யானைகள் வீழ்ந்துகிடக்கும் தெரு

கவிதை : -லதாமகன்


கூடாரத்திற்குள்

முறிந்த மரங்கள் உணவாக அளிக்கப்பட்ட

தந்தங்களற்ற 

யானைக்கு 

ஒரு நாள் காட்டின் நியாபகம் 

வரக்கூடும்

 

பாறைகள் நொறுங்க நடப்பதைப்போல

யாரையோ நினைத்துக்கொண்டு

யார் மீதோ ஏறி

நடக்கத்தொடங்கலாம்

 

எண்பத்தேழு குண்டுகள்

முழங்க

அவனை நாம் மீண்டும்

நியாபகங்களுக்குள் திருப்பி

அனுப்ப முடியும் 

என்றாலும்

 

அவனது

தந்தங்களை வைத்திருப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

 

o

 

இருகால்களில்

பிஸ்கட்டுகளை வாங்கி

ஆசீர்வாதம் அளிக்கப் பழக்கியபின்

நாம்

பாகன்களைக் 

கொன்றுவிட முடியும்

 

தொலைவில் எழும்

சாட்டைகளின் சொடுக்கலுக்கு

அஞ்சி நடுங்கும் யானைகளை

உருவாக்கியபின்

நாம்

காடுகளை 

நமக்கேற்ற சாலைகளுக்காக விரிய 

திறந்துகொள்ள முடியும்

 

நசுங்காத மிதிவண்டிகளை

உருவாக்கியபின்

நாம்

 

எடையற்றவை என 

நம்ப வைக்க முடியும்

கனச்சங்கிலிகளின்

ஞாபகத்தில்

சணல் கயிற்றில் முத்தமிடும்

யானைகளை

 

o

 

 

இதுவரை கொல்லப்பட்ட

எல்லா யானைகளின் நினைவாகவும்

ஒரு விளக்கை

ஏற்றி வைத்து

வணங்கும் பாகன்

 

தன் அங்குசங்களை தாழ

வைத்துவிட்டு

அந்த மாபெரும் தெருவின் வழியே

அமைதியாக திரும்பி நடக்கிறான்

 

வீழ்ந்த மத்தகங்களை

மின்சார அரங்கள் கொண்டு 

அறுத்துக்கொண்டிருப்பவர்கள்

திரும்பிப்பார்த்து புன்னகைக்கிறார்கள்

 

பிளிறல் எழுகிறது

தொலைவின் மலைமீது

<
"
Scroll to Top