மொழிச் சித்திரங்கள் – 1

மொழிச் சித்திரங்கள்

தொடர்:- கருந்தேள் ராஜேஷ்

அத்தியாயம் – 1 The Bridges of Madison County

தரமான திரைப்படம் ஒன்றை எழுதவும் எடுக்கவும் திரைக்கதையாசிரியர்களும் இயக்குநர்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகக்கடினமானவை. அதிலும் ஒரு திரைக்கதையை ஒவ்வொரு வரியாக ஆதியில் இருந்து அந்தம் வரை எழுதி முடிக்கும் வேலைதான் இருப்பதிலேயே நேரம் எடுத்துக்கொள்ளும் வேலைகளில் முதன்மையானது. கூடவே, அவ்வேலை தரும் மன உளைச்சலும் மூளைக்காய்ச்சலும் எழுத்தில் அடக்கிவிட முடியாதவை. எனவே, ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு ஆரம்பப் புள்ளியாக ஒரு திரைக்கதையை எழுதும் கலையே இருக்கிறது. திரைக்கதை நன்றாக வெளிவந்தால் திரைப்படமும் கட்டாயம் ஓரளவாவது நன்றாக இருக்கும் என்பது பொதுவானதொரு உண்மை.

120-140 பக்கத் திரைக்கதை எழுதுவதே இப்படி என்றால், 300-400 பக்க நாவல்களையும் புத்தகங்களையும் எழுதுவது எப்படி இருக்கும்? கட்டாயம் அதுவும் மிகக்கடினமே. அதிலும், அப்படி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றைத் திரைக்கதையாக மாற்றி, அந்தத் திரைக்கதையைப் படமாகவும் எடுத்தால் எப்படி இருக்கும்?

அப்படி, ஏற்கெனவே புத்தகங்களாக எழுதப்பட்டுப் பின்னர் திரைப்படங்களாக எடுக்கப்பட்ட சில படைப்புகளைப்பற்றித்தான் இந்தத் தொடரில் நாம் கவனிக்கப்போகிறோம். இதில் முடிந்தவரை அனைத்து மொழிகளும் இடம்பெறும். நான் படித்து, எனக்குப் பிடித்துப் படமாக எடுக்கப்பட்ட அனைத்துப் படங்களும் இடம்பெறும்.

தொடரின் முதல் படத்தை கவனிக்கலாம்.

நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? காதல் கைகூடியிருந்தாலும் சரி, அல்லது உடைந்து சிதறியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது, ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம் அல்லவா? அந்த ஒருவர், இந்தக் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும். காதலில் மூழ்கியிருந்த நாட்களில், நாம் எவ்வளவு களிப்புடன் இருந்தோம்! நாம் காதலித்தவரோடு எதிர்காலத்தில் வாழப்போவதை எண்ணி, எவ்வளவு முறை நமக்குள்ளே புன்னகைத்திருக்கிறோம்! பலர் கூடியுள்ள ஒரு இடத்தில் கூட, நமது காதலனோ அல்லது காதலியோ நம்மருகே இல்லாமல், ஒரு பெரும் தனிமையைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம். இரு ஒத்த மனங்களுக்குள் மலரும் காதல் என்பது, ஒரு பெரும் சூறாவளியைப் போல் நம்மை அடியோடு தூக்கிச் சென்றுவிடுகிறது. அவர்களுடன் நாம் சிலகாலமே இருந்தாலும், நமது வாழ்க்கை முழுமைக்குமே அது போதும் என்ற ஒரு நிம்மதியை அளிக்கக்கூடியதே காதல்.

அப்படிப்பட்ட ஒரு அழகான காதல் கதையே ‘The Bridges of Madison County’.

எனது சிறுவயதில், விகடனின் குழுமத்தில் இருந்து வெளிவந்த ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வாரப்பத்திரிக்கையில் (அக்காலத்திய முதல் தமிழ் Tabloid அது), மதன் ஒருமுறை, இப்படம் வெளிவந்த தருணத்தில், இப்படத்தை மிகவும் சிலாகித்து எழுதினார். அந்தக்கதை மிகவும் பிடித்துப்போய், நீண்ட நாட்கள் அப்பத்திரிக்கையை என்னுடன் வைத்திருந்தேன். பின்னர், சிலவருடங்களுக்கு முன், ஒரு நாள் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படப்பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சட்டென்று இப்படத்தின் பெயர், பொறி தட்டியது. பின், கஷ்டப்பட்டு இப்படத்தை வாங்கிப் பார்த்ததில், பழைய சிறு வயது நினைவுகளை மறுபடி உணர்ந்தேன். எனக்கு மிகப்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.

ராபர்ட் ஜேம்ஸ் வாலர் என்ற அமெரிக்காவின் மிகப்பிரபலமான எழுத்தாளர் எழுதி (இதுதான் அவரின் முதல் நாவல் – எழுதியபோது அவருக்கு 53 வயது. அதுவரை, ஒரு புரொபஸராக இருந்தவர்), 1992 வில் வெளிவந்த இந்த நாவல், கிட்டத்தட்ட ஐம்பது மில்லியன் பிரதிகள் உலகம் முழுக்க விற்று, இந்த நூற்றாண்டின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக மாறியபோது, படமாக எடுக்கப்பட்டது.

இப்படத்தின் முதல் ஆச்சரியம் என்னவென்றால், இத்தகைய ஒரு முழுமையான ரொமாண்டிக் படத்தில், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்ததுதான். அதுவரை ஒரு அதிரடி action hero வாக இருந்தவர், இப்படத்தின் கதை பிடித்துப்போய், இதனை இயக்கவும் செய்தார். படம் வெளிவந்த ஆண்டு 1995. இப்படத்தின் கதாநாயகியாக நடித்தவர், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான மெரில் ஸ்ட்ரீப்.

இப்படம், 1965இல் தொடங்குகிறது. ஃப்ரான்செஸ்கா, தனது கணவருடனும், இரு குழந்தைகளுடனும் வாழ்ந்துவருகிறாள். அவளது கணவரும் குழந்தைகளும் ஒரு சந்தைக்கு சென்றிருப்பதனால், வீட்டில் தனியாக இருக்கிறாள். அப்பொழுது, வாசலில் ஒரு காரின் ஒலி கேட்டு, வெளியே வருகிறாள். அங்கு, ஒரு புகைப்படக் கலைஞனான ராபர்ட் கிங்காய்ட் நின்றுகொண்டிருக்கிறான். நேஷனல் ஜியாக்ரஃபிக் இதழில் வேலைசெய்வதாகச் சொல்லும் அவன், அங்குள்ள ஒரு பாலத்தைப் புகைப்படம் எடுக்கப்போவதாகவும், அப்பாலத்திற்கு வழிசொல்ல முடியுமா என்றும் கேட்கிறான். அவனது நட்பான அணுகுமுறை ஃப்ரான்செஸ்காவுக்குப் பிடித்திருப்பதனால், அவனுடன் காரில் செல்கிறாள்.

செல்லும் வழியெல்லாம், மிகவும் இயல்பான ஒரு பேச்சு அவர்களுக்கிடையில் நிகழ்கிறது. பேச்சினிடையே, ராபர்ட் விவாகரத்தானவன் என்பதும், அவன் தொழில்நிமித்தமாக ஊரெங்கும் சுற்றுவது அவன் மனைவிக்குப் பிடிக்காததனால் தான் இருவரும் பிரிந்தனர் என்றும் அவள் அறிகிறாள். ராபர்ட், ஃப்ரான்செஸ்காவின் சொந்த ஊரைப்பற்றிக் கேட்க, அந்த ஊர் யாருக்கும் தெரியாது என்று சொல்லும் அவள், தான் இத்தாலியில் ஒரு கிராமமான பாரியில் பிறந்ததாகச் சொல்கிறாள். ராபர்ட், அந்த ஊர் அவனுக்குத் தெரியும் என்றும், அந்த வழியாகச் செல்லும்போது, அந்த ஊரின் அழகைப் பார்த்து, அங்கேயே சில நாட்கள் கழித்ததாகவும் சொல்கிறான்.

ஒரு ஊரின் அழகை ரசிப்பதற்கு, எந்தக் காரணமும் இல்லாமல் அங்கு தங்கியதாகச் சொல்லும் ஒருவனை அவள் அன்று தான் முதன்முதலில் பார்க்கிறாள். அந்த நிமிடத்தில், அவளுக்கு ராபர்ட் மேல் அன்பு சுரக்கிறது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி, தனது நாட்குறிப்பில் அவள் இவ்வாறு எழுதுகிறாள் – ‘அந்த நொடியில், அதுவரை என்னைப்பற்றி நான் என்னவெல்லாம் எண்ணியிருந்தேனோ, அது அத்தனையும் அப்படியே அழிந்துவிட்டது. அந்த நொடியில், நானும் இன்னொரு சாதாரணப் பெண்ணைப்போல்தான் உணர்ந்தேன்; ஆனாலும் – வேறு எந்தத் தருணத்தைவிடவும் – நான் நானாகவே முற்றிலும் முழுமையாக இருந்தேன்’.

பாலத்தை அடைந்து, ராபர்ட் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்குகிறான். ஃப்ரான்செஸ்கா மெதுவாக அங்குமிங்கும் நடந்தபடியே அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். பின்னர், ஃப்ரான்செஸ்காவின் வீட்டை அடையும் அந்த இருவரும், தங்களது வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். மெதுவாக, மிக மெதுவாக, எப்பொழுது அது நடந்தது என்றே தெரியாமல், அவர்களுக்குள் காதல் முகிழ்க்கிறது. அந்த இருவரும், தாங்கள் இவ்வளவு நாட்கள் வாழ்ந்தது, இந்த நொடியில் சந்தித்துக்கொள்வதற்காகவே என்பதை உணர்கிறார்கள்.

அங்கேயே, அவர்கள் நான்கு நாட்களைக் கழிக்கிறார்கள். அந்த நான்கு நாட்களும், அந்த இருவரின் வாழ்விலேயே மறக்க முடியாத நாட்கள் ஆகின்றன. ஃப்ரான்செஸ்கா அவ்வளவு சந்தோஷமாக அதுவரை இருந்ததில்லை. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, இவ்வொரு நொடியிலும், அவள் அவளாகவே வாழ்கிறாள். அதுவரை, ஓர் சாதாரணமான பெண்ணாக இருத்தி வைக்கப்பட்ட அவள், முதல்முறையாக, தன்னை முழுமையாக உணர்ந்த ஒருவனுடன் இருக்கிறாள். அவன் அவளை எந்தத் தளையிலும் சிறைப்படுத்த விரும்பவில்லை என்றும், அவள் ஒரு சுதந்திரமான பறவையாக வாழ்வதையே விரும்புகிறான் என்றும் உணர்கிறாள்.

ராபர்ட் கிளம்பும் நேரமும் வருகிறது. தன்னுடனேயே அவளை வந்துவிடும்படி அவன் கேட்கிறான். இந்த நிலையில் ஃப்ரான்ஸெஸ்கா என்ன முடிவெடுக்கிறாள்? இதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? அதுதான் படம்.

வழக்கமாகப் பட விமர்சனங்களில் கதையை முழுமையாகப் பலரும் சொல்லிவிடுவார்கள். அப்படி நான் இதைச் சொல்லவில்லை. நான் சொல்லாமல் விட்டது ஏராளம். கதையைப் பற்றிய ஒரு முன்னுரை என்று இதை வைத்துக்கொள்ளலாம்.

இந்தப் படம் மட்டுமல்லாமல், இந்த நாவலும் நான் படித்த/பார்த்த படைப்புகளில் மிகச்சிறந்தவைகளில் ஒன்று என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். என்ன காரணம் என்றால், காதல் என்ற வஸ்துவைத் தெளிவாகப் புரியவைக்கக்கூடிய உணர்வுகள் நாவலில் எப்படி விளக்கப்பட்டிருக்கின்றனவோ அதேபோன்றதொரு உணர்வைப் படமும் துல்லியமாகத் தருகின்றது. அதேசமயம், மிகச்சில படைப்புகளே புத்தகத்தைவிடவும் நம் மனதுக்கு நெருக்கமானதொரு உணர்வைத் தரும். ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கௌண்டி திரைப்படம் அப்படிப்பட்டது. நாவலுக்கும் படத்துக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகளே திரைப்படத்தை நமக்கு இன்னமும் அதிகமாகப் பிடிக்கவைக்கும் தன்மையுடையன. நாவல் உண்மையில் எழுத்தாளர் ராபர்ட் ஜேம்ஸ் வாலருக்குக் கிடைத்த ஒரு சில ஆதாரங்களில் இருந்தே துவங்குகிறது. ஒரு சகோதர-சகோதரி ஜோடியிடம் இருந்து அவர்களின் தாய் எழுதிய கடிதங்கள், நாட்குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவை வாலருக்குக் கிடைக்கின்றன. அதைவைத்துக்கொண்டு, நாங்கு நாட்கள் ஒரு புகைப்பட நிபுணருடன் அவர்களின் தாய்க்கு இருந்த ஒரு affair பற்றி அவர் அறிகிறார். பின்னர் அதனை விரிவாகக் கண்டறிந்து, இந்நாவலை எழுதுகிறார். ஆனால் படத்தில் இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் இல்லை. நேரடியாக அந்த சகோதர சகோதரி ஜோடியே ஆதாரங்களைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, தங்களது தாய் பற்றி அறிவதாகக் கதை செல்கிறது. அங்கேதான் ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது. இதனால் நாவலைவிடவும் திரைக்கதை இன்னும் கச்சிதமாக இருப்பது எளிதில் புரியும்.

அதேபோல், நாவலில், ஃப்ரான்ஸெஸ்கா கதாபாத்திரம் தற்செயலாக ராபர்ட் கின்காய்டை சந்திப்பதாக இருக்கும். ஆனால் படத்தில் அப்படி இல்லாமல், இயந்திரத்தனமான குடும்ப வாழ்க்கையில், ஏதேனும் மாற்றங்கள் நிகழாதா என்று ஏங்கும் பெண்ணாக ஃப்ரான்ஸெஸ்காவின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கும். இதனால் ஃப்ரான்ஸெஸ்காவின் மீது நமக்கு ஏற்படும் பரிவுக்கும் பாசத்துக்கும்- ஏன் காதலுக்கும் கூட அளவே இல்லை. ஒரு பெண்ணாக ஃப்ரான்ஸெஸ்காவுக்கு இருக்கும் அடையாளம் – அவளது இயல்பான குணத்தின் வெளிப்பாட்டைப் பிறர் கண்டறிந்து அவளை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் ஒரு உறவு – ஒரு மனைவியாக அவளுக்கு முற்றிலும் மறுக்கப்பட்டிருக்கும். வேண்டுமென்றே ஒரு கொடுங்கோல் கணவனாகவெல்லாம் அவள் கணவன் இருக்கமாட்டான். ஆனால் மெதுமெதுவே, குடும்ப வாழ்க்கையின் தருணங்களில் மகிழ்ச்சி மறைந்துபோய், ஒரு இயந்திரமாக அவள் மாறிவிட்டிருப்பாள். அப்போதுதான் ரிச்சர்ட் கிங்காய்ட் என்ற புகைப்பட நிபுணன் அவளது வாழ்க்கையில் நுழைவான். அவன் ஃப்ரான்ஸெஸ்காவை உள்ளது உள்ளபடி உணர்ந்துகொண்டு, அவளுக்குள் மறைந்துபோயிருந்த அவளது இயல்பான உணர்வுகளை எழுப்புவான். அவளை மதிப்பான். அவளிடம் பல விஷயங்களில் கருத்துகள் கேட்பான். அவளது குட்டிக்குட்டி செய்கைகளை ரசிப்பான். அவளுடன் அன்பு பொங்கிவழிய உறவுகொள்வான். இதெல்லாம் ஃப்ரான்ஸெஸ்கவின் வாழ்க்கையில் முற்றிலுமாக மறைந்துபோயிருந்தவை. நாவலைவிடவும், திரைப்படம் இந்த மாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும்.

அதேபோல், திரைப்படத்தில், இயக்குநர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஃப்ரான்ஸெஸ்காவை வெளிப்படுத்தியிருக்கும் காட்சிகள் அற்புதமானவை. கிட்டத்தட்ட முழுப்படத்திலுமே கிங்காய்டைக் காதலும் காமமும் நிறைந்ததொரு பார்வையாலேயே ஃப்ரான்ஸெஸ்கா துளைத்துக்கொண்டே இருப்பாள். படத்தில் இப்படிப்பட்ட பல காட்சிகள் உண்டு. அதிலெல்லாம் ஃப்ரான்ஸெஸ்காவாக நடித்த மெரில் ஸ்ட்ரீப் அற்புதமாக நடித்திருப்பார். படம்முழுக்கவே ஃப்ரான்ஸெஸ்காவின் வழியாகவே கிங்காய்டை நாம் பார்க்கிறோம். அதுதான் இப்படத்தின் சிறப்பு.

நாவலில் இருவரின் காதலும் சமமாகவே சொல்லப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஃப்ரான்ஸெஸ்காவின் கதையாகவே காட்சிகள் செல்கின்றன. ஃப்ரான்ஸெஸ்காவின் வாழ்க்கையில் நான்கு நாட்கள் வந்துசென்ற ஒரு அந்நியனின் கதையாகவே முழுப்படமும் பயணிக்கிறது. இதனால் நாவலைவிடவும் ஃப்ரான்ஸெஸ்காவை இப்படத்தில் நம்மால் நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், நாவலை விடவும் இப்படம் கட்டாயம் உங்கள் நினைவில் பலகாலம் நிலைத்திருக்கும். அதற்கு முதற்காரணம் இயக்குநர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டே. கூடவே, ஃப்ரான்ஸெஸ்காவாக நடித்த அற்புதமான நடிகை மெரில் ஸ்ட்ரீப்.

படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் வசனம் ஒன்று வருகிறது. ஃப்ரான்ஸெஸ்கா பேசும் வசனம்.

‘ராபர்ட்.. தயவு செய்து புரிந்துகொள். நமது காதலை என்றென்றும் என் மனதில் பூட்டிவைக்கவே விரும்புகிறேன். நாம் இருவரும் இப்போது இங்கிருந்து ஓடிப்போய் எளிதாக வேறொர் இடத்தில் வாழமுடியும். ஆனால் அதன்பின் இந்த நான்கு நாட்களில் நான் உன்னைப்பற்றி எப்படியெல்லாம் நினைத்துக் காதல் கொண்டேனோ, அப்படி அந்தக் காதல் இருக்காது. குடும்ப வாழ்க்கை நம் காதலை முறித்து, ஜீவனற்றதாக மாற்றிவிடக்கூடும். இவ்வளவு நாள் நான் வாழ்ந்த வாழ்க்கையையெல்லாம் முற்றிலும் நமது புதிய வாழ்க்கைக்காக என்னால் தொலைத்துவிடவும் முடியாது ராபர்ட்.. என்னால் முடிந்ததெல்லாம், இரண்டு வாழ்க்கைகளையும் மறக்காமல் மனதில் நினைத்துக்கொள்வதே. தயவு செய்து எனக்கு உதவு.. என்றென்றும் உன்னைக் காதலிப்பதை நான் இழந்துவிடக்கூடாது. அதற்கு எனக்கு உதவு…’

எவ்வளவு அற்புதமான வசனம் இது! தற்காலத்தில் affairகள் என்பது மிகவும் எளிது. ஆனால் ஃப்ரான்ஸெஸ்காவின் உண்மையான உணர்வுகள் போல் தற்கால உறவுகள் அமையுமா என்பது சந்தேகமே. இந்த வசனம் வரும் காட்சியை நீங்கள் பார்த்தால் நான் சொல்வதைப் புரிந்துகொள்வீர்கள்.

ஒரு பெண்ணின் மனதில் எழும் காதல் என்பது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய எல்லைகளையெல்லாம் தாண்டி, வானம் போல் பரந்து விரிந்ததொரு உணர்வு. அந்த உணர்வை நாம் ஓரளவாவது புரிந்துகொள்ளவேண்டும் என்றால், காதல்/குடும்ப வாழ்க்கையின் இன்றியமையாத இயந்திரத்தனமான தருணங்களை அந்தப் பெண்ணே முற்றிலும் அனுபவிக்க விடாமல், முடிந்தவரை அந்த உறவைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்தப் பெண்ணை அவளது இயல்பு மாறாமல் எப்போதும் இருக்க நம்மால் இயன்றதெல்லாம் செய்யவேண்டும். ஒவ்வொரு கணமும் நமது காதலைப் புரிந்துகொண்டு வாழவேண்டும். இதையெல்லாம் செய்யவேண்டும் என்றால் ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கௌண்ட்டி பார்க்க/படிக்கவேண்டும்.

இப்படத்தில், நான் சொல்லாத பல அருமையான காட்சிகள் உள்ளன. படம் முழுக்கவே, ஃப்ரான்செஸ்காவின் மனநிலையில் இருந்தே படம் பயணிக்கிறது. அவள் அடையும் ஆனந்தம், அவளது சோகம், அவளது காதல், சிறுகுழந்தையைப் போன்ற அவளது சந்தோஷம் ஆகியன மிகவும் அருமையான முறையில் வெளிப்படுகின்றன. அவளது ஒரே தோழியான ஒரு பெண், அவளுக்கு எப்படித் தோழியானாள் என்ற நிகழ்வில் கூட, ஒரு சிறுகதை உள்ளது.

மொத்தத்தில், எனது மனதை ஒரு கலக்கு கலக்கிய படம். இந்த விமரிசனத்தை எழுதும் இந்த நொடியில், இப்படத்தை எனக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய மதனை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

தொடரும் ….

அத்தியாயம் 2 . . .