மனதோடு கி.ரா – 2

மனதோடு கி.ரா

தொடர் : – கார்த்திக்.புகழேந்தி

அத்தியாயம் 2 – ‘கோபல்ல கிராமம்’ன்னா என்ன அர்த்தம்?

வரவேற்பறை -2

ஐந்தரை மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து, புறப்பட்டு, திருவான்மியூரில் பைக்கை நிறுத்திவிட்டு, புதுச்சேரி பேருந்தைப் பிடித்திருந்தேன். ஏற்கனவே நண்பர் ரெங்காவும், இளங்கோவனும் மதுரையிலிருந்து முதல்நாள் புறப்பட்டு காலையிலே புதுவை வந்திருந்தார்கள். சரியாகக் காலை பத்துமணிக்கு மூவரும் இலாசுப் பேட்டையில் உள்ள கி.ரா வீட்டுக்குள் நுழைந்தோம்.

“வாங்கோ உட்காருங்கோ” என்றபடியே தன்னுடைய முதுகுப்பக்கம் உயரமான இருக்கையில் மேல்துண்டோடு உட்கார்ந்திருந்தார். வழக்கம்போல காலைத் தொட்டு வணங்க முற்படும்போது, “இது ஒரு வியாதி ஆகிட்டது. காலில் விழுற சடங்கா இருக்கட்டும். இந்த பழங்களை வாங்கிக்கொண்டுபோய் ஒருத்தரைப் பார்க்கப் போகிறதா இருக்கட்டும். பழங்களைப் பார்க்கிறபோதெல்லாம் நமக்கு வயசாகிட்டு.. நோயாளியைப் பார்க்க வர்றோம்கிறமாதிரி ஆகிடுதில்லையா” என்று போட்டு உடைத்தார்.

பக்கத்திலே கிராவுடைய இளைய மகன் பிரபி அண்ணன் (பிரபாகர்) உட்கார்ந்திருந்தார். பிரபி அண்ணன் கிரா அளவுக்கு கரிசல் மண்ணின் வாழ்வியலைச் சம்பவங்களோடு நினைவுபடுத்திப் பேசுபவர்.  நண்பர்களை அறிமுகப்படுத்துகிறேன்.  ‘இவரு  ரெங்கா கருவாயன் மதுரைக்காரரு..’

“கருவாயன்.. பேரே அதானா…”

“சின்ன வயசிலே அப்படியே வெளையாட்டுக்குக் கூப்பிடுவாங்க. நானும் அப்படியே வச்சுக்கிட்டேன்” நண்பர்.

“இந்த கருவாயன் அப்படின்ற பேர் எப்படின்னா.. அது ஒரு வசவு. வெள்ளைக்காரன் நம்ம ஆளுங்களைப் பார்த்துச் சொல்ற வசவு. நம்மவங்களுக்கு உதடு பார்த்தீங்கன்னா அப்படியே கருப்பு வளையமா இருக்கும் பலருக்கு. அதான் அவன் “ப்ளாக் மவுத்” அப்படிங்கான். அவன்கிட்ட வேலை செய்யுற மேஸ்திரிமார்கள் அதுக்கு தமிழ் அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டு அப்படிக் கூப்பிட ஆரம்பிச்சுடுறாங்க. கருவாயன் அப்படின்றது பேராவும் ஆகிடுது. நம்ம தான் வைப்போமே.. வெள்ளைச்சாமி அப்படின்னுகூட”

“இவர் இளங்கோவன். உங்களைச் சந்திக்கணும்ன்னே மதுரையில் இருந்து வந்திருக்காங்க ரெண்டுபேரும்”

“நான் என்ன சினிமா ஸ்டாரா!” சிரிக்கிறோம்.

“இப்போ அதெல்லாம் குறைவு. சுத்தமா இல்லைன்னு சொல்லிட முடியாது. முன்னாடி ஒருதடவை கன்னடப் படம் ஒண்ணு பார்த்தேன். இப்போ சமீபத்தில் எதோ ஒரு விஷயத்தை யோசிக்கிறப்போ அந்தப் படம் நியாபகம் வந்தது. அந்தப் படத்துக்கு ‘செலுவி’ அப்படின்னு பேரு..  அக்காவும் தங்கையும்தான் மையக் கதாப்பாத்திரங்கள். அது ஒரு காடு இருக்கும். அங்கே உள்ள அருவி தண்ணியியை எடுத்துட்டு தங்கையானவ மேல ஊத்தினா  அவ பூப்பூக்கிற மரமா மாறிடுவா. ரொம்ப வாசனையான பூமரம் அது. மரத்தை உலுக்கி பூக்களை பறிச்சு எடுத்துட்டுப் போய் மாலை கட்டிக்குவாங்க. கன்னடத்து நாட்டுப்புறக்கதை அது. தமிழ்லே வில்லனாய் நடிக்கிறாரே கிரிஷ் கர்னாட் (காதலன் 1995) அவர் கன்னடத்தில் எடுத்த அற்புதமான படங்களிலே அதுவும் ஒண்ணு. நீங்க அந்த படம் பாருங்க”

( செலுவி : https://www.youtube.com/watch?v=7alrHr4C6es  )

“கட்டாயம் பார்க்கிறேன். நீங்க எழுதின பல கதைகளிலேயும் இப்படி பெண் கதாப்பாத்திரங்கள் சிறப்பா தனிச்சு தெரியும். சென்னாதேவி அப்படியே நிலத்துக்குள் புகும் காட்சியை இப்பவரைக்கும் மனசுக்குள்ள ஒரு சித்திரமா வச்சிருக்கேன். இந்தமாதிரி பெண்களை மையப்படுத்தும் உங்கக் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வெளியிட்ட தொகுப்புகூட சமீபமாதான் வாசிச்சேன். திரும்ப வாசிக்க அவ்வளவு சுகமா இருந்துச்சு” (பெண் கதைகள் – அன்னம் வெளியீடு).

“அதெ எழுதும்போது எனக்கு அப்படி பெருசா எந்த நோக்கமும் இருக்கல. நா.வானமாமலை இருக்காரில்லையா. அவர்தான் 86லே ‘பேதை’ கதையைப் படிச்சுட்டு அப்படி ஒரு விதையை எனக்குள்ள போட்டு வச்சார். அப்பொறம் ரொம்ப நாள் கழிச்சு இங்கே (புதுவை) மாறிவந்தபிறகு, ‘அவ்வையார் நோன்பு’ அப்படின்னு ஒரு நாட்டுப்புறக் கதை கிடைச்சது. அதையெல்லாம் பெண்மனம்னு நிறைய எழுதியிருக்கேன்.

பெண்ணை வச்சு தென் அமெரிக்காவிலே ஒரு நாட்டுக்கதை உண்டு. இப்போ நாமெல்லாம் என்ன சாப்பிட்றோம். சமைச்சு, வேகவச்சு என்னம்மாது பண்ணிடுறோம் இல்லையா உணவுகளை. அப்போ இந்தத் தங்கத்தைத் தேடி இப்போ அலையுறமாதிரி நெருப்பைத் தேடி மனுஷங்க அலைஞ்ச காலம். நெருப்பு இருந்தாதான் மாமிசத்தைச் சுட்டுத் தின்ன முடியும். ஆண்கள் எல்லாம் எங்கே எங்கேன்னு அலையுறாங்க.

இந்தப் பெண்கள் என்ன பண்ணுறாங்க. ஆண்களெல்லாம் வேட்டைக்குப் போன அப்புறமா தங்களோட ‘அறை’யிலிருந்து நெருப்பை எடுத்து மாமிசத்தை வாட்டித் திங்க ஆரம்பிச்சுடுறாங்க. இப்படியே போய்ட்டு இருக்குறப்போ, திடீர்ன்னு ஒருநாள் வேட்டைக்குப் போயிருந்த ஆண்களெல்லாம் வந்து ‘கதவத்திற’ன்னு நின்னுட்டாங்க. இவங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல. சுட்ட மாமிசத்தை எல்லாம் எடுத்து மறுபடியும் தங்களோட ‘அறை’யில ஒளிக்குறாங்க. அப்படியும் சில துண்டுகள் தவறிடுது. அதை கவனிச்சு எடுத்த ஆண்பிள்ளைகள் மென்னு தின்னுப் பார்க்கிறாங்க. ‘அடடா என்ன ருசி. உங்களுக்கு எங்க இருந்து கிடைச்சது இது?’ அப்படின்னு கேக்குறாங்க. இவங்க தெரியாதுன்னு பதில் சொல்லவும் ஆண்களுக்கு முதல்முறையா பெண்கள் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சுடுது. அதுவே பகையாகி, பெண்ணை பழித்து, பட்டினி போட்டு, ஒடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.

இந்த நிலைமை அப்படியே இருந்தா என்னாகும். அப்போதான் இங்கே அவ்வையார் வந்து ஆண்களெ எல்லாம் ஜெயிக்க பல தந்த்ரோ பாயங்களைப் பெண்களுக்குச் சொல்லித் தருகிறா. பெண் இனத்தைக் காப்பாற்றுகிறா. அப்படித் தோன்றினதுதான்  அவ்வையார் நோன்பு. ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை வந்தா அதுக்கு ஒண்ணு சொல்லுவாங்க. புருசம் பொண்டாட்டி சண்டை வரகரிசி வேகும் நேரம் தான் அப்படின்னு”

“உங்க படைப்பாக்கங்கள் பலதையும் பெண்கள் தான் ஆய்வு பண்ணி எழுதிட்டும் இருக்காங்கன்னு நினைக்கிறேன்”

“ஆமா. அது என்னம்மோ தெரியலை. பிரான்ஸ்லே இருந்து ஒரு  பெண்மணி பேசுவார். ஒருதடவை நேரா பார்க்கவே வந்திருந்தார். கோபல்ல கிராமத்தை ஃப்ரெஞ்சில் மொழிப்பெயர்க்கக் கேட்டார். அதை தெலுங்கில் மொழி பெயர்த்ததே ஒரு அருமையான நிகழ்வு. அங்கே உள்ளவங்களுக்கு இங்கே தமிழகத்திலே பேசுற தெலுங்கு ரொம்ப அற்புதமான சொற்களோட இருக்குன்னு சொல்றாங்க. அதுக்குக் காரணம் பல வருடங்களா இங்கே கலப்புகள் எதுவுமே இல்லே இல்லையா. பழைமையான சொற்கள் அப்படியே சுத்தமா இருக்குன்னு சொல்றாங்க.”

“கேட்கணும்னு நினைச்சேன் ‘கோபல்ல கிராமம்’ தெலுங்கில் வாசிச்சீங்களா?  ‘கோபல்ல’ அப்படின்னா என்ன அர்த்தம்?”

“நான் கோவில்பட்டியை மனசில் வச்சு அப்படி பேர் வச்சேன். ஆனால் நந்தியால நாராயண ரெட்டி தெலுங்கிலே எழுதும்போது, ‘கோபல்ல’ மட்டும் வச்சிட்டு விட்டுட்டார். அதுக்கு கிராமம்னு சேர்க்காட்டாலும் அதான் அர்த்தமாம். அப்புறம் எனக்கு தெலுங்கு வாசிக்க எழுதத் தெரியாது. என் பேரப்பிள்ளைகளுக்கும் தான். நம்ம ஊர்கள்ளே நிறைய அப்படித்தான்”

“அந்தத் தெலுங்கு மொழியாக்கத்தோட முன்னுரையை ருத்ர துளசிதாஸ் ‘கதைசொல்லி’க்காக தமிழில் எழுதிக் கொடுத்திருந்தார் பார்த்தீங்களா..”

“பார்க்கணும்”

சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் வருகிறார். அவரிடம் அறிமுகமாகிக் கொள்கிறோம். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பிரெஞ்ச் பெண்மணி பற்றி சொல்லவந்தது பாதியிலே விட்டுவிட்டது நினைவுவந்து அவர் பற்றிக் கேட்கிறேன்.

“அதுவா, அவர் வந்து மொழியாக்கம் பண்ணனும் அப்படின்னு கேட்டார். இங்கே வந்து தங்கியிருந்து பண்ணனும்னார். நான் பிரெஞ்சு பேராசிரியர் யாரையாவது வரச்சொல்லி அறிமுகப் படுத்தலாம்னு நினைச்சேன். அய்யய்யோன்னு அலறிட்டார். ஏன்னு கேட்டேன். ‘அவன் ஃபிரெஞ்சுலல்லா பேசுவான். யாரு காதுகொடுத்துக் கேட்கிறது’ அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டார். அப்பத்தான் தெரிஞ்சது அவம் மொழியை இங்குள்ள பேராசிரியர்கள் என்ன பாடு படுத்தி வச்சிருக்காங்கன்னு”

எங்களோடு சேர்ந்து இப்போது பா.ஜெயப்பிரகாசமும் சிரிக்கிறார். “கம்பங்கூழ் குடிக்கிறீங்களா கார்த்தி” என்று வீட்டுக்குள்ளிருந்து ஒரு விருந்தோம்பல் வருகிறது. அரிசி வடகத்தை தொட்டுக்க எடுத்துக் கொடுக்கிறார் பிரபி அண்ணன். ரெண்டு பெரிய தம்ளர் அளவு குடித்துவிட்டு ருசியாக இருக்கிறது என்கிறோம். கிரா பஞ்சகால கஞ்சிக் கதை ஒன்று சொல்லத் தொடங்குகிறார்.

“அப்போ தாதுவருசப் பஞ்சம் அப்படிங்காங்களே. அதுமாதிரி ஒரு பஞ்சகாலம். அரிசிக்கெல்லாம் வழியே இல்லை. கம்பும் கஞ்சியும் தான். அப்போ இந்த வேடன் ஒருத்தன் என்ன பண்ணுறான். புறாக்கள் இருக்கில்லையா அதுகளோட தாடைக்குக் கீழே கயித்தைக் கட்டி ஊரில் எங்கெல்லாம் நெல் காயப் போட்டிருக்கிறார்கள்னு பார்த்து ஏவி விடுறான். இந்த புறாக்கள் அதைத் தேடி அலையும். அப்படி எங்காவது கண்டா கொத்திச் சவைத்து, வேடன் வீட்டிலே கொண்டுவந்து போடுமாம். அப்படி ஒரு ட்ரெய்னிங். அந்த தானியங்களெ வச்சு கஞ்சி ஆக்கிக் குடிச்சுக்குவானாம்.”

“மிருகங்களையும் பறவைகளையும் பழக்கிட்டா போதும்போல! பூனை ஒண்ணு இருந்துதே!”

“ஆமா மழை வெள்ளத்தோட இங்க வந்து ஒதுங்கினது. ஆண் பூனை பெருசா நிக்காது எங்கயும். இது நிக்குது. பிள்ளைபோல செல்லம் கொஞ்சுது. பாப்போம்”

“அப்புறம் விகடன் பேட்டி வாசிச்சேன். கமல்ஹாசன் வந்துபோன நிகழ்ச்சியைப் பத்தியெல்லாம் சொல்லி இருந்தீங்க ஆனா ரொம்பச் சுருக்கிட்டாங்க போலயே!”

“ஆமா, நிறைய சுருக்கிட்டாங்க.  கொஞ்சம் இரு” உள் அறைக்குள் நுழைகிறார். நாற்பது ஐம்பது காகிதங்கள் கொண்ட,‘கையெழுத்து கெட்டை’ நீட்டுகிறார். இந்தா இருக்கில்லையா. இதையே தனியே மொத்தமும் பொஸ்தகமா கொண்டு வரலாம். நகல் எடுத்துகிட்டுப் போயேன் தங்கமணி” (தங்கமணி -கிரா வைத்த செல்லப்பேர்).

“விகடனில்லையா அவங்க ஏதும் தனியா கொண்டு வரும் திட்டம் வச்சிருப்பாங்களா இருக்கும் எதுக்கும் கழனியூரன்கிட்ட ஒருவார்த்தை விசாரிச்சுக்கிடுறேன். இதை நான் அப்படியே நகல் ஒண்ணு எடுத்துக்கிறேன்.  அப்புறம் கதைசொல்லிக்கு ஒரு தபால் வந்திருந்தது. அதிலே, “நைனாவை எப்படியாவது பேச வைத்துக் கொண்டே இருங்கள்; அவர் இந்த சமூகத்தின் மனசாட்சி” அப்படின்னு எழுதி இருந்தாங்க.” என்றேன்.

“அப்படியா! இந்த பேட்டிக்கு இட்டிருக்கும் தலைப்பை என்னன்னு பாரேன்” என்கிறார். முதல் தாளைத் திருப்புகிறேன். ‘வாய்மொழி’ என்று கையெழுத்தில் தலைப்பு வைத்திருக்கிறார். பூடகமாகச் சிரிக்கிறார்.

“உங்களமாதிரி எழுத்தாளருக்கெல்லாம் இந்த அரசாங்கமே ஒரு ஆள்போட்டு நீங்கச் சொல்லச் சொல்ல எழுதுகிற மாதிரி செஞ்சு, மக்களோட வாழ்க்கையை பதிவு  பண்ணியிருக்கணும்”

“அதெல்லாம் நான் போய்ச்சேர்ந்து என் பேரப் புள்ளைகளுக்குப் பிறகு அரசாங்கம் யோசிக்கும் காரியம்” என்று சிரித்தார். நண்பர்களோடு விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். பேருந்தில் வீடுதிரும்பும்போதே மொத்த ‘வாய்மொழியும்’ வாசித்து முடித்தேன். அதில், உங்களுடைய கனவுப் படைப்பு (அ) மாஸ்டர் பீஸ் எது? என்ற கேள்விக்கு, “இனிமே கனவு கண்டு போரும் சமாதானமுமா எழுதப் போகிறேன். எழுதியதில் சிறந்தது எது என்று கேட்டால், ‘கோபல்லகிராமம்’ தான் என்று கேள்விப்படுகிறேன். எழுதிமுடித்து ஏழு ஆண்டுகள் கையிலே வைத்திருந்தேன். நினைத்த போதெல்லாம் திருத்தம் பண்ணிக் கொண்டு. பதிப்பிக்கப் போனால் நான் விரும்பின வாராந்திரிகள் எல்லாம் கதவைச் சாத்திக் கொண்டன. தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லஷ்மி அம்மைதான் புத்தகமாகக் கொண்டுவந்தார். கிடை குறுநாவலையும் கொண்டுவந்தது அவர்தான். அதன்பிறகுதான் இந்தப் ‘பாவிப் புலையனை’ யார் இவர்? யார் இவர்? என்று தமிழ் எழுத்துலகம் கேட்க ஆரம்பித்தது. இப்போ இந்தா உங்கள் முன்னால் இருக்கிறேன் கி.ரா என்ற 93வயசுக் கிழவன்.” என்று பதில் எழுதி இருந்தார்.

  “கி.ராஜநாராயணன் – கமல்ஹாசன் சந்திப்பு” அடுத்த வரவேற்பறையில்…