இணைய இதழ் 98சிறுகதைகள்

கோமாளி நாயக்கர் – க.சி.அம்பிகாவர்ஷினி

சிறுகதை | வாசகசாலை

ஆரப்பாளையம் பேருந்து நிலையம். கோமாளியும் சுசிலாவும் ஒன்றாகப் பயணித்து வந்த ஆட்டோ கோமாளியைப் பேருந்து நிலைய வாசலில் இறக்கிவிட்டு ஒரு யூடர்ன் அடித்து சுசிலாவின் வீட்டிற்குப் பறக்கத் தொடங்கியது. ஆட்டோ வளைந்து திரும்புகிற இடைவெளியில் அவனைப் பார்த்துக் கையசைத்துவிடலாமென்கிற நப்பாசையில் இருவரையும் பிரித்து நீளும் சாலையில் வாகனங்களின் பரபரப்பு தொற்றிக்கொள்ள ஆட்டோவை விட்டு வெளியே தலையை நீட்டியும் ஓரக்கண்ணால் மட்டுமே பார்க்க முடிந்தது. கோமாளியின் கண்கள் இரண்டு துண்டுகளாகின. சுசிலாவின் கையில் அவன் ஆட்டோவிற்குக் கொடுத்த பணத்தாள் மடித்துக் கைப்பையுள் வைக்கப்படாமலே இருந்த இந்தப் பணம் தேவையில்லை. ஏனோ ஆட்டோவை விட்டு இறங்கி அவசரமாக அவனுடைய பேருந்தைப் பிடிக்கச் செல்பவனாக பணத்தைத் திணித்துவிட்டுப் போனான். அவனுக்கும் சேர்த்தேதான். இருந்தாலும் அதன் பிறகு சுசிலா வீடு வரைக்குமான பயணச்செலவும் இந்த ஐநூறு ரூபாய்த் தாளில் அடங்கியது .பையை எடுக்கப்போனபோது அவன் அவளுக்குக் கொடுத்திருந்த அன்பளிப்புப் பைகள் டமக் டமக்கென்று விழுந்து மட்டையாகின. ஒவ்வொன்றாக நிமிர்த்திக்கொண்டே அவனை ஏறிட்டவள்,

“ஒழுங்கா சாப்ட்னும்…என்ன..நீ சாப்ட்லைன்னா எனக்கு தெரிஞ்சிரும் .சரியா?” என்றாள்.

அவன் முகத்தில் அறிந்தோ அறியாமலோ மாட்டிக்கொண்ட கோமாளியின் முகமுடி வழிந்தபடியே நின்றிருந்தது.

“சர்ரா…சர்ரா…சாப்ட்றேன்டா தங்கம்”

கோமாளி அவன் முகமூடியை எப்போதும் கழற்றுவதில்லையென்கிறேன் நான். சுசிலாவோ முகமூடியற்றவள். அவள் முகம் அவளுக்கே சிலபோது அவளுடையதென்று தோன்றாத கண்ணாடியில் பார்க்கும் பிம்பம். கண்ணாடியில் அவள் ஒவ்வொரு முறையும் தன்னைப் பார்க்கிறபோது சிரிப்பாள். உதட்டைச் சுளித்துப் பார்ப்பாள். கண்களை ஆழமாகப் பார்ப்பாள். விரிந்த தலைமுடியைக் கோதிவிட்டு சில பாவணைகளில் தன்னை மறப்பாள். கண்ணாடிக்கும் அவளுக்குமான தொடர்பு அதோடு அறுந்து விழும்.கோமாளிக்குக் கொஞ்ச நாட்களாக இந்தக் கண்ணாடிக் கோமாளியோடு பழக்கம். இனி வருகிற கதையைப் பார்ப்போம்.

வீட்டிற்கு வந்ததும் சுசிலா அவன் கொடுத்திருந்த அந்த உறுப்புகளற்ற காதல் பொம்மையை ஒருமுறை ஒரே ஒருமுறை பொம்மையை அடைத்து வைத்திருந்த பெட்டியிலிருந்து உருவிப் பார்த்தாள். நிறமற்ற பொம்மை. தந்த நிறமென்றும் சொல்ல முடியாது. அழுக்கு நிறம். ஆனால் அப்பழுக்கற்றது. காதல் பொம்மையென்றால் ஆண் பெண்ணைக் கட்டிக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தில் இரண்டு ஆன்ம நிலைகள். மண்ணால் செய்யப்பட்டவை. கொஞ்சம் கைதவறினால் கூட உடைந்து சுக்கு நூறாகிவிடும். மண்ணோடு மண்ணாய் தரையோடு மண்ணாய் பாவிவிடும் .இந்த ஒருதலைக் காதலும் அப்படித்தான். ஒரு தலையென்றாலே தலையில் அடித்துக்கொள்வது போலத்தான். ஒரு கையால் தலையில் அடித்துக்கொள்வது.

கோமாளிக்குக் கொஞ்ச நாட்களாய்த்தான் சுசிலாவைத் தெரியும். அறிமுகங்களற்ற வெளியில் ஒருவரையொருவர் இயல்பாகப் பொருந்திக் கொண்டவர்களைப் போலப் பேச ஆரம்பித்திருந்தார்கள். இலைமறை காய்மறையாக கோமாளிச் சிரிப்பில் ஏதோ ஒரு கள்ளம் ஒளிந்திருப்பது இவளுக்கும் புரியாமலில்லை.அது புதிராகவுமில்லை. ஆனால் அதைப் பற்றிய அபிப்பிராயங்களும் இவளுக்கில்லை. கோமாளி ஒரு கதை சொன்னான். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குள் சொல்லி முடித்திருப்பான். அவன் கதையையும் கேட்கத்தான் வேண்டும். நீங்களும்தான்.

ஒருநாள் சுசிலாவும் அவனும் அழகர்மலையில் சந்தித்துக்கொண்டார்கள். இருவருக்கும் காதலுமில்லை. நட்புமில்லை. சுயநினைவுகளுமற்ற பிரக்ஞைவெளியில் புலர்ந்தார்கள். அவனொரு உலகம். இவளொரு உலகம். இருவருக்கும் இடையில் அழகர்மலை புலர்ந்தது. அப்போதுதான் அழகர்மலை ஒன்றைப் புரிந்துகொண்டது. தான் இந்த மலையில் வாழும் குரங்குகளுக்கு மத்தியில் ஒரு கோமாளியைக் கொண்டுவந்து விட்டிருக்கிறோமென்று. சுசிலாவும் அவனும் பழமுதிர்ச்சோலைக்குப் போக வேன்கள் நிற்குமிடத்திற்கு விரைந்தார்கள். கடைசியாக ஒரு வேன் இவர்களுக்காவே காத்திருந்தது. வேகமாகச் செல்லும்போதெல்லாம் பறப்பதாக எண்ணிக்கொண்ட வேன் தன் கைகளைத் தொங்கப்போட்டபடி நின்றிருந்தது. இன்னும் அது பறக்க ஆயத்தமாகவில்லையாம். டிக்கெட் வாங்க சுசிலா வரிசையில் அமர்ந்திருந்தபோது பின்னாலிருந்த சிதைந்த கோட்டைச் சுவரைச் சுட்டினாள். முன்பு இருவரும் இங்கு வந்திருப்போமென்று கோட்டைச் சுவரில் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி முடிகிற வருடத்தில் எச்சத்தை விதைத்தாள். அவனோ கோணலாய்ப் புன்னகைத்தான். நம்பாமல் கோமாளி வேடத்திலேயே நின்றிருந்தான். தனக்கும் அந்தச் சுவருக்குமிடையில் சுசிலா மட்டுமே இருப்பதாக அவனது எண்ணம். இருவரும் வேனிற்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.வேனில் ஏறும்போதே முடிக்காமல் விட்ட ராயகோபுரத்தைச் சுட்டிக்காட்டினாள். புகைப்படமெடுக்கச் சென்றவனைத் தடுத்தாட்கொண்டவள் திரும்பி வருகிறபோது எடுக்கலாமென்றாள். அந்த மதியநேரத்து வெயில் ராயகோபுரத்தை மேலும் உக்கிரமாக்கியது. இன்னும் கோபுரம் முடிக்கப்படவில்லை. அந்தக் கோமாளி நாயக்கர் தன்னுடன்தான் இருப்பதாக சுசிலா நம்பினாள். நாயக்கர் பல்லிளிப்பதோடு சரி. குட்டை நாயக்கர். இவரெப்படி இவ்வளவு உயர கோபுரத்தை நிமிர்த்த நினைத்தாரென்று தெரியவில்லை. நிமிர்ந்த கோபுரமோ தலையை மட்டும் கொள்ளாமல் தோள்களோடு நின்றது, புஜ வலிமைமிக்க தோள்களோடு. எத்தனை முறை வெயில் விழுந்தாலும் கரித்துப்போகாத அங்கங்கங்களோடு உறையும் நினைவிடம். ஒருவேளை இந்தக் கோபுரம் முற்றுப்பெற்று திறந்திருந்தால் நானும் இந்த நாயக்கரும் ராயகோபுரம் வழியாகவே சென்று அழகரைத் தரிசித்திருந்திருப்போம். திரும்பி வருகிறபோது அழகர் எங்களோடே கோபுர வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பார். எனக்குத் தெரிந்து அழகர் படைக்கலமுடையவர். யாருடைய அடைக்கலமும் அவருக்குத் தேவையில்லை.

அழகர் மலையிலிருந்து எப்பொழுதெல்லாம் இறங்கி வருகிறாரோ அப்பொழுதெல்லாம் மலையில் ஒரு வரையாட்டை அடையாளத்திற்காக நிறுத்திவிட்டு வருகிறார். அதுவோ  மலையிலிருந்து அவர் தனது படைவீட்டிற்குச் சென்று திரும்பும்வரை  கொம்புகளால் அவர் போகிற வழியையே பார்த்தபடி நிற்கிறது.அழகர் மலையை விட்டு இறங்குகிறபோதெல்லாம் மலையெல்லாம் அடுக்கடுக்காய் கோட்டு வரிகள். வரையாட்டின் கொம்பு வரிகள். அழகர் மலை மட்டும் அழகர் மலையில் இருக்கிறபோது மூடுபல்லக்காய் தோற்றம் கொள்கிறது .இறங்குகிறபோது வரியோட்டங்களாய் திறந்துகொண்டு பார்க்கிறது. அழகர் மலைக்கு அப்போது வரையாடே கண். ஒற்றைக் கண். வரையாட்டிற்கோ இரண்டு கண்கள். மொத்தம் அழகர் மலைக்கு மூன்று கண்கள். முப்புரியையும் எரித்தவரின் கண்கள் மூன்றும் ஒன்று சேர்ந்து பார்க்கும் முக்தி நிலை.

பழமுதிர்ச்சோலைக்குப் போகிற வழியில் வேன் மேடேறிப் போவதுபோல கனத்த இழுவையாக மூச்சு முட்டிப் போனது.வேகம் அதன் கால்களாகிய சக்கரங்களுக்கு.ஆனால் மலையேற்றம் ஒரு நதியேற்றம் போலல்லவே. சுசிலா சாலைக்குக் கீழே வலதுபுறமாக நடைபாதையிலும் போகலாமென்பதை கோமாளிக்குத் தெரியப்படுத்தினாள். இப்போது கொஞ்ச நாட்களாக அந்தப் பாதையில் யாரும் போவதில்லை. இல்லையென்றால் கையில் தடிகளுடனும் தலையில் கட்டுகளுடனும் இன்னும் சிலர் நண்பர்கள் கூட்டமாகவும் குடும்பத்தோடும் நடந்துபோவது தெரியும். அவர்களெல்லாம் சேர்ந்தே அந்த ஒற்றையடிப்பாதையை உருவாக்கியிருக்க வேண்டும். பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்த மரங்கள். ஓடை நீர் நெளிந்து போவது போல் போவார்கள். கோடைகால வறட்சி. ஏதாவது எச்சரிக்கையாகவும் இருக்கலாம். அந்தப் பக்கம் அழகர் நடமாட்டமும் இருக்கலாம். கோமாளிக்கு இன்னும் அது வேடிக்கையாய் இருந்திருக்கும். காட்டத்தான் இப்போது அந்தப் பாதையில் ஆட்களில்லை.

பழமுதிர்ச்சோலையில் இறங்கியதும் சுசிலா ராக்காயி தீர்த்தம் போகவேண்டுமென்றாள். அங்கிருந்து  இன்னும் மேலே மலையேற வேண்டும். ஏற்றம் சர்வ மேடு.நாயக்கர் திகைத்தார். ஏறத்தான் வேண்டுமா.முதுகில் அவர் கட்டிக்கொண்டு வந்திருந்த பயண மூட்டையை எங்காவது. இறக்கிவைக்க விரும்பினார். அவளிடம் சொல்லிவிட்டு விடுவிடுவென இறங்கி ஓடி மறைந்தார். இவளும் தேடிப் பார்த்தாள். போனதும் தெரியவில்லை. போன இடமும் தெரியவில்லை. அந்தப் பயண மூட்டையும் எங்கு விழுந்ததோ…

சுசிலா அருகிலிருந்த இரு பெண்களைப் பார்த்தாள். இருவரும் கழிவறைக்காக வந்திருக்கிறார்கள். துப்பட்டாவை சரிசெய்து கொண்டபடியே கோயில் வாசலில் தேடினாள். செருப்புகள் விடும் இடமொன்று கோயில் வாசலுக்கு இடப்புறமிருக்கிறது. இருந்தாலும் கோயில் வாசலிலும் செருப்புகளைக் கழற்றிவிட்டிருப்பார்கள். ஆள் இன்னும் வராததைப் பார்த்தால் நிச்சயம் சோடி சோடியாகக் கிடக்கும் செருப்புகளுக்கு மத்தியில் ஒளிந்துகொண்டானோ என்னவோ. ஓ இவர் நாயக்கரா. கோமாளியா. அவரா. அவனா. ஒரு நேரம் நாயக்கர் ஒருநேரம் கோமாளி. இரண்டும் சேர்ந்தவராகவும் தோன்றலாம்.

நாயக்கருக்குக் கால்கள் குட்டை. உடல் வாகும் குட்டைதான். நாயக்கரின் தற்காலப் பெயரைச் சொன்னதும் சுசிலாவின் அம்மா,  “அது சூரியனின் பெயர்”  என்றாள். சூரியனுக்குப் பயந்துதான் ஓடி வருகிறார். இல்லை ஏற முடியாமல் ஏறி வருகிறார். இதென்ன அவர் கொடிகட்டி வாழ்ந்த காலமா பல்லக்குத் தூக்க? வெயில் நாயக்கரின் கணுக்கால்கள் வரை சூடேற்றியிருக்க வேண்டும். பாதங்களை உதறியபடியே வந்து கொண்டிருக்கிறார். அவர் பையை வைக்கப் போனதற்கும் தாமதித்ததற்குமிடையில் ஏதோ நடந்திருக்கிறது. அழகர் வந்தாரோ. அழகரைச் சந்தித்துவிட்டு திரும்பியிருப்பாரோ. இடுப்புக்  கச்சையோடு வந்திருப்பார். நிராயுதபாணியாக நாயக்கரைச் சந்திக்கும் எண்ணம் அழகருக்கு இருந்திருக்கலாம். பாதியில் கோபுரம் நின்ற கதையாச்சே கோமாளி நாயக்கருடையது. இன்னும் எத்தனை இடங்களில் பாதியோ.

சுசிலாவும். நாயக்கரும் மலையேறத் தொடங்கினார்கள்.

“சத்யமா முடியல…ப்ப்பா..கால்லாம் வலிக்குது

நீதான சொன்ன போகலாம்னு இதெல்லாம் தேவையா?

ஆமா …போய்த்தான் ஆகனும்.

ஏம்ப்பா… இந்த வெயில்ல….”

வழிநெடுக மந்திகள். மலை மந்திகளின் கூட்டம். விழுதுகள் பிடித்தும் மரக்கிளைகளில் ஊடாடியும் உட்கார்ந்தும் நடப்பவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தார்ச்சாலையின் ஓரங்களில் உண்டபடியும் குறுகுறுவென்று பார்த்தபடியிருந்தன. மலை மந்திகளுக்கென்று தனி கௌரவமே உண்டு.கீழே சமதளத்தில் பார்க்கும் குரங்களைப் போலில்லை அவை. மலை ரகசியங்களை அறிந்தவை. மலையேறும்  எவருக்கும் மலை மந்தியொரு புதிர்விடுவிக்கும் கிரியா ஊக்கி.

“ஏ இங்க பாரேன் வாட்ருக்கேன் மூடிய அழகா தெறந்து குடிக்குது. ஏன் இப்படி பண்ணுது”

சுசிலா இடுப்பில் கைவைத்தபடி யோசனையாக நின்றுவிட்டாள். கோமாளிக்கு ஒன்றும் விளங்கவில்லை. தான் போகிற பாதை ஏன் எதற்கென்று விளங்காத வெளிச்சம் வெயிலாக அவனைச் சுற்றிப் படர்ந்து சுட்டெரித்தது. போகிற வழியில் வலப்பக்கம் நாட்டு மருந்துக் கடையும் கொஞ்சம் இடைவெளியில் கிளிஜோசியமுமிருந்தது. கிளியிடம் போனால் நாயக்கரின் கோமாளி வேடம் கலைந்து வண்டவாளம் வெளியில் வந்துவிடும். இடது புறமாக பழங்களை நறுக்கி விற்கும் கடை.

“ஏதாவது வேணுமா…சாப்ட்றியா?”

”இல்ல வேண்டாம். அப்றம் சாப்ட்லாம்”.

சுசிலா மீண்டும் ஓரிடத்தில் நின்றுவிட்டாள். குரங்குக்குட்டியொன்று உட்கார்ந்த வாக்கில் அப்படியே உறங்கியிருந்தது. என்ன உறக்கம். பின்னால் கொடிகளின் பிணைவுகள். இன்னும் தாய்க்குரங்கு. ஓடியாடியபடி மேலும் சில குரங்குகள் .குட்டியின் தூக்கம் கலையவில்லை. அது உட்கார்ந்திருக்கும் இடம் சுவர்ணபூமி. கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும். சுசிலா நினைத்துக்கொண்டாள். நானெல்லாம் மனுஷி. இதோ எனக்குக் கோயிலுக்குப் போகவேண்டும். வேண்டிக்கொள்ள வேண்டும். வணங்க வேண்டும். பக்தி் வேண்டும். கால்கள் பழுத்து உதிர்ந்தாலும் உடலை வெயில் உருக்கி வடித்தாலும் மேலே ஏறிப்போய்த்தான் ஆக வேண்டும். ராக்காயி தீர்த்தத்தில் குளிக்கத்தான் வேண்டும். இவ்வளவு தூரம் வந்தாச்சு .கடைசியா எப்பவோ வந்தது. எதையும் சரியாகச் செய்ய வேண்டுமென்கிற மனோபாவம்.

“இங்க பாரேன் எப்படி தூங்குதுன்னு”

”ஆமால்ல….”

”எனக்கு இதப் பாத்தோன்ன ஒரு சமகாலக் கவிஞர் பூனைய வச்சு ஒரு கவித எழுதிருப்பாரு அதான் ஞாபகத்துக்கு வருது”

”ம்ம்ம்”

”அதான்  அவர் அக்கடான்னு போய்ட்ருக்கப்ப பூன ஒண்ணு நெழல்ல படுத்துத் தூங்கிட்ருந்துச்சாம். அதப் பாத்த கவிஞரு அட ஒனக்கு வாச்ச தூக்கம் எனக்கு வாக்கிலியேன்னு சலிச்சுக்கிட்டுப் போவார். ஒனக்குத் தெரியுமா அந்தக் கவித?”

”தெரியும் தெரியும்… ஏ நான் கூட இதே மாதிரி ஒண்ணு எழுதிருப்பேன்”

”ஓஹ்…சரி வா போலாம்”

மூச்சிரைக்க ஒருவழியாக படியேற்றத்திற்கு வந்துவிட்டார்கள். படியேற்ற வாசலில் செருப்புகளைக் கழற்றிவிட்டுத் திரும்பியபோது,

“ஏதாவது குடிக்கிறியா?”

”வேணாம்…அப்றம் பாத்துக்லாம்..ஏன் ஒனக்குக் குடிக்கனும்னு தோணுதா…”

”இல்ல…இல்ல…வா போலாம்…ஒனக்குதான் கேட்டேன்.”

இருவரும் படியேறிக்கொண்டே முன்னேறிச்சென்று தீர்த்தம் பிடிக்க ஒரு கடையில் கேன் வாங்கிக்கொண்டார்கள். கேன் ஒழுகுவது போலவே தெரிந்தது. மூடியைச் சரியாகப்போட்டிருக்க மாட்டார்கள். கோயில் நுழைவில் டிக்கெட் போட்டுத்தருபவரிடம் ஆளுக்கொரு டிக்கெட்டை வாங்கிக்கொண்டார்கள். நாயக்கரைத்தான் கோமாளியென்றேனே. டிக்கெட்டை வாங்காமல் வந்துவிட்டார். சுசிலாவிற்குச் சரியான நேரத்தில் சரியான சந்தேகம்.

“டிக்கெட். எங்க…வாங்குனியா…?”

”அய்யொ…ஆமா இரு பாக்குறேன்..”

பாக்கெட்டுகளைத் துழாவத் தொடங்கினார். டிக்கெட் இல்லை.

“அய்யொ இர்ரா தங்கம்..ந்தா வாங்கியாரேன்”

நல்ல வேளை .டிக்கெட் தருபவரைவிட்டு வெகுதூரம் செல்லவில்லை இருவரும்.

ராக்காயி கோயிலின் உட்பிரகாரத்தில் தீர்த்தத்திற்குச் செல்லும் இறங்கு படிக்கட்டுகள் வழியாக இறங்கினார்கள். ஒருவரென்றால் ஐந்து லிட்டர் கேனை வலது புஜத்தில் தூக்கிவைத்துக்கொண்டு மேலே ஏறி வந்தார். தீர்த்தம் வீட்டிற்குத் தெளிக்கவா. இல்லை வீடு கட்டவாயென்று தெரியவில்லை. இப்படித்தான் ஒருமுறை சுசிலாவின் அப்பா அவளையும் அம்மாவையும் தீர்த்தம் பிடித்துவரச்சொல்லி அனுப்பிவிட்டார். புதுமனை புகுவிழா ஒன்றிற்கு யாகம் வளர்க்க வேண்டும். அம்மாவால் மலையேற முடியாது. சுசிலா மட்டுமே ஏறிப்போனாள் .போனவள் திரும்பி வருகிறபோது இரண்டு கைகளிலும் தீர்த்தக் கேன்களைப் பிடித்துக்கொண்டு இறங்கி வந்தாள். சரியான மழை. மழையில் நனைந்தபடியே பாரம் சுமந்துவந்தாள். அவளது இரு கைகளும் தராசு சமநிலையில் நிற்பதுபோல பாவணை செய்தன. தனக்குள் கேட்டுக்கொண்டே வந்தாள்.

”அப்படி யாருக்கு இப்படி மழைல நனஞ்சு தீத்தம் புடிச்சுட்டு போறமோ. யாரா இருக்கும்?”

“பாட்டுப் படித்தேனடி

அடி நான் பாண்டித்தியம் பெற்றேனடி

பாட்டுப் படித்தேனடி

தில்லையம்பலப் பாட்டுப் படித்தேனடி

அடி நான் பாண்டித்தியம் பெற்றேனடி

ஊற்றுக் கண்டேனடி

அடி நான் நித்தியம் கண்டேனடி

தீர்த்த ஊற்றுக் கண்டேனடி

நித்திய நித்தியம் கண்டேனடி”

பாடியபடியே இறங்கி வந்தாள்.பாட்டுக்கு அடிமையானவள்.பாடத் தெரிந்தவள். தனியாகப் போகிறவளின் அச்சத்தில் மழையோடு பாட்டும் பிடித்துக்கொண்டது.

“உச்சியில் நின்றேனடி

அடி நான் உச்சத்தில் நின்றேனடி

இச்செகமெல்லாம் இன்னல் தணித்திட

உத்தியும் கண்டேனடி

தில்லையம்பலத்தான் உத்தியும் கண்டேனடி.”

ஆ…பாட்டு…பிடரியில் பிறைவடிவங்களில் மயிர்க்கூச்செரிந்தன. அவசரமாக இறங்கினாள். இனி பாட்டு வராது..பாட்டு வராது. இறங்கி ஓடியேவிட்டாள்.

சுசிலாவிற்கு ஒரு கனவு வந்திருந்தது.

அழகர் மலையில் ஒரு கோட்டை வாசலிருந்தது. சீனத்தரசர் ஒருவர் கொடுங்கோல் செலுத்தி வந்தார். சுசிலாவின் அப்பா ஆட்சியை இழந்தவராகிவிட்டார். அழகர் கோயிலோ அப்போது உருவாகியிருக்கவில்லை. சுசிலாவும் அப்பாவும் தலைமறைவாகவே வாழ்ந்தார்கள். சீன அரசரின் கண்கள் எப்போதும் இவர்களைத் தேடிக்கொண்டேயிருந்தன. கோட்டை முழுவதும் உளவாளிகள். சுசிலாவையோ அவளது அப்பாவையோ கண்ணில் கண்டால் கண்ட இடத்தில் சிறைப்பிடித்து வர வேண்டும். சுசிலாவிற்கும் நல்ல இளமைப் பருவம். ஒருநாள் சீன அரசர் தனது படைத் தளபதியுடனும் காவல் வீரர்களுடனும் கோட்டை வாசலிலிருந்து வெளியே வர சுசிலாவும் அவளது அப்பாவும் ரகசியமாய் குதிரையேற்ற வழியின் முடிவில் இருமருங்கிலும் ஒளிந்திருந்தார்கள். அன்றென்னவோ பாதுகாப்பு பலமாக இல்லாததைப் போலிருந்தது. இருவரும் கொடுங்கோலனின் கண்களில் பட்டுவிடாதவாறு தங்களை மறைத்துக்கொண்டார்கள். அரசனின் முகத்தில் ஏதோ மனமாற்றம். சோகம் இழையோடியது. அவனுக்கு மனைவியில்லை. குழந்தை ஆசை வந்துவிட்டது. திருமணமாகாமலே ஆண்டுகளைக் கடத்தி வந்தான். ஏனோ, வாரிசு இல்லாத ஆட்சியெதற்கென்று தோன்ற சோகமே கலையாக வீதியுலாவிற்கு இறங்கிக் கொண்டிருந்தான். மலைதான் அவனுக்கு அரண்மனை வாழ்விடம் எல்லாம். மலையிலிருந்து இறங்கி வரும் குதிரையேற்ற வழியில்தான் இப்போது அவனது தேர் இறங்கிவந்து கொண்டிருக்கிறது. தேரின் சக்கரங்களில் கூட சத்தமில்லை. நிசப்தம் அரசனின் மொத்த ஆட்சிப் பொறுப்பாய் மாறியிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் சுசிலாவை கவனித்துவிட்டவன் தேரிலிருந்து இறங்கி சுசிலாவைத் துரத்திக்கொண்டே சென்றான். அவள் இவனிடம் இழந்த தங்களது பழைய ஆட்சிப்பொறுப்பை மணிமகுடத்தைப் பெறத் துடிக்கும் இளவரசி. சீன அரசன் இவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி இவள் பின்னாலேயே ஓட ஆரம்பித்தான்.அழகர் மலையும் அதனைச் சுற்றிய இடங்களும் அவ்வப்போது இடப்பெயர்வாகி தங்களது இருப்பமைவை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவை. இது சீனனுக்குத் தெரியாது. ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் இருவரும்.தன் உயிரினும் மேலான வாளையே அவளது காலடியில் போடுவதாக அவளிடம் வாக்களித்தவாறே பின்தொடர்கிறான். சுசிலாவோ சட்டென்று ஒரு மலை முகட்டிலிருந்து தாவி மலையின் சமதளத்தில் போய் நின்றுகொள்கிறாள். மலைமுகடும் அவள் நிற்கும் மலையின் சமதள வெளியும் இரண்டாகப் பிரிந்துகொண்டே போகிறது. சுசிலா இப்போது பாதுகாப்பாய் உணரத் தொடங்கிவிட்டாள். இனி அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சீன அரசன் மலைமுகட்டிலிருந்து விழப்போகிறவனாக ஸ்தம்பித்து நிற்கிறான். அழகர் மலையும் மலையைச் சுற்றிய இடங்களும் ஒன்றுக்கொன்று இடம் மாறி தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் விந்தை சுசிலாவிற்கும் அவளது அப்பாவிற்குமே தெரிந்த ஒன்று. சுசிலா அங்கிருந்து புறப்பட்டு மலையின் சமதள வெளியிலிருந்து கீழிறங்கி வருகிறாள். அவளுக்கே விளங்காத வகையில் இடமாற்றமொன்று நிகழ்ந்து திரும்பிப் பார்த்தால் கோட்டை வாசலுமில்லை. குதிரையேற்றப் பாதையுமில்லை. ஒரு நிழல்வெளி அவள் மீது படிந்து இடம்பெயர்ந்தபடியிருந்தது.அவள் நின்றிருப்பது மலைக்குக் கீழே ஒரு மூலையில்.அந்த இடத்தை இதுவரை அவள் பார்த்ததேயில்லை.ஒரே அளவிலான உருண்டைப் பாறைகள் அவள் நிற்குமிடத்திற்குச் சற்றுத் தள்ளி எண்ணற்றவையாகப் படர்ந்திருந்தன.எல்லாவற்றிலும் திருமாலின் நாமங்கள்.சுசிலாவிற்கே இந்த இடம் இப்போது உருவாகிய புதிர்.அவள் பாறைகளைப் பார்த்தபடியே கனவில் உறைகிறாள். பாறைகளின் மீது ப்ரகாசித்த வெயில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது. அந்த நாமக் கற்களால்தான் அழகருக்குக் கோயில் கட்டியிருக்க வேண்டும்.

தீர்த்தத்தில் குளித்தபிறகு இருவரும் ராக்காயி அம்மனின் சன்னதிக்கு விரைந்தார்கள். கோமாளி குளிக்கவில்லை. சுசிலாவின் கைப்பைக்கும் அவனது உடமைகளுக்கும் காவலாய் தீர்த்தத்தில் குளிப்பவர்களிடமிருந்தும் சற்றே தள்ளி நின்றுகொண்டான். தீர்த்தத்தை தெளித்துக்கொண்டதாகச் சொன்னான். தாமரைகளை அம்மனுக்குச் சார்த்திவிட்டு தீபாராதனையை எடுத்துக்கொள்ளப் போனவளை விட்டு அவளுக்கு அடுத்தபடியாக நின்றிருந்த கோமாளி அவளுக்குப் பின்னால் நகர்ந்து வரிசையிலிருந்து வெளியேறி தள்ளிப்போனான். கடவுள் நம்பிக்கை இல்லையாம். சுசிலாவிற்கு வினோதமாகப்பட்டது. தனது உள்ளங்கையிலிருந்த விபூதியிலிருந்து அவனுக்கு நெற்றியில் சிறிய கீற்றாக இட்டுவிட்டாள். அவன் திரும்பி சில அடிகள் தூரத்தில் நடந்துகொண்டிருந்த பொழுது சுசிலா மர்மமாகப் புன்னகைத்தாள்.

”சீக்ரம் கல்யாணமாகிரும்”.

கோமாளி திரும்பிப் பார்த்தான்.

”வீட்டுக்குப் போ பொண்ணு பாத்துருப்பாங்க”.

கோமாளியின் கண்களில் தீக்கனல்.

”எனக்கு அது தேவையில்ல”என்றான்.

சுசிலா சாய ரட்சைகளோடு அவனைப் பின்தொடர்ந்தாள்.

பழமுதிர்ச்சோலையில் மூன்று மாலைகளை வாங்கிக்கொண்டாள். காலணிகளை பூக்கடையிலே விட்டுவிட்டு இருவரும் கோயிலுக்குள் இலவச தரிசனத்திற்குக் காத்திருந்தார்கள். கூட்டமில்லை. கோமாளியின் கைகள் சும்மாயிருக்கவில்லை. அவளது நுனிமுடிகளை தன் விரல்நுனிகளோடு கோர்க்க முயன்று தோற்றுப்போனபடியே இருந்தான். பிறகு அவளுக்கு முன்பாகச் சென்று சரியாக சுவாமி தரிசனத்திற்கு நேராக நிற்கப் போகிறபோது விலகி வெளியேறிவிட்டான். வெளியில் வந்து தேடிக்கொண்டிருந்தாள். ஒளிந்திருந்தவன் வெளிப்பட்டதைப்போல எங்கிருந்தோ வந்து நின்றான்.

“ஏன் சாமி கும்ப்டாம ஓடிப்போற

எனக்கு நம்பிக்க இல்ல

எப்பருந்து “

பேசிக்கொண்டே அவனது நெற்றியில் விபூதிக் கீற்றிட்டாள்.

“அது சின்ன வயசுலர்ந்தே ஏன்னே தெரியாம சாமி புடிக்கல”

இருவரும் சுற்றுப் பிரகாரத்து வெளியில் அமர்ந்துகொண்டார்கள். சுசிலாதான் இங்கயே சாப்பிடலாமென்றாள். கோமாளி வெளியில் சாப்பிடலாமென்றான். பிரசாதப் பொட்டலங்களை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார்கள். அங்கு வந்திருந்த சிறுவர் சிறுமியர் கூட்டத்தைக் கண்டதும் கோமாளிக்கு அவர்களுக்கு விளையாட்டுக் காட்டத் தோன்றியது.அவர்களை கைச்சைகைகளால் கவனமீர்த்துக் கலகலப்பாக்கினான். அவர்களை விரட்டிச் செல்வது போல பாவித்தான்.அவர்களும் இவனைக் கண்டு குதூகலிக்கத் தொடங்கிவிட்டார்கள். கோமாளியின் ஆட்டம் ஓய்ந்தது.

மதியம் இரண்டு மணிக்கு மேலானது. கோமாளியும் சுசிலாவும் பூங்காவில் அமர்ந்துகொண்டார்கள். விட்டால் தூங்கிவிடலாம் போலிருந்தது. இந்த வருடம் வெயில் இன்னும் அதிகம். தனது பயண மூட்டையிலிருந்து ஒரு பார்சலை எடுத்து சுசிலாவின் கையில் திணித்தான். அவளையே பிரிக்கச் சொன்னான். உள்ளே காதல் பொம்மை. ஒரு விபரீதம் அங்கே நிகழப்போவதை உணர்ந்தவள் அமைதி சூழ ஒடுங்கிக்கொண்டாள்.

“சுசிலா….

என்னக் கல்யாணம் பண்ணிக்கிறியா?”

சுசிலா பொம்மையை உள்வாங்கத் தொடங்கினாள். பொம்மைகளைத் தடவிப் பார்த்தபடியே அவனைப் புறக்கணித்துக் கொண்டிருந்தாள்.

அவன் நிறையப் பேசிப்பார்த்தான். இவளும் மறுத்தபடியே தாவிக்கொண்டிருந்தாள். அதே பூங்காவில் ஒரு சிறு பெண்ணை மீனாட்சியைப் போல அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள் அவளது  பெற்றோர். சுசிலாவின் எதிரே வேலிக்கம்பிப் படர்விலிருந்து குரங்குகள் குதிக்கத் தொடங்கியிருந்தன. வேலியைத் தாண்டி சலையைக் கடந்து சாலையின் மறுகரையில் மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்திருந்த வெளியில் மிகப்பெரிய மரமொன்று நின்றிருந்தது. காலவெளியில் அம்மரத்திற்கு வயதும் முதிர்வும் அதிகமாயிருக்க வேண்டும். மரக்கிளையொன்றின் நுனியிலிருந்து குரங்கொன்று ஊஞ்சலாடியபடியே கீழே தாவியது. ஏனோ அந்தக் காட்சி சுசிலாவிற்கு சிரிப்பை வரவழைத்துக்கொண்டேயிருந்தது.

“வேலியோரம் படர்ந்திருக்கும்

போகன்வில்லாக் கிளைகளுக்கு

வெயில் கொஞ்சம் தனித்து விழுந்திருக்கிறது

வெள்ளையாய்ப் பூத்திருக்கும்

மலர்களை விரல்கோதிப் பறிக்க

மூன்றில் எதற்கும் வாசனையில்லை

புல்வெளியில் நடந்துவரும் மழலை

வழிதவறியதாய்ச் சிணுங்கும்

முகபாவத்திற்கே அலறுகிறாய்

பிரியத்திற்குரியவளின் முன்பு

புகைப்பதற்கு அஞ்சவில்லை நீ

புகைப்பதையும் புகைப்பவரையும்

அறவே விரும்பாதவளுக்கு

முதல்முறையாக

புகைத்தலின் நெடி தீங்குவிளைக்கவில்லை

ஒன்றைவிட்டு ஒன்று தாவும்

குரங்குகளுக்கு மத்தியில்

ஒருவருக்கொருவர் கரிசனமிருந்தாலும்

நாமொன்றும்

காணக்கிடைக்காத காட்சியில்லை நண்பா”

இருவரும் ஊர் திரும்பும் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். சுசிலாவின் கைகளில் ஒன்றையெடுத்து மடியில் வைத்துக்கொள்ள அனுமதி பெற்றுக்கொண்டான். சுசிலா சாலையை வெறித்தபடியேயிருந்தாள். தன் கை பற்றிய பிரக்ஞையற்றவளை கோமாளி தன் வார்த்தை ஜாலங்களால் திசைதிருப்ப முயன்றான்.

“ஏய் நமக்குப் புடிச்சமாறி வாழலாம்.ஒரு கொழந்த போதும்“

மெல்லிய புன்சிரிப்புடன் மறுப்பாகத் திரும்பிவிட்டாள். என்ன நினைத்தானோ உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டிருந்த அவளது இடக்கையை எடுத்துப் பத்திரமாக அவள் மடியிலேயே வைத்துவிட்டதாகப் பார்த்தான். அவளுக்கு அவன் கரங்களில் தன் கரமிருந்ததும் ஒன்றுதான்.தன் மடியிலிருப்பதும் ஒன்றுதான்.

“எனக்குதான் ஃபீலிங் வருது.அந்தப் பக்கம் ஒண்ணுமேயில்ல”

காதில் எதுவும் விழாததைப்போலவும் விழுந்ததுபோலவும் மையமாக  அவனைப் பார்த்தாள்.

“ஹ்ம்ம்”

இவனது இயற்பெயருக்கு அம்மா சூரியனென்று  அர்த்தம் சொன்னாள். சூரியனின் பலமடங்குக் கதிர்கள் தோற்றுப்போய் உதிர்ந்து இருளத் தொடங்கிவிட்ட அந்திக் கருக்கலில் சேராத காதல் பாதியில்  நின்றது.ராய கோபுரம் கட்டிமுடிக்கப்படாத கதையும் இதுதான். நாயக்கர் கடைசியாக அழகர் மலையைவிட்டு இறங்கியபோது தனது கைப்பேசியில்  கோபுரத்தை சில புகைப்படங்களாக எடுத்துக்கொண்டார். ஒன்று வெயிலில் பிச்சியாகி நின்றிருந்த குல்மோகர் மரத்தின் கிளைக் கரங்கள் கோபுரத்தின் மீது அழிந்த கைகளாக கருகித் தெரிந்தன. மரமில்லாமல் ஒரு புகைப்படத்தில் பின்பக்கமாக கோபுரம் சாய்ந்து விழுவதைப் போல எடுத்திருந்தார். சுசிலா வேலியையொட்டி நின்றவாறு கோபுரத்தைப் பார்த்துவிட்டு கோபுரத்தில் நுட்பமாக வடிக்கப்பட்ட சிலைகளில் ஒன்றைக் குறித்துப்  புகைப்படமெடுக்கச் சொன்னாள். அது சீனப்பொம்மையாக இருந்தது. அத்தனை கலைநயமிக்க உருவங்களுக்கு மத்தியில் சீன அரசனின் உருவம் கோமாளியாகச் சிரித்தது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button