கவிதைகள்

கிளிஞ்சல்

இரா.கவியரசு

கீறிக் கிழிக்கும் கிளிஞ்சல்களை
செதில் செதிலாக
உடைத்த பாதங்கள்
சுடுமணலில்
குருதி குளிக்கின்றன

அருகே
ஆழ்கடலில் மூச்சடக்கி
கிளிஞ்சல்களின் வயிற்றில்
முத்துக்கள் பற்றிய கனவுகளைக்
கோர்த்துத் திரும்புபவர்கள்
வளர்ந்திருந்த
பாசியை அறுக்க
நரம்புகளைப் பிய்த்துக் கொண்டிருந்தனர்

கரையில்
நிர்வாணம் விரும்பாத
நாவிழந்த மீன்கள்
மணலைப் பூசிக் கொண்டு
சண்டையிட ஆரம்பித்தன

கிளிஞ்சல்களை
உடைத்துக் கொண்டிருந்தவர்கள்
மீன்களைக் கொல்வதற்காக
அம்புகளைத் தேடியலைந்தனர்

நசுக்க நசுக்க
நழுவும் மீன்களைப்
புதைக்கத் தோண்டிய குழிகளில் எல்லாம்
ஊறிப் பெருகியது
கிளிஞ்சல்களின் குருதி

முத்துகளின் கனவுகளை
விதைத்துக் கொண்டே இருக்கும்
கடலைப்பற்றி
விதவிதமான அவதூறுகளை
எச்சிலாலும் கண்ணீராலும்
வரைந்தவர்கள்
சோர்வுற்று மீண்டும்
கடலுக்குள் குதிக்க ஆரம்பிக்கையில்
மீன்களும் கிளிஞ்சல்களும்
இரண்டு கொலைகளுக்குத் தயாராக இருந்தன.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

1 thought on “கிளிஞ்சல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close