கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி

முத்தமிடும் சிலர்

கடிக்கிறார்கள்
வெடிக்கிறார்கள்
சுரண்டுகிறார்கள்
சுவைக்கிறார்கள்
தொடாமலே தருகிறார்கள்
தொட்டெடுக்கிறார்கள்
சிலர் தான்
முத்தமிடுகிறார்கள்….!

*
இன்னும் எவ்வளவு
நேரம் வேண்டுமானாலும்
பேசுங்கள்
மேடையில் உங்கள் பின்னால்
நிற்கும் மஞ்சள் புடவைக்காரியை
மட்டும் நகர விட்டு விடாதீர்கள்..!

*
மீனுக்கும் தூண்டிலுக்குமிடையே
அகப்பட்டுக் கொண்டவன்
நீரிலும் தன்னையே சிறை
வைத்திருக்கிறான்

*

இதுவரை பார்க்காத தலைவியை
முதன்முறை காணுகையில்
தோழி என்று நினைத்து விட
வேடன் வேடத்தில் இருந்த
தலைவனை முன்னெப்போதோ
காதலிக்கத் துவங்கியிருந்தாள்
பூ பறிக்க சென்றிருந்த தோழி
மாட மாளிகையில் பொம்மலாட்டம்
துவங்கியதாக நம்பியது
காதலும் இன்ன பிற காரணங்களும்….!

*

பேய் பசி

பின்னிரவாக இருந்தால்
மண்டியிட்டிருப்பேன்
முன்னிரவில் சுயம்
சிந்தனைகளின் வழியே
கொள்கையும் பிடிப்புமாக
வால் பிடித்துக் கொண்டிருந்தது
வெளிச்சம் குறைகையில்
வாயில் சாத்தான் இளிக்கிறான்
செருப்படிக்கும் சிரிக்கும் முகத்தில்
சீயென வழியும் சுவாசத் தேடல்
வசைச்சொல்லுக்கு வாங்கிய
பிச்சைகள் ஏராளம்
எட்டி மிதித்து கழுத்தெலும்பு
உடைத்து அடித்துக் கொல்ல
யாரும் வரலாம்
எல்லாருக்கும் தகுதி இருக்கிறது
எல்லாவற்றையும்
பொறுத்துக் கொள்ளும்
பேய் பசிக்கு
நாள் முழுக்க நாய் வயிறு….!

பதிவு

என்ன புரிந்ததென்று தெரியவில்லை
கவிதை எழுதிக் கொண்டிருக்கும்
கணிப்பொறி திரை முழுக்க
அலைந்து கொண்டிருந்த எறும்புக்கு
சொல்லவும் கேட்கவும் எதுவோ இருக்கிறது

*
உன் கவிதையைப் போட்டு
உன் புகைப்படத்தையும்
போட்டிருந்தார்கள்
அப்படியே எது கவிதை என்றும்
போட்டிருக்கலாம்…!

*
சாலையோர லாரி மறைவு
போதுமானது
ஒரு கோப்பை மது அருந்த
நின்று கொண்டே சிறுநீர் கழிக்க
உடல் விற்கும் முன்
இரண்டு தோசை தின்று விட….

*
ஹிஸ்டீரியாக்கள்
தன் இருப்பை கத்துகின்றன
பைத்தியங்கள்
பிறர் கவனத்தை ஈர்க்கின்றன
தற்கொலைகள்
தான் வாழ்ந்ததை பதிவு செய்கின்றன
*
ஊடல் கொண்ட நாளில்
வழக்கத்துக்கு மாறாக கூடுகிறோம்
ஒரு கடியிலோ ஒரு பிடியிலோ
ஒரு ஏற்றத்திலோ ஒரு புரட்டலிலோ
அதுவாகவே சரியாகி விடும் ஊடலுக்கு
ஓர் எழுத்து தான் முன் பின் வித்தியாசம்
கூடலிலிருந்து….!

*
கூட்டத்தோடு கூட்டமாய்
பெருங்குரலெடுத்து அழுபவனை
போகஸ் செய்யாதீர்கள்
அவள் எரிவதை அது பாதிக்கும்
அவள் எரிந்து முடியும் வரை
அவன் அப்படி அழுவது தான் சரி

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close