ஜார்ஜ் வாலஸ் கவிதைகள்; தமிழில் – ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி
மொழிபெயர்ப்புக் கவிதைகள் | வாசகசாலை
ஜன்னல்கள்
உன்னை ஜன்னல் கண்ணாடியின் வழியே
நான் பார்க்கவில்லை,
சமீபத்திய புரட்சிகள் மற்றும் கைப்பற்றுதல்கள் பற்றிய செய்திகளுக்காக
வானொலியைத் திருகியபடியே
நீ இதழ் வாசிப்பதையும்
நான் காணவில்லை;
தலை மேல் விமானம் பறக்கையிலும்
உன் கணவனின் மாலை உணவிற்காக நீ
தீயை மூட்டுகிறாய்,
இருவரும் பகிர்ந்து உண்ணுகையில்
மேகங்களைக் கடந்து சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சமானது
பாத்திரங்களைப் பளிச்சிடச் செய்கின்றது;
கரி பிடித்த உன் உள்ளத்தையோ
பின்நோக்கி விடப்பட்ட உன் கூந்தலையோ
பச்சை நிற ஐரிய கடலைப் போன்று
தடுமாறும் உன் கண்களையோ
நான் காணவில்லை;
வேறொருவர் மீதான காதல் உஷ்ணத்தில்
மெல்ல எரியும் உன் மனமானது
ஒரு தேவாலய சாம்பல் நிறத்துக் கல்லா?
அல்லது
அடுப்பங்கரையில் எரியும் நெருப்பின்
கடைசி வெடிப்புகளா?
உன் காதலும்
என் இறப்பும்;
ஒரு குளிரான ஆங்கில நாளில்
மும்முறை உன் வாசலைக் கடந்தேன்
மும்முறையும்
காதலின் இசையை
எந்தப் பறவையும் ஒலிக்கவில்லை,
வசந்த காலத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை
ஆயினும்
காதல் கடைசியாகக் கடக்கும் வரையிலும்,
அக்காதல் சாகும் நாள் வரையும்,
எப்பொழுதும் உன்னைக் காதலித்தேன்
என ஒப்புக்கொள்ளும் வரை
இவ்வழியே நான் கடந்துகொண்டுதான் இருப்பேன்.
•
காதல் முன்னனுபவமில்லாதவள்
காதல் முன்னனுபவமில்லாத
உன் கைகளைப் பார்க்கையில்,
கிரகணிக்கும் நெடுஞ்சாலை தெரிகிறது,
உன் முகத்திலோ
தூக்கி வீசப்படக்கூடிய புன்னகையையும்,
உனது பாணியிலோ
மழை நிரம்பிய வானத்தையும்
புதியவர் சூழ்ந்த அறையையும்
பொய்கள் நிரம்பிய வீதியையும்
காண்கிறேன்;
என் மீது சரிகின்றன
சீட்டாட்ட அட்டை வீடுகள்,
முன்னனுபவமில்லாத நீ
நடக்கையில்
இருண்ட கடல் எழுகிறது
பேசுகையில்
உன் கண்களில் ஆவியும்
நடனமாடுகையில்
காதல் பித்துப் பிடித்த சொர்க்கமும்
எதிர்காலமில்லா நகரமும்
பகற்கனவு காணும் கருஞ்சிறுத்தையும்
தெரிகிறது;
சீட்டாட்ட அட்டை வீடுகள்
என் மீது சரிகின்றன,
முன்னனுபவமில்லாத நீ
வானவில்லைப் போல மறைகிறாய்
பறக்கும் தட்டைப் போல சட்டென்று மாயமாகிறாய்
கலையும் சீட்டாட்ட அட்டை வீடுகளைப் போல
என் மேல் சரிகிறாய்
என் மீது சரிகிறாய்.
கவிஞர் குறிப்பு:
ஜார்ஜ் வாலஸ் 41 கவிதைத் தொகுப்புகளின் நூலாசிரியர், வால்ட் விட்மன் பிறப்பிடத்தில் சிறப்புக் கவிஞர், மற்றும் ’போயட்ரி பே’யின் இதழாசிரியர் ஆவார். நியூயார்க் நகரைச் சேர்ந்த இவர் மன்ஹாட்டனில் உள்ள பேஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் உள்ளார். இவர் அமெரிக்கா, இத்தாலி, க்ரீஸ், வடக்கு மாசிடோனியா, பல்கேரியா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளில் இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொழிபெயர்ப்பு: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி (sriram_dc@yahoo.com)