மொழிச் சித்திரங்கள் – 2

மொழிச் சித்திரங்கள்

தொடர்:- கருந்தேள் ராஜேஷ்

அத்தியாயம் 2 – கான் வித் த விண்ட்

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காவியம் கட்டாயம் இருக்கும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் மகாபாரதம் அப்படி இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் முதலிய நூல்களும், தற்காலத்தில் பொன்னியின் செல்வன் முதலிய நூல்களும் காவியங்களாக விளங்குகின்றன. சமகால இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலோ ஏராளமான நூல்கள் இருக்கின்றன.

இப்படி, யுனைடட் ஸ்டேட்ஸை எடுத்துக்கொண்டால், பலராலும் போற்றப்படுவது ’கான் வித் த விண்ட்’ என்ற நாவல். மார்கரெட் மிட்செல் என்ற பெண் எழுதியது.

இந்த நாவலின் பின்னணி என்ன?

யுனைடட் ஸ்டேட்ஸின் சரித்திரத்தில் உள்நாட்டு யுத்தத்தை மறந்துவிட இயலாது. ‘சிவில் வார்’ என்று அழைக்கப்படும் இந்த யுத்தம், யுனைடட் ஸ்டேட்ஸில் கறுப்பர்களை அடிமைப்படுத்துவதை மையமாக வைத்து, அமெரிக்க யூனியனுக்கும், அந்த யூனியனில் இருந்து வெளியேறிய கான்ஃபெடரேட்ஸ் என்ற 11 மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த யுத்தம். 1861ல் இருந்து 1865 வரையில் நடந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் கிட்டத்தட்ட ஆறு லட்சத்தில் இருந்து ஏழு லட்சம் வீரர்கள் மாண்டனர். இறுதியில் அடிமைத்தனத்தை ஆதரித்த கான்ஃபெடரேட் கூட்டமைப்பு தோல்வியடைந்தது. யுனைடட் ஸ்டேட்ஸின் சரித்திரத்திலேயே இந்த யுத்தம் நிகழ்த்திய நாசத்தை வேறு எந்த யுத்தமும் நிகழ்த்தியதில்லை. இதனால் அமெரிக்கப் பொருளாதாரமே ஆட்டம் கண்டது. தெற்கு மாகாணங்கள் முற்றிலும் நாசமடைந்தன. பின்னர் மெதுவாக அவை மீண்டன.

இந்த சிவில் யுத்தத்தை மையமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான படைப்புகள் யுனைடட் ஸ்டேட்ஸில் எழுதப்பட்டுவிட்டன. அவர்களால் லேசில் மறக்க இயலாத ஒரு அழிவு இது என்பதே காரணம். திரைப்படங்கள் எடுக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை ஏராளமான படங்களும் இந்தப் பின்னணியில் எடுக்கப்பட்டுவிட்டன. ஒரு சில புகழ்பெற்ற படங்களாக, The Good, The Bad and the Ugly, The Birth of a Nation, Glory, Shenandoah, Dances with the Wolves, Major Dundee, Cold Mountain, Lincoln போன்ற படங்களைச் சொல்லலாம். இவற்றில் ஒன்றுதான் கான் வித் த விண்ட்.

இதை எழுதிய மார்கரெட் மிட்செல், ஒரு சாதாரணப் பெண். 49 வருடங்களே வாழ்ந்தார். ஒரு கார் விபத்தில் படுகாயமடைந்து ஐந்து நாட்கள் கழித்து 1949ல் இறந்தார். சிறுவயதில் இருந்தே எழுதிக்கொண்டே இருந்தவர் மிட்செல். ஆனால் எழுதிய பல பக்கங்களைத் தீயிலிட்டு அழித்தும் இருக்கிறார். ’flirtatious’ என்று சொல்லத்தக்கவராக இருந்திருக்கிறார். ’அட்லாண்டாவில் இருந்த எந்தப் பெண்ணையும் விட, தனது குறைந்த வாழ்க்கையில் ஏராளமான, வெளிப்படையான, இவர்மேல் வெறித்தனமான காதலில் விழுந்த ஆண்கள் மிட்செலுக்கு உண்டு’ என்றே அவரது 22 வயதில் பாலி பீச்ட்ரீ என்ற எழுத்தாளர் எழுதியிருக்கிறார். மிட்செலே தான் ஒரு ஃப்ளர்ட் என்று வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில்தான் கான் வித் த விண்ட் நாவலையும் மிட்செல் எழுத ஆரம்பித்திருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் காலில் ஏற்பட்ட ஒரு காயத்தால் வீட்டிலேயே மிட்செல் இருக்க நேர்கிறது. அப்போது, அவரது கணவர் வாங்கிக்கொடுத்த டைப்ரைட்டரில்தான் இந்த நாவலை மிட்செல் எழுத ஆரம்பித்து முடித்தார். நாவல் வெளியான ஆண்டு – 1936. ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நாவல் இது.

நாவலின் கதாநாயகியான ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற பெண்ணில் மிட்செலின் பல கூறுகளை நாம் கவனிக்க முடியும். மிட்சலைப் போலவே ஸ்கார்லெட்டும் பல ஆண்களிடம் பழகுவாள். பலரும் இவள் பின்னால் பைத்தியமாகத் திரிவார்கள். ஆனால் ஸ்கார்லெட்டுக்குத் தேவையானது காமம் அல்ல. காதலும், அன்பும்தான் அவளது தேவைகள். பல ஆண்களைக் கடந்தபின்னர், நாவல் முடியும் காலத்தில்கூட ஸ்கார்லெட், துணிவு நிரம்பிய மனதோடு இன்னொரு புதிய நாளை எதிர்நோக்கி வாழ்வதாக நாவல் முடியும். மிட்செலும் அப்படி இருந்தவர்தான்.

ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற, ஜார்ஜியாவைச் சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையில், உள்நாட்டுப் போரின் பின்னணியில் நிகழும் சம்பவங்களே கதை. ஜார்ஜியா, கான்ஃபெடரேட் அமைப்பில் அங்கமாக இருந்த மாநிலம். கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்த மாநிலம். எனவே இயல்பிலேயே, அமெரிக்க யூனியன் அடிமைகளை ஒழிக்க ஆப்ரஹாம் லிங்கனின் தலைமையில் சட்டம் கொண்டுவந்தபோது அதை ஜார்ஜியா எதிர்த்தது. தன்னுடன் ஒத்த கருத்து உடைய பிற பத்து மாநிலங்களோடு சேர்ந்து கான்ஃபெடரேட்டாக உருவாகி யூனியனை எதிர்த்தது. போலில் கலந்துகொண்டு இறுதியில் தோற்றது. எனவே, இந்நாவலில் கறுப்பின மக்களை எதிர்க்கும் பல வசனங்கள் உண்டு. ஆனால் அவையெல்லாமே நாவல் எழுதப்பட்ட காலகட்டத்தில் இயல்பானவையாகவே இருந்திருக்கின்றன என்று அறிகிறோம். அக்காலகட்டத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த மக்கள் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டனர் என்று நாம் புரிந்துகொண்டால், இவ்வார்த்தைகள் நம்மை பாதிக்காது. மாறாக, யுனைடட் ஸ்டேட்ஸின் கறுப்பு சரித்திரமாகவே இவ்வார்த்தைகள் நம்முன் விரியும்.

இந்த நாவல் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில், ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற இளம்பெண், தனக்குப் பிடித்த ஒரு இளைஞன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாக அறிகிறாள். மனமுடைந்துபோய், அவனிடம் சென்று தன் காதலைச் சொல்கிறாள். ஆனால் அவனோ, இவளுக்கும் அவனுக்கும் இருக்கும் குண வேறுபாடுகளைச் சொல்லி, அதனால் இருவருக்கும் ஒத்து வராது என்று இவளது காதலை மறுத்துவிடுகிறான். ஸ்கார்லெட் ஆத்திரம் அடைகிறாள். இந்த விவாதத்தை அந்த இடத்தில் இருக்கும் ரெட் பட்லர் (Rhett Butler) என்பவன் கேட்டுவிடுகிறான். அதை  ஸ்கார்லெட்டிடம் சொல்லிக் காட்டி அவளைக் கிண்டல் செய்கிறான். அப்போதுதான் யுத்த அறிவிப்பு ஸ்கார்லெட்டை எட்டுகிறது. அப்போது ஸ்கார்லெட்டைப் பிடித்துப்போன ஒரு இளைஞன் அவளிடம் அவனது காதலைச் சொல்ல, உடனடியாக அதை ஒத்துக்கொண்டு அவனைத் திருமணமும் செய்துகொள்கிறாள் ஸ்கார்லெட். அவனோ யுத்தத்தில் நிமோனியா கண்டு அடுத்த இரண்டு மாதங்களில் இறந்துவிடுகிறான். ஸ்கார்லெட்டுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால் கணவன் இறந்ததால் கறுப்பு ஆடை அணிந்து அவனது மரணத்துக்காக துக்கம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஸ்கார்லெட்டுக்கு வருகிறது. சக தோழிகள் அவர்களது வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டு இருக்கும்போது, அப்படிச் செய்யமுடியாமல் இப்படி துக்கம் அனுஷ்டிக்க நேர்கிறதே என்று கோபம் கொள்கிறாள் ஸ்கார்லெட். அவளால் வெளிப்படையாக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் செய்துவிட்ட சமுதாயத்தின் மீது ஆத்திரம் அடைகிறாள்.

இரண்டாம் பாகத்தில், ஸ்கார்லெட் அட்லாண்டாவுக்குச் செல்வதுபற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கும். அங்கே ரெட் பட்லரை மறுபடி சந்திப்பாள். அப்போது ஒரு விழாவில், ஸ்கார்லெட்டுடன் நடனம் ஆடவேண்டும் என்று ரெட் தனது விருப்பத்தைத் தெரிவிப்பான். விதவையோடு நடனமா என்று அனைவரும் அதிர்ச்சியடையும்போது, தனது வாழ்க்கையின்மீதே கடும்கோபம் கொண்டிருக்கும் ஸ்கார்லெட் இதனை ஏற்று அவனுடன் நடனம் புரிவாள்.

மூன்றாவது பாகத்தில், அட்லாண்டா போரால் சூழப்பட்டிருக்கும் தருணத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். யூனியன் படைகள் அட்லாண்டாவை சூழ்ந்துவிடும். அப்போது ஸ்கார்லெட்டுடன், அவள் முதல் பாகத்தில் காதலைச் சொல்லிய இளைஞனின் மனைவி, அவர்களின் குழந்தை ஆகியவர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஊரை விட்டே கூட்டிச்சென்றுவிடும்படி ஸ்கார்லெட் ரெட் பட்லரிடம் கெஞ்சுவாள். ரெட்டும் ஒரு வண்டியைத் திருடி, இவர்களை பத்திரமாக அழைத்துச் செல்வான். இந்த சாகஸம் இந்த பாகத்தில் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் செல்லும் வழியிலேயே, இவர்களை விட்டுவிட்டு ரெட் பட்லர் ராணுவத்தில் /சேர்ந்துவிடுவான். ஸ்கார்லெட்டே அனைவருடனும் Tara என்ற இடத்துக்கு வந்துசேர்வாள். அங்கே, மெதுவாக, வாழ்க்கையின் துயரங்கள் ஸ்கார்லெட்டை சூழ்ந்துகொள்கின்றன. தன்னுடன் இருக்கும் அனைவருக்கும் சேர்ந்து உழைக்கும் பொறுப்பு அவளின் தலையில் விழுகிறது. கஷ்டப்பட்டு இதை எப்படி அவள் செய்கிறாள் என்பதே மீதிப் பகுதி. அவள் மனதைக் கவர்ந்த இளைஞன் போரிலிருந்து உடைந்த மனதோடு திரும்புகிறான்.

நான்காம் பாகத்தில், பணமில்லாமல் தவிக்கும் ஸ்கார்லெட், அந்த ஊரிலேயே இருக்கும் செல்வந்தனான ஃப்ராங்க் என்பவனைத் தந்திரமாகப் பேசி மயக்கித் திருமணம் செய்துகொள்வாள். அவனோ ஸ்கார்லெட்டின் சகோதரிக்கு நிச்சயமானவன். இருந்தும் இவளைக் கண்டு மயங்கி, இவள் தந்திரம் புரியாமல் இவளைத் திருமணம் செய்துகொள்வான். அவனது பணத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் நேரும் பிரச்னைகளை சமாளிப்பாள் ஸ்கார்லெட். இவனைக் காண்பதற்கு முன்னரே, ரெட்டிடம் பணம் இருப்பதை அறிந்து அவனிடம் போய்க் கேட்க, அவன் இவளுக்குப் பணம் தரமுடியாது என்று சொல்லியிருப்பான். அந்தக் கோபத்தில்தான் ஃப்ராங்க்கை மணந்திருப்பாள் ஸ்கார்லெட். கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் தலையெடுப்பாள். கணவனின் வியாபாரத்தை இவளே கவனிக்க ஆரம்பிப்பாள். இதெல்லாம் ஊரில் பலருக்கும் பிடிக்காது. ஒருநாள் இவளை ஒரு சிறு கும்பல் தாக்கும். அவர்களிடமிருந்து தப்பிப்பாள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஃப்ராங்க், கு க்ளுக்ஸ் க்ளானுடன் சேர்ந்து அவர்களைத் தாக்க, அவர்களால் தாக்கப்பட்டு ஃப்ராங்க் இறந்துவிடுவான். மறுபடியும் விதவையாகிவிடுவாள் ஸ்கார்லெட்.

கணவன் இறந்த சோகத்தில் இருக்கும் ஸ்கார்லெட்டை சந்திக்க ரெட் பட்லர் வர, அவனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளச்சொல்லிக் கெட்பாள் ஸ்கார்லெட். ஆரம்பத்தில் இருந்தே அவன் மீது அவளுக்கு அன்பு இருந்ததாகச் சொல்வாள். ரெட் பட்லரும் ஒப்புக்கொள்வான். இருவரும் தங்களது நிச்சயத்தை அறிவிப்பார்கள். திருமணமும் செய்துகொள்வார்கள். அப்போதே ஸ்கார்லெட்டுக்கு இரண்டு குழந்தைகள்.

திருமணம் முடிந்து சில வாரங்களில், ஸ்கார்லெட்டுக்கும் ரெட்டுக்கும் பிரச்னைகள் துவங்கும். இருவரும் ஒரே குணமுடையவர்கள் என்பதால் இருவருக்கும் அடுத்தவர்களிடம் ஆயிரம் பிரச்னைகள். இதற்கு மேல், துவக்கத்தில் ஸ்கார்லெட் காதலித்த இளைஞன், இப்போது போரிலிருந்து வந்தபின் ஸ்கார்லெட்டின் வியாபாரத்தில் அவளுடன் இணைந்துதான் பணிபுரிந்துகொண்டிருப்பான். இதை சொல்லிக்காட்டும் ரெட், இன்னும் அவனையே ஸ்கார்லெட் நினைத்துக்கொண்டிருப்பதாக ஏசுவான். பதிலுக்கு ஸ்கார்லெட்டும் அவனைத் திட்டுவாள். ஆனால் ரகசியமாக ஸ்கார்லெட்டுக்கு அந்த இளைஞன் மீது காதல் இப்போதுவரை இருந்துகொண்டேதான் இருக்கும்.

இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். அதன்பின்னர் இருவரும் தனித்தே படுப்பார்கள். பிரச்னைகள் அதிகமாகும். ஒரு நாள் நன்றாகக் குடித்துவிட்டு வந்து இவளைப் பார்த்துக் கத்துவான் ரெட். அப்போது ஸ்கார்லெட்டும் குடித்துவிட்டுக் கத்துவாள். அப்போது ரெட் இவளைத் தூக்கிக்கொண்டு சென்று கலவி கொள்வான். பின்னர் வேறு ஊருக்குச் சென்றுவிடுவான். சில நாட்களில் மறுபடியும் கர்ப்பம் அடைந்துள்ளதை ஸ்கார்லெட் அறிவாள். அப்போது வரும் ரெட், இது அந்த இளைஞனின் குழந்தைதானே என்று அவளிடம் கேட்பான். ஆத்திரம் அடையும் ஸ்கார்லெட் அவன் மேல் பாய, அவன் நகர, விழுந்துவிடும் ஸ்கார்லெட்டின் கர்ப்பம் கலைகிறது. நோய்வாய்ப்படுகிறாள் ஸ்கார்லெட். ரெட் வருத்தமடைகிறான். குடிப்பதை நிறுத்துகிறான். ஸ்கார்லெட் மெல்ல குணமாகிறாள். ரெட்டுக்கும் ஸ்கார்லெட்டுக்கும் பிறந்த குழந்தை (ஸ்கார்லெட்டின் மூன்றாவது குழந்தை) பான்னி (Bonnie), ரெட்டின் செல்லக்குழந்தையாக வளர்கிறாள். அவளுக்குக் குதிரையேற்றம் சொல்லிக்கொடுக்கிறான் ரெட். ஒருநாள், தனியாகவே குதிரை மீது அவளது நான்காவது வயதில் அமர்ந்து, ஸ்கார்லெட்டிடம், ஒரு வேலியைத் தாண்டிக் குதிக்கப்போவதாக பான்னி சொல்லிவிட்டுத் தாண்ட, வேலியில் கால் பட்டு குதிரை விழுகிறது. பான்னியின் கழுத்து முறிந்து அங்கேயே இறக்கிறாள் குழந்தை பான்னி. அந்த வேலியை வழக்கமான உயரத்தில் இருந்து ஏற்றிக் கட்டசொல்லி பான்னிதான் ரெட்டிடம் சொல்லியிருப்பாள். ரெட்டும் அப்படியே கட்டியிருப்பான். எனவே ரெட் துயரத்தில் மூழ்குகிறான். ஸ்கார்லெட்டின் மனம் உடைந்து சிதறுகிறது.

இதன்பின்னர், தனது வாழ்க்கையைக் கடந்த சில வருடங்களாகத் தொலைத்துவிட்டதாக உணரும் ரெட், இழந்த வாழ்க்கையைத் தேடி, மறுபடியும் அட்லாண்டா செல்கிறான். ஸ்கார்லெட்டோ, இத்தனை வருடங்களில் வாழ்க்கை கற்றுத்தந்த பாடங்களால் கனிந்திருக்கிறாள். ஆனாலும் இன்னும் அவள் பழைய, துடிப்பான, கோபம் நிரம்பிய ஸ்கார்லெட்தான். ரெட்டின் மீது எத்தனை கோபப்பட்டாலும், அவன்தான் அவளுக்கு மிகச்சரியான துணை என்பது ஸ்கார்லெட்டுக்குத் தெரியும். எனவே, தன்னை விட்டு அவன் போனாலும், எப்படியும் அவனைத் தன்பக்கம் மறுபடி இழுத்துவிடலாம் என்று உறுதியாக ஸ்கார்லெட் நம்புகிறாள். ’நாளை மற்றுமொரு நாளே’ என்று மனதில் நினைத்துக் கொள்கிறாள். இதுவரை அவளது வாழ்வில், யாரையாவது நினைத்துவிட்டபின்னர், அந்த ஆணை அடையாமல் விட்டதில்லை என்பதை நினைத்துப் பார்க்கிறாள்.

“இதையெல்லாம் நாளை விரிவாக யோசித்துக்கொள்ளலாம்.. நாளை, அவனை மறுபடியும் எப்படி என் பக்கம் கொணர்வது என்பதைப் பற்றி யோசிக்கலாம். எண்ணிப் பார்க்கலாம். After all, tomorrow is another day”…என்ற அவளது எண்ணத்தோடு நாவல் முடிகிறது.

=================================================

இந்த நாவலின் விசேடம், ஸ்கார்லெட் ஓ ஹாரா என்ற கதாநாயகியிடம் மிளிரும் மார்கரெட் மிட்செலின் குணாதிசயங்கள். கூடவே, இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில், ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சட்டதிட்டங்கள் தடுத்தனவோ அப்படியெல்லாமே இருந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்கார்லெட் ஓ ஹாராதான் நாவலின் மிகப்பெரிய விசேடம். நாவலைப் படிக்கத் துவங்கும் யாருக்குமே ஸ்கார்லெட்டை அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது என்பது புரியும். மெல்லமெல்ல ஸ்கார்லெட்டின் மீது காதலும் நமக்கு எழும். எத்தனையோ தருணங்களில் எடுத்தெறிந்து பேசி, குடித்து ஆர்பாட்டம் செய்து, அசிங்கமாக நடந்துகொண்டு, ஒரு வில்லி போல்தான் நடந்துகொள்வாள் ஸ்கார்லெட். ஆனால் அது எல்லாமே, இளம்பருவத்தைப் பிறரைப் போல அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என்று அவளுக்கு இருக்கும் கழிவிரக்கத்தாலும் கோபத்தாலும்தான் என்பதும் நமக்குப் புரியும். இதனால் ஸ்கார்லெட்டோடு நன்றாகவே நம்மை relate செய்துகொள்ளமுடியும். ஸ்கார்லெட்டின் அத்தனை தருணங்களிலும் நாம் அவளுடன் கூடவே இருப்பதால் நம்மால் ஸ்கார்லெட்டை உள்ளும் புறமுமாகக் கச்சிதமாகப் புரிந்துகொள்ளவும் முடியும்.

இந்த நாவல், 1939ல் திரைப்படமாக வெளிவந்தது. மிகப்பெரிய ஹிட்டாக மாறியது. அமெரிக்கர்கள் இன்றும் நினைவு வைத்திருக்கும் க்ளாஸிக்காக இப்போதுவரை திகழ்கிறது. மொத்தம் மூன்று இயக்குநர்கள் இயக்க, ஸ்கார்லெட்டாக விவியன் லேய், ரெட் பட்லராக அக்காலத்தின் சூப்பர்ஸ்டார் க்ளார்க் கேபிள் ஆகியவர்கள் நடித்து வெளிவந்த படம். மொத்தம் 1400 நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஒருவராக விவியன் லேய் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்து ஆஸ்கர் விருதுகள் இப்படத்துக்குக் கிடைத்தன.

சரி. படம் எப்படி? நாவலின் ஜீவன் படத்திலும் இருக்குமா?

கட்டாயம் படம் நன்றாகவே இருக்கும். அதேசமயம், சென்ற அத்தியாயத்தில் நாம் கவனித்த ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கௌண்ட்டி படம், நாவலை விட எப்படியெல்லாம் நன்றாக இருக்கும் என்பதை விரிவாகப் பார்த்தோம். ஆனால் கான் வித் த விண்டோ, அவசியம் படத்தை விடவும் நாவலே சிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதற்குப் பல காரணங்கள். ஆயிரம் பக்க நாவல் ஒன்றை மூன்று மணி நேரப் படமாக எடுத்தால், கட்டாயம் சுருக்கமாகவே எடுக்க இயலும் இல்லையா? கூடவே, நாவலில் வெளிப்படையாகவே கறுப்பின மக்களைத் திட்டும் வசவுகள், அப்போதைய மிகப்பெரிய நிழல் அமைப்பான கு க்ளுக்ஸ் க்ளான், நாவலின் இருண்ட தருணங்கள் ஆகியவையெல்லாமே திரைப்படத்தில் இருக்காது. இதனாலேயே ஸ்கார்லெட்டின் மன இயல்பு, நாவலில் நமக்குப் புரிவதுபோல் படத்தில் இல்லாமல், படத்தின் ஸ்கார்லெட் மற்றுமொரு ஹீரோயின்தான் என்பதைப்போலத்தான் இருக்கும். நாவலில் வரும் ஸ்கார்லெட்டின் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணமும் நமக்குத் தெளிவாக விளங்கும். இதனால் ஸ்கார்லெட்டின் குழப்பமான, ஆத்திரம் நிரம்பிய, காதலும் வெறுப்பும் ஒரே அளவு நிரப்பப்பட்ட மனம் நமக்குத் தெளிவாகப் புரியும். படத்தில் இத்தனை வெளிப்படையாக ஸ்கார்லெட்டின் கதாபாத்திரம் இருக்காது.

நாவலின் பல சம்பவங்கள் படத்தில் ஒன்று – இருக்காது; அல்லது மிகவும் லேசாக, எந்த முக்கியத்துவமும் இல்லாமல் காட்டப்பட்டிருக்கும். உதாரணமாக, நாம் ஏற்கெனவே கவனித்த காட்சி – குடித்துவிட்டுச் சண்டையிட்டபின்னர் ரெட் ஸ்கார்லெட்டைத் தூக்கிக்கொண்டு கோபத்துடன் உறவு கொள்வது – படத்தில் மிகவும் மேலோட்டமாகவே இருக்கும். இதனால், இருவரும் வழக்கப்படி கணவன் மனைவியாக உறவு கொள்கின்றனர் என்றே நாம் நினைப்போம். ஆனால் இருவரின் மனதிலும் தளும்பிக்கொண்டிருக்கும் வெறுப்பின் உச்சத்தில், கோபம் வெடித்துச்சிதறும்போது இருவரின் கலவி எப்படி இருக்கும் என்பதற்குப் புத்தகத்தைத்தான் படிக்கவேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஸ்கார்லெட்டின் உண்மையான குனாதிசயம் இதுதான். அவளுக்கு ஆண்களை எப்போதும் பிடிக்கும். பல ஆண்களுடன் பேசுவாள். இவள் காதலாகத்தான் பேசுகிறாள் என்று நம்பவைப்பாள். அதனால் காரியம் சாதித்துக்கொள்வாள். இதெல்லாம் திரைப்படத்தில் தெளிவாக இருக்காது.

நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள் படத்தில் இல்லை. ஸ்கார்லெட்டின் முதலிரண்டு குழந்தைகள்கூடப் படத்தில் இல்லை. பல சம்பவங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. முக்கியமான காட்சி ஒன்று – அட்லாண்டாவில் இருந்து போரின் மத்தியில் ரெட் பட்லரின் உதவியோடு ஸ்கார்லெட் தப்புவது – மிக மிக எளிமையாக, தேமே என்று படமாக்கப்பட்டிருக்கும்.

இத்தனையையும் மீறி, இந்தத் திரைப்படம் ஓரளவு நாவலின் ஜீவனை நமக்கு வழங்குவதில் வெற்றிபெற்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். காரணம் படம் பார்த்தால் விளங்கும்.

அமெரிக்காவின் அட்டகாசமான க்ளாஸிக்காக விளங்கும் கான் வித் த விண்ட், இப்படியாக ஸ்கார்லெட் என்ற பெண்ணின் பல கோணங்களை நமக்குக் காட்டுகிறது. உண்மையில் பெண்கள் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் அல்ல. அவர்கள், அவர்களின் இயல்புகள் வெளிப்படையாக மிளிரும்படியாக வாழ்வதை நாம் குறுக்கிடாமல் கவனித்தாலேயே போதுமானது. அப்போதுதான் அவர்களின் மனதில் இயல்பாக எழும் அன்பை நாம் உணரமுடியும். அன்பு மடும் இல்லாமல், காதல், துவேஷம், குரோதம், ஆத்திரம், துயரம் ஆகிய அனைத்து உணர்வுகளும் இந்நாவலில் வரும் ஸ்கார்லெட் மூலமாக நாவலில் இருந்து மூர்க்கமாக வெளியேறி, நமது மனதில் ஒரு பெண்ணின் பார்வையில் புகுவதை நாவல் படிக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே நம்மால் உணரமுடியும் என்பதுதான் இந்நாவலின் விசேடம்.

நாவலைப் படித்துப் பாருங்கள். பின்னர் படத்தையும் பாருங்கள். அவசியம் நான் எழுதியுள்ள பல குணங்கள் உங்கள் மனதில் வெளிப்படுவதை உணர்வீர்கள். பெண்கள் பற்றிய பொதுப்படையான உங்களது எண்ணமும் அவசியம் மாறுவதையும் உணர்வீர்கள். என்னைப்பொறுத்தவரை, ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கௌண்ட்டியின் ஃப்ரான்ஸெஸ்காவைவிடவும் கான் வித் த விண்ட் நாவலின் ஸ்கார்லெட் ஓ ஹாராதான் எனது மனதை ஒரு ஆட்டு ஆட்டிய பெண் என்று உறுதியாகச் சொல்லமுடியும். ஒரு புயல் போல என் மனதில் புகுந்து புறப்பட்டவள் ஸ்கார்லெட். கல்லூரி படிக்கும்போது இந்நாவலைப் படித்தேன். இன்றுவரை ஸ்கார்லெட்டை துளிக்கூட மறக்க இயலவில்லை. இன்னும் பல வருடங்கள் கழித்தாலும் அது முடியாது என்றே தோன்றுகிறது.

அத்தியாயம் 1