மணிரத்னத்தின் கல்யாணங்கள்

மணிரத்னத்தின் கல்யாணங்கள்:

ராஜசங்கீதன்

மணிரத்னத்துக்கும் கல்யாணத்துக்கும் என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. குறைவான வசனம் போல, இருட்டு போல, சொதப்பலான கல்யாணங்களும் அவர் படங்களுக்கு ட்ரேட் மார்க்.
‍‍‍‍
‘என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் திமிர் பிடிச்சவ. வேணாம்னு சொல்லிடுங்க’ என சொல்லும் ரேவதியை ‘பிடிச்சிருக்கு. கல்யாண வேலைய ஆரம்பிங்க’ என வெளியே வந்து மோகன் சொல்லும் முரண்பாட்டிலிருந்துதான் மவுனராகம் படத்தின் கதையே துவங்கும்.
‍‍‍‍‍‍‍‍
கோயிலுக்கு கூட்டி சென்று, சந்நிதியில் நின்று கண்கள் மூடி சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் சரண்யாவின் நெற்றியில் திடுமென குங்குமம் வைத்து நாயகன் படத்தில் கமல் கல்யாணம் முடிப்பார்.
‍‍‍‍‍‍ ‍‍
பெண் பார்க்கும் படலத்தின்போது, ஒரு ஓரமாக கண்கள் மூடி கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் தங்கையை கை நீட்டி காட்டி மணம் முடிப்பதுதான் ‘ரோஜா’. ஓடிப்போய் கல்யாணம் ‘பம்பாய்’யில். திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணியும் ஓடாமல் இருப்பது ‘அலைபாயுதே’. கல்யாணம் செய்ய போகிறவனின் காதலுக்கு உதவி செய்யும் பெண் ‘உயிரே’வில். தொழில் தொடங்க பணம் வரதட்சணை மூலம் கிடைப்பதால் கல்யாணம் ‘குரு’வில். குழந்தை தத்தெடுக்க கல்யாணம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. கல்யாணம் பண்ணியும் சந்தேகம் ‘ராவணன்’!
‍‍‍‍‍‍ ‍‍
ஒய் மேன்… ஒய் யூ ஹேவ் திஸ் மச் க்ரட்ஜ் அகேன்ஸ்ட் மேரேஜ்? அநேகமாக அஞ்சலி போன்ற ஒன்றிரண்டு மணி படங்களில் மட்டும்தான் ஒழுங்கான கல்யாணங்கள் இருக்கலாம்.
‍‍‍‍‍‍ ‍‍
கல்யாணம் என்பதற்கு எதிராக என்பதைவிட, கல்யாணம் என்ற நிறுவனத்துக்கு எதிராக மணி இயங்கியிருப்பதாகத்தான் பார்க்க வேண்டும். கல்யாணம் பற்றிய புனித பிம்பங்களை, நம்பிக்கைகளை தன் படங்களின் ஊடாக உடைத்துக் கொண்டே வந்திருப்பார். குடும்பம், பெண் முதலிய நிலப்பிரபுத்துவ கற்பிதங்களை தன் நலனுக்காக உடைக்க முற்பட்ட முதலாளித்துவத்தின் மற்றுமொரு ஆயுதம் மணி என்று கூட சொல்லலாம்.

இந்தியாவில் கல்யாணங்களும் காதல்களும் உறவுகளும் அவை இயங்கும் தளங்களும் மேற்கத்திய நாடுகளில் உள்ளவை போல் கிடையாது. முற்றிலும் வேறானவை. குடும்பம், வாழ்க்கை, நிம்மதி என ஒரு ஆணின், ஒரு பெண்ணின் எல்லா கனவுகளும் இந்தியாவில் கல்யாணத்தை சுற்றியே இருக்கும். வாழ்க்கையை earthquake என கொண்டால், திருமணம்தான் அதன் epicentre.
‍‍‍‍‍‍ ‍‍
ஏனைய நாடுகளில் டேட்டிங், காதல், உறவு, கல்யாணம், குடும்பம், விவாகரத்து, single parenting என ஆண்-பெண் உறவில் பல தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்தையும் உணர்வுகளுக்கு அங்கு அளிக்கப்படும் மதிப்பு என எடுத்து கொள்ளலாம். அல்லது திருமணம் என்பது அவர்கள் வாழ்வின் அங்கம் தானே தவிர, மையம் அல்ல என்றும் புரிந்து கொள்ளலாம். இந்தியாவிலோ ஆண்-பெண் உறவு என்றால், அதற்கு ஒரே முடிவு திருமணம்தான். குடும்பம்தான்.

மேற்கத்திய பாணி வணிகம், வேலைகள் எல்லாம் அவர்களின் வாழ்க்கையையும் கலாசாரத்தையும் உடன் அழைத்து வருகையில், இந்தியாவில் இருக்கும் உறவு சார்ந்த விழுமியங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எழுகிறது.

வாழ்வியல் விழுமியங்கள் மீது விசாரணை நடத்த கலையை தவிர சிறந்த வழி ஏது?

தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கை இந்தியாவில் விவாதிக்க தொடங்கப்படும் எண்பதுகளின் காலகட்டத்தில் மணிரத்னம் படங்கள் இயக்கத் தொடங்குகிறார். சென்னை, மும்பை போன்ற மெட்ரோ நகர வாழ்க்கையிலிருந்து இந்தியத் திருமண உறவுமுறையின் மீதான தன் விசாரணையை மணிரத்னம் மேற்கொள்கிறார்.

நாயகன் படத்தில் விலைமகளை கமல் மணம் முடிப்பார். கற்பு என்ற கேள்வியையே எழுப்பாமல் படக்கதையை நகர்த்தியிருப்பார் மணி. ஏன்? கல்யாணத்துக்கு மட்டுமல்ல சமூகத்திலும் கற்பு என்பதற்கான தேவைதான் என்ன? தேவையில்லையே! இப்படி தைரியமாக இப்போது பேசிவிடலாம். ஆனால் எண்பதுகளில் வெகுஜன சினிமாவில் பேசி, ஓட வைப்பதற்கு அசாத்திய துணிச்சல் தேவைப்பட்டிருக்கும்.
‍‍‍‍‍
எத்தனை பெண்கள் தங்கள் காதலை கணவனிடம் சொல்லியிருப்பார்கள்? மவுன ராகத்தில் ரேவதி சொல்லியிருப்பார். மனைவி தன் முன்னாள் காதலை சொன்னால் வன்முறையை கட்டவிழ்க்கும் மனமாக கணவன் இருந்த சமூகச்சூழலில், உண்மையில் நல்ல கணவன் எப்படி நடக்க வேண்டும் என மோகன் கொண்டு காண்பித்திருப்பார் மணி. ‘உன் கடந்த காலத்தை பத்தி எனக்கு கவலை இல்ல… உன் வருங்காலத்ததான் பகிர்ந்துக்க ஆசப்படறேன்’ என்ற வசனம்தான் எத்தனை அழகு!

‍‍‍‍‍‍அதே போல், ‘நாயகனு’க்கு பிற்கால படங்களில் மணி காட்டும் கணவன் மனைவி உறவில் ஒரு ஒற்றுமை பார்க்கலாம். கணவன் மனைவிக்குள் ஏற்படும் மெல்லிய விரிசலை, ஒரு புறக்காரணி உருவாக்கும் அசாதாரண சூழல் சரி செய்யும். அந்த சூழல் அவர்களுக்கு இடையிலான காதலை மீட்கும்.

‍‍பெற்றோர்களுக்கு இடையிலான பிரச்சினையால் ஊடல் கொள்ளும் தம்பதி, கலவரத்தால் ‘பம்பாய்’ படத்தில் ஒன்றிணைவார்கள். அக்காவை மணம் முடிக்காமல் தன்னை மணம் முடித்த கோபம் சரியாகும் நேரத்தில், கணவன் கடத்தப்படும் சூழல் அவன் மீதான அன்பை வலிமையாக்கும் ‘ரோஜா’ படத்தில். கட்டி முடிக்கப்படாத அரைகுறை வீட்டில் வசிக்கும் அரைகுறை காதல் தம்பதிக்குள் ஏற்படும் விரிசல், இன்னொரு தம்பதி விபத்தின் போது ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் அரவணைப்பை பார்த்து சரியாகும் படம் ‘அலைபாயுதே’.
‍‍‍‍‍‍‍‍
இது மேலை நாட்டு படங்கள் பாணி. தங்களுக்குள் ஏற்படும் அல்லது இருக்கும் inner conflicts-ஐ outer conflicts-ஐ தீர்ப்பதன் வழி தீர்த்து, அடையும் அகவிடுதலையை ஆங்கில படங்களில் அதிகம் பார்க்கலாம். Interstellar படம் உட்பட தலைமை பாத்திரத்துக்கு ஒரு குடும்ப ரீதியான அகப்பிரச்சினை இருக்கும். அதற்கான தீர்வு புறப்பிரச்சினைக்கான தீர்வுடன் தொடர்பு கொண்டிருக்கும். மணி இந்த சட்டகத்தைத்தான் குடும்பத்துக்குள், காதலுக்குள் வைக்கிறார்.
‍‍‍‍‍‍ ‍‍
முக்கியமாக ஆய்த எழுத்தில், ஊரில் திருமண நிச்சயமான பெண் சென்னையில் டிஸ்கோவில் ஆடிக்கொண்டிருப்பார். கல்யாணத்துக்கு முன்னதாக ஒரு சின்ன ரிலேஷன்ஷிப் என தொடங்குவார்கள். ‘அது எப்படி ஒரு பொண்ணு இப்படி இருக்கலாம்’ என நாம் காறி துப்பலாம். அல்லது ‘இப்படி நடக்கிறது’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளலாம்.

தன் எல்லா படங்களிலும் திருமண உறவை விவாதிக்கும் மணிரத்னம் ஒரு முக்கியமான உத்தியை தமிழ்சினிமாவுக்கு அளித்தார். ஒரு பிரச்சினையை எடுத்து அதை விவாதிக்க மட்டுமே செய்வார். பிரச்சனையின் இருதரப்பையும் நமக்கு அளிப்பார். அந்த வகையில் இருதரப்புமே படத்தை பார்க்க வந்துவிடும். பிரச்சினை முடிக்கப்படுகையில் மட்டும் பொதுப்புத்திக்கு ஏற்றவாறு முடித்துவைப்பார். ஓகே கண்மணியில், லிவ் இன் ரிலேஷன்ஷிப் அமைப்புமுறை பிரச்சினை கொண்டது என்ற பொதுப்புத்தி சிந்தனைக்குத்தான் படத்தை முடித்திருப்பார்.

அதிக அளவுக்கு தன் படங்களில் கல்யாணம், குடும்பம் போன்றவற்றை பற்றிய கருதுகோள்களை மணி உடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், ‘மகள் எடுத்து வளர்க்கப்பட்டவள்’ என அவளிடமே சொல்வதெல்லாம் சமூகத்தை வேறொரு தளத்துக்கு இட்டுச்செல்லும் முனைப்புதான். ஆனாலும் நிலப்பிரபுத்துவ திருமண முறைகளை உடைக்கும் முதலாளித்துவ சிந்தனாவாய்ப்பை தயக்கத்துடன் கையாண்ட நிலப்புரபுத்துவ சிந்தனாவாதியாகத்தான் மணிரத்னத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைமுறைகள் இல்லாமல், தெளிவு கொடுக்கும் மற்றொரு சிந்தனைமுறையும் சமூகத்தில் இருக்கிறது. அதை கொண்டு யோசிக்க மணிரத்னம் முயலவே இல்லை. ஏனெனில் அந்த சிந்தனை ஓர் அரசியல் பார்வையிலிருந்து விளைவது. அந்த பார்வையை அவர் தனக்குள் புக அனுமதிக்கவேயில்லை. அந்த குறைபாட்டின் நீட்சிதான் ‘காற்றிடை வெளி’ படம். அப்படத்தின் நாயகன் அப்பட்டமாக நிலப்புரபுத்துவ ஆதிக்க சிந்தனையை காண்பித்திருப்பான். நாயகி கடைசி வரை காத்திருந்து நாயகனின் ஆதிக்க மனநிலைக்கு இயைந்தும் போயிருப்பாள்.
‍‍‍‍‍‍ ‍‍
மணிரத்னத்துக்கு கல்யாணம் என்ற கான்செப்ட்டில் பிரச்சினை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அவர் காட்டும் கல்யாணங்களில் நமக்கு பிரச்சினைகள் இருப்பதே இல்லை. சொல்லப்போனால், பல நேரங்களில் அவர் படத்தின் உதாரணங்களை நம் சொந்த வாழ்க்கைகளில் எடுத்து கையாளும் ஆபத்தான நிலைகளுக்கு கூட செல்கிறோமே!

மணிரத்னம் காட்டும் திருமண மற்றும் ஆண்-பெண் உறவுகளில் என்னுடைய ஃபேவரிட் மவுனராகம், ஆய்தஎழுத்து மற்றும் ஓகே கண்மணிதான்.

‍‍‍‍‍‍‘காதல் வெறும் ஹார்மோன்கள் கலாட்டாதான்’ என ஆய்த எழுத்தில் பேசும் மைக்கெலும், கடற்கரையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும் சித்தார்த், த்ரிஷாவின் தோளில் இருக்கும் தன் கையை மெல்ல கீழே இறக்க, த்ரிஷா முறைக்க, “நான் வேணாம்னுதான் சொல்றேன். கைதான் கேட்க மாட்டேங்குது” என அப்பாவியாக சித்தார்த் சொல்லும்போதும் மணிரத்னத்தின் அந்த சலித்துப்போன கண்ணாடிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் குறும்பனை பார்த்து “டேய் பையா” என சல்யூட் அடிக்க தோன்றுகிறதுதானே! அந்த குறும்புக்காகவாவது அவர் காட்டும் கல்யாணங்கள் சொதப்பலாகவே இருக்கட்டும்!

நீதி: ஜாதகக்கட்டம், பொருத்தம், சாதி, மதம், திட்டம் எல்லாம் பார்க்காமல் சொதப்பலாக கல்யாணம் செய்யுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்! 🙂