மண் தெருவில் பட்டு நூல்

மண் தெருவில் பட்டு நூல்

கவிதை: டோடோ

தோள் துடித்து
கரம் இறுகி
வேல் பற்றி
களம் ஓடி
அம்பு சொருகி
முதலில் செத்த
படைவீரனுக்கு
தெரிவதேயில்லை
போர் தொடுத்த
காரணம்

கடலோரப் பாழ் கோட்டையின்
மேல் துருப்பிடித்த
பீரங்கி
தொலைவில் போகும்
சரக்குக் கப்பலை
குறிபார்த்துக்கிடந்தது
பழைய ஞாபகத்தில்


அரைத்தூக்கத்தில்
பேஸ்ட் தின்று
அரை தோசை மென்று
தொலைவது இயல்பெனக்
கொண்ட பென்சிலும்,
ரப்பரும் தேடி
ஏதோ ஒரு பேப்பரில்
கையெழுத்து வாங்கி
விடியலில் கண்ட கனவை
சொல்ல நினைக்கையில்
விசில் சத்தத்துடன் வந்து விடும்
பள்ளிக்கூட வேன்

அருவியில் முச்சு
திணறியே வாழும்
மற்ற மீன்களை
ஏற்றிக்கொண்டு

மண் தெருவில் பட்டு நூல்
பிரித்துக் காய வைப்பதில்லை
மின் தறி போட்டு
கட்டுப்படியாகவில்லை
பட்டுச் சேலை தரகு வேலையில்
பெரிய வருமானமில்லை
தாழ்வாரத்தை அடைத்துப்போட்ட
பழைய தறியில்
தன் வீட்டைத் தானே
நெய்யும் சிலந்தியை
சக நெசவாளியெனக் கொண்டு
கலைக்க மனமில்லாமல்
வேடிக்கை பார்த்தபடி
தட்சிணாமூர்த்தி
பொங்கலுக்கு ரேஷனில்
கிடைத்த அச்சடித்த
வேஷ்டி கொடியில் காயும் வரை

நிசப்தமான
இரவின் நிழலில்
குளக்கரை நிலவொளியில்
நிகழ்ந்தது
நம் பிரிவு

முதலில் நீரிலலைந்து
கலங்கிபின், சரியாகிவிடும்
நிலவின் வடிவமென
சில வாரங்களில்
உன் வாழ்வு

மேலும் குளிர்ந்து
இறுகிவிடும்
கல் படிக்கட்டாகிவிடும்
பல வருடங்களில்
என் வாழ்வு