காடு தொலைத்தவன்

காடு தொலைத்தவன்

கவிதை:- சாரா

முதல் நூலை பட்டுப்புழு தருவித்த போது

காடுகள் நீலம் பாய்த்து

ஒரு மஞ்சனத்தி இலைக்குள் சுருங்கிக் கொண்டன

மழையில் நனைந்த இரும்பிலிருந்து

வெளிப்படத் துவங்கிய துருக்களுக்கு

ஆதித்தந்தை தந்த இனிசியல் ”க” வாக இருந்திருக்கலாம்

ஆகாயத் தாமரையின் மீதமர்ந்த

தவளையின் கண்களுக்கு

குளம் பச்சை நிறம், அளவு உள்ளங்கை பொருத்தம்

மான் கொம்புகளின் அடியில் பொருத்தப்படும்

தாமிரக் குப்பியினுள்

கிரீச்சிடும் குளம்படி சத்தம்

காடு தொலைத்தவனின் கனவில்

வளையல் குலுங்க நிறைமாதக்காரி ஒருத்தி

தினமும் கதவைத் தட்டுகிறாள் கொஞ்சம் உறைதயிர் வேண்டி…