இணைய இதழ் 98சிறுகதைகள்

கடைசிக் கேள்வி – உஷாதீபன்

சிறுகதை | வாசகசாலை

எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய்விட்டேன் நான். எங்களூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த ஒரு சிற்றூரின் ரைஸ் மில்லில் பில் போடும் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். அப்போது அது எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையாய் இருந்தது. நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி விடுவேன்.

என்னோடு படித்தவர்கள் எல்லோரும் கல்லூரிக்குப் போய்விட்டார்கள். எனக்கு அந்த வசதி இல்லை. நான் மட்டும் எங்கள் தெருவில் தனித்து விடப்பட்டேன். தன்னுடைய வருமானத்திற்கு அப்பா ஆறு குழந்தைகளைப் அதுவரை படிக்க வைத்ததே பிரம்மப் பிரயத்தனம். அது ஒரு தனிக் கதை.

ஒழுங்காகப் படித்தேனா என்பது வேறு. படித்தேன். மண்டையில் எவ்வளவு நின்றதோ அந்த அளவுக்கு. அதுதான் இந்தச் சினிமாப் பைத்தியம் போட்டு ஆட்டி வைக்கிறதே…! முழுப் பரீட்சைக்கு முதல் நாள் இரவு சினிமா பார்த்தவன் நான். விளங்குமா? பாஸ் பண்ணினேன். பாதிக்குப் பாதி மார்க். அம்புட்டுத்தான்.

எனக்கு காசு வாங்கிக் கொள்ளாமல் கணக்கு சொல்லிக் கொடுத்தார் கிருஷ்ணசாமி வாத்தியார். அது என் அப்பாவின் உழைப்பை நினைத்து, எங்கள் குடும்பத்தை எண்ணி…..அவரது மட்டற்ற கருணை என்னைக் காப்பாற்றியது.

“கஷ்டப்பட்டுப் படிக்கணும்டா….நல்ல வேலக்குப் போயி,சம்பாதிச்சு, அப்பா…அம்மாவ உட்கார்த்தி வச்சுக் காப்பாத்தணும்….” –அன்றைய தாரக மந்திரம் இதுதான்.

பாஸ் பண்ணிட்டியா….போடா…போ…போய் எனக்கு ஒரு இங்க் பாட்டில் வாங்கிண்டு வா…. – இதுதான் அவர் என் மொத்த டியூஷனுக்கும் வாங்கிக் கொண்ட ஃபீஸ்…..அம்மாதிரி ஆசான்களை இன்று எங்கும் காண முடியாது. தெய்வமாய் வணங்க வேண்டியவர்கள்.

ரொம்ப நேரமா யோசிச்சு, கஷ்டப்பட்டுத் தப்பா போடுறீயேடா….என்று சொல்லிக் கொண்டே காதைப் பிடித்துத் திருகுவார்…இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. அந்த உறுத்தலில்தான் பரீட்சை முடிந்த மறுநாள் வேலைக்குப் போனேன் நான்.

நாற்பது ரூபாய் சம்பளத்தில் பத்து ரூபாய் டைப்ரைட்டிங் பள்ளிக்குக் கட்டணமாய்க் கொடுப்பேன். ஐந்து ரூபாய் என் கைச் செலவுக்கு. மீதி இருபது ரூபாயை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எண்ணிச் சுட்டு விண்ணப்பம் என்று ஒரு சொலவடை உண்டு. அம்மா அந்த வருமானத்தை வீட்டின் தேவைக்கு அத்தனை அழகாய்ப் பயன்படுத்துவாள். அதெல்லாம் இன்றிருப்பவர்களுக்கு தலை கீழாக நின்றாலும் படியாது. வாழ்க்கையின் செம்மையை, அதன் நுணுக்கத்தை அப்படி உணர்த்தினார்கள் நம் முன்னோர்கள்.

தட்டச்சுப் பள்ளியின் பிரின்சிபால் “செல்வம்” . அவரின் அன்பு அளப்பரியது. தினம் ஒரு மணி நேரத்திற்குத்தான் ஃபீஸ் கட்டியிருப்பது. ஆனால் அங்கேயே கிடப்பதுதான் என் வேலை. வரும் ஜாப் டைப் அத்தனையையும் அடித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அது அவருக்குப் பெரும் உதவியாயிருந்தது. எனக்கும்தான். சமயங்களில் சினிமாவுக்கு அவரிடமே காசு வாங்கிக் கொண்டு போய் விடுவேன். சொந்த அண்ணன் மாதிரி அவர். பள்ளியே கதியாய்க் கிடந்ததும், தொடர்ந்து தட்டச்சுப் பணியையே செய்து கொண்டிருப்பதும், வரும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதான பழக்கத்தை ஏற்படுத்தியது. இன்ஸ்ட்ரக்டர் ஆனேன். சம்பளமில்லாத வேலைக்காரனாய் இருந்தேன். மனமொன்றிக் கிடந்த காலம். வீடு…வீடு விட்டால் இன்ஸ்டிட்யூட். இவ்விரண்டு இடங்களில்தான் என்னைப் பார்க்கலாம்.அந்த நடைமுறை தட்டச்சு ஆங்கிலம், தமிழ்த் தேர்வுகளைச் சுலபமாய்த் தேர்ச்சி பெறுவதற்கு எனக்கு வழி வகுத்தது.

அப்போதே எங்களூர் குட்டி நூலகத்தில் சென்று படிப்பது என்பது எனது மற்றும் நண்பர்களின் வழக்கமாயிருந்தது. நாங்கள் முதலில் தேடிப் படிப்பது தினத்தந்தி “சிந்துபாத்” சித்திரக் கதைதான். இது இளம் பிராயத்திலிருந்தே ஆரம்பித்த வியாதி. ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார். பிறகு அங்கு புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தோம்.

அக்ரஹாரத்தின் பல வீடுகளின் லைப்ரரி டோக்கன்கள் எங்களிடம்தான் இருக்கும். அப்போதிருந்த நூலகர்களுக்கெல்லாம் தான் பணியாற்றும் நூலகத்தில் எந்தெந்த எழுத்தாளர்களின் நூல்கள் என்னென்ன இருக்கின்றன என்பதெல்லாம் மனப்பாடமாய்த் தெரியும். ரேக்கில் அடுக்கியிருப்பவைகளில் எந்த வரிசையில், எத்தனாவது புத்தகமாய், என்ன எண்ணோடு அவை வீற்றிருக்கும் என்பதைத் துல்லியமாய்ச் சொல்லும் சாதுர்யம் அவர்களிடம் இருந்தது. அத்தனை அர்ப்பணிப்பு. கேட்லாக்கில் தேடி, வரிசையாய், ஒவ்வொரு எழுத்தாளராய் எடுத்துப் படித்திருக்கிறோம்.

அந்த நாட்களிலேயே அதாவது அறுபத்தியேழுக்குப் பிறகான காலங்களில் என் அண்ணா மூலமாய் எனக்கு அறிமுகமானது நா.பா. அவர்களின் “தீபம்” இலக்கிய இதழ். நான் ஐந்து இதழ்கள் வாங்குவேன். அந்த இதழ்களுக்கான தபாலோடு போஸ்டரும் வரும். எப்படியோ ஒரு தட்டி ஏற்பாடு செய்து, அதில் அந்தச் சின்னப் போஸ்டரை ஒட்டி மாடியில் எல்லோர் பார்வையிலும் படும்படி தொங்க விட்டேன் நான். தீபத்தின் வாசகன் நான். எங்களூர் ஏஜென்ட். அவ்வளவு பெருமை.  ஒன்றை மட்டும் எனக்கு வைத்துக் கொண்டு மீதி நான்கை. நண்பர்களுக்குக் கொடுத்து விடுவேன். அது நான் படித்த தட்டச்சுப் பள்ளியில் நிகழ்ந்தது. அங்கு படிக்க வந்த மாணவர்கள் சிலர் அந்தப் பழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். தீபம் இதழில் பின்னாளில் என்னுடைய ஓரிரு கவிதைகளும் பெரிய அளவிலான துணுக்குகளும் வந்திருக்கின்றன. அதில் வல்லிக்கண்ணன் எழுதிய “சரஸ்வதி காலம்“ என்ற தொடரை எடுத்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன் நான்.

நா.பா.வை நினைக்கும்போது சி.சு.செ.யை நினைக்காமல் முடியாது. அதைத் தனிப் பத்தியாகத்தான் எழுத வேண்டும். இங்கே சொல்ல வந்தது எப்படி சுதாரித்து மேலே வந்தேன் என்ற கதையை. காசு…துட்டு…மணி…மணி……

உங்கள் கதை என்ன அவ்வளவு முக்கியமானதா என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நிச்சயம் முக்கியமானதுதான். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் காலூன்றுவதற்கு எல்லோருமே இளம் வயதில் சுதாரித்தாக வேண்டும் என்பதுதான் உண்மை. அது என் தந்தையிடமிருந்து, தாயாரிடமிருந்து எனக்குப் படிந்தது.

சுருக்கெழுத்து படித்தேன். பெரியகுளம் சென்டரில் தேர்வு எழுதப் போன போது அங்கிருக்கும் சினிமாத் தியேட்டரே மனதில் நின்றது். ரிசல்ட்? அதைச் சொல்ல வேறு வேண்டுமா?

ஒரு கட்டத்தில் மதுரைக்குக் குடி பெயர்ந்தோம் நாங்கள். என் அண்ணா மூலம் அங்கு ஒரு மிகப்பெரிய தட்டச்சுப் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. நான் முதன் முதல் பேண்ட் அணிந்து போனது அங்கேதான். அதுவும் சொந்தமாய் எனக்கே எனக்கு என்று தைத்த பேண்ட் அல்ல. அண்ணாவின் பேண்ட் எனக்குப் பொருத்தமாய் இருந்ததால் அதை அணிந்து கொண்டு போனேன். புதிதாய் பேண்ட் போட்டுக் கொண்டவன் என்று யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். அது நாற்பது மிஷின்கள் இருக்கும் பெரிய தட்டச்சுப் பள்ளி. அதுக்கு நான் இன்ஸ்ட்ரக்டர். நான் அங்கே பயிற்றுவிப்பாளனாக சேர்ந்த பிறகு ரிசல்ட் சதவிகிதம் கூடியது. அது பிரின்ஸிபாலுக்கு. மகிழ்ச்சியைத் தந்தது.  மதுரைக்கு சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பாதிக் கட்டணம் அறிவிக்கலாம் என்று ஒரு யோசனையை அமுல்படுத்தினோம். கூட்டம் எகிற ஆரம்பித்துவிட்டது. எக்கச் சக்கமான மாணவர்கள் சேரப் போக, ஷிப்ட் முறையில் பணியாற்ற இன்னொருவரை வேலைக்கு நியமிக்க வேண்டியிருந்தது. அப்படி என்னோடு வந்து சேர்ந்தவர்தான் நண்பர் ராஜகோபால். அவர் இப்போது இல்லை. எனக்கும் அவருக்கும் ரொம்பவும் ஒத்துப் போனது. நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பள்ளியை உச்சிக்குக் கொண்டு போனோம். எங்களிடம் முழுப் பொறுப்பையும் விட்டு விட்டார் முதல்வர். அர்ப்பணிப்போடு வேலை செய்தோம்.

காலம் இப்படியே போய்விடுமா? இது போதுமா என்கிற கேள்வி விழுந்தது. சட்டென்று சுதாரித்து சுருக்கெழுத்தை மீண்டும் கையிலெடுத்தேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அசுரத் தனமாய் உழைத்து, மேல்நிலை (Higher Grade) வெற்றி பெற்றேன். பிறகு அதே பள்ளியில் சுருக்கெழுத்திலும் பாடம் எடுக்க ஆரம்பித்தேன்.

வெறும் எஸ்.எஸ்.எல்.சி.யை வைத்துக் கொண்டு குப்பை கொட்ட முடியாது என்ற உறுத்தலில் நான்கு Higher Grade-களை (தட்டச்சு மற்றும் ஆங்கிலம்) கல்வித் தகுதியாகச் சேர்த்துக் கொண்டு சர்வீஸ் கமிஷன் எழுதினேன். அப்போது சுருக்கெழுத்துக் கல்வி மதிக்கப்பட்ட காலம்.

இந்தத் தட்டச்சுப் பள்ளியில் பணியாற்றி வந்த காலத்தில் இடையிடையில் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச் நியமனத்தில் இன்டர்வியூ சென்று வந்த நான் சுமார் ஐந்தாண்டு காலம் அரசு அலுவலகங்களில் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றேன். கடைசியாக நான் வேலை பார்த்தது தமிழ்நாடு பூமிதான வாரியம். பின்னர் அது R.D.L.A. டிபார்ட்மென்டோடு மெர்ஜ் செய்யப்பட்டது. அங்குதான் என் அனுபவம் என்னை மிகுந்த தகுதியுள்ளவனாக ஆக்கியது.

வெள்ளைக்காரக் கலெக்டரிடம் பி.ஏ.வாக இருந்து அனுபவம் பெற்ற தமிழ்நாடு பூமிதான வாரியத்தின் சேர்மனான திரு பூபதி அவர்களிடம் சுருக்கெழுத்தாளனாகப் பணியாற்றிய அனுபவம் என்னைப் புடம் போட்டிருந்தது. சர்வீஸ் கமிஷன் வேலை கிடைத்ததும், என்னை விடமாட்டேன் என்று சொல்லி பயமுறுத்தினார் அவர். என் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரோடு தமிழ்நாடு முழுவதும் விடாமல் முகாம் சென்ற அனுபவம் எனக்கு. கையில் ஒரு போர்ட்டபிள் டைப்ரைட்டரோடு பின்னாலேயே அலைந்து கொண்டிருப்பேன். இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பேன். அந்த அளவுக்கான கடுமையான உழைப்பு இன்று எங்கே போனது என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.

ஒரு முறை மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த கவர்னரின் ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நோட்ஸ் எடுக்கும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. சேர்மனோடு சென்று திறம்பட கவனமாய் அந்தப் பணியை முடித்துக் கொடுத்தேன். எல்லாம் இறைவன் சித்தம்.

அது கவர்னர் ஆட்சிக் காலம்.. அப்பொழுதுதான் டி.என்.பி.எஸ்.ஸி. ரிசல்ட் வந்தது. 1976. முதன் முறையாக நாளிதழில் க்ரூப் 4-ன் ரிசல்ட்களை வெளியிட்டது அரசு. நம்பிக்கையோடு என் எண்ணைத் தேடினேன். கிடைத்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி அது. ஸ்டெனோகிராபர் அப்பாய்ன்ட்மென்ட் கைக்கு வந்தது.

சாதாரண அறிவுள்ளவன்தான் நான். சராசரிக்கும் கீழானவன். ஆனால் என்னை உயர்த்தியது எனது உழைப்புதான். நம்பிக்கையோடு முடியும் என்று எண்ணி இறங்கி அதற்காகக் கடுமையாக உழைப்பது என்பது என் பழக்கமாய் இருந்தது. அது என் குணாதிசயங்களில் ஒன்றாகப் படிந்திருந்தது.

கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு. அரைக் காசானாலும் அரசாங்கக் காசு….

அது கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று நான் பயந்ததுதான் எனக்கு ஏற்பட்ட வெறி. எனது உழைப்புக்கும் வெற்றிக்கும் காரணம் அந்த பயம் தந்த வெறிதான். வெறும் எஸ்.எஸ்.எல்.சிக்கு இது போதாதா? போதும்தான். அது எப்படி வெறும் எஸ்.எஸ்.எல்.சி ஆகும். அப்பா அதற்காக எவ்வளவு உழைத்து தன் வியர்வையைச் சிந்தியிருக்கிறார். அது இமாலய சாதனையல்லவா? அதை அத்தனை சுலபமாய்ச் சொல்லி விட முடியுமா? அவர் உழைப்பை மதிக்காமலா?

சம்பாத்தியத்திற்கு ஒரு நிரந்தர வேலையைத் தேடி, வீட்டிற்கு உதவுபவனாய் வாழ வேண்டும் என்கிற வெறியே என்னை அங்கு கொண்டு நிறுத்தியது.

வாங்கும் சம்பளத்தில் மிகச் சிறு தொகையை என் செலவுக்கு வாங்கிக் கொண்டு மீதியை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எனக்கு அது போதும் என்று நினைத்தேன். அதிக பட்சம் என் செலவு ஒரு சினிமா. சில பத்திரிகைகள். வேறு மாதிரிக் கன்னா பின்னாவென்றெல்லாம் செலவு செய்யத் தெரியாதவன். அதிகமாய்க் காசு கையிலிருப்பதை இடைஞ்சலாய் உணர்பவன். பொறுப்பு விட்டது என்று அம்மாவிடம் கொடுத்து விடுவதே என் வழக்கமாய் இருந்தது. அம்மா பெண்டுகளின் திருமணத்திற்குச் சேர்த்தாள். பார்த்துப் பார்த்துப் பாத்திரங்கள், நகைகள் என்று சேமித்தாள். தங்கைகளின் திருமணம் முடித்துதான் என் திருமணத்தைப் பற்றியே யோசித்தேன் நான். அப்படித்தான் என்று அம்மாவிடம் சொல்லியிருந்தேனே…!

திருமணம் ஆன பின்னால் என் மனைவி கேட்டாள். “ஏதாவது சேமிப்பு வச்சிருக்கீங்களா?”

அவளின் முதல் பேச்சு அது…!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button