மனதோடு கி.ரா – 1

மனதோடு கி.ரா – 1

தொடர்:- கார்த்திக்.புகழேந்தி

அத்தியாயம் 1 – மண்ணுக்கும் மனுஷனுக்கும் உள்ள நெருக்கம்!

பழுத்த இலைகளோடு நிற்கும் ஒரு முதிர்ந்த ஆலமரத்தின் விழுதுகள் பற்றி ஊஞ்சலாடும் சிறுபிள்ளையாகத்தான் கிராவை நெருங்கி நிற்கிறேன். அவர் படைப்புலகத்தில் உழன்று, அனுபவச் சொற்களை மனசுக்குள் அரவைபோட்டு, என்னமாய் சொல்லிவிட்டார் என்று சிலாகித்துத் திரிகிறேன். கரிசல் மண் மீதான வாஞ்சையையும் எம்மக்கள் மீதான நேசத்தையும் எனக்குள் புகுத்தினது கிராவுடைய எழுத்துகள் தான். அவர் வார்த்தையிலே சொல்வதென்றால் அவரைச் சந்திக்கிற ஒவ்வொரு பொழுதையும் அவர் வாய்மொழியாகவே உங்கள் காதுபட எழுத்தாக்குகிறேன்… வரவேற்பறை -1 மண்ணுக்கும் மனுஷனுக்கும் உள்ள நெருக்கம்! நானும் பத்திரிகையாளர் நண்பர் கவிமணியும் புதுவை இலாசுப் பேட்டை அரசுக் குடியிருப்புகளில் இருக்கும் கிராவின் இல்லத்திற்குப் போயிருந்தோம். அன்றைய தினம் கிராவின் 95வது பிறந்தநாள். நண்பருக்கு கிராவுடனான சந்திப்பு இது முதலாவது. இரண்டுபேரையும் நடுவீட்டின் அறைக்குள் அழைத்து தனக்கு எதிரே உட்காரச் சொல்கிறார். நண்பரை அறிமுகப் படுத்துகிறேன். வேலை விவரங்களைக் கேட்டுக் கொள்கிறார்.

சாப்பிட எங்கள் கையில் சில பேரீச்சம் பழங்களைக் கொடுக்கிறார்.

“பழத்தை எடுத்துக்கோங்கொ..! அழுகாத கனி இது ஒன்னுதான்”

தன் பக்கத்தில் இருக்கும் சிறுதுண்டு காகிதங்கள் ரெண்டைத் தனித் தனிக் கூம்புகளாக மடித்து திறந்த வேர்க்கடலை பொட்டலம்போலக் கொடுக்கிறார். பேரீச்சம் கொட்டைகளை அதில் போட்டுக் கொள்வதற்கு. பேச்சினூடாக இடைச்செவல் போயிருந்த கதையினைச் சொல்லுகிறேன்.

“இடைசெவல்ல யார பாக்கப் போயிருந்திக. அங்க யாரு… ஒரு ஈக்குஞ்சிகூட இருக்காது”

“சும்மாவே இப்பல்லாம் அந்தப் பக்கம் தாண்டும்போது போய் பார்த்துட்டு வர்ரது. நிறைய மயில் அலையுது. ஊர் அப்படியே அமைதியா இருக்கு”

“மயில் அலையுதா.. பரவால்லியே. ஆனா, மயிலுக்கும் சம்சாரிகளுக்கும் பகை. சம்சாரிகளுக்கு விரோதமான ஒரு பறவை மயில். பயிர்கள ரொம்ப அநியாயமா அழிக்கும்”

“விவசாய நாட்டுக்கு தேசியப் பறவை இப்படி அமைஞ்சிருக்கு”

“அது விவசாயப் பறவை இல்லையெ. வேற பறவைதான் வச்சிருக்கணும். அது பாக்க நல்லா இருக்குன்றதுக்காக சொல்லிட்டாங்க”

மயில் பற்றிய பேச்சு அப்படியே ‘கொத்தைப் பருத்தி’ தொகுப்பில் உள்ள கதைகளுக்குப் பக்கத்தில் இழுத்துச் செல்கிறது.

“இந்த கொத்தைப்பருத்தியில் மாசாணம் கதை ஒண்ணு வருமே. அதிலே கணவன் மனைவி ரெண்டுபேருக்கும் ஒரே பேர் இருந்து அவங்கட்ட சுளுக்கு எடுத்தா சரியாப் போகும்னு இருக்கும். அப்படி சரியாப் போகும்ங்களா என்ன?”

“நம்பிக்கைதான் அது. அது பிரயோஜனமான்னு கேக்கக்கூடாது. ஆனா பிரயோஜனம் ஆகும். எப்படி ஆகும்னு கேட்டா, சுளுக்கு இருக்கில்லையா அது கொஞ்சம் தேய்ச்சு விட்டா வலி சரியாய்டும். தேவலையான்னு கேப்பாங்க. அப்புறம் அது அப்படியே பரவிடும். அதனால அவங்களுக்கு எந்தவிதமான பயனும் கிடையாது. யாருக்கு?”

“அந்தப் பேர் உள்ளவங்களுக்கு..”

“இப்போ நான் விசனமா ஒரு ஜோலிக்குப் புறப்பட்டுட்டு இருக்கேன். பிள்ளைக்கு உடம்பு சரியில்ல. அவங்ககிட்டத் தூக்கிட்டுப் போனா மறுக்காம தேய்ச்சுவிடுவாங்க. அப்போ சரியாப் போகும்னு மனசுக்கு ஒரு நிம்மதி. அதாவது மனசுக்கும் நோய்க்கும் ஒரு சம்பந்தம் எப்பவும் இருக்கு. அதை மனுஷங்க புரிஞ்சுக்கணும்.”

இடையே எங்களுக்கு மதியச் சாப்பாடு கொடுக்கப் படுகிறது. தெலுங்கில் வீட்டினரோடு பேசிக் கொள்கிறார்கள். நான் நண்பருக்குத் தெலுங்கு தெரியும் என்கிறேன். சிரிக்கிறார். என்ன பேசினோம் என்று சொல்லச் சொல்கிறார். “நாங்கெல்லாம் உதிரியா சாப்பிட்டா இவங்களுக்கு சாப்பாடு கட்டியாகிடுச்சேன்னு சொல்றாங்க” என்கிறார் நண்பர். மொத்த பேரும் சிரிக்கிறோம்.

“அப்புறம் அந்தக் கதையிலே (மாசாணம்) மழை வருவதற்கான அறிகுறிகள் சொல்றான் இல்லையா. அதெல்லாம் வாசிக்கிற நகர வாசகர்களுக்குப் புதுசா இருக்கும். அப்புறம் வந்து… அவன் வீட்டில இருந்தாலும் பட்டினிதான் கிடக்கணும். இங்க வந்தாலும் பட்டினிதான் கிடக்கான். பொது காரியத்துக்காக அவன் பட்டினி கிடக்கும்போது மதிப்பு கூடுது இல்லையா”

“எஸ்.ரா அப்படியே கொத்தை பருத்தியில் உள்ள அஞ்சு கதையையும் இயல்வாகை விருது வழங்கின மேடையில சொன்னார். ஒரு பாட்டி மலைமேல போய் அன்னதானம் கொடுக்குமே அந்தக் கதையும்..”

“குருபூசையா!”

“ஆங்.. அதேதான்”

எழுத்தாளர் நாறும்பூ நாதனை திருநெல்வேலியில் சந்தித்ததைச் சொல்கிறேன். அறுபத்தி அஞ்சாவது பிறந்தநாளைக்கு உங்களைப் பார்க்க வந்ததையும், ‘எத்தனை தலை எண்ணு; ஏழு தலையா! ஏழு டீ, ஏழு சம்சா சொல்லு’ என்று சொன்னதையும் நியாபகப் படுத்திப் பேசினார் என்றேன். சிரிக்கிறார். சாப்பிட்டு முடித்துக் கைகழுவி அமர்கிறோம். சாப்பிடாமலே பசிதீர்த்த கதை ஒன்று வந்து விழுகிறது கிராவிடமிருந்து…

“துரியோதனன் இருக்கானில்லையா. அவனிடம் போனால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று இந்த சாபம் கொடுப்பாரில்லையா அந்த முனிவர் தன் கூட்டத்தோடு வருகிறார். துர்வாச முனிவர். வந்தவர் எங்களுக்கெல்லாம் ‘சமைத்து வை’ன்னு சொல்லிட்டு குளிக்கப் போறார். போய் குளிச்சுட்டு கரையேறினா வயிறு திம்ன்னு ஆகிப்போகுது. துர்வாசர் சொல்றார். சாப்பிட முடியாது போலுக்கப்பா. சாப்புடலைன்னா அவன் வருத்தப் படுவான். சொல்லாம பிரயாம போய்டுவோம் அப்படின்னு சொல்லாமலே போயிடுறான்”

கிரா வீட்டிலிருக்கும் மரத்தாலான நாட்காட்டியைக் கைகாட்டி நண்பர் வித்யாசமாக இருக்கிறது என்கிறார்.

“அது எத்தன வருசத்துக்கும் வச்சிக்கிடலாம். மாசத்தையும் கிழமையையும் மாத்தி மாத்தி வச்சுக்கலாம்.” “எத்தனை வருஷம் தாத்தா இருக்கும் இது வாங்கி” என்கிறார் நண்பர்.

“அது நான் வாங்கல.. நண்பர் ஒருத்தர் அன்பளிப்பா கொடுத்தாங்க. பத்து பதினஞ்சு வருசம் இருக்கும். இது இந்த கெடாத கட்டைகள்ள செஞ்சிருக்கான். திருப்பதியில வெட்டின மரங்கள் செம்மரங்களில்ல. சந்தன மரங்களாம்.. அவ்வளவும். நாமல்லாம் செம்மரம்ன்னுல்லா சொல்லிட்டு இருக்கோம். சந்தனத்திலும் செஞ்சந்தனம்னு ஒண்ணு இருக்கு. அதில ஒரு விசேசம் உண்டு. அதில ஒரு பலகை செஞ்சு ஒரு ரூம் மாதிரி கட்டி அதுக்குள்ள இருந்துட்டா அணுகுண்டு வெடிச்சாலும் ஒண்ணும் செய்யாது”

“சரவணன் சந்திரன்னு அண்ணன் ஒருத்தர் தன்னோட ரோலக்ஸ் வாட்ச் நாவல்ல இதைப் பத்தி எழுதி இருக்கார்”

“எக்ஸ்ரே எடுக்கிற மெஷின் இருக்கில்லையா. அதில வேலை பார்க்குற ஆள் ஒருத்தன் இருப்பான் ஆஸ்பத்திரியில. இந்த கதிர்வீச்சு பாதிப்பிலே இருந்து இருந்து அவனுக்கு அநேகமா பிள்ளைகள் இருக்காதாம். அவனுடைய அந்த உயிரணுக்கள் அழிஞ்சு போய் மலடனாகிடுவானாம். நம்முடைய உணவுகள்ள ஏகப் பட்ட உணவுகள் மலடாகிட்டுதே. பாக்கெட்ல போட்டு வாங்குறதெல்லாம் லேசே தவிர… கிடுகிடுன்னு வாங்கிட்டுப் போயிடணும்னு நினைக்கிறோம்.

கும்பகோணத்தில் இருந்து எல்.ஜி பெருங்காயம்னு ஒன்னு வரும் கட்டியா. நான் சின்ன வயசுலருந்து தெரியும் எனக்கு அதை. எல்லா வீடுகள்ளயும் அத வாங்குவாங்க. தரம் குறையாம இருக்கும். அப்புறம் அங்கயும் தலைமுறை மாறுதில்லையா. கட்டியா இருப்பதை எடைபோடும்போது ஒருதடவை அதிகமாகிடுது. ஒருதடவை குறைஞ்சு போகுது. ஆகவே, சின்ன உருண்டைகளாகப் பண்ணா.. பால்ஸ் மாதிரி அல்லது குருணை மாதிரி அப்படிக் குடுத்தா நல்லா இருக்கும். நல்ல யோசனைதான். அதை அமுக்குனா அல்வா பதத்தில இருக்கும். அதை பிச்சி பிச்சி தாம்பாளத்திலயோ இலையிலோ போட்டு எடுத்து வச்சிப்போம்.

அதுக்கப்புறம் கொஞ்சநாள்ல அது கிடைக்காது இனி இதுமட்டுந்தான்னு கொண்டு வந்தான். வாங்குறவங்க கட்டிதான் நல்லா இருந்ததுன்னு சொல்வாங்க. அது மேலிடத்துக்குப் போகும். அப்புறம் ரெண்டும் கிடைக்கும். வேண்டியது வாங்கிக்கோங்கன்னு சொல்வாங்க. அப்புறம் வந்து பெருங்காய மார்க்கெட்டை பிடிக்கவே முடியலை யாராலயும். இப்போ அதே மாதிரி ரயில் எஞ்சின் படம் போட்டு எல்.ஜி மாதிரி ஏகப்பட்டது வந்தது. அதை விக்கிறதுக்காக வேண்டி ரூவாய்க்கு அவன் கொடுக்குற கமிசனைவிடஇவன் அதிகமா கொடுத்தான். கடைசில அந்த எல்.ஜியை காணாமலே பண்ணிப்புட்டான்.

அதை ஏன் சொல்ல வந்தேன்னா… முந்தி பெப்பர் மிண்ட் வந்தது. இப்போ வந்து சாக்லேட். ரப்பர் மாதிரி இருக்கும். மொறுக்குன்னு சத்தம் கேக்காது. இப்படி இந்த மெதுத் தன்மையை கொடுக்குறதுக்கு ஒன்னு சேக்க வேண்டி இருக்கு. அது உடம்புக்கு ஆகாத மகா பாதகமான திரவம். அது எத்தனை ப்ரெசண்டேஜ் சேர்க்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. அதுபடிதான் இவன் சேர்க்கணும். சாக்லேட்ல ஒரு பிரச்சனை இருக்கு. உடனே வாயைக் கழுவுங்கோன்னுறான். நம்ம கழுவுவோம் குழந்தைங்க கழுவுமா? பூராம் சூத்தப்பல்லு ஆகிடும். அதுமாதிரி ஒவ்வொரு விஷயத்திலயும் நோய் கொடுக்கக் கூடிய பொருள்கள விற்பனைக்கு வந்துக்கிட்டே இருக்கு. இந்த சானிடரி இன்ஸ்பெக்டர் வந்தவுடனே வாங்க வாங்கன்னு கூட்டுப் போய் பிரியாணி வாங்கிக்கொடுத்து கையில் கொஞ்சம் காசுகொடுத்து அனுப்பிட்றது. பாதிக்கப் பட்றது நம்ம. குழந்தைகளை எல்லாம் இந்த நாலேட்ஜோட வளர்க்கணும். ஆனா குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்குற விஷயமே வேற. சம்பந்தமில்லாததை சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்”

சின்ன இடைவெளிக்குப் பிறகு, வசவுச் சொற்கள் சேகரிப்பு பற்றிக் கேட்கிறேன். அதை புத்தகமாக்குவது எப்போது? என்கிறேன்.

“அது புத்தகமாக்குவதுக்காக இல்லை. புத்தகமாகக் கொண்டுவந்து துட்டு சம்பாதிக்கிறது இல்லை நோக்கம். அது தெரிந்துகொள்றதுக்காக. அதைப் புத்தகமாக்க முடியாது. இப்போ, வசவுங்குறது சந்தோஷத்திலும் வைறான். கோபத்திலும் வைவான். வசவுனுடைய அர்த்தத்தைத் தெரிஞ்சா வைறான். வசவை கேட்டதும் உணரவேண்டியது என்னன்னா எதிராளி கோபமாகிட்டான் அவனை சாந்தப்படுத்தியாகணும்னு உணரணும். அதத்தான் பார்க்கவேண்டுமே ஒழிய அதுக்கு அர்த்தத்தைப் பார்க்கப்டாது. மொழி சம்பந்தப் பட்ட இந்த ஞானம் வேணும். இதுக்காகத் தான் வசவை பத்தி சொல்றேன். இத்தாலியிலிருந்து ஒரு அம்மா வந்திருந்தாங்க. மொழியைப் பத்தி படிக்கிறவங்க. வள்ளுவர் வந்து மயிர் பத்தி குறள் சொல்றார். நீங்க சொல்றீங்க கதையில ‘போடா மயிராண்டி’னு சொல்றீங்க. அது எப்படி வசவாகும்னு கேட்டாங்க. இந்த Hair-ங்குற வார்த்தைக்கு இங்க்லீஷ்ல ஏதும் வார்த்தை இருக்கா?

‘இருந்த மாதிரி தெரியலையே’

‘தமிழ்ல பாருங்க.. தலையில இருக்கிறது முடின்னு சொல்றோம். அதில இருந்துதான் ராஜாவுக்கு முடிசூட்டுதல்னு வருது. அது ரொம்ப உயர்ந்தது. உடம்புல இருக்குறது உரோமம். அப்புறம் வேண்டாத இடங்கள்ல இருக்குறதுதான் மயிர். அந்த அர்த்தத்தில் தான் மயிராண்டி வசவுச் சொல்லாகுது. அப்புறம் சில வசவுகள் வந்து உண்மை. உண்மையாக இருந்து, அது செய்யக்கூடாதுன்னு நிறுத்தப்பட்டது. இப்போ ஒருத்தனைப் பார்த்து ‘களவாணி’னு சொல்றோம். அது வசவு. அது அதிகமா இருக்றதாலதான் சொல்றோம். களவே இல்லைன்னா அந்த வார்த்தை இருக்காதே. மாறி மாறி அந்த வார்த்தை இருக்குறதுக்கு என்ன காரணம். அது செய்தால் தப்பு.. அதான். இந்த ஆத்தா, அக்கா, பொண்டாட்டி புள்ளைன்னு வைய்றாங்கல்லா, அந்த வசவுகளெல்லாம் வேண்டாது. எதைச் செய்யக்கூடாதோ அந்த பாவங்கள்ளாம் செய்யுறவங்கனு அர்த்தம். ஆனா நம்ம சர்வசாதாரணமா இந்த வக்காளி… வார்த்தைக்கு வார்த்தை சொல்வான். எனக்கு ஒரு நண்பர் இருக்காரு. அண்ணாச்சி வக்காளி நான் இன்னைக்கு இங்க போனேன். கண்டக்டர்கிட்ட கேட்டா வக்காளி சில்றை இல்லைன்னு சொல்றான் அப்படிம்பாரு. அதுக்கு அர்த்தம் உண்டா? அதுக்கு அர்த்தம் கிடையாது. அது வசவு தான். ஒவ்வொரு காலங்களிலும் வசவுகள் மாறும். ஒருத்தன் இன்னைக்கு ஒண்ணு சொல்லுவான். நாளைக்கு வேற சொல்லுவான்”

விழுந்து விழுந்து சிரித்த பிறகு, நண்பரின் சொந்த ஊரையும் அவருடைய மூதாதைகள் தொடங்கி செய்துவரும் குயவுத் தொழில் பற்றியும் சொல்கிறேன். கிரா அதைத் தொட்டு பேச ஆரம்பிக்கிறார்.

“தமிழ்ல ஒரு பழமொழி உண்டு. பாத்திரம் செய்யுறதை மாயக் குயவன் செய்யும் பாண்டம்னு ஒரு வார்த்தை. அதாவது அவங்க மனுஷங்க இல்ல ஒருமாயம் செய்றவங்கன்னு. மதுரையை வச்சு அவங்களை ஒண்ணு சொல்லுவாங்க. மதுரைக்கு வடக்கே மனுஷந்தான் கொசவன் அப்படின்னு. இந்த மாதிரி தெற்கே மதுரையை வச்சு நிறைய பேச்சு உண்டு. ‘மதுரைக்கு வடக்க வெறுந் தண்ணி தான’ அப்படிம்பாங்க. கிராமத்துக் கிழவிகள் மத்தியில அப்படி நிறைய உண்டு.”

“இவங்க மாமா செய்யும்போது வேடிக்கை பார்த்திருக்கேன். ஒரே மாதிரி டக் டக்டக்குன்னு செஞ்சுடுவாங்க” என்கிறேன். “மாமாவுக்குப் பிறகு எடுத்துச் செய்ய யாரும் இல்ல” என்கிறார் நண்பர்.

“அதுதிரும்பவும் வரும். வேற ஒரு வடிவத்தில் வரும். நான் பார்த்ததில்ல வடக்கே ரயில்வே ஸ்டேஷனில ‘கரம் சாய்… கரம் சாய்’ அப்படின்னு கொடுப்பான். மண்ல செஞ்ச கப் இருக்கு பார்த்தியா அதுல குடுப்பான். குடிச்சு முடிச்சதும் அதை கீழபோட்றவேண்டியதுதான். அது அவங்களுக்கு ரொம்ப சுலபமா இருக்கு. ப்ளாஸ்டிக்கை ஒழிக்கிறதுக்கு இது நல்லதில்லையா. புதுசா அதுக்கான இடங்கள் வரும். மண்பாண்டத்தில மோர் வச்சிருந்தா ரொம்ப நல்லா இருக்கும். பானையில் நிறைய ஓட்டை இருக்குங்குறது நமக்குத் தெரியாது. தண்ணீர் வச்சா வியர்க்குற மாதிரி அந்த நுண்துளைகள் வழியா கசியுதில்லையா அது தண்ணீரை குளிர வச்சிடும். அது கோடையில் உடம்புக்கு நல்லது.

நாட்டுப்புற கதைகள் குயவர்கள் வந்து, கிராமத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களா இருந்திருக்காங்கன்னு ஒரு கதை இருக்கு. ஒருத்தர் வந்து ஒரு தெருவுடைய கடைசியில வழக்குகளைத் தீர்த்துவிடுவார். சிக்கலான வழக்குகள். அனுசரியமா தீர்த்துடுவார். ரொம்ப வயசாளி. மண்ணு மிதிச்சுட்டு இருக்கார். மண்ணு மிதிக்க ஒரு கம்பு ஊனிக்கிடுவாங்க. சிலர் மேல ஒரு கயிறு கட்டிக்குவாங்க. குழந்தைங்க வந்து தாத்தா நானும் மிதிக்கேன்னு வந்துடுங்க. அவருக்கும் வேலை முடிஞ்சுடும். மண் மிதிக்க மிதிக்க பலப்படும். அதைப் பத்தி நான் அப்புறம் சொல்லுதென். இப்போ அவர்கிட்ட ஒரு வழக்கு வருது. இங்க ஒரு பொண் ஒரு பால்மாடு வச்சு பொழைக்கா; இன்னொருத்தி ஒன்பதுமாடு வச்சி பொழைக்கா. இப்போ ஒன்பதுமாடு வச்சிருக்க பொம்பளை வந்து ஒருமாடு வச்சிருக்கவகிட்ட ஒரு ஆயிரம் ருவா கடன் வாங்குறா. திருப்பிக் கேக்கும்போது, நான் ஏன் உங்கிட்ட கடன் வாங்கணும். என்கிட்டயே ஒன்பது மாடு இருக்கும்போது உன்கிட்ட கடன் வாங்கினேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களான்னு சொல்லிட்றா. வழக்கு இப்போ குயவர்கிட்டப் போகுது.

மண்ணை மிதிச்சுட்டு இருந்தவர் இவங்க வழக்கைக் கேட்டுட்டு, இரும்மா எனக்கு வேலை இருக்கு. உங்க கணக்கை என்னன்னு உடனே கவனிக்குறது. நானும் என் தொழிலைப் பார்க்கனும்லா. நீங்க கொஞ்சம் மண்ணை மிதிச்சுக் கொடுங்க அப்படின்னு சொல்லிட்டு வெளியே வந்துடுறார். இப்போ ஊர்க்காரங்களும் கூடிட்டாங்க. எப்படி இவர் நியாயத்தைச் சொல்றார்னு கேக்க. இப்போ ஒன்பது மாடு வச்சிருக்குறவ இறங்கி மிதிக்குறா. இல்ல ரெண்டுபேரும் மிதிக்குறாங்கன்னே வச்சிக்கோங்களேன். மண்ணை மிதிச்சுட்டு வந்து காலை கழுவுறாங்க. இப்பொ ஒன்பது மாட்டுக்காரி காலை கழுவுறா. ஒரு செம்பு தண்ணி கொடுக்குறார். அதைவச்சி கழுவுறா. இன்னும் ஒரு செம்பு கேக்குறா. அப்பவும் இன்னுங்கொஞ்சம் தண்ணி இருந்தா நல்லாருக்குமேன்னு தோணுது. இப்போ ஒரு மாட்டுக்காரி வெளிய இறங்கி வந்த உடனே அங்க ஒரு ஓலை கிடக்கு அதை எடுத்து காலை ஒட்டி இருக்குற மண்ணை எல்லாம் வழிச்சுப் போட்டுட்டு ஒரு செம்புதண்ணியில காலைக் கழுவிட்டு மீதி தண்ணி வைக்குறா. அப்ப சொல்லுறார். நீ ஒன்பது மாடு வச்சிருந்தாலும் நீ செலவாளி; அவ செட்டாளி. ஒழுங்கா துட்ட குடுத்துடு. இல்லைன்னா இந்த ஊர்க்காரன் உன்ன ஊரவுட்டு கிளப்பிருவான். இதுதான் அவன் பனிஷ்மெண்ட். எங்க போனாலும் அந்த பேரு விடாது’’

“பள்ளிக்கூட பாடத்தில் இந்தக் கதை உண்டு. சிக்கனம் பத்திசொல்றதுக்கு இந்தக் கதையைச் சொல்வாங்க”

“அதுல, சைனாக்காரன் சொல்றான் ஒருத்தன். ஜிங் சாங்னு ஒருத்தனோட பழமொழி சிக்கனமே சிறந்த வருமானம் அப்படிங்கான். செட்டியார்கள்ள அசலை செலவளிக்கவே மாட்டான். என்ன கஷ்டம் வந்தாலும் அசல செலவளிக்கவே மாட்டான். வட்டியதான் செலவளிப்பான். மூலதனம் போடுவான் ஆனா அசல் அப்படியே நின்னுட்டு இருக்கும். அவனுக்கு இன்னொரு பேர் உண்டு. பைசா பைசாவா சேர்த்து கோடி கோடியா செலவு பண்ணுவான்னு. அவ்ளோ சிக்கனமா இருக்கான்ல. அவங்க வீட்டு கல்யாணங்கள்லாம் போய் பாடுங்க.. என்னா கிராண்டா நடக்கும். செட்டி நொடிச்சான்னு எங்கயாவது கேள்விப்பட்டதுண்டா? மத்த செட்டிகள்லாம் சேர்ந்து தூக்கிவிட்ருவாங்க. இந்த இலைக்கு அடியில பணம் வைக்காங்கல்ல அந்த பழக்கத்தை அவங்கதான் கொண்டுவந்தாங்க”

“தஞ்சாவூர் பக்கமெல்லாம் அது இப்ப பெரிய தொழில் மாதிரி மாறிட்டு.”

“மருந்துன்னு இருந்தா அத நல்லபடியா பயன்படுத்தினா நல்லது. இப்ப வீட்டுக்கு முன்னால ஒரு வேப்பமரம் வைக்கிறோம். என்னத்துக்காக வைக்கிறோம். பல்லு குச்சி ஒடிக்குறதுக்கா வைக்குறோம். அந்த வீட்ல நல்ல ஒரு வேப்பம்மரம் இருந்தா அந்த வீட்டுக்கு ஆரோக்கியம். சூழ்நிலை ஆரோக்கியம். அவன் ஃபைன் பண்ணுவான். சில கிராமங்கள்ல குச்சி ஒடிச்சியா உனக்கு இத்தன ருவா அபராதம் அப்படிம்பான். வீட்ல இருக்குற வேப்ப மரத்தில ஒடிக்கக்கூடாது. தேள் கடி கடிச்சதுன்னா ஒடிச்சிக்கலாம். அதுங்கூட அங்க போய் தள்ளி இருக்குற மரத்தில ஒடிச்சுட்டுவருவான்.”

“இடையில மண்ணு மிதிக்கிறதப் பத்தி எதோ சொல்லுறேன்னீங்களே!”

“ஆமா, இந்த வேக்ஸினேசன்னு இருக்கில்லயா, தடுப்பு ஊசி. அதுவந்து, அந்தக் கிருமிகள எப்படி தயார்பண்ணுறது அப்படின்னா, சில கிருமிகளை எடுத்து தண்ணீர்ல போட்டு குலுக்கிக்கிட்டே இருக்குறது. அதைச் சுத்தினா அப்படியே குலுங்கும் பார்த்திருக்கீங்களா”

“படங்கள்ல காமிக்காங்களே”

“அப்படித்தான். அதை நல்லா குலுக்கிவிடுறது. இவ்வளவு நேரம்ன்னு அதுக்கு ஒரு கணக்கு. அப்படி குலுக்கி, அதுக்கு தனியா ஒரு கலர் கொடுத்து மத்த கிருமியோட கலப்படம் பண்ணுவாங்க. மறுநாள் வந்து பார்த்தா நிஜக்கிருமிகள் எல்லாம் அழிஞ்சிருது. இது தின்னுரும். இதுவந்து ஒரு இயல்பு. பகையாயிருது, கடும்பகை யாயிருந்து. அடிச்சு தின்னுருது. கொசுக்களுக்கு யாராது அப்படிப் பண்ணா நல்லது. இதப்பத்தி நான் ஒருதடவ ரசிகமணி டிகேசி கிட்ட கேட்டேன். எதோ ஒன்னுக்காக ஒரு சந்தேகம் மாதிரி கேட்டேன். இந்த வீட்டு மண்ணு இருக்கில்லையா. மண்ணுதான… மண்ணத்தான வச்சி நாம வீடு கட்டுறோம். மண்வீடுகள் மண் சுவர். அது எப்படி இந்த மழையத் தாங்கிட்டு கீழவிழாம நிக்குதுன்னு கேட்டேன். அதுகாரணம் இந்த மண்ண தண்ணீர் விட்டு மாறி மாறி மிதிச்சுக்கிட்டு இருந்தா மண்ணுக்கு எதிரி ஆகிடும். எதிர்மண்ணா ஆகிடும். எவ்வளவுக்கெவ்வளவு அப்படி பண்ணுறீங்களோ அவ்வளவுக்கு உறுதியாகிடும். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் சொல்லுறார். வாய்க்கால் ஓடையில தண்ணி போகுது. தேங்காய் அளவு மண்ணை எடுத்து அதில விடுங்க கரைஞ்சு போயிரும். அதேமண்ண, அதே எடத்துலவச்சு தண்ணீர் விட்டுவிட்டு நல்ல சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சுட்டே இருந்து ஓடுற தண்ணில விட்டுப் பாருங்க. கரையாது. தண்ணீர எதிர்த்து நிக்கும். அததான் அந்த கிருமி, வேக்ஸின் செய்யுது.”

மனுஷங்க கட்டுரைத் தொகுப்பில் எழுதின நத்தம் மண் பற்றியும், உவர் மண் பற்றியும் சில கேள்விகளைக் கேட்கிறோம். கழுதைகளில் அள்ளி எடுத்துவந்து, உவர்மண்ணால் துணிவெளுக்கும் வித்தைகளை விவரிக்கிறார். ருஷ்ய மண்ணின் நிறம் பற்றிப் பேச்சு வருகிறது. கரிசல் மண்ணின் நிறத்தைப் பற்றிப் பேசும்போது, விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி கோவை சிவராமன் எழுதிய புத்தகத்துக்கு எழுதின முன்னுரை பற்றிச் சொல்கிறார். அங்குவிலாஸ் புகையிலை அதிபரிடமிருந்து திரட்டிய விளாத்திகுளம் சுவாமிகளின் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ பாட்டை செல்போனில் கேட்கச் செய்கிறேன்.

“இது என்ன ராகம்னு சொல்ல முடியும்… “

“அவ்வளவு இசையறிவு கிடையாது”

“அப்படி ஒரு ராகம் இருக்கும்னாது தெரியுமா?”

“அதுகொஞ்சம் தெரியும்”

“ம்ம்… இந்த சிவக்குமார் குடிகாரரா நடிப்பாரே அது என்ன ராகம்?”

“சிந்து பைரவிங்களா?”

“அந்த ராகம்தான் இது”

பாட்டு முடிகிறது. கொஞ்சம் ஆசுவாசமாகிறார். பழைய நாட்கள் நினைவில் வந்து போயிருக்கலாம். விளாத்திகுளம், இடைசெவல், கரிசல்மண், மழை, ஈரம், தண்ணீரும் மண்ணும் கலந்த சேறு, குயவர்… நினைப்புகள் ஆரம்பித்த வந்து நிற்கிறது.

“அந்த இவங்களை எங்க வீட்டுப் பெண்கள் அண்ணான்னு கூப்பிடுவாங்க. செட்டண்ணா செட்டண்ணா அப்படின்னு” நண்பர் ஏன் அப்படி செட்டின்னு பேர் என்று கேட்கிறார். சட்டென்று பதில் வருகிறது.

“வியாபாரம் பண்ணுறவன் செட்டி. இப்ப மீன் இருக்கில்லையா. மீன் பிடிச்சுட்டு வர்ராங்க. ஒரு மீன்காரன் கொண்டுபோய் வித்துட்டு வர்ரானில்லையா. அப்ப அவன் வியாபாரி ஆகிடுறான். நீ புடிச்சுட்டுவா நான் வித்து தர்ரேன் அப்படின்னும்போது வியாபாரி ஆகிடுறான். ஆதியில குயவனா இருந்தார். சூளை போட்டதும் பணக்காரன் ஆகிடுறார். பணக்காரன் செட்டி ஆகிடுறார். சொல்றாங்கல்லியா ‘மதுரைக்கு வடக்க மனுஷன்தான்டா செட்டின்னு.”

“எங்க தாத்தா என்பத்தேழு வயசு வரைக்கும் வாழ்ந்தார். நாட்டு வைத்தியர் வேற” என்கிறார் நண்பர். நான் உடனே அவர்களுடைய ‘அக்கி எழுதுவது’ பற்றிக் கேட்கிறேன்.

“அதா.. அதும் மண் வேலைதான். மண் வைத்தியம் தான். தண்ணி விழுந்தா ஒரு பொக்களம் வருதில்லயா. அது முதுகுல வந்தா அக்கியாகிடுது. முகத்துல வந்தா பரு, உடம்புல வந்தா சிலந்தி அப்படி சொல்றமில்லையா. முதுகுல வந்தா அதுக்கு இராஜபிளவன்னும் பேரு. அது ரொம்ப கஷ்டம். பிளவையிலே பெரிய ராஜா. அது ரொம்ப பெரிய பணக்காரங்களுக்குத்தான் வரும். முதுகுல இதுவந்ததும் என்ன பண்ணுவாங்கன்னா செம்மண் தேரல் இருக்கில்லியா அதை கரைச்சு, கோழிரோமம்ல முக்கி முதுகுல வந்து சிங்கம் மாதிரி படம் வரைவார். இதுல ஒரு நம்பிக்க ஒன்னு இருக்கு. முதுகுல அவர் செய்யுறதே… இந்த சிங்கத்துக்கு ஒரு கடவுள் இருக்கே. நரசிம்மர் அந்த அவதாரம் இத அடிச்சுரும்னு நம்பிக்கை”

“அது சரியாகவும் செஞ்சுடுதே”

“சரியாகும். அதான் மண் வைத்தியம். மண்ணுக்கு உள்ள தன்மை அது. என்ன தன்மை அப்படின்னு கேட்டா, ஒரு அவரை விதை. அதை கொஞ்சம் வறுத்து மண்ணுக்குள்ள புதைச்சு வச்சு தண்ணிவிட்டு நாலுநாள் கழிச்சு அத தோண்டிப் பார்த்தா, அந்த விதை காணாம போயிடும். ஏன்.. என்னாச்சி? இந்த மண்ணு அதை தின்னுடுது. அதே அவரை விதைய அப்படியே ஊனி தண்ணிவிட்டா.. என்னாகும். முளெ விடும். அப்போ மண்ணுதான் பண்ணுது அத தனியா டேபிள்ல தூக்கி வச்சா எத்தன வருசம் ஆனாலும் அப்படியேதான இருக்கும். மண்ணுல விழணும். சொட்டு தண்ணிவிடணும். ஈர மண்ணு இருக்கில்லையா அதுவந்து ஒரு பெரிய அற்புதமான விசயம். இந்த உடம்புல மண்ண வச்சா. உடம்புல உள்ள கெட்டதுகளல்லாம் அது சாப்ட்ரும். இந்த தோல கெட்டிப்படுத்தும். மண்ணு வந்து பிரமாதமானது. மண் தேய்த்து குளிக்கிறதுன்னு ஒண்ணு இருக்கு.

எங்க ஊர்ல வருசக்கடேசில, குளத்துல வந்து விழுந்த மண்ணு இருக்கில்லயா. அதை வந்து ஏலம் விடுவாங்க. வயலுக்கு ஒரமா போடுவாங்க. அந்த களிமண்ணு எப்படி இருக்கும்னா வெண்ணெய் மாதிரி இருக்கும். ஒரு அரிசி, ஒரு குருணை இருக்காது. எங்க ஊர் சேரி ஜனங்கள் அதை எடுத்துட்டுப் போய் தண்ணில ஒரு முக்கு முக்கி, தலைல,உடம்புலல்லாம் தேய்ச்சு குளிப்பாங்க. நான் அதப் பார்த்துட்டே இருப்பேன். நம்மளும் அப்படிப் பண்ணா என்னன்னு நானும் குளிச்சேன். என்ன ஆச்சர்யம் தெரியுமா? உடம்பு அப்படி சொடக்கு எடுத்தமாதிரி இருக்கும். நல்ல தூங்குனேன் அன்னைக்கு. நல்ல வெளிக்குப் போகுது. நல்ல பசிச்சது. எல்லாம் மண்ணினுடைய வித்தைதான். மண்ணுக்கு அவ்வளவு வல்லமை உண்டு. இந்த இவன் சொல்லுதான் ஜப்பானிய… விஞ்ஞானி..”

“மசனோபு ஃபுக்கோகா”

“ஆ.. தோட்டத்துல எங்கயாவது பின்னால கழிவுகள் இருந்தா அதை எரிக்காத. நெருப்பே காட்டாத. அப்படி எரிச்சா மண்ணுல உள்ள நுண்ணுயிரில்லாம் இறந்துடும்ன்றான். அப்ப அத என்ன செய்ய. கழிவெல்லாம் மண்ணுல போடு. மண் தின்னுரும். மண் தின்னுட்டு அதை உரமாக்கித் தந்துடும். மனுஷங்களுக்கே அதத்தானே சொல்றாங்க. நீங்க எங்கயும் போகவேண்டாம். உங்க வீட்டுக்குப் பின்னால வெளிக்கு இருந்துட்டே இருங்கன்றான். அந்த வளையம்.. குயவனார்கிட்டச் சொல்லி பத்து வளையம் செஞ்சுக்கணும். அது அளவுக்கு குழி தோண்டி மண்ணை எடுத்து பக்கத்துல போட்டு வச்சிக்கணும். ஒண்ணுக்கு வந்தாலும் சரி வெளிக்கு போனாலும் சரி. அதிலயே போய்ட்டு மண்ணை அள்ளிப் போட்றணும். அந்த வாடை போற அளவுக்கு. இப்படி மண்ணு மலம் மண்ணு மலம்னு ரெம்பிடுது. இன்னொரு இடத்தில அடுத்து. இடம் இருக்குறவன் புண்ணியவாளன். அவன் வச்சிக்கலாம். லெட்ரினு தண்ணி லொட்டு லொசுக்கு எதுவும் தேவை இல்ல. எவ்வளவு தண்ணி போகுது தெரியுமா ஃப்ளெஷ் அவுட்ல. லெட்ரின் கட்டணும்னு சொல்றானுங்களே தவிர தண்ணி எங்கடா இருக்குன்னு கேட்டா ஒருத்தணும் பதில் சொல்ல மாட்டுக்கானே. இது காந்திய முறை. இப்படியே நாலுமாசம் மண்ணை வெட்டி வெட்டிப் போட்டா வாடையே இருக்காது. அது அவ்வளவும் நல்ல உரம். உலகத்திலே விலையுயர்ந்த உரம்.

சிரிக்கிறோம். கூடவே கிராவும்.

“மனுஷங்க வந்து எந்த விதமான ஆடம்பரமும்… மன ஆடம்பரத்தைச் சொல்லுறேன். ஆடை ஆடம்பரத்தைச் சொல்லல. அப்படி வாழ்ந்தா எல்லாரும் கேலி பண்ணுவான் அவன. பண்ணிட்டுப் போறான் நமக்கென்ன. இப்ப நீங்க ரெண்டுபேரும் இந்த சட்டை போட்டிருக்கீங்க. நான் ஃப்ரீயா இருக்கேன். நீங்க புளுங்கிக்கிட்டுத் தான இருக்கீங்க. இது தேவையா உங்களுக்கு. நண்பர்கள் வீட்டுக்குப் போனதும் நான் சட்டைய கழட்டிடுவேன். என்னன்னு கேட்டா வெளிய போகும்போது போட்டுக்கலாம்யான்னுடுவேன். ஒருதடவை நாகர்கோவில்ல சுந்தர ராமசாமி வீட்டுக்குப் போயிருந்தேன். வாசகர் ஒருத்தர் தேடி வந்திருக்கார். அடையாளம் சொல்றதுக்கு அங்க யார் சட்டையில்லாம உக்கார்ந்திருக்காரோ அவர்தாம் போய் பாருங்கன்னுட்டார். இப்படி நிறைய. ஆனா இதுல நல்லதும் இருக்கு சட்டை ரொம்ப நாளைக்கு வரும். அப்ப வெறும் கோவணம் தான. நீங்க இதச் சொல்லுறீங்களே ரமணர் அதத்தாஞ் செஞ்சிகிட்டு இருந்தாரு”

விழுந்தடித்துச் சிரிக்கிறோம். தகரவீட்டு துரைசாமி நாயக்கர் கதையை நினைவுகூர்கிறார். கஞ்சத்துக்கும் சிக்கனத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிச் சொல்கிறார். எல்லாமே குபீர் ரகச் சிரிப்பாணிகள். சிரிப்பெல்லாம் முடிந்தபிறகு, அன்றைக்கு காலை தமிழ் இந்துவில் வந்த கிரா பற்றிய குறிப்புகளைப் பேசுகிறோம்.

“என்னம்மோ இன்னைக்குப் போட்டிருக்கான் முப்பது பொஸ்தகம் எழுதியிருக்குன்னு. நான் எம்புஸ்தகத்த எண்ணுறதில்ல. அத கதிர்கிட்ட போன்பண்ணிக் கேட்டாத்தான் தெரியும். அப்புறம் என்னைப் பற்றிவந்த புஸ்தகம் ஒரு பத்து இருக்கும். பி.எச்.டி பண்ணா தீஸிஸ்க்கு எழுதுவாங்க இல்லையா அது ஒரு நாலைஞ்சு உருப்படி தேறும்”

சாயங்காலம் தந்தி டிவியில் வந்த தங்கர் பச்சான் எடுத்த பேட்டியையும், கனடா இயல்விருது வழங்கிய நிகழ்ச்சி பற்றியும், அன்றைய நாளில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல அழைத்தவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் பேசுகிறார். க. பஞ்சாங்கம் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டுச் சிலாகிக்கிறார்.

“எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. சொற்கள்னு.. அந்த வார்த்தைக்கு திறக்குறதுன்னு ஒண்ணு இருக்கில்லையா. அவன் பேரென்ன.. அலிபாபா. அவன மாதிரி சொற்களோட ஜீவனை மந்திரத்தச் சொல்லித் திறக்குறவர்ன்னு சொல்லி இருக்கார். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது”.

“பஞ்சாங்கம் உங்களை அலிபாபா என்கிறார். எஸ்.ரா உங்களை பீஷ்மர் என்கிறார்”

“நான் ராஜநாராயணனாக இங்கேதான் உட்கார்ந்திருக்கிறேன்” என்றார். வீடு திரும்பின பிறகும் மண்ணை வைத்து எவ்வளவு சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே திரிந்தேன். முதல்வேலையாக ஒரு அவரை விதையை வறுத்து மண்ணில் புதைத்து நாலு நாள் கழித்துத் தோண்டிப் பார்க்க வேண்டும் என்றே இருந்தது.

(தொடரும் …)

அத்தியாயம்  2 . . .