கட்டற்ற வெளி – 1

கட்டற்ற வெளி

தொடர் : – கி.ச. திலீபன்

அத்தியாயம் 1 – காசி பயணம்
இந்தப் பயணத்துக்கான உந்துதல் என் பால்யத்திலேயே ஏற்பட்டு விட்டது. அன்றைக்கு வாசித்த சிறார் கதை நூல்கள் வழியாகத்தான் நான் காசியை அறிந்தேன். ‘ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்தார். அவர் இறுதிக்காலத்தில் தனது சொத்துகளை மகன்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு காசிக்குப் பாதயாத்திரை சென்றார்‘ இப்படியாகத்தான் பல கதைகளின் தொடக்கம் இருக்கும். இந்த வாசிப்பு என்னுள் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்பியது. அளப்பரிய செல்வம் படைத்தவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காசிக்குச் செல்கிறான் என்றால் அங்கு இவற்றையும் தாண்டி என்ன இருக்கும்? இந்த அடிப்படையான ஒரு கேள்விதான் காசியை நோக்கிய எனது பயணத்துக்கான விதை. திரைத்துறையிலிருந்து விலகி மீண்டும் பத்திரிக்கைத் துறையில் இணைந்த பிற்பாடு குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு விருப்பப்படும் ஊர்களுக்குப் பயணம் செய்வது என எனக்குள்ளாக ஒரு தீர்மானத்தை வகுத்திருந்தேன். 2015ம் ஆண்டு ஜூலையில் ஏதோ ஒரு தினத்தில் திடீரென காசிக்குப் போகலாமே என்கிற எண்ணம் வந்தது. எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அதுவாக இருந்திருக்கிறது. ஆண்டு அனுபவித்தவனெல்லாம் தன் அகங்காரங்கள் அத்தனையையும் இழந்து நின்ற இடம் அது. நான் காசிக்குப் போகிறேன் என்று சொன்னவுடன் என்னிடம் பலரும் கேட்ட கேள்வி “காசிக்குப் போற வயசா இது?” என்றுதான். காசிக்கும் வயதுக்கும் இடையே உள்ள பொருத்தத்தை நாம் இதன் மூலம் அறிய முடியும். மரணத்தின் மீதான நிச்சயத்தோடு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை காசி யாத்திரை. 2000 கிலோ மீட்டர் நடந்து சென்று தன் மரணத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலுக்குப் பின் இருந்த உணர்வு எப்படிப்பட்டது? எளிமையாகச் சொல்வதானால் செத்துப்போவதற்காக ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற உணர்வுதான் எனக்குள். எனது இந்தத் தேடலுக்குப் பின் இருந்த உணர்வு ஒரு தத்துவார்த்த உணர்வா? அல்லது ஆன்மிக உணர்வா? அல்லது என் கற்பனாவாதமா? எனத் தெரியவில்லை.

காசிக்குப் போய் கங்கையில் கால் நனைக்க வேண்டும். கங்கைக் கரைப் படித்துறையை ஒட்டியுள்ள பழமையான கட்டிடங்களில் பார்வையை இருத்தியபடியே கங்கையில் படகு சவாரி செய்ய வேண்டும். காலில் செருப்பில்லாமல் அந்நகரின் தெருக்களில் இலக்கற்று சுற்றித்திரிய வேண்டும். இதுவே அப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. மற்றபடி எனக்குக் காசியைப் பற்றிய எந்த அறிதலும் எனக்கில்லை. ஒரு இடத்துக்குச் செல்லும் முன்பு அது குறித்த வரலாற்றுத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. வரலாறுகள் நமக்குள் ஒரு உருவகத்தை ஏற்படுத்தி விடும். அந்த உருவகத்தைக் கொண்டு நாம் அதனை அணுகும்போது உண்மையான அனுபவத்தைப் பெறவியலாது என்பது என் எண்ணம். காசிக்குப் போகலாம் என்றெண்ணிய சில மணி நேரங்களிலேயே அதற்கான செயலில் இறங்கி விட்டேன். டிசம்பர் மாதம் 26ம் தேதி சென்னையிலிருந்து கொல்கத்தா செல்வதற்கான விமானப் பயணத்தை முன்பதிவு செய்தேன். வட இந்தியாவின் டிசம்பர் மாதக் குளிரை மிகவும் ரசித்து அனுபவிக்கும் ஆர்வம் பிறந்தது. அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில் கொல்கத்தா மற்றும் துர்காபூருக்குச் சென்றிருந்த போதுதான் முதன்முறையாக அப்படிப்பட்டதொரு குளிரை எதிர்கொண்டிருந்தேன். மிதமான தட்பவெப்ப நிலையில் வாழும் நாம் எதிர்கொண்டிருக்கவே முடியாத அளவிலான முரட்டுக் குளிர் அது. குளிர்தோய்ந்த வட இந்தியாவின் நிலப்பரப்புகளில் பயணம் செய்ய வேண்டும். மாறுபட்ட கலாச்சார சூழலையும், வாழ்க்கை முறையையும் காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு என்னுள் நிறைந்திருந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ எனத் திரியும் வாழ்க்கை ராகுல சாங்கிருத்யாயன் போன்றோருக்குதான் வாய்க்கப் பெறுகிறது. குடும்பப் பொறுப்புகளுக்கு ஆளான ஒருவனால் இலக்கற்ற பயணியாகவெல்லாம் வாழ இயலாது. டிசம்பர் 26ம் தேதி சென்னையில் தொடங்கும் பயணம் ஜனவரி 4ம் தேதி காலையில் சென்னையில் நிறைவு பெற வேண்டும் என்கிறபடியான ஒரு பயணத்திட்டத்தோடுதான் நான் இப்பயணத்தைத் தொடங்கினேன்.
என் முதல் விமானப் பயணம் சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்றதுதான். சுவாரஸ்யமற்ற சலிப்பான பயணம் என்றால் அது விமானப்பயணம்தான். பேருந்துப் பயணத்திலும், ரயில் பயணத்திலும் சன்னலோர இருக்கையில் அமர்ந்து நம்மைக் கடந்து செல்லும் நிலப்பரப்புகளைப் பார்த்துக் களிப்புறலாம். விமானப் பயணத்தில் அப்படியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இரண்டரை மணிநேரம் ஒரு அறையினுள் அடைத்து வைக்கப்பட்டதைப் போல்தான் உணர முடிந்தது. சென்னையில் நான் விமானம் ஏறிய போது வெக்கையாக இருந்தது. 8.30 மணிக்கு நான் கொல்கத்தாவில் இறங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போதுதான் அந்தக் குளிரை உணர்ந்தேன். பற்கள் படபடக்க ஜெர்கினை எடுத்து மாட்டிக் கொண்டேன். சூடாக ஒரு தேநீர் அருந்த வேண்டும் போலிருந்தது. தேநீர் கடை என எதுவும் என் கண்ணுக்கு அகப்படவில்லை. அதுபோக 11.30 மணிக்கு ஹெளராவிலிருந்து மொகல் சராய் (காசி)க்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். மூன்று மணிநேரம் இருந்தாலும் கொல்கத்தாவின் போக்குவரத்து நெரிசல் குறித்து நான் முன்பே கேள்விப்பட்டிருந்ததால் ஹெளரா சென்று விடலாம் எனத் தீர்மானித்து டாக்ஸி பிடித்தேன்.
எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலமே கூட தொடக்கப் பள்ளி மாணவர்கள் அறிந்து வைத்திருக்கும் ஆங்கிலம்தான் பேசுவேன். உதாரணமாக இங்கே சாப்பிடுவதற்கு நல்ல உணவகம் எங்கு இருக்கிறது? என்று கேட்க வேண்டுமென்றால் ஈட்டிங் ஃபுட்… குட் ஹோட்டல் வேர்? என்றுதான் கேட்பேன். இந்த ஆங்கிலத்தை வைத்துக் கொண்டுதான் இதுவரை வெளிமாநிலங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறேன். டாக்ஸிக்காரரிடம் பேரம் பேசுவதற்கு அவ்வளவாக ஒன்றும் மொழியறிவு தேவைப்பட்டிருக்கவில்லை. அவர் மூன்று விரல்களைக் காட்டி த்ரீ ஹண்ட்ரட் என்றார். நான் இரண்டு விரல்களைக் காட்டி டூ ஹண்ட்ரட் என்றேன். இந்த இரு வார்த்தைகளுக்குள்ளாகவே நடந்த பேரத்தில் இறுதியாக நான்தான் வென்றேன் ஆம் இருநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். ஹௌராவை அடையும்போது மணி 10 ஆகியிருந்தது. சரியாக ஒன்றரை மணி நேரம் இருந்தது ரயிலுக்கு. நேரத்தைக் கடத்துவது என்பது தனியாளாக பயணம் செய்யும்போது எதிர்கொள்ளும் முக்கியமான சவால். நமக்குப் பரிச்சயப்பட்டிருக்காத ஊரின் வாடிக்கையான ஒவ்வோர் அசைவும் கூட நமக்குப் புதிய அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். கொல்கத்தா என்னும் பழம்பெரும் நகரின் ஹௌராவில் அப்படியான அனுபவங்களைப் பெறத் தயாரானேன்.

ஹௌரா ரயில்நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒன்றரை மணி நேரம் சுற்றித் திரியலாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் சரியான நேரத்துக்கு நடந்தே திரும்பி வர ஏதுவாக இருக்க வேண்டும் என்பதால். ஹெளரா பாலத்தில் நடந்தேன். இப்படியொரு பிரம்மாண்டமான பாலத்தின் கீழ் செல்வது கொல்கத்தாவாசிகளின் வாடிக்கையான நிகழ்வு. ஆனால் எனக்கு? பாலத்தில் பிரகாசிக்கும் மின் விளக்குகளின் ஒளி ஹூக்ளி நதியில் பட்டுத் தெரித்த காட்சி பேரற்புதம். பாலத்தின் நடைபாதையில் வட இந்திய முகங்கள் பலவற்றையும் கடந்து சென்று கொண்டிருந்தேன். கொல்கத்தாவின் சாலைகள் டாக்சிகளாலேயே நிறைந்திருக்குமா? என்று சந்தேகம் எழும்படியாக அத்தனை டாக்சிகள். தடம் எண் பலகையைத் தாங்கிய மாநகரப் பேருந்துகள் எதையும் பார்த்திராதது ஏமாற்றமாக இருந்தது. ஹூக்ளியின் மீது பார்வையை இருத்தினேன். எவ்வித சலனமுமின்றி சில நிமிடங்கள் கடந்தன. பாலத்தின் முடிவு வரை சென்று விட்டுத் திரும்பினேன்.

ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த சாலையில் வரிசையாக இருந்த கடைகளில் உணவகங்களும் அடக்கம். ஓரளவு சுகாதாரமாய் இருந்த உணவகம் ஒன்றினுள் நுழைந்தேன். ரொட்டி ஐந்து ரூபாய்தான். ஆனால் தொட்டுக்கொள்ள டாலோ அல்லது சிக்கனோ தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். இது போன்ற நெடும்பயணங்களில் நான் பொதுவாகவே அசைவ உணவைத் தவிர்த்து விடுவேன். ஏனென்றால் உணவகங்களின் நம்பகத்தன்மை குறித்து எனக்குத் துளியும் தெரியாது. ஆகவே மூன்று ரொட்டிகளும் டாலும் வாங்கிச் சாப்பிட்டேன். தண்ணீர் பாட்டிலும், பிஸ்கெட் பாக்கெட்டும் பயணத்துக்கு முன் தவறாமல் வாங்கி விடுவேன். நடுச்சாமத்தில் பசிக்க நேரிடும் சூழலை பிஸ்கெட் கொண்டு சமாளிக்கவியலும் என்பதால். பரந்து விரிந்த ஹெளரா ரயில் நிலையத்தில் மொகல்சராய் செல்லும் ரயிலைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு ஒன்றும் சிரமமான காரியமாக இருக்கவில்லை. நான் ஏறி எனது இருக்கையை உறுதி செய்து கொண்ட சில நிமிடங்களிலேயே ரயில் புறப்படத் துவங்கியது. போர்வைக்குள் புதைந்து பலரும் நித்திரை கொண்டிருக்க சில தமிழ்ப்பாடல்களைக் கேட்டுக் கொண்டு அப்படியே தூங்கி விட்டேன்.

(தொடரும். . . )