மாரிக்கும்..காளிக்கும்..தாத்தனுக்கும் சமர்ப்பணம்!

மாரிக்கும்..காளிக்கும்..தாத்தனுக்கும் சமர்ப்பணம்!

சிறுகதை:- கார்த்திகா வாசுதேவன்

மாரியின் முழுப்பெயர் எனக்குத் தெரியாது. என் பாட்டியின் வயதிருக்கும், பின் கொசுவம் வைத்து தான் சேலை கட்டுவாள், கொப்பு வைத்து அள்ளி சொருகிய தலைமுடி, லேசாக கண்கள் சொருகினார் போல சிரித்தபடி தான் எப்போதுமே இருப்பாள், நான் கூட மாரியைப் போல கண்ணாடி முன் நின்று கொண்டு சிரித்துப் பார்த்ததுண்டு, அதென்னவோ அந்த ஸ்டைல் பிடிபட்டதே இல்லை, அவள் அப்படியெல்லாம் கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார்த்து ப்ராக்டிஸ் செய்பவள் இல்லை, அதற்கெல்லாம் அவளுக்கு நேரமும் இருக்காது.

மாரிக்கு காளி என்றொரு புருஷன்; காலங்காலையில் சம்சாரி வீடுகளிருக்கும் தெருக்கள் வழியாகப் புருஷனும் பெண்டாட்டியுமாய் ஒரு ரவுண்டு வருவார்கள். மாரியின் இடுப்பில் பெரிய எவர்சில்வர் குண்டான் இருக்கும், காளி சட்டையில்லாத மேலுடம்பில் ஒற்றி உலர்ந்த வயிற்றில் ஏகப்பட்ட சுருக்கங்களுடன் சாயம் போன துண்டு ஒன்றை இடுப்பில் கட்டிக் கொண்டு வருவான், மாரி வீடுகளில் சோறு வாங்கும் வேலையை செய்தாளானால் காளி அழுக்குத் துணி எடுக்கும் வேலையைச் செய்வான், ஒவ்வொரு வீடாய் மலை போல சேர்ந்து போன அழுக்கு மூட்டைகளை இரண்டு மூன்று சிறு சிறு குன்றுகள் போல கட்டிக் கொண்டு போய் தெரு முக்கில் வைத்து விட்டுப் போவான், ஒரு வழியாய் சோறெடுக்கும் வேலை முடிந்து அவர்களின் குடிசைக்குப் போய் உண்டு முடித்தார்களானால் காளியின் மகன் ரெண்டு கழுதைகளைப் பத்திக் கொண்டு வந்து காளி தெருமுக்குகளில் கட்டி வைத்த துணி மூட்டைகளை அவற்றின் முதுகில் ஏற்றிக் கொண்டு குடும்பமாய் ஊர் கம்மாய்க்குப் போவார்கள்.

அடிப்பதும் துவைப்பதுமாய் ஜோராய் வேலை ஆரம்பமாகும்.

பளிச் பச்சைக் கரை சாரதி வேட்டி கண்ணில் பட்டதும் காளி ரவுத்திரமாவான். அதற்கு இணையான கதர் சட்டையை தேடித்துழாவி எடுப்பான் ;

கோழிப்பண்ணை நாயக்கன் வீட்டு வேட்டியும் சட்டையும் தான் அது!

டேய் முட்டா நாயக்கா அன்னைக்கு அஞ்சு ரூபா பணம் கடனாக் கேட்டதுக்கு என்னா சொன்ன?… எம்பொண்டாட்டிய அடகு வைன்னா சொன்ன; இந்தாடி வாங்கிக்கோ உன்ன இப்ப என்னா தொவை தொவைக்கப் போறேன் பாரு, டேய் முட்டா நாயக்கா, கோழிமுட்டா நாயக்கா செத்தடி நீ, துணைக்கு மகனையும் அழைத்துக் கொள்வான்,

“டேய் சோலை இந்தா இந்தக் கையப் பிடிச்சி முறிடா” கல்லில் படீர் படீர் என கோபம் வடியுமட்டும் அடித்து முடிப்பார்கள், அத்தனை கோபத்துக்கும் சட்டை சேதமாகி விடக் கூடாதென்பதில் அதீத கவனமிருக்கும்.

செட்டி வீட்டுப் பெண் சரளாவின் பாலியஸ்டர் பட்டுச் சேலையைக் கண்டதும் சோலைக்கு கண் மண் தெரியாமல் கோபம் மூளும்,

“ஏய் அப்பே இந்தா இருக்காளே இந்த மூதேவி பொம்பள போன தபா எம்பொண்டாட்டி இந்த பட்டுச் சேலையக் கட்டிட்டு சோலைக் கருப்பன் கோயில் கொடைக்குப் போய்ட்டா, மறுக்கா பஸ்ல வாரயில பாத்துப்புட்டாளாம் இந்த சேலைக்காரப் பொம்பள; அத்தினி பேரு நிக்காங்களே பஸ்லன்னு கூட காங்காம மானங்கெட்ட சிறுக்கி எஞ்சேலைய எதுக்குடி எடுத்துக் கட்டிக்கிட்டு ஊர் மேயுறன்னு கேட்டுப்புட்டாளாம், உம்மருமவ “என்னிய இப்படிக் கேட்டுப்புட்டாளே அந்தப் பாதகத்திப் பொம்பளன்னு” மூணு நாளா சோறு தண்ணி இல்லாம கெடந்தா. அவள நாலு மிதி மிதிச்சாத்தான் எம் மனசாறும்”

அந்தச் சேலை… இந்த வேட்டி… அந்த ஜாக்கெட்… இந்த தாவணி… பட்டாளத்துக்காரன் டவுசர், நாட்டாமைக்காரர் லங்கோடு என்று அப்பனும் மகனும் மடார் மடார், படீர் படீர் என அடங்காக் கோபத்தை அடித்து அடித்து வடித்து முடித்த பின் அழுக்கு போய் துணிகள் மட்டுமா சுத்தமாகும் அந்த ஏழைகளின் ஊமைக் கோபங்களும் சுத்தமாய் வடிந்து போய் மறுபடி அந்தி கருக்கலில் ஒவ்வொரு வீடாய் துவைத்த துணிகளைக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார்கள்.

ராச்சோறு வாங்கமாரியும் வருவாள் .

மாரியை நான் பாட்டி என்று அழைத்திருக்கலாம்.அழைக்காமல் தடுத்தது எது! அழைக்க வேண்டும் என்று தோன்றக்கூட இல்லை அப்போது. அந்த நாள் அப்படிப் பட்டது. என் பாட்டி வயதில் இருப்பவர்களைக் கூட சம்சாரி வீட்டுக் குழந்தை எனும் அகம்பாவத்தில் வா போ… வாடா போடா என அழைக்க வைத்தது எது! இந்த பாரபட்சங்கள் இன்றைக்கு பெருமளவில் குறைந்து விட்ட போதிலும் மாரியின் சிரித்த முகம் ஞாபகம் வரும் போதெல்லாம் அவளை என் வயதொத்த பிள்ளைகள் பாட்டி என்று அழைத்திருந்தால் அவள் சந்தோசப் பட்டிருக்கக்கூடுமோ என்று தோன்றும்.

மாரியின் எவர்சில்வர் குண்டானில் இருக்கும் பல வீட்டுச் சோற்றை கேலிக்கேனும் அள்ளி எடுத்து ஒரு வாய் உண்பதிலும், கனத்துத் தொங்கும் அவளது தண்டட்டியை தொட்டு இழுத்து விளையாடுவதிலும் காட்டப் பட்ட எல்லையற்ற ஆர்வம் அவளை ஒரு முறையேனும் பாட்டி என்று அழைப்பதில் காட்டப்படவே இல்லை. பாட்டி என்ற அழைப்பை அவள் எதிர்பார்த்திருக்க முடியாது ஆனாலும் தலையில் அடித்ததைப் போல அத்தனை பெரிய மனுஷியை பெயர் சொல்லி அழைத்த விதத்தை அவள் ரசித்திருக்க மாட்டாள்,

விருப்பும் வெறுப்பும் அற்றுப் போன நிலையில் தான் அன்றைய குடியானவர்களை இந்த சமூகம் வைத்திருந்தது. மனித உழைப்பை மலினமாக்கி அவர்களது சுயமரியாதையையும் முடக்கி வைத்த அந்த நாட்களை நினைக்கையில் இன்றைக்கு மாரியின் பேரன் கவர்ன்மென்ட் வேலை பார்த்து கால் காசு சம்பாதித்தாலும் கவுரவமாய் சம்பாதிப்பது ஆறுதலாய் இருக்கிறது .

மாரியின் கதை இப்படி என்றால் ;

தாத்தன் என்றொரு வயதான வெட்டியான் இருந்தார் எங்கள் ஊரில், யார் செத்தாலும் எரிப்பதும் புதைப்பதும் அவரே, ஊர் கட்டு செட்டான ஊர் அதோடு சம்சாரி வீட்டுக் குடும்பத் தலைவிகள் இருக்கிறார்களே பெரும்பாலும் கண்ணில் விளக்கெண்ணெய் விடாத குறை தான். அழுக்குத் துணி எடுக்க காளி வந்தாலும் சரி, தொழுவத்தில் சாணி அள்ள குப்ப மாதாரி வந்தாலும் சரி. வீட்டுப் பிள்ளைகளுக்கு முடி வெட்ட முனுசாமி நாவிதன் வந்தாலும் சரி அவர்களுக்கு சம்பளம் அளப்பதில் ரொம்பத்தான் பெரிய மனசு. ஒனக்கும்… நீ செஞ்ச வேலைக்கும் இம்புட்டுப் போதாதாடா?! என்று ஒரே மிரட்டு மிரட்டி எத்தனை வயதானவர்கள் என்றாலும் அடா… புடா போட்டு சாதிப்பார்கள். அதில் பட்சி நாயக்கர் வீட்டம்மாள் ஊருக்கு முதல்வி. அந்தம்மாள் சம்பளம் அளக்க வருகிறாள் என்றால் குடியானவர்களுக்கு வயிறு எரியும்.

ஒரு கோடையின் பெருவெட்டை நாளில் அந்தம்மாள் செத்துப் போனாள், ஊரோடு சுடுகாடு வரை சொந்தம் பந்தம் எல்லாம் போய் அழுது குமித்தாலும் எரிந்து முடியும் வரை பிணத்துக்கு காவல் வெட்டியான் மட்டும் தானே!

ஏற்கனவே சாயங்காலத்தில் எடுத்ததால் பிணத்தை எரிக்க இரவாகி விட்டது. எல்லோரும் போய் விட்டார்கள். வெட்டியான் தாத்தன் பிணத்தை எரித்துக் கொண்டிருந்தார். பட்சி வீட்டம்மாள் திகு திகுவென

எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அழுது கொண்டே சொந்தம் கலைந்தது. பட்சியின் அக்கா பேரன் வெங்கடரமணி வயிற்றை கலக்குகிறது என்று ஒதுங்கப் போனவன் அங்கே கூட நாலைந்து இளவட்ட நண்பர்களைப் பார்த்ததும் ஊர் கதை உலகக் கதை பேசிக் கொண்டு நின்று விட்டு அந்த நால்வரும் பிணம் எரிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரம் கடந்து அந்தப் பக்கம் வந்திருக்கிறார்கள் சுடுகாட்டைக் கடந்து வீட்டுக்குப் போக…

தாத்தன் ரத்தமும் சதையுமாய் எரியும் பிணம் சிதையில் இருந்து வெடித்து சிதறி தரைக்கு வந்தால் மறுபடி சிதைக்குள் தள்ள என்று வைத்திருக்கும் ஒரு கம்பால் பிணத்தைப் போட்டு அடி சவட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இதேதடா தாத்தன் பிணத்தை இப்படிப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறானே என்று அதிர்ச்சியாகிப் போன இளவட்ட கோஷ்ட்டி அருவமில்லாமல் நெருங்கி வந்து தாத்தன் அறியாமல் அவன் செய்வதை பக்கத்தில் வந்து வேடிக்கை பார்க்க.

தாத்தன்…

“பண்ணை வீட்டு நாயக்கரம்மா நீயெல்லாம்… உசிரோட இருந்த வரைக்கும் ஒரு நாள் கூலிய ஒழுங்கா கொடுத்திருப்பியா எங்களுக்கு, இந்தா வாங்கிக்கோ… இந்தா வாங்கிக்கோ; கம்பால் மொத்து மொத்தென்று ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டே;

“இந்த அடியெல்லாம் ஒனக்கு எம்மாத்திரம் நீ பண்ண அக்குறும்புக்கு ஒன்னைய எம தர்மன் எண்ணெய் சட்டில வறுக்கணும்… போ …போ அங்க எமன் காத்திருப்பான்.”

பார்த்துக் கொண்டிருந்த கோஷ்ட்டி மூச்சுக் காட்டாமல் சுடுகாட்டை விட்டு ஊருக்குள் ஓடி வந்தது. அங்கே பிடித்த ஓட்டம் ஊர் மந்தை வேப்ப மரத்தடியில் மூச்சு வாங்க நின்றது. திக்கித்துப் போனவனாய் சிரிப்பை அடக்க மாட்டாமல் வேங்கட ரமணி சொல்கிறான்.

”ஏன்டா டோய் மாப்ள நாளைக்கி நாஞ் செத்தாலும் தாத்தன் இப்டித்தான் அடிப்பான் போலடா.”

”நீ செத்தா… நம்ம கோவாலு செத்தா …”

“எங்க அவ்வா நாரம்மா செத்தா இப்பிடித்தான் சொல்லி சொல்லி அடிப்பான் போலருக்கேடா. எங்கவ்வா அருந்த வெரலுக்கு சுண்ணாம்பு தராதுடா. அதுக்கு என்ன கதியோ தாத்தன்ட்ட” அந்த இளவட்ட கோஷ்ட்டி அன்றைய இரவு மட்டுமல்ல நெடுநாட்கள் சொல்லிச் சொல்லி சிரித்தது தாத்தனின் இந்த செய்கையை.

மேலோட்டமாய் பார்த்தால் இந்த செய்கைகள் கேலியானவை தான். உள்ளிருக்கும் வேதனைகள் அந்தந்த நபர்களுக்கு மட்டுமே புரியக் கூடும்.

இந்தக் கதை மாரிக்கும் காளிக்கும் தாத்தனுக்கும் சமர்ப்பணம்