கட்டுரைகள்

சிங்கப்பூர் தமிழர்களின் கதைகள் -”முகமூடிகள்” – நூல் விமர்சனம்.

சுப்ரபாரதிமணியன்

சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகளில் பெரும்பாலும் ஊடாடி நிற்கும் அம்சங்களை இரண்டு பிரிவுகளாகச் சொல்லலாம்.

1.சிங்கப்பூருக்குப் பணம் சம்பாதிப்பதற்காகவும் குடும்பத் தேவைகளுக்காகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வாழும் தமிழர்களின் அனுபவங்கள்.

2 அங்கேயே பிறந்து வளர்ந்து ஒருவகையில் பூர்வ குடிகள் உடன் சம்பந்தம் கொண்ட தமிழர்களுடைய அனுபவங்கள்.

இந்த வகையில் மணிமாலா மதியழகன் அவர்களின் அனுபவங்கள் இரண்டாம் பிரிவைச் சார்ந்தது. அதேசமயம் முதல் பிரிவுத் தமிழர்களின் அனுபவங்களையும் தன்னுள் வரித்துக் கொண்டு இந்த அனுபவங்களை கதைகளாக எழுதி வருபவர்கள் பலர் . அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்குப் போய் சிரமப்பட்டு தொடர்பில் இருக்கும் அவர்களின் அனுபவங்களை முதல் கதையில் சொல்லியிருக்கிறார்.

அவனின் சம்பளம் வருவாயை எண்ணி வரும் தொலைப்பேசி அழைப்பை அவன் எதிர்கொள்ளும் விதம் நாகரீகமாக இல்லைதான் ஆனால் வேலை சார்ந்த பல பகிர்வுகள், பிரிவு சார்ந்த துயரங்கள் எல்லாம் அவனை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதைக் கதை கூறுகிறது . வெடித்துக் கிளம்பிய பிறகு தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணரும் போது அவன் தன்னை உணர்ந்து கொள்கிறான். அவன் நிலை என்ன என்பது நமக்கு தெரிகிறது. ஒரு பெண்ணின் மீதான எரிச்சலின் ரூபத்தை ஒரு பெண்ணே உள்வாங்கி எழுதி இருப்பது தான் அக்கதையின் சிறப்பு என்று சொல்லலாம் .

சில கதைகளில் .சில விசித்திரமான மனநிலை கொண்ட மனிதர்களையும் சந்திக்கிறோம். மகன் இறந்த பிறகு உடல் தானம் குறித்து வற்புறுத்துகிறார்கள் அதற்கு மறுக்கிறார் ஒரு தந்தை. விதவையான நிலையில் ஒரு பெண் மீது செலுத்தப்படும் அனுதாபங்களை ஏற்றுக்கொள்ளாமல் மறுமணம் என்கிற அந்தஸ்தை ஒரு பெண் விசித்திரமாக மறுக்கிறாள் . அவளின் அனுபவம் இன்னொரு கோணம் அல்லவா?.

.குடும்பத்தில் மனைவியின் அடாவடித்தனமும் நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருப்பதும் ஒரு கணவனின் பொறுமையைச் சோதிப்பதை ஒரு கதை சொல்கிறது .அவன் தன்னைத் தானே நொந்து கொண்டு இந்தியாவுக்குப் போய்விடுவோம் என்ற மிரட்டலைத் தீர்மானமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. இதுபோல் விசித்திரமான பெண்களைப் பல கதைகளில் மணிமாலா அவர்கள் சொல்கிறார். இப்படி பெண்களைச் சித்தரிப்பதற்கும் மன முதிர்ச்சி வேண்டும்.

நிகழ் கால சம்பவங்களை எடுத்துக்கொண்டு அதைப் புராண கதாபாத்திரங்களைக் கொண்டு நகர்த்துவதும் விமர்சிப்பதும் இரண்டு கதைகளில் இருக்கிறது. அப்படித்தான் கைப்பேசி தரும் தொல்லைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஒரு குடும்பத்தில் எப்படிச் சீரழிவைக் கொண்டு வருகிறது என்பதை ஒரு கதை சொல்கிறது. புராண கதாபாத்திரங்களும் மனிதர்களும் இயைந்து வருகிறார்கள் இரண்டு கதைகளில்…!

இத்தொகுப்பில் பல கதைகள் உச்சபட்சமான நகைச்சுவை உணர்வோடு சொல்லப்பட்டிருக்கிறது டீபாய் என்ற கதையை ஒரு குறியீடாகக் கொண்டு ஒரு குடும்பச் சூழலில் பல்வேறு விதமான விஷயங்களை மனதில் கொள்ளலாம்.

இப்படி நகரம் சார்ந்த கதாபாத்திரங்களை நவீன வாழ்க்கையின் சிக்கலுக்குக் கொண்டுவருவது அதிலும், குறிப்பாக கைப்பேசியின் உடைய வித்தைகளைப் பற்றிச் சொல்லுவது போன்றவை இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த கதைகளின் பொதுவான தளங்கள் பல விதங்களில் பல நிலையில் வெறும் இறுக்கத்தைத் தவிர்த்து இயல்பான சுவாரஸ்யமான வாசிப்புக்கு இட்டுச் செல்வது ஒருவகை பாணியாக இருக்கிறது.

முகமூடிகள் என்ற கதை சிங்கப்பூர் வாழும் தமிழர்களின் முகமூடிகளை எடுத்து இயல்பான முகத்தைக் காட்டுவதாக இருக்கிறது .வயது முதிர்வு காரணமாக மறதி நிலை ஏற்படுவதைச் சொல்லும் ஒரு கதையில் சிங்கப்பூரின் ஒரு பகுதி காடாக இருப்பதைக் காடாக இருந்தது என்று ஒரு முதியவர் நினைவில் கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார் . அதுபோல தமிழர்களில் இடம்பெயர்ந்த வாழ்க்கையில் இன்னல்களைத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் கதை சூழலில் இயல்பான தமிழர்களின் அனுபவங்களை இக்கதைகள் கொண்டிருக்கிறன.

மணிமாலா மதியழகன் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு எழுத்தாளர் அவரின் இந்த சிறிய தொகுப்பு 20 அம்சங்களை மையமாகக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் தமிழுக்கு நல்வரவாக இருப்பதன் இன்னொரு அடையாளம் இக்கதைகள்.

நூல்: முகமூடிகள்

பிரிவு: சிறுகதைகள்

எழுத்தாளர்: மணிமாலா மதியழகன்.

பதிப்பகம்: கரங்கள் பதிப்பகம், கோவை
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close