மொழிச் சித்திரங்கள் – 3

மொழிச் சித்திரங்கள்

தொடர்:- கருந்தேள் ராஜேஷ்

அத்தியாயம் – 3 Dances with the Wolves

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை, நமக்கு டெக்ஸ் வில்லர் மற்றும் கேப்டன் டைகர் காமிக்ஸின் மூலமாகத்தான் பழக்கம். அதுவும், பெரும்பாலும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், அவர்கள் அமைதி விரும்பிகள். வாழ்வை ஒரு கொண்டாட்டமாகக் கருதுபவர்கள். அமெரிக்காவை ஆக்கிரமித்த வெள்ளையர்கள் மூலமாக, இந்த இனம் அருகிக்கொண்டே வந்து, இப்பொழுது மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்களாக மாறி விட்டனர். வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிய சமயத்தில், மெதுவாக செவ்விந்தியர்கள் அழிக்கப்படத் துவங்கிய காலகட்டத்தில், அவர்களை மையமாக வைத்து நடக்கும் ஒரு கதை தான் ‘டான்ஸெஸ் வித் வுல்ஃப்ஸ்’.
இந்தப்படம், சில காரணங்களால், சற்று விசேஷமான ஒன்று. கெவின் காஸ்ட்னர் முதன்முதலில் இயக்கிய ஒரு படம். அதே போல், காஸ்ட்னர், வருடக்கணக்கில் இப்படத்தைத் தயாரிக்க முயன்று, கிட்டத்தட்ட அம்முயற்சியில் தோல்வியுறும் அயனான நிமிடத்தில், உதவி வந்து சேர்ந்து, எடுக்கப்பட்ட ஒரு படமும் ஆகும் இது. நாவலாசிரியர் மைக்கேல் பிளேக், பல காலம் உழைத்து, இந்நாவலை எழுதி முடித்தார். அவர் சோர்வுறும்போதெல்லாம் அவருக்கு நம்பிக்கையூட்டியவர், காஸ்ட்னரே தான்! பொறுமையாகக் காத்திருந்து, இப்படத்தை எடுத்தார். இதே பிளேக்கின் ‘Stacy’s Knights’ என்ற நாவல்தான் வெகு காலம் முன்னர், படமாக எடுக்கப்பட்டது. அப்போது, இதே காஸ்ட்னர் அப்படத்தில், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகாலத்தைத் தொடங்கினார்.
படம், அமெரிக்க சிவில் யுத்தத்தில் துவங்குகிறது. அமெரிக்கா, இரு துருவங்களாகப் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம். லெஃப்டினண்ட் ஜான் டன்பார், ஒரு மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கால், வெட்டியெடுக்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது. தனக்கு முன், சிலபேரின் உடல் உறுப்புகளை, மருத்துவர்கள் வெட்டியெடுப்பதைப் பார்த்துக்கொண்டே படுத்திருக்கிறார். சட்டென்று எழுந்து, எப்படியோ ஒரு குதிரையைத் திருடி, முகாமிலிருந்து தப்பி விடுகிறார். ஆனால், அவர் நோக்கம், சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு படைகளுக்கும் இடையே சென்று, அவர்களால் சுடப்பட்டு, இறந்து விடவேண்டும் என்பதாக இருக்கிறது. இம்முயற்சியின்போது, எதிரிகளை நோக்கித் தான் இவர் முன்னேறுகிறார் என்று எண்ணி, இவர் சார்ந்துள்ள படை, வீறுகொண்டு எழுந்து, எதிரிகளைத் துரத்திவிடுகிறது. சாக நினைத்த டன்பார், ஒரு ஹீரோ ஆகிவிடுகிறார். இதனால், டன்பாருக்கு அந்தக் குதிரையையே பரிசாக அளிக்கும் யூனியன் ஜெனரல், அவர் விரும்பும் இடத்துக்கே அவரை நியமிப்பதாகக் கூறுகிறார்.
டன்பார், மேற்குப் பிராந்தியத்தில் பணிபுரியவேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவிக்கிறார். அதற்குக் காரணம், அந்தப் பகுதிதான் இன்னும் பழைய அமெரிக்காவைப் போல், மண்ணின் மணம் மாறாமல் இருக்கிறது என்பதே. அந்த இடத்தில்தான் இன்னமும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கும் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்த, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் டன்பார் அங்கு செல்கிறார். அந்த இடத்தின் பெயர், ஃபோர்ட் செட்ஜ்விக் என்பது. அங்குள்ள முகாம் காலியாக இருக்கிறது. ஆனால், டன்பாரிடம் போதிய உணவுப்பொருட்கள் இருக்கின்றன. எனவே, தன்னந்தனியாக, அந்த முகாமைச் சீரமைக்கிறார். அங்கு ஒரு ஓநாயையும் பார்க்கிறார். அது அவரையே சுற்றிச்சுற்றி வருவதால், அதன் வெண்ணிறக் கால்களைப் பார்த்து, அதற்கு ‘டூ ஸாக்ஸ்’ என்ற பெயர் வைக்கிறார். ஒருநாள், அவர் ஒரு செவ்விந்தியனைப் பார்க்க நேரிடுகிறது. பக்கத்தில் உள்ள செவ்விந்தியக் குடியிருப்பு பற்றி அப்போதுதான் டன்பார் அறிந்துகொள்கிறார்.
அந்தச் செவ்விந்தியர்களுக்கு, ‘சியோக்ஸ்’ என்று பெயர். அவர்களின் எதிரிகள், ‘பாநீ (pawnee)’ என்ற இன்னொரு பிரிவினர். சியோக்ஸ் பிரிவின் தலைவர், கிக்கிங் பேர்ட். அவருக்கு ஒரு வளர்ப்பு மகள் – ஒரு அமெரிக்கப் பெண் – பெயர், ‘ஸ்டாண்ட்ஸ் வித் எ ஃபிஸ்ட் (stands with a fist)’. மெதுவாக அந்த சியோக்ஸ் பிரிவினரிடம் நண்பராக மாறுகிறார் டன்பார். அவர்களுக்கு, ஒரு பிரம்மாண்டமான காட்டெருமை மந்தையைப் பற்றித் தகவல் சொல்லி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆகிறார்.
இந்த இடத்தில் வரும் காட்டெருமை வேட்டை, இப்படத்தின் ஒரு முக்கியமான அம்சம். நூற்றுக்கணக்கில் காட்டெருமைகள். அவற்றை வேட்டையாடும் செவ்விந்தியர்கள். கூடவே தனது துப்பாக்கியுடன் டன்பார். மிகவும் கலைநேர்த்தியுடன் படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்டெருமை வேட்டை, ஒரு பிரசித்திபெற்ற விஷயமாகும். இப்படம் ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் வாங்கியற்கு, இந்தக் காட்சிகளைப் பார்த்தாலே போதும்.
டன்பாருக்கும், கிக்கிங் பேர்டின் மகளுக்கும் காதல் மலர்கிறது. முதலில் தயங்கும் கிக்கிங் பேர்ட், பின்னர் சம்மதிக்கிறார்.
இந்த நேரத்தில்தான், கிக்கிங் பேர்ட் தன்னிடம் பல நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு, டன்பார் உண்மையான பதிலைச் சொல்கிறார். வெள்ளையர்கள் தங்களைத் தாக்க வருவார்களா என்ற அவரது கேள்விக்கு, அவர்கள் சீக்கிரமே வருவார்கள் என்று பதிலிறுக்கிறார் டன்பார். இதனால், தங்கள் முகாமை, வேறு இடத்துக்கு மாற்றுகிறார் கிக்கிங் பேர்ட். தனது டைரியை எடுப்பதற்கு ஃபோர்ட் செட்ஜ்விக் வரும் டன்பாரை, அதற்குள் அங்கு வந்திருக்கும் அமெரிக்கப்படையினர் பிடித்துவிடுகிறார்கள்.
திரும்பிச் செல்ல விரும்பும் டன்பாரை, துரோகி என்ற முத்திரை குத்தி, தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, அவரை கிக்கிங் பேர்டின் படையினர் தப்புவிக்கின்றனர். மறுபடி முகாம் செல்லும் டன்பார், கிக்கிங் பேர்டிடம், தான் அவர்களுடன் உள்ள வரை, வெள்ளையர்களின் தொந்தரவு இருந்துகொண்டே தான் இருக்கும் என்று சொல்லி, அவர்களிடம் இருந்து தனது மனைவியோடு பிரிகிறார்.
பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலம், அதற்குச் சில வருடங்கள் கழித்து, அங்கு வெள்ளையர்கள் வந்தனர் என்றும், அந்தச் செவ்விந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர் என்றும் நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் படம் முடிகிறது.
ஒரு சில படங்கள், அவற்றைப் பார்த்தபின்னரும், பல நாட்கள் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. அவற்றைப் பற்றிய சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டுதான் இருக்கும். இப்படம் அந்த வகையைச் சேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்தப்படம், ஒரு நிமிடம் கூட சலிக்கவே இல்லை. ஒரு கவிதை போன்ற இப்படம், வாழ்வின் உறவுகளைப் பற்றி, மனதைத்தொடும் முறையில் சொல்கிறது. இறக்க விரும்பிய ஒரு மனிதன் – வாழ்வில் எந்தப் பற்றுதலும் இல்லாத ஒரு மனிதன், தனக்கு முற்றிலும் வேறான ஒரு சூழ்நிலையில், வாழ்க்கையைக் கண்டுகொண்டான் என்ற கருத்தை, அவன் வாயிலாகவே நமக்குச் சொல்கிறது.
கெவின் காஸ்ட்னர் ஒரு அருமையான படைப்பாளி என்பதை, இப்படம் நிரூபித்தது. அவர் முதன்முதலில் இயக்கிய இப்படம், ஏழு ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இவற்றில், சிறந்த படம், இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியன அடக்கம். காஸ்ட்னருக்கு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் கிடைத்தது.
இப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், படம் முழுக்கவே, செவ்விந்தியர்களின் சியோக்ஸ் மொழியை அனைவரும் கற்றுக்கொண்டு, அதிலேயே பேசி நடித்ததுதான். இன்னொரு முக்கியமான அம்சம், டன்பாருக்கும் அந்த ஓநாய்க்கும் உள்ள உறவு. யாருமற்ற அந்தப் பிராந்தியத்தில், இந்த இருவருக்குமே, அவர்கள் மட்டுமே நண்பர்கள். அந்த ஓநாய், கடைசிவரையில் டன்பாரை விட்டுப் பிரிவதே இல்லை. அவரை ராணுவம் கைதுசெய்து இழுத்துக்கொண்டு போகும்போது, அவர் பின்னாலேயே ஓடி வரும் அளவு, அது அவருடன் நெருங்கிப் பழகுகிறது.
இப்படத்தை, பார்த்துப் புரிந்துகொள்வதைவிட, உணர்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களில், இது ஒரு அருமையான ஒன்று.
இந்தக் கதையை, மைக்கேல் ப்ளேக் எழுதத் தீர்மானித்தபோது அதைப் பிந்நாட்களில் படமாக எடுக்கலாம் என்று ஊக்குவித்தவர் கெவின் காஸ்ட்னரேதான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக திரைக்கதைகள் எழுதிக்கொண்டிருந்தார் மைக்கேல் ப்ளேக். அவரது திரைக்கதைகள் பெரும்பாலும் படங்களாக எடுக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவரது முதல் நாவலே டான்ஸஸ் வித் வுல்ஃப்ஸ்தான். அவருக்குச் சொந்த வீடு கிடையாது. ஒரு சைனீஸ் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போதுதான், அவரது நாவலைப் படமாக எடுக்கத் தீர்மானித்திருப்பதாக கெவின் காஸ்ட்னரிடம் இருந்து தொலைபேசி வழியாகத் தகவல் வருகிறது. உடனடியாக ஹாலிவுட் கிளம்புகிறார் மைக்கேல் ப்ளேக். பின்னர் கெவின் காஸ்ட்னரின் உதவியால் திரைக்கதையாக அவரது நாவலை எழுதி முடிக்கிறார். நாவல் படமாக்கப்படுகிறது. அந்த வருடத்தின் ஆஸ்கர்களில், இப்படம் ஏழு விருதுகளைப் பெறுகிறது. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் மைக்கேல் ப்ளேக்குக்குக் கிடைக்கிறது. காஸ்ட்னர், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் வாங்குகிறார். சிறந்த படமாகவும் டான்ஸஸ் வித் வுல்ஃப்ஸ் தேர்வாகிறது. இருபது வருடங்கள் அல்லலுற்ற மைக்கேல் ப்ளேக்கின் வாழ்க்கை, இந்த ஒரே நாவலில் சரியாகிறது.
இந்தப் படத்தை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று நான் பரிந்துரை செய்கிறேன். உங்கள் மனதை இலகுப்படுத்தி, மனித உறவுகள், எந்தக் குற்றமும் செய்யாமலேயே பூமியின் பரப்பிலிருந்தே கிட்டத்தட்ட அழித்தொழிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் பற்றி வெகுவாக யோசிக்கவைக்கும் படம் இது. நாவலையும் கிடைத்தால் படித்துப் பாருங்கள். வழக்கப்படி, திரைப்படத்தை விடவும் ஆழமானதொரு அனுபவத்தை இந்த நாவல் வழங்கும். புத்தகமும் படமும் கிட்டத்தட்ட ஒரேபோன்றவையே. இருந்தும், நாவலில், படத்தில் இல்லாத ஒருசில காட்சிகள் உண்டு. செவ்விந்தியர்களின் வாழ்க்கையைப் படத்தை விடவும் ஓரளவு ஆழமாக நாவல் பதிவு செய்யும்.
மைக்கேல் ப்ளேக் சென்ற ஆண்டு தனது 69ம் வயதில் இறந்துவிட்டார். ஆனால் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி, இயற்கையைக் குறித்தும், செவ்விந்தியர்கள் குறித்தும் ஆராய்ந்திருக்கிறார்.

தொடரும் ….

அத்தியாயம் 3. . .