ஐக்கியம்

ஐக்கியம்

சிறுகதை:- க.முத்துகிருஷ்ணன்

மரத்திலிருந்து ஓர் இலை உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தது. ததும்பும் நீர்த் தேக்கத்தில் ஒரு காகிதப் படகு அங்குமிங்கும் அசைவதுபோல, பிறை நிலாவின் ஒரு நுனியை கீழே அமிழ்த்து விட்டால் அது இடப் பக்கமும் வலப்பக்கமுமாய் அசைந்து அசைந்து கால்களற்ற நாற்காலி ஆடுமே அதுபோல அந்த இலை அங்குமிங்கும் காற்றில் ஆடி மிக மெதுவாக கீழே விழுந்தது. மெது என்றால் மெது அத்தனை மெது. பூமிக்கும் வலி சிறிதும் இருந்திருக்காது. அந்த இலைக்கும்கூட வலி கொஞ்ச நஞ்சம்கூட இருந்திருக்காது. விழுந்த இலை பச்சைப்பசேல் என்று இருந்தது. அதன் நடுவில் இருந்த காம்போடு இணைந்து மெலிதாகிக் கொண்டே செல்லும் நரம்பு, ஒரு பெண் நடுவகிடெடுத்து பாங்குற தலைசீவிக் கொண்டிருந்ததைப் போலிருந்தது. பக்கவாட்டில் செல்லும் மிக மெல்லிய நரம்புகள் அந்தப் பெண்ணின் கேசத்திலுள்ள லேசான சுருள்களைப்போல் இருந்தன.

மரம் மிகவும் குள்ளமானதாக இருந்தது. பூமியிலிருந்து அதன் உயரம் அரை அடியிலிருந்து ஓர் அடிக்குள்ளாகத் தானிருக்கும். அடர்த்தியாக நெருக்கமான இலைகள். பச்சை நிறம், ஒன்றுகூட காய்ந்த இலை இல்லை. இலைகளின் அடர்த்தியில் மரத்தின் கிளைகள் எதுவுமே கண்களுக்குத்  தென்படவில்லை. நெருக்கமான இலைகள் மட்டுமே பச்சைப்பசேல் என்று பூமி முழுக்க வியாபித்திருந்தது போலிருந்தது. இலைகள் போர்த்தி மரம் உட்கார்ந்திருந்தது போலிருந்தது.

மரத்தின் அடியில் நிற்க முடியாதபடி மரம் குள்ளமாக இருந்ததினால் மரத்தின் அருகில் நின்றிருந்தேன். எதற்காக நின்றிருந்தேன், எனக்கே தெரியவில்லை. எதற்காகவோ நின்று கொண்டிருக்கின்றேன் என்று மட்டும் எனக்குள் உணர்விருந்தது. உதிர்ந்த பச்சை இலை கீழே விழுந்து காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்தது. அந்த அசைவு அதற்கு உயிர் இருப்பதாக உணர்த்தியது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தெரியாமல் பூமி, ஆகாயம் போல் பரந்து விரிந்து கிடந்தது. வயதானவர்கள் கண்களை இறுக்கிச் சுருக்கித் தூரத்தில் உள்ளதைப் பார்க்க முயல்வதுபோல் மிகவும் சிரமப்பட்டுப் பார்த்தபோது, ஒரே ஒரு வீடு மட்டும் கண்ணில் தட்டுப்பட்டது. அந்த வீடு மரத்திற்கு மிக அருகிலேயே இருந்தது.

மிகப் பெரிய வீடுதான். அதனுள் எப்படியும் ஐந்தாறு அறைகள் இருந்தே ஆக வேண்டும் என்று பார்த்தபோதே தெரிந்தது. பளிச்சென்ற வெள்ளை நிறத்தோடு அந்த வீடு ஒளி பொருந்தியதாகத் திகழ்ந்தது. முன் பக்கம் கதவுக்கு இடது மற்றும் வலது பக்கங்களில் இரண்டு பெரிய ஜன்னல்கள். கதவு பூட்டப்படவில்லை. திறந்திருந்ததுபோல் தெரிந்தது. ஆள் நடமாட்டம் அந்த வீட்டில் இருந்ததாக வெளியில் இருந்து பார்க்கத் தெரியவில்லை. அது யாருடைய வீடு என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் பார்க்கும்போது பழக்கப்பட்ட வீடு போலவே தோன்றியது. வீட்டிற்கும் மரத்திற்கும் பத்தடி தூரம்தான் இருக்கும். மிகவும் தூரம் என்பது போலவும் மிகவும் அருகில் என்பது போலவும் தெரிந்தது.

நான் எதற்காக அங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். திருவிழாவில் காணாமல் போன குழந்தை தன் தாயைத் தேடிக் கொண்டிருப்பது  என் நினைவிற்குள் வந்து போனது. கைகளை முன் பக்கம் கட்டிக் கொண்டு சிறிது நேரம் வானத்தைப் பார்த்து நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரம் கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு பூமியைப் பார்த்தவாறே நின்றேன். சில சமயம் கைகளை விவேகானந்தரைப்போல் மார்பில் இறுக்கி மடித்துக் கட்டிக் கொண்டு அந்த வீட்டை நோக்கிப் பார்வையைச் செலுத்தினேன்.

திறந்திருப்பதுபோல் தெரிந்த வீட்டின் கதவு மீண்டும் திறப்பது போலவே தோன்றியது. கண்களைக் கையால் தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும் அந்த வீட்டையே பார்த்தேன். மூக்குக் கண்ணாடி இருந்திருந்தால் அதை வேஷ்டி நுனியால் நன்கு துடைத்துவிட்டுப் பார்த்திருப்பேன். என்னிடம் இப்போது மூக்குக் கண்ணாடி இல்லை. அது எங்கே போனது என்று எனக்குத் தெரியவில்லை. கண்ணாடி இல்லாமலேயே எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. அந்த வீட்டு வாசலிலிருந்து ஓர் உருவம் வெளியே மெதுவாக நகர்ந்து வருவது நன்கு துடைக்கப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடியில் முகம் பார்ப்பதுபோல் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. வீட்டின் கதவைத் தாண்டி அந்த உருவம் இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே ஒரு பெண்ணின் உருவம் என்பது தெரிந்தது. அவள் இளம் பெண்ணா முதியவளா என்று தெரியவில்லை. இன்னும் சில அடிகள் அவள் எடுத்து வைத்தபோது அவள் இளம் பெண்தான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. பட்டப்பகல் பொழுதில் இவள் எங்கே செல்கிறாள்? தன்னந்தனியாக. என்னால் ஊகிக்க முடியவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்து அவள் வெளியே வந்தபோது என்னை நோக்கித் தான் அவள் வருகிறாளோ என்று என்னை நினைக்க வைத்தது. அவள் நெருங்கி நெருங்கி வருகிறாள். என்னை நோக்கித் தான் வருகிறாள். அவள் யார்? எதற்காக என்னை நோக்கி வருகிறாள்? எனக்கொன்றும் புரியவில்லை. அவள் மிகவும் நெருங்கி வந்து விட்டாள். எனக்கும் அவளுக்கும் இடைவெளி இரண்டு அடிகளே இருக்கும். அவள் நின்றாள். நான் நிற்பது அவள் அறியாதது போலிருந்தது. நான் நிற்பது எப்படி அவளுக்குத் தெரியாமல் போகும்? வேண்டுமென்றே தெரியாதது போல் நிற்கிறாள். அவள் யாரென்று எனக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது. அவளுக்கும் என்னை யாரென்று தெரியாததுபோலவே தோன்றுகிறது. சக பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்குக் காத்திருப்பதுபோல இருவரும் நின்று கொண்டிருந்தோம். அவளிடம் பேசலாமா என்று நினைத்தபோது ஒரு பெண்ணிடம் வலியப் போய் பேசினால் ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற நினைப்பில் அவளாகவே பேசினால் நானும் பேசலாம் என்று நின்று கொண்டிருந்தேன். அப்போது அவளாகவே பேசினாள்.

“ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று அவள் கேட்டபோது, ஏன் இங்கு நிற்கிறேன் என்று எனக்கே தெரியாத போது என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்? வினாவிற்கு விடை தெரியாமல் தேர்வு அரங்கத்தில் முழி முழி என்று முழிக்கும் மாணவனைப்போல் நான் அங்கு நின்றிருந்தேன். அவள் என்னிடம் எப்படி ஒருமையில் பேசலாம் என்று சற்று விசனத்துடன் நான் நின்றபோது, “ஏய் என்னைத் தெரியவில்லையா?” என்று மீண்டும் பேசினாள். ‘ஏய்’ என்பது, ஒருமையில் பேசுவதைவிட மோசமாக அல்லவா இருக்கிறது. அவள் குரலில் மிகவும் உரிமை தெரிந்தது. ஒரு வேளை எனக்குத் தெரிந்தவளாக அவள் இருக்கக் கூடுமோ என்று அவளை நினைவில் கொண்டுவர முயற்சி செய்தேன், முடியவில்லை. ‘ஏய்’ என்று அழைத்ததில் எனக்கு கோபம் என என் முகத்தில் காட்டினேன். பேசவில்லை. “அட மடையா என்னைத் தெரியவில்லையா” என்று குரலில் சிறிது கனத்தை ஏற்றிக் கொண்டு அவள் சொன்னாலும், குரல் மென்மையாகவே வெளிப்பட்டதுபோல் எனக்குத் தோன்றியது. இதற்கு மேலும் பேசாமல் இருந்தால், போடா வாடா என்கின்ற நிலைக்குக்கூட நான் தள்ளப்பட்டு விடலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “நீ யார்? என்னிடம் இப்படியெல்லாம் பேசுவதற்கு?” என்றபோது, அவள் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டு, “என்னைத் தெரியவில்லையா? நன்றாக என்னை உற்றுப் பார்” என்றாள். அப்போது நான், “நீ என்ன திருவிளையாடலில் வரும் சிவாஜி கணேசனா, நான் என்ன நக்கீரனா?” என்று அவளிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை. அவளுடைய கேள்விகள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது உண்மை என்றாலும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எனினும் என் அச்சத்தை அவள் புரிந்து கொண்டதுபோல் தோன்றியது. ‘பயப்படாதே’ என்றாள். “நீ என்ன காளியா?” என்றேன். “காளியையே நீ காதலிப்பாயோ?” என்றாள். “அய்யோ நான் அப்படிச் சொல்லவில்லையே” என்றேன். “என்னைப் பார்த்தால் உனக்கு காளிப்போல் தோன்றுகிறதா, பைத்தியக்காரா? என்னை நன்றாகத்தான் பாரேன். ஏன் என்னை நன்றாகப் பார்க்க மாட்டேன் என்ற பிடிவாதம் செய்கிறாய். எதையுமே நன்றாகத் தெளிவாகப் பார்க்கும் பழக்கம் உனக்கு மட்டுமில்லை, பலருக்குமில்லை. சரி, இப்போதாவது என்னை நன்றாகப் பார், உற்றுப் பார், உனக்கு நான் யாரென்று புரியும்” என்று சொல்லியபடியே அவள் முகத்தை என் கண்களுக்கு அருகில் கொண்டு வந்தாள், நான் நன்றாகப் பார்க்கட்டும் என்று. என் கண்களுக்கும் அவள் முகத்திற்குமிடையே மிகச் சிறிய இடைவெளி. நான் அவளை உற்றுப் பார்த்தேன்.

அவளுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. தொட்டுப் பார்த்தால் மிகவும் மிருதுவாக இருக்கும்போல் தோற்றமளிக்கும் தலைமுடி. ஷாம்பு போட்டுக் குளிப்பாளா என்னவோ என்று நினைத்துக் கொண்டேன். என்ன ஷாம்புவாய் இருக்கும் என்றும் யோசித்தேன். சூப்பர் மார்க்கெட்டில் பல வகையான ஷாம்புகள் வரிசையாக பள்ளிக்கூடப் பிள்ளைகள் காலையில் பள்ளி ஆரம்பிக்கும் முன் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்காக நிற்பதுபோல் நிற்க வைக்கப்பட்டிருப்பது என் ஞாபகத்திற்குள் வந்து போனது. அதிலும் குறிப்பாக மஞ்சள் லேபிள் ஒட்டிய சற்று நீண்ட கழுத்துடைய ஷெல்ஸன் ஷாம்பு பாட்டில் என் கண் முன் நிழலாடியது. அவளுடைய கண்கள் பளிச்சென்று வெண்ணிறப் பின்புலத்துடன் கருவிழிகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. சாந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது. எனினும் கூர்மை மிக்கதாயிருந்தது. மூக்கின் வலதுபுறம் ஒரு சிறிய மூக்குத்தி மின்னியது. வைரமாகத்தான் இருக்க வேண்டும். இளஞ்சிவப்பு உதடுகளில் ஒட்டப்பட்டிருந்ததுபோல் வாய் காணப்பட்டது. “ஏய் இன்னுமா பார்த்துக் கொண்டிருப்பாய். இன்னும் எதை எதையெல்லாம் பார்க்கப் போகிறாயோ, பார்த்தது போதும். இவ்வளவு நேரம் பார்த்துமே நான் யாரென்று உனக்குப் புரிந்திருக்குமே. இன்னமும் புரியவில்லை என்றால் நீ புரியாததுபோல் நடிக்கிறாய் என்றுதான் அர்த்தம். அப்படித்தானே?” என்று அதட்டுவது போன்ற குரலில் கேட்டாலும் எனக்கு மென்மையாக அவள் முத்தம் கொடுத்துக் கொண்டு கேட்பதுபோல் தோன்றியது. “வாவ்வ்வ், எனக்குப் புரிந்துவிட்டது, நீ என் காதலியாய் இருந்திருப்பாயோ?” பயத்தை முழுவதும் விலக்கிவிட்டு நான் கேட்டபோது, “உன் காதலி, தாய், தோழி, ஆலோசகி எல்லாம் நானே” என்று  அவள் உறுதியான குரலில் சொன்னபோது, “நீ என்ன ஆண்டாளா? இல்லை பாரதியாளா?” என்று நான் கேட்டபோது, “இப்போது பாதி புரிந்து கொண்டிருக்கிறாய், மீதியையும் புரிந்து கொள்ள முயற்சி செய்” என்று சொல்லிக் கொண்டு எனக்கு நேரம் கொடுப்பதுபோல் அவள் அமைதியாக எதையோ சிந்திப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு ஆழ்ந்திருந்தாள். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல் மலரும் விழி வண்ணமே’ என்று கண்ணதாசன் கூறுவதுபோல் அமைந்திருந்தது அவளுடைய விழிகள். அவள் பேசாத இந்த இடைப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை அவளுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவளை உற்றுப் பார்த்தேன்.

மிகவும் கறுப்பு, மிகவும் சிவப்பு என்று சொல்லிவிட முடியாத உடலின் நிறம். மிக மிக இளஞ்சிவப்பு அல்லது மிக மிக இளம் ரோஜாப்பூ நிறம் அல்லது மிக மிக லைட் பிங்க் நிறம் போன்ற வண்ணத்தில் சேலை உடுத்தி அதற்குப் பொருத்தமான வண்ணத்தில் ஜாக்கெட் அணிந்திருந்தாள். “இளஞ்சிவப்பு, இளம் ரோஜாப்பூ நிறம்,லைட் பிங்க் எல்லாமே ஒரே கலர்  தானே” அவள் கண்கள் திறக்காமல் உதடுகளால் பேசினாள். மேலும் அவளே தொடர்ந்து, “இதற்குள் புரிந்திருக்க வேண்டுமே உனக்கு, இதற்கு மேலும் உன்னைப் பார்க்க விட்டால் நீ எதை எதையெல்லாம் பார்ப்பாய் என்று எனக்குத் தெரியும், சரி சொல்” என்ற போது, “ஆங்ங், ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நீ என்… என்…” என்று இழுத்த போது அவள் சிரித்துக் கொண்டே, “அப்படியே வைத்துக் கொள், நீ எப்படி நினைத்துக் கொண்டாலும் ஒன்றுதான் என்பது உனக்குத் தெரிந்திருக்கிறது, தெரிந்திருந்தாலும் நீ தெரியாததுபோல் நடிக்கிறாய். நீ சினிமாவில் சேர்ந்திருந்தால் சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போயிருக்கும்” அவள் சிரித்தாள். “நான் என்ன தப்பாகச் சொல்லிவிட்டேனா?” என்று தயக்கத்துடன் நான் கேட்டபோது, “மிகச் சரியாகத் தான் சொல்லியிருக்கிறாய்” என்றவள் சொன்னபோது, “அப்படியென்றால் நீ என் காதலி தானே, உண்மை தானே” என்று சொன்னபோது, “காதலி என்றால், என்னை கட்டிப் பிடிக்க வேண்டுமா? முத்தம் கொடுக்க வேண்டுமா? இதைத் தாய் கூடத்தான் தன் குழந்தைக்குச் செய்கிறாள்.” “அப்படியென்றால் தாயும் காதலியும் ஒன்றா?” என்றவள் வெடுக்கெனக் கேட்டுக் கொண்டே தொடர்ந்து, “பல சமயங்களில் தாய் காதலியாய் இருக்கிறாள். அது எந்த வேளை எந்த சந்தர்ப்பம் என்பதைப் பொறுத்து இருக்கிறது” என்றபோது, “காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?” அவளைத் திணற அடித்து விட்டதாக நான் இந்தக் கேள்வியைக் கேட்டதும், “நீ காதலிக்கும்போது மனைவி, மனைவியாய் இருக்கும்போது காதலி. விளக்கம் போதுமா? இன்னும் வேண்டுமா?” என்றவள் தொடர்ந்து, “சரி இங்கேயே இந்த குட்டை மரத்தின் அருகில் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருப்பது, வா அப்படியே சற்று தூரம் காலாற நடந்து செல்லலாம்” என்று அவள் சொன்னபோது, ‘எங்கு’ என்று நான் சற்று சப்தமாகக் கேட்டபோது, “மெதுவாகப் பேசிப் பழகு என்று உனக்கு நான் எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் மறந்து விட்டாயா?” என்றவள் சொல்லி முடிக்கும்முன், “எப்போது சொன்னாய்? இப்போதுதானே நானே உன்னைப் பார்க்கிறன்” என்று நான் சொன்ன போது, “உனக்கு மறதி ஜாஸ்தி, சரி வா நடக்கலாம்” என்றாள். அப்போது மாலை வேளை. அங்கு எப்போதும் மாலை வேளையாகத் தானிருக்கிறது.

மிகப் பெரிய சந்தை. கோயம்பேடு மார்க்கட்டைவிட பல மடங்கு பெரியது. “சமையலுக்கு ஏதாவது காய்கறி வாங்கப் போகிறாயா? என் அன்புக் காதலியே” என்று காதலி என்ற வார்த்தைக்குச் சற்று அழுத்தம் கொடுத்துக் கேட்டபோது அவள் லேசாகச் சிரித்துக் கொண்டு, “காய்கறி எல்லாம் வாங்கவில்லை நண்பா, இந்த வழியாக நாம் நடந்து செல்லப் போகிறோம், அவ்வளவுதான். நீ பிரியப்பட்டால் நீ என் கைகளின் விரல்களோடு உன் விரல்கள கோர்த்துக் கொண்டு என்னுடன் நடந்து வா, அல்லது நீ இஷ்டப்பட்டால் என் தோள் மீது கை போட்டுக் கொண்டுகூட நடந்து வரலாம். இல்லை நீ ரொம்பவும் ஆசைப்பட்டாய் என்றால் நீ உன் கையால் என் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டுகூட நடந்து வரலாம். உன் விருப்பத்தைப் பொறுத்தது அது” என்று அவள் சொன்னபோது, “நீ உன் சுண்டு விரலை மட்டும் நீட்டி எனக்குக் கொடு, நான் அதை மட்டும் பிடித்துக் கொண்டு கூட எவ்வளவு தூரம் என்றாலும் நடந்து வருகிறேன்” என்றேன். “இப்போது பரவாயில்லை, நீ சற்று தெம்பாகி விட்டாய்” தன் வலது கையால் என் முதுகில் தட்டிக் கொடுத்தாள். மிகவும் சுகமாக இருந்தது, அந்தத் தட்டிக் கொடுத்தல்.

ஒரு தேங்காய்க் கடை எதிரில் நின்றாள். தேங்காய்க் கடையில் பலவித அளவுகளில் சிறியன, நடுத்தரம், பெரியன என்று பிரிக்கப்பட்டு தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன. எல்லாவிதமான தேங்காய்களுக்கும் முக்கண்கள் இருந்தன. தேங்காய்க் கடையில் ஒரு முதிய பெண் நின்று தேங்காய் வாங்குவதற்காக தேங்காய்களை சுண்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். “எல்லா நல்ல காய்தான், பேசாமல் உனக்கு வேண்டியதை வாங்கிட்டுப்போ. வெலையும் சீப்புத்தான்” என்றான் தேங்காய்க் கடைக்காரன்.

சப்தமாய் “என்ன இங்கு நின்று விட்டாய், தேங்காய் வாங்கப் போகிறாயா? உனக்கு தேங்காய் வேண்டுமா? நான் வேண்டுமானால் வாங்கித் தரட்டுமா?” என்று சொல்லி நான் என் பர்ஸைத் தேடியபோது அது என்னிடமில்லை. நான் எங்கெங்கோ துழாவிக் கொண்டிருக்கும்போது அவள், “இதோ பர்ஸ்’ என்றாள். “இது எப்படி உன்னிடம் வந்தது” என்றபோது, “நீ தானே கொடுத்தாய், மறந்து விட்டாயா” என்றாள். “நான் கொடுக்கவில்லை, நீ என்ன பிக்பாக்கட்டா?” என்றபோது, “நீயே என்னிடம் கொடுத்துவிட்டு மறந்து போய் என்னையே பிக்பாக்கெட் என்கிறாயா?” என்று சொல்லி அடிக்க வருவதுபோல் கையை உயர்த்தினாள். நான் என் கைகளால் என் கன்னங்களைப் பொத்திக் கொண்டேன். “இந்தா பிடி உன் பர்ஸை” என்றாள். “அதை வைக்க என்னிடம் இடமில்லை, அதை நீயே வைத்திரு, நான் கேட்கும்போது நீ அதைக் கொடு” என்று நான் சொன்னபோது, “நான் என்ன உன் வேலைக்காரியா?” என்றாள். கோபமாய் இருப்பவள்போல் பாவனை செய்துகொண்டு, “நீ தானே சொன்னாய், நீ என் காதலி, நீ என் தாய், நீ என் தோழி என்று” என்று நான் கேட்டபோது, “எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்கிறாய், முதல் உறவாய் நீ காதலி என்று சொல்கிறாயே, உன் புத்தி உன்னை விட்டுப் போகாது, நீ திருந்தவே மாட்டாய், திருந்தாத ஜென்மமே” மீண்டும் அடிக்க கை தூக்கினாள். நான் தடுக்கும் பாவனையில் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்திக் கொண்டேன். “அந்தப் பயம் இருக்கட்டும், இந்தா சுண்டு விரல், அதை மட்டும் பிடித்துக் கொண்டு வா, நட, சரி, தேங்காய்க்குள் என்ன இருக்கிறது தெரியுமா, உனக்கு” என்றாள். நான் படீரென்று ‘தண்ணீ’ என்றேன். ‘அடப்பாவி’ என்றாள். நான் அவள் சுண்டு விரலை இறுக் பிடித்துக் கொண்டேன். “நீ சுண்டு விரலின் பிடியை விட்டால் அது உன்னை விடாது, வா. அந்தத் தேங்காய்க் கடையில் தேங்காய் வாங்க பேரம் பேசிக் கொண்டிருக்கிறாளே ஒரு கிழவி, அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு நாம் மலர்ச் சந்தை வழியாக ஆற்றங்கரைக்குச் செல்வோம்” என்று சொல்லிக் கொண்டே தேங்காய்க் கடையில் நின்று கொண்டிருந்த கிழவியின் தோளைத் தட்டி, “என்ன முத்துலட்சுமி எப்படியிருக்கே?” என்றாள். கிழவி திரும்பிப் பார்த்தாள். “அடி ஆத்தா, நீ என்னோட நாத்தனாருல்ல, எப்பவும் வம்பிழுக்கிறதே வுனக்கு வேலயாச்சே, இப்போ என்ன வம்பிழுக்க வந்திருக்கே, அதெல்லாம் கெடக்கட்டும், எப்பவும் அழகா, எடுப்பா வயசானவ மாதிரி தெரியாமல் இருக்கிறியே, என்ன மேக்கப் போடறே” என்றாள் கிழவி. “இப்போ வம்பிழுக்கிறது யாருன்னு தெரியுதா, நீ தான்” என்று அவள் கிழவி போலிருந்தவளிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது அவளுடைய சுண்டு விரல் பிடியை நான் விடாமல் கிழவிக்கும் அவளுக்கும் நடக்கவிருக்கும் சண்டையை ஆவலோடு பார்க்கத் தொடங்கினேன். நான் நினைத்ததைப் புரிந்து கொண்டவள்போல், “ஏய் நாரதா, இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சிக்காதே, நடக்கிறத மட்டும் பாரு, ஏதாச்சும் பேசினே, அப்புறம் நடக்கிறதே வேற” என்றவள் சொன்னதும் நான் வாயை இறுக மூடிக் கொண்டேன். அவள் கிழவியைப் பார்த்து, “முத்துலட்சுமி உனக்கு திடீர்னு இளமை வரும், திடீர்னு முதுமை வரும். ஏழை பணக்காரனாகவும், பணக்காரன் ஏழையாவதும் போல, நான் அப்படியில்லே, மேக்கப் எல்லாம் ஒண்ணும் கிடையாது. எனக்கு மனசும் உடம்பும் ஒண்ணு. மனசு மாதிரி உடம்பு, உடம்பு மாதிரி மனசு. மனசுக்கு வயசாகிறதே இல்லே, உடம்புக்குத் தான் மற்றவர்களுக்கு வயாசுகுது, தெரியுமா, தெரியாட்டி வுன் புருஷன் கிட்டே கேளு, அவன்தான் கத கதயா எழுதி வச்சிருக்கானே, கூடப் பொறந்தவள்தான்னு பேரு, என்னிக்காவது ஒரு ஸ்வீட், இல்லேன்னா பூ வாங்கிட்டு வந்து என்னிய பார்த்திருப்பானா தூங்கு மூச்சிப் பய” என்றதும் கிழவி, “எம் முன்னாலேயே அவரத் திட்றியா” என்றதும், “சரி சரி கோபப்படாதே, தேங்காக் கடக்காரரு நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவருதான். உனக்கு வேண்டிய தேங்காயை வாங்கிட்டுப் போ, உனக்கு கொஞ்சம் சீப்பா தரச் சொல்றேன்” என்று அவள் கிழவியிடம் சொன்னபோது, கிழவி, “நீ என்ன சொல்றது, கடக்காரர் எனக்கும் ஒரு மொறையில அண்ணன்தான், நான் கேட்டால் எனக்கே சீப்பா தருவாரு” என்று சொல்லிக் கொண்டே, “அண்ணாத்தே எனக்கு ஒரு மூன்று தேங்கா குடுங்க” என்றாள், தன் மடியில் சொருகியிருந்த சுருக்குப் பையைத் திறந்து கொண்டே. சுருக்குப் பையில் அவ்வளவும் தங்க நாணயங்கள். “எந்த ஊர்ல, தங்கக் காசு அடிக்கிறாங்க?” என்று நான் சுண்டு விரலை விடாதபடி கேட்டபோது, “அது மட்டுந்தா அவளிடமிருக்கு, சரி வா நாம் ஆற்றங்கரைக்குப் போகலாம்” என்று அவள் இழுத்தபோது அவள் சுண்டு விரலைப் பிடித்திருந்த என் விரல்கள் பிடியை விடவில்லை. விடவும் முடியவில்லை. இறுகப் பற்றியிருந்தது. ‘ஒட்டிக்கிச்சி’ என்றாள், அவள் சிரித்தபடியே.

அவள் வேகமாக மிக வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து நடப்பது என்பது மிகவும் சிரமமானது என்றாலும் என்னால் நான் நடந்து செல்லாவிட்டாலும் அவளுடைய வேகத்திற்கு இணையாக நடப்பது என்பது எனக்கு எளிதான ஒன்றாகத் தோன்றிச் செயல்பட்டாலும் என்னால் இயலாது போலவே தோன்றினாலும் நான் அவளுடன் இணைந்து நடந்து கொண்டிருந்தேன். நடந்து கொண்டே சற்றே தலையை நிமிர்த்தி அவளுடைய கழுத்தைப் பார்த்தபோது எல்லோருக்கும் தெரிவதுபோல நரம்புகள் எதுவும் தென்படாமல் வழு வழு என்றிருந்தது. அந்தக் கழுத்தில் தங்கமா அல்லது வைரமா அல்லது அதற்கும் மேல் உள்ள ஏதோ ஒரு உலோகத்தில் செய்த மிகவும் பளபளப்பானதாக அன்று செய்ததுபோல் ஒரு புதிய தாலியை அணிந்திருந்தாள். அது புதியதுபோல் தோன்றினாலும் மிகப் பல்லாண்டு காலமாக அவள் அணிந்திருக்க வேண்டும் என்ற சில அடையாளங்களைக் காட்டியது. “என்ன கல்யாணம் ஆன திருமதியா? அல்லது செல்வியா என்று பார்க்கிறாயா?” என்று என் பக்கம் திரும்பாமலேயே கேட்டாள். நான் அவளைப் பார்த்ததை அதுவும் குறிப்பாகக் கழுத்தை, அதில் கிடக்கும் தாலியைப் பார்த்ததை அவள் எவ்வாறு உணர்ந்து கொண்டாள் என்று எனக்குத் தெரியவில்லை. “நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறாயா?” என்றாள் மெதுவாக நடந்து கொண்டே. “அய்யய்யோ அப்படியெல்லாம் நினைக்கவில்லை. நீ என்னைவிட மிகப் பெரியவள். ஆனாலும் உன் மடியில் படுத்து உருள வேண்டும்போல் மனதிற்குள் ஆசை ஏற்படுகிறது” என்று நான் சொன்னவுடன், “நான் நினைத்தால் உன்னை விட சிறியவளாக ஆக முடியும்” என்றபோது என் கையில் ஒரு மூன்று வயது அழகான பெண் குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அப்போதும் என் இடதுபுறத்தில் குழந்தை இருந்தாலும் வலது கை அவளுடைய சுண்டு விரலைப் பிடித்திருந்தது. குழந்தையின் முகமும் அவளுடைய முகமும் ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. “எப்படி இருக்கிறது?” என்றாள். உதடு, வாய் எதையும் சிறிது கூட அசைக்காமல் கண்களால் பேசினாள். ‘நல்லாயிருக்கு’ என்று சொல்லும் போதே என் முகத்தில் அசடு வழிந்திருக்க வேண்டும் என்பதை என்னால் உணர முடிந்தது. சிறிது நேரம் நடந்து கொண்டிருந்தபோது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடியவில்லை. மயக்க நிலை தெளிந்து சுயநினைவு வருமே அது மாதிரி சிறிது நேரத்திற்குப் பின் சுயநினைவு வந்தது போன்ற நிலையில் இருந்த நான் அவளுடைய இடுப்பில் ஒரு, ஒரு வயது குழந்தையைப்போல் ஒட்டி உட்கார்ந்து அவளுடைய தோள் மீது தலை சாய்த்து உறங்காமல் ஓய்வெடுப்பதுபோல் இல்லாமல் ஒரு அலங்காரப் பல்லக்கில் உட்கார்ந்து செல்வதுபோல் உணர்ந்து கொண்டிருந்தேன். என்னிரு கைகளும் அவளுடைய கழுத்தைச் சுற்றி வளைத்து இறுகப் பிடித்திருந்தன. நான் அவளுடைய இடுப்பில் குழந்தையாக உட்கார்ந்திருந்தாலும், அப்போதும் அவளருகே இடப்பக்கம் அவளுடைய சுண்டு விரலை இறுகப் பற்றிப் பிடித்தபடி அவளுடன் நடந்து கொண்டிருந்தேன். “எங்கேம்மா இன்னும் ஆற்றைக் காணோமே” என்றவுடன், “அட இப்போதுதான் அம்மா என்று அழைத்திருக்கிறாய். இந்த அம்மா என்ற வார்த்தையை நீ எங்கே இருந்து கண்டு பிடித்தாய்? ஓரளவு திருந்தி விட்டாய் என்றுதான் நினைக்கிறேன்” என்றவள் சிரித்தபோது நான் அவள் காலில் விழ எத்தனித்தேன். “காலில் எல்லாம் விழாதே” என்று என்னை தடுந்தவள் தொடர்ந்து, “காலில் விழுந்தாய் என்றால் என்னிடம் நீ எதையோ எதிர்பார்க்கிறாய் என்று அர்த்தமாகிவிடும், நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டாய் என்று நினைக்கிறேன். என் நினைப்பைப் பொய்ப்பித்துவிட மாட்டாய் அல்லவா?” என்றபடி என் முகத்தை உற்று பார்த்தாள். “இல்லேம்மா நான் உன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறேன் என்பது உண்மை, ஆனால் எது என்று எனக்குத் தெரியவில்லை” என்று நான் சொன்னவுடன், “தெரியாத ஒன்றை எதிர்பார்க்கிறாய் அல்லவா, அப்போதே நீ பக்குவப்பட்டுவிட்டாய் என்று சொல்ல முடியாவிட்டாலும் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்று சொல்லலாம். ஆறு ஏன் இன்னும் வரவில்லை என்று தானே கேட்டாய்? இதோ வந்து கொண்டே இருக்கிறது” என்றாள். நாங்கள் நடந்து கொண்டே இருந்தோம். எவ்வளவு தூரம் ஆயிரம், இலட்சம், கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள். அப்போது ஏனோ என் நினைவுக்குள் ஐன்ஸ்டின் வந்து போனார். நாம் பூமியிலிருந்து பார்க்கும் இந்தச் சூரியன் வானில் இருப்பதிலேயே மிக மிகச் சிறிய சூரியன். நம் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு பெரிய சூரியனெல்லாம் அண்டத்தில் உண்டு. பல சூரியன்களும் அந்தச் சூரியனை நமது சூரியனைச் சுற்றும் கிரகங்கள் போலவே பல கிரகங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான சூரியனும் அதனைச் சுற்றும் கிரகங்களும் கொண்டது ஒரு பால் வீதி. இதேபோல பல்லாயிரக்கணக்கான பால் வீதிகளை உள்ளடக்கியது ஓர் அண்டம் (Universe). இதே மாதிரி பல அண்டங்கள் பரந்து விரிந்து அளவிட முடியாத அளவில் உள்ளன என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோதே “என்ன ஐன்ஸ்டின் உன் உள் உலா வருகிறானா?” என்றாள். நான் நினைப்பது எப்படி இவளுக்குத் தெரிந்தது என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, “ஆறு இப்போது வந்து விடும். சிந்தனையை சிதற விடாதே. ஒருமுகப்படுத்து. ஆறு இருக்குமிடம் சென்றடைவதே உன் முக்கியக் குறிக்கோள். அதற்கு நான் உதவுவதாய் உனக்கு உத்திரவாதம் அளித்து விட்டேன். நம்பிக்கையுடன், அதுவும் முழுக்க முழுக்க முழு நம்பிக்கையுயுடன் என்னுடன் வருவதாய் இருந்தால் வா. இல்லையேல் இப்படியே திரும்பிப் போய் விடு” என்று உறுதியான குரலில் அவள் சொன்னபோது அவளுடைய சுண்டுவிரலை நான் பிடித்திருந்த இறுக்கம் நான் தளர்த்தாமலேயே சிறிது தளர்ந்ததுபோல் நான் உணர்ந்தவுடன் அவள் சுண்டு விரலை இறுக்கமாய் பிடித்துக் கொண்டாலும் பிடி சற்றுத் தளர்ந்தது போலவே இருந்தது. “என்ன திரும்பிப் போகிறாயா? அல்லது என்னுடன் ஆற்றுக்கு வருகிறாயா?” என்று அவள் தீர்க்கமான குரலில்  கேட்டபோது, “இல்லை இல்லை நான் உன்னுடனேயே வருகிறேன். அங்கே எல்லாம் திரும்பப் போக மாட்டேன்” என்று நான் உறுதியாகச் சொன்னபோது சுண்டு விரலைப் பிடித்திருந்த பிடி தானே பலமாக இறுகியது. பிடி இறுகியதால் சிறிது வலித்தது. “கொஞ்சம் வலிக்கிறது” என்றவுடன், “என் விரல்தான், பிடித்திருப்பது நீ. பிறகெப்படி என்னிடம் வலி என்று நீ சொல்லலாம். அது வலியில்லை என்பதை நீ முதலில் உணர வேண்டும்” என்றவள் சொன்னபோது நான் பிடியைச் சிறிது தளர்த்தலாமா என்று யோசித்தபோது, “பிடியை நீ தளர்த்தினால் பிடியை நீ விட்டு விடவும்  கூடும், யோசித்துக் கொள்” என்றபோது நான் அவளுடைய சுண்டு விரலை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்.

“ஆறு இன்னும் சில வருடங்களில் வந்துவிடும், அச்சப்படாமல், அவசரப்படாமல், பதட்டப்படாமல், பயப்படாமல் வா” என்றவுடன், “சில வருடங்களிலா” என்று பயம் கலந்த வியப்புடன் கேட்டபோது, “இப்போது தானே சொன்னேன் பயப்படாதே என்று, மீண்டும் பயப்படுகிறாயே, வருடங்கள் என்பது நம்மைப் பொறுத்த வரையில் சில நொடிகளே, சற்று முன் ஐன்ஸ்டினைப் பற்றி யோசித்தாயே, Relativity theory of Space Time பற்றி நீ கேள்விப்பட்ட தில்லையா?” என்றவள் சொன்னபோது, “என்னவெல்லாமோ சொல்லி பயமுறுத்துகிறாய்” என்றபோது, “சரி சரி பயப்படாமல் வா, இதோ ஆறு வந்து விட்டது” என்றவள் சொன்னபோது ஆறு ஓடும் சல சல என்று நீர் ஓடும் சப்தம் எனக்குக் கேட்டது. அதே சமயத்தில் கடலில் அடிக்கும் அலை ஓசையும் கேட்டது. ஆற்றின் சல சல ஓசையும் கடலின் அலை ஓசையும் மாறி மாறிக் கேட்டன. எனக்குக் குழப்பமாய் இருந்தது. ஆறா, கடலா எது அருகில் இருக்கிறது?

பல வகையான பல வர்ணங்களில் மரங்கள் அழகான ஓவியங்கள்போல் சிற்பங்கள்போல் கடைந்தெடுத்தது போன்ற கிளைகளும் பல வடிவங்களில் இலைகளும் வண்ண வண்ண பறவைகளின் சிறகுகள்போல் ஜொலித்தன. குளிர்ந்த காற்று மெல்லியதாக வீசிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மரத்தடியிலும் சிற்சில பேர் நின்று கொண்டிருந்தனர். ஒரு மரத்தடியில் ஒரு அழகிய பெண் ஒரு அழகிய நீண்ட வாத்தியக் கருவியை வைத்து இனிய இசையை வரவழைத்துக் கொண்டிருந்தாள். அந்த வாத்தியக் கருவியிலிருந்து ட்ட்வெய்ய்ங்ங், ட்ட்வெய்ய்ங்ங், ட்யுங், ட்ட்யுங் என்று இனிய ஒலி வந்து கொண்டிருந்தது. மற்றொரு மரத்தில் மாங்கனி வண்ணத்தில் ஒரு யானை நின்று கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருந்தது. அப்போது யானையின் காதுகள் விசிறிகள் விசிறுவதுபோல ஆடிக் கொண்டிருந்தன. இன்னொரு மரத்தில் ஓர் அழகான ஆண் மயில் தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. மற்றுமொரு மரத்தில் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன; ஒன்றில் மடி கனத்த பசுவும்.

ஆற்றின் அருகில் நாங்கள் வந்து விட்டோம். மிகத் தெளிவான நீருடன் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரை ஊடுருவி என் கண்கள் பார்த்தபோது தண்ணீருக்கு அடியில் கூழாங்கற்கள்போல் முத்துக்கள் தென்பட்டன.

“இது ஆறா? அக்கரை தென்படவில்லையே?” என்றபோது, “அக்கறையோடு பார்” என்றவள் சொன்னபோது, “என்னுடைய தாமிரபரணி ஆற்றில் அக்கரை கண்ணுக்குத் தென்படுமே” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே, “என்னது, உன்னுடைய தாமிரபரணி ஆறா, அடப்பாவி” என்று சிரித்தாள். “சரி என்னுடைய, ஸாரி, தாமிரபரணி ஆறு மேற்கிலிருந்து கிழக்காக அல்லவா ஓடிக் கொண்டிருக்கும். இது அக்கரையே தெரியாமல் கடல்போல் சுருள் சுருளாய் அலை அடித்துக் கொண்டிருக்கிறதே, இது ஆறா, கடலா.” “ஆறும் இதுதான், கடலும் இதுதான். இந்த ஆற்றில் நீ குளிக்க விரும்புகிறாயா?” “நான் மாற்றுடைகள் எதுவும் எடுத்து வரவில்லையே” என்றபோது, “உனக்கு மாற்றுடை தேவைப்படாது” என்று சொல்லி ஆறு என்ற கடலுக்குள் நாங்கள் இருவரும் இறங்கி நாங்கள் நடந்தபோது தண்ணீருக்குள் இறங்க இறங்க வெளிச்சம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

கால்விரல்கள், கரண்டை, மூட்டு, தொடை, இடுப்பு, வயிறு, நெஞ்சு, கழுத்து, வாய், காது, மூக்கு, கண்கள், தலைமுடி, உச்சந்தலை என ஒவ்வொன்றாய் ஆற்றில், கடலில் நடக்க நடக்க மிகவும் மெதுவாக மூழ்கிக் கொண்டே இருந்தது. மூழ்குதல் சுகமானதாக இருந்தது. மூழ்கல் முழுவதும் முடிவுற்றபோது ஒளி மட்டுமே தெரிந்தது.

அதன் பிறகு என்னைக் காண என்னால் முடியவில்லை.