இசுவு. வலிப்பு நோயினைப் போல கொமங்கையின் உடம்பினை வெட்டி வெட்டி இழுக்கும். சந்தோசம், மனக் கிளர்ச்சி என நெஞ்சை கிழித்து இரத்ததினை வெளியே அள்ளிப் போடும் கவலையாக இருந்தாலும் அவளுக்கு இசுவு வந்துவிடும். முந்தைய இரவில் வந்திருந்த இசுவின் தளர்ச்சி அவளது முகத்தில் இன்னும் அப்படியே படிந்திருந்தது. கம்மங்கதிர்களின் தண்டுகளை மாவுப்பூச்சிகள் அரித்து வைத்ததினைப் போல நிலத்தில் களையெடுத்திருந்த அவளின் கைகள் வெளுத்திருந்தது. அவளது உதட்டின் அடிப்பகுதியில் காட்டு செம்பழத்தின் அளவில் இருக்கும் திரட்சி முகவெட்டிற்கு வெகு பொருத்தம். விளைந்த கதிர்களில் பால் பிடித்து உருண்டு திரண்ட கம்பு, நாற்காலி போட்டு குந்தியிருக்கும் சொங்கு போலதான். முதலியிலிருந்து அனுக்கூர், சாலை அந்தி சந்தைக்கு நிதமும் போய்வருவாள் கொமங்கை. சமயத்தில் அங்கே தங்கிக்கொண்டும் விடுவாள். சந்தை இதுவரை தட்டுப்பட்டு போனதில்லை. முதலியில் மூன்று ஏரிகள் இருந்தன. ஏரிக்கரையினையொட்டி இருக்கும் நொச்சிவேலிக்கு அருகில்தான் அவளது கால்காணி நிலமும் இருந்தது. இலை துளிர்த்த பருவத்திலிருந்து காம்புகளில் பால் சொட்டிக்கொண்டே இருக்கும் அரச மரத்திற்கு அருகில் ஊருக்கான சுடுகாடு இருந்தது. பால் மறவாமல் பெரு நோயில் மண்ணோடு புதைந்து போகும் பிள்ளைகளுக்காக இலைகளின் காம்புகளிலிருந்து மரம் பாலை நிதமும் உதிர்த்துக் கொண்டிருப்பதாக கிழப்பாடிகளின் நம்பிக்கை. தாழ்வான கிளைகளில் நெல் வைக்கோல் தாளின் உள்ளாக வைத்து கன்றினை ஈன்று கொடுத்த மாட்டின் செத்தைகள் கூம்புகளாக தொங்கிக்கொண்டு காற்றுக்கு அசைந்துகொடுத்தன. மரத்தினை சூழ்ந்திருக்கும் நொச்சித் தழையோடு சேர்ந்து வீசும் செத்தைகளின் வாசம், மண்ணில் விழுந்ததும் வீர்ரென கத்தும் சிசுவின் உடலில் மீது படிந்திருப்பதைக் கழுவித் துடைக்கப்படாமல் இருக்கும் வாசத்திற்கான பதம்தான். தொங்கிகொண்டிருக்கும் செத்தைகளில் உயிரின் வாசம் வீசும்வரை அதற்கு மறக்காமல் நிதமும் பெருத்து வளர்ந்து வரும் தனது தனங்களினால் பாலூட்டிக் கொண்டிருக்கும் மரத்தினை கடந்து போகும் கிழப்பாடிகள் வேண்டிக்கொண்டுதான் ஊர் சேதிகளுக்குப் போவார்கள்.
கொமங்கையின் காணி நிலம் அங்குசொங்குவென விளைந்து கொட்டாமல் இருந்தாலும், வயிற்றுப்பாட்டுக்கு வஞ்சனையில்லாமல் விளைச்சல் இருந்த நிலம்தான். நிலத்தின் வேலியில் கள்ளிப்பழங்களும் பிரண்டைப்பூக்களும் எப்பொழுதும் பூத்துக் கிடக்கும். காடு மேடுவென அலைந்து வரப்பின் வளைகளில் பால்நண்டு பிடிக்கும் கொலவான்கள், தட்டான்களுக்கு பின்னதாக உடலை நெளித்து அவற்றின் வாலினை பிடித்ததினைப் போலதான் கரையின் வாரிகள் இன்னும் அப்படியே இருந்தன. தனது கால் காணி காட்டிற்கு செத்தைகளை தாங்கிகொண்டிருக்கும் அரசமரமே பெரிய அடையாளமாக நினைத்துக் கொள்வாள்.
கால்காணி நிலத்தின் மீதாக இருக்கும் ஈட்டுக்கடனை நினைத்தால் கொமங்கைக்கு வெள்ளி முளைத்து பல்லைக் காட்டும்வரை தூக்கம் வருவதில்லை. படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டே கிடப்பாள். ”ஓடுனாதாங் காலு! மண்ணைப் பிசைஞ்சாத்தாங் கையி!” என கணக்கு போக மிச்சமாய் கிடக்கிற உடம்புக்கு கையும் காலும்தான் அவளது வயிற்றுக்கு சோறு போட்டுக்கொண்டிருந்தது. மூக்கு, காது என மாட்டியிருந்த கொஞ்ச நஞ்ச தங்கத்தோடு, இருந்த கால் காணி நிலத்தின் மீது கங்காணியிடம் ஈட்டுக்கடன் வாங்கிதான் கரியனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தாள். நிலத்தினை கொடுத்திருப்பதாக அவனிடம் எழுதிக் கூட வாங்கிக் கொள்ளவில்லை. முதலியில் இருக்கும் கங்காணிதான் வண்டி பிடித்து வெளியூருக்கு போய் வருபவனாக இருந்தான். கடுதாசி காரியம் என்பது கூட அவனுக்குப் பிறகுதான். ”மனுசனோட சொல்லுக்கு முன்னால எழுதுற எழுத்து என்னா புதுசா நியாயம் தருமன்னு பேசிடப் போவுது? சொல்லு பெருசா? எழுத்து பெருசான்னா, சொல்லுதாம் பெருசு!” என்ற நம்பிக்கை கொண்டவள் கொமங்கை. ”அந்த மலை முழுங்கி பயிலுக்கிட்ட போயி நெலத்த ஈட்டுக்கு குடுத்திருக்குறாளே! நரி புடிச்ச கோழி எங்க கூவப் போவுது? என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். இருக்கும் கால்காணி நிலத்தோடு கூடுதலாக கால்காணி நிலம் சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கைதான் கரியனை வெளிநாட்டுக்கு தள்ளிக்கொண்டு போனது.
கரியன் நிலம் கடந்துபோன நாளிலிருந்து எந்த சேதியும் இல்லை. கடுதாசி இல்லை. வருடங்கள் கழிந்திருக்கும். ”எம்மா, ஓம் புருசன் செத்துப் போனானாம்! பொணத்த ஐசு பெட்டியில போட்டு வச்சிருக்கிறாங்க! வந்து சேந்துடுங்!” என ஒரு அந்திப் பொழுதில் ஊரின் மணியாருதான் அவன் இறந்துவிட்டிருந்த சேதியினை கொண்டு வந்திருந்தான். கரியன் இல்லாத வீடு. அழுது புலம்பினாள். அய்யோ! அய்யோ!-வென அடித்துக்கொண்டு அழுவதைவிட அவளால் வேறோன்றும் செய்ய முடியவில்லை.
சோறு தண்ணியென இல்லாமல் கிடந்தாள் கொமங்கை. இசுவு அவ்வப்பொழுது வந்து அதன் இருப்பினை காட்டிவிட்டு போனது. ஒரு மாதம் கழிந்திருந்த நிலையில், ”பொணம் வேணுமா? இல்ல பணம் வேணுமா?” என கேட்பதாக பெரிய வீட்டுக்கு சேதி வந்திருந்ததாக அவளிடம் சொன்னார்கள். தந்தி ஆபீசுக்கு பிறகாக ஊரின் பெரிய வீட்டில்தான் போன் இருந்தது. பூனாட்சி மலை, சிலோனு என வெளி தேசத்திலிருந்து வரும் சேதியினை பெரிய வீட்டில்தான் தெரிந்து கொள்வார்கள்.
”ஒடம்புல உசுரு ஒட்டிக்கிட்டு கெடந்தா போதும்! பணம் எம்புட்டுன்னாலும் சம்பாரிச்சுப்புடலாம்! மண்ணுல போடுறத்துக்கு முன்னால செத்த மனுசனோட மொகத்த ஒரு தடவ பாத்துபுடணும்” என்றாள் கொமங்கை. ”மனுசனோட மனுசம் மொகத்தப் பாக்குறதுக்குதாங் இம்புட்டு அல்லாட்டம்” என்பதில் கொமங்கை எப்பொழுதும் பிடிப்பாகவே இருப்பவள். மணியாரு ஆபீசு பக்கமாக ஓடியாடி பார்க்க அவளுக்கு யாருமில்லை. கைக்காட்டிய ஆபீசு பக்கமெல்லாம் மனு எழுதி கொடுத்துப் பார்த்தாள். நாளும் பொழுதுவுமாக கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். பிணம் வந்து சேரவில்லை. ஆபிசு பக்கமாக அலைந்து திரிந்தவளுக்கு கடைசியில் கரியனின் உடம்பினைக் கூடப் பார்க்க முடியவில்லை.
காலம் கடந்து போனது. முனியன் கட்டிடத்தின் உச்சியிலிருந்து தவறி விழுந்து நொறுங்கி செத்துப்போன இடத்தில் பிறகாக கட்டி முடிக்கப்பட்ட ஐம்பது மாடிக் கட்டிடம் கூட பழைய சுவாராக மாறிவிட்டிருக்கும். ஓடியாடி அலைந்து பார்த்ததில் கொமங்கைக்கு பாதம் வெளுத்துப் போனதுதான் மிச்சம் என பொழுதோடு தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டாள். கழுத்தில் ஒரு விரலி மஞ்சளைக் கட்டி தொங்கிகொண்டிருந்த மஞ்சள் கயிறு வெளுத்து வெள்ளையாக மாறிவிட்டிருந்தது. ”கெடந்து போவுது போ! இப்போ என்ன ஆவப் போவுது?” என அவள் கயிற்றை மாற்றிக்கூட கட்டிக் கொள்ளவில்லை. விட்டு விட்டாள். ”தன்னால முடியாத சுமையை முட்டுக் கொடுத்து தாங்கிகிட்ட அந்த சாமிதான் கரியனுக்கு ஆகாசத்துல குழிய வெட்டி சடங்கு செஞ்சி முடிச்சிருக்கு” என மேலே பார்த்து கும்பிட்டுக்கொண்டாள். அவளை பொறுத்தவரையில் கரியன் தரையில் விழுந்து செத்துப் போனாலும், அவனுக்கு ஆகாசத்தில் சவக்குழி இருக்கிறது. அவ்வளவுதான்.
கொமங்கை காடலைந்து வருவாள். அவளை தூக்கம் போர்த்திக் கொண்டுவிடும். படுக்கையில் அயர்ந்துவிடுவாள். சமயத்தில் கரியனின் நினைப்பு கண்களை மூடவிடுவதும் இல்லை. நடுநிசிவரை விழித்துக் கொண்டும் கிடப்பாள். நெட்டமாய் நின்றுகொண்டிருப்பதைப் போல அவளின் மனதில் நின்றுகொண்டு விடுவான். சந்தை ஏவாரம்தான் அவளது மனமாற்றதிற்கு ஏதுவாக இருந்தது. முதலியில் இருக்கும் கங்காணியிடம் வைக்கப்பட்டிருக்கும் தனது கால்காணி நிலத்தினையாவது ஈட்டிலிருந்து மீட்டுவிடவேண்டும். தனக்குத் துணையாக இருப்பது தனது நிலம் மட்டுமே என்பதற்காகத்தான் காடுமேடு, அனுக்கூர், சாலை அந்தி சந்தை என ஓடியாடினாள் கொமங்கை. நிலமும் தனது கரியனும் சமயத்தில் அவளுக்கு ஒன்றுபோலவே தோன்றும். தனது நிலத்தினை ஈட்டுக் கடனிலிருந்து மீட்டுவிட்டால் தனது கரியன் தன்னிடம் வந்து சேர்ந்துவிடுவான் என்பது அவளின் நம்பிக்கை. இறந்தவர்களை வெள்ளாமையாகவும், பெருமரங்களாகவும், செடியில் பூத்துக் குலுங்கும் பூக்களாகவும் உயிரோடு மீட்டுக்கொடுக்கும் பக்குவம் மண்ணுக்குதான் இருக்கிறது. மண்ணையும் அதனை இறுக்கமாக கவ்விப் பிடித்திருக்கும் வேர்களையும் ஆழ்ந்து பார்க்கும் கண்கள் இருப்பவர்களுக்குத்தான் அது தட்டுப்படும். ஈட்டுக்கடனாக பெற்றிருக்கும் பணத்திற்கு வட்டி கிடையாது. நிலத்தில் முளைத்துவரும் வெள்ளாமை கடனுக்கு புடைத்துக்கொண்டு வரும் வட்டியை ஈடுகட்டிவிடும்.
மாதக்கணக்கில் யேவாரத்தில் இருக்கும் கொமங்கை போகும் ஊரிலேயே தங்கிகொள்வாள். இளம்பூசலாக இருக்கும் கொமங்கை சந்தை முடிந்தவுடன் இருக்கும் கொஞ்ச நஞ்ச மூட்டைகளை முடிச்சி போட்டு கட்டிக்கொண்டு ஒற்றைக் கிழவித் திண்ணையில் வந்து படுத்துக்கொள்வாள். சத்திரம் சாவடி என போவதில்லை. கிழவிக்கு சந்தை சாமான் என கையில் இருப்பதை கொடுப்பாள். ”ஒத்தக் கட்டைக்கு துணையா ஒருத்தி வந்திருக்கா! கெடக்கட்டுந் திண்ணையில!” என கிழவியும் தென்னம்படல் கட்டப்பட்டிருந்த திண்ணையினைக் கொடுத்திருந்தாள். தப்புத் தானியம், காய், கறி, பழங்கள் என பகல் முழுவதும் காடு புதரு என அவளுக்கு காலாட்டம்தான். சந்தை. காடு, நிலம் என அலைந்து இரவு மண்ணை போர்த்திக் கொண்டவுடன், அவளுக்குள் நிலம் பேச தொடங்கிவிடும். அவளுக்குள் நிலமும், அதற்குள் கரியனும் ஈட்டுக் கடனில் பிணைக்கப்பட்டுக் கிடப்பதாக குமைந்து போவாள். ”இந்தக் காடும் நிலமும் காலடியில கெடக்கும்போது இந்த மனுசன் நம்மள ஏன் அந்தரத்துல விட்டுட்டுப் போனாங்? இன்னுங் கொஞ்சம் மண்ணைப் பெசஞ்சிருந்தான்னா மாளிகையக்கூட கட்டியிருக்கலாங்! விதி யார விட்டது!” என ஒரு காட்டெருமைகளின் கூட்டத்தினைப் போல நிலத்தோடு படுத்துக் கிடக்கும் மலையினைப் பார்த்து பெருமூச்சு விடுவாள். கரியன் இறந்துபட்டிருந்ததிற்குப் பிறகாக அனுக்கூர் சாலை அவளுக்கு நான்காவது ஊர். தலை முழுக்க எண்ணைய் தேய்த்து குளித்திருந்த அன்றைய பொழுதில்தான் ஒரு தும்பைச்செடி வண்ணத்தில் உதிர்ந்த சாவு வார்த்தைகள் காரணமாகத்தான் அவள் காடு மேடு என அலையும் பிழைப்பு தொடங்கி விட்டிருந்தது. அவளது பாடுகளுக்கு காது கொடுப்பதற்கு யாரும் இல்லை.
அறுவடை செய்யப்பட்ட காட்டில் கிடைத்த தப்புக் கொட்டைமுத்துக்களை விற்ற பணத்தினை செருவாட்டுப் பணமாக பிரித்து வைத்திருந்தாள். ஒரு விட்டக்கடை வீடு, ஒரு வாழ்க்கை, ஒரு பணம். ஆனாலும் செருவாட்டு சேர்ப்பு என்பது அவளிடமிருந்து போகவில்லை. கடலைக் காட்டில் வெள்ளாமைக்குப் பிறகு கைவிடப் பட்டதினைப் போல் நின்றுகொண்டிருக்கும், பறவை இருக்கைகளை கையில் பற்றிக்கொண்டு அந்திக்கு முன்னதாக வீட்டிற்கு வந்து சேருவாள் கொமங்கை. ஏசுநாதர் தனது முதுகில் சிலுவை மரத்தினை சுமந்து கொமங்கைக்கு அடுப்புக்கு விறகு கொண்டு வருவதினைப் போலவே இருக்கும். நிறைந்த காட்டாளியாக காடு அலைந்து திரிந்ததில் காற்றுக்கு அலங்கோலித்துக் கிடக்கும் அவளது தலைமுடி அதற்கு ஒத்திசைவுக் கொடுத்து சிதறிக் கிடந்தது. ஒத்தையாளுதான் என்ற போதிலும் சோத்துக்கு சாத்துக்கு என எதற்கும் கொட்டமுத்து விற்ற பணத்தினை சேர்த்துக் கொண்டதில்லை. ஏரிக்கரையோரமாக இருக்கும் கால்காணி நிலத்தினை முதலியில் இருக்கும் கங்காணியிடமிருந்து மீட்டுக் கொள்வதற்கு சந்தை ஏவாரத்தில் கறாராகத்தான் இருந்தாள்.
பொழுது இறங்கியதும், காட்டிலிருந்து பறித்துக்கொண்டு வரும் தப்புக் கதிரு, உழவு புரட்டலில் புரண்டு கிடக்கும் வேர்க்கடலை, ஆய்ந்து கிடக்கும் போரில் தட்டுப்படும் வெங்காயம் என கொமங்கை குட்டிச்சாக்கில் போட்டுக்கொண்டு அனுக்கூர் சாலை அந்தி சந்தைக்கு பயணப்பட்டுவிடுவாள். இந்தச் சூவு மூட்டையில் நிறைய கள்ளிப்பழங்களை கட்டி வைத்திருந்தாள். மடி நிறைய இருந்த கள்ளிப்பழத்தினை சந்தையில் விரித்து வைக்கப்பட்டிருந்த சாக்கில் கொட்டினாள் கொமங்கை. தடியினைக் கண்டதும் கடலைக் காட்டின் பறவையின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆந்தைகள் இலைகளிலிருந்து விடுபடும் காற்றினைப் போல பழங்கள் உருண்டு ஓடின. சத்தம் சிறகினை அசைப்பதைப் போலதான். கொமங்கை கொண்டு வந்திருக்கும் கள்ளிப்பழங்கள்தான் இன்றைக்கான அனுக்கூர் சாலை சந்தைக்கு லாந்தர் விளக்கு போட்டு வைத்திருப்பதைப் போல இருந்தது. கள்ளிப்பழங்களின் அடியில் வெள்ளை மாவுப்பூச்சிகள் போர்த்திவிட்டிருந்த பசையினைதான் அவள் தனது பால்ய பருவத்தில் உதட்டுச் சாயமாக பூசிவிட்டிருந்தாள். உதட்டினை பிதுக்கி கையில் தொட்டுப் பார்த்தாள். கரியனின் நினைப்புதான் வந்தது. கரியனுடனான நினைவின் சல்லிவேர்கள் அவளை ஆட்டுக்கால்களோடு அலைவதைப் போல காடு மேடெங்கிலும் கடத்திக்கொண்டு போனது.
சந்தையில் கள்ளிப்பழங்களுக்கு கிராக்கி கம்மியாகத்தான் இருந்தது. பழத்தினை தின்பதற்கு வாகு தெரியவேண்டும். பழத்தின் நடு மத்திமமாக இருக்கும் ஒரு யுவதியின் மெல்லிய உதட்டினைப் போல இருக்கும் சிம்புத்தண்டைப் பிரிக்கும் லாவகம் தெரிந்திருக்க வேண்டும். பழத்தின் சாயத்தினை உதட்டில் பூசிக்கொள்வதற்குதான் விடலைக்குட்டிகள் மனங்கொண்டு வாங்கி கடிப்பார்கள். கையில் கால்காணி நிலமிருந்தும் சந்தையில் கடை விரித்து பிழைப்புத்தனம் செய்யும் தனக்கு நேர்ந்திருக்கும் நிலையில் ஒவ்வொரு பொழுதிலும் நிலை குலைந்து போனாள் கொமங்கை.
தப்புத் தானியம் கிடைக்காத நாட்களில் கூலிக்காட்டு களையெடுப்பு வேலைக்கும் போய்வருவாள் கொமங்கை. கங்காணியிடம் இருக்கும் நிலத்தினை தான் யாருக்கு மீட்டுத் தர போகிறோம் என்று கூட சமயத்தில் யோசனை வரும். தன் மூச்சிக்குப் பிறகாக தனக்கு யாரும் இல்லை. ”பத்த வெச்சி கொளுத்துனா நெருப்பு! தண்ணிய ஊத்தி அணைச்சா கரிக்கொட்டையாக முசுவும் அடுப்பு!” – அந்த அளவில்தான் அவளுக்கான கொழுந்துவிட்டு எரியும் பகலும் சீக்கு ஆடுகளைப்போல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு கிடக்கும் இரவும் ஒற்றை அடுப்பில் கிடந்தது. யேவாரத்தில் கறார் காட்டுவதோடு ஒத்தைப் பைசாவை சரிதாம் போவுட்டும் என விட்டுத் தருவதில்லை. அது கரியனிடமிருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதாக நினைத்துக்கொள்வாள். கொமங்கையின் கைராசிப் பற்றி அனுக்கூர் சாலையில் தெரிந்து விட்டிருந்தார்கள். கதிர் பிடிப்பிற்கு முன்னதாக எடுக்கும் களைவெட்டிற்கும் கொமங்கையினை எல்லோரும் தேடிக்கொண்டு வருவார்கள். மெனைக்கு முன்னதாக அவளை நிறுத்தி விடுவார்கள். களைக்கட்டினை இரண்டு கைகளோடும் சேர்த்து முளைத்துக்கொண்டு வரும் வெயிலைப் பார்த்து கும்பிடுபோட்டு அவள் தொடங்கும் களையெடுப்புக்கு எல்லோரும் அவளைத் தேடிக்கொண்டு வருவார்கள். மாராப்பினை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டு களை வெட்டுவாள் கொமங்கை. அவளது மார்புகளை முட்டும் கம்பு, கேழ்வரகு என இளம்பயிர்களின் கதிர்கள் திரண்டு பால் பிடித்தன. கதிர்களில் தெறிப்பாக தானியம் சேர்ந்தது. காடுகளில் பால் பிடித்து காற்றுக்கு ஒத்திசைவுக் கொடுத்து ஆடும் கதிர்கள் அனைத்திற்கும் கொமங்கையின் மாராப்போடு ஒட்டு உறவு இருந்தது. இலைகளில் தொய்த்து தொங்கிக்கொண்டிருக்கும் பனித்திவலைகள் கொமங்கையின் மார்பகங்களின் சாயலை ஒத்திருந்தன. அவற்றின் வாசம் கூட கைப்பிள்ளைக்காரி பால் கவிச்சிதான். களைவெட்டுக்கு தோதுபடாத நிலத்தில் அவள் உடுத்திய ரவிக்கை ஒன்றையாவது வாங்கி காட்டில் காவலுக்காக நிற்கும் பறவையின் இருக்கையில் கட்டிவிடுவார்கள். காற்றில் அசங்கிக் கொண்டிருக்கும். துணியில் கமழ்ந்து வரும் கவிச்சிக்கு பூச்சிப்புழுக்கள் என வருவதை, பறவையின் இருக்கையின் தோள்களில் போர்வையினைப் போர்த்திக்கொண்டு சாமியாரைப்போல உட்கார்ந்திருக்கும் நாரைகள், ஆந்தைகள் அவற்றை பொறுக்கிக்கொண்டு ஓடிவிடும்.
ஒரு அந்திப் பொழுதாக இருக்கும். பனிக்காற்று முன்னதாகவே இறங்கி தெருவை ஊதிக் கொண்டிருந்தது. கொமங்கைக்கு உடலில் காற்று ஊசிக்குத்துவதைப் போல இருந்தது. அன்றைக்கும் அனுக்கூர் சாலை அந்தி சந்தைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் கொமங்கை. காட்டில் தட்டுப்பட்டிருந்த சாமான்களை மூட்டைகளாக முடித்துப்போட்டு கட்டி வைத்திருந்தாள். கரியனின் நினைப்பு வந்தது. ஒதுங்கி கிடந்த தனது மாராப்பினை இழுத்து சரிசெய்து கொண்டாள். எப்பொழுதும் அவளை தரையில் ஒரு பிணத்தினைப் போல சாய்த்துப்போடும் இசுவு வருவதாக இருந்தது. தனது இருப்பினை சுதாரித்துக் கொள்வதற்குள் தரையில் குப்பறிப்பாக விழுந்தாள் கொமங்கை. கரியன் செத்துப்போன சேதி கிடைத்த அன்று அவளுக்கு வந்த இசுவு, நடு மத்திமமான வருடங்களுக்கு பிறகாக இன்றுதான் வருகிறது. கருப்பண்ணசாமிக்கு காவு கொடுக்கப்பட்ட கிடாவினைப் போல தனது கால் குளம்புகளை தரையில் சிராய்த்துக்கொண்டு கிடந்தாள். அனுக்கூர் சாலையில் ஒற்றைக் கிழவியாக இருந்தவளின் திண்ணையில் கொமங்கை இசுவில் இழுத்துக்கொண்டு கிடப்பது யாருக்கும் தெரியவில்லை. அனுக்கூர் சாலைக்கு வந்தபிறகு அவளுக்கு இப்பொழுதுதான் முதன் முறையாக இசுவு வந்திருக்கிறது. இசுவு வந்து தெளிந்ததும் தனது அன்றாடத்தில் எதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது என்று மட்டும் அவளுக்குத் தெரியும். அது நல்லதாகவும் இருக்கும். இல்லையென்றால் நட்டமாகவும் இருக்கும். அவளது உடல்கூறுகளே அடுத்து தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பதினை அவளுக்கு அறிவிப்பனவையாக இருந்தன.
முதலியில் இருக்கும் கங்காணியிடம் ஈட்டுக்கு கொடுத்திருந்த நிலத்தினை மீட்பதற்கு அனுக்கூர் சாலை சந்தையினை இன்றோடு முடித்துக்கொண்டால் போதும். காணி நிலத்தின் மீது இருக்கும் ஈட்டுக்கடனுக்கு சந்தை பணம் போதுமானதாக இருந்தது. முதலியில் இருந்து கல் விட்டெறியும் தூரம்தான் அனுக்கூர் சாலை. கள்ளிப்பழங்களை சாப்பிடும் ஒவ்வொரு தருணமும் அவளுக்கு கரியன் நினைவிற்கு வந்துவிடுவான். கள்ளிப்பழத்தில் அவனது ருசியும் உடம்பு வாசனையும் நிறைந்திருப்பதை அவளது நாக்கு மறந்திருக்கவில்லை. அனுக்கூர் அந்திசாவடியில் அவளுக்கு கழிந்து போகும் கடைசி இரவு இதுவாகத்தான் இருக்கும். எலிக்குட்டிகள் தலைக்கால் வரப்புகளில் இருக்கும் வளையில் போடும் சத்தத்தினைப் போல பசி வயிற்றைக் கிள்ளியது. அன்று பறித்து வைத்திருந்த கள்ளிப்பழம் சந்தையில் விற்றது போக இரண்டு மீதமாக இருந்தது. அன்றைய இரவுக்கான பசியினை போக்கிக்கொள்வதற்கு போதும்தான். இரண்டு கள்ளிப்பழங்களை தின்று முடித்திருப்பாள். கரியன் அவளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்த சீனிப்பழத்தினைப் பறிமாறுவதாகவும், ஈடாக வெயில் காயாத மஞ்சள் ரவிக்கையின் வளைகோடுகள் படிந்திருந்த இரண்டு நுங்குகளை தனது கைகளில் அள்ளி அவனுக்கு ஊட்டுவதாக சுவை அவளுக்குள் ஊடறுத்துக்கொண்டு போனது. மனக்கிளர்ச்சியும் கொதிப்பும் இருக்கும் நேரம் அவளின் மனதைப் போர்த்திக் கொள்ளும் பொழுதெல்லாம் வாதை செய்யும் இசுவு அவளின் உடம்பினை வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்கிவிடும். அந்தியில் கூடடையும் தாய்குருவி தனது குஞ்சுகளோடு குலாவி அடங்கும் நேரம் மட்டுமே கழிந்திருந்ததைப் போல இருந்தது. அன்றைய இரவில் கொமங்கைக்கு எத்தனைமுறை இசுவு வந்தது எனத் தெரியவில்லை. வந்திருந்த அத்தனை முறைக்கும் முன்னதாக அவள் அவனுக்கு பாலூட்டியிருப்பாள். அதற்கு கரியன் அவளுக்கு சீனிப் பழங்களை ஈடுகொடுத்து தோற்றுதான் போயிருப்பான். கால்முட்டி, கைகள், முகம் என எல்லா இடங்களிலும் சிராய்ப்புகளும் காயத்துடன் வழிந்திருந்த இரத்தம் உடம்பில் உலர்ந்து காய்ந்து விட்டிருந்தது.
கிழவியிடம் தான் முதலிக்குப் போவதாக சொல்லிவிட்டிருந்த கொமங்கை, பொழுது முளைத்து வருவதற்கு முன்னதாக முதலிக்கு வந்திருந்தாள். பெரிய ஏரிக்கரையினையொட்டி புதைப்பதற்காக பிணக்குழி வெட்டுவதற்கு நிலத்தில் முளைத்திருக்கும் கள்ளி மரங்களை சீர் செய்து கொண்டிருந்தான் பங்காளி பெரியவன். அவன் ஒரு ஒத்தக்கட்டை குடி பங்காளி. காசு, பணம் என கண்ணில் காட்டினால் தாங்கு தாங்குன்னு உசுரோடு இருக்கும் யாருக்கும் குழி வெட்டுபவன் அவன். பிணக்குழி யாருக்கு என அவனிடம் கேட்பதற்கு கொமங்கைக்குப் பிடிக்கவில்லை. தனது பெரிய ஏரிக்கரை நிலத்தினை கடந்து இரண்டு தப்படி நடந்தாள். நிறைய கள்ளி மரங்கள் மண்டிக் கிடந்ததைப் பார்த்தாள். கறம்பு அடித்துக் கிடந்த கால்களில் ஈஞ்சி முட்கள் பாய்வதாக இருந்தது. முதலியில் கங்காணிக்கு சாவுமேளம் அடித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். மேளம் பெரிய ஏரிக்கரையில் எதுகலித்தது. நிலத்தில் முளைத்திருந்த கள்ளி மரங்களில் உட்கார்ந்திருந்த சாவுக்குருவிகளின் சத்தம் அகோரமாக கேட்கத் தொடங்கின. அவை கொமங்கையின் குரல்களேயன்றி வேறோன்றுமில்லை.