஜியை போல் சற்று யோசனையில் ஆழ்ந்தார். இருப்பினும் அவர்தான் மன்மதனின் வாரிசாயிற்றே இயல்பு நிலைக்கு திரும்ப அதிக நேரம் எடுக்கவில்லை. அந்த சூழலிலும் அர்த்தத்தோடு அவளை ஏற இறங்க ரசிக்கலானார். மறுபுறம் அவருடைய துணைவியார் துணி அடுக்குகளை துரியோதனன் போல எடுத்து துகிலுரித்துக் காட்டும்படி பணிப்பெண்களுக்கு ஏவிக்கொண்டிருந்தார். ஒரு கணம் ஜேயார் சாரின் கவனம் தன்னிச்சையாக உடை மாற்றும் அறை பக்கம் சுழன்று வந்தது.
“ஞாபகம் இருக்கா சார்?” சிம்ரனுடைய அனாயசக் குரல்வளம், அச்சமயம் காஞ்சனா லாரன்ஸ்சிற்கு டப்பிங் கொடுப்பது போல் ஒலித்தது. இருந்தாலும் இப்போதும் சிம்ரன் ஏதோ விதத்தில் அவரை கவர்ந்துவிட்டதாகவே உணர ஆரம்பித்தேன். சிம்ரனும் ஏதோ ஒன்றிற்காக தூண்டில் போடத் துவங்கியிருக்கிறாள் என்பதை விளங்கிக் கொள்ள எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. இதுபோன்ற விளையாட்டுக்கள் எனக்கும் புதிதில்லை.
அவளுடைய முடிவுகள் எல்லாமே உணர்வுப் பூர்வமானவை அதற்காக அவள் இழந்ததும் அதிகம்தான். சக திருநங்கைகள் போலவே கிடைத்த பல கசப்பான அனுபவப் பாடங்களின் மூலம் இப்போதெல்லாம் பல நேரங்களில் மிகவும் சாதுரியமாகவே நடந்துக் கொள்கிறாள். இப்போது அவளுடைய நோக்கம் எப்படியாவது அவரை தனது வலையில் விழ வைத்துவிட வேண்டும். அவள் ஹிட் லிஸ்ட்டில் ஜேயார் சார் பழைய ஃபிகர் என்றாலும் இன்று புதுவரவு. எத்தனை கூத்துக்களை அவள் அருகிலிருந்துப் பார்த்திருப்பேன்! அவளைப் பற்றி எனக்கு தெரியாதா?
அந்த நேரத்தில் நான் அருகில் நின்றுக் கொண்டிருப்பது திடீர் காதலர்களாக மாறிக்கொண்டிருந்த அவர்கள் இருவருக்கும் இடையூறாக இருக்க கூடுமென அந்த அம்மாவிற்கு உதவிகள் செய்வது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.
அதிலிருந்து சில நிமிடங்களிலேயே அந்த அம்மா, எடுத்துக் காட்டப்பட்ட துணிகளில் எதிலும் முழு திருப்தியுறாது ஒரே ஒரு புடவையை மட்டும் வந்ததற்கு எடுத்துக் கொண்டார். வெளித்தோற்றத்திற்கு மிகவும் அப்பாவியாக தெரிந்தாலும் உடை விஷயத்தில் அந்த அம்மா கெட்டிதான். ஆனால் பாவம் துணைவரைதான் சரியாகத் தேர்ந்தெடுக்கவில்லை போல. ஒருவேளை அவர் ‘கல்லானாலும்..’ கேட்டகிரியில் பண்பாட்டுக் கலசமாக ஓட்டிக் கொண்டிருக்கிறார் போலும்.
நாங்கள் இருவரும்.. அதாவது ஜெயாரோட துணைவியாரும் நானும் சிம்ரனின் சம்பவ இடத்தை அடைந்தபோது
ஜேயாருடைய குழப்பங்கள் யாவும் தணிந்து இளமையும் கூட ஆறேழு வயசு வரை குறைந்தது போல திரும்பியிருந்தது. அவருடைய துணைவியோ பளிச்சென இளித்துக் கொண்டு பழையபடி ஒரு சிறுமியின் சாயலை முகத்தில் சூடியிருந்தார்.
ஜேயார் சார் தனியாக எங்கள் இருவரையும் அழைத்தார்.
” லோகேசு.. உன்ன பாத்தது நல்லதா போச்சுப்பா! முதல்ல நாங்கூட நெனச்சேன். ரெண்டு பேரும் கல்யாணம் கில்யாணம் ஏதும் கட்டிக்கிட்டிங்களோனு.. சரி சிம்ரன் நெக்ஸ்ட் சண்டே மீட் பண்ணுவோம்!” சிம்ரன் படு ராட்சசி! உதட்டோரம் வில்லத்தனம் அப்பியிருந்தது.
வேலை முடிந்தது வருகிறோம் என்றார்கள். மத்தியமாய் சிரித்து கண்ணாம்பாளையும் அவருடைய கற்புக்கரசரையும் வழியனுப்பி வைத்தேன்.
சற்று முன் சொன்னது போல் சிம்ரன் சிறுக்கி எப்போதும் ஒரு லிஸ்ட் வைத்திருப்பாள் அதில் ஆட்கள் கூடுவதும் குறைவதுமாக இருக்கும். எண்ணிக்கை கூடும் வேளைகளில் அவள் அநியாயத்திற்கு எல்லோரையும் வெறுக்கிறாள் என்று அர்த்தம். பெருமனசு வைத்து மன்னித்துவிட்டால் அவ்வப்போது ஓரளவு சமநிலையையும் அடைந்துவிடும். ஜேயார் சாரின் நிலைமை என்னவோ!
அன்று நடந்தது விதியென்றால் இன்று நடந்ததும் அதே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அப்போது நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். ஜேயார் சார் எங்களுக்கு அறிவியியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களை எடுத்து வந்தார். எங்கள் வகுப்பு பள்ளியின் அறிவியல் கூடத்திலேயே நடந்தது. அந்த நீள்செவ்வக மஞ்சள் நிற கட்டிடம் மற்ற கட்டிடங்களிருந்து கூடுதல் இடைவெளி விட்டு எழுப்பட்டிருந்ததால், வகுப்பறையில் காற்றோட்டத்திற்கும் பஞ்சமிருக்காது. அதனால் அந்த ஆய்வுக் கூடத்தின் ஒரு பகுதி தட்டியால் தடுக்கப்பட்டு ஆசிரியர்களின் ஓய்வறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவான அறை என்றாலும் ஒற்றை ஆளாக ஜேயார் சார் மட்டுமே அதை உபயோகித்து வந்தார்.
காண்பவை அனைத்தையும் தன்வயப்படுத்திக் கொள்வதில் அவர் கில்லாடி அல்லது அவருடைய குணநலன்களை கருத்து கொண்டு, எதற்கு வம்பென்று மற்றவர்கள் ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள். அவர்கள் அறை தலைமையாசிரியர் அறையையொட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மேசை நாற்காலிகளோடு அமைக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றிற்கும் ஜேயார் சாருடைய சாதி மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்த பின்புலம்தான் காரணமென்று சிலர் கிசுகிசுக்க கேள்விப்பட்டிருக்கிறேன்.
நானும் பூமதியும்.. அதாவது சிம்ரனும் ஒரே தெரு, பால்யகால நண்பர்கள். பள்ளியிலும் ஒரே வகுப்புதான்.
ஜேயார் சார் பார்க்க ஜம்மென இருப்பார் என்றாலும் மனதளவிலும் செயலளவிலும் கீழ்நிலை காரியங்களுக்கு பேர் போனவர். வகுப்பறையில் அழகான பெண்பிள்ளைகளை மட்டும் தேவதைகள் போல வலிந்து வலிந்து ஆராதிப்பார். அந்த ஆராதனைகள் அந்த பெண்பிள்ளைகளின் ஜடையை செல்லமாய் இழுப்பதிலிருந்து வக்கிரமாய் அங்கங்கு சீண்டுவது வரை அடங்கும். இருப்பினும் மாணவர்கள் அளவிற்கு மற்ற மாணவிகளை துன்புறுத்த மாட்டார். இதில் அடிக்கடி அடி வாங்குவோர் பட்டியலில் நானுமிருந்தேன். பூபதியை அதாவது இன்றைய சிம்ரனை ஒரு வித்தியாசப் பார்வையோடே எப்போதும் அணுகுவார். எனக்கு பிரம்பால் ஐந்து அடி கிடைக்குமென்றால் அவனுக்கு ஒன்றோ இரண்டோ விழும் அதற்கே அவன் வளைந்து நெளிந்து அம்மா எம்மா என அத்தனை சில்க் ஆட்டத்தையும் போட்டுவிடுவான். அவனது நளினங்களை கேலி செய்து, கேலி செய்து மீண்டும் அடிப்பது போல் கம்பை ஓங்கி விளையாட்டுக் காட்டுவார். எல்லோருமுன் அவமானப்பட்டது போல் அந்த கணம் அவன் அழுதாலும் வருந்தினாலும் அடுத்த நிமிடமே தன்னியல்பிற்கு மாறி பக்கவாட்டு முடியை பெண்கள் போல ஒதுக்கி கொள்வான். அதையும் கவனித்து சில பெரிய மாணவர்கள் உஸ்ஸு உஸ்ஸு என்று கிண்டலடிப்பதுண்டு.
பூபதி இரண்டு அண்ணன்களோடுப் பிறந்தவன். ஒரு பெண் பிள்ளைக்காக ஆசைப்பட்ட அவனுடைய அம்மா பெண் பிள்ளையாகவே பாவிக்கவும் செய்தார். ஆரம்பத்தில் அழகியலாகத் தோன்றிய அந்த சீராட்டு நாளாக நாளாக கவலைக் கொள்ளுமளவிற்கு அவன் பெண் பாவனைகளிலேயே நாளுக்கு நாள் ஊறிக்கொண்டும் உலவிக்கொண்டுமிருந்தான். அவனுடைய அப்பாவிற்கோ அண்ணன்களுக்கோ இதையெல்லாம் இரசிக்கும் நிலையிலில்லை. ஒரு நாள் யாருமில்லாத வீட்டில் தனது அம்மாவின் உடுப்புகளை அணிந்தபடி கண்ணாடியில் தன்னைத்தானே இரசித்துக்கொண்டிருந்திருக்கிறான். இதனை கண்ட அவனது அப்பாவிற்கு அக்கணம் இதயமே நின்றுவிட்டது. அதுவரை அவனது சிறுசிறு மாற்றங்களினால் மனதளவில் சிடுக்கமுற்றிருந்தவர், அன்று கோபத்தின் உச்சத்திற்கேச் சென்றிருக்கிறார். தடுத்த அம்மாவிற்கும் எல்லாம் உன்னால்தான் என்று குறி தவறி அடி விழுந்திருக்கிறது.
நாளாக அடிக்கும் கூட அவன் அஞ்சுவதாகயில்லை! ஒரு கட்டத்தில் அவனது அப்பா சகித்து மௌனமாகக் கொண்டு இவனது நளினங்களை மென்றுவிழுங்கிக் கொண்டிருந்தாலும், பின்னாளில் இவன் என்னாகுவான் என்ற கவலைகள் அவரை அல்லும் பகலும் அலைக்கழிக்க வைத்திருக்கிறது. ஒரு முறை கண்ணீர் விட்டு இதெல்லாம் வேணாம்ப்பா என்று கெஞ்சவும் செய்திருக்கிறார்.
பூபதிக்கு ஆடல் பாடல்களில் அளவிற்கதிகமான ஆர்வங்கள் மிகுந்திருந்தன. அதுவும் பரதநாட்டியத்தில் ரகசியமான ஈர்ப்பு அவனிடம் இருந்ததை ஒரு முறை நானே கவனித்திருக்கிறேன். போகும் வழியிலோ, வீடுகளிலோ அதற்கேற்ற சினிமா பாடல்கள் ஒலிக்க நேர்ந்தால் அவன் கால்கள் சலங்கைக் கட்டிக் கொள்வதை அவனாலேயே தடுக்க முடியாத அளவிற்கு அதன் மேல் மையல் கொண்டிருந்தான்.
நாங்கள் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது பாட்டுப்போட்டியில் அவன் கலந்து கொண்டான். அதில் ‘கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்’ என்ற பாட்டை பெண்குரலியே பாடினான். அன்றிலிருந்து அவன் பெயர் பூபதியிலிருந்து பூங்கொடியாகவும் மாறிப்போனது. அதிலிருந்துதான் ஜேயார் சாரும் அவனை பெண்பிள்ளை போலவே முழுதாக பாவிக்கவும் தொடங்கினார் என நினைக்கிறேன். கூடவே பூங்கொடி என்று அழைத்தது அவனுக்கு பிடிக்கவும் செய்திருந்தது ஆனால் கேலி செய்வதற்கு அந்த பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் கோபம் வந்துவிடும், மற்ற நேரங்களில் அமைதியைக் கடைபிடித்தான்.
ஒன்பதாம் வகுப்பில்தால் அவனது குழைவுகள் அதிகமாயின என்றுச் சொல்லலாம். அதுவும் நெஞ்சை கூடு போல் உயர்த்தி நிமிர்த்தி நடக்க ஆரம்பித்ததெல்லாம் அப்போதுதான். முடியையும் நீளமாக விட்டுக் கொண்டான்.
கேட்டால் பழனிக்கு மொட்டை, குடும்பத்தோடு திருநாகேஸ்வரத்திற்கு போக இருக்கிறோம் என ஏதேதோ காரணங்கள் சொல்வான். எனக்கு புரிந்தது. ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்ற அளவிற்கு அவனது நீள முடி ஆசையில் சிக்கல்களும் அதிகமாயின. அந்த நேரத்தில் அவனது அந்த பிடிவாதமும் தைரியமும் எனக்கும் கூட ஆச்சரியத்தை அளித்தது. ஒரு வேளை வீட்டிலுள்ளவர்கள் அவன் போக்கிற்கு விட்டுவிட்டார்களா என்றும் நினைத்தும் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் அப்பாவைக் கூட்டி வராமல் மொட்டையடித்துக் கொண்டு வந்தான். முகமெல்லாம் வீங்கியிருந்தது. விசாரிக்கையில் இரவெல்லாம் அழுதானாம். வராண்டாவில் அரைடிரவுசரோடு அவன் குதிகாலிட்டு கட்டியபடி அமர்ந்திருக்கையில் தொடைகளின் வனப்பில் பெண்ணையொத்த சாயலைக் கண்டேன். என்னை ஏதோ செய்ய பார்வையை விலக்கிக் கொண்டேன். பள்ளியில் அன்று யாரும் அவனுடைய அப்பாவைப் பற்றியும் விசாரிக்கவில்லை.
ஆனால் இரண்டாம் பீரியட் முடிந்து இண்டர்வெல்லுக்கு போகும்போது, ஜேயார் சார் அவனை தடுக்கப்பட்டிருந்த ஓய்வறை பக்கம் கூப்பிட்டார். அவரைக் கண்டாலே எனக்கு பயமென்பதால் நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன்.
இண்டெர்வெல் முடியுமுன்னமே வெளியிலேயே நின்றுக் கொண்டிருந்த சில மாணவர்கள் பூபதியின் அலறல் சத்தத்தைக் கேட்டுவிட்டு உள்ளேச் சென்று பார்த்திருக்கிறார்கள். பூபதி கால்ச்சட்டை முழுக்க நனைந்தபடி அழுதபடி ஓடி வந்திருக்கிறான். அங்கே ஜேயார் சாரையும் கண்டதும் உள்ளே சென்றவர்கள் திரும்பவும் வெளியே ஓடி வந்தார்கள். ஜேயார் சார் யாருக்கோ சொல்வது போல் உள்ளேயே ஒண்ணுக்கு போயிட்டான் என்று வசைமாரி பொழிந்துக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு வந்த பியூன், சிறுநீர் வடிந்த இடங்களில் மணலை பரப்பிவிட்டார் என்றாலும் கூடவே சேர்த்து ஜேயார் சாருடைய பேண்ட்டிலும் சிறுநீர் பட்டிருந்ததை கவனித்ததும் மட்டுமல்லாமல் எப்படியென்று தனது சந்தேகங்களையும் சிலபல பேரிடம் கசியவும்விட்டுவிட்டர். அது உண்மையான சந்தேகங்களை கிளப்பாவிட்டாலும் அது அவருக்கு மற்றுமொரு அவமானமாக போய்விட்டது.
வெளியில் வந்தவன் நேராக வீட்டிற்கேச் சென்றுவிட்டான். அன்றைக்கு வகுப்பிற்கு வரவில்லை. அவன் சார்ந்த கேலிகளில் அந்த சிறுநீர் கழிப்பு சம்பவமும் சேர்த்துக் கொண்டது. நான் வீட்டிற்கு வந்ததும் அவனிடம் என்ன நடந்ததென விசாரித்தேன். பூபதி அந்த அறைக்குள் சென்றதும் பிளைவுட்டிலான தட்டியை சாத்தி தாழிட்டிருக்கிறார். இவன் மிரண்டு போய் நிற்க, அவர் மெதுவாக இவனது தொடையைத் தடவியபடி டிராயருக்குள் கையை நுழைக்க முயன்றிருக்கிறார். உடல் நடுங்க ஆரம்பித்திருக்கிறது. அப்படியே அவனை அவர் அணைக்க, இவன் என்ன செய்வதறியாது திகைத்து எதிர்திசையைப் பயத்தோடுப் பார்த்திருக்கிறான். அங்கே கண்ணாடி கூண்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த எலும்புக் கூடொன்று பல்லைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருக்க, இவனுக்கு சிறுநீர் பீறிட்டுவிட்டது! நானும் கூட அந்த எலும்புக் கூட்டைப் பார்த்திருக்கிறேன். சாதாரண நேரத்தில் கூட பயமாகத்தான் இருக்கும். எதிர்பாராத அந்த வேளையில் சட்டென அவன் கண்ணில் படவும் பூபதி அதிகமாகவே மிரண்டுப் போயிருக்கிறான் பாவம்!
சம்பவம் அதுவரையில் நின்றிருந்தால் கூட பரவாயில்லைதான். ஆனால் அவன் சிறுநீர் கழிக்க நேர்ந்ததை சற்றும் எதிர்பார்த்திராத ஜேயார் சார் பற்களைக் கடித்துக் கொண்டு பளார் பளாரென கிடைத்த இடங்களில் அறையவே பூபதி சத்தம் போட துவங்கியிருக்கிறான். மற்றவர்களின் கவனத்தையும் இழுத்துவிட்டது. அதில் மேலும் கோபமாகி, அறையின் ஒரு ஓரமாக கிடந்த பிரம்பை எடுத்து விலாச ஆரம்பித்திருக்கிறார். வெளியில் நின்றுக் கொண்டிருந்த மாணவர்கள் யாரும் அந்த பக்கம் போகாமல் அவன் அழும் சத்தத்தை மட்டும் கேட்டுக் அவர்களும் மிரண்டிருக்கின்றனர். நல்ல வேலையாக வந்த வழியில் சென்றுக் கொண்டிருந்த பியூன்தான், இண்டெர்வெல் நேரத்தில் என்ன சத்தமென ஓடிப் போய் பார்த்திருக்கிறார்.
பியூனைக் கண்டதும் ஜேயார் சார் பின் வாங்க, பூபதி அங்கிருந்து ஓடி வந்துவிட்டான்.
கண்ணீர் பிசுக்கோடு வீட்டிற்கு வந்த மகனைக் அவனுடைய அம்மா கண்டு வீறுண்டு, ஜேயார் சாரிடம் சண்டை போட பள்ளிக்கே வந்துவிட்ட சம்பவமும் நடந்தேறியது. மற்ற ஆசிரியர்கள்தான் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் பூபதியோட அப்பா எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை என்பது ஒரு ஆச்சர்யமென்றால் இவனும் நடந்த சம்பவத்தை முழுமையாக வீட்டில் யாரிடமும் சொல்லாததும். நான் கூட ஏன் அவர்களிடம் சொல்லவில்லை என்றேன், ஏதோ தானும் குற்றம் இழைத்துவிட்டது போல பதில் பேசாமல் நின்றான். அவனுக்கும் பதிமூன்று பதினான்கு வயது ஆகியதே தவிர, பயந்த சுபாவம் மட்டும் மாறவேயில்லை!
பள்ளிக்கு இனி போக மாட்டேன் என்று சொன்னவனை அவனுடைய அம்மாதான் சமாதானப்படுத்தி அடுத்த நாள் கொண்டுவந்து விட்டுப் போனார். ஜேயார் சார் அந்த சம்பவத்திற்கு பிறகு மற்றவர்களை விட அவனை கூடுதலாக துன்புறுத்த தொடங்கினார். தன்னுடைய அறையில் நின்றுக் கொண்டு சிறுநீர் கழித்துவிட்டது மட்டுமில்லாமல் தனது பேண்ட்டிலும் தெறிக்க விட்டு மற்றவர்களை பின்னால் நின்று பேச வைத்துவிட்டானே என்று அதிலிருந்து அவனை கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வெளுத்து வாங்கினாலும் அவனை கெட்ட நோக்கில் பார்ப்பதையும் கைவிடவில்லை. அதன்பிறகு ஓரிரு வேளைகளில் மீண்டும் அந்த அறைக்குள் அழைத்திருக்கிறார். இவன் பயந்து போய் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று அழுதலிலிருந்து ஓரளவு அவனை சீண்டுவதில்லை. நடந்த சம்பவங்களை வெளியில் சொல்லிவிட்டால் என்னாவது விஷயம் விபரீதத்தில் முடியலாம் என்ற எச்சரிக்கையுணர்விலும் இருந்திருக்கலாம். ஆனால் தொழிற் கல்வி வகுப்பு நேரங்களில் அவனுக்கு கடின வேலைகளைக் கொடுப்பார். அப்போது கம்ப்யூட்டர் படத்திற்காக புதிய கட்டிட வேலைகள் நடந்துக் கொண்டிருந்ததால், செங்கல்கள் கூட சுமக்க வைத்திருக்கிறார். நானும் அவ்வாறான வேலைகள் செய்து கொடுத்திருக்கிறேன். பள்ளிக்குச் சொந்தமான தோட்டத்தில் குழி தோண்ட வைத்தும் பெண்டு கழட்டியிருக்கிறார். அவர் கொடுத்த அவஸ்தைகள் பத்தாம் வகுப்பு வரையிலுமேத் தொடர்ந்தது.
பிறகு நான் மஞ்சக்குடி பள்ளியில் படிக்க பெரியப்பா வீட்டிற்கு கடத்தப்பட்டேன். ஊருக்கு வரும் நேரங்களில் மட்டும் எனக்காக காத்திருந்தது போல் வந்து பார்ப்பான். கல்லூரியிலாவது மீண்டும் ஒன்றாக படிக்க வேண்டுமென்பான். அப்போது திடீர் திடீர்னு லிப்ஸ்டிக் கண்மையெல்லாம் உபயோகிக்க தொடங்கி வீட்டில் அப்பா மற்றும் அண்ணன்களிடம் அவ்வப்போது சன்மானங்களும் வாங்கிக் கொண்டிருந்தான். ஆனால் அதையெல்லாம் கவலைப்பட்டுச் சொன்னது போல் எனக்குத் தோன்றவில்லை. குழந்தை போல் பேசினான்.
அந்த காலக்கட்டத்தில்தான் ஐந்தாறு பக்க அளவில் எனக்கு காதல் கடிதமொன்றை எழுதியிருந்தான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் முதலில் குபீரெனச் சிரிப்பு வந்துவிட்டாலும் அவனுடைய போக்கின் தீவிரத்தை ஓரளவு உள்வாங்கிக் கொண்டேன். என்னுடைய மறுதலிப்பை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனது கண்களின் நீர்முட்டிக் கொண்டு நின்றதை நினைத்தால் இன்று மனம் கசிகிறது! ஆனால் அப்போது அவனுக்கு அறிவுரைகள் சொல்வது போல் நானும் கூட அவனை புண்படுத்தியிருக்கிறேன் என்பதனை புரிந்து கொள்ள எனக்கும் சில ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. அந்த இடைக்காலத்தில் என்னுடன் பேசாமலும் இருந்திருக்கிறான். அவனுடைய அந்த இடைவெளி கொஞ்சம் கவலைப்பட வைத்தாலும் என்னுடைய முடிவையும் போக்கையும் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றேச் சொல்ல வேண்டும். மேலும் அப்போது நான் வண்டலூர் பக்கம் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட வேறொரு கிரகத்தில் வசிப்பதைப் போன்று அந்த நான்கு வருடங்கள் கழிந்தன.
எப்போதாவது ஊர்ப்பக்கம் வரும் நேரங்களில் பூமதியின் அம்மாவை சந்திக்க நேரிடுவதுண்டு. பூபதியும் கோயமுத்தூரில் பி.ஏ. ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் போக்கில் எந்தவித முன்னேற்றமுமும் இல்லை. அது அவனது அம்மாவையும் அப்பாவையும் நாளுக்கு நாள் நம்பிக்கைகளைத் தகர்த்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அவனது அப்பா தன் பங்கிற்குப் போராடிப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட ஊமைச் சாமியார் போல பின்னாளில் மாறிப்போனார். ஒரு கட்டத்தில் அம்மா மனப் போராட்டங்களை மீறி மகனை ஓரளவு ஆதரித்து வந்தது போன்றுதான் தெரிந்தது. நல்ல வசதியுள்ள குடும்பமென்பதால் ஊர் பக்கம் வெளிப்படையான கேலி கிண்டல்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. ஆனால் அண்ணன்கள் கிடைக்கும் சில சந்தர்ப்பங்களில் சீறி சீறி நாகங்கள் போன்று கொத்திப் பார்த்தத் துண்டு. எதுவும் அவனை பின்வாங்க வைக்கவில்லை. பெண்ணாக மாறுவதுதான் அவனது முழுகுறிக்கோளாக உருவெடுத்துக் கொண்டிருந்திருக்கிறது.
அண்ணன்களின் அடுத்தடுத்த திருமணங்கள்.. அதனைத் தொடர்ந்து இவனுக்கும் பொண்ணுப் பார்க்கும் வாய்ப்புகள் தானாகவே வர தொடங்கவே, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தனது மகனின் எதிர்காலத்தைப் பற்றிய நல்ல நம்பிக்கைகளும் பட்டமரத்திலிருந்து எழும் அதிசயத் தளிர்களை போல துளிர்விட தொடங்கியிருக்கிறது.
ஆனால் இன்னொரு புறத்தில் அதுவே பூபதியை வீட்டிலிருந்து சென்னைக்கு தப்பி வரவும் செய்தது. அவனுடைய அம்மாதான் என்னை எப்படியோத் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொன்னார். அதற்குமுன்னரே அவன் என்னை அழைத்திருந்தது வேறு கதை. நான்தான் அவனை வரச் சொல்லியிருந்தேன். அவனை சரிவர புரிந்துக் கொள்ள அவன் போக்கில் அப்படியே ஏற்றுக் கொள்ள என் வாழ்க்கையிலும் அதற்கிடையில் சில சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.
அப்போது சென்னையில் முதன்மையான ஐ.டி. நிறுவனமொன்றில் எனக்கு வேலைக் கிடைத்திருந்தது. அங்கேதான் அனிதாவை சந்தித்தேன். அனிதா என் டீம் லீடர். நியாயமாகப் பார்த்தால் பயம் வர வேண்டும் ஆனால் அவள் மேல் எனக்கு காதல் வந்தது. என்னவோத் தெரியவில்லை அவளுக்கும் நான் ரொம்ப பிடித்துப் போய்விட்டேன். அந்த பழக்கம் நாளுக்கு நாள் மிகவும் நெருக்கமானது போல் உணர்ந்தேன். பைக்கில் அவளுடன் சுற்றும்போது பிரத்யேக பகுதியை தவிர எனது அங்கத்தின் எல்லா இடங்களிலும் அவளது கைகள், கால்கள் படுவது நாள்போக்கில் மிகவும் சாதாரணமாகிப் போனது. நானும் ஒரு சாதாரண ஆண்தானே அதை காதலின் அடுத்தக்கட்டமென எடுத்துக் கொண்டேன்.
அந்த வருடம் அக்டோபர் இருபத்தி மூன்றாம் தேதி, அதாவது அவளுடைய பிறந்த நாளையொட்டி பாலவாக்கம் பக்கமிருந்த ரிசார்ட் ஒன்றிற்குச் சென்றோம். குறிப்பாக என்னிடம் தீபாவைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டுமென ஆரம்பித்தாள். தீபாவும் எங்கள் டீம்தான். சொல்லப் போனால் அவள் என்னை அவ்வப்போது சைட் அடிப்பது போல் உணர்வேன். சில நேரங்களில் என்னிடம் ஏதோ முக்கியமான விசயம் பேச வருவது போல் வருவாள் ஆனால் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டேச் சென்றுவிடுவாள். அவளை எனக்கு பிடிக்கும். மிகவும் அமைதியானவள். பார்க்கவும் லட்சணமாக இருப்பாள். ரகசியமாக நான் அவளையும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நோட்டமிடுவதுண்டு.
ஒரு வேளை அதைத்தான் அனிதா கவனித்துவிட்டாளோ என்று துணுக்குற்று யோசிக்கையில்தான் தீபாவை தான் காதலிப்பதாகச் சொல்லி என்னை ரொம்பவே அதிர வைத்தாள்!
எனக்கு மயக்கம் வராத குறைதான். பின்னே நான் காதலித்தவளும் சைட் அடித்தவளும் காதலர்கள் என்ற வகைமையில் யோசித்துப் பார்க்க முடியுமா? ஒருவேளை அனிதா இடத்தில் ஒரு அனிருத் இருந்தால் நூறு சதவீதம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்றுதான் தெரிந்தது உண்மை நிலவரமும் அதுதானாம். அதாவது அனிதா தன்னை ஆணாகத்தான் உணர்கிறாளாம். அது அடுத்த இடி! அப்போ அந்த டச்சிங் டச்சிங்லாம் வெறும் ஃப்ரெண்ட்ஷிப்பா லத்தா..! என்று சிவாஜி போல் நெஞ்சைப் பிடித்துக் கொள்ள முடியன்றேன்.
அவளுடைய பிறந்தநாளுக்காக நான் பரிசளிக்கவிருந்த கலைநயமிக்க அந்த பொட்டுத் தங்க மோதிரம் பத்திரமாக பேண்ட் பாக்கெட்லேயே அழுந்திக் கொண்டு பொறுமைக் காக்கச் சொன்னது. அழும் நிலைமையிலிருந்தவனிடம் அவள் காதலுக்கான யோசனைகள் கேட்டதெல்லாம் பிறந்த நாளிலேயே அவளை போட்டு தள்ள தூண்டியது. என் அதிர்ச்சியை அவள் வேறு விதமாக விளங்கிக் கொண்டாள். எனக்கு முன் எத்தனையோ பேரிடம் அந்த முகைரேகைகளை பலமுறை அவதானித்திருந்திருக்கலாம்.
அவளே தனது கதைகளைச் சொல்ல ஆரம்பித்தாள். அது பூபதி அளவிற்கு உச்சுக் கொட்டும்படியாகவெல்லாம் இல்லை. அவளது பெற்றோர்கள் அவளை அவளது விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள். அவளுடைய விருப்பம், லட்சியமெல்லாம் தனக்கான ஒரு பெண் துணையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே. ஆனால் அந்த வேட்டையில் நானும் தீபாவும் பலியாவது அநியாயமல்லவா? ஆனால் அந்த நேரத்தில்தான் இன்னொன்றும் தோன்றியது. அதாவது தீபாவும் ஒருவேளை அனிதாவை விரும்பி, அதற்காக எனது உதவியை நாடியிருந்தால்? நினைத்துப் பார்க்கவே மிகவும் கொடுமையாக இருந்தது. அப்படியெல்லாம் இருந்து தொலைத்து விடக் கூடாதென இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டேன்.
அனிதாவின் கதையில் அவ்வளவு சோகமில்லை என்றாலும் அவளது உணர்வுகள் மிகவும் காத்திரமானதாக வெளிப்பட்டன. அதற்கு காரணம் அவளுடைய வளர்ப்பா அல்லது வாசிப்பா என தெரியவில்லை. நிறைய படிப்பாள், அறிவார்ந்துப் பேசுவாள். இதை படி அதைப் படி என்று புத்தகங்களின் தலைப்புகளை என் தலைக்குள் ஏற்றுவாள். அதுதான் எனக்கும் கூட பிடித்திருந்தது. அந்த பேச்சில்தான் நானும் வசியப்பட்டிருக்கிறேன். கொஞ்சம் நிதானித்து அந்த நிமிடத்தில்தான் யோசித்துப் பார்த்தேன். அவள் என்னிடம் பழகியது எல்லாம் ஒரு சக ஆணைப் போலவேதான் தோன்றியது.
அனிதாவின் பெரிய பலமே எதையும் புரியும் வகையில் எடுத்துரைப்பது. அவள் தன்னை ஆணாக நிறுவிக் கொள்ள ஆயிரம் காரணங்களை அடுக்கடுக்காக தொடுத்துத் தொடுத்துப் பேசியிருக்கலாம். ஆனால் அவள் புத்திசாலி என என் ஆழ்மனதில் பதிந்துப் போயிருந்ததனால் அவள் தன்னுடைய தரப்பை வாதிக்கவும், நியாயப்படுத்தவும் அவசியமே இல்லாமல் போனது. அனிதாவை முடிந்தவரை ஏற்றுக் கொள்ள தயாரானாலும் தீபா மட்டும் அவளிடம் விட்டுத் தர மன வரவில்லை. அதே நேரம் ஒரு நண்பனாக அனிதாவிற்காகவும் அவளிடம் பேச வேண்டியிருந்தது.
அடுத்த நாளே தீபாவிடம் பேசிவிட முயற்சிகளெடுத்தேன். அந்த ஆறு மாதத்தில் நானாக காஃபிக்கு அழைத்தது அதுவே முதற் தடவை. வந்தாள். நேர்மையாகச் சொன்னால் அது எங்களுக்கான நாளாக மாறிப் போயிருந்தது. அனிதாவைப் பற்றி பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. அந்த பொன்னான நேரத்தை எங்கள் காதலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டோம்.
அனிதாவை நேசித்துக் கொண்டிருந்தவனுக்கு தீபா பூவிலும் மென்மையானவளாக இயல்பாகவே ஏற்பட்ட ஒவ்வொரு தொடுதலிலும் அறியாத பறவையின் இறகினால் ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டிருந்தாள். அவள் கைகளைப் பற்றியபோது அவள் முழுமையாக எனக்குள்ளேயே சுருண்டுகொண்டது போல உணர்ந்தேன். ஆமாம் காதலில் எங்களின் முறையைக் கண்டிருந்தோம்.
அனிதா மனதளவில் மிகவும் திடமானவள் என நம்பியிருந்தேன். நான் சொல்லாமலேயே எங்களின் நெருக்கத்தை புரிந்துக் கொண்டாள். அன்று அவளிடமிருந்து ஆணையும் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தேன். கிட்டத்தட்ட என்னை வெறுத்தாள். தன்னை தானே வெறுப்பது போலவும் வலியுற்றவளாய் பார்வையாலேயே சீறிக் கொண்டிருந்தாள். என்னிடமோ தீபாவிடமோ சில வாரங்கள் சரிவர பேசவில்லை. மேலும் சில நாட்கள் அப்படியே கடத்தினாள். திடீரென ஒருநாள் தோள்ப்பட்டை வரை படர்ந்திருந்த முடியை கழுத்தையொட்டி வெட்டி கிட்டத்தட்ட ஆண் தோற்றத்தில் வொயிட் சர்ட் மற்றும் நீல ஜீன்ஸ் டக் செய்தவளாக அலுவலக வளாகத்தினுள் நுழைந்தாள். அவள் வந்த மிடுக்கிற்கு ஒரு கருப்புக்கண்ணாடி மட்டும் மாட்டியிருந்தால் காவல்துறை அதிகாரியோ என நானே கூட ஒரு சல்யூட் வைத்திருப்பேன். இதைச் சொன்னதும் நெடுநாளைக்கு பிறகு சிரித்தாள். அவளையறியாமல் கண்ணீர் துளிகள் சொட்ட வருவது போல் முட்டிக் கொண்டு நின்றன. அது ஆசுவாசத்தின் வெளிப்பாடு. பழகிய நண்பர்கள் இருவர் நெடுநாள் பேசாமலிருந்து, நட்பை புதுப்பித்துக் கொண்டால் பீறிடுமே.. அந்த கண்ணீர்!
நான் முயற்சித்த அந்த சிறிய களி அவளை முற்றிலும் மீட்டுக் கொண்டு வந்துவிடுமா? அவ்வளவு உணர்வுப் பூர்வமானவளா? அது அனிதாவின் பெண்மையின் வெளிப்பாடா அல்லது அந்த சமாதானம் ஆணிற்குரிய முதிர்ச்சியா? அன்றிரவே அவள் வீட்டிற்கு வரச் சொன்னாள். தனது பள்ளிக்காலங்களிருந்து தான் காதல் வயப்பட்ட ஒவ்வொரு பெண்ணையும் பட்டியலிட்டாள். ஆனால் தனது விருப்பத்தை சொல்லும் தைரியமெல்லாம் மெல்ல மெல்ல இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறது. அதில் தீபா மூன்றாவது பெண்ணாம். அந்த இரண்டு காதல் கதைகளைக் கேட்க ஆரம்பித்தபோதுதான் பூபதியின் உணர்வுகளையும் கூட முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அன்று அவனைப் பற்றியும் பேசியிருக்க வேண்டும். அதையும் சொல்லி என்மீதான கசப்பிற்கு மீண்டுமொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை.
சில நாட்களிலேயே தன்னை முற்றிலும் ஆணாக மாற்றிக் கொள்ளும் முழு வேட்கையில் இறங்கினாள். அந்த வேள்விக்கு நானும் மனப்பூர்வமாக வாழ்த்துச் சொன்னேன். நிறுவனத்தின் முக்கியப் புள்ளிக்கும் அவளது அப்பாவிற்கும் தனிப்பட்ட நட்பு ரீதியில் நல்ல பழக்கமிருந்ததால் அனிதாவின் சில மாதங்களுக்கான விடுமுறை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரும் கூட அனிதாவை ஒரு ஆணாகப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினாராம். அந்த சில மாத விடுமுறை ஒரு வருடம் வரை நீள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பணியிலிருந்து தானே விலகிக் கொள்வதாக அடுத்த விண்ணப்பத்தையும் சமர்ப்பித்திருந்தாள். நான் அவளை அவ்வப்போது சென்றுப் பார்த்து வருவதுண்டு. அது எனக்கு புதுவிதமான அனுபவம்! உடல் ரீதியாக நிறைய வலிகளையும் உபாதைகளையும் சகித்துக் கொண்டும் தாங்கிக்கொண்டும்தான் அனிதா அதிரூபனாக பரிணாமம் பூண்டு வந்தாள்! நான் ரூபன் என அழைக்க ஆரம்பித்தேன். வழியில் செல்லும் இளம்பெண்களை வலையில் வீழ்த்தும் ஆண் காந்த ரூபனுமானாள் . ஒரு கட்டத்தில் தீபாவே அனிதாவை மிஸ்டர் ஹேண்ட்ஸமென விளிக்கத் தொடங்கினாள். ஆச்சர்யமில்லைதான். பெண்களைக் கண்டாலே தனது முழு அஸ்திரங்களையும் இறக்க ஆரம்பித்துவிடுவது அவளது வழக்கமாயிற்று. கண்டிப்பாக அவனுக்கொரு பெண் தோழி தேவைப்பட்டாள்.
ஆணாக மாறியதிலிருந்து அனிதாவின் வட்டமும் பெரிதாகத் தொடங்கியது. அதில் அனிதாவைப் போல, பூபதியைப் போல நிறைய பேர் இடம்பெற்றிருக்கப் பார்த்தேன். நாளாக நாளாக நானும் அவர்களில் நானுமொரு நண்பனாகி கூடவேச் சுற்றவும் ஆரம்பித்தேன். அவ்வப்போது தீபாவும் எங்களோடு சேர்த்துக் கொள்வாள். பூபதியின் ஞாபகங்கள் வருவதை தவிர்க்க இயலாதுதான். ஆனால் ஏனோ அவனை இந்த வட்டத்தினுள் கொண்டு வர மனம் முழுமையாக ஒப்பவில்லை. அதில் சினேகா, காஜல், நமீதா என சில தோழிகள் கிடைத்தனர். அனிதாவை போலவே நெருக்கமுமானார்கள். அவர்களின் உண்மையான பெயர் செல்வராஜ், கணேசன் மற்றும் நவீன். அவர்கள் தங்களது கடந்தகால வலிகளை, சிக்கலான வாழ்க்கையை, போராட்டங்களை என்னோடுப் பகிர்ந்து கொள்ள நேரிடும்போதெல்லாம் பூபதியையும் பற்றி பகிர்ந்து கொள்ள மனம் உந்தும். ஆனால் அப்போதும் அவனை அந்த திருநங்கை வாழ்க்கை முறைக்குள் கொண்டு வர விரும்பவில்லை.
ஆனால் விதி வலியது. பூபதியே சென்னைக்கு வரும் சூழ்நிலை ஏற்பட நானென்னச் செய்ய முடியும்? அவனை இவர்களிடமிருந்து ஒளித்து வைப்பது முடியாத காரியம். அவ்வளவு நெருக்க தொடர்பிலிருந்தார்கள். வார நாட்கள் என்றால் ஏதாவது காரணம் சொல்லி அவர்களை எனது வீட்டிற்கு வர விடாமல் தவிர்க்கலாம். ஆனால் வார இறுதிகளில் கோவளம், மகாபலிபுரமென்று சுற்றும் வாடிக்கையை சட்டென நிறுத்தி விட முடியுமா? அல்லது அந்த ஆட்டம் பாட்டங்களை நானும்தான் விட்டுவிட முடியுமா?
பூபதியை அனிதாவிடம்தான் முதலில் கூட்டிச் சென்றேன். அவள் கார்மெண்ட்ஸ் பிசினஸில் கால்பதிக்கத் தொடங்கியிருந்த காலக்கட்டமது. அவனைப் பற்றிய விபரங்கள் சொன்னபோதே அனிதாவின் இதயத்தில் புதிய அதிர்வுகளை உணர ஆரம்பித்தேன். என்னென்ன விபரீதங்கள் நடக்கப் போகின்றனவோ என பதைபதைப்புகளிருந்தாலும் நடப்பது நடக்கட்டுமென அவள் பொறுப்பிலேயே அவனை ஒப்படைத்தேன். ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவளது செய்கைகள் பிடிக்கவில்லை என போனில் புலம்ப ஆரம்பித்திருந்தான். ஆனால் அவனை விட நான் சுதாரித்துக் கொள்ள வேண்டிய தருணமது. ஆமாம் அவன் என்னுடன் தங்க வேண்டுமென்பதுதான் சொல்ல வரும் சேதி என சொல்லாமலேயே விளங்கிக் கொண்டேன். மனம் கஷ்டப்படும் என்றாலும் மறைக்கவும் முடியாதல்லவா அதனால் தீபாவைப் பற்றி குறிப்புரைக்க எதிர்பார்த்த மாதிரியே அதிர்ந்துப் போனான்.
தீபா எனக்கானவள். எனக்காகவேப் படைக்கப்பட்டவள். அவளைப் போன்று என்னைப் புரிந்துக் கொள்ள எனக்கான சுதந்திரத்தை வழங்க வேறொரு பெண் இந்த உலகத்தில் இருக்க வாய்ப்பேயில்லை என நம்பினேன். அவளிடம் ஏற்கனவே பூபதியின் வருகையைப் பற்றி பகிர்ந்திருந்தேன். “என்னடா உன்னோட பழகுறவங்க எல்லாமே ஒரே போட்ல இருக்காங்க!” என்று கேலி செய்தாலும் அவர்களின் நியாயங்களையும் நோக்கங்களையும் அங்கீகரித்தாள்.
அனிதாவிற்கு பூபதி மீதான காதலும் கைகொடுக்கவில்லை. பூபதியும் தனக்கு பெட்ருமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமென்பது போல ஒரு சராசரி ஆணுக்காக காத்துக் கொண்டிருந்தான். ஒரு சராசரி ஆண் அவனை எப்படி ஏற்றுக் கொள்வான் என்பது அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் கூட ஆயிரம் டாலர் கேள்விதான்.
எனது வாதங்களும் அறிவுரைகளும் பூபதியிடம் பலனளிக்கவில்லை. அவன் தனது முடிவில் தீர்க்கமாக இருந்தான். ஒரு ரகசிய குடிகாரனை மதுக்கடைக்கு அழைத்து வந்து குடி உடலுக்குக் கேடு என உபதேசம் செய்வது போல இருந்தது என் நண்பிகளாக சினேகாவும் காஜலும் இணைந்துக் கொண்டிருந்தது. அவள்கள் அவனை தொடர்ந்து மூளைச் சலவை செய்தாள்கள். அந்த தொடர்பு மற்ற திருநங்கைகளிடமும் அவனை இட்டுச் செல்ல வைத்தது. வாரத்தில் ஓரிரு நாட்கள் அவன் தலைமறைவாகி விடுவதாக அனிதா என்னிடம் புலம்ப ஆரம்பித்திருந்தாள்.
இந்த நேரத்தில்தான் நானும் தீபாவும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டோம். ஆமாம் வீட்டில் சம்மதிக்கவில்லை. அதனால் எங்களின் முடிவுகளுக்காக பொத்தாம் பொதுவாக நானும் பூபதியும் ஊர் மற்றும் உறவுகளிடத்திருந்து ஒதுக்கி வைக்கப்பட்டோம். எங்களுக்கு ஆதரவாக நின்றது, நின்றுக் கொண்டிருப்பது அனிதாவின் பெற்றோர்கள் மட்டுமே. படித்தவர்கள் படித்தவர்கள்!
சரி விஷயத்திற்கு வருகிறேன். எங்களது திருமணம் பூபதியை மேலும் பாதித்ததெனவும் சொல்லலாம். எங்கிருந்து அந்த வேகம் வந்ததோ தனக்கான சொத்துப்பங்கை, பாதி பெண்கோலத்தில் சென்று நூதன முறையில் போராடி வாங்கினான். அதில் அவனது வீட்டாருக்கு ஊர்மத்தியில் பெருத்த அவமானமாகப் போயிற்று. கூடவே வேதனையுமென்றாலும் அவன் மீண்டும் ஊர்ப்பக்கம் வந்திட கூடாது என்பதற்காகவே முடிந்த வேகத்தில் அவனுக்கான பங்கை பணமாக கைமாற்றி விட்டார்கள். அதற்கு அவனது அம்மா தனது முழு சக்தியையும் பிரயோகித்து பூபதிக்கான உரிமையையும் விடுதலையையும் சொந்த குடும்பத்திலிருந்தே வாங்கிக் கொடுத்து எங்கள் எல்லோரையும் கண்கலங்க வைத்தார். பூபதியின் பால்மாற்ற முடிவிற்கு எனது கலப்பு காதல் திருமணம் எவ்வளவோ மேலென்று எனது பெற்றோர்கள் நெருங்கி வர ஆரம்பித்தது சுவையான தனிக்கதை!
வந்த பாகப் பணத்தின் பெரும்பகுதியை பூபதி திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டான். அதுவும் எண்ணிடலங்கா அறுவை சிகிச்சைகள்! அதைவிடவும் கூடுதலான உடல் உபாதைகள், மனச் சிடுக்கங்கள்.
எல்லாம் ஓரளவு தணிந்து கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்களில் ஒரு பேரழகி போல பவனி வர ஆரம்பித்தான். பெயரை சிம்ரன் என மாற்றிக் கொண்டான். அது என்னவோ தெரியவில்லை பால்மாற்றம் செய்து கொள்ளும் பலர் தங்கள் பெயரை ரேஷ்மா, கரிஷ்மா, நேஹா என்று ஒரு வட இந்திய பெயரையோ அல்லது சினிமா நட்சத்திரங்களின் பெயரையோ வைத்துக் கொள்கின்றனர். எங்கள் வட்டத்தில் ஆறுமுகம் என்ற ஒருவன் மட்டுமே சுந்தரி என நமக்கெல்லாம் பழக்கப்பட்ட பெயரை வைத்துக் கொண்டான்.
அடுத்த நகர்வாய் பிழைப்பிற்கு ஒரு வழி தேட வேண்டும். இரண்டே இரண்டு வழிகள் பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஒன்று கடை கேட்க அதாவது கடைகளில் பிச்சை எடுக்க செல்ல வேண்டும் இதில் பேருந்து பேருந்தாக ஏறி இறங்குவதும் அடங்கும் அல்லது (பாலியல்) தொழில்தான். மற்ற இடங்களில் யார் வேலைக்கு சேர்க்கிறார்கள்? 1% இட ஒதுக்கீடு எல்லாம் எல்லோருக்கும் கைகொடுத்துவிவதில்லை. கடை கண்ணியில் வேலைக் கேட்டு அலைந்து நின்றாலும் கூட ஏதோ தீண்டதகாதவர்கள் போல விரட்டி விடுபவர்களே அதிகம்.
சினேகா, காஜல், சுந்தரி போல பூபதிக்கு அதாவது சிம்ரனுக்கு தொழிலுக்குப் போகவெல்லாம் துளியும் விருப்பமில்லை. அதனால் கிடைத்த அனுபவத்தில் சொந்தமாக கார்மெண்ட்ஸ் பிசினஸை அதுவும் ஊர் பக்கமே தொடங்க வேண்டுமென முடிவெடுத்திருந்தாள். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவனுடைய அண்ணன்கள் அவனை இனி நீ பாலியல் தொழில் செய்துதான் பிழைக்க வேண்டும் என ஆசீர்வதித்து அனுப்பியிருந்ததும். அவர்கள் முன்னரே நல்ல முறையில் வாழ்ந்துக் காட்ட வேண்டுமென்ற வைராக்கியம் கங்குபோல் அவன் மனதினுள் மினுங்கிக்கொண்டேயிருந்தது.
அவனுடைய அம்மா வேண்டிக் கொண்டதின் பேரில் தனது வருமானத்திற்கான தொடக்க முயற்சிக்கு சொந்த ஊரைத் தேர்ந்தெடுக்காமல் அதைத் தொட்ட நகரத்திற்கு மாற்றினான். அதற்கு பக்கபலமாக நானும் அனிதாவும் அவனோடு கைக்கோர்த்துக் கொண்டு முடிந்ததை செய்து கொடுத்தோம். அந்த ஒண்ணரை வருடம் எங்களுக்குள்ளுள் அதீத நட்பையும் நெருக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதெல்லாம் போதவில்லை. அவனுக்கு நம்பிக்கையான, பக்கபலமான துணையொன்றுத் தேவைப்பட்டது. அது நானாக இருப்பதுதான் சரியெனத் தீர்மானித்திருந்தேன். அதற்கு முக்கிய காரணம் கடை ஆரம்பித்த ஆறு மாத இடைவெளிகளில் மூன்று பேரிடம் காதல் வயப்பட்டு காசையும் உடலையும் பகரமாகக் கொடுத்து ஏமாந்திருந்தான். இதுபோன்ற காதல்கள் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருந்தாலும், பெரிதாக ஏமாறும் நிலைக்கெல்லாம் செல்வதில்லை. வந்தவரை, அனுபவித்தவரை லாபமென ஒவ்வொன்றும் சென்றுக் கொண்டிருக்கின்றன.
அவனுக்கு துணையாக நான் செல்ல வேண்டுமென்ற முடிவில்தான் எனக்கும் தீபாவிற்கு முதல் பெரிய விரிசல் வந்ததென நினைக்கிறேன். மேலும் லகரங்களை குவிக்கும் ஐ.டி நிறுவன பணியிலிருந்து போதுமான வருமானத்தை தரும் இந்த அரசாங்க உத்யோகம் அவளுக்கு அவ்வளவு ஏற்பு இல்லை. மேற்கொண்டு இந்த பணிக் கிடைக்க வேண்டியும் சில லகரங்களை இழந்திருக்கிறேன். காதலித்த நாட்களிலும், திருமணமான புதிலும் இருந்து வந்த புரிதலும் அன்யோன்யமும் இன்று வரையிலும் பெருத்த பாதிப்பில்லாமல் சென்றுக் கொண்டிருந்தாலும் அனிதா, பூபதி, சினேகா, காஜல் என்று நான் சுற்றும்போது மட்டும் சில மணி நேர உறவுத் துண்டிப்பும் தடங்கல்களும் ஏற்பட்டு பின்னர் சரியாவதுண்டு. இதில் இன்னொரு வசதி நீண்ட நாட்களுக்கு தனது பெற்றோருடன் தீபாவும் இணைந்தது. அவளது அண்ணன் குடும்பம் அமெரிக்கா சென்றுவிட்டதால் பொறுப்பான மகளாய் அவர்களோடு சென்னையிலேயே துணையாக தங்கி கவனித்தும் வருகிறாள். பிள்ளைகளும் அவர்களுடனே என்பதில் கிட்டத்தட்ட நான் அவிழ்த்துவிட்ட காளை போல்தான் இன்னமும் இவர்களோடுச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
அதில் காஜல் மிகவும் கலகலப்பானவள் பார்க்கவும் செயல்களிலும் பஞ்ச தந்திரம் ரம்யா கிருஷ்ணனை நினைவூட்டுவாள். அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் மதுபானங்களிலேயே மூழ்கடித்து விடுவாள். பாட்டும் கச்சேரியுமாக அந்த இரவே கலகலக்கும்! குத்தாட்டத்தில் கில்லாடி! தொழிலில் கெட்டி. யாரும் அவ்வளவு எளிதாக ஏமாற்றவிட முடியாது. அவள் மூளைக்கும் திறமைக்கும் வேறு தொழிலேதும் செய்யலாம்தான். ஆனால் அவளுக்கு அதுவேப் பிடித்திருக்கிறது. அவளுடன் பேசும்போது பற்பல சுவையான சம்பவங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்வாள். அதில் ஒன்று என்றைக்குமே மறக்க இயலாதது. நினைக்க நினைக்க சிரிப்பலைகளைக் கட்டுப்படுத்த இயலாது. எங்களது கலாட்டாப் பேச்சுகளில் நிச்சயம் காஜலின் குறிப்பிட்ட சம்பவமும் இடம்பெற்றுவிடும். ஒன்று அவளே நினைவ்ப்பூட்டுவாள் அல்லது எங்களில் யாராவது எடுத்துக் கொடுப்போம்.
ஒருநாள் அவள் தொழிலுக்காக சாலையோரம் நின்றுக் கொண்டிருக்கும்போது ஒரு போலீஸ் ஜீப் ஒன்று கடந்துச் சென்றிருக்கிறது. காஜல் அதை பொருட்படுத்தாமல் தனது வழக்கமான சங்கேத சிருங்கார உடல்மொழிகளோடு போவோர் வருவோரிடம் தூண்டில் போட்டுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது கடந்துச் சென்ற காவல் வண்டி ரிவர்ஸில் வந்து அவளை ஏறும்படி கட்டளைப் பிறப்பிக்கவே, அவளுக்கு தயக்கமாக இருந்திருக்கிறது. என்னதான் தைரியசாலி என்றாலும் போலீஸென்றால் காஜலுக்கும் பயம்தான். உள்ளே அப்பாவியாய் ஒரு ஓட்டுநர் ஏட்டும் அருகே இவளை அழைத்த காவல் ஆய்வாளரும் இருந்திருக்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் பார்க்க கேரள சாடையில் தெரிந்தது அவளையறியாமல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவர்கள் தன்னை காவல் நிலையத்திற்கும் கூட அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளதை எண்ணி கலக்கமுறவும் செய்திருக்கிறாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரெயிடு என்ற பேரில் அலைக்கழிக்கப்பட்டப் பட போகிறோம் என கவலையுற்று தப்பிக்கும் யோசனைகளைத் தீட்டிக் கொண்டிருந்தவளுக்கு, அந்த வண்டி ஆள் அரவமில்லா தெரிவொன்றின் பளிச்சென விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்த பிரமாண்டமான வீட்டு முன்பு நின்றிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என சிந்தனைகளுக்கு மத்தியிலும் வீட்டின் வெளிப்புறத்தை வைத்தே உள்ளே இருக்கவல்ல பொருட்களின் மீதான கற்பனைகளோடு அதன் மதிப்புகளை கணக்கணக்குப் போட்டும் பார்த்திருக்கிறாள். ஆமாம் அவள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முடிந்ததை திருடவும் செய்வாள்.
அந்த இன்ஸ்பெக்டரையும் இவளையும் இறக்கிவிட்டுவிட்டு ஏட்டின் வண்டி அர்த்த ராத்திரி ஆந்தையை போல் ஒளிவிட்டு எல்லைப் புள்ளியில் இமைகளை சாய்த்தது. கட்டுமஸ்தான ஆளுடன் அதுவும் ஒரு போலீசுடன் இரவை கழிக்கப் போவதை நினைத்து எக்கச்சக்க கற்பனைகளுக்குள் ஆழ்ந்தவள், அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் சிந்தனைகளிலும் இறங்கியிருக்கிறாள். கலைநயமிக்க வீட்டின் உள்வேலைபாடுகளைக் கண்டு வியந்தவள் போலியானத் தயக்கத்தோடு ஹாலிலேயே நிற்க, அவன் அவளை அள்ளித் தூக்கியிருக்கிறான். இதுப் போன்ற கள்ள இரவுகளின் ஆரம்பச் சடங்கென இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். போதை கூடினாலும் அந்த போலீஸ் அவளை நல்ல முறையிலேயே நடத்தியிருக்கிறாள். அவள் அங்கங்களை, அசைவுகளை கவிகளின் புலமைக் கொண்டு ஆராதித்திருக்கிறான்.
பொதுவாக பால் மாற்றத்திற்கு பிறகு உடல் இச்சை மீதான ஆர்வங்கள் எல்லாம் அவளைப் போன்றோருக்கு குறைந்துப் போய்விடுமாம். பணத்தின் மீதான மோகமும் ஓட்டமும் அதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்று அவர்களின் மற்ற மற்ற கதைகளிலிருந்துப் புரிந்துக் கொண்டேன். ஆனால் அன்று அவள் அவனிடம் மிகவும் வசியப்பட்டிருக்கிறாள். அவனுடைய கரடு முரடான தேகத்தில் காதல் வயப்பட்டிருக்கிறாள். பால் மயக்கங்களில் திளைத்து ஆடியிருக்கிறாள். நெடுநாளைக்கு பிறகு ஒரு சரியான உடல் தீனிக்கு தயாரானவள் போல் தானும் கற்ற வித்தைகளையெல்லாம் காட்டி அவனை உசுப்பு ஏற்றியிருக்கிறாள். இருவரும் கண்ணன் ஒரு கைக் குழந்தை முதல் கட்டிப்புடிடா வகையறா வரை அத்தனையையும் பாடியும் ஆடியும் ரசனைகளிலும் ரவுடித்தனம் செய்திருக்கிறார்கள். அவன் எல்லா வகையிலும் அவளை மெய் மறக்க செய்திருக்கிறான்.
ஏறக்குறைய இனி கச்சேரி படுக்கையில்தான் என்றளவில் சென்றுக் கொண்டிருந்த நிலையில்தான் எதோ கையால் சைகை காட்டியபடி அவன் குளியலறைக்குள் விரைந்திருக்கிறான். ஏதும் இயற்கை உந்தலுக்காகச் சென்றிருக்கக் கூடுமென மீதமிருந்த அந்த இரவின் இன்பங்களில் ஆழ்ந்தபடி மினுங்கி மினுங்கி எரிந்துக் கொண்டிருந்த முட்டை பல்புகளைகளை ரசித்துக் கொண்டிருந்திருக்கிறாள். உருண்டு உருண்டு ஆசுவாசமாக விரிந்தபடி வண்ணத்துப் பூச்சியின் றெக்கைகள் போல இரு கைகளை மேலும் கீழுமாய் நீந்தவிட்டபடி மெத்தைக்கடலில் நீந்திக் கொண்டிருக்கிறாள்.
அப்போதுதான் அவளை ‘கம்! கம்!’மென குளியலறைக்குள் கூப்பிட்டிருக்கிறான். ஓஹ் இவன் சங்கதிகளை அங்கிருந்து ஆரம்பிக்கப் போகிறானோ என்று ஆவலுடன் சென்றவளுக்கு சரியாக விளங்கிக் கொள்ள முடியாத சம்பவமொன்று நிகழ்ந்திருக்கிறது. அவன் துணியேதுமில்லாமல் மல்லாக்க படுத்திருந்திருக்கிறான். இத்தனை வசீகரமான உடலைப் பார்த்து எவ்வளவு நாட்கள், வருடங்களாகிவிட்டன என்று திகைத்துப் போய் நின்றிருக்கிறாள். அவன் மறுபடியும் ‘கம்! கமான்!’ னென கெஞ்சும் தொனியில் குரல் கொடுக்க எதைச் செய்ய சொல்கிறான்.. எதிலிருந்து ஆரம்பிப்பதென புரியாமல் “என்ன செய்யணும் சார்..” என மெலிதாய் குரலை இழுத்திருக்கிறாள்.. “கோல்டன் ஷவர்!” கணீரென அவன் சொன்னாலும் என்ன சொல்கிறான் என காஜலுக்கு புரியவேயில்லையாம். மறுபடியும் “என்ன?” என்றுக் கேட்க, அவளை தன் மீது ஒண்ணுக்கு விட சொல்லியிருக்கிறான். அவளுக்கு ஏதோ விபரீதமாகத் தோன்ற துவங்கவே, தயங்கியபடி மீண்டும் கட்டளை வருகிறதா எனும் பொருட்டு தயங்கி நிற்கவே, கோபமாக சட்டென எழுந்தவன் பலமாக அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டு, “பேயுடி .வ்டியா!” என்று கத்தியிருக்கிறான். அது அதுவரை அவன் காட்டிராத முகம்! உண்மையிலேயே பயந்துவிட்டாளாம்.
இனியும் தாமதித்தால் கொலையே செய்துவிடுவான் போல என்று அரன்றவளாய், படுத்திருந்த அவனது இடுப்பு பகுதிக்கு நேர்கோட்டில் தனது இருகால்களையும் அகற்றி நின்றுக்கொண்டு அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றியபோது அவன் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தான். உறவு கொள்ளாமலேயே இப்படியும் ஒருவன் சல்லாபிப்பானா? இதையெல்லாம் பார்த்து வியப்பதா சிரிப்பதா? சிரித்தால் மீண்டும் அடி விழக் கூடுமென மௌனமாய் அவன் சொன்னதை மட்டும் செய்திருக்கிறாள். அதற்கு அன்று சன்மானமும் கிடைத்திருக்கிறது. பொதுவாக நாங்கள் மது அருந்தும் வேளைகளில் போதை தலைக்கேறி, நாங்கள் கடந்து வந்த பல சிரிப்புக் கதைகளைப் பேசுவோம் அதில் ‘கோல்டன் ஷவர்’க்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த பிசாசுங்க ஜேயார் சாருக்கும் அதைத்தான் செய்யப் போகுதுங்களாம். நான் என் பாட்டுக்கு அன்னைக்கு சென்னைக்கேப் போயிறலாம்னு இருக்கேன்.
******