கூப்பிடுங்கள் புதுமைப்பித்தனை

கூப்பிடுங்கள் புதுமைப்பித்தனை

அருள் ஸ்காட்

ஒரு காலகட்டத்திற்கான சிந்தனையும் அது தன்னை வெளிக்கொணரும் எழுத்தும் அந்த காலகட்டத்தின் அரசியல் சார்புடையதா அல்லது பொது வெளியில் இயங்குகின்றதா என்பதைப் பொறுத்தே அதன் ஆயுட்காலம் மதிப்பிடப்படுமோ என தோன்றுகிறது. இதில் சீரியஸ், சீரியஸ் அல்லாதது என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. இலக்கியம், பாபுலர் என்ற பாகுபாடு இருந்தாலும் இவைகள் இரண்டும் காலத்திற்கும் நிலைத்து நிற்கின்றன. ஹெம்மிங்வேவின் எழுத்தில் அதிகம் பாதிப்பைப் பெற்றுக் கொண்டு அதில் இருந்து ஒருவர் சிறந்த இலக்கியவாதியாக உருவாகிவிட முடியாது. James Hardly Chaseயை இலக்கியம் என்றும் சொல்ல முடியாதுதான். இருந்தாலும் எனக்கு அறிமுகமான ஹெம்மிங்வே கல்லூரி பேராசிரியர்களிடம் இருந்து அறிந்துகொள்ளப்பட்டவரல்ல. என் மானசீக எழுத்தாளனாக ஹேம்மிங்வே மாறினது Chaseல் நான் படித்த ஹெம்மிங்வே. ஒரு காட்சியை விவரிக்கும்போது இந்த இடம் ஹெம்மிங்வே நாவலில் வருகின்ற இடம் என்று Chase குறிப்பிடுவார். இடம் ஒன்றுதான் அதுவே இலக்கியமாக ஹெம்மிங்வேவில் உயிர்பெறுகிறது. Chaseனுடைய உலகத்திலோ அது ஒரு கொலைக்களம். இந்த முரண்பாட்டை நாம் எங்கு போய் விளங்கிக்கொள்வது.

சரி, ஒரு இலக்கியவாதியை மற்றொரு சுவாரசிய எழுத்தாளன் பாராட்டலாம், புகழலாம். அது மரியாதையின் நிமித்தமாக நடப்பது. பெரியவன் சிறியவன் பாகுபாடும் இருக்கிறது. இதுவே தலைகீழாக சிலருடைய விஷயங்களில் நடக்கிறதே. ஆர்வல் நம் மத்தியில் இன்று இலக்கியவாதியாக அறியப்படுகிறார். அவர் இலக்கியவாதியா? என்ற அரசியல் சண்டைவருமானால் அதற்கு நாம் ஜவாப்தாரி கிடையாது. பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்தில் அவருடைய படைப்புகள் இருப்பதினாலேயே அவரை இலக்கியவாதியென கொள்வோமாக. இந்த ஆர்வல் தன் வாசிப்பில் அதிகம் கொண்டாடுவது இந்தச் சுவாரசிய எழுத்தாளர் Chase என்று சொன்னால் நம்மால் நம்பவே முடியாது. Chaseக்காக ஒரு கட்டுரை (“Raffles and Miss Blandish”)என்றால் எந்த இலக்கியவாதியால்தான் பொறுத்துக்கொள்ள முடியும். Chaseக்கு என்று ஒரு ஹெம்மிங்வே இருப்பது போன்று ஆர்வலுக்கும் ஒரு Chaseஇருக்கத்தானே செய்கிறார்.

இதற்கிடையில் கறாரான இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு பழைய புராணத்தையும், தத்துவத்தையும், அரசியலையும் நாவலாக எழுதிவிட்டு என்னுடையதுதான் இலக்கியம் என்று சண்டைக்கு வரக்கூடாது. நீங்கள் ஆட்டத்திலேயே கிடையாது. ஜேஜே(James Joyce) வேண்டுமானால் தன்னை மாபெரும் இலக்கியவாதியாகக் கருதிக்கொள்ளட்டும். எங்களுக்கு எளிமையான ஹெம்மிங்வேதான் வேண்டும். நிச்சயம் சேஸ் ஹெம்மிங்வேவை “நீங்கள் ஒரு வைதீக இலக்கியவாதி. நீங்கள் எனக்கு அவசியமே இல்லை” என்று சொல்லப்போவதில்லை. அதே போன்று ஆர்வலும் எனக்குக் “கொலை, கொள்ளை, கற்பழிப்பு நிறைந்த சேசின் நாவல்கள் வேண்டாம் என்று ஒதுக்கப்போவதில்லை.

இது மேல்நாட்டு எழுத்தாளர்களின் ஒற்றுமை. நம்மிடையேயும் ஒற்றுமை இருக்கத்தான் செய்கிறது. நாம் அதனை இருட்டடிப்புச் செய்துவிடுகிறோம். அவ்வளவுதான்.

ஒரு முறை வேளச்சேரி மார்க்கமாகக் கோட்டையில் இருந்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் புளியமரத்தின் கதையை வாசித்துக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. சுந்தர ராமசாமி சிற்றிதழ் வட்டத்திற்கு மாத்திரமே சொந்தக்காரர் என்ற அபிப்பிராயம் என்னுடையது. ஆர்வ மிகுதியால் மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். உங்களுக்கு எப்படி சு. ரா வைத் தெரியும் என்று கேட்டேன். சுஜாதா தன்னுடைய கட்டுரை தொகுப்பில் அவர் சு. ராவைப் பற்றியும் புளியமரத்தின் கதையைப் பற்றியும் பேசியிருப்பதாகச் சொன்னார். அதைப் படித்துவிட்டு இப்போது புளியமரத்தின் கதையைப் படிப்பதாகச் சொன்னார்.

ஒருவேளை இதே வாலிபர் சிற்றிதழ் வட்டாரத்திற்குள் வந்திருந்து அதிக இலக்கிய ஞானம் பெற்றிருப்பாரானால் அவர் சு. ரா வை இன்றும் தொட்டிருக்கமாட்டார் என்பது எனது அபிப்பிராயம். இலக்கிய சர்ச்சைகளைப் பற்றி எதுவும் தெரியாத அந்த அப்பாவி வாசிப்பனுபவம் தேர்ந்த இலக்கிய வாசிப்பனுவத்தைக் காட்டிலும் மிகச் சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. அது இயல்பாக ஒரு புனைவின் உலகத்திற்குள் நுழைந்து தன்னால் ஆன மட்டும் அதனைப் பாராட்டிவிட்டு வெளியேறுகிறது. அந்த வாசிப்பிற்கு இலக்கியம் எது சுவாரசியம் எது என்ற உணர்வனுபவம் இருந்தாலும் அதனை பிரித்துப்பார்க்கும் அரசியல் பேதம் கிடையாது.
ஏன் நம்முடைய சிறந்த இலக்கிய வாசகராகிய கா. நா. சு “நான் தாஸ்தாவஸ்கியையும் படிப்பேன், அகதா கிறிஸ்டியைம் படிப்பேன்” (இலக்கியதிற்கு ஓர் இயக்கம்)என்கிறார். அவருடைய பார்வையில் சிறந்த இலக்கியம் என்பது அவர் வாசிப்பின் ரசனையைப் பொறுத்தது. அதே நேரத்தில் அகதா கிறிஸ்டியை இலக்கியம் என்றும் சொல்லத் துணியமாட்டார்.

ஜாய்ஸ் ஒருவேளை தன்னை இலக்கியகர்த்தா என்று சொன்னால், இல்லை என்று சொல்லுவதற்கு நாம் ஆளில்லை. அதற்கான தகுதியும் நமக்கில்லை. எனினும் டால்ஸ்ட்டாயின் போரும் வாழ்வும் படித்து இன்புறுகிற நான் ஜாஸ்சிடம் செல்ல தயங்குகிறேனே அல்லது பயப்படுகிறேனே. அவர் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளட்டும். தவறு ஒன்றும் கிடையாது. ஆனால் அந்த ரயில் பெட்டியில் செல்கிறானே அப்பாவி வாசகன் அவனுடைய வாசிப்பு தீர்மானித்துவிடும் எது சிறந்தது, எது சிறந்தது இல்லை என்பதை.
ஆக எழுத்து பொதுவெளியில் இலக்கியமாகச் செயல்படுகிறதா அல்லது அரசியல் சார்புடையதா என்பதே இப்போதைக்கான கேள்வி. புதுமைப்பித்தனின் பலமுறை படித்த கட்டுரை ஒன்று படிக்கக் கிடைத்தால் இன்றைக்கும் நான் அதனை எடுத்துப் படிப்பேன். பாதுகாத்து வைத்து இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் படிப்பேன். அதற்கு உயிர் இருக்கிறது. அதுவே கல்கியின் கட்டுரைகளைப் பக்கம் பக்கமாகக் கொடுத்தாலும் “அட புதுசா என்ன இருக்க போகுது. அந்தக் காலத்து அரசியல் பிரச்சனையாக இருக்கும்” என்று புத்தகக் கடையில் இருந்து வாங்காமலேயே வந்துவிடுவேன்.

புதுமைப்பித்தன் என்றால் ஏற்கனவே ஒரு காப்பி இருந்தாலும் புதிதாக ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதே ஆசை சேசுக்கும் இருக்கிறது. எனினும் அந்த நூறு நாவல்களில் நான் படிக்காததைத்தான் வாங்க ஆசைப்படுகிறேன். எனினும் Chaseன் நிரந்தர இடம் மூர் மார்கெட்தான். இதில் தாஸ்தாவஸ்கியும், டால்ஸ்டாயும் எத்தனை மொழிபெயர்ப்பில் வந்தாலும் அத்தனை மொழிபெயர்ப்பையும் வாங்கி பத்திரப்படுத்தி படிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒன்றுஆசையோடு வாங்கி நுகர்ந்துவிட்டு பழைய புத்தகக் கடையில் தூக்கியெறிய வேண்டியவைகள். மற்றொன்று எத்தனை முறை படித்திருந்தாலும் பழைய புத்தகக் கடையில் பார்த்த மாத்திரத்தில் வாங்கி பத்திரப்படுத்த வேண்டும் என்ற ஆசை. எவ்வளவு பழையதாகிறதோ அவ்வளவுக்கும் மதிப்பு கூடுகிறது. ஒன்று நம் புத்தக அறையைவிட்டு கடைக்கும் மீண்டும் அங்கிருந்து மற்றவர்களின் புத்தக அறைக்கும் பயணம் செய்கிறது. மற்றொன்று பொக்கிஷம் போன்று அரிதாகப் பழைய புத்தகக் கடையில் கிடைக்கப்பெற்றால் பாதுகாக்க வேண்டும்போல் இருக்கிறது. பழையது ஆக ஆக அதன் மதிப்பும் கூடுகிறது.
ஆக, இலக்கியமும், சுவாரசியமும் ஒருபோதும் காலாவதியாகாத வஸ்துகள். அவர்கள் நம்முடைய புத்தக அறைக்கும் மூர்மார்கெட்டுக்கும் பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தச் சீரியஸ் எழுத்தாளர்கள்தான் ஐயோ பாவம். மூர்மார்கெட்டிலும் இடம் இல்லை. புத்தக அறைக்கும் பளு. இந்தப் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலாவது இடம்பிடிப்பார்கள் என்று பார்த்தால் அங்கும் இடம் கிடையாது. ஏதோ நாலு பேர் வாசித்தாலே போதும்.