மொழிபெயர்ப்புகள்

மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனுக்கு என்னதான் நேர்ந்தது? -யங்-ஹா கிம்

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

வாழ்க்கை மிக விசித்திரமான சில தினங்களை உங்களுக்குக் கையளிக்கக்கூடும். நீங்கள் அறிவீர்கள், கண்விழித்த நிமிடம் தொடங்கி அத்தனையும் திருகலாயிருப்பதாய் உங்களை உணரச்செய்யும் வகையினைச் சேர்ந்தவை. மேலும் உங்கள் வாழ்வில் ஒருமுறை மட்டும் எதேச்சையாக நிகழ்கிற சங்கதிகளெல்லாம் அடுத்தடுத்து நிகழும், ஒவ்வொன்றாக, தங்களுடைய வாய்ப்புக்காக அவை காத்திருந்தன என்பதைப்போல. இன்றைய தினம் எனக்கு அது மாதிரியானதொரு தினமாகத்தான் அமைந்தது.

இன்று காலை சவரம் செய்து கொண்டிருக்கையில் என்னுடைய சவரக்கத்தி உடைந்து போனது. உண்மையில் நான் ரொம்ப அதிகமாகவும் அழுத்தவில்லை, ஆனாலும் திடீரென்று கழுத்தினருகே முறிந்து தொலைத்தது. “ஒரு முறை பயன்படுத்தித் தூக்கியெறியக்கூடியதா?” நீங்கள் ஆச்சரியம் கொள்ளலாம். அரிதாக. அது ஜில்லெட் அறிமுகம் செய்திருந்த ஏதோவொரு புதுவகை விசித்திரமான சாதனம், அதன் பொருட்டு நான் கிட்டத்தட்ட 6000 வொன் செலவழித்திருந்தேன். இதை விட பலமான சவரக்கத்தியைக் கண்டுபிடிக்க முடியாது, மேலும் நீங்கள் முயற்சி செய்தாலும் அதனை உடைக்க முடியாது. ஆனால் ஒரு மாத காலமாக நானதைப் பயன்படுத்தி வந்த நிலையில், இப்படி என்பதற்குள், சட்டென்று முறிந்து விட்டது.

அதன் காரணமாக, எனது முகத்தில் பாதியைத்தான் என்னால் மழிக்க முடிந்தது. இடதுபக்கம் நன்றாகவும் சுத்தமாகவும் இருந்தது, வலதுபக்கம் அப்படியிருக்கவில்லை. “கழுதையைப் போன்ற தோற்றத்தோடு நீ வேலைக்குப் போகிறாய்” வெறுப்போடு நினைத்துக் கொண்டேன். என்னுடைய கடிகாரத்தைப் பார்த்தேன். 7:40. நேரமில்லை. முடியை உலர்த்தினேன், உடையணிந்தேன், எனது வீட்டை விட்டு வெளியேறி வந்து மின்தூக்கிக்காக காத்திருந்தேன். வரவில்லை. பழுதடைந்திருக்கலாம். மீண்டும் என்னுடைய கடிகாரத்தைப் பார்த்தேன். 7:55. உணவினை வினியோகம் செய்யும் சீன இளைஞனைப்போல் வேகமாகக் கீழ்தளத்தை நோக்கி 15வது மாடியிலிருந்து இறங்கத் தொடங்கினேன். 5வது மாடியைக் கடக்கையில், கதவுகள் திறந்திருக்க மின்தூக்கி 5வது மாடிக்கும் 6வது மாடிக்குமிடையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இரண்டு கால்கள் அதற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு பாதத்தில் காலணியில்லை. இந்த மனிதன் உயிரோடிருக்கிறானா அல்லது செத்து விட்டானா? அதே சமயம், என்னை வழியிலிருந்து தள்ளிக்கொண்டு, வேறு சில குடித்தனக்காரர்கள் விரைந்து சென்றார்கள். பகட்டான மேலங்கிகளைக் கச்சிதமாக அணிந்து அவர்கள் வேலைக்குச் சென்றார்கள். மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த மனிதனை, அவன் உயிரோடிருக்கிறானா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், எப்படி இவர்களால் உதாசீனம் செய்ய முடிகிறது? ஆனால் உண்மையில், நானும் கூட அங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை. என்னுடைய கடிகாரத்தைப் பார்த்தேன். மிகச்சரியாக 8:00. கருமம். கவலை நிரம்பியதொரு பார்வையை படிகளின் மீது வீசினேன். என்ன செய்வது? காலணியணியாத பாதத்தை பலமாகப் பிடித்திழுத்தேன். (அது என் முகத்தின் மட்டத்தில்தான் இருந்தது.)

“ஹேய்!” நான் குரல்கொடுத்தேன்.

பாதங்கள் பக்கவாட்டில் அசைந்தன. எந்தவிதத்திலும் பேச்சைப் போல் ஒலிக்காததொரு முனகலை நான் கேட்டேன். அவன் உயிரோடிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவனை வெளியே இழுப்பதற்கான நேரமோ சக்தியோ என்னிடத்தில் இல்லை. “கவனி,” என்றேன். “நீ மின்தூக்கியில் எப்படி மாட்டினாய் என்பது எனக்குப் புரியவில்லை, ஆனால் வேலைக்குப் போகும் வழியில் நான் 911-ஐ அழைக்கிறேன். அல்லது கீழேயிருக்கக்கூடிய காவலர்களிடம் இதைச் சொல்கிறேன், எனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திரு, சரியா?”

நான் முதலாவது மாடிக்குப் புயலென விரைந்தேன். காவல் பணியாளரின் ஜன்னலில் “ரோந்தில்” உள்ளதாக அடையாளம் இருந்தது. நான் வெளியே தேடினேன், ஆனால் அவரை எங்கும் காணவில்லை. நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. பேருந்து நிறுத்தத்துக்கு ஓடினேன்.

பேருந்து வரவில்லை. எனக்கு அடுத்ததாகக் காத்து நின்ற மனிதனிடம் திரும்பினேன்.

“உன்னிடம் எப்படியாவது அலைபேசி இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? யாரோவொரு மனிதன் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கிறான், நான் 911-ஐ அழைக்க வேண்டியுள்ளது.” நானொரு அருவெருப்பான ஜந்து என்பது போல என்னைப் பார்த்த அந்த மனிதன் தன்னிடம் அலைபேசி இல்லையென்பதை உணர்வற்ற தொனியில் சொன்னான், பிறகு தான் எதிர்பார்த்திருந்த பேருந்து வரக்கூடிய திசையில் மீண்டும் திரும்பி நின்றான். அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பெண்மணியிடமிருந்தும் எனக்கு இதுபோன்ற எதிர்வினையே கிட்டியது.

“அதோ மிகச்சரியாக அங்கே கட்டணத் தொலைபேசி இருக்கிறது,” தெருவின் குறுக்கில் விரலை நீட்டி அவள் சொன்னாள், அப்படிச் சொன்னபோது அந்த விரல் உடற்பயிற்சிக்குப் பயன்படும் பளுக்கருவியின் எடையைக் கொண்டிருப்பதாகத் தோன்றச் செய்தாள். நான் சூழ்நிலையை விளக்கினேன்.

“நான் அங்கே சென்றிருக்கும்போது பேருந்து வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கேட்டேன். “என்னுடைய முதலாளி ஒரு கொடுங்கோலன், நான் தாமதமாய்ச் சென்றால் என்னைக் கொன்று விடுவான். மேலும் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிச் சிந்தியுங்கள். எப்படிப்பட்டதொரு வலியில் அவன் இருக்கிறான் என்பதையும் யோசியுங்கள்.” அப்போதுதான் வந்து நின்ற பேருந்துக்குள் ஏறியபடி அந்தப் பெண்மணி ஒரு ஏளனச்சிரிப்பை என்மீது வீசினாள். நானொரு அலைபேசியை வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன், மேலும் எனக்கென ஒன்று இல்லாதது குறித்துக் கவலைப்படுவது இதுதான் முதல்முறை என்பதையும் உணர்ந்தேன். அதே சமயம், எனக்கான பேருந்தும் வந்து சேர்ந்தது, கூட்டநெரிசலுக்குள் புகுந்து ஏறிக்கொண்டேன். பேருந்து அட்டையை எடுக்கப் பின்பக்கமிருந்த பைக்குள் தேடினேன், அப்போதுதான் என்னுடைய பணப்பையை எடுத்து வரவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன். என்னிடம் அட்டை இல்லையெனில் பணமாகச் செலுத்தும்படி ஓட்டுனர் பொறுமையின்றி சொன்னார், ஆனால் என்னிடம் பணப்பை இல்லாத காரணத்தால் அதையும் செய்ய முடியாது என்பதை நான் விளக்கினேன்.

“அப்படியானால் பேருந்தை விட்டு இறங்கு!” அவர் குரைத்தார். எனக்குப் பின்னாலிருந்த மனிதர்கள் என்னைத் தள்ளிக்கொண்டு கடந்து போனார்கள், நீளமான ஓரப்பார்வைகளை என் மீது செலுத்தியபடித் தங்கள் அட்டைகளைத் தேய்த்து தங்களுக்கான இருக்கைகளை நோக்கி முன்னேறினார்கள். நான் ஓட்டுனரிடம் கெஞ்சினேன்.

“நாளை நான் இருமடங்கு பணம் தருகிறேன். அதுதான் சரியானதாக இருக்கும், இல்லையா?” அதே நேரம், குப்பைகளை ஏற்றிப்போகும் ஒரு பாரவண்டி நடுத்தரப்பாதையிலிருந்து திசைமாறி விலகி ஒருபுறமாகச் சாய்ந்து நேரே எங்கள் பேருந்தை நோக்கி வந்தது. என்னிடம் சத்தம் போடுவதில் ஓட்டுனர் மும்முரமாயிருந்தார், எனவே அவரால் அதைப் பார்க்க முடியவில்லை, அப்படியே பார்த்திருந்தாலும், அனேகமாக அங்கே அவர் செய்திருக்கக் கூடியது ஒன்றுமில்லை. உண்மையில், அந்தத் தருணத்தில், முழுதும் நிரம்பி வழிந்த அந்த பேருந்துக்குள் முன்ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடிந்த ஒரே ஆள் நான்தான் (அன்றைய தினம் முழுதும் எனக்கு நிகழ்ந்தவற்றுள் மிகவும் அதிர்ஷ்டகரமான விஷயம் அதுவாகத்தான் இருக்க முடியும்).

பாரவண்டியின் நீண்ட தலைப்பகுதி எங்கள் பேருந்தின் முன்னால் மோதியபோது வேகமாகப் பின்னகர்ந்து இடறி கீழே விழுந்து ஊர்ந்தவன் “ஓ,ஓ,ஓ…” என்றேன். அலறல்கள் மற்றும் முனகல்களின் கலவையான சத்தம் பேருந்தை நிரப்ப மனிதர்கள் தடுமாறி என்மீது விசையோடு விழுந்தார்கள். நானோ பேருந்து அட்டையென்னும் மோசமான சூழலிருந்து வெளியேற முடிந்ததற்காக சந்தோசப்பட்டேன். ஆரம்பகட்ட அதிர்ச்சியின் அலை கடந்தபிறகு, மக்கள் மெல்ல சமாளித்து எழ முயன்றார்கள். அட்டையை தேய்க்கும் இயந்திரம் தொடங்கி கதவு வரைக்குமான பேருந்தின் முன்பகுதி மொத்தமும் நொறுங்கிப் போயிருந்தது, மேலும் அதன் முன்புற கண்ணாடி ஓட்டுனரின் மார்பில் அழுந்திக் கிடந்தது. அதிர்ஷ்டவசமாக, முதுகின் கீழ்ப்பகுதியில் உணர முடிந்த மெல்லிய வலியைத் தவிர்த்து, எனக்குக் காயமேதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அதிர்ச்சியிலிருந்து மீண்ட மறுகணம், மக்கள் உடனடியாகத் தங்களுடைய அலைபேசிகளைத் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தன்வசம் அலைபேசி இல்லை என்று என்னிடம் சொன்ன மனிதனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல, யாரையோ அழைப்பதற்காக அட்டகாசமான வடிவமைப்புடன் கூடிய புத்தம்புதிய அலைபேசியை வெளியே எடுத்தான். 911-ஐ, தங்கள் குடும்பத்தை, தாங்கள் வேலை பார்க்கும் இடத்தை அழைத்த மக்களின் சப்தங்களால் பேருந்து நிரம்பி வழிந்தது.

“அம்மா? நான்தான். நான் பயணித்த பேருந்து ஒரு விபத்தில் சிக்கி விட்டது. ஆமாம், நான் நன்றாகத்தான் இருக்கிறேன், ஆனால் பேருந்துதான் மொத்தமும் காலி.”

“911-ஆ? எதுவோ #88 எண் பேருந்தின் மீது மோதி விட்டது. நாங்கள் சாம்டோங் அடுக்ககத்துக்கு நேரெதிரே இருக்கிறோம். உடனே வந்து சேருங்கள்..”

“திரு.ஜாங்? நான் திரு.லீ. என்னுடைய அடுக்ககத்துக்கு நேரெதிரேதான் இருக்கிறேன், நானிருந்த பேருந்தின் மீது எதுவோ மோதியுள்ளது. ஆமாம். ஓட்டுனர் இறந்து விட்டாரென்று நினைக்கிறேன். நானா? அது, ஒரு கூட்டம் என் மீது விழுந்தது, எனவே என் முதுகில்.. விடுங்கள். திரு.பார்க்கை இது குறித்து கேளுங்கள். அவருக்கு எல்லாம் தெரியும்.”

யாராவது பேசி முடித்தபிறகு அவர்களுடைய அலைபேசியை வாங்க முயற்சித்தேன், ஆனால் தாங்கள் வேறு சிலரை அழைக்க வேண்டியிருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். குடும்பத்தாரை, வேலை பார்க்குமிடத்தை, நண்பர்களை, மேலும் சொல்லப்போனால் போக்குவரத்து அலுவலகத்தைக் கூட மக்கள் அழைத்துப் பேசினார்கள். சீக்கிரமே எச்சரிக்கை ஒலிகளைக் கேட்டோம், ஒரு தீயணைப்பு ஊர்தி வந்து நின்றது. அவர்கள் எங்களைப் பின்னால் நகர்ந்து நிற்கச் சொன்னார்கள், பேருந்தின் ஜன்னல்களில் ஒன்றினை உடைத்தெறிய சுத்தியலைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொருவராக, மனிதர்கள் ஜன்னலின் வழி வெளியே குதிக்க ஆரம்பித்தார்கள். விரைவில் என்னுடைய முறையும் வர நானும் வெளியேறினேன். அனைவரும் நலமாக இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க மக்களனைவரையும் மீட்புக்காவல் பணியாளர்கள் முறைப்படி பரிசோதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஆசாமி நான் நலமாக இருக்கிறேனா என்று கேட்டார், நான் அவரிடம் மின்தூக்கியில் இருக்கும் மனிதனைப் பற்றிச் சொன்னேன்.

“அங்கிருக்கும் அடுக்குமாடிக்கட்டிடத்தில் ஒரு மனிதன் மின்தூக்கியின் வாசலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறான்,” என்றேன். “நீங்கள் சீக்கிரம் போனால் நல்லது.” அது குறித்துப் புகார் தெரிவிக்க முயற்சித்து வந்தேன், ஆனால் என்னிடம் அலைபேசி இல்லை என்பதை, மேலும் யாரும் எனக்கு ஒரு அலைபேசியை இரவல் தரவில்லை என்பதையும் நான் விளக்கினேன். நான் பேசி முடிக்கிற சமயத்தில் அவர் வேறொரு மனிதனை விசாரித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை 911-ஐப் பொருத்தவரை, நீங்கள் தொலைபேசி மூலமாகத்தான் புகார்களைப் பதிவு செய்யவியலும் போல. மேலும் தொலைபேசி அழைப்புதான் நம்பகத்துக்குரியதாகவும் இருக்கக்கூடும். அதாவது, ஒரு வாகனம் விபத்துக்குள்ளாகிக் கிடக்குமிடத்தில் மின்தூக்கியில் நிலவும் நெருக்கடிநிலை பற்றிய கதையை யார் நம்பப் போகிறார்கள்? வலியோடிருந்த முதுகின் கீழ்புறத்தை கைகளால் தாங்கியவாறு, கட்டணத் தொலைபேசிக்காக நான் தெருவின் மறுபகுதிக்கு நடந்தேன். கண்ணாடிக்கதவைத் தள்ளித்திறந்து கடைக்குள் நுழைந்தேன் – தொலைபேசியில் தொலைபேசி அட்டைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் சரியாகச் சொல்வதென்றால், பணப்பையும் இல்லை. சர்வநாசம். தொலைபேசும் அறையை விட்டு வெளியேறினேன், விபத்தை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த மனிதர்களில் சிலரிடம் தொலைபேசி அட்டையை கடனாகக் கேட்டேன். கொழுத்த நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி என்னை இடைமறித்தாள்.

“யாரை நீ அழைக்கப் போகிறாய்? 911-ஐ என்றால், அது தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே இங்குதானிருக்கிறார்கள். போகவும், கடந்தமுறை என்னுடைய தொலைபேசியை நான் யாருக்கோ கொடுத்தபோது, அவர்கள் 3000 வொன்னுக்கும் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் அதுபோன்ற ஏராளமான மனிதர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.” எனக்குப் பேச எந்த வாய்ப்பும் தராமல் அவள் பொரிந்து தள்ளினாள். நான் 911-ஐ அழைப்பதாகத்தான் அவளிடம் சொன்னேன், இந்த விபத்துக்காக அல்ல, ஆனால் ஒரு மனிதன் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கிறான் என்பதற்காக. வெளிறிப்போன பார்வையோடு, 911-ஐ அழைக்க தொலைபேசி அட்டை தேவையில்லை என்று அந்தப் பெண்மணி என்னிடம் சொன்னாள். நான் மீண்டும் கடைக்குள் நுழைந்து எண்களைச் சுழற்றினேன், ஆனால் ஒரு சத்தமுமில்லை. அப்போதுதான் தொலைபேசியின் மேல் தொங்கிய அடையாள அட்டையைப் பார்த்தேன் – “பழுதடைந்துள்ளது”.

அதே நேரம், விபத்தை நேரில் பார்த்த சாட்சியங்களைப் பற்றி விசாரித்தபடி, காவலர்கள் வந்து சேர்ந்தார்கள். பேருந்திலிருந்த அனைவரும் எனது திசையில்தான் கைகாட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் சட்டென்று உணர்ந்தேன்.

“அந்த ஆள்தான் முன்னால் நின்றிருந்தான். கையில் அட்டை இல்லாமல் ஏறியதால் ஓட்டுனரோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தான். ஒருவேளை இவன் இல்லையெனில், இது நடக்காமலும் இருந்திருக்கலாம். பாருங்கள், அவனோடு மல்லுக்கட்டியதில்தான் ஓட்டுனரால் வண்டியை நகர்த்த முடியாமல் போயிற்று.”

சீருடையிலிருந்த இரண்டு காவலர்கள் என்னை நெருங்கினார்கள்.

“ஐயா, என்ன நடந்ததென்பதை நீங்கள் பார்த்தீர்களா?”

“ஆமாம், நான் பார்த்தேன்,” என்று பதிலளித்தேன், “ஆனால் உண்மையில், அதைக் காட்டிலும் அவசரமானதொரு சங்கதி இருக்கிறது. இன்று என் பணியிடத்தில் நானொரு காணொளியறிக்கை தர வேண்டியுள்ளது, மேலும் அதைக் காட்டிலும் அவசரமான சங்கதி என்னவெனில் என்னுடைய அடுக்ககக் குடியிருப்பின் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த மனிதன்தான். ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்குமிடையில் தக்கையைப்போல அவன் கதவுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறான். நீங்கள் சீக்கிரமாகப் போனால் நல்லது. சத்தியமாக.” என் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரு காவலர் தன்னுடைய குறிப்பேட்டைத் திறந்தார்.

“நீங்கள் விபத்தைப் பார்த்தீர்களா?”

“நான் பார்த்ததாகத்தான் சொன்னேன். பாரவண்டி நடுக்கோட்டைத் தாண்டி வந்து மிகச்சரியாக பேருந்தின் முன்பகுதியில் மோதியது. ஆனால் அது இப்போது முக்கியமில்லை. அங்கே ஒரு மனிதன் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.”

என்னைத் தடுத்து நிறுத்திய மற்றொரு காவலர் ஆயாசத்தோடு கேட்டார், “அந்த மனிதன் எப்போது மின்தூக்கியில் மாட்டினான்?”

“அப்போது 7:50 இருக்கக்கூடும்,” நான் என்னுடைய கடிகாரத்தைப் பார்த்தேன். ஏற்கனவே நேரம் கிட்டத்தட்ட 8:20 ஆகியிருந்தது. காவலர் தன்னுடைய இடைவாரிலிருந்து தொலைத்தொடர்புக்கான கம்பியில்லா வானொலியை எடுத்து உதடுகளில் பொருத்தினார்.

“சாம்டோங் அடுக்ககத்தில் மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனைப் பற்றி யாராவது புகார் செய்திருக்கிறார்களா?” வானொலியை மீண்டும் தன் இடைவாரில் செருகிக்கொண்ட காவலர் எரிச்சலாய் சொன்னார், “இங்கே கவனி, தம்பி. நீ காவல்துறையோடு விளையாடுகிறாயா? உன்னுடைய குடியுரிமைப் பதிவு எண் என்ன?” நான் என்னுடைய தொலைபேசி எண்ணையும் குடியுரிமைப் பதிவு எண்ணையும் தந்தேன்.

“நான் இப்போது போகலாமா?” என்று கேட்டேன். போகலாம் என்று அவர்கள் சொன்னார்கள்.

அதே வேளையில், பெரியதொரு மக்கள் கூட்டம் அடுத்த பேருந்தில் ஏற முண்டியடித்துக் கொண்டிருந்தது. நான் விரைந்து சென்று வரிசையில் நின்றேன். சேதங்களை அகற்றுவதற்குத் தேவைப்பட்ட நேரம் காரணமாகக் காத்திருந்த மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாயிருந்தது, நெத்திலி மீன்களைப்போல் அவர்கள் பேருந்துக்குள் நுழைந்தார்கள். சந்தோசத்துக்குரிய சமாச்சாரம் என்னவென்றால் இவர்கள் மக்களைப் பணம் செலுத்தும்படி கேட்கவில்லை. மகிழ்ச்சியில் சிறியதொரு ஆரவாரக்கூச்சலை வெளிப்படுத்தினேன். நெருக்கடியாக இருக்கப்போகிறதுதான், ஆனால் பாருங்கள், இலவசமாகக் கிடைக்கிறது. என்னுடைய பணப்பையை எடுக்க பதினைந்தாவது மாடி வரை ஓட வேண்டும் என்று நினைப்பதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, மேலும் மின்தூக்கிக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பாதங்களை மீண்டும் பார்க்க வேண்டுமென்பதிலும் எனக்கு உண்மையில் விருப்பமில்லை. அவனிடம் நான் என்ன சாக்குச் சொல்ல முடியும்? காவல் பணியாளர் ரோந்தில் இருக்கிறார், யாரும் எனக்கு அலைபேசியைக் கடன் தரவில்லை, கட்டணத் தொலைபேசி பழுதடைந்துள்ளது, மேலும் என் முகம் பாதி மட்டுமே மழிக்கப்பட்டிருக்கிறது என்பதால் காவலர்கள் நான் சொல்லும் கதையை நம்பத் தயாராயில்லை? எப்படிப் பார்த்தாலும், எனக்கு வேலைக்குப் போக ஏற்கனவே தாமதமாகியிருந்தது, மேலும் நான் என்னுடைய காணொளியறிக்கையைத் தர வேண்டியிருக்கிறது. அலுவலகப் பொருட்களை இன்னும் ஆற்றலோடு பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றிய மிக முக்கியமான அறிக்கை. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடைய அறங்காவலர்களின் முன் நான் எழுந்து நின்று அலுவலகத்தில் கழிவறைக்காகிதங்களின் பயன்பாட்டைக் குறைப்பது பற்றிய எனது திட்டம் குறித்துத் தெளிவாகவும் நம்பிக்கையோடும் பேச வேண்டும். ஆனால் என் சவரக்கத்தி முறிந்து போனது, மின்தூக்கியில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்ருக்கிறான், மேலும் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் ஒரு பாரவண்டி மோதுகிறது. நிச்சயம் இது எனக்கான நாள் கிடையாது.

இரண்டாவது பேருந்தில் பயணித்தபோது குறிப்பிடும்படியான சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருந்ததென நினைக்கிறீர்களா? சந்தேகத்துக்கிடமின்றி அப்படி இருக்கவில்லை. என்னுடைய இடுப்பின் வலதுபுறத்துக்குக் கீழே எதையோ உணர்ந்து குனிந்து பார்த்தேன், அங்கே இந்த ஆள் எனக்கு அடுத்ததாக நின்றிருந்த பெண்ணின் பின்புறத்தை பற்றியிருப்பதைப் பார்த்தேன். இவனைப் போன்ற வேசைக்குப் பிறந்தவர்கள் இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார்களா? திகைத்துப் போனவனாக தலையை உலுக்கினேன். எனக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது, ஆனால் அது என்னுடைய பின்புறம் இல்லையென்பதால், என்னை அமைதியாய் வைத்துக்கொள்ள முயற்சிப்பதென முடிவு செய்தேன். ஆனால் பிறகு அந்தப் பெண் நேராக என்னைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தாள் (இயல்பாகவே, அவள் என்னுடைய மழிக்கப்படாத முகத்தின் பக்கத்தில் இருந்தாள்), கேவலமாகப் பார்க்கவும் செய்தாள். இறுதியில், அதற்கு மேலும் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“கவனி, பெண்ணே,” என்றேன். “உன் பின்புறத்தைத் தடவிக் கொண்டிருப்பது நானல்ல. என்னுடைய முகத்தின் இந்தப்பக்கம் மழிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் இன்று காலை எனது சவரக்கத்தி முறிந்துபோனது என்பதால், மேலும் என்னுடைய மேலங்கி மொத்தமும் கசங்கி இருக்கிறதென்றால் இன்று நான் ஏறிய பேருந்தின் மீது குப்பைகளைச் சுமக்கும் ஒரு பாரவண்டி நேராக வந்து மோதியது என்கிற காரணத்தால்தான்.” இதனால் எனக்கு எந்தப் பயனும் கிடைத்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? திடீரென்று, சுற்றியிருந்த அனைவரும் என்னை வெறித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் அவளுடைய பின்புறத்தைப் பற்றியிருந்தவனும் வேகமாகத் தன் கையை விலக்கிக் கொண்டான், எனவே இப்போது எந்த வேசைமகன் அவளைத் தொட்டு கொண்டிருந்தான் என்று சொல்வதும் இயலாமல் போனது. “இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று யோசிக்கக்கூட செய்யாதே” என்பதைப் போன்ற பார்வையை முகத்தில் தாங்கி அந்தப்பெண் என்புறமாகத் திரும்பி வந்தாள், அவளுடைய முகத்தை மிகச்சரியாக என்னுடையதின் மீது வைத்துத் தேய்த்தாள்.

“உன்னை நினைத்து நீ வெட்கம் கொள்ள வேண்டும். என்னுடைய சகோதரன் யாரென்று தெரியுமா?”

“யார் உன்னுடைய சகோதரன்?” என்று கேட்டேன். நான் எதுவும் சொல்லியிருக்கக்கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். அது கிட்டத்தட்ட அவளுடைய பின்புறத்தை பற்றியிருந்ததாக நான் ஒப்புக்கொள்வதற்கு சமமானதுதான். அவளுடைய சகோதரன் யார் என்பதை எனக்குச் சொல்லவில்லை, அல்லது அவன் என்னவாக இருக்கிறான் என்பதையும், ஆனால் வெறுமனே இதைச் சொன்னாள், “நீ கவனமாய் இருப்பது நல்லது, இல்லையெனில் சிறைச்சாலைக்குள் தள்ளப்படுவாய்..”

அவளது மூக்கு கிட்டத்தட்ட என்னுடையதைத் தொட்டுக் கொண்டிருந்த தருணத்தில், சட்டென்று அந்தப் பேருந்தை விட்டு இறங்க வேண்டுமென்பதாய் உணர்ந்தேன். ஏனென்றால் அப்போதுதான், மொத்த விசயத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பேருந்தின் ஓட்டுனர் உரத்த குரலில் சொன்னார், “அம்மணி, நான் காவல் நிலையத்தில் நிறுத்த வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” அந்தப் பெண், தன்னால் உண்டான விளைவுகளால் திருப்தியுற்றவளாக, எந்த பதிலும் சொல்லவில்லை. அதேவேளையில், பேருந்து ஒரு நிறுத்தத்துக்கு வந்தது, ஏறிக் கொண்டிருந்த மக்களைத் தள்ளிவிட்டு முன்கதவின் வழியாக வேகமாகத் தப்பித்து வெளியேறினேன்.

எனது கடிகாரத்தைப் பார்த்தேன். 9:00 மணி, வேலைக்குப் போக ஏற்கனவே எனக்கு முப்பது நிமிடங்கள் தாமதமாகியிருந்தது. நான் சுங்-ஜியோங்-ரோ-வில் இறங்கியிருந்தேன், வேகமாக நடந்தால் கூட எனது அலுவலகம் அமைந்திருந்த ஜியோங்-ரோ-வுக்குப் போக எனக்கு இன்னும் முப்பது நிமிடங்களாகும். தொலைபேசியில் அழைப்பதற்கோ வாடகையூர்தி எடுத்துக் கொள்வதற்கோ எந்த வழியுமில்லை, ஆகவே எனது அலுவலகம் இருந்த திசையில் சிரமத்துடன் நடப்பதைத் தவிர்த்து நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. அலுவலகத்தில் கழிவறைக்காகிதங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான திட்டம் பற்றிய இந்த அறிக்கையை நான் தர வேண்டியிருந்தது, ஆனால் மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனை என்ன செய்வது? பேருந்தில் இருந்த பெண்மணியை உண்மையாகவே வெறுக்க ஆரம்பித்தேன். அதாவது, அவளுடைய பின்புறத்தை நான் நிஜமாகவே பற்றியிருந்தேன் என்றால், அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கடவுளே, இது எல்லாமே அந்த பாழாய்ப்போன உடைந்துபட்ட சவரக்கத்தியினால்தான். என்னுடைய சவரக்கத்தி முறிந்திருக்காவிட்டால், வீட்டிலிருந்து கொஞ்சம் சீக்கிரமே என்னால் வெளியேறியிருக்க முடியும், மின்தூக்கி வேலை பார்த்திருக்கக்கூடும், அனேகமாக இந்த பேருந்து விபத்து கூட நிகழாமல் இருந்திருக்கலாம். இந்த சேதாரங்களுக்காக ஜில்லெட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்தேன்.

இத்தகைய துயரார்ந்த எண்ணங்களோடு நான் க்வாங்-ஹ்வா-முன்-னைக் கடக்கையில் என்னுடைய அழைப்பொலிக்கருவி பெரிதாய் அலறியது. நான் எண்ணைப் பரிசோதித்தேன். அலுவலக எண். ஓடத் தொடங்கினேன். என்னை இப்போது காப்பாற்றக்கூடிய ஒரே இடம் எனது நிறுவனம்தான். அங்கே எனக்குத் தெரிந்த யாராவது பணத்தைக் கடனாகத் தருவார்கள், அதைக்கொண்டு நான் தொலைபேசியில் பேசவும் பேருந்துகளில் பயணிக்கவும் முடியும். எனது மேசையிலுள்ள தொலைபேசியை 911-ஐ அழைக்கப் பயன்படுத்தலாம், பிறகு எல்லாம் சரியாகிவிடும். ஓடு, ஓடு! என்னுடைய கழுத்துப்பட்டை காற்றிலாட, நான் க்வாங்-ஹ்வா-முன்-னின் தெருக்களில் ஓடினேன். என்னுடைய நுரையீரல்கள் வெடிக்கப் போவதாய் உணர்ந்தேன். விபத்தின் காரணமாக முதுகு வலித்தது, ஆனால் அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. கிட்டத்தட்ட மூச்சை தொலைத்தவனாக எனது அலுவலகக் கட்டிடத்தை வந்தடைந்தேன். என்னுடைய அலுவலகக் கட்டிடத்தில் ஆறு மின்தூக்கிகள் இருந்தன. முதன்மை செயற்குழு அலுவலரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக ஒன்று, அவருடைய அலுவலகம் மேலே இருந்தது, மீதமிருந்த ஐந்தை மற்ற அனைவரும் பயன்படுத்தினார்கள். நான் அவற்றுள் ஒன்றில் ஏறிக்கொண்டேன். பெரும்பாலான மனிதர்கள் வரக்கூடிய நேரம் ஏற்கனவே கடந்திருக்க நான் ஒருவன் மட்டுமே மேலே சென்று கொண்டிருந்தேன். மறுபடியும், மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருந்த மனிதனைப் பற்றி யோசித்தேன். நிச்சயமாக இந்நேரம் யாராவது அந்த விவகாரம் பற்றிப் புகார் சொல்லியிருப்பார்கள், அவன் காப்பாற்றப்பட்டிருக்கலாம். மின்தூக்கி வேலை செய்யவில்லை என்பது பற்றிக் காவல் பணியாளர் விசித்திரமாக உணர்ந்திருக்கலாம், ஆகவே மேலே சென்று சோதித்திருக்கவும் செய்யலாம், ஏனென்றால் மிகக்குறிப்பாக ஐந்தாவது மாடியென்பது அத்தனை உயரமில்லை. ஆனால் அனைவரும் என்னைப் போலவே அவரவர் வேலையில் மும்முரமாயிருந்தார்களெனில், அல்லது அனைத்துக் காவல் பணியாளர்களும் தங்களுடைய ஊதியத்தை உயர்த்திக் கேட்கவோ அல்லது வேறு எதற்காகவோ எங்காவது ஏதாவது கூட்டத்துக்குச் சென்றிருந்தால் அந்த மனிதன் மின்தூக்கியின் வாசலுக்கு வெளியே இன்னும் தக்கை போலத்தான் சிக்கிக்கிடப்பான், இந்தப் புள்ளியில் அவன் மனிதநேயத்தைப் பற்றி எவ்வளவு கேவலமாக யோசிப்பான் என்பதை மட்டும் சற்றே சிந்தியுங்கள்.

டிங். ஐந்தாவது மாடி.

ஒரு பெண் மின்தூக்கியில் ஏறினாள். நாங்கள் ஒருவரையொருவர் சில நேரங்களில் பார்த்திருக்கலாம். எனக்குப் பரிச்சயமானவளாகத்தான் தென்பட்டாள். கணக்கெழுதும் பிரிவு ஐந்தாவது மாடியில் இயங்கியது. ஊதாநிறச் சீருடையணிந்திருந்தாள், அவளுடைய நீண்ட கேசத்தைப் பின்னால் இழுத்துக் கட்டியிருந்தாள். நீண்ட கேசத்தைக் கொண்டிருந்தாள் என்பதால் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அர்த்தம். ஏன் இந்தப் பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்களுடைய கேசத்தை வெட்டிக் கொள்கிறார்கள் என்பதை வியந்தேன். அதைப்பற்றி நான் வியந்து கொண்டிருக்கையில், திடீரென்று மின்தூக்கி திடும் என்கிற சத்தத்தை உருவாக்கி நின்று போனது. முதலில், அந்தப்பெண் அமைதியாயிருப்பதாகக் காட்டிக்கொண்டாள். ஓரக்கண்களில் என்னை நோக்கியதொரு பார்வையைத் துரிதமாக வீசினாள், ஆனால் பிறகு நேராகப் பார்த்து மின்தூக்கியின் கதவை வெறிக்க ஆரம்பித்தாள். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து, மின்தூக்கி வேறெங்கும் நகரப் போவதில்லை என்பதோடு கதவுகளையும் திறக்க முடியாதென்பதும் உறுதியான பிறகு, “நீ செய்யக்கூடியது எதுவுமில்லையா?” என்கிற மாதிரியொரு பார்வையை என் பக்கம் செலுத்தினாள். அமெரிக்க பாணியில் நான் என் தோள்களைக் குலுக்கினேன், ஏதும் செய்ய முடியாதவனாகப் பார்த்தேன். மின்தூக்கிக்குள் திடீரென்று அதீத தனிமையும் இறுக்கமும் சூழ்ந்ததாக உணரமுடிந்தது.

“பழுதடைந்திருப்பதாகத் தெரிகிறது. அவசரகால பொத்தானை அழுத்திப் பார்ப்போமா?” அந்தப்பெண் ஆர்வமாகக் கேட்டாள்.

“நல்ல யோசனைதான்,” தலையசைத்தபடி சொன்னேன். முதலின் அந்தப்பெண் பொத்தானை மெதுவாக அழுத்தினாள், ஆனால் சீக்கிரமே மீண்டும் மீண்டும் பதற்றமாக அழுத்த ஆரம்பித்தாள். இதன் விளைவாக அவளுடைய விரல்கள் முழுக்கச் சிவந்த பிறகே அவள் நிறுத்தினாள்.

“யாரும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை,” என்றாள். இன்னும் கொஞ்ச நேரம் கடந்து போனது. கதவை இடிப்பதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்று முடிவு செய்தோம். எங்களால் முடிந்த அளவு கடினமாகக் கால்களாலும் கைகளாலும் கதவை இடித்தோம். ஆனால் இது போல விசையோடு மோதுவது மின்தூக்கியைக் கீழே விழுந்து நொறுங்கச் செய்யலாம் என்பதை நான் எடுத்துச் சொன்னேன், பயங்கரமானதொரு பார்வை அந்தப் பெண்ணின் முகத்தில் பரவ, இடிப்பதை நிறுத்தினோம்.

“இன்று காலை, மின்தூக்கியின் வாசலில் ஒரு மனிதனின் உடல் செருகிக்கிடப்பதைப் பார்த்தேன்,” என்றேன். “நல்லவேளை நாம் வெறுமனே மாட்டிக் கொண்டிருக்கிறோம்.” நான் அவளைத் தேற்ற வேண்டுமென்றுதான் முயற்சி செய்தேன், ஆனால் நிலைமை இன்னும் மோசமானதுதான் மிச்சம். அவள் தரையில் விழுந்தாள்.

“அவனுக்கு என்னதான் நேர்ந்தது?”

“நான் படியில் இறங்கியபோது அவனைப் பார்த்தேன், ஆனால் அதுபற்றி இன்னும் என்னால் புகார் சொல்ல முடியவில்லை. நான் வேலைக்குப் போக வேண்டியிருந்தது, அதோடு என்னிடம் அலைபேசியும் இல்லை. ஹேய், நல்லதாகிப் போனது! உன்னிடம் அலைபேசி இருப்பதற்கான வாய்ப்புள்ளதா?”

துயரம் நிரம்பிய பார்வையோடு, அலைபேசி தன்னுடைய கைப்பையில் இருப்பதாக அவள் பதிலளித்தாள். இருவரும் நீண்ட பெருமூச்சுகளை வெளியேற்றினோம். அவள் அலைபேசியைத் தன்னோடு வைத்திருந்தால், நாங்கள் யாரையாவது அழைத்து எங்களை வெளியே மீட்கும்படி கேட்டிருக்கலாம், மேலும் 911-ஐ அழைத்து என்னுடைய அடுக்ககக் கட்டிடத்தில் இருக்கும் மனிதனைப் பற்றியும் புகார் செய்திருக்கலாம்.

“கதவைத் திறக்க ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போமா?” என்று யோசனை தெரிவித்தாள் அந்தப்பெண். ஆனால் சக்தியனைத்தையும் ஒன்றுசேர்த்து நாங்கள் கதவை இருபுறமும் தள்ள முயற்சிக்கையில் திடீரென்று அவள் ஒரு அலறலை வெளிப்படுத்தினாள்.

“இங்கே பார்,” என்று அலறினாள். அவள் சுட்டிக்காட்டிய விரலின் திசையில் பார்த்தேன். “எச்சரிக்கை. கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயற்சிக்காதீர்.”

“சரிதான். இன்று காலை அந்த மனிதனும் உண்மையில் நம்மைப்போலவேதான் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அனேகமாக வேலைக்குப் போக நேரமாகிறதென்று கவலைப்பட்டிருக்கிறான், எனவே கதவுகளைத் திறக்க முயன்றிருக்கிறான். ஆக அவை திறந்துபோது, மெல்ல வெளியேறப் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போதுதான் மின்தூக்கி மீண்டும் நகர ஆரம்பித்திருக்கிறது. பாவப்பட்ட ஜென்மம். நான் உடனடியாக 911-ஐ அழைத்திருக்க வேண்டும், ஆனால் நான் என்னதான் செய்வது? எல்லா நாட்களையும் விடுத்து, இன்று மட்டும் ஏன் என் பணப்பையை மறக்க வேண்டும்? பிறகு கட்டணத் தொலைபேசி வேலை செய்யாது, யாரும் எனக்கு அலைபேசியை கடன் தரவும் மாட்டார்கள். அதன் பிறகு, நான் பயணித்த பேருந்து ஒரு பாரவண்டியால் நசுங்கிப்போனது, மேலும், சுத்தம், என்னுடைய உடைகளைப் பார்! அடுக்கடுக்கான மக்களின் கீழ் நான் புதையுண்டு போனேன், அனைவரும் சேர்ந்து என்னைப் புரட்டியெடுத்தார்கள். அதன் பிறகும், அடுத்த பேருந்தில் ஏறினால், நான் ஒரு பெண்ணின் பின்புறத்தைத் தொட்டதாக அர்த்தமில்லாமல் குற்றஞ்சாட்டப்படுகிறேன், ஆக பேருந்திலிருந்து இறங்க வேண்டியதானது. ஹேய், என்னை அப்படிப் பார்க்காதே! நான் அதைச் செய்யவில்லை, இன்னொரு முரடன்தான் செய்தான், ஆனால் அந்தப் பெண்மணி நான்தானென்று தவறுதலாக எண்ணிவிட்டாள். இதுபோன்ற விசயங்கள் எப்படி நடக்குமென்பது உனக்குத் தெரியுமில்லையா..”

அந்தப்பெண் மின்தூக்கியின் தொலைதூர மூலையை நோக்கிப் பாய்ந்தோடினாள், நான் ஏதாவது செய்ய முயன்றால் தன்னுடைய உயரமான குதியணிகளை என் முழங்கால்களில் இறக்கத் தயாராயிருப்பதைப்போலத் தோற்றமளித்தாள். அதே நேரத்தில், அவளால் முடிந்தளவு வேகமாக அவசரகால பொத்தானை அழுத்திக் கொண்டிருந்தாள்.

மறுபடியும், அவளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சொன்னேன், “கவலைப்படாதே. நான் மோசமானவனில்லை. ஹேய், நாமிருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம், நான் யாரென்பது உனக்கு மிகத்துல்லியமாகத் தெரியும், எனவே மோசமாக எதையாவது செய்வேன் என்று நீ நிச்சயம் யோசிக்கக்கூடாது. எப்படிப் பார்த்தாலும், இதுபோல இரண்டு மனிதர்கள் சந்திக்கிறார்கள் என்றால் ஏதாவது பூர்வஜென்ம பலனாகவே இருக்கும், எனவே நாம் வெளியே போன பிறகு, ஏன் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு காபி சாப்பிடக்கூடாது?” ஆனால் எதுவும் சொல்லாமல் அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“நான் புகைப்பதில் உனக்கு ஏதும் சங்கடமில்லையே?” முன்புறமிருந்த பையிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை வெளியே உருவியபடி கேட்டேன். ஏதாவது வாய்ப்பிருந்து ஒருக்கால் அவள் புகைக்கிறவளாக இருந்தால், அந்தச் சூழ்நிலையை ஓரளவு சுமூகமானதாக மாற்ற சிகரெட்டுகளால் முடியும் என்று நான் கணக்குப் போட்டேன்.

தன்னால் முடிந்தளவு குரூரமானதொரு பார்வையை என் மீது செலுத்தியவள் சீறினாள், “கட்டிடத்தினுள்ளே புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.”

நான் எதிர்ப்பு தெரிவித்தேன். “புகை பிடிப்பதற்கான பகுதிக்கோ அல்லது மேல்மாடிக்கோ போக இப்போது எந்தச் சாத்தியமுமில்லை. என்னால் அங்கே போக முடியுமென்றால், நான் ஏன் இங்கே புகைக்கப் போகிறேன்? ஒன்றே ஒன்றை மட்டும் நாம் புகைக்கலாம்.” தலையை வெறித்தனமாக ஆட்டி அந்தப்பெண் மறுத்தாள்.

“இது போன்ற குறுகலான இடத்தில் நீ புகைக்கக்கூடாது! இரண்டாம்-நிலை புகை எத்தனை ஆபத்தானதென்று உனக்குத் தெரியாதா என்ன? அமெரிக்காவில் மட்டும், ஒவ்வொரு வருடமும் மற்றவர்கள் வெளியிடும் புகைக்கு ஆட்படுவதன் காரணமாக ஆறு மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். மற்றவர்கள் வெளியிடும் புகை மிக மோசமானது என்று சொல்கிறார்கள், ஏனென்றால் உனக்கு அதனால் நீ பாதிக்கப்படுவது தெரியாது. மேலும் இங்கே வேலை பார்க்குமிடத்திலும் மற்றவர்கள் வெளியிடும் புகையானது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கிறது. நான் சொல்வது என்னவென்றால், முதலாளி என்பவன் முதலாளியாகவே இருக்கட்டும், ஆனால் என்னுடைய நுரையீரல்களுக்குள் புகையை ஊத அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும் உனக்குத் தெரியுமா, இரண்டாம்-நிலை புகையின் அளவு அதிகமாயிருப்பதைப் பொருத்தவரையில் கொரியாவைப் போல உலகத்தில் வேறெந்த நாடும் மோசம் கிடையாது. புகைக்கக்கூடாத பகுதியை உன்னால் எங்குமே கண்டுபிடிக்க முடியாது! முக்கியமான விடுமுறை நாட்களைப் பற்றி யோசி! குடும்பத்திலிருக்கும் அத்தனை மனிதர்களும் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் புகைக்கிறார்கள்! மதுக்கூடங்களில், உணவகங்களில் மற்றும் தெருக்களில். ஓ, ஆமாம், தெருக்களில் கூட! என்னுடைய அங்கியைக் கொஞ்சம் பார்!” நான் பார்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பின்பக்கத்தை என்னிடம் திருப்பிக் காட்டினாள். “கடவுப்பாதையில் நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த யாரோவொரு முரடன் என் இடுப்பில் சுட்டு விட்டான்! இதை சரியென்று நீ நிஜமாகவே நினைக்கிறாயா? நான் பார்க்க தெருவில் நின்று புகைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வேசைமகனையும் கொலை செய்ய விரும்புகிறேன்.”

“சரி, சரி, நான் புகைக்கவில்லை,” சிகரெட்டுகளை மீண்டும் பைக்குள் வைத்தபடி நான் சொன்னேன். என்னுடைய சட்டையை முழுக்க நனைத்திருந்த வியர்வை சில்லிட ஒருவித குளிர்ச்சியை உணர்ந்தேன்.

“இங்கே சில்லென்று இருக்கிறது. எனது வீட்டில் பணப்பையை விட்டு வந்ததால் மகிழுந்தில் செல்ல என்னிடம் பணமில்லை, வேலைக்கு நான் ஓடி வர வேண்டியிருந்தது. இதைப் பார். கவனி, என்னுடைய பகட்டான மேலங்கியும் முழுக்க நனைந்து முதுகோடு ஒட்டிக்கிடக்கிறது.” அவள்புறம் திரும்பி ஈரமாயிருந்த பகுதியைக் காட்டினேன்.

“ஓ, ஆனால் நாம் நம்மை அறிமுகம் கூட செய்து கொள்ளவில்லை,” என்றேன். “உன் பெயர் என்ன?”

அவள் நிமிர்ந்து பார்த்து என்னை வெறித்தாள்.

“செல்வி.ஜியுங்” சுரத்தில்லாமல் சொன்னாள்.

“என்னுடைய கடைசிப்பெயரும் ஜியுங்தான்,” என்று நான் சந்தோசமாகச் சொன்னேன். “வகைமுறை மேலாண்மையில் இருக்கிறேன்.”

குத்துமதிப்பாய் அவள் தலையசைத்தது நான் சொன்னதில் எந்தவிதத்திலும் அவளுக்கு ஈடுபாடில்லை என்பதை எனக்கு உணர்த்தியது, மின்தூக்கியின் தரையில் நாங்கள் அமர்ந்திருக்க நீண்டதொரு மௌனம் அங்கே நிலவியது. அத்தனை நேரமும் அந்தப்பெண் அமைதியாக அவசரகால பொத்தானை அழுத்திக் கொண்டிருந்தாள்.

“எந்த நாசமாய்ப்போனவன் இந்த கட்டிடத்தை நிர்வகிக்கிறான்? இத்தனை நேரம் மின்தூக்கி நகராமல் கிடந்தால், யாராவது மாட்டிக் கொண்டிருக்கிறார்களா இல்லையா என்று சந்தேகம் கொண்டு எவனாவது வந்து சோதிக்க வேண்டாமா? இங்கே என்னதான் நடக்கிறது? இது தவிர இன்னும் ஐந்து மின்தூக்கிகள் இருக்கின்றன அல்லது இல்லை என்பதெல்லாம் பேச்சில்லை, கடவுளே.”

இதை நான் சொல்லும்போதே, எனது அழைப்பொலிக்கருவி பெரிதாய் அலறியது. எனது முதலாளிதான். கடவுளே, என்னுடைய அலுவலகம் மிகச்சரியாக என் மூக்குக்கு நேரே இருக்கிறது, ஆனால் அங்கே போக எந்த வழியுமில்லை. நான் குமுறத் தொடங்கினேன். என்னை மொத்தமாகக் காலி செய்து விட்டார்கள். நிச்சயம் இதனால் என் வேலை போகப் போகிறது.

“இந்த மின்தூக்கியில் செருகிக்கிடப்போமா இல்லையா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நாம் இங்கிருந்து வெளியேறுவோம்.” என்னுடைய யோசனை விருப்பமற்றதொரு பார்வையால் எதிர்கொள்ளப்பட்டது.

“சரி, நல்லது. நீ இங்கேயே இரு. நம்மால் கதவைத் திறக்க முடிந்தால், நானாகவே வெளியே குதித்துக் கொள்வேன், ஆக கதவைத் திறப்பதற்கு ஒரு கை கொடு. பிறகு நான் சென்று உதவிக்கு ஆளை அழைத்து வருகிறேன்.” அந்தப்பெண் தலையசைத்தாள். மீண்டும் இருவருடைய சக்தியையும் ஒன்றிணைத்துக் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்கும் வேலையை ஆரம்பித்தோம். அதுவோ நான் எதிர்பார்த்ததை விட ரொம்பக் கடினமாயிருந்தது. கதவை எதிர்த்து நாங்கள் தள்ள வியர்வை ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது, ஆனால் ரொம்ப சிரமப்பட்டு அதனைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் மீண்டும் சட்டென்று இழுத்து மூடிக்கொண்டது.

“உன்னுடைய சக்தியெல்லாம் இவ்வளவுதானா, இதற்குமேல் முடியாதா?” தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் செல்வி.ஜியுங் கேட்டாள்.

“பார். ஏற்கனவே இன்று காலை நானொரு பாரவண்டியால் நசுக்கப்பட்டிருக்கிறேன், மேலும் வேலைக்கு அத்தனை தூரமும் ஓடித்தான் வந்தேன். என்னிடம் என்ன சக்தி மீதமிருக்கும் என்று நீ எதிர்பார்க்கிறாய்? போகவும், என் முதுகு என்னைக் கொல்கிறது.” இந்த சால்ஜாப்புகளைச் சொன்னபிறகு, நான் ஒரு நொடி யோசித்தேன். கதவைக் கொஞ்சமாகத் திறந்தபிறகு அது மீண்டும் மூடிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதில்தான் விசயமே இருக்கிறது. ஆனால் கதவுகளின் நடுவில் ஊன்றி வைக்கும்படி நாங்கள் பயன்படுத்த எதுவும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய காலணிகளைக் கழற்றுவதைத் தவிர்த்து நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. வேலைக்கு ஓடி வந்த சூழ்நிலையில், அவை வியர்வையில் நனைந்து நாறின.

“நல்லது, நம்மால் கதவைக் கொஞ்சம் திறக்க முடிந்தால், அதனடுவே இந்தக் காலணியை ஊன்றி வைப்போம். நம்முடைய கைகளை நுழைக்குமளவுக்குப் பிளவை அது உண்டாக்கும்.” நாங்களிருவரும் மீண்டும் எங்களுடைய சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டிக் கதவின் இரண்டு பக்கங்களையும் அவரவர் பக்கமாகப் பின்னால் இழுத்தோம். செல்வி.ஜியுங் குனிந்து இழுத்தபோது அவளுடைய சீருடைச் சட்டைக்கு மேலே அவளது மார்புகளை என்னால் முழுதாகப் பார்க்க முடிந்தது.

“நாசமாய்ப் போனவனே, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அந்தப்பெண் அலறினாள். “காலணியை அங்கே ஊன்றி வை!” பெரும் முயற்சியோடு, தன் தலையை உயர்த்தி, என் கண்களுக்குள் நேராகப் பார்த்து, அதிகரித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினாள். குழப்பத்தில், மூடிக்கொண்டிருக்கும் கதவுகளின் நடுவே, காலணிக்குப் பதிலாக நான் எப்படியோ என் பாதத்தை வைத்திருந்தேன். அது நரகத்தைப் போல வலித்தது, ஆனால் நான் வலியை பொருட்படுத்தாமலிருக்க முயன்றேன். சின்னதொரு திறப்பின் வழியாக, ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாடிகளுக்கு நடுவேயுள்ள பிரிவுக்கோட்டை பார்க்க முடிந்தது- பத்தாவது மாடியின் தரைப்பகுதி. கதவுகளை இன்னும் கொஞ்சம் அகலமாகத் திறக்க முடிந்தால் எங்களால் பத்தாவது மாடிக்கு ஊர்ந்து செல்ல முடியுமெனத் தோன்றியது. மீண்டும் கதவுகளின் மீது சாய்ந்து விசையோடு இழுத்தோம், இன்னும் கொஞ்சம் அகலமாக அதனைத் திறந்தபோது, இதுவரை கிடைத்திருக்கும் ஆதாயங்களைத் தவறவிட விரும்பாமல், நான் சட்டென்று என் உடலை அதற்குள் நுழைத்தேன். ஆக யாராவது வெளியேறிச் செல்ல போதுமான அளவுக்கு இப்போது அங்கே இடைவெளி உருவாகியிருந்தது. என்னுடைய நுரையீரல்கள் நசுக்கப்படுவதாக உணர்ந்தேன், ஆனால் ஒரு பெண்ணின் முன்னால் நின்றிருந்ததால், கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிவு செய்தேன்.

“ஆக நாம் இப்போது என்ன செய்வது? நான் வெளியே சென்றால், கதவுகள் மீண்டும் மூடிக்கொள்ளும்,” வருத்தந்தொனிக்கும் குரலில் நான் சொன்னேன்.

“இப்படிச் செய்வோம்,” என்றாள். “என்னை உயரே தூக்கி விடு. அப்போது என்னால் அடுத்த மாடிக்குப் போக முடியும். ஒன்பதாவது மாடிக்குப் போகக் கீழே குதிப்பது ரொம்ப ஆபத்தானதாக எனக்குத் தோன்றுகிறது. நான் ஒல்லியாகவும் இருக்கிறேன், எனவே வெளியே போவதும் எனக்குச் சற்று எளிதானதாகவே இருக்கும்.”

பத்தாவது மாடி என் தலைமட்டத்தில் இருந்தது. ஆனால் அவள் அங்கே மேலே போக வேண்டுமென்றால், என் தோள்களின் மீது ஏறி நின்று, என் உடம்பின் அகலத்தைக் காட்டிலும் அகலமாயில்லாத இடைவெளியின் வழியாக மட்டுமே வெளியேற முடியும். அவளுக்குக் காலடி ஆதாரத்தை உண்டாக்க என் கைகளை இணைத்துப் பிடித்தேன். அவள் மேலேறினாள். பத்தாவது மாடியின் தரையை எட்டிப்பிடித்தாள், பிறகு மெல்ல தன் கால்களை என் கைகளிலிருந்து தூக்கி தோள்களின் மீது வைத்தாள். அவளுடைய குதியணிகள் எனது தோள்களில் ஆழமாகப் புதைந்தன. நிதர்சனத்தில் நான் வலியால் அலறித்துடித்தேன், ஆனால் எப்படியோ என் வாயை இறுக மூடிக்கொண்டேன். மேலே நிமிர்ந்தபோது, என்னால் அவளுடைய குட்டைப்பாவாடையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வெண்ணிற இழைகளாலான இடைக்கச்சையை அணிந்திருந்தாள். பிறகு அவள் என் தோள்களை உதைத்து மேலெழும்பி பத்தாவது மாடியைச் சென்றடைந்தாள். உற்சாகக்கூச்சலொன்றை வெளியிடுவதாக உணர்ந்தேன். இன்னும் என்னுடல் மின்தூக்கியின் கதவுகளினடுவே சிக்கியிருக்க, என் மனதார்ந்த வாழ்த்துகளை அவளுக்குத் தெரிவித்தேன்.

“ஹே, செல்வி.ஜியுங்! நீ சாதித்து விட்டாய்! நல்லது! ஹே, நான் இங்கே மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை உன்னால் முடிந்தளவு விரைவாக மக்களுக்குத் தெரிவி, சரியா? மேலும் என்னுடைய துறையிலுள்ள மக்களிடம் சொல்ல முடிந்தால் பெரிய உதவியாயிருக்கும்..”

எந்த பதிலும் இல்லை. திடீரென்று இந்த மொத்த சமாச்சாரம் பற்றியும் மிக மோசமானதொரு உணர்வு எனக்குள் எழுந்தது. என்னுடைய கால்களையும் கைகளையும் சக்தியனைத்தும் திரட்டி உந்தித்தள்ளி, என்னை நசுக்க முயன்ற கதவுகளினிடையிலிருந்து விடுவித்துக் கொண்டேன். மெல்லிய “காங்” என்ற சத்தத்தோடு கதவுகள் மூடியது எனக்குச் சவப்பெட்டி மூடுவதாகக் கேட்டது. நான் அந்தப்பெண்ணுக்கு எந்தத்தீங்கும் செய்திருக்கவில்லை, எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவள் தப்பிச்செல்ல என்னுடைய கைகளையும் தோள்களையும் கூட தந்து உதவியிருக்கிறேன். நாங்களிருவரும் ஒரே கட்டிடத்தில் வேலை செய்கிறோம், மேலும் நிச்சயமாக ஒருவரையொருவர் மீண்டும் சந்தித்துக் கொள்ள நேரும் என்பதையெல்லாம் யோசிக்கும்போது, நான் இங்கேயிருப்பதை யாரிடமாவது தெரிவிக்க வேண்டுமென்பதை அவள் நிச்சயம் மறக்கமாட்டாள். பத்து நிமிடங்கள் கடந்து சென்றன, பிறகு இருபது நிமிடங்கள் ஆனது, ஆனால் இன்னும் யாரும் வரவில்லை. வெறுப்பில் மின்தூக்கியின் தரையின் மீது சரிந்தேன், ஏதோவொரு குழந்தைக்களுக்கானப் பாடலைப் பாடத் தொடங்கினேன், அதனுடைய வரிகள் கூட எனக்குச் சுத்தமாக நினைவில்லை. மறுபடியும் மறுபடியும் நான் அந்தப்பாடலைப் பாடினேன், பாடியதன் காரணமாக உண்டான அயர்ச்சி கிட்டத்தட்ட என்னைத் தூக்கத்தின் விளிம்புக்கு அழைத்துப்போன தருணத்தில் ஒரு உரத்த கூச்சல் வெளியேயிருந்து வருவதை கேட்டேன். மின்தூக்கியின் கதவுகள் கொஞ்சமாய்த் திறந்தன, ஒரு மனிதனின் முகம் தோன்றியது.

“ஹேய்! இங்கே உட்கார்ந்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” மிகச்சரியாக அதுதான் நானும் கூட கேட்க ஆசைப்பட்ட கேள்வி. “அதேதான், இங்கே உட்கார்ந்து நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? நீதான் மின்தூக்கிகளுக்குப் பொறுப்பாளி- நீ எனக்குச் சொல்!” நான் கடுமையான கோபத்திலிருந்தேன், ஆனால் ஏதாவது சொல்லப்போய் அவன் என்னைத் தனியே விட்டுச் சென்று விடுவானோ என்கிற பயமும் இருந்தது, எனவே என்னால் முடிந்தளவு பொறுமையான குரலில் பதிலளித்தேன்.

“மின்தூக்கி உடைந்திருப்பதாகத் தெரிகிறது.” பிறகு மின்தூக்கிப் பணியாள் என்னிடம் வேறொரு கேள்வியைக் கேட்டான், “நீ தனியாக இருக்கிறாயா?” மீண்டும், என்னால் முடிந்தளவு நட்புணர்வை குரலில் இழைத்துக்கொண்டேன். “சரிதான், ஆனால் அப்படியில்லை. செல்வி.ஜியுங் என்ற பெயரில் ஒரு பெண் என்னோடு இருந்தாள். சற்று முன்புதான் என் தோள்களின் மேல் ஏறி வெளியேறிச் சென்றாள். ஆக நான் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டேன்.” மின்தூக்கி பணியாள் வேறு யாரையோ அழைத்து வரச் சென்றான், இப்படி என்பதற்குள் அவர்கள் திரும்பி வந்து, கதவுகளைத் திறந்தார்கள். நான் அவனுடைய கைகளை இறுகப் பற்றினேன், அவர்கள் என்னை மேலே இழுத்தார்கள். நான் கீழே குனிந்து பார்த்தேன், இந்த முயற்சியில் என்னுடைய அங்கியின் முன்புறம் தூசியிலும் எண்ணெயிலும் புரண்டு முழுதும் அழுக்காகியிருப்பதை உணர்ந்தேன். அப்போதுதான் இதே மாதிரியான சமாச்சாரம் செல்வி.ஜியுங்கிற்கும் நடந்திருக்க வேண்டுமென்பதை நான் உணர்ந்தேன், எனவே இப்போது அவளை சற்றே கரிசனத்தோடு பார்க்கத் தொடங்கினேன். அதாவது, நானொரு ஆண், சிறிதளவு தூசியும் எண்ணெய்ப்பிசுக்கும் பெரிதாய் எந்த வித்தியாசத்தையும் காட்டப் போவதில்லை, ஆனால் அவளால் அப்படிச் சொல்ல முடியுமா என்ன?

என்னை வெளியே தூக்கிய மறுகணம் தொடங்கி அந்த மின்தூக்கிப் பணியாள் பெரிதாய் கதை வைக்க ஆரம்பித்தான்.

“ஓடாமல் போன இந்த மின்தூக்கியை இப்போதுதான் சரி செய்திருந்தோம்- அதற்குள்ளாக எப்படி மீண்டும் உடைந்தது? இதைக் காட்டிலும் அதிகமான நம்பகத்தன்மையோடு இருப்பதென்பது பெரிய நிறுவனங்களுக்கு அவசியமில்லை?” நிறுவனங்களின் நேர்மையின்மை, பணக்கார வியாபாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கக்கூடிய முறையில்லாத உறவு ஆகியவற்றைப் பற்றிய அர்த்தமற்ற நீண்ட புலம்பலின் தொடக்கம்தான் அது. நான் அவனைச் சாந்தப்படுத்த முயற்சித்தேன்.

“இவ்வளவு நம்பிக்கையற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை,” என்றேன். “ஒரு சில கெட்டுப்போன ஆப்பிள்கள் அங்கிருக்கலாம், ஆனால் உன்னைப்போன்ற நல்ல மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாயிருப்பதில் அவர்கள் சிறுத்துப் போவார்கள்,” மீண்டும் அழுத்தமாகச் சொன்னேன். பிறகு, மின்தூக்கியிலிருந்து என்னை வெளியே தூக்க அவன் உதவியதால் எத்தனை சந்தோசப்பட்டேன் என்பதை அவனிடம் பகிர்ந்து கொண்டேன். அப்போதுதான் அவன் கீழே குனிந்து என் பாதங்களைப் பார்த்தான்.

“ஹேய், உன்னுடைய காலணிகளுக்கு என்ன ஆனது?” என்னுடைய கையால் நெற்றியில் ஓங்கி அடித்துக்கொண்டேன். கதவுகளைத் திறந்தே வைத்திருப்பதற்காக அவற்றை பயன்படுத்தினேன், அதன் பிறகு என் பாதங்களை மட்டும் பயன்படுத்தியதால், எப்படியோ அவற்றை மறந்து விட்டேன் என நினைக்கிறேன்.

“ஓ, சேசுவே,” என்றேன். “நான் அவற்றை மின்தூக்கியில் விட்டு வந்ததாகத் தெரிகிறது. கவனி, இப்போது மீண்டும் திரும்பிச் சென்று அவற்றை எடுத்து வர எனக்குச் சுத்தமாக நேரமில்லை. எனக்காக உன்னால் அவற்றை எடுத்து வர முடியுமா, பதினைந்தாவது மாடியிலிருக்கும் வகைமுறை மேலாண்மைத் துறைக்கு?”

“முடியவே முடியாது” என்று சொன்னான். நான் குனிந்து என்னுடைய கடிகாரத்தைப் பார்த்தேன். எப்படியோ, மணி 10:00-ஐத் தாண்டியிருந்தது. ஒருகணம் வேறொரு மின்தூக்கியில் ஏறி பதினைந்தாவது மாடிக்குப் போவதைப் பற்றி யோசித்தேன், ஆனால் ஆபத்துகாலப் படிகளின் வழியே நடந்து செல்வதென சட்டென்று முடிவு செய்தேன். அலுவலகத்துக்குள் நுழைந்து போது, செல்வி.லீ மட்டும் தனியாளாக தொலைபேசியின் அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மற்ற அனைவரும் கலந்துரையாடலில் கலந்து கொள்ள சென்று விட்டதாகத் தோன்றியது. அதிர்ச்சியில் உறைந்தவளாக செல்வி.லீ என்னை வெறித்துப் பார்த்தாள்.

“திரு.ஜியோங்! என்ன ஆனது? பணியிடத்திற்கு சாக்கடை வழியாக நடந்து வர முடிவு செய்தீர்களா? கண்ணாடியில் போய் பாருங்கள்!” நான் பார்த்தேன். என்னுடைய கேசம் கலைந்திருந்தது, முகம் பாதி மழிக்கப்பட்டு இருந்தது, அந்தப் பெண்ணின் குதியணிகள் என் தோள்களில் இரண்டு பள்ளங்களை உருவாக்கியிருந்தன, மேலங்கியின் முன்பகுதியில் எண்ணெய்ப்பிசுக்கு அப்பியிருந்தது, மேலும் பேருந்து விபத்தின் காரணமாக எல்லாமே கசங்கிக் கிடந்தன. அதோடு என் காலணிகள் மின்தூக்கியில் இருந்தன.

அதேகணம், கலந்தாய்வுக்கூடத்தின் கதவு திறந்து கொள்ள, என் முதலாளியின் முகம் அங்கே தோன்றியது.

“ஹேய், செல்வி.லீ! அவன் இன்னும் வரவில்லையா? ஆகா, இங்கே இருக்கிறாயா? நேரம் என்னவென்று தெரியுமா? உள்ளே வந்து உன்னுடைய அறிக்கையை வாசி!” நான் என்னுடைய உடைகளைக் காட்டிச் சைகை செய்தேன், பரிதாபம் நிரம்பியதொரு பார்வையால் அவனிடம் கெஞ்சினேன், ஆனால் கதவை ஓங்கியறைந்து மூடிவிட்டு மீண்டும் கூடத்துக்குள் நுழைந்து விட்டான். அந்தக் கூடத்துக்குள் நுழையுமுன்பு கண்டிப்பாக நான் செய்ய வேண்டியதென்பதாய் சில விசயங்களிருந்தன. 911-ஐ அழைத்து அந்த மனிதனைப் பற்றிப் புகார் சொல்ல வேண்டும், ஐந்தாவது மாடிக்குச் சென்று செல்வி.ஜியுங்கைக் கண்டுபிடித்து நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்ல வேண்டும், கழிவறைக்குச் சென்று கொஞ்சமாவது சுத்தம் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் என் காலணிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி, நான் கூடத்துக்குள் நுழைந்தேன். உள்ளே இருந்தவர்களில் பாதிப்பேர் தூங்கிக் கொண்டிருக்க, இன்னொரு பாதிப்பேர் தங்களுடைய அறிக்கைகளில் பயன்படுத்தவிருந்த தரவுகளைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய துறைத்தலைவர் மற்றும் கிளைத்தலைவர், மற்றும் அறங்காவலர்களின் குழுவைச் சேர்ந்தவர் ஒருவர், இவர்கள் மட்டும்தான் ஓரளவாவது கவனித்துக் கொண்டிருந்தவர்கள், அவர்கள் அனைவரும் என்னையே வெறித்துப் பார்த்தார்கள்.

அவர்கள் விசாரித்தார்கள். நான் ஏன் தாமதமாக வந்தேன், ஏன் என்னுடைய உடைகள் இத்தனை கேவலமாக இருந்தன. நான் விவரித்தேன். அன்று காலை, யாரோ ஒருவன் என்னுடைய அடுக்கக மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருந்தான். ஒரு பாரவண்டி எனது பேருந்தில் மோதியது, யாரும் எனக்கு அலைபேசியைக் கடன் தரவில்லை, மேலும் என்னுடைய பணப்பையை வீட்டில் விட்டு வந்ததால் என்னால் யாரையும் அழைக்க முடியவில்லை. பிறகு அடுத்த பேருந்தில் நானொரு மனம்பிறழ்ந்தவன் என்று குற்றஞ்சாட்டப்பட்டேன், எனவே சுங்-ஜியோங்-ரோ-வில் இறங்கி வேலைக்கு வந்து சேர மொத்தத்தூரமும் ஓடி வரும்படி ஆனது. அதன் பிறகு இங்குள்ள மின்தூக்கி உடைந்து நின்றது, வெளியே செல்வதற்காக என் மீது ஏறிப்போன, ஆனால் தனக்கு உதவியனுக்கு தான் செய்ய வேண்டிய உதவியைத் தேடிச் செல்லாமல் தன்னுடைய வழியில் சென்ற பெண்மணியால்தான் என்னுடைய தோள்களில் இந்த அடையாளங்கள் உருவாயின, கடைசியாக மின்தூக்கியை விட்டு நான் வெளியேறி வந்தபோது முழுக்கவும் எண்ணெய்ப்பிசுக்கில் ஊறியிருந்தேன், இத்தனை குழப்பங்களின் காரணமாக எனது காலணிகளை அங்கேயே தொலைத்து விட்டேன். ஆழ்ந்து வருத்தம் தெரிவிப்பதாகவும் என்னை மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். எதற்காக வருந்த வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் அப்படி உணர்வதாகச் சொல்லி வைத்தேன். ஆனால் துறைத்தலைவர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.

“சரி. உன்னுடைய அறிக்கையைக் கேட்கலாம்.”

நான் எனது தோள்களைப் பின்னால் இழுத்துக் கொண்டேன், இரண்டு பக்கங்களிலும் நகலெடுக்கும் செயல்முறையினை ஊக்குவிப்பதற்கான என்னுடைய செயல்திட்டத்தின் ஆதாரங்களை விளக்கினேன், இதனைச் செயல்படுத்தினால் வரலாறு காணாத அளவில் காகிதங்களை மிச்சப்படுத்த முடியும். மேலும் அலுவலகத்தில் மெல்லிழைத்தாள்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழியென்பது, ஒரு நேரத்தில் மிகச்சரியாக ஒரு மீட்டர் அளவை மட்டுமே வெட்டும்படித் தயாரிக்கப்பட்ட காகித உருளைகளைப் பிரத்தியேகமான முறையில் தருவிப்பதாகவே இருக்க முடியுமென்பதையும், அவர்களிடம் சொன்னேன். ஒவ்வொரு பத்து சென்டிமீட்டரிலும் பெரும்பாலான உருளைகள் கிழிந்து போகையில், ஒரு மீட்டர் உருளைகள் மக்களை ஒவ்வொரு முறையும் ஒரு மீட்டரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கும், இதன் காரணமாக மெல்லிழைத்தாள்களில் நாம் அற்புதமாகச் சேமிக்கலாம். நமது பணியாளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி, பெரும்பாலான பணியாளர்கள் ஒவ்வொரு முறையும் செயலில் இறங்கும்போது 1.2 மீட்டர்கள் அளவுள்ள மெல்லிழைத்தாள்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கழிவறைக்காகிதங்களின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20% குறைக்கக்கூடியதன் சாத்தியப்பாட்டை இதுபோன்ற அலங்கோலமான தோற்றத்தில் நின்று கொண்டு பேசுவது முட்டாள்தனம் என்பது எனக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆட்சேபணைகள் உடனடியாகக் கிளம்பின. செல்வி.யுன்-ஹி லீ தான் முதலில் கையை உயர்த்தினாள். “உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், அவ்வளவாகத் தேவைப்படாத விசயங்களில் கூடப் பெண்கள் தேவைக்கதிகமாக மெல்லிழைத்தாள்களைப் பயன்படுத்த விழைவார்கள். அதாவது, எனக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியாது, ஆனால் நான் ஒரு மீட்டர் அளவுள்ள மெல்லிழைத்தாளைப் பயன்படுத்துவதில்லை. எனக்கு, 30 செண்டிமீட்டர்களே எப்போதும் போதுமானதாக இருக்கிறது, எனவே நாம் ஒரு மீட்டர் மெல்லிழைத்தாளை நோக்கி நகர்ந்தால், அது உண்மையில் 70% வரை வீணடிப்பதாக இருக்காதா?”

பிறகு, என்னுடைய திட்டம் குறித்து அவன் என்ன நினைக்கிறான் என்பதைச் சொல்லக்கூடிய கண்களால் என்னை வெறித்துக் கொண்டிருந்த அறங்காவலர்களின் குழுவைச் சேர்ந்த மனிதன், உள்ளே குதித்தான்.

“இதுவரை 1.2 மீட்டர் மெல்லிழைத்தாள்களைப் பயன்படுத்தி வந்த மக்கள் அவர்களுடைய பயன்பாட்டை ஒரு மீட்டராகக் குறைத்துக் கொள்வார்கள் என்று எப்படி நீ தீர்க்கமாக நம்புகிறாய்? அவர்கள் வெறுமனே இரண்டு மீட்டர்களைப் பயன்படுத்தலாம் என்பதும் சாத்தியம்தான் இல்லையா? இன்னும் கொஞ்சம் ஆய்வு செய், பிறகு இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மிச்சப்படுத்தும் திட்டத்தோடு திரும்பி வா.” துறைத்தலைவர் மற்றும் கிளைத்தலைவர் என இருவரும் அதனை ஆமோதிப்பதாகத் தலையசைத்தார்கள். எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. எத்தனை மீட்டர் நீளமுள்ள கழிவறைக்காகிதங்களை இந்த மனிதர்கள் தங்களுடைய கழிவறைகளில் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்? மேலும் இந்தவுலகில் ஏன் ஒரு மீட்டர் நீளமென்னும் அளவு போதுமானதாக இருக்கக்கூடாது?

12:00 மணி வரை கலந்துரையாடல் நீடித்தது. மதிய உணவுக்காக அனைவரும் பெருத்த சத்தங்களோடு எழுந்து போக, நான் எனது காலணிகளைத் தேடிக்கொண்டு சென்றேன். பழுதாகிக்கிடந்த மின்தூக்கி மீண்டும் வேலை பார்ப்பதாகத் தோன்றியது. வேறெதுவும் பிரச்சினைகளை எதிர்கொள்ள விரும்பாமல், மற்றொரு மின் தூக்கியின் மூலம் முதல் மாடியை வந்தடைந்தேன். காவல் பணியாளர்கள் நின்றிருந்த முதன்மை மேசையை நோக்கி நடந்து சென்றேன். தகவல் மேசையின் பின்னால் அமர்ந்திருந்த பெண் சட்டென்று எழுந்து நின்றாள், உடனே அனைத்துக் காவல் பணியாளர்களும் நானிருந்த திசையில் முன்னேறி வரத் தொடங்கினார்கள்.

“நான் உங்களுக்கு உதவ முடியுமா?” என்று கேட்டாள். ஆனால் அவள் கேட்டதில் எந்தவிதமான நட்புணர்வும் இருக்கவில்லை, அவள் பார்வையும் என்மீது இல்லை, மாறாக என்னை நெருங்கிக் கொண்டிருந்த காவல் பணியாளர்களின் மேல் நிலைத்திருந்தது. அனேகமாக அவள் அவர்களிடம் ஏதோ சைகை செய்து கொண்டிருந்தாள். அவர்கள் என்னை வளைத்துக் கொண்டார்கள், மொண்ணையான குரலில் கட்டிடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.

நான் எதிர்த்தேன். “நான் இங்கே வேலை பார்க்கிறேன். வகைமுறை மேலாண்மையில். என்னுடைய பெயர் ஜியோங். நின்று போன மின்தூக்கியில் எனது காலணிகளைத் தொலைத்து விட்டேன், அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இங்கே பாருங்கள்..” ஆனால் நான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் என்னைக் கட்டிடத்துக்கு வெளியே தள்ள முயற்சித்தார்கள். “ஹேய்! வகைமுறை மேலாண்மைக்கு அழைத்துப் பேசுங்கள்!”

என்னைக் காப்பாறியவன் ஹான் என்று பெயரிடப்பட்ட மனிதன், நான் வேலைக்குச் சேர்ந்த அதே காலத்தில் நிறுவனத்தில் சேர்ந்தவன்.

“ஹேய் ஹான்!” என்று அலறினேன். “நான்தான்! நான்தான்!” அவனுக்குக் கோடி நன்றி, அவர்கள் என்னைப் போக அனுமதித்தார்கள், என்ன நடந்ததென்பதை என்னால் அவனிடம் விளக்க முடிந்தது.

“ஹேய், ஹான், நன்றி” நான் அவனிடம் சொன்னேன். “நான் உன்னை மதிய உணவுக்கு அழைத்துப் போகக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அவனுக்கு நன்றி சொன்னேன், பிறகு திரும்பிச் சென்று காவல் பணியாளர்களிடம் மின்தூக்கியைப் பற்றியும் எனது காலணிகள் குறித்தும் விளக்கினேன். ஆனால் நின்று போன மின்தூக்கி குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை, மேலும் யார் என்னை வெளியே இழுத்தது என்பதும் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னார்கள். யார் யாரையோ அழைத்தும் வானொலியில் பேசவும் செய்தார்கள், ஆனல் முப்பது நிமிடங்கள் கழிந்தபிறகும் கூட இது குறித்து எதையாவது அறிந்திருந்த யாரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவர்கள் என்னிடம் கடைசியாகச் சொன்னது, “எங்களை மன்னியுங்கள். எங்களுக்குத் தெரியவில்லை. அனேகமாக, அங்கே இருக்குமென்கிற பட்சத்தில், நீங்கள் உங்களுடைய அலுவலகத்திலிருந்துதான் ஒரு ஜோடி செருப்புகளை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது அருகில் காலணிகளுக்கான ஏதாவது ஒரு கடையைத் தேடிக் கண்டுபிடித்து புதிய காலணிகளை வாங்கிக் கொள்ளுங்கள்.” தளர்ந்து போனவனாக நான் தலையசைத்தேன், மீண்டும் என் அலுவலகத்துக்குத் திரும்புவது என முடிவு செய்தேன். மின்தூக்கிக்காகக் காத்திருந்தேன், நான் மாட்டிக் கொண்டிருந்த மின்தூக்கிதான் முதலில் வந்தது. அதில் ஏறும் எண்ணம் எனக்கில்லை, ஆனால் கதவுகள் திறந்தபோது, மின்தூக்கியின் தரைப்பகுதியில் என்னுடைய காலணிகள் அருகருகே அமர்ந்திருக்கக் கண்டேன். வெறிகொண்ட சிறுத்தையைப் போலப் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றினேன், பின்பு கதவுகள் மூடிக்கொள்ளுமுன்பாக மின்தூக்கியை விட்டு வெளியேறி ஓடி வந்தேன். மனம் ஆனந்தக்கூத்தாடியது. துயரங்களிலிருந்து விடுபட்டவனின் மகிழ்ச்சி பொங்கும் கண்ணீரில் கிட்டத்தட்ட மூழ்கியவனாக, கட்டிடத்தின் முகப்பில் அமர்ந்து காலணிகளை ஒவ்வொன்றாக அணிந்தேன். காலணிகளை அணிந்த மறுகணம், என்னுடைய அடுக்கக மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றி மீண்டும் யோசித்தேன். இதுபோன்ற தோற்றத்தோடு நான் எந்தவொரு உணவகத்துக்கும் சென்று மீள வாய்ப்பேயில்லை, எனவே எனது அலுவலகத்துக்கு திரும்பிச்சென்று 911-ஐ அழைத்தேன்.

“ஹலோ, 911-ஆ?”

“நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” தொலைபேசியை இயக்குபவள் கனிவாகக் கேட்டாள்.

“ஹா, இங்கே ஜியோங்-ரோ-வில்..”

உடன் தொலைபேசியை இயக்குபவள் சட்டென்று சொன்னாள், “நீங்கள் கும்-ஜியோங் கட்டிடத்தில் உள்ளீர்கள், சரிதானே?” எனது தலைக்கு மேலிருந்து, அதாவது மேற்கூரையிலிருந்து, 911 என்னை கண்காணித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. விபத்து நிகழ்ந்த இடம் இதுவல்ல, மாறாக சாம்டோங் அடுக்ககத்தில் என்பதை விளக்கினேன். சரியாகச் சொல்வதெனில் அவள் சந்தேகம் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் பிறகும் அவள் பேசிய தொனியில் நட்புணர்வு இருந்தது.

“என்ன மாதிரியான விபத்து?”

“ஒரு மனிதன் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.”

“இது எப்போது நிகழ்ந்தது?” என்னை அவள் சுத்தமாக நம்பவில்லை என்பதைப்போல அவளுடைய குரலில் சிறிது எரிச்சலும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது.

“இன்று காலை 7:50-க்கு” இதற்கு மேல் தாங்க முடியாது என்பதைப்போல அந்தப்பெண் அதன் பிறகு என்னிடம் பேசினாள்.

“இங்கே பாருங்கள், ஐயா. எங்களுக்கு இங்கே நிறைய வேலைகள் இருக்கின்றன. நகைச்சுவைகளைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருக்க எனக்கு நேரமில்லை.” சற்று வேகமாகவும் தெளிவாகவும் விளக்குவது என்று நான் முடிவு செய்தேன். விபத்து நிகழ்ந்த உடனேயே அது குறித்துப் புகார் செய்ய நான் முயற்சித்தேன், அவளிடம் சொன்னேன், ஆனால் யாரும் எனக்கு அலைபேசியை கடன் தரவில்லை, அடுக்கக காவல் பணியாளர்களும் அக்கம்பக்கத்தில் இல்லை, நான் வேலைக்குக் கிளம்பிய பேருந்து விபத்துக்குள்ளானது என அனைத்தையும் அவளிடம் சொன்னேன். பிறகு, நான் வேலை செய்யுமிடத்தை வந்தடைந்தவுடன், மின்தூக்கி செயலிழந்தது, அதன் பிறகு எனக்கு முக்கியமானதொரு கலந்துரையாடல் இருந்தது, எனவே இப்போது வரை என்னால் புகார் தெரிவிக்க முடியவில்லை.

“அவன் மின்தூக்கியை விட்டு வெளியேற்றப்பட்டானா இல்லையா என்பதை மட்டும் நீங்கள் எனக்குச் சொல்லமுடியுமா?” என்று கேட்டேன். இதுபோன்ற அழைப்புகளுக்கு பதில் தருவது 911-ன் வேலையில்லை என்று தொலைபேசியை இயக்குபவள் என்னிடம் சொன்னாள், பிறகு உள்ளூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தினாள். அதன் பிறகு, வெறுமனே சோதனை செய்திடவாவது, ஒரு மீட்புக்குழுவை அனுப்பச் சாத்தியப்படுமா என்று கேட்டேன். மணமான பெண்கள் உட்பட, கட்டிடத்தில் இருந்த அனைவருமே வேலையாய் இருந்தார்கள் என்பதை விளக்கினேன், எனவே இதுவரைக்கும் இது குறித்து யாரும் புகார் செய்யாமல் இருப்பதற்கான சாத்தியமும் இருந்தது. ஆனால் “நன்றி” என்பதைத் தவிர்த்து வேறெதையும் சொல்லாமல் அவள் தொலைபேசியைத் துண்டித்தாள்.

மீதமிருந்த மதியநேரம் முழுதும் அலுவலகத்தில் எந்த சிக்கலுமில்லாமல் கழிந்தது. கழிவறைக்காகிதங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வழிமுறைகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன், மேலும் அலுவலகப் பணியாளர்களிடம் அனுப்புவதற்கென மற்றொரு கருத்துக்கணிப்பைத் தயாரித்தேன். 5:00 மணிக்கு, அனைவரும் கதவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். செல்வி.கிம்-மிடமிருந்து 10,000 வொன் கடன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். எனது குடியிருப்புக்கு வந்து தபால் பெட்டியைப் பரிசோதித்தேன். முழுக்கக் குறிப்பாணைகளால் நிரம்பி வழிந்தது. அவற்றுள் சிலவற்றை காவல் பணியாளரின் அலுவலகத்துக்கு அருகேயிருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மின்தூக்கியை நோக்கி நடந்தேன். அதிர்ஷ்டவசமாக, மின்தூக்கி மீண்டும் ஒழுங்காக வேலை பார்ப்பதாகத் தோன்றியது. வேறு சில மக்களோடு சேர்ந்து ஏறிக்கொண்டு மேலே சென்றேன். என்னுடைய கந்தலான தோற்றத்தைப் பார்த்தவர்கள் கண்களில் எச்சரிக்கையோடு மின்தூக்கியின் எதிர்முனையில் போய் நின்றார்கள். நான் அவர்களைக் கேட்க முடிவு செய்தேன்.

“மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதன் என்ன ஆனான் என்பது குறித்து உங்கள் யாருக்காவது தெரிந்திருக்கும் வாய்ப்புள்ளதா?” எதுவும் சொல்லாமல், அனைவரும் வெறுமனே தங்கள் தலைகளை அசைத்தார்கள்.

“சரி, நான் வேலைக்குச் சென்றபோது, மின்தூக்கி ஐந்தாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்குமிடையில் நின்று விட்டது, அங்கே ஒரு மனிதன் ஆறாவது மாடிக்கும் மின்தூக்கியின் தரைப்பகுதிக்கும் இடையில் செருகிக்கிடந்தான். நீங்கள் அவனைப் பற்றிக் கேள்விப்படவில்லையா?” யாரும் பதில் சொல்லவில்லை, மின்தூக்கி தங்களுக்கான தரைத்தளத்தை அடைந்த உடனேயே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வெளியேறி, வீட்டை நோக்கி நடந்தார்கள். என்னை நெருக்கமாகக் கண்காணித்தபடி, ஒரு அம்மா தன் மகளை கைகளுக்குள் இறுகப் பற்றியிருந்தாள், அந்தக்குழந்தைக்கு ஐந்து வயதிருக்கலாம்.

கடைசியாக நாங்கள் 15வது மாடியை வந்தடைந்தோம், என்னோடு சேர்ந்து வெளியேறிய பெண் தன்னுடைய வீட்டை நோக்கி உச்சவேகத்தில் ஓடினாள். நான் எனது கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். மேலங்கியைக் கழற்றி தரையில் வீசிவிட்டு குளியலறைக்குள் புகுந்தேன். தலையில் ஷாம்பூவைத் தேய்க்கும்போதும், வியந்து கொண்டேயிருந்தேன். அந்த மனிதனுக்கு என்னதான் நடந்திருக்க முடியும்? காவல் பணியாளர்களில் ஒருவரை அழைத்துத்தான் நான் கேட்டாக வேண்டும். ஆனால் தலையில் ஷாம்பூவைத் தேய்த்து முடித்து தண்ணீரைத் திறந்து விட்டபோது தண்ணீர் உறைவிக்கும் குளிர்ச்சியோடு குழாயின் முனையிலிருந்து பீய்ச்சியடித்தது. குழாயின் வாயை எந்தப் பக்கம் திருப்பினாலும் சுடுதண்ணீர் வரவில்லை. காவலர்களில் யாரையாவது அழைக்க காவல் தொலைபேசியை எடுக்குமுன்பாக, குளிரில் நடுங்கியபடி, உடம்பிலிருந்து சோப்பை நீக்க வெறுமனே பெயருக்கு குளித்து வைத்தேன். நான் “சுடுதண்ணீர்” என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே, ஏற்கனவே இதே அழைப்பு பலமுறை தனக்கு வந்து விட்டது என்பதை எனக்குச் சொல்லும் தொனியில், என்னைப் பேசவிடாமல் இடைமறித்தான்.

“நீங்கள் விளம்பர அறிவிப்பை வாசிக்கவில்லையா? இன்று முதல், குழாய்களில் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். பல வாரங்களாக ஒலிபெருக்கியின் மூலமாகவும் அறிவித்துக் கொண்டிருக்கிறோம்,” சிறுகுழந்தையைக் கடிந்து கொள்வதைப்போல அவன் என்னிடம் சொன்னான். பிறகு துண்டித்தான்.

ஆக இன்னும் நான் வியந்து கொண்டிருக்கிறேன். மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட மனிதனுக்கு என்னதான் நேர்ந்தது?

யங்-ஹா கிம் (1968)

தென்கொரியாவின் மிக முக்கியமான பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் ஒருவர். புலம்பெயர்ந்து மெக்சிகோவில் பணிபுரிகிற கொரிய மக்களின் துயரங்களை விவரிக்கும் இவருடைய முதல் நாவலான I have the right to destroy myself (1996) கொரியாவின் புகழ்பெற்ற இலக்கிய விருதான முன்ஹக்-டாங்னேவை வென்றது. தன் எழுத்துகளுக்காக ஹ்யுண்டே இலக்கிய விருது, லீ சான் இலக்கிய விருது, டாங்-இன் இலக்கிய விருது உட்பட பல முக்கியமான விருதுகளை வென்றுள்ளார். கொரியாவில் இலக்கியத்துக்கென வழங்கப்படும் மூன்று விருதுகளை வென்ற காரணத்தால் 2004-ஆம் வருடம் யங்-ஹா கிம்மின் கிராண்ட்ஸ்லாம் வருடம் என்று கொண்டாடப்படுகிறது. இதுவரை ஐந்து நாவல்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. நகர்ப்புற மனிதர்களே இவருடைய எழுத்துகளில் அதிகம் இடம்பெறுகிறார்கள். தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும் உலகமயமாக்கப்பட்ட நவீன வாழ்வின் அபத்தங்களையும் குரூரங்களையும் பகடி செய்யும் கதைகளையே யங்-ஹா எழுதுகிறார். இவருடைய இரண்டு நாவல்கள் திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது எழுத்தை முழுநேரப்பணியாகக் கொண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button