கராமத்துகள் எனும் அற்புதங்கள்

கராமத்துகள் எனும் அற்புதங்கள்

சிறுகதை:- ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

தைக்காப்பள்ளி களை கட்ட ஆரம்பித்து விட்டது. இனி பத்து நாட்களுக்கு ஊரே இங்குதான் குழுமிக்கிடக்கும். ரபியுலாகிர் பிறை ஒண்ணுக்கு (இஸ்லாமிய மாதங்களில்  நான்காவது மாதம்) முஹையதீன் ஆண்டவர் பள்ளி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றதுடன்  சந்தனக்கூடு உரூஸ் விழா ஆரம்பிக்கும். பத்து நாட்களும்  இரவு முழுக்க தினமும் முஹையதீன் பள்ளியில் மவ்லீது ராத்தீப்  (புகழ் பாடல்) ஓதுவார்கள். ஒன்பதாவது நாள் இரவு  குத்துராத்தீப் விடிய விடிய  நடக்கும். இதுதான் மிகப்பிரதான நிகழ்ச்சி.  சுற்றியுள்ள பதினெட்டு தெருவாசிகளும் மட்டுமல்ல, இதுக்காகவே வருஷா வருஷம் அக்கம்பக்கத்தினர் மட்டுமல்ல வெளி மாவட்டங்களிலிருந்தும்,  கூட மக்கள் வந்து சேர்ந்து விடுவார்கள்.  அத்துமுனாவின் ஒட்டு மொத்தக் குடும்பமும் இங்கு தவறாமல் வந்து சேர்ந்துவிடும். முஹையதீன் ஆண்டவர் இஸ்லாத்தைப்  பரப்பிய அந்தக் காலகட்டத்தில் இங்கு வந்து தங்கியிருந்ததாகவும், அந்த இடத்தில்தான்  இந்தப் பள்ளி கட்டப்பட்டதாகவும் ஒரு வரலாற்றுக் கதை உண்டு.  அத்துமுனா குடும்பத்தினர் இங்கு ஆண்டுதோறும் வருவதற்கு  மலங்குஷா ஒலியுல்லா தர்ஹாவும் ஒரு காரணம். முஹையதீன் ஆண்டவர் பள்ளிக்கு பின்புறம் உள்ள குளத்துக்கு அந்தப்பக்கம் மேட்டின் மீது உள்ளது மலங்குஷா ஒலியுல்லா தர்ஹா.

வலிமார்கள் என்பவர்கள் இறை நம்பிக்கையிலும்  பக்தியிலும்    தீர்க்கமானவர்களாகத்  திகழ்ந்து  திருக்குரானையும்  ஹதீஸையும்  மிகத்துருவித்  துருவி  ஆராய்ந்து அந்த நெறியிலிருந்து  பிறழாது  தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். அவுலியாக்கள் என்று சொல்லப்படும் ஒவ்வொரு வலிமார்களும் இஸ்லாத்தை பரப்புவதற்காகவே பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்து பலவிதமான கராமத்துகளை (அற்புதங்கள் ) நிகழ்த்துகின்றனர்.. இந்த ஆற்றல் இறைவனால் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த அற்புதங்களை வெளிப்படுத்தும் சக்தியை அவர்கள் அவசியம் நேர்ந்தாலன்றி வெளிப்படுத்துவதில்லை. வல்ல இறைவனின் பெருமாண்புகளையும் , மார்க்கத்தின் உன்னதத்தையும், உயர்வையும் மற்றவர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டும் விதத்திலேயே பல வலிமார்கள் அற்புதம் எனும் கராமத்துகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்த வழியில் இஸ்லாத்தைப்  பரப்ப வந்த சூஃபி ஞானியான இறை நேசர் மலங்குசா ஒலியுல்லா இந்தப்பகுதியில் தங்கியிருந்தபோது கராமத்துகள் என்று சொல்லப்படும் சில  அற்புதங்களை  நிகழ்த்தியிருக்கிறார். மக்களின் துன்பங்களை, பிணிகளை போக்கும் விதமாக மக்களுக்கு உதவும் விதமான இந்த அற்புதங்கள்  மக்களைப் பெரிதும் கவர்ந்தது மட்டுமல்ல  இஸ்லாத்தின் பக்கம் அவர்களை ஈர்த்தும் இருக்கிறது. இப்படியாக அவர் இங்கேயே கடைசி வரை தங்கி வாழ்ந்து வந்ததால் இந்தப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டு பின்னர் தர்ஹா கட்டப்பட்டு அவுலியாவாக கொண்டாடப்பட்டு வருகிறார். தர்ஹா கட்டப்பட்ட  நாளிலிருந்தே   பெரும் எண்ணிக்கையில் மக்கள் நேரில் வந்து தரிசித்துச் சென்றிருக்கின்றனர் .  இன மத பேதமின்றி நாள் முழுக்க  தர்ஹா தரிசனத்திற்கு பல இடங்களிலிருந்தும் மக்கள் இப்போதும் வந்து கொண்டேருப்பது தர்ஹாவின் மகிமைக்கு சான்று. நோய்பிணிகளால் பாதிக்கப்பட்டோரும், நியாயம் கிடைக்காமல்  மனம் உடைந்தோரும், மன நலம் பாதிக்கப்பட்டோரும்  மலங்குஷா அவுலியா தர்ஹாவுக்கு வந்து ஜியாரத்  செய்து  நேர்ச்சை செய்து கொண்டால்  அது மலங்குஷா அவுலியாவின் ஆசியினால் இறைவனின் புறத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்பது  இங்கு வரும் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது .

அத்துமுனாவின்  பெத்தாப்பா (இவர் அத்துமுனாவோட- உம்மாவின் வாப்பா) வழி பரம்பரைக்  கதை இது. இவர்களின்  முன்னோர்கள் ஒலியுல்லாவுக்கு வழங்கிய இடம் இது என்பதால்   அவருடைய வாப்பாவின் வாப்பாவோட காலத்திற்கும் முன்பிருந்தே இவர்களுக்கு பாத்தியப்பட்ட (உரிமை) தர்ஹாவாகியிருக்கிறது.           மற்ற தர்ஹாஹ்களில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சந்தனகூடு உருஸ் விழாபோல இங்கு நடத்தப்படுவதில்லை. இது கொஞ்சம் வித்தியாசமான உரூஸ்! எல்லா நாட்களிலும் ஜனங்கள் வந்து கொண்டேயிருப்பார்கள் . முகையத்தீன் ஆண்டவர்  பள்ளி  உரூஸ்  நடக்கும்போது  கூட்டம்  அதிகரிக்கும். பெத்தாப்பாவின் வாப்பா காலத்திற்குப் பிறகு அவரின் அண்ணன் மற்றும் தம்பி மக்கள் இப்போது  இந்த தர்ஹாவை நடத்தி வருகிறார்கள். ஆண்டு முழுவதும் பாத்திஹா, நேர்சை  என கூட்டம் வந்துகொண்டே இருக்கும். பெத்தாப்பா இறப்புக்குப் பிறகு நடக்கும் உரூஸ் விழா என்பது மட்டுமல்ல , சில வருடங்களுக்குப் பிறகு அத்துமுனா கலந்து கொள்ளும்  விழா என்பதாலும் . இஸ்லாத்துக்கு மாற்றமாக குல தெய்வ வழிபாட்டு முறை போல நடக்கும்  ஒரு விழா என்பதாலும்  இப்போது நிறைய எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன்  முன் கூட்டியே  குடும்பத்துடன் கிளம்பியிருந்தான்  அத்துமுனா.   உம்மாவும்  ஒரு நேர்ச்சைக்கு நிய்யத்து (வேண்டுதல்) செய்திருந்தது.

தர்ஹாவுக்கு ஏகப்பட்ட  வாரிசுகள் உண்டு. நேரடி வாரிசுகளுக்கு  வருஷம்  முழுவதும்  தர்ஹாவைப் பார்த்துக் கொள்ளும் உரிமையும், அண்ணன் மற்றும்  தம்பி  மக்களுக்கு ஆறு மாதம்,மூன்று மாதம்  என்றும்  ஒரு சிலருக்கு நாற்பது நாட்கள் மட்டும் என்ற கணக்கில் பார்த்துக்கொள்ளும் உரிமை வழிவழியாக  நடைமுறையில் உள்ளது. பெத்தப்பாவுக்குத்தான்  அதிக காலம் வரும் .  இது எதுவும் எழுதி வைக்கப்பட்டதல்ல. அப்போது  உண்டியலில்  விழும் பணம்  நேர்சைக்கு, பாத்திஹாவுக்கு வருபவர்கள் கையில்  தனியாக கைமடக்கும் (தட்சணை) பணம் என தர்ஹாவுக்கு வரும் வருமானம் முழுவதும் அந்தந்த  குடும்பங்களுக்கே சேரும். அது போக ஆடு , கோழி, சுவர் கடிகாரம், அவுலியாவுக்குப்  போர்த்தும்  ஜாரத்  துணி,  வெள்ளிக்  குத்து விளக்குகள் என எப்போதும் வந்து குவியும் நேர்ச்சைப் பொருட்களும் அவர்களுக்கே.  மலங்குஷா  அவுலியாவிடம் நேர்ச்சை செய்து கொண்டால் உடனடியாக அது  இறைவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு  நிறைவேறிவிடும். அவ்வளவு பெயர் பெற்ற  கார்ணிக்கம் உள்ள  தர்ஹா  இது என்பதாக வழி வழியாக வரும் நம்பிக்கையாக இருக்கிறது.  ஆண்டு முழுவதும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு வருமானம் வருவதாக உறவினர் மத்தியில் பேச்சு உண்டு. இதன் காரணமாகவே தர்கா வாரிசுகளுக்கு மத்தியில் எப்போதும் போட்டி பொறாமை இருந்து கொண்டே இருக்கும் . சில சமயம் பணப் பிரச்சனைக்காக சண்டை கூட நடக்கும். இதனால்   உண்மையான வருமானத்தை யாரும் சொல்ல மாட்டார்கள் .  தர்ஹா வாரிசுகள் யாரும் எப்போதும் உண்மையை ஒத்துக்கொள்ளுவதில்லை. “என்னத்த வருமானம் வருது !  வேல பொழப்ப உட்டுட்டு வந்து உக்காந்து சப்புடுறோம் அதுதா மிச்சம் …” என்பார்கள் சொல்லி வச்ச மாதிரி எல்லோரும் ஒரேமாதிரியாக .! ஆனாலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாரிசுகள் மாறி மாறி தர்ஹாவில் வந்து உட்கார்ந்து வருமானமாக நிறைய  சம்பாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் !  அத்துமுனாவின்  பெத்தாப்பாவான  தைக்கா  மொகம்மது அலி ராவுத்தருக்கு ஆறு மாசத்துக்கு இந்த தர்ஹா உரிமை கிடைக்கும்.  தைக்கா பெத்தாப்பாக்கு ஓத, படிக்கத்தெரியாது. பெத்தாமா வீமா பீவிதான் நேர்ச்சைக்கு வருபவர்களுக்கு பாத்திஹா ஓதும். இவர்களுக்கு ஏழு பெண்மக்களும், ஒரே பையனுமாக வாரிசுகள். அத்துமுனா சின்னவனாக இருக்கும் போதே    கிடைத்த மாப்பிளைகளுக்குக் கட்டிக்கொடுத்து எல்லோரையும் கரை சேர்த்திவிட்டார்  தைக்கா பெத்தாப்பா  . கடைசி சின்னமாக்கள் இரண்டுபேர்களின்  கல்யாணங்களுக்குச் சென்றதுதான் அவனுக்கு ஞாபகம் உள்ளது.  மாமாவின் கல்யாணம் அத்துமுனா பெரியவனான பிறகுதான் நடந்தது. .

தைக்கா வரும் இந்த காலங்களில் ஒவ்வொரு குடும்பமாக இங்கு வந்து   வாப்பா, உம்மாவுடன் தைக்காப்பள்ளியில் தங்கி வருவார்கள். தினமும் கறியும் சோறுமாய் தைக்காவில் விருந்துதான். தர்காவுக்கு பின் பக்கம் ஒரு  சின்ன அறையில்தான் சமையல் நடக்கும். இரவு படுக்கை தர்ஹாவின் வெளி பிரகாரத்தில். கிளம்பி வரும்போது வருமானத்தில் பங்கு கேட்டு ஒரு சண்டை நடக்கும்.பெரும்பாலும் இந்த சொத்துப் பிரச்சனை கடைசி இரண்டு பெண் மக்களால்தான் ஏற்படும். “தைக்கா பணத்த திங்க எங்களுக்கு உரிமை இல்லையாக்கும்…?” என்று பேச்சு வாக்கில் ஆரம்பித்து ,“எங் கலியாணத்துக்கு அப்பிடி என்னத்த செஞ்சு கிழிசுட்டிங்க….பத்து பவுனு நகய மட்டும் போட்டு கட்டிக்கொடுத்துட்டா போதுமாக்கும்.?”’ கடைசிப்பெண் ஜென்னத்து  வெளி வாசலில் உட்கார்ந்து கொண்டு ஆரம்பிக்கும். தினம் தினம் வரும் வருமானத்தை உம்மா சுருட்டி சுருட்டி  இடுப்பு பைக்குள் வைப்பதைப் பார்க்க பார்க்க   ஜென்னத் சின்னம்மாவுக்கு  உள்ளுக்குள் ஒருவித ஆவேசம் பொங்க ஆரம்பிக்கும். இவ்வளவு பணம் வருதே….. போகும் போது வாப்பா எதாச்சும் தரும் என்கிற எதிர்பார்ப்பு  ஏமாற்றமளிக்கும் போது  வரும் கோபம் இது.

“ஏளா…! இப்பிடி வீதில உக்காந்துக்கிட்டு  கத்துறே …..?.” பெத்தாமவுக்கும்  கோபம்  வந்து விடும். “ஆமா நா அப்பிடிதா கத்துவே …”  தர்ஹா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு  உம்மாவும்  மகளும் மாறி மாறி  கத்திக்கொள்ள  “அவுலியாக்குற தர்காவுல உட்காந்துக்கிட்டு உம்மாவும் மொவளும் போடுற சண்டயப்பாரு…” என்றவாறு தெருவில் போவோர் வருவோரெல்லாம் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்வார்கள்.   தார்ஹாவுக்கு  அடுத்த ஆள் வரும் வரை  இந்த கூத்து தொடரும். மக்கள் பயபக்தியுடன் நேர்ச்சை செய்ய வந்து போகும் அவுலியா அடங்கப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் பணத்துக்காக போடும் சண்டை அத்துமுனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் பெத்தாப்பாவும்  பொண்ணுகளை திட்ட ஆரம்பித்துவிடுவார். “இனி தக்யாப் பக்கமே  வரமாட்டோம் ..” என சவால் விட்டு பெத்தப்பாவின்  கடைசி ரெண்டு பெண்களும் உடனே புறப்பட்டு விடுவார்கள். ஆனால், தைக்கா கெடு முடிவதுக்குள்ளாகவே  மறுபடி வந்து  ஒட்டிக்கொள்வார்கள். ஆண்டு தோறும் இந்த சடங்கு விடாமல்  நடக்கும். பெத்தாப்பா இல்லாத  இன்றைய நிலையில் இப்போதும் இந்தக் கூத்துக்கள் நடக்கிறதா… ? பெத்தப்பாவுக்கு பதில்  அவருடைய ஒரே மகன் அத்துமுனாவின் மாமாதான்  வாரிசு . இப்போது அவர்தான்  தர்ஹா பார்க்கிறார் . இவர் சண்டை சச்சரவு இல்லாமல்   அக்கா , தங்கைகளுக்கு  பணம்  கொடுக்கிறாரா…இவையெல்லாம் காண அத்துமுனா  ஆவல் கொண்டிருந்தான்.

ரஃப்யூலாகிர்   பிறை பிறந்தவுடன் ஃபாத்திஹா ஓதி கொடி ஏற்றும்  நிகழ்வு நடக்கும். அதில் தர்ஹாவுக்கு பாத்தியப்பட்ட பெருசுகள் மட்டுமே வந்து கலந்து கொள்ளுவார்கள். அத்துமுனாவின் பெரீமாவும், அனீபா ராவுத்தரின் மனைவியுமான உம்ஸல்மா தைக்கா குடும்பத்துப் பெண் என்பதால் குத்துராத்தீப்  நடக்கும் அன்று காலையே அத்துமுனாவின் பெரியாப்பா அனீபா ராவுத்தர் தலைமையில் ஒட்டு மொத்த குடும்பங்களும் கோவையிலிருந்து புறப்பட்டு விடும். எல்லோரையும் ரயிலில்தான்  அழைத்துச்செல்வார் அனீபா ராவுத்தர். போத்தனூரிலிருந்து  புதுநகரம் வழியாக ஒலவக்கோடு வரை செல்லும் கரி இஞ்சின் பாசஞ்சர் வண்டி அது. ஜன்னலோர  இருக்கையில்  உட்கார்ந்து கொண்டு ரயில் செல்லும்  திசையில்  வேடிக்கை பார்த்துக்கொண்டே வருவதை மிக விருப்பமாக கொண்டவன் அத்துமுனா. முதல் ஆளாக ஏறி ஜன்னலோர இருக்கையைப் பிடித்துக்கொள்வான். வளைவுகளில் ரயில் திரும்பும் போது காற்றில் பரவி வரும் கரித்துகள் , எட்டிப் பார்த்துக்கொண்டே வரும் அத்துமுனாவின் கண்களில்  பட்டு விடும். வாப்பாவிடம் அடி வாங்கும் வரைக்கும்  கண்களைப்போட்டு கசக்கோ கசக்குனு கசக்குவான். எரிச்சலும் நிற்காது. கடைசியில் வாப்பாவிடம் அடி வாங்குவதுதான்   மிச்சமாகும். ஒவ்வொரு முறையும் ரயிலில் போகும்போது  ரயிலின் கரித்துகள்   அத்துமுனாவின்  கண்களில் விழுவதிலிருந்து அவனால்  பாதுகாத்துக்கொள்ளவே       முடிந்ததில்லை.  அடி வாங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவாவது எட்டிப்பார்க்காமலேயே வருவான். சரியாக வளைவில் எட்டிப்பார்த்து  கண்களில் கரித்துகளை    வாங்கிக்கொள்வான்.  அவனைப்பொருத்த வரை ரயில் பயணங்களில் இது தவிர்க்க முடியாத சங்கதியாகிப் போனது. சில சமயங்களில்  இதற்காகவே அவனை ஜன்னலோரத்தில் உட்காரவே விடமாட்டார் வாப்பா. அழுது அடம் பிடித்து உட்கார்ந்து  அடி வாங்குவதே  அவனுக்கு விதியாக இருக்கும் போது அதை தடுக்கவோ, நிறுத்தவோ கடைசி….வரை…முடிந்ததே..இல்லை .

அந்த சின்ன ரயில் நிறுத்தத்திலிருந்து  ஒரு கிலோ மீட்டர்  தூரம் நடக்கவேண்டும். முகைதீன் ஆண்டவர் பள்ளிக்கு அருகிலேயேதான் குடியிருப்பு வீடுகளும். ஒவ்வொரு குடும்பமும் அவரவர்  உறவினர் வீடுகளில் தங்கிக் கொள்வார்கள். என்ன ஒரு பிரச்சனை என்றால் சரியான சாப்பாடு கிடைக்காது ! நேரத்துக்கு எதையோ ஆக்கிப்போடுவார்கள். கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடவேண்டும். வேறு வழி…  சில சமயங்களில் அதுவும் இருக்காது.  தர்ஹாவிலிருந்து வரும் சீரணிச்சோறுதான் (பிரசாதம்)  உணவாகத்தரப்படும்.  பசியில் ருசி எதுவும் தெரியாததால், அது பாட்டுக்கு உள்ளே இறங்கி விடும். இங்கு நல்ல ஹோட்டல்களும் கிடையாது. பெட்டிக்கடை போல இரண்டு கடைகள் உண்டு. காலையில் காஞ்சு போன இட்டிலியும், குழாப்புட்டும் கிடைக்கும். மதியத்துக்கு ஆப்பம்.  அதுவும் எப்போதோ சுட்டு காஞ்சு போனதாத்தான் இருக்கும்.. “காசக்கொடுத்து அத சாப்பிடுறதுக்கு ,  இந்த சீரணி சோத்தையே சாப்பிட்டுடலாம். “ என்பதாக கோயமுத்தூரிலிருந்து வந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்.  இங்கிருந்து  இரண்டு கிலோ மீட்டார்  தூரத்தில்  இருக்கும் தத்தமங்களம் வரைக்கும்  நடந்து போனால் மதிய நேரத்தில் மீன் குழம்புடன் சோறும், புரோட்டாவும் கிடைக்கும். இளைஞர்கள் சிலர் நடந்து போய் சாப்பிட்டு வருவார்கள். சாயங்காலம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பிக்கும். அதுவரை அமைதியாக கிடந்த சுற்றுப்புற  காடுகளும்  மோந்தி நேரம் ஆகிவிட்டதும்  கூடு திரும்பும் பறவைகளின் களேபரத்தால் உயிர் பெற்று விடும் !  பறவைகளின் வித விதமான குரல் ஒலிகளால் அந்த இடமே ஒருவித ரம்மியமான அழகு மிக்க சூழலை உருவாக்கிவிடும். சிறுவர் சிறுமிகளின் உற்சாக விளையாட்டும் கூக்குரலும் பள்ளியைச் சுற்றிலும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

மோந்தியானவுடன் கிணற்றடியில் வாளி இரைக்கும் சத்தமும் , சலசலப்புமாக பெண்கள் ஒளுவெடுக்க (முகம் ,கை ,கால்கள் கழுவி  சுத்தம் செய்வது ) ஆரம்பித்து ஒவ்வொருவராக பள்ளிக்கு வரத்துவாங்கி விடுவார்கள்.  அந்தி சாய்ந்தவுடன் முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிக்கு  சாம்பிராணி புகையும், ஊதுபத்தி மணமுமாக ஒருவித அமானுஷ்ய‌ தன்மை வந்துவிடும்.  பெண்களெல்லாம் வந்து குழுமி உட்கார்ந்து முக்காடு போட்டுக்கொண்டு யாஸீன்  (குரானில் ஒரு முக்கிய அத்தியாயம் )  ஓத ஆரம்பித்து விடுவார்கள். வெளியே கொடிமரத்தின் அடியில் மேளக்காரர்கள் வந்து ,செண்டை மேளம் அடிக்க ஆரம்பித்தவுடன்  ராத்தீஃப் களைக்கட்டி விடும். பள்ளிக்குள் யாஸீன் ஓதிக்கொண்டிருக்கும் பெண்களெல்லாம் வேக வேகமாக ஓதி முடித்து, ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் உட்காருவதுக்கு இடம் பிடிக்க முண்டி  அடிப்பார்கள். சிறுவர்கள் கொடிமரத்தடியில் முன்புறமாக வந்து அமர , ஆண்களும் இடத்தை ஆக்கிரமிப்பார்கள்.

கொடி மரத்தின் அடியில் பெரிய  குத்து விளக்கு ஏற்றப்படும். நேர்ச்சை செய்தவர்கள் அதில் பாட்டில் பாட்டிலாக எண்ணெய் கொண்டுவந்து ஊற்றிக்கொண்டே இருப்பார்கள். பல எண்ணெய் கலந்த குத்து விளக்கு எண்ணெயை பலாய் முஸீபத்துகளையும் நீக்க வல்ல எண்ணெயாக – வலி நிவாரணியாகக் கருதி தர்ஹாவுக்கு வரும் பெண்கள் பிரசாதம் போல  தங்கள் பாட்டில்களில் ஊற்றி எடுத்துச் செல்வார்கள். நேரம்  செல்லச் செல்ல பக்கீர்ஷாக்களின் “ ஹூ அல்லாஹ் ….ஹூ ..ஹூ ..அல்லாஹ் …..ஹூ அய்யூப் …ஹூ ..ஹூ அய்யூப் ….”  .என்கிற ஓங்கார ஒலியுடன்  தைராக்களி உச்சமாகும். விளக்குகள் அணைக்கப்பட, தைராக்கொட்டின் ஓசை மட்டும் நிசப்தத்தை குலைத்தவாறு மூங்கில் காடுகளிலெல்லாம் எதிரொலிக்கும். சில நிமிட அமைதிக்குப்பிறகு பக்கீர்ஷமார்கள் ஒவ்வொருவராக தங்களின் கராமத்து நிகழ்த்துக்  கலைகளை ஆரம்பிப்பார்கள். ஒருவர் கூர்மையான ஆயுதத்தை உச்சந்தலையில்  வைத்து  சுவற்றில் ஆணி அடிப்பதைபோல சுத்தியால் அடித்து மண்டைக்குள் இறக்குவார். துளி ரத்தம் வராது ! பின்பு அந்த ஆயுதத்தை அப்படியே லாவகமாக உருவி எடுத்து விட்டு , கொஞ்சம் சாம்பிராணியை எடுத்து ஓட்டையை அடைப்பது போல அப்புவார்! இதே போல இன்னொருவர் கண்ணைக் குத்தி பிதுக்கி வெளியே எடுப்பார். கூட்டம் பிரம்மித்துப்போய்  பரவசமும் பயமுமாக வச்ச கண்  வாங்காமல்   ஆச்சரியம் விளகாமல் சொக்கிக்கிடக்கும். இடையிடையே காசு வசூலும் நடக்கும் . முஹையத்தீன் ஆண்டவர் பெயரை சொல்லி அவர் அருளால் நடக்கும் இந்த கராமத்துகள் நள்ளிரவு வரை நீளும் . சிறுவர்கள் பயந்து போய் கண்களை மூடிக்கொள்ளுவார்கள். அல்லது எழுந்து ஓடிப்போய் உம்மாக்களின் மடியில் தஞ்சம் புகுவார்கள். அத்துமுனா இது குறித்து அருவருப்பு அடைவான். முதல் தடவையாக கத்திக் குத்துரத்தீஃப் பார்த்த அன்று இரவு தூங்க முடியவில்லை அவனால். திண்ணையில் பாயைப் போட்டுத்தான்  எல்லோருக்கும் படுக்கை.  தூங்கினால் பிதுங்கிய கண்களே கோரமாக அவன் முன் வந்து பீதியைக் கிளப்பியது. கண்ணை முழித்துப் பார்த்தால் கொடி மரத்து அடியில் பேயாட்டம்! பயந்து போய் உம்மாவைக்  கட்டிக்கொண்டு தூங்கினான் .  இப்போது இந்த கராமத்துகளைக் காண  அத்துமுனா மிக  ஆவல் கொண்டிருந்தான்.

குத்துராத்தீஃப்க்கு மறு நாள் காலை எட்டு மணிக்கு கொடி மரத்து அடியிலிருந்து ஃபாத்திஹா ஓதப்பட்டு சீரணிச் சோற்றுடன் கொடி ஊர்வலம் தொடங்கும். இந்த ஊர்வலம் புது நகரத்தின் இந்த கடைசியிலிருக்கும் தைக்கா பள்ளித் தெருவில் ஆரம்பித்து அந்தக் கடைசியிலிருக்கும் மாங்கோடி பள்ளித் தெரு வரைக்குமான 18 தெருக்களையும் சுற்றி வர இரவு எட்டு மணிக்கும் மேலாகி விடும். அந்த சமயங்களில் தைக்கா தர்ஹாவை யார் பார்த்துக்கொண்டாலும் கொடியெடுத்துப் போகும் பாத்யதை தைக்கா குடும்பத்தின் மூத்தவரான பள்ளிப்பெத்தா என்று அழைக்கப்படும் அப்துல் காதர் ராவுத்தர் ஒருவருக்குத்தான். இவருக்கு முன் இவருடைய அண்ணன் கரும வாப்பாவுக்கு இருந்தது. அவர் மறைவுக்குப்பின்  இப்போது அந்த உரிமை பள்ளிப்பெத்தாவுக்கு வந்துள்ளது. ‘எங்க வாப்பாவும் இப்பிடி கொடியெடுத்துப் போவுறத நாங்களும் பாக்கத்தானே போறோம்…’ என்கிற பெரும் கனவு  மொம்மதலி ராவுத்தரின் மக்களுக்கும் எழுந்து அடங்கும் பெரும் ஏக்கமாக.

வெள்ளையங்கியும், ஜிப்பாவுமணிந்து தலையில் பச்சை நிறத்தில் உருமாலைக் கட்டுமாக  அவுலியா ஒருவர் தன்னுடைய ஆசிகளை வழங்க  நடந்து செல்வதைப் போலிருக்கும்  அந்தக் காட்சி! ஒவ்வொரு வீட்டுப் படியாக ஏறி திண்ணையில் அமர்ந்து பெண்களையும், குழந்தைகளையும் கையில் உள்ள பச்சைத்துண்டால் தலை தொட்டு உலிந்து உலிந்து விடுவார் பெத்தாப்பா.  அந்த முஹையத்தீன் ஆண்டவரே நேரில் வந்து பலாய் முஸீபத்துகளையும் நீக்க உலிந்து விடுவதாகவும் – நீக்கி விட்டதாகவும் ஒரு ஐதீகம் அந்த மக்களுக்கு. நேர்ச்சை காணிக்கை வழங்குவார்கள் பெண்கள். இதற்காகவே கையில் பையுடன் அவர் கூடவே  பெத்தாப்பாவின் நெருங்கிய உறவுக்காரர் வருவார். பதினெட்டு தெரு சுற்றி முடிப்பதுக்குள் பை பையாக காசு சேர்ந்து விடும். ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் இந்த காணிக்கை காசுக்குத்தான் உறவுகளுக்கிடையே தர்ஹாவில்  போட்டியும் பொறாமையும்..!

பெத்தப்பாவுக்கு மட்டுமல்ல , சீரணிச் சோறு கொடுப்பவர்களுக்கும் காசு கிட்டும். இதற்காகவே சைக்கிளில் சீரணி சோற்றை கூடையில் வைத்துக் கொண்டு போக உறவுக்கார இளைஞர்களிடையே நான், நீ என்று போட்டி வரும்.ஒரு கூடை சோறு ஒரு தெருவுக்குத்தான் வரும். ஆக பதினெட்டு தெருவுக்கும் சீரணி கொடுக்க பதினெட்டு முறை அந்தந்த தெருவிலிருந்து தைக்கா பள்ளிக்கு சோறு எடுக்க வந்து வந்து  செல்ல வேண்டும். இரண்டு சைக்கிள்கள் மாறி மாறி சென்றுகொண்டிருக்கும். கூலி கிடைப்பதால் சங்கடம் இல்லாமல் சைக்கிள் மிதிப்பார்கள்.  இரவுக்குள் அவர்களுக்கும்  ஒரு பை காசு    தேறிவிடும். பெத்தாப்பா இல்லாத நிலையில்  இப்போது யார் கொடியெடுத்துப் போவார். ? மாமா இளம் வயதுக்காரர்.  நிச்சயம் அவர் செல்லமாட்டார்.!  வேறு யாருக்கு இப்போது அந்த பாக்கியம் கிடைத்திருக்கும் ?

கொடி வந்து இறங்கும் முன்பே நேர்ச்சை செய்த விருஞ்சி சோற்றுப் பானைகள்  வர ஆரம்பித்துவிடும். ரெண்டு கிலோ ,அஞ்சு கிலோ,பத்து கிலோ என்ற அளவில் சின்னதும் , பெரியதுமாக பானைகள் வரிசை நீளும். முதல் பானை முகையத்தீன் பள்ளிப் பானை பெரியதாக இருக்கும். அதன் பிறகுதான் நேர்ச்சை செய்தவர்கள் ஒவ்வொருவராகக்கொண்டு வந்து இறக்குவார்கள். மலங்குஷா தர்ஹா தெருவுக்கு கொடி வந்ததுமே ,தைராக்கொட்டு சத்தம் இங்கு கேட்கும் .உடனே  ‘கொடி வந்தாச்சு..கொடி வந்தாச்சு..’ என்று சந்தோஷ கூக்குரலுடன் ,கொடிமரத்தடியில் கூட்டம் குழுமிவிடும். .முதலில் பள்ளிப்பானை விருஞ்சிக்கு ஃபாத்திஹா ஓதப்பட்டு ,சீரணி கொடுப்பார்கள்.. அந்த ஒரு பிடி சீரணி சோற்றுக்கு ஏகப்பட்ட தள்ளு முள்ளு நடக்கும். பிறகு அஞ்சஞ்சு பானைக்குமாக சேர்த்து சேர்த்து ஓதுவார்கள். ஒவ்வொரு  பானையிலிருந்தும் , கால் பங்கு சோறு பள்ளிக்கு எடுத்துக்கொண்டு,மீதி சீரணியாக நேர்ச்சையாளிகளுக்கே கொடுத்து விடுவார்கள். பானை நகர நகர  கூட்டமும் அப்படியே குறைந்து கொண்டே வரும் . இந்த விருஞ்சி பானை வைபவத்துடன்  முகையத்தீன் ஆண்டவர் சந்தனக்குட உருஸ் நிறைவுக்கு வந்துவிடும்.

அதன் பிறகு நள்ளிரவில் முகையத்தீன் ஆண்டவர் பள்ளிக்குள்  தைக்கா பெத்தாப்பா நடு  மையமாக வீற்றிருக்க, முக்கிய குடும்ப அங்கத்தினர் நான்கு பேர் சுற்றி உட்கார்ந்து  விடியும் வரை காசுகளை எண்ணி முடிப்பார்கள். “ இந்தவாட்டி ரொம்ப குறச்சலாக்கும்”  என்றோ, ”போன வருசத்துக்கு இந்தவாட்டி பரவால்லகிட்டாயா..” என்றவாரோ கொஞ்ச நேரம் பேச்சு ஓடும்.     பிறகு குடும்ப வாரிசுகளுக்கெல்லாம்  நூறு, நூத்தம்பது என பங்கு பிரிக்கப்படும். பெத்தாப்பாவே  ஒவ்வொருவராக அழைத்து பங்கு பிரித்து வைத்துள்ள காசுகளை அள்ளிக் கொடுப்பார். “எவ்வளவு வந்தாலும் கய்யீ நீளாதுகிட்டியா ..” உறவுக்கூட்டத்தின்  புலம்பல் பள்ளி முக்கெல்லாம் எதிரொலிக்கும். காசு எண்ணும் சங்கதியை சம்பந்தப்பட்டவர்கள் வந்து அடுத்த வருஷம் வரை மிகப்பெரிய அதிசயமாக கதை கதையாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் இந்தக் காசுக்காக வேண்டி அடிதடி கூட நடந்திருப்பதாகச் சொல்வார்கள்..!

கூட்டமே இல்லாமல் இருந்தது முகையத்தீன் ஆண்டவர் பள்ளி.!  “என்னடாயிது..?” என்று கேட்டது உம்மா. அவன் எதுவும் சொல்லாமல் வெறுமனே சிரித்துக்கொண்டான். தூய்மைவாதம்  இதை  சாதித்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். இரவு குத்து ராத்தீஃபைக் காண ஆவலுடன்  காத்திருந்தான் அத்துமுனா.  அப்போதெல்லாம் இந்த குத்துராத்தீப் என்கிற கராமத் அற்புதத்தைக் காண நேரம் செல்லச் செல்ல கூட்டம் வந்து அப்படிக் குவியும். முகையத்தீன் ஆண்டவர் உரூஸின்  சிறப்பம்சமே இந்த  குத்துரத்தீஃப்  நிகழ்வுதான்! ஆனால் இப்போது மக்கள் கூட்டமே இல்லை. இரவு வெகு நேரம் ஆகியும் கூட்டம் வரவில்லை ! பத்து மணிக்கு மேல் இரண்டே இரண்டு பக்கீர்ஷாக்கள் வந்து கொஞ்ச நேரம் தப்ஸ் அடித்து முகையத்தீன் ஆண்டவர் மீது பாமாலை பாடிவிட்டுச் சென்று விட, எல்லோரும் ஏமாந்து போனார்கள் !  கூட்டம்  குறைவாக இருந்ததால்  நடத்த இயலவில்லை  என்றது தர்ஹா கமிட்டி ! கராமத்து  நிகழ்வைக் காண குடும்பத்துடன்  மெனக்கெட்டு வந்தது வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டான் அத்துமுனா !  அதிகாலையில் எழுந்து கிளம்பலாம் என்று பள்ளி வெளி வராண்டாவில் எல்லோரும் படுத்துக் கொண்டார்கள் .

நள்ளிரவில்  முகையத்தீன் ஆண்டவர் பள்ளியிலிருந்து பெருத்த சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த உறவினர்கள்  எல்லாம் ‘என்னமோ ஏதோ..’ என்று  பதட்டத்துடன்  எழுந்து  பள்ளி முன் கூடினார்கள் .  கொடியெடுத்துப் போவது யார்….என்பது தொடர்பாகவும் ,ராத்திரி குத்துராத்தீப் நடத்தாது மற்றும் பணப் பிரச்சனை தொடர்பாகவும்  பேசிப் பேசி பெரிதாக வெடித்து பெத்தப்பாவின் தம்பி மக்களும், அத்துமுனாவின் மாமா குடும்பத்துக்கும் வாக்குவாதம் முற்றி பெரிய ரகளையாகியிருந்தது. அத்துமுனாவின் மாமா எதுவும் பேசாமல் நின்றிருந்தது அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இறை நேசர்களின் புனிதம் மிக்க இடத்தில் பயமே இல்லாமல் இதென்ன அக்கப்போர்…….! அத்துமுனா வருத்தப்பட்டான். கூடிய உறவுக் கூட்டம் இகழ்ச்சியாகவும் – அதிர்ச்சியாகவும்  வேடிக்கை பார்த்து நின்றது. அற்புதங்கள் நிகழ்த்தும் அவுலியாவுக்கு இதுவெல்லாம் கேட்குமோ….? என்று நினைப்பு ஓட சிரிப்பு எழுந்தது அவனுக்குள் !