ரஷ்யா, ஜெர்மன் போர் நடந்த காலகட்டத்தில் போர்முனைகளில் வாழ்ந்த பாமர மக்களின் வாழ்வியலை பதிவு செய்த நாவல்தான் ஜமீலா.
இதுவொரு மொழியாக்கம் செய்ப்பட்ட ரஷ்ய குறுநாவல். இதன் மொழி பெயர்ப்பாளரான பூ.சோமசுந்தரம் தமிழில் சுவை குன்றாது மொழியாக்கம் செய்திருக்கிறார். காலவோட்டத்தால் எண்ணவோட்டத்தில் மறைந்து போன பல வார்த்தைகளையும் புகுத்தியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரஷ்யாவின் கிர்கீஸிய, காஸாஃப் நிலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் கூட்டுப் பண்ணை வாழ்கை முறை, அவர்களின் உழைப்பு, கலை சார்ந்த திறமைகளை அந்த காலகட்டத்தின் நிலையோடு, வாசிக்கும் நம்மின் மனத்திரைகளில் ஓட விட்டிருப்பது சிங்கிஸ் ஐத்மாத்தவுக்கே உரிய கலை என்றுதான் வியக்கத்தோன்றுகிறது.
நான் வாசித்த முதல் மொழி பெயர்ப்பு நாவல் இதுவே. ஆகையால், சற்று மெதுவாகவே ஆரம்பித்தேன். ஒரு ஓவியக் காட்சியை விவரிப்பதாகத் துவங்கும் கதைக்குள்ளாக சில பக்கங்களிலேயே நாம் ஒன்றக் கூடிய வகையில்தான் கதை நகர்கிறது.
கதை சொல்லியான ஓவியன் தொடர்ந்து தன் பால்யத்தின் நினைவில் பயணிக்கிறான். தன் தந்தையின் தொழிலை, தாயின் சுபாவத்தை, தந்தையின் மறு திருமணத்தை, தன் நான்கு சகோதரர்களை, அதில் ஒருவனுக்கு மட்டும் திருமணமானதை, அண்ணன்கள் நாட்டின் பாதுகாப்பு கருதி போர்முனைக்குச் சென்றிருப்பதனை விவரித்து, தானும் தன் மதினியான ஜமீலாவும் கூட்டுப் பண்ணைத் தொழிலில் எவ்வளவு துன்பப் படுகிறார்கள் என்று அவன் சொல்வதாக கதை பயணிக்கிறது.
துன்பங்களுக்கிடையேயும் ஜமீலா தம் குடும்பத்திற்கு நல்ல மாற்றுப் பெண்ணாகவும், போர் முடிந்து வரும் தம் கனவனுக்கு காத்திருக்கும் அபலையாகவுமே காட்சிப் படுத்தப்படுகிறாள்.
இவர்களுடன் சக தொழிலாளியாக பணி செய்யும் முன்னாள் போர் வீரன் தானியாரின் அப்பாவித்தனத்தை நகைத்தலாய் துவங்கி அவனுடைய கருத்து மிக்க பாடல் பாடும் திறத்தில் வியத்தலாக முடிகிறது.
ஜமீலா தானியாரைக் காதலிக்கிறாள். அவனின் அசாத்தியத்தை விரும்புகிறாள். இதுகுறித்து தெரிந்தும் அவர்களின் அன்பை ரசிக்கும் கதை சொல்லியான சிறுவன் தம் கற்பனைத் திறத்தால் ஜமீலாவும் தானியாரும் நெருக்கமாக இருந்த காட்சி ஒன்றை ஓவியமாகத் தீட்டுகிறான்.
சிறுவனான ஓவியன் ஜமீலா சிரித்தால் சிரிக்கிறான்.. அவள் அழுதால் தானும் அழுகிறான்.
இறுதியாக ஜமீலா தானியாருடன் ஊரை விட்டு ஓடிப் போய்விடுகிறாள். அப்போதுதான் கதை சொல்லிக்கு ஜமீலாவின் மீது தான் வைத்தீருந்த காதல் புரிகிறது. பின்னாளில் அவன் ஒரு புகழ் பெற்ற ஓவியனாக வளர்கிறான்.
ஜமீலாவின் வாழ்வை பெண்களுக்கே உரிய கட்டுப்பாடு, கூப்பாடு என குடும்பமும் சமூகமும் அழுத்தினாலும், அவளின் மன எழுச்சியால், சுயமரியாதையால் எப்படி வாழ்கிறாள், முடிவெடுக்கிறாள், பயணப்படுகிறாள் என்பதுதான் கதை.
நல்ல சொல்லாட்சியோடு கதையை மட்டுமல்லாது, கதை மாந்தர்களையும், அவர்களின் நிலத்தையும் பதிவு செய்திருக்கிறார் சிங்கிஸ் ஐத்மாத்தவ். கதையின் சுவை துளியும் குன்றாத அளவிற்கு தம் தேர்ந்த சொற்களால் மொழி பெயர்த்திருக்கிறார் பூ.சோமசுந்தரம் அவர்கள்.